Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 17

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 17

மகன் டவுசர் பையில் இருந்து ஆயிரம் ரூபாய் பணம் இருக்கவும் அதிர்ந்து போனாள் பிரவீனா. தன் கையில் இருந்த பணத்தையும், மகனையும், ஆர்த்தியையும் மாறி மாறி பார்த்தவள், மனம் படபடக்க ஆரம்பித்தது. ஆர்த்தி பார்வை கூர்மை பெற,

“என்னடா பணம் இது?” என்றாள் மகனை பார்த்து…

ஆதிரன் புரியாமல் தாயை பார்த்தான். அம்மா கேட்கும் கேள்வி புரிந்தது.. அதற்கு பதில் தான் தெரிய வில்லை.



Advertisement

“எனக்கு தெரியல ம்மா” என்றான் மகன் பரிதாபமாக..

“உனக்கு தெரியாம எப்படிடா காசு உன் பையில வந்துச்சு” குரல் கொஞ்சம் அதட்டலாக வந்தது.

ஆர்த்தியின் பார்வை முழுக்க ஆதிரன் மேல் சந்தேகமாக பதிய, தாங்கவில்லை தாய்க்கு… கட்டாயப்படுத்தி விடையை தெரிந்து கொள்ள முயற்சித்தாள்.

Advertisement

பிள்ளை கொஞ்சம் பயந்தது. தாய் அதட்டல் ஒரு மாதிரி அழுகையை கொடுக்க, உதடு துடிக்க தெரியவில்லை என்று தலையாட்டினான்.

Advertisement

மகனின் முக பாவம் நெஞ்சை அடைக்க, “நெஜமாவே உனக்கு தெரியலையா அத்து?” என்றாள் பிரவீனா.

 “இப்படி கொஞ்சி கேட்டா அவன் எப்படி பதில் சொல்லுவான் அண்ணி. எல்லாரும் அவனுக்கு செல்லம் கொடுக்குறிங்க. யாருமேலையும் அவனுக்கு பயம் இல்லை… கொஞ்சம் பயமுறுத்தி கேளுங்க” என்று சடவாக சொன்னாள் ஆர்த்தி.

“சொல்லு அத்து, காசு எப்படி உன் பையில் வந்தது…”

Advertisement

அதிரன் பதில் சொல்ல தெரியாமல் முழித்தான்.

“கேட்கிறேன்ல்ல பதில் சொல்லுடா? காசு எடுத்தியா? இல்லை யாரு காசு கொடுத்தா?” முகம் கோபத்திற்கு மாற ஆரம்பித்தது.

ஆர்த்தி பார்க்க பார்க்க பிரவீனாவுக்கு பிரஸர் கூடியது. என்னவென்று தெளிவாக சொல்ல தெரியாத மகன் மீது ஆத்திரம் வந்தது.

“ஆதிரன்” பெரிதாக சத்தம் போட, பிள்ளை உடல் தூக்கி போட்டது.

“காசை எடுத்தியாடா” என்று அவன் தோளை பிடித்து உலுக்க, ஆதிரன் கண்களில் நீர் நிறைய ஆரம்பித்தது.

“இல்லை ம்மா”

“அப்புறம் எப்படிடா பணம் உன் பையில வந்துச்சு” அவன் தோளில் வைத்த கையை எடுக்க வில்லை. பிள்ளைக்கு வலி போல.. அழ தொடங்கினான்.

“அண்ணி அவனை விடுங்க” என்ற ஆர்த்தி, ஆதிரன் அருகே வந்து,

“அங்க டேபிள் மேல வச்ச பணத்தை எடுத்தியா?” என்று கேட்க.

“இல்லை அத்தை”

“அப்புறம் எப்படி பணம், உன் பையில வந்துச்சு. அத்தை கிட்ட சொல்லு, அம்மா அடிக்க மாட்டாங்க..”

ஆதிரன் புரியாமல் நின்றான். அவனுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. அம்மா கேட்பது, அத்தை கேட்பது என்று குழப்பமாக இருந்தது.

“மதியம் நீ இங்க தான இருந்த, நான் பார்த்தேன். விளையாடும் போது தெரியாம எடுத்து வச்சுட்டியா? அம்மாக்கு பயந்து சொல்லாம இருக்கையா ஆதிரன். அத்தை கிட்ட சொல்லு, அம்மா கிட்ட அடி வாங்காம நான் பார்த்துக்கிறேன்” என்றதும் பிள்ளை யோசிக்க தொடங்கியது.

ஆர்த்தி வார்த்தை எல்லாம் ஆதிரன் தான் திருடியது போலவும், அவனை ஒப்பு கொள்ள சொல்லி பேசுவது போலவும் இருக்க,

“ஆர்த்தி, அவன் எடுத்தான என்னன்னு தெரியல. நான் கேட்கிறேன்” என்றாள் பிரவீனா.

“வேற யாரு அண்ணி எடுக்க போறா… நீங்களா அவன் கிட்ட அவ்வளவு பணம் குடுத்திங்க. என் பணம் ஆயிரம் ரூபாய் காணம். அவன் கையில இருக்குற பணமும் ஆயிரம் ரூபாய். அஞ்சு வயசு பையனுக்கு யாரு பணம் கொடுக்க போறா…”

“எனக்கு என்னவோ, உங்க மகன் தான் தெரியாம எடுத்து இருக்கணும்.. கண்டுபிடிச்சதும் உங்களுக்கு பயந்து பதில் சொல்ல தெரியாம நிக்கிறான். நான் ஆரம்பத்துல இருந்து சொல்றேன், கொஞ்சம் கண்டிச்சு பிள்ளை வளங்கன்னு… நான் என்னவோ விரோதி மாதிரி பார்த்தீங்க. கடைசில அப்பா அல்லாத புள்ள வளர்ப்ப பாத்தீங்க தானே” என்ற ஆர்த்தி சொன்னதும், பிரவீனா முகம் வேற மாதிரி மாறத் தொடங்கியது.

பட்டென்று பிரவீனா மகன் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தாள். பிள்ளை துடித்துப் போனான். மகன் சத்தமாக அழுவது எல்லாம் பிரவீன கவனத்தில் நிற்கவில்லை.

“சொல்லுடா பணம் எடுத்தியா? எதுக்கு அந்த பணத்தை தொட்ட? எப்ப இருந்துடா இந்த பழக்கம். யார் காசையும் எடுக்க கூடாதுன்னு நான் சொல்லி இருக்கேன் தானே” என்று தொடர்ந்து ரெண்டு மூணு அடி கொடுக்க ஆதிரன் அழுது கொண்டே இருந்தான்.

“எங்க முன்னாடி எதுக்கு அண்ணி அடிக்கிறீங்க. நாங்க பாக்குறதுக்கா நீங்க உங்க பையன அடிக்கிறீங்க. ஆரம்பத்திலே கண்டிச்சு வளர்த்திருக்கணும். அப்பா இல்லாத பையன்னு எதுக்கெடுத்தாலும் செல்லம். என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்கிறது. அடியாத மாடு படியாது என்று தெரியாதா? நாங்க பாக்க அடிச்சா எங்களுக்கு சங்கடமா இருக்காது” என்று ஆர்த்தி மேலும் பேச,

அவள் பேச்சோடு, பிள்ளை அழுகையும் பிரவீனா மனதை பிசைந்தது.

“ஆதிரன் இங்க பாரு. அம்மாவை பாரு. நீ அந்த பணம் எடுத்தியா? என்கிட்ட உண்மையை மட்டும் சொல்லு.. அம்மா அடிக்க மாட்டேன். மன்னிச்சு விட்டுடுறேன். நீ அந்த பணம் எடுத்தியா?”

ஆதிரன் அழுது கொண்டே இருந்தான்.

“பேசுடா வாயை திறந்து.. டேபிளில் இருந்த பணத்தை நீ எடுத்தியா?” அப்போதும் ஆதிரன் அழுது கொண்டே இருக்க, பிரவீனா கோவம் அதிகரித்தது.

“இதுக்குத்தான் ஆரம்பத்தில் இருந்தே நான் ஆதிரனை ரூம்குள்ள விட்டதில்ல. என்னை தப்பு சொன்னீங்க. இந்த பொருள் தொடாத, இதை பண்ணாதன்னு லேசாவாது அடிச்சு வளர்த்து இருக்கணும்.. நீங்க ரொம்ப செல்லம் கொடுத்துட்டீங்க அண்ணி. ஒரே வீடா இருக்க போய் சரியா போச்சு. இதுவே, வெளியன்னா பெரிய சண்டையே வந்திருக்கும்”

“அப்பா இல்லாத பிள்ளையோட வளர்ப்பு சரியா காட்டுது பாருங்க. அப்பா இருந்திருந்தா ஒரு பயம் இருக்கும். நீங்க எப்பவும் செல்லம். அதான், அவன் இஷ்டத்துக்கு இருக்கிறான் நானும் கண்டிச்சேன், உங்களுக்கு என் மேல தான கோவம் வருது. சொந்தம்னு நாங்க அமைதியா போவோம் மத்தவங்க அப்படி கிடையாது இல்ல. ஏதாவது பேசிட்டா நீங்க தான் ரொம்ப வருத்தப்படுவீங்க. நீங்க பிள்ளை வளக்குறது சரி இல்லை. இவன் வளர்ப்பு ரொம்ப தப்பா இருக்கு. புருசன் இல்லாம கூட நான் தனியா பிள்ளை வளர்த்து விடுவேன்னு சொல்லி உங்க வீட்டில் இருந்து தூக்கி வந்தீங்க… தலை குனிஞ்சு நின்னுராதீங்க. குடும்பத்துல இருக்கறவங்க சில விஷயங்களை சொன்னா கேட்டு பழகுங்க” என்று ஆர்த்தி நகர,

மகேஸ்வரி மனம் சஞ்சலமாக இருந்தது. வீட்டில் இருந்த பணம் காணம். அது ஆதிரன் பையில்.. அவனும் ஒன்றும் புரியாமல் முழிக்கிறான். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“அப்பவே எல்லாரும் சொன்னாங்க நீதான் கேட்கல பிரவீ… சித்திரையில பொறந்தா சீரழியுன்றது சரியா தான் இருக்கு” என்று தாய் புலம்ப, பிரவீனா மனம் பெரிதாக அடி வாங்கியது.

ஆதிரன் கருத்தரித்த நாளிலிருந்து பலர் இதைத்தான் சொல்லி விட்டார்கள். சித்திரை மாதம் பிறந்தால் வீட்டுக்கு ஆகாது, குடும்பத்துக்கு ஆகாது என்று… சித்திரையில் பிறக்கும் பிள்ளை சீரழியும் என்று யார் சொன்னார்களோ!… அது இவர்கள் தலையெழுத்தை மாற்றி எழுதி விட்டது.

பிரவீனாவுக்கு பெற்றவள் வார்த்தை மிக அதிர்ச்சி அளித்தது. அவள் மாமியார் இதை அடிக்கடி சொல்வார் அதுவும் மகன் இறந்த பின் சொல்லாத நாட்களே கிடையாது. ஆனால், தன் தாயிடமிருந்து இந்த வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை. ஆக அவர் மனதிலும் இந்த எண்ணம் இருந்திருக்கிறது… யாரையும் பார்க்காமல், எதற்கும் பதில் சொல்லாமல் ஆதிரன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்கு சென்று கதவடைத்தாள்.

“கடைசியில் ஊரார் சொல்வது போல அப்பா இல்லாத பிள்ளையின் வளர்ப்பு தப்பாகி போனதே.. என் மகன் என்ற பெருமை, அவனுக்காக மட்டுமே வாழும் வாழ்க்கையின் வைராக்கியம் எல்லாம் அடிபட்டு போனது. யார் முன்பெல்லாம் நிமிர்ந்து நிற்க நினைத்தாளோ!.. அவர்கள் முன்பே, தன் வளர்ப்பு சரியில்லை என்று தலை குனிந்தாயிற்று”

தற்போது பிரவீனா பணம் எடுத்தது ஆதிரன் தான் என்று முழுதாக நம்பினாள்.

“என்னடா பழக்கம். எத்தனை முறை உனக்கு நல்லது சொல்லி வளர்த்து இருக்கேன். எதுக்குடா அந்த பணத்தை எடுத்த” ஆர்த்தியின் வார்த்தைகள் அவள் காதில் எதிரொலித்துக் கொண்டே இருக்க, கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.

பிள்ளை தாயின் முகம் பார்த்து பயந்து கட்டிலில் ஒட்டிக் கொண்டு நிற்க.. அவனின் பயந்த முகமோ, நடுங்கும் இதழ்களோ, உடல் விடப்விடப்போ எதுவுமே பிரவீனா கவனத்தில் பதியவில்லை. இவன் பையில் தானே பணம் இருக்கு. அப்போ இவனை விட்டால் வேற யார் எடுத்து இருக்க போறார்கள்.

ஆதிரனை சும்மா மிரட்டுவதற்காக எப்போதுமே அவள் அறையில் ஒரு கரண்டி இருக்கும். அதை எடுத்துக் கொண்டவள்,

“இனி பணத்தை தொடுவியா? யார் பொருளையும் எடுப்பியா? சொல்லு.. இனி தொட மாட்டேன் ம்மான்னு சொல்லு?” என்று அடிக்க ஆரம்பித்தாள்.

கையில், முதுகில், தொடையில் சுள்ளு சுள்ளென்று அடி விழுந்தது. பிள்ளை வலியில் கத்தியும் பிரவீனா வேகம் குறைய வில்லை.

“எதுக்கு அழுகுற.. பதில் சொல்லு? யார் பொருளையும் தொடுவியா?”

“தொட மாட்டேன் ம்மா” அழுது கொண்டே பிள்ளை சொல்ல, நிறுத்த வில்லை அவள்..

“அவங்க ரூம்க்கு போவீயா? அங்க எதுக்கு போற..”

“போக மாட்டேன். வலிக்குது, அடிக்காதீங்க” அடித்த இடத்தில் கையால் தடவி கொண்டே மகன் சொல்ல, மனம் வலித்த போதும். தன் மகனை ஒருவர் குறை சொல்வதா என்ற எண்ணம் பின் தங்க விட வில்லை.

“வலிகட்டும். நல்லா வலிகட்டும்.. இனி என்கிட்ட சொல்லாம அந்த பக்கம் கூட போக கூடாது. எவ்வளவு தைரியம் உனக்கு.. அம்மா உனக்காக தான் வாழ்றேன். அந்த நினைப்பு உனக்கு இருக்கா”

“எவ்வளவு எடுத்து சொல்லி இருப்பேன். என் வளர்ப்பு தப்பா போச்சே.. உங்க அப்பா எவ்வளவு நல்லவர். அவர் வயித்துல போயி நீ எப்படிடா வந்த.. யார் சொல்லியும் கேட்காம, உனக்காக மட்டுமே ஓட்டிட்டு இருக்கேன். நீ மட்டும் தான் உலகம்ன்னு நினைச்சேன். உனக்கு என்ன குறை வச்சேன். நான் கஷ்டபட்டு கூட, நீ கேட்டது எல்லாம் வாங்கி தந்தேன் தானா.. அப்புறம் எப்படி புத்தி மாறி போச்சு..” பிள்ளை அழுதும், அவள் விட வில்லை.

அவளுக்கு நிறைய அழுத்தம், வலி, மன போராட்டம். அந்த சூழ்நிலையை கடக்கவே தெரியவில்லை.

“உங்க அப்பா போனப்பவே, உன்னையும் கொன்னுட்டு, நானும் போய் சேர்ந்திருக்கணும். அப்படி நம்ம ரெண்டு பேரும் செத்து போயிருந்தா கூட நிம்மதியா இருந்து இருக்கலாம். உன்னையாவது நல்லபடியா வளர்த்து, கரை சேர்க்க நினைச்சேன். உனக்காக தான் உசுரை கையில பிடிச்சு ஓட்டிட்டு இருக்கேன். அதுக்கெல்லாம் அர்த்தமே இல்லாம போச்சு” அவளுக்கும் அழுகை வந்தது.

மனம் ஓய அழுகவாது செய்வோம் என்று அவளும் ஒரு மூலையில் அமர்ந்து அழுக தொடங்கினாள். இனி, அப்பா, தம்பி என்று அவர்கள் ஒரு பக்கம் பஞ்சாயத்து வைப்பார்கள். திரும்பவும் தன் மகன் விமர்சிக்க படுவதை தாங்க முடியவில்லை அவளுக்கு…

ஆதிரனும் அழுது கொண்டே தாயிடம் வர, மடியில் அமர்த்தி கொண்டாள் பெற்றவள்.. இருவருக்கும் ஒருவரை ஒருவர் விட்டால், வேற யார் துணை. மகனின் உடலை தடவி பார்த்தாள். தொட்டு தொட்டு தூக்கி வளர்த்த மகனை, தானே கண் மண் தெரியாமல் அடித்து விட்டோமே என்று வேதனையாக இருந்தது. மெல்ல மகனை மடியில் போட்டு தடவி கொடுத்தாள்.

தாயின் அரவணைப்பு கிடைத்ததும், மகன் அழுத சோர்வில் உறக்கத்திற்கு சென்றான். மகனின் முகத்தை பார்த்து கொண்டே அவள் அமர்ந்து இருக்க… வெளியே சத்தம் கேட்டது.

 பிரவீனாவிடம் ஒரு பெருமூச்சு… இனி இவர்களை சரி கட்ட வேண்டும். எதிர்த்து சண்டை கூட போட முடியாத அளவுக்கு தவறு இவள் மகன் பக்கமாகி விட்டதே… மெல்ல மகனை படுக்க வைத்தவள் வெளியே வந்தாள். அதற்குள் நடந்ததை ஆர்த்தி விலாவாரியாக குடும்பத்தாரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“என்ன சொல்ற ஆர்த்தி.. உன் பணம் காணமா? ஆதிரன் எடுத்தானா? ஆர்த்தி அந்த பணத்தை நான் தான் எடுத்தேன். நீ பாட்டுக்கு டேபிள் மேல வச்சிட்டு போயிட்ட, கீழ விழுந்துடுமேன்னு நான் தான் எடுத்தேன். உனக்கு மெசேஜ் போட்டேனே நீ பாக்கலையா” என்றான் பிரேம்.

அதிர்ச்சியில் உறைந்து போனாள் ஆர்த்தி. இவள் ஆதிரன் பணம் எடுத்ததாக நினைத்து தானே அவ்வளவு பேச்சு பேசியது. “ஐயோ, இனி எப்படி அண்ணி முகத்தில் விழிப்பேன்” ஆனாலும், விடாமல்…

 “அப்புறம் ஆதிரன் பையிலையும் பணம் இருந்ததே அதே ஆயிரம் ரூபாய் நோட்டுதான்” என்றாள்.

“அதை நான் தான் கொடுத்தேன்” என்றார் பிரவீனா தந்தை. தலைசுற்ற எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள் பிரவீனா,

“நீங்களா ப்பா தம்பிக்கு பணம் கொடுத்திங்க. சின்ன பையனுக்கு எதுக்கு அவ்வளவு பணம் கொடுத்தீங்க” அழுகையில் அவளுக்கு தொண்டை அடைத்தது.

“காலையில அவசரமா கிளம்பும்போது என்னையும் கூட்டிட்டு போகணும்ன்னு ஒரே அழுகை. ஏதோ ஸ்பைடர் மேன் டிரஸ் வேணுமாம். சரி சாயங்காலம் தாத்தா வந்து வாங்கி தரேன்னு சொன்னாலும் அவன் கேட்கவே இல்லை. என் கையை விடாமல் தொடுத்திட்டு இருந்தான்” என்றவர்,

 “அதான் அவன் நம்புரதுக்காக அவன் டவுசர் பையல ஆயிரம் ரூபாய் வைத்து, சாயங்காலம் தாத்தா கண்டிப்பா உனக்கு கடைக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு போனேன். நான் பணம் வச்சது சின்ன பையனுக்கு மறந்து போச்சு போல. அவன் கையில குடுக்காம அவன் பையில வச்சதால அவனுக்கு நினைப்பு இல்லையோ” என்று தந்தை சொல்ல,

லோ பிபியில் பிரவீனாவுக்கு தலைசுற்றல் வந்தது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!