Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Meendum orumurai-6

மீண்டும் ஒருமுறை -6

உயிர் கொல்லி நோய் என்ற பெயர் கொண்ட புற்றுநோய், “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மனித உடல் கோடிக்கணக்கான செல்களினால் உருவானது.

உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தினம் உற்பத்தியாகும் இந்த செல்கள், அதன் வேலை முடிந்ததும் தானே அழிந்து போய்விடும். ஆனால் அப்படி அழியாமல் ஒரே இடத்தில் தேங்கி நின்று, மேலும் மேலும் பெருகிடும் இந்த விபரீத வளர்ச்சி தான் புற்றுநோய் என்று கருதப்படுகிறது.

இது உடலில் எந்த உறுப்பில் உருவாகிறதோ, அதற்கு ஏற்றவாறு அதன் வீரியமும் தாக்கமும் இருக்கின்றது. இந்த நோய் சிலர்க்கு அவர்களின் மூதாதையர்கள் மூலமாகவும் வருகிறது. சிலருக்கு சில கெட்ட பழக்கங்களினாலும் வருகிறது, இன்னும் சிலருக்கு கதிர்வீச்சு போன்றவற்றாலும் தோன்றும்.



Advertisement

இதில் துரதிஷ்டவசமாக இன்னொரு பிரிவினரும் இருக்கின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட எந்த காரணங்களும் இல்லாமல் சிலருக்கு புற்றுநோய் தோன்றுவதும் உண்டு.

மரபணு பரிசோதனையில் சில வருடங்களுக்கு பின் மரபணு வாயிலாக புற்றுநோய் அவர்களுக்கு தோன்றலாம் என்று தெரிந்து கொள்ள முடியுமே தவிர மற்ற எந்த வகை புற்றுநோயையும் எளிதில் கண்டறிந்து விட முடியாது.

அதன் ஆரம்ப கட்ட நிலையை அடையும் போதே மருத்துவ பரிசோதனையில் அது கண்டறியப்படுகிறது. அதனால் இம்முறை மருத்துவ பரிசோதனையில் வேலனியின் தாய்க்கு மரபணு ரீதியாக புற்றுநோய் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்று தான் குறிப்பிடுபட்டிருந்தது.

Advertisement

கூடவே மற்ற பரிசோதனைகளிலும் இப்போதைக்கு புற்றுநோய்க்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்பது தெளிவாக இருந்தது.

Advertisement

ஆனால் அந்த ஆனால் இன்னும் ஐந்து வருடம் இருக்கிறது அவருக்கு புற்றுநோய் தொற்று வருவதற்கு, அதனால் ஒவ்வொரு வருடமும் இந்த பரிசோதனையை செய்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தாள் வேலினி.

தாயின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை கண்டு நிம்மதி உற்ற பின் தான் வேலினி திரும்பி, ஜானவியை கண்டாள்.

ஜானவி ஒரு வகையான குழப்பமான முகத்தோடு அமர்ந்திருந்தாள். அந்த அறிக்கையை பார்த்து சற்று பயந்தும் இருக்கிறாள் என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.
உடனே வேலினி அவளிடம், “என்ன ஆச்சு ஜான்வி? ஏதாவது பிரச்சனையா? என்று கேட்க,

Advertisement

“ஆமா பிரச்சனை மாதிரி தான் இருக்கு. ஆனா பிரச்சனை இல்லாத மாதிரியும் இருக்கு”, என்று சொல்ல, வேலினி குழப்பமாக அவர்களைப் பார்த்தாள்.

“அம்மாவுக்கு டெஸ்ட் பண்ணும் போதே. நான் சொல்லி இருந்தேன் எங்க ஃபேமிலில சிலருக்கு முன்னாடியே கேன்சர் இருந்திருக்கு. அதையும் மைன்ட்ல வச்சு தான் டெஸ்ட் பண்ணி இருக்காங்க. ஜெனிடிக் சேஞ்ச் இருக்கு. ஆனா கண்டிப்பா கேன்சர் வரும்னு உறுதியா சொல்ல முடியாது. வராதுன்னு சொல்ல முடியாதுன்னு இதுல போட்டு இருக்காங்க”, என்று அவள் கூற,

“என்ன சொல்ற? அப்படிக் கூட இருக்குமா என்ன?”
“எனக்கும் குழப்பமா தான் இருக்கு. டாக்டர் கிட்ட பேசிட்டு வரலாம்.”
இருவரும் மருத்துவரிடம் பேச வேண்டும் என்று கூறிவிட்டு அமர்ந்து அரை மணி நேரத்துக்கு பிறகு, அவரை சந்திக்க உள்ளே சென்றனர்.

மருத்துவரிடம் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கும் விஷயங்கள் குறித்து தெளிவாக கேட்க, அவரும் தெளிவாக எடுத்துரைத்தார்.
மரபணு பரிசோதனைகள் சில சமயம், இந்த நபருக்கு கண்டிப்பாக புற்றுநோய் வராது என்று கண்டறிந்திடும். சிலருக்கு கண்டிப்பாக எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதையும் உறுதியாக கூறிவிடும்.

ஆனால் சில சமயம் மரபணுவில் ஏதாவது சின்ன மாற்றம் மட்டும் இருக்கும், அப்படியான சமயங்களில் புற்றுநோய் தோன்றும், தோன்றாது என்று எளிதாக கூறி விட முடியாது.
இப்படியான பரிசோதனை முடிவுகள் தோன்றினால் அந்த நபர்கள் தொடர்ந்து உடல் நலத்தை பேணும் வகையில் சிறந்த உடற்பயிற்சி சிறந்த உணவு பழக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

கூடவே அடிக்கடி மருத்துவ பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டி இருக்கும். இவருக்கு எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம், தோன்றாமலும் போகலாம் என்ற நிலை தான்.
இருவரும் கேட்டு வெளியே வந்த போது இருவருக்கும் சோர்வு ஒரே போல் தாக்கியிருந்தது.

ஜானவியின் தாய்க்கு இப்படி இருக்கும் என்று வேலினி எதிர்பார்த்து இருக்கவே இல்லை. என்ன செய்வது என்று இருவரும் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்தவிட, ஜானவி தான் சற்று தெளிந்து,
“அப்பா கிட்ட பேசலாம்னு நினைக்கிறேன். அம்மாக்கு பெரிசா இதை பத்தி சொல்ல வேணாம்” என்று கூறிவிட்டு இயல்பாக இருந்து கொண்டாள். வேலினிக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.

இந்த பரிசோதனை செய்யாமல் விட்டிருந்தால் நன்றாக இருக்குமோ என்று யோசித்தாள்.

மறுகணமே அப்படி இல்லாமல் இருந்து ஒருவேளை பின்னால் சில நாட்களில் இவள் தாய்க்கு ஏதாவது ஆகி இருந்தால், அப்போதும் தன்னால் தன்னை மன்னிக்கவே முடியாது என்பதை மனதில் உறுதியாக நினைத்துக் கொண்டாள்‌.
ஜானவியிடம் திரும்பி, “சில விஷயங்கள் நடக்கிறது நல்லதுக்காக தான் இருக்கும். இப்போ அம்மாவோட உணவு பழக்கம் வாழ்க்கை முறை எல்லாத்தையும் ஆரோக்கியமா மாத்தினாலே ஓரளவுக்கு இந்த நோயிலிருந்து தப்பிக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு. கூடவே நம்ம இந்த விஷயத்தை பற்றி இன்னும் நம்ம பிரெண்ட்ஸ் எல்லாத்துகிட்டையும் சொல்லணும்.

அவங்களோட அம்மாக்களுக்கும் இந்த டெஸ்ட் பண்ண வைக்கணும். இந்த மத்திய வயசுல இருக்க தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய்ங்குறது ரொம்ப அதிகமா பரவி வருது. ஆனா இதை பத்தின ஆபத்துகளை சொன்னாலும் நிறைய தாய்மார்கள் கேட்கிறது இல்லை.

கேட்டாலும் அவங்க அதை ஏத்துக்கிறதும் கிடையாது. இந்த மாதிரி ஏதாவது பயப்படுற மாதிரி சொல்லிடுவாங்களோன்னு நினைச்சு பயந்து பயந்து இதை டெஸ்ட் பண்ணாம விட்டுறாங்க.

வாழ்க்கை இன்னிக்கு இந்த நிமிஷம் வாழ்றதுக்குதான். அதுக்காக நாளைக்கு என்ன ஆனாலும் பரவால்லன்னு இருந்திட முடியாது இல்ல. அதனால கண்டிப்பா ஒவ்வொருத்தரையும் டெஸ்ட் பண்ண வைக்கணும். அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்” என்று நீளமாக பேசி முடித்தவளை, ஜானவி ஆச்சரியமாக பார்த்தாள்.

வேலினியுடன் பழகிய இந்த ஒரு வாரத்தில் ஜானவிக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது. பெரிதாக வேலினி யாருடனும் நட்புக் கொள்வதில்லை, நீளமாக பேசுவதும் கிடையாது. அவள் பேச்சுவார்த்தையே குறைவு தான். அப்படி இருக்கையில் இன்று இவ்வளவு நீளமாக பேச, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது வேலினியை காண.
இருந்தும் பெரிதாக அவளிடம் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே புன்னகையுடன் கடந்துவிட்டாள்.

வீட்டுக்கு வேலினியுடன் தான் சென்றாள் ஜானவி.
அவளின் தாய் என்ன நடந்தது என்று கேட்க, “ஒன்னுமே இல்ல இப்போதைக்கு எந்த பிரச்சினையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனா வருஷா வருஷம் கண்டிப்பா பரிசோதனை செய்து ஆகணும். அதுக்கு நீ நோனு சொல்லாம வரணும்” என்று தன் தாயிடம் கண்டிஷன் போட, அவள் தாயோ, “அடுத்த வருஷம் தான. அதை அப்ப பாத்துக்கலாம்”, என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

வேலினிக்கு ஜானவி நன்றாகத் தான் இருக்கிறாள் என்று தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அதனாலேயே அவளுடன் வந்தாள். அவளுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள். வீட்டிற்கு வந்ததும் அவள் தாயும் அவளை ஒரு வழி செய்து விட்டார்.
பரிசோதனைக்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நாளில் இருந்து இருந்து இந்த ஐந்து நாட்களாக அவளை ஒரு வழியாக்கி கொண்டிருக்க, இன்று பரிசோதனை அறிக்கை வந்துவிட்டதும், என்ன?ஏது? என்று விசாரித்து இன்னும் அவளை கடுப்பேற்றி விட்டார்.

அவளும் அவரிடம் அமைதியாகவே அனைத்தையும் கூறி ஒன்றுமே இல்லை. ஆனால் வருட வருடம் கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினாள். தெய்வானையும் ஜானவியின் தாயைப் போலவே, “அதை அப்ப பார்க்கலாம்”, என்று கூறி தன் வேலையை செய்ய நகர்ந்துவிட்டார்.

வேலினியின் நாட்கள் நகர தொடங்கியது. முன்பு செய்த எந்த பிழையும் இப்போது நடந்திடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் வேலினி. குடும்பத்தில் பணத்திற்கான பிரச்சனை வந்துவிடக்கூடாது அதையும் சரி செய்ய வேண்டும்.
ஆனால் எப்படி என்று தான் அவளுக்கு தெரியவில்லை புரியவில்லை. அதை எண்ணியே சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

ஆனால் இம்முறை படிப்பில் எந்த காரணம் கொண்டும் கவனம் சிதறிடவில்லை.
கல்லூரி செல்லும் நாட்கள் எல்லாம் வகுப்பில் இருக்கும் போது பாடத்தில் கவனமும், இடைவெளியின் பொழுது ஜானவி உடனான பேச்சும் என்ற பொழுது கழிந்தது. தினமும் அவள் தாயைப் பற்றி கேட்டுக் கொள்வதையும் அவள் தவற விடவில்லை.

அது மட்டும் இன்றி அடுத்ததாக தன் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு முழு உடல் பரிசோதனை செய்து விட்டால் என்ன என்று எண்ணத்திலும் இருந்தாள். அதற்கு காரணம் சிவகாமி பாட்டிக்கு முன்பு ஏற்பட்ட நெஞ்சு வலி தான் என்றால் மிகையல்ல.
இதற்கிடையில் வீட்டில் இருக்கும் பணப்பிரச்சனையை எப்படி சரி செய்வது? குழலினி 11 ஆம் ஆண்டு படித்து வருகிறாள்.

‘கல்லூரியில் சேரும்போதும் அவளுக்கு என்று அவள் விருப்பப்பட்ட பொறியியல் படிப்பை படிப்பதற்கு தேவையான சேமிப்பும் இருக்க வேண்டும். என்ன செய்யலாம்?’ என்று பலவாறு மனதில் திட்டம் ஓடி கொண்டே இருந்தது. ஆனால் அதற்கான எந்த முடிவும் தான் இதுவரை சரிவர கிடைக்கவில்லை.

ஒருபுறம் குடும்பத்தின் எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும், இன்னொரு விஷயமும் ஒரு ஓரமாக உறுத்திக் கொண்டே இருந்தது. ஜானகியும் இவளும் இவளும் சேர்ந்து அவள் தாய்மார்களுக்கு பரிசோதனை செய்ய வைத்து விட்டனர்.
அதன் முடிவுகளும் வந்துவிட்டது.

ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்தும் வேறு எந்த தோழிகளும் தன் தாய்மார்களை அழைத்து சென்றதாக கூறவில்லை.

அனைவரிடமும் விசாரித்த போதும் யாரும் வர மறுப்பதாக மட்டுமே இன்றுவரை கூறிக் கொண்டிருக்க, இந்த தாய்மார்களை எப்படி பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது என்ற எண்ணமும் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இதை எப்படி சரி செய்வது என்று அவளுக்கு நிச்சயம் தெரியவே இல்லை.

அன்று பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாள் வேலினி. அந்த நான்கு வழி சாலையில் பச்சை விளக்கு ஒளி வருவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டிருக்க அந்த சமயத்தில் அங்கு இருந்த அந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக சில மாணவர்கள் நின்றிருப்பது தெரிந்தது.

அவர்களின் நெஞ்சின் மேல் இருந்த அடையாள அட்டை அவர்கள் தேசிய சேவை திட்டத்தின் கீழ் தானாக முன்வந்து உதவும் மாணவர்கள் என்பது உணர்த்தியது. மாணவர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அங்கு அங்கிருந்த அனைவரும் எந்த எந்த சட்டத்தையும் மீறாமல் சென்று கொண்டிருப்பது நன்றாக கண்களுக்கு தெரிந்தது.

அதை பார்த்து புன்னகை புரிந்தவள், சுற்றி சுற்றி ஒவ்வொரு நிகழ்வுகளையும் உத்து கவனிக்கும்போது தான் தூரத்தில் ஒரு மாணவனும் அவனுடன் ஒரு வயதான நபரும் வண்டியில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அந்த வயதான நபர் இவனுடைய தந்தையாக இருக்க வேண்டும் என்று அவர்களின் உடல் மொழி கூறியது, முக சாயலும் அதை உறுதி படுத்த, அந்த மாணவன் அவரிடம் ஏதோ கூறினான்.

சரி என்று தலையாட்டி அந்த நபர் தன் வண்டியில் மாட்டி வைத்திருந்த தலைக்கவசத்தை தன் தலையில் மாட்டிக்கொண்டார். பேசி முடித்த உடனே அவர்கள் அங்கிருந்து நகர, இங்கு அவள் பேருந்தும் நகர்ந்தது.

அந்த காட்சியை புன்னகையோடும் யோசனையோடும் பார்த்துக் கொண்டிருந்தவள், அடுத்த நாள் முதல் வேலையாக கல்லூரிக்கு வந்து சேர்ந்ததும் ஜானவி முன்பாக போய் நின்றாள்.

அவளிடம், “எனக்கு ஒரு யோசனை தோனுது” என்று கூற அவளோ என்ன, எதைப் பற்றி என எதுவும் தெரியாமல் இவளை குழப்பமாக பார்த்தாள்.
“வேலினி, நம்மை அம்மா கிட்ட ஒரு நல்ல பழக்கம் இருக்கு. என்ன தெரியுமா? நம்ம அவங்ககிட்ட வீட்டுல தனியா சொல்ற எந்த விஷயத்தையும் காது கொடுத்து கேட்கவே மாட்டாங்க.

கேட்டா நம்ம சின்ன பசங்கன்னு சொல்லுவாங்க. ஆனா இதுவே நம்ம ஒரு பொறுப்பு இருக்கு அந்த பொறுப்பை செய்கிற இடத்தில் நாம் இருக்கோம்னா. அந்த இடத்துல இருந்து நம்ம என்ன சொன்னாலும் அது பெரிய விஷயமா நினைச்சு அதை பண்ணுவாங்க”
அவள் கூறியதை கேட்டபோது ஜானவிக்கு இன்னும் கோபம் தான் வந்தது.

தெளிவாக எதையும் பேசாமல் குழப்பும் அவளைக் கண்டால், கோபம் வராமல் என்னதான் செய்யும்.
அவளை இன்னும் முறைத்து பார்க்க,”சரி கோபப்படாத. நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் அவங்க அம்மா அப்பா கிட்ட எவ்வளவு சொன்னாலும் அவங்க அம்மாங்க எல்லாம் ஏன் அதை விஷயத்தை கேட்டு செக் அப் பண்றதுக்கு வர மாட்றாங்க தெரியுமா? அதுக்கு முக்கியமான காரணம் அவங்க எல்லாம் சின்ன பசங்க இவங்களுக்கு எல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறாங்க. அதுதான்.

இப்போ இதுவே அந்த விசயத்தை காலேஜ் எடுத்து நடத்தது இதுக்கான பொறுப்பை நம்மகிட்டயே கொடுத்திருக்காங்க அப்படின்னு வைச்சிக்கோ. அதை அப்படியே பெத்தவங்க கிட்ட கொண்டு போய் சேர்த்தா அவங்க இதை சீரியஸா எடுத்துப்பாங்க.

“எந்த காலேஜ் செய்ய போது. நீஅது மட்டும் இல்லாம எப்படி ஸ்டூடண்ட்ஸ் கிட்ட முழுசா இதை ஒப்படைப்பாங்க”.

“நம்ம காலேஜ் தான்”

“அப்படியா? நம்ம காலேஜா? எனக்கு தெரியாதே. எப்போ?” என்று வேகமாக கேட்கவும்

“அவங்களுக்கே தெரியாது. இனிமேதான் நம்ம ரெண்டு பேரும் போய் இதைப்பத்தி மேனேஜ்மென்ட்ல பேச போறோம்”, என்று வேலினி கூறியதும் இன்னும் இப்போது முறைத்து பார்த்தாள் ஜானவி.

“ஏன் டி …?இனிமே நம்ம பேசி அதை காலேஜ் ஒத்துக்கிட்டு…….. அதுவும் ஒத்துப்பாங்கனு நம்பிக்கை வேற உனக்கு இருக்கா” என்று கேட்க

“ஒத்துப்பாங்க டி நம்புவோம்”

“அப்படியா? சரி நீ போயி காலேஜ்ல பேசு. அதை செய்யட்டும். அப்புறமா நான் நம்புறேன்” என்று அவள் நக்கலாக கூறினாள்.

இவளும் சரி நான் பேசுறேன் என்று வேகமாக நகல, போகும் வேகத்தை பார்த்தால் நிச்சயம் போய் கேட்டு விடுவாளோ என்று வேகமாக அவளை பிடித்து இழுத்து, “நீ நெஜமாவே போறியா?” என்று கேட்க

“ஆமா டி நிச்சயமா காலேஜ் மேனேஜ்மென்டல பேசனும்”

“ஏன் நீ நம்ம ஸ்டாஃப யார்கிட்டயாவது இதைப்த்தி முதல்பேசகூடாது. அப்புறமா போய் அங்க பேசலாம்.”

“நோ, நம்ம டைரக்டா இந்த விஷயத்தை காலேஜ் மேனேஜ்மென்ட்க்கு கொண்டு போகலாம். அதான் பெட்டர்.”, என்று கூறி உடனே புறப்பட்டாள்.

ஜானவி அவளிடம், ஏன் இவ்ளோ சீரியஸா இருக்க வேலினி. கொஞ்சம் நார்மல் மோடுக்கு தான் வாயேன். ஒருவேளை அவங்க இல்ல வேணாம்னு ஏதாவது சொல்லிட்டாங்கனா என்ன பண்ணுவ உனக்கு கஷ்டமா இருக்கும்ல. இவ்வளவு சீரியஸா எடுத்துக்காதப்பா”, என்று அவளை நினைத்து கவலையோடு கூற,

ஆனால் வேலினி, “இது ரொம்பவே சீரியஸா விஷயம் தான் ஜானவி. அம்மாக்கு டெஸ்ட் பண்ணோம் ரிபோட் எப்படி இருக்கு பாத்த தான. அதே மாதிரி மத்த லேடிஸ்க்கும் இந்த மாதிரி எதாவது இருந்ததுனா, என்ன பண்ண முடியும்?
முக்கியமா லேடீஸ்க்கு வர இந்த பிரஸ்ட் கேன்சர் ரொம்ப அதிகமா பரவிக்கிட்டு இருக்கு. நம்மளால முடிஞ்ச முயற்சி எடுத்து பார்க்கலாமே? ஏதாவது ஒரு வழி கிடைக்கும். பேசி பார்க்கலாம் ப்ளீஸ்”, என்று கூறி அவளை கையோடு அழைத்துச் சென்றாள் வேலினி.

கல்லூரி முதல்வரிடம் தான் பேசினாள். அவர் பொதுவாக இப்படியான காரியங்களுக்கு உதவுவதற்கு மறுப்பதே இல்லை. அதனால் அவர்களின் பேச்சு அவரிடம் எடுபட்டது. அதேபோல் அவள் சொன்ன விஷயத்தின் தீவரத்தை புரிந்து கொண்டு அதே தீர்க்கத்துடனே மேலிடத்திற்கு எடுத்துரைத்து இருந்தார்.

இரண்டு நாட்களுக்கு பிறகு நல்ல செய்தி வந்திருப்பதாக கூறி அவர்களை அழைத்தார். நிர்வாகம் ஏற்று கொண்டது. ஆனால் அடுத்த வருடம் இதை செய்யலாம் என்று கூறியிருக்கிறார்கள் என்றார். அடுத்த வருடத்தில் இருந்து இது தொடரும் கவலை கொள்ள வேண்டாம்.

இந்த முறை மருத்துவமனையை அணுகி ஏற்பாடுகள் செய்வது கடினமான வேலை. தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருப்பதால் அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட இவளுக்கு ஒரு பெரும் ஏமாற்றமாக இருந்தது.
வேலினிக்கே தெரியும் தான்.

நிச்சயமாக இதை அவர்கள் ஒத்துக் கொண்டாலும் இப்போது நடத்த அனுமதி கிடைக்காது என்று. இருந்தாலும் அது ஏமாற்றமாகத் தான் இருந்தது.
அடுத்த நொடி மரணம் என்பதை இந்த நொடி அறியாத ஒருவனை விட, அடுத்த வருடம் நீ இறந்து விடுவாய் என்ற செய்தி கேட்ட ஒருவன் மிகவும் பாவப்பட்டவன்.

அவனை விட கூட பாவப்பட்ட ஜீவன் உலகில் இருந்திட முடியாது. அப்படியான ஒரு நிலை தான் வேலினிக்கும்.
ஆறு வருட காலம் அவள் வாழ்க்கையில் என்ன நடக்கும், எத்தனை பேரை இழப்பால் எத்தனை துன்பங்கள் நடக்கும் என அனைத்தையும் கண்டறிந்து விட்டு மீண்டும் அதே வாழ்க்கைக்குள் வந்து நிற்கின்றாள்.

அது எதுவும் நடந்து விடாமல் தடுக்க வேண்டும் என்ற முயல்கிறாள்.
கூடவே இம்முறை தன்னை பெற்றவளை மட்டுமல்லாது தன்னால் முடிந்தவரை அனைவரையும் காக்க வேண்டும் என்று எண்ணுகிறாள்.

ஆனால் அதை எல்லாம் தனி ஒருத்தியாக இவளால் செய்துவிட முடியுமா? அப்படியே அவள் செய்திட நினைத்தாலும், நினைத்த நொடி அனைத்தும் நடந்து விடுமா என்ன?
அனைத்தையும் ஏற்று தானே பழக வேண்டும். தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு விடாமல் முயற்சி செய்தால் தானே வெற்றியை எட்ட முடியும்.

ஒரே முயற்சியில் மனம் சோர்ந்து விட்டால் எங்கு சென்று வெற்றி கொள்வது.
வேலினியின் சோர்வை கண்ட ஜானவி தான் இன்றைய மாலை பொழுதை உன்னுடனே கழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு அவளுடன் பேருந்தில் ஏறிக்கொண்டாள். தருணிகாவும் தோழிகளும் கூட்டமான அந்த பேருந்தில் ஏறி ஒரு வழியாக கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

கடைசியாக ஜானவி வேலினி இருவரும் அமர்ந்து கொள்ள, கூட்டம் எல்லாம் குறைந்து பேருந்து இப்போது குறைந்த நபர்களை மட்டும் சுமந்து கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் ஜானவி வேலினியின் சோர்ந்த முகத்தை கண்டவள், “இப்படியே இருந்தா எப்படி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுப்பா.
அடுத்த வருஷம் பண்ணலாம்னு சொல்லிட்டாங்கல்ல. ஒரு வருஷத்துல என்ன மாறிட போகுது”,என்று அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்தாள்.

வேலினி உடனே ஆரம்பித்து விட்டாள் தன் புலம்பலை. வெகுநேரமாக அவள் புலம்பி கொண்டிருக்க, ஜானவிக்கு அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.
ஒரு கட்டத்தில் அவள் மனதின் வருத்தங்கள் எல்லாம் புலம்பலாகவாவது வெளியேறட்டும் என்று விட்டு விட்டாள்.

வேலினியும் சிறிது நேரத்தில் புலம்புவதற்கு கூட வார்த்தைகள் இல்லாமல் அமைதியாகி விட, அந்த அமைதியை கிழித்துக்கொண்டு அந்த குரல் வேலினியின் செவியினை தீண்டியது.

“உன் பிரச்சனைக்கு எல்லாம் நான் ஒரு தீர்வு சொல்லட்டுமா, வேலினி? என்று அவளின் அமைதிக்கு இடையே கணீரென்று ஒலித்து அவள் செவியினை தீண்டிய அந்த குரலுக்கு சொந்தக்காரன் யார் என்று சன நேரத்தில் அவளுக்கு விளங்கியது.

திரும்பாமலேயே அவன் பெயரை மெல்லமாக, “குரு” என்று சரியாக உச்சரித்தாள் குருவின் வேலினி.

வருவாள்………

மகா ஆனந்த் ✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!