Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உறவாடும் கனவே தொடருதே

அத்தியாயம் -10 – PART- 1

அத்தியாயம்-10- PART 1

ஓங்கி அவன் கன்னத்திலே அறைந்தவள், அவனை முறைத்து பார்த்தப்படி,

“என்ன தைரியம் இருந்தா, என் கையையே பிடிப்ப? இந்த விஷயம் மட்டும் வெற்றி மாமாவுக்கு தெரிஞ்சது, அவ்வளவு தான் உன்னை.  தொலைச்சு கட்டிடுவார். இனி பார்த்து நடந்துக்கோ. இல்ல, இன்னொரு கன்னமும் பழுதுரும் ஜாக்கிரதை” என விரல் நீட்டி எச்சரித்தவள் அங்கிருந்து வெளியேற, செல்லும் அவளையே கோபத்துடன் கன்னத்தை பொத்தியப்படி பார்த்து கொண்டிருந்தான் கிஷோர்.

அவள் அடித்தத்தில் ஒரு பக்க கன்னம் அவனது வெள்ளை நிறத்திற்கு அப்பட்டமாக சிவந்து காட்சியளித்தது. அறைக்குள் இருந்து வெளி வரவே அவனுக்கு அவமானமாக இருந்தது. யாரேனும் பார்த்து கேட்டால், என்னவென்று சொல்வது?



Advertisement

அறைக்குள்ளே அடைந்து கிடந்தவனை பார்க்க வந்தாள் ராகினி. அவன் ஒரு பக்க கன்னம் கன்றி சிவந்திருப்பதை கண்டு, ,

“என்ன டா இது இப்படி சிவந்து இருக்கு? என்னாச்சு?” என அவள் பதற,

“அதுவா.., அது வந்து.., தூக்க கலக்கத்தில் உருண்டு கீழே விழுந்துட்டேன் அதில் அடிப்பட்டுருச்சு” என்றதும் ராகினியோ சத்தமாக சிரித்து விட்டாள். அவள் சிரிப்பு அவனை இன்னமும் வெறுப்பேற்றியது.

Advertisement

“இப்போ எதுக்கு ஏதோ ஜோக் கேட்ட போல இப்படி சிரிக்கிற? என எரிச்சலாக கிஷோர் கேட்க, 

Advertisement

“பின்ன, இப்படியா விழுவ? ஒழுங்கா கட்டிலில் தூங்க கூட தெரியாதா உனக்கு”

என சொல்லி சொல்லி சிரிக்க, அவனுக்கோ அத்தனை கடுப்பாக இருந்தது. அவனது மொத்த எரிச்சலும் வெண்பா மீது தான் திரும்பியது.

ராகினி மட்டுமில்லாமல், பார்க்கும் போதெல்லாம் யாரேனும் ஒருவர் இதை பற்றி கேட்பதும், அவன் காரணத்தை சொன்னால் சிரித்து வைப்பதும் என்று இருக்க, வெண்பா மீது அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

Advertisement

அதுவும் வெண்பா, அவனை அடித்ததை பற்றி பெரிதும் கவலைகொள்ளாமல் இருப்பது இன்னமும் வெறி ஏறியது அவனுக்கு. 

அடித்ததற்கு ஒரு மன்னிப்பு கூட கேட்காமல், அவனை பார்க்கும் போதெல்லாம் ஒருவித அலட்சிய பார்வையுடனே சுற்றி வந்தாள் வெண்பா.

நீ உண்மையை சொன்னால் கூட தனக்கு எந்த கவலையும் இல்லை, என்பது போல தான் இருந்தாள்.

 ஏன் அடித்தாய் என்று யாரேனும் கேட்டால், அவன் செய்ததையும் சொல்ல வேண்டும், அதனால் பாதிப்பு யாருக்கு அவனுக்கு தானே! உண்மை மட்டும் வெளியே தெரிந்தால், அவன் இந்த வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாதே!! வெற்றி சும்மா விடுவானா?!! 

அதனால் அவளாக நடந்ததை எதையும் யாரிடமும் கூறவில்லை. அவன் கூறினாலும் கவலையில்லை என்ற மன நிலையோடு இருக்க, அது இன்னும் இன்னும் கிஷோருக்கு கோபத்தை கிளப்பியது.

கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வன்மமாக மாற, அவளை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து நின்றது. 

 அதுவும் அனைவர் முன்பும் அவள் கூனி குறுகி நிற்க வேண்டும், அதற்கு தகுந்தார் போல் ஏதேனும் செய்ய வேண்டும்  என்றே அவனுக்குள் ஓடி கொண்டிருந்தது. அதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தான்.

அன்றைய நாள் வழக்கம் போல எல்லா வேலைகளும் சென்று கொண்டிருக்க, அன்று கொஞ்சம் சிறப்பான உணவு வகைகளை தயாரித்து கொண்டிருந்தனர் விசாலட்சியும் வெண்பாவும்.

அனைத்தும் செய்து கொண்டிருக்கும் பொழுதே, விசாலாட்சி, 

“வெண்பா, எல்லாத்துலையும் கொஞ்சம், கொஞ்சம் போட்டு தரேன், கனகவல்லிக்கு எடுத்துட்டு போய் கொடு” என கூற, அவளோ

“வேணாம் அத்தே” என்று மறுத்தாள் நாச்சியாரை மனதில் வைத்து கொண்டு.

“ஏன்? ஏன்? ஏன் வேணாம் சொல்ற? என் நாத்தனாருக்கு நான் கொடுப்பேன், நீ என்ன வேணாம் சொல்றது? எடுத்துட்டு போய் தான் ஆகணும். ஒழுங்கா எடுத்துட்டு போ” என பிடிவாதமாக கூற, அவளால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை. சரியென்று கூறிவிட்டாள்.

சமையல் முடிந்ததும் அனைத்தையும் டப்பாவில்  போட்டு, பையில் வைத்து கொடுத்தார் விசாலாட்சி. அதனை கொண்டு வந்து மேஜையில் வைத்த வெண்பா, ஏதோ வேலையாக உள்ளே செல்ல, பையை பார்த்த நாச்சியார், என்னவென்று கேட்டார்.

“அத்தே, அது நான் தான் நம்ம கனகாக்கு, செஞ்சதில் கொஞ்சம் எடுத்து வச்சேன். அவளுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்குமே. கொடுத்து விடுறேன் அத்தே”

என கூற, நாச்சியார் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

அங்கே தான் வெற்றி அமர்ந்திருந்தானே!!

“ம்மா, இதெல்லாம் போய் அப்பத்தா கிட்ட கேட்டுட்டு, அத்தைக்கு மட்டுமில்ல, மாமாவுக்கும் சேர்த்து கொடுத்து விடுங்க” என வெற்றி கூற, விசாலாட்சியும் சரி என்றார்.

அனைவரும் அங்கு தான் இருந்தனர். வெற்றியும், திருநாவுகரசும் வெளியில் செல்வதற்காக தயாராகி அமர்ந்திருக்க, நாச்சியார், இளங்கோ, அமுதவல்லி, ராகினி, கிஷோர், மீனாட்சி, கதிர்வேல் என மொத்த பேரும் அங்கு அமர்ந்து போனை பார்ப்பதும், கதை பேசுவதுமாக இருந்தனர்.

உணவு தயாராகி இருக்க, விசாலாட்சி அனைவரையும் உணவுண்ண அழைத்தார். அனைவரும் உண்டு முடிக்கும் வரை, வெண்பாவும் அங்கு தான் இருந்தாள். அனைவருக்கும் பரிமாறி கொண்டிருந்தாள்.

உணவினை உண்டு முடித்த திருநாவுக்கரசும் வெற்றியும், பக்கத்து ஊர் வரை செல்கிறோம், வர இரவு தாமதம் ஆகலாம், இல்லையென்றால் நாளை கூட ஆகலாம் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.

மற்றவர்களும் உணவினை உண்டு முடித்து அவரவர் அறைக்கு ஓய்வெடுக்க செல்ல, கிஷோர் மட்டும் வெண்பாவிடம்,

“வெண்பா நான் கொஞ்சம் ஹெவியா சாப்பிட்டேன். சோ எனக்கு ஒரு லைம் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரியா?” என்றவன் அங்கிருந்து நகர்ந்து செல்ல, வெண்பாவும் ஒரு பெருமூச்சுடன் உள்ளே சென்றவள், அவனுக்கு தேவையான பழச்சாறை தயாரித்து கொண்டு போய் அவனறையில் உள்ள மேஜை மீது வைத்து விட்டு வந்து விட்டாள்.

அடி வாங்கியத்திலிருந்து தேவைக்கு மட்டுமே பேசுபவன், அவளிடம் தள்ளியே தான் இருந்தான். அதனாலே பயமில்லாமல் இருந்தாள் வெண்பா.

மீண்டும் சமயலறைக்கு வந்தவள் எல்லாவற்றையும் ஒதுங்க வைக்கும் வேலைகளை பார்த்து கொண்டிருந்தாள்.

பழச்சாற்றை வைத்து கொண்டு, அதையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான் கிஷோர். நாட்கள் போன போதும் அவனால் வெண்பா அடித்ததை தாங்க முடியவில்லை. நாளுக்கு நாள் அவள் மீதான வன்மம் அதிகரித்து கொண்டே தான் இருந்தது.

இத்தனை நாள் ஆகியும், அவளை தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே, என்ற கோபம் அவனை அரித்தெடுத்தது.

எப்படியும் அவளை அவமானப்படுத்தியே ஆக வேண்டும், என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? என நெற்றியில் கைவைத்து யோசிக்க, பின் அப்படியே அவன் கைகள் அவன் கழுத்தில் பயணித்தது.

அதில் தொங்கி கொண்டிருந்த செயினை தொட்டதும், அதனை தூக்கி பார்த்தவனுக்கு உடனே, வெண்பாவை பழிவாங்க வழி கிடைத்ததை எண்ணி, அவனது இதழ்களோ வன்மமாக புன்னகைத்து கொண்டது.

உடனே அவனது திட்டத்தை செயல்படுத்த எண்ணி, குளிர்பானம் குடித்த டம்பளரை, எடுத்து கொண்டு வெளியே வந்தான்.

வெண்பா எடுத்து போக வைத்திருந்த பையின் அருகில் டம்பளரை வைத்தவன், கையில் வைத்திருந்த செயினை, அந்த பைக்குள் போட்டு விட்டு வந்து விட்டான்.

பத்து நிமிடம் கடந்திருக்கும், கிஷோர், தன்னுடைய வேலையை ஆரம்பித்திருந்தான்.

நேராக அறைக்கு வந்தவன், சிறிது நேரத்தில் 

“இங்க தானே வச்சேன், எஙக காணும்? என செயினை தேடுவது போல நடித்து கொண்டிருந்தான்.

அவ்வழியாக வந்த ராகினி, அவன் பரப்பரப்பாக தேடி கொண்டிருப்பதை பார்த்து, 

“என்ன டா என்ன தேடுற?” என கேட்க, அவனோ,

“என் செயினை காணும் ராகினி அதான் தேடிட்டு இருக்கேன். நீ எங்கயாச்சும் பார்த்தியா?”

“என்னடா சொல்ற?  செயினை காணுமா? உன் செயினை என்கிட்டே வந்து கேட்கிற? நான் எங்க பார்த்தேன். நீ எங்க வச்ச? என அவளும் வந்து தேட, சிறிது நேரத்தில் விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரவியது.

“என்ன தம்பி சொல்றீங்க? செயினை காணுமா? நம்ம வீட்டில் இதுபோல  இதுவரை நடந்ததே இல்லையே! திடிர்னு காணும் சொன்னா என்ன சொல்றது?, என நாச்சியார் பதற, இளங்கோவோ

“எங்க போய்டா போது இங்க தான் எங்கயாச்சும் இருக்கும். எல்லா இடத்துலையும் தேடி பார்ப்போம், கண்டிப்பா கிடைச்சுடும்” என்றவர் வேலையாட்களிடம் தேட சொல்லி உத்தரவிட, அனைவரும் வீடு முழுவதும் தேடினர். 

வீட்டையே புரட்டி போட்டு தேடிய பொழுதும் செயின் கிடைக்காமல் போனதால், 

“எங்கயாச்சும் விழுந்திருந்தா, இன்னேரம் கிடைச்சு இருக்கும். வேற யாராச்சும் எடுத்து வச்சு இருந்தா என்ன பண்றது? 

என்ற இளங்கோவை அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.

“மாப்பிள்ளை, நம்ம வீட்டில் யாரும் இது போல பண்ண மாட்டாங்க, அதனால் இன்னொரு தடவை தேடி பார்க்கிறது நல்லது” என நாச்சியார் கூற, 

“அத்தே, இவ்வளவு நேரம் தேடி தானே பார்த்தோம் கிடைக்கலையே!, அதனால் அடுத்து எல்லாரையும் செக் பண்ணி தான் பார்க்கணும். அப்படி இல்லைனா நீங்க ஒரு வழி சொல்லுங்க, அதை பண்ணுவோம்” என அவர் கூற நாச்சியாருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

“மாப்பிள்ளை, நம்ம வீட்டில் வேலை செய்யுறவங்களாம், காலம் காலமா இங்க தான் செய்யுறாங்க. அவங்களை சந்தேகப்படுறது என்னை சந்தேகப்படுற மாதிரி” என நாச்சியார் கோபப்பட,

“அத்தே, பொருள் காணும், வெளியாட்கள் யாரும் உள்ளே வரல. இங்கேயும் எல்லா இடத்துலையும் தேடிட்டோம். கிடைக்கல என்னும் போது, எல்லாரையும் செக் பண்றதில் என்ன தப்பு. அவங்க எடுத்தாங்களா? இல்லையானு செக் பண்ணா தெரிஞ்சுட போது. அவங்களுக்கும் இது நல்லது தானே!! என அவர் விளக்கம் கொடுக்க, எரிச்சலாக வந்தது வெண்பாவிற்கு.

“மாமா, இருக்கிறவங்களை செக் பண்ண முன்னாடி, கிஷோர் கிட்ட, விசாரிப்போம் இருங்க” என்ற கதிர்வேல், கிஷோரிடம்,

“கிஷோர் கடைசியா நீ உன் செயினை எப்போ பார்த்த?” என கேட்க,

“காலையில் கூட இருந்துச்சு” என்றான்.

“எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?”

“நான் தான் மிரர் பார்த்தேனே!! நல்ல நியாபகம் இருக்கு”  என்றான் தெளிவாக.

“சரி அதுக்கு பின்னே நீ எங்கலாம் போன?

“நான் எங்கேயும் போகல, வந்து சாப்பிட்டு, ரூமுக்கு போய் படுத்துட்டேன்.

“சரி உன் ரூமுக்கு உன்னை தவிர வேறு யார் வந்தது?”

“வெண்பா தான், ஜூஸ் கொண்டு வந்தா, அதுக்கு அப்புறம் தான் செயின் காணும்” என்றதும் வெண்பாவோ அதிர்ந்து பார்த்தாள் அவனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!