Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உறவாடும் கனவே தொடருதே

அத்தியாயம் -11 – part-2

அவன் கூறியது எதுவும் புரியவில்லை, இருந்தாலும், ஏதோ பூடகமாக பேசினான் என்பது மட்டும் புரிந்தது. 

இளங்கோவோ, “அவன் கிடக்கிறான் விடு, எது வந்தாலும் நான் பார்த்துகிறேன்” என தைரியமூட்டினார் அவனை.



Advertisement

“அவனும் தேங்க்ஸ் அங்கிள், நீங்களும் கூட இருந்து சப்போர்ட் பண்ணதால் தான் அவளை என்னால் அவமானப்படுத்த முடிஞ்சது” என இளங்கோவிற்கு நன்றி கூறியவன், 

“எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே அடிச்சு இருப்பா. அவளுக்கு நல்லா வேணும்” என வெண்பாவை பழி தீர்த்ததில், அவனுக்கோ அத்தனை ஆனந்தமாக இருந்தது.

Advertisement

Advertisement

இளங்கோவிடம் மட்டும் அவன் உண்மையை ஏற்கனவே கூறி இருந்தான். கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டான், என்று அனைவரிடமும் கூறியது போலவே, இளங்கோவிடம் கூறிய பொழுது அதை அவர் நம்பவில்லை.

“இல்லையே!! இந்த மார்க்கை பார்த்தா கிழே விழுந்து அடிபட்டது போல இல்லையே!! உண்மைய சொல்லு கிஷோர் என்ன நடந்துச்சு?”

Advertisement

என கேட்டதும் அவனால் உண்மையை மறைக்க முடியவில்லை. தான் வெண்பாவிடம் பேச முயற்சித்து பொழுது, எதேர்ச்சையாக அவள் கையை பிடித்து விட்டேன். அதற்கு அடித்து விட்டாள் என நடந்தவற்றை எல்லாம் அவரிடம் கூறிவிட்டான்.

அவள் மீதிருக்கும் கோபத்தையும், அவளை பழி வாங்க காத்திருப்பதையும் சேர்த்து கூற, இது தான் சந்தர்ப்பம் என அவரும் இவனுடன் இணைந்து கொண்டார்.

வந்த நாளிலிருந்து அவரும் பார்த்து கொண்டு தானே இருக்கிறார். வெற்றி, அவர்களை விட வெண்பாவிற்கு தானே, அதிகம் முக்கியவதுவம் கொடுக்கிறான்.

அவர்களை சுத்தமாக மதிப்பதில்லையே!! நாளை தங்கள் வீட்டிற்கு மாப்பிள்ளையாக வர போகிறவன், தங்களுக்கு தானே முன்னுரிமை கொடுக்க வேண்டும். எந்நேரம் வெண்பாவிற்கே கொடுத்தால், அதை எப்படி அவரால் ஏற்றுகொள்ள முடியும்.

எப்படியாவது அவளை நிரந்தரமாக இந்த வீட்டிற்கு வராதபடி செய்ய வேண்டும் என்று தான் அவரும் யோசித்து கொண்டிருந்தார்.

கிஷோரும் அவள் மீது வெறுப்பில் உள்ளதால், அவனுடன் சேர்ந்து கொண்டார்.

செயினை காணவில்லை என்றதும் அப்போதே புரிந்து கொண்டார் இளங்கோ.

இது கிஷோரின் திட்டம் தான் என்பது. அதனால் அவனுக்கு  துணையாக நின்றார்.

விஷயம் கேள்விப்பட்டு வெற்றி கோபப்பட்டாலும் அது கிஷோரின் மீது தான் இருக்கும். தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிடலாம். அதே சமயம் என்னதான் வெண்பா மீது தவறு இல்லையென்று ஆனாலும், இனி அவள் இந்த வீட்டிற்கு வர மாட்டாள். என பலவாறு யோசித்தே இதில் கிஷோருடன் கை கோர்த்தார்.

இங்கு, சோர்ந்து போய் இல்லம் வந்து சேர்ந்த மூவரும், ஆளுக்கு ஒரு மூலையில் இடிந்து போய் அமர்ந்தனர்.

நடந்த சம்பவத்தின் தாக்கம் அவர்களை உலுக்கி எடுத்திருந்தது.

வெண்பாவை பற்றி கேட்கவே வேண்டாம், அவர்கள் பழியை போட்டது கூட அவளுக்கு வலிக்கவில்லை. தந்தை தன்னை பார்த்து இப்படி கேட்டுவிட்டாரே என்று தான் அவளுள்ளம் கதறியது.

சண்முகமும், சிறிது நேரம் கழித்து திரும்பி மகளை பார்த்தார். அவளோ எங்கோ வெற்றிப்படி, பித்து பிடித்தது போல அமர்ந்திருந்தாள்.

அதனை பார்க்க பார்க்க, ஒரு தந்தையாக அவருக்கு அத்தனை வேதனையாக இருந்தது. யார் என்ன சொன்னாலும் அவருக்கு அவள் மகள் ஒரு தேவதை. அவருக்கு தெரியாதா தன் மகளை பற்றி. இருந்தும் அவர் இப்படி கேட்டது, அவளை எந்தளவிற்கு பாதித்து இருக்கும் என அவருக்கு  நன்கு புரிந்தது.

மெதுவாக, அவளருகில் வந்து அமர்ந்தவர், அவள் தலையை லேசாக தடவி, 

“அப்பா, மேலே கோபமா டா உனக்கு?” என கேட்கும் பொழுதே அவருக்கு கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. அவள் அசையாமல் இருக்க, 

“நான் அப்படி கேட்டதுக்கு காரணம் இருக்கு டா. அப்பாவுக்கு உன்ன பத்தி தெரியாதா? நேர்மையும் உண்மையும் உன் கூடவே பொறந்ததாச்சே!!

அந்த சூழ்நிலையில் என்ன பண்றதுனு எனக்கு தெரியல மா.  அவங்க போலீசுக்கு போவேன், அங்கே போய் பேசிக்கோங்க சொல்லும் போது, ஒரு அப்பாவா அங்க இருந்து உன்னை எப்படியாச்சும் கூட்டுட்டு வர தான் தோணுச்சு.

நானும், என் பொண்ணு எடுத்திருக்க மாட்டா, அவ மேலே வீண் பழி போடுறீங்க சொல்லி சண்ட போட்டு இருக்க முடியும். ஆனால் எவ்வளவு நேரம் போட முடியும். அவங்களுக்கே தெரியும் நீ எடுக்கலைன்னு, ஆனால் எதுக்காக இப்படி பண்ணாங்க தெரியல. அவங்களாம் பணம் வச்சு இருக்கிறவங்க, அவங்க சொல்றதை தான் இந்த ஊரும் உலகமும் நம்பும். நாம சொல்றதை யார் நம்புவா? 

அதான் வேற வழி தெரியாமல் இப்படி பண்ணிட்டேன். அங்கிருந்து உன்னை எவ்வளவு சீக்கிரம் கூட்டிட்டு வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கூட்டிட்டு வந்துடனும் தான் இப்படி பண்ணேன். அப்பாவை மன்னிச்சுடு மா” என அவர் மகளின் கைகளை பிடித்து கொண்டு அழ, வெண்பாவால் அதனை தாங்கவே முடியவில்லை.

“அப்பா, வேண்டாம் ப்பா” என அவர் நெஞ்சிலே சாய்ந்து அழுதாள். கனகவல்லியாலும் இதை தாங்க முடியவில்லை.

“ஏங்க  அழாதீங்க. வெண்பா நீயும் அழாதே. நமக்கு யாரும் இல்லை. நமக்கு யாரும் வேண்டவும் வேண்டாம். நாம இந்த ஊரிலே இருக்க வேண்டாம், வேற ஏதாச்சும் ஊருக்கு போய் பொழச்சிக்கலாம்” என்றதும் சண்முகத்திற்கும், வெண்பாவிற்கும் அதுவே சரியென்று பட்டது. 

“நீ சொல்றதும் சரி தான். இந்த ஊரே வேண்டாம்.எங்கயாச்சும் போயிடலாம். நாளைக்கே இந்த ஊரில் இருந்து கிளம்பிடலாம். நான் போய் அதுக்கான வேலையை பார்க்கிறேன்” என அவர் கண்களை துடைத்து கொண்டு வெளியேற, வெண்பாவோ அவள் அவளறைக்கு வந்து படுத்து கொண்டாள்.  மனம் ஊமையாய் ஆறுதல் தேடி கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை சண்முகமும் கனகவல்லியும் வீட்டை காலி செய்வதற்க்கான வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். வெண்பாவும் அவர்களுக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருக்க, அங்கு புயல் போல் நுழைந்தான் வெற்றி திருக்குமரன்.

அவன் வந்த வேகமே அவன் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறான் என்பது எடுத்து காட்டியது.  நேராக வெண்பாவின் அருகில் வந்தவன், அவள் கைப்பிடித்து இழுத்து கொண்டு வர, வெண்பாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

“வெற்றி.., என்ன பா? அவளை எங்க கூடி போற?” என சண்முகமும், கனகவல்லியும் மாறி மாறி கேட்க, அவன் எதற்கும் பதில் சொல்லவில்லை. அவன் பாட்டுக்கு அவளை கூடி கொண்டு வீதியில் நடந்தான்.

“மாமா கையை விடுங்க…. விடுங்க..” என அவள் கூறியதும் அவன் காதில் விழவில்லை.

நேராக பெரிய வீட்டின் வாசலுக்கு செல்ல, உள்ளே நுழைய இருந்தவனை கைபிடித்து தடுத்து நிறுத்தினாள் வெண்பா.

“வேண்டாம் மாமா. உண்மையில் உங்களுக்கு என் மேலே பாசம் இருந்தா என்னை உள்ளே கூட்டிட்டு போகாதீங்க. நான் ரொம்ப அவமானப்பட்டுட்டேன். என்னால் அதோடு உள்ள வர முடியாது” என கண்ணில் நீர் வழிய கூற, அவள் கண்ணீரை கண்டவனுக்கு மனம் பிசைந்தது.

“நான் இருக்கும் போது நீ அழலாமா?. உன் கண்ணில இருந்து தண்ணி வந்தா எனக்கு ரத்தமே வர மாதிரி தான்” என அவள் கண்ணீரை துடைத்து விட்டவன்,

“உனக்கு ஒரு அவமானம்னா, அது எனக்கும் தான். அதை தீர்க்காம போக நானும் உள்ளே போக மாட்டேன்” என திடமாக கூறியவன்,

“அப்பத்தா…அப்பத்தா..” என அந்த இடமே அதிரும்படி கத்த, அனைவரும் என்னவோ ஏதோவென்று வீட்டின் வெளியே ஓடிவந்தனர்.

வீட்டினுள் உள்ளவர்கள் மட்டுமில்லாது, அங்கு வேலை செய்பவர்கள், தெருவில் சென்று கொண்டிருந்தவர்கள், என அனைவரும் ஏதோ பிரச்சனை என வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

“ஐயா.. ராசா.., என்னய்யா ஏன் இப்படி கத்துற?” என நாச்சியார் உள்ளிருந்து வெளியே ஓடி வந்து பார்க்க, அங்கு வெற்றியோ, வெண்பாவின் கை பிடித்து உக்கிரமாக நின்று கொண்டிருந்தான்.

அவரை கண்டதும் வெண்பா ஒதுங்கி நிற்க போக, வெற்றி விடவே இல்லை. அவளை இழுத்து தன் பக்கத்திலே நிறுத்தி கொண்டான்.

“என்ன ராசா? ஏன் வாசலிலே நின்னுட்டு இருக்க, உள்ள வா. உள்ள வந்து பேசு பா” என கூற, அவரை முறைத்து பார்த்தபடியே இருக்க, அவரால் பேச முடியவில்லை.

அவனது குரல் கேட்டு இளங்கோ, கிஷோர், ராகினி, அமுதவல்லி, கதிர்வேல், மீனாட்சி, வள்ளி, லட்சுமி என அனைவருமே வெளியே வந்தனர்.

கிஷோர் வந்ததும், அவனை உக்கிரமாக பார்த்தப்படி அவன் எதிரில் சென்று நிற்க, அவனுக்கோ அவனை கண்டதும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அவன் எவ்வளவு தான் தைரியமாக தன்னை காட்டி கொண்டாலும், அவனால் வெற்றியை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை.

எச்சிலை விழுங்கியபடி, அவனை பார்க்க, வெற்றி சற்றும் யோசிக்கவில்லை, ஓங்கி அவன் கன்னத்திலே அறைய, அதில் அவனின் பற்கள் ரத்தத்துடன் கழன்று கீழே விழுந்தது.

எவ்வளவு தான் ஓடி ஒளிந்தாலும்

விடாமல் விரட்டி பிடித்து விடுகிறதே

உன் நினைவு!!

எத்தனை நாள் தான் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை 

தொடர்வதோ!!

கனவுகள் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!