Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 19

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 19

     தன் வீட்டு பால்கனியில் நின்று வானத்தில் தெரியும் நட்சத்திரங்களை பார்த்து கொண்டிருந்தான் மித்ரன். தனக்கென்று ஒரு வாழ்க்கையை துணையை தேர்ந்தெடுத்து கொண்டதில் அவன் மனம் சந்தோசமாகவும் இருந்தது, அதே நேரத்தில் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. தன்னால் ஒரு பெண்ணோடு வாழ்க்கை முழுவதும் வாழ முடியுமா?…

திருமணத்திற்கு பின் தன் மனம் மாறிவிட்டால்.. என்னோடு சேர்ந்து பிரவீனா, ஆதிரன் வாழ்க்கையும் அல்லவா கெட்டு விடும். தந்தை இல்லா பிள்ளை அவன்.. நிச்சயம் தன் தோள்கள் அவனுக்கு வேண்டும். பாவம் பிரவீனா, ஒரு வருடம் தான் அவள் குடும்ப வாழ்க்கை. என்ன சந்தோசத்தை அனுபவித்து இருப்பாள்?..

நம் நாட்டில் கணவன் மனைவி உறவு தான் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆச்சர்யம் தான் மித்ரனுக்கு… ஒருவரின் இறப்பு என்பது மற்றவருக்கு அதன் உறவு நிலை கொண்டே வலி இருக்கும்.. பெற்ற தாய் பிள்ளையை இழந்தாலும், பிள்ளையை இழந்து விட்ட வேதனை நிச்சயம் இருக்கும்.



Advertisement

ஆனால், ஒரு மனைவி தன் கணவனை இழந்து நின்றாள். அவள் வாழ்க்கை பாதை முழுதாக மாறி விடுகிறது. ஒரு பொண்ணுக்கு புருசன் இருக்கும் போது அவனை கொண்டு கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை என்பது கூட கலாச்சார ரீதியில் சரியென்று வைத்து கொள்ளலாம். ஆனால், அந்த கணவன் இந்த உலகத்தில் இல்லாமல் போன பின்பும் அவனை கொண்டு கட்டமைக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தான் ஒரு பெண் வாழனும் என்பதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

 கணவன், மனைவிக்கான உறவு நிலை சரியென்றாலும், அதை கொண்டு உருவாக்கப்பட்ட சில கொள்கைகள் மூட நம்பிக்கை என்றே மித்ரனுக்கு தோன்றியது. திருநீறு வைத்து கொள்ளும் பிரவீனா ஒரு நாளும் குங்குமம் வைத்து அவன் பார்த்ததில்லை. சாமிக்கு வைக்க பூவை தொடும் பெண், தன் தலையில் வைத்து கொள்ள உரிமை இல்லை. இந்த கட்டுபாடுகள் எல்லாம் சட்டரீதியானவை கிடையாது. ஆனால், நம் நாட்டின் பல பெண்கள் அதற்கு கட்டுபட்டே நிற்கிறார்கள். அவ்வளவு படித்து சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் பிரவீனா கூட, தன் கலாச்சார கட்டுப்பாடுகளை விட்டு மீறவில்லை.. தன்னுடைய கலாச்சாரம் வேற, மூடநம்பிக்கை வேற என்று பகுத்தறிய தெரியாமல், பலர் இந்த சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மித்ரன் ஒரு நாளும் பிரவீனாவை விட்டு விலகப் போவது கிடையாது. அவன் தனக்குள்ளே பலவாறு யோசித்தாலும்.. இதெல்லாம் சரி வருமா என்று எங்கெங்கோ சிந்தித்தாலும் கூட, அவனால் பிரவீனாவை தள்ளி வைப்போம் என்ற முடிவை எடுக்க முடியவே இல்லை. முன்பே சரி வராது என்று தள்ளி நிறுத்திப் பார்த்தும் முடியாமல் தான் மிகத் தெளிவாக தன் வட்டத்தில் பிரவீனாவையும் ஆதிரனையும் முழுதாக இணைக்க நினைத்தது. அதாவது, பிரவீனா அதிகம் நம்பும் குடும்பம் என்ற வட்டத்துக்குள், இவர்கள் மூவரும் கடைசிவரை நிலை நிற்பது. அந்த முடிவிலிருந்து மித்ரன் பின்வாங்க போவதே கிடையாது.

Advertisement

ஒரு பெருமூச்சு விட்டு தலையை கோதிக் கொண்டவன் முகம் லேசாக புன்னகையில் மலர்ந்தது. இவன் தன் மனதை பிரவீனாவிடம் திறந்தபின் அவள் முகம் காட்டிய அதிர்ச்சியை உள்வாங்க கோடி கண்கள் வேண்டும். உண்மையில் அந்த இடத்தில் மித்ரனுக்கு, பிரவீனா முகம் பார்த்து முகம் கொள்ளா சிரிப்பு வந்தது. ஆனால், சூழல் மிக சீரியஸ் எனும் போது தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

Advertisement

மித்ரன் என்னவோ அவள், தன்னை மதுரை தமிழில் அர்ச்சனை செய்யப் போகிறார் என்று காத்திருக்க, பிரவீனாவோ முகம் இருண்டு போய் ஒதுங்கிக் கொண்டாள். அன்று மாலை ஆதிரனை வீட்டுக்கு அனுப்பும் வரைக்கும் அவன் இருக்கும் பக்கம் கூட திரும்பவில்லை. மித்ரன் அவளுக்கு என்று நேரத்தை கொடுத்தான். பிரவீனா, நிச்சயம் தன்னிடமிருந்து இப்படி ஒரு ப்ரோபோசலை எதிர்பார்த்து இருக்க மாட்டாள். பொதுவாகவே நட்பு என்ற வட்டத்தில் பழகும் ஆண்கள் ஒரு பெண்ணிடம் ப்ரபோஸ் செய்யும் பொழுது நிச்சயம் அது ஜீரணிக்க இரண்டு நாட்களாவது பெண்ணுக்கு ஆகும். பிரவீனா வாழ்க்கையின் இது இரண்டாம் கட்ட தொடக்கம் எனும் பொழுது அவளுக்குள் எரிமலை வெடிப்பது உறுதி. அதனாலே, மித்ரன் தன் நிலைப்பாட்டை சொன்ன பின், வேறு எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே இரண்டு நாட்களாகியும் பிரவீனா அலுவலகம் வரவில்லை.

ஆனால், நாளை காலை ஆதிரன் தன் பள்ளியோடு இணைந்து பிக்னிக் செல்ல இருக்கிறான். எப்படியும் பிரவீனா மகனை அனுப்ப வருவாள். அப்போது அவளை கையும் களவுமாக பிடிக்க காத்திருந்தான் மித்ரன்.

அவன் திட்டப்படியே அடுத்த நாள் காலை மான்சியை பள்ளி வேனில் அனுப்ப சென்றது மித்ரன் தான். ஆனால், அங்கு ஆதிரனை வழி அனுப்ப பிரவீனா வரவில்லை. அவள் தந்தை தான் வந்திருந்தார். ஒரு பெருமூச்சு விட்டு தன் ஏமாற்றத்தை மறைத்தவன், நல்லவிதமாகவே அவரிடம் அறிமுகமாகி ஆதிரனையும் நலம் விசாரித்து திரும்ப அலுவலகத்திற்கு வந்தான்.

Advertisement

மித்ரனுக்கு முன்பே தெரியும்.. பிள்ளைகள் திரும்ப வர இரவாகி விடும் என்று… ஏதோ ஒரு நம்பிக்கை. அந்த சாயங்காலமும் ஆதிரன் பள்ளிக்கு சென்றான் மித்ரன். மணி ஆறரை இருக்கும், சுற்றிலும் லேசாக இருள் சூழ ஆரம்பித்துவிட்டது. ஆனால், இன்னும் பிள்ளைகள் பள்ளி வந்து சேரவில்லை.

     பிள்ளைகளை பள்ளிக்கு தான் கூட்டிக்கொண்டு வருவார்கள். அங்கிருந்து பெற்றோர்கள் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடலாம். இவர்களைப் போல நிறைய பெற்றோர்கள் அங்கு இருந்தார்கள். அவன் பார்வை என்னவோ பிரவீனாவை தான் தேடியது. இப்போதாவது அவள் வந்திருப்பாளா என்று மனம் ஆர்வமாக துள்ளியது. என்னவோ வயசு பையனை போல ப்ரொபோஸ் செய்து மூன்று நாட்களுக்குப் பின் நேராக அவளை காணப்போகும் ஆவலில் மிதந்து கொண்டிருந்தான். மித்ரன். அப்படித்தான் சொல்ல வேண்டும். அவ்வாறு தான் அவன் மனம் இருந்தது. ஆனால், சுற்றி முற்றி தேடியும் அவளை கண்டுகொள்ள முடியவில்லை.

 ஆதிரனை அழைக்க பிரவீனா வரவில்லை போல… மனம் சோர்வாக நினைத்து திரும்ப, ஏதோ ஒரு மின்னல் வெட்டு… பள்ளி வாயிலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கும் சுடிதார் அணிந்த பெண் என் பிரவீனாவா?… பார்வையில் ஆச்சரியத்தை கூட்டி அவளை நோக்கி நடந்து சென்றான். இளமஞ்சள் நிற பூனம் சுடிதார் அணிந்து, துப்பட்டாவை இருபக்கமும் பின் செய்து இருந்தாள். முகத்தில் எப்பொழுதும் லேசாக இருக்கும் பவுடர் கூட இன்று இல்லை. முடியை மொத்தமாக ஒரு கிளிப்பில் அடைத்து இருந்தாள், முடியில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. அவசரத்தில் கிளம்பி வந்து இருப்பாள் போல…

அது சரி எட்டு அடி இருக்கும் அந்த காட்டன் சேலையை சுத்தவே இரண்டு மணி நேரமாகும். மகனை பார்க்கும் அவசரத்தில் சீக்கிரம் கிளம்பி வந்து விட்டாளோ!… இப்போதெல்லாம் பாதி உடைகளுக்கு துப்பட்டா வருவதில்லை. இவளுக்கு மட்டும் இரு பக்கம் பின் பண்ணும் அளவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது. என்னவோ என் மனதில் பிரவீனா வந்தபின் கண்களுக்கு தேவதையாக தெரிகிறாள் போல நினைத்து கொண்டே அவளை நோக்கி முன்னேறினான்.

அதற்குள் பள்ளி வாகனங்கள் ஒவ்வொன்றாக உள்ளே வர பெற்றோர் கூட்டம் முண்டியடித்தது. மித்ரன் கொஞ்சம் திணறி விட்டான். அவனால் பிரவீனாவை சீக்கிரமாக நெருங்க முடியவில்லை.

“என்னங்கடா டேய்! உங்க பிள்ளை உங்க கிட்ட தான்டா வரும். சீக்கிரமா போனா ரெண்டு மூன்றா தர போறாங்க. நம்மள இடிச்சு தள்ளிட்டு போறாங்க” முனங்கி கொண்டே நகர்ந்து நின்றான்.

ஆனால், பெற்றோர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி, பள்ளி வாகனங்கள் மட்டும் கேம்பஸ் உள்ளே சென்றது. வரிசையில் வகுப்பு வாரியாக இரண்டு இரண்டு பேர், அவர்கள் வகுப்பு ஆசிரியருடன் வெளிவந்தார்கள். மணி ஏழு நெருங்க, பிரவீனா ஒரு மாதிரி பதட்டமாகி விட்டாள். மித்ரனுக்கு தெரியும், ஆதிரன் வகுப்பு யுகேஜி. பிள்ளைகள் வரிசையாக வர தொடங்கவும், மித்ரன் கண்கள் தன்னையும் மீறி ஆர்வத்தில் ஆதிரனை தேடியது. ஒரே மாதிரி சீருடைகள் வருவதால் மித்ரன் ஒவ்வொரு பிள்ளைகளாக தேடிக் கொண்டிருந்தான். மற்ற பிள்ளைகள் வரவும் ஆதிரன் வராமல் தாமதிக்க, பிரவீனாவுக்கு முன் மித்ரன் உள்ளே சென்று விட்டான்.

 இதுவரை மற்ற பெற்றோர்களை கிண்டலடித்துக் கொண்டிருந்தவன் தான். ஆதிரன் தாமதிக்கவும் அவனுக்கே ஒரு பயம். எங்கே பிள்ளையை காணோம்? அவனை விட பெரிய பிள்ளைகள் கூட வெளியே வந்து விட்டார்கள். உள்ளே செல்லும் பொழுதே மான்சியை பார்த்து ஓர் இடத்தில் அமர வைத்தவன், வேகமாக ஆதிரன் வகுப்பறை நோக்கி ஓடினான்.

அந்தப் பள்ளியில் பெற்றோர்கள் வகுப்பறை வரை எல்லாம் வரக்கூடாது. ஆனாலும், காலை ஏழு மணிக்கு சென்ற சிறுவன், மாலை ஏழு மணியாகியும் கண் பார்க்கவில்லை எனும் பொழுது பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும்? அவன் வகுப்பு ஆசிரியரை தேடிப்பிடித்து,

“மேடம், ஆதிரன் இன்னும் வரல” அவன் குரலில் பதட்டம் மிகுந்து இருந்தது.

“ஓ.. ஆதிரனா.. ஆயம்மா, அவனை பாத்ரூம் கூட்டிட்டு போயிருக்குறாங்க. ஃபைவ் மினிட்ஸ்ல வந்துருவான். அவன் அம்மா எங்க இருக்காங்க?” என்றதும்,

“அம்மா கூடத்தான் அனுப்புவீங்களா மேடம். அப்பா கூட எல்லாம் அனுப்ப மாட்டிங்களா?” என்று லேசான சிரிப்போடு மித்ரன் கேட்க.

“என்ன? என்ன சார் சொல்றீங்க. நீங்க ஆதிரன் அப்பாவா? ஆனா…” அவன் வகுப்பு ஆசிரியை என்பதால், ஆதிரன் விவரம் தெரியும்.

“ஆமா, நான் தான் அவன் அப்பா. என்னை பார்த்துக்கோங்க.. இனி, நான் தான் அடிக்கடி பையனை கூட்டிட்டு போக வருவேன்” தைரியமாக, உரிமையாகவே சொன்னவன். ஆதிரனை தேடி சென்றான்.

“ஹே! மித்து” என்று சத்தம் வரவும், புன்னகை முகமாக திரும்பியவன்,

“ஹே! ராக்கி பாய்…” என்று அவனை நோக்கி ஓடினான்.

“உன் ப்ரெண்ட்ஸ் கூட வெளிய வராம எங்கடா போன?” அவனை தூக்கி போட்டு பிடித்தவாறு மித்ரன் கேட்க.

அதற்கு பதில் சொல்லாமல், “என்னை பார்க்க தான் வந்தீங்களா மித்து.. என் கூடவே நீங்களும் வந்து இருக்கலாம்.. ரொம்ப ஜாலியா இருந்துச்சு” என்று சின்னவன் கதை பேச,

“ஸ்கூல் பஸ்ல உன்னை மட்டும் தான் கூட்டிட்டு போவாங்க ராக்கி பாய். நெக்ஸ்ட் டைம் நம்ம ரெண்டு பேரு மட்டும் போவோம்” என்று அவனை தூக்கி கொண்டு நடந்தான்.

பிரவீனா கண்கள் லேசாக கலங்கி இருந்தது. பாதுகாப்பாக தான் இருப்பான் என்று நினைப்பு இருந்தாலும், ஒரு பயம். இன்னும் காணமே என்று பார்த்து இருக்க, சாவகாசமாக மித்ரன் தோள்களில் சாய்ந்து கொண்டு வந்தான் ஆதிரன்.

அவள் கண்களை பார்த்தே, அவள் பயத்தை ஊகித்தவன்,

“பாத்ரூம் போயிருந்தானாம். அதான் லேட்” என்று அவளை சமாதானம் செய்ய,

அவன் முகத்தைக் கூட நேராக பார்க்காமல், தன் மகனை மட்டுமே ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையில் மகன் என்ன கண்டானோ வேகமாக மித்ரன் கையில் இருந்து இறங்கிக் கொண்டான்.

பிரவீனா தெரிந்தவர் என்ற முறையில் கூட அவனைப் பார்க்காமல் பிள்ளையை அழைத்துக் கொண்டு கிளம்பினாள். அவளை முன்பே கணித்ததுதான். வேற எப்படி நடந்து கொள்வாள். ஆனால், இவ்வளவு நேரம் தன்னிடம் செல்லம் கொஞ்சிய ஆதிரன்.. திரும்பி கூட பார்க்காமல் சென்றது கஷ்டமாக இருந்தது. ஆக, தன்னைப் பற்றியும் பிரவீன முன்பே கணித்து மகனை கண்டித்து வைத்திருக்கிறாள்.

இது ஒரு வகையில் தனக்கு சாதகம் தான் தன்னை பற்றி யோசிக்கவாது செஞ்சாளே!…

மகனை முன் பக்கம் அமர்த்தி வண்டியை எடுத்தவளால் நகரவே முடியவில்லை. ஒரு மாதிரி குறுகுறுப்பாக இருந்தது. மித்ரன் தான் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது அவன் பார்வையில் ஒரு உரிமை. ஆம், நான் உன்னை தான் பார்க்கிறேன் என்று அவளுக்கே உணர்த்திக் கொண்டிருந்தான்.

“பிரவீனா ஒரு நிமிசம்” என்றவன், அவள் அருகே வந்து,

“என்னை கண்டுக்காத மாதிரி ஒதுங்கிப் போனாலும் சரி, இல்லை ஆதிரனை என்னோடு பழக விடாமல் தடுத்து நிறுத்தினாலும் சரி.. நீங்க ரெண்டு பேரும் என்னோட பொறுப்பு தான். உன் தயக்கத்தை பார்த்து, நான் தயங்கி நிக்க மாட்டேன். நீ என்னை தள்ளி நின்னா.. நான் உன்னை நெருங்கி தான் நிப்பேன்”

அவன் ஒதுங்கிப் போக மாட்டான் என்று கண்டு கொண்டவள், நிமிர்ந்து..

“தமிழ்ல ஒரு புலவர் பாடி வச்சு இருக்கார். எனக்கு மனைவி உண்டு, மக்கள் உண்டு, வறுமை உண்டு… அத்தோடு மானமும் உண்டு என்று”

“அதை தான் நானும் சொல்றேன் மித்ரன் சார். நான் விதவையா இருக்கலாம், பணத்தேவையும் இருக்கலாம், ஒரு பிள்ளையை வச்சுட்டு தனியாகவும் இருக்கேன் தான். என்னோடு தேவைகள் நிறைய இருந்தாலும்.. அதுக்கு மேல என் நெஞ்சு முட்டும் வரை தன்மானம் இருக்கு, ஒழுக்கம் இருக்கு…” என்று ஆவேசமாக சொல்ல,

மித்ரன் புரியாமல் விழித்தான்.

“நான் பெத்த என் மகனை பார்த்துக்குற கடமை எனக்கு மட்டும் தான் இருக்கு… நீங்க யாரு என் மகன் பொறுப்பை ஏத்துகிறதுக்கு… நீங்களே ஒரு உலக சோம்பேறி” என்று அவள் சொன்னதும்,

“என்ன? என்ன சொன்ன பிரவீனா?” என்றான் அதிர்ந்து போய்…

“ஆமா, நீங்க ஒரு சோம்பேறி தான். கல்யாணம், குடும்பம், குழந்தைன்னு பொறுப்பை, கடமையை ஏத்துக்க பயந்து இஷ்டத்துக்கு ரூல்ஸ் பேசுற லேஸியான ஆள் நீங்க… குழந்தை வந்தா தன்னோட தனிப்பட்ட சுதந்திரம் பறிபோயிரும்ன்னு நினைக்கிற நீங்களா, என் பிள்ளையோட பொறுப் பை ஏத்துகிற ஆள். என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது” நேர்கொண்டு பார்த்து தான் கேட்டாள்.

“ஐ திங்க் நீ என்னை சரியா புரிஞ்சுக்களை பிரவீனா” என்று மித்ரன் எடுத்து சொல்ல வர,

“இப்ப தான் உங்களை சரியா புரிஞ்சுகிட்டேன் மித்ரன் சார். உங்களை ஒரு நல்ல நண்பரா நினைச்சு தான் என் கஷ்டம், நஷ்டங்கள் எல்லாம் பகிர்ந்துகிட்டேன். எனக்கு ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் உதவின்னு நான் உங்ககிட்ட ஒரு நாளாவது கேட்டு வந்து இருக்கேன்னா? எனக்கு பணம் தேவை இருக்குதான். என் வேலையை வச்சு தான் நான் உங்ககிட்ட பணம் வாங்கினேன் தவிர, என்னையே வச்சு இல்லை. அதுக்கு வேற மாதிரி பொம்பளைகளை பாருங்க” என்றதும்,

“என்ன சொல்ற? ஹே! நான் அப்படி” என்று சொல்லும் போதே தடுத்தவள்,

“வேற என்ன உங்க வரலாறு. உங்க பார்வைல கூட கண்ணியத்தை பார்த்ததால் தான் உங்களை ஒரு நல்ல நண்பர்ன்னு நினைச்சேன். எல்லா ஆம்பளைங்க மாதிரியும் தனியா இருக்கிற பொம்பளைங்க எல்லாம் இளக்காரம்தான். கட்டிக்கிட்ட ஆம்பள கூட இல்லாமல் இருந்தாலும் நான் ஒருத்தருக்கு மனைவி தான் மித்ரன் சார். கண்ட மாதிரி திரியிற உங்க கூட ஜோடி போட்டு நிக்கிற பொண்ணு நான் கிடையாது. நீங்களும் குடும்ப பொண்ணுங்களையும் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா” என்று அவள் கேட்டதும்,

“இதுக்கு நீ என்னை செருப்பால அடிச்சு இருந்தா கூட வாங்கி இருப்பேன்” என்று கடுமையாக சொன்னவன்,

“அது சரி நீ சொன்ன மாதிரி நம்ம வரலாறு அப்படி.. நான் என்னமோ ஒரு ஃபீலிங்ஸ்சோட தான் ப்ரொபோஸ் பண்ணேன். தெளிவான விளக்க உரை கொடுக்காமல் விட்டதால ஒரு மிஸ்டேக்” என்றவன்,

அவள் அவனை கண்டு கொள்ளாமல் நகர பார்த்ததும்,

“இரு ஒரு நிமிசம்” என்று தன்னை தயார் செய்து கொண்டான்.

தனக்கு தாமதமாகி விட்டதே, இது என்ன கலாட்டா என்று அவள் பார்க்க,

“ஓகே, நான் இப்போ தெளிவா சொல்றேன். எனக்கு உன்னோடு ஒரு புது வாழ்க்கையை தொடங்க ரொம்ப இஷ்டம். அந்த இஷ்டம் எந்தளவுக்குன்னா, நீ ரொம்ப மதிக்கிற உன்னோட கலாச்சார படி உன் கழுத்துல மூணு முடிச்சு போட்டு, உன்னோட சரிபாதியாக இருக்குற அளவுக்கு இஷ்டம்” என்று தெளிவாக மித்ரன் சொன்னதும்,

பிரவீனா கண்கள் அகல விரிந்தது. அவளுக்கு இது மிக பெரிய அதிர்ச்சி. உள்வாங்கி கொள்ள முடியாதளவுக்கு, ஜீரணிக்க முடியாமல், எந்த மாதிரி முக பாவனை வெளிப்படுத்த என்று கூட தெரிய வில்லை.

திருமணத்தை வெறுத்து ஒதுங்கும் மித்ரனா திருமணத்துக்கு கேட்டு நிற்பது… அவள் முகம் பார்த்து மனம் கனிந்தவன்,

“ நம்ம உறவுக்கு நான் ரொம்ப ரொம்ப ராயல்டியா இருப்பேன். நமக்கான திருமண உறவு வந்து என்னோட வாழ்நாள் முழுமைக்கானது… என்னோட கடந்த காலம் இனி எந்த இடத்திலும் என்னை தொடராது. நம்ம ரெண்டு பேருக்குமே கடந்த காலத்துல ஒரு இருண்ட பக்கம் இருக்கு.. அதை தாண்டி திருமணம் மூலமா நமக்கான ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கலாமா பிரவீனா. அதாவது, நாம் திருமணம் செய்து கொள்வோமா?” இன்று நேராகவே கேட்டு விட்டான்.

அவன் மனதில் இதுவரை இருந்த சின்ன உறுத்தல் கூட இந்த நிமிடம் இல்லை. மனம் முழுக்க பிரவீனா மட்டும்தான். அவன் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாகத்தான் அவளிடம் திருமணம் பற்றிய பேச்சை எடுத்தது. அதாவது, அவனால் பிரவீனாவை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. அதேபோல, பிரவீனாவை தாண்டி வேற பெண்ணின் சுவாசத்தைக் கூட தன்னால் தீண்ட முடியவில்லை என்பதை உணர்ந்தே இருந்தான். எப்படியோ காதல் அவனை முழுதாக ஆக்கிரமித்தது.

அவளுக்கு பேச்சே இல்லை. இதுவரை கூட நேர்கொண்டு ஒரு பார்வையை பார்த்தவள் திருமணத்துக்கு என்று மித்ரன் பேசிய பின், அவன் பார்வையை தன் கண்களால் நேர்கொண்டு காண முடியவில்லை. என்னவோ ஒரு பதற்றமும் பயமும்…

தடுமாறி கூட பிரவீனா கிளம்ப, இந்த முறை மித்ரன் தடுக்கவில்லை. அவன் நன்றாக அறிவான். தான் காதல் சொன்னது ஒரு வயது பெண்ணிடம் கிடையாது ஒரு குழந்தையின் தாயிடம்…

நிச்சயம் பிரவீனா, தன் மனரீதியாக யோசிக்க மாட்டாள். ஒரு தாயாகத்தான் யோசிப்பாள். ஆதிரனை முன்னிறுத்தி மட்டும் தான் அவள் சிந்தனை இருக்கும். ஆக, அவளுக்கு நிறைய நேரம் தேவைப்படும். அதை தாராளமாக கொடுத்தான் மித்ரன். வீடு வந்த பிரவீனா கண்ணை மூடிக்கொண்டு பேசாமல் படுத்து விட்டாள். எதையும் யோசிக்கவில்லை, எதைக் குறித்தும் தன் சிந்தனையை விடாமல் மனதை ஒருநிலைப்படுத்தி உறங்கத்தான் முயற்சித்தாள்.

“அக்கா” என்றான் பிரேம்.

“என்னடா?” என்று எழுந்து அமர,

“ஆதிரன் யூனிபார்ம் பில். அடுத்த வாரம் வந்து வாங்கிக்க சொன்னாங்க” என்றவன் அங்கிருந்த டேபிளில் பிள்ளை வைத்து விட்டு செல்ல, எடுத்து பார்த்தாள் பிரவீனா.

ரெண்டு யூனிபார்ம் செட் ஆயிரம் ரூபாய்க்கு தைத்து பில் கொடுக்க பட்டது. ஆதிரனுக்கு என்று வருடத்திற்கு இரண்டு புது செட் யூனிபார்ம் எப்போதும் தைத்து வைப்பாள் பிரவீனா. அதை தைக்க கொடுத்து வாங்கி வருவது பிரேம் தான்.

பிரேம் தன் அக்காக்காக சின்ன சின்ன வேலைகள் செய்வான். அதற்கு பணம் என்று அவன் இதுவரை கேட்டது கிடையாது. இனி, அப்படி இல்லையோ என்று யோசனையானாள் பிரவீனா.

சில விஷயங்களை அவளும் கவனித்து தான் இருக்கிறாள். முன்பெல்லாம் உணவு பண்டங்கள் ஆதிரனுக்கு என்றே தனியாக வாங்கி வருவான் பிரேம். இப்பொழுதெல்லாம் ஆர்த்திக்கு வாங்கி வருபவன் சின்னவன் பார்க்கும் பொழுது, ஒரு சாக்லேட் மட்டும் கையில் கொடுக்கிறான்.

ஆர்த்தி மாசமாக இருப்பதால் பழம் நட்ஸ், டேட்ஸ், காரம் என்று பலதும் தினமும் வரும். ஆனால், எதுவும் ஃப்ரிட்ஜில் இருக்காது எல்லாம் அவர்கள் அறையில் தான். அவள் கணிப்பு ஆதரி அடிக்கடி ஃபிரிட்ஜ் ஓடுவதால் தான் இவர்கள் ஃப்ரிட்ஜில் எதையும் வைக்கவில்லையோ என்று…

இப்பொழுதெல்லாம் பிரவீனா தன் தந்தையோ அல்லது தன் தம்பியோ.. என் பிள்ளைக்கு இதை வாங்கி கொடு என்று கேட்பதே இல்லை. வெகு சில நேரங்களில் தான் சில செலவுகள். ஒரு குழந்தை என்று அவனுக்கு வரும் முன்பே, தன் அக்கா மகனுக்கு ஆயிரம் ரூபாய் செலவு பண்ண யோசிக்கிறான். ஆனால், இதுதான் நிதர்சனம். அவனுக்கு என்று குடும்பம் வரும் பொழுது அவன் வருமானம் எல்லாம் அவன் குடும்பத் தேவைகளுக்கு மட்டுமே. ஆனால் நடைமுறை படுத்தும் பொழுது தனியாக இருப்பதாலோ என்னவோ பிரவீனாவுக்கு கஷ்டமாக இருந்தது.

 ஆனாலும், தம்பி இப்படி ஒரேடியாக மாறி விடுவான் என்று பிரவீனா நினைக்கவே இல்லை. பணத்தேவை என்று ஒருநாளும் பிரவீனா தன் தம்பியிடம் போய் நிற்கப் போவதில்லை. அதையும் தாண்டி ஆண் துணை இல்லாத தனக்கு உடன் பிறந்தவன் துணை தேவை தானே… அதிலும் கட்டுப்பாடுகள் வருமோ!…

தாத்தா, நான் தண்ணில போனேன், ராட்டினம் போனேன், ஊஞ்சல் ஆடினேன் என்று தாத்தா, அம்மாச்சியிடம் கதை சொன்னான் ஆதிரன்.

“உன் பிரண்ட்ஸ் கூட நல்லா ஆட்டமா ஆத்து?” என்று தாத்தா கேட்டதும்.

“ஆமா, தாத்தா. ஆனா எனக்கு என் பெஸ்ட் பிரண்ட் மித்துவ தான் ரொம்ப பிடிக்கும். அவங்க கூட வரவே இல்ல” என்றாலும் சோகமாக,

“ஏன் கண்ணா, உன் பிரண்டு லீவா?”

“இல்லை, அவங்க பெரிய பையனாம். எங்க ஸ்கூல் பஸ்ல அவங்கள ஏத்த மாட்டாங்களாம்”

“அப்படியா யாருடா அவ்வளவு பெரிய பையன்” என்று விளையாட்டாக தாத்தா கேட்க.

“அம்மா கூட பிரண்டா இருக்காங்களே… அன்னைக்கு கூட ஹாஸ்பிடல் வந்தாங்கள்ளா என்னை பாக்க” என்றான் சின்னவன்.

 “யாரு மித்ரன்னா? டேய் அவன் உனக்கு சித்தப்பா முறை வரும்டா. பேர் சொல்லி, பிரண்ட்ன்னு வேற சொல்ற..” என்று அதட்டினார் மகேஸ்வரி.

“ஃபர்ஸ்ட் என்கிட்ட ஃப்ரெண்டானதே மித்திரன் தான். இன்னைக்கு ஸ்கூல்ல பார்த்தேன். அம்மாவும் பாத்தாங்க… நான் மித்ரன் சொன்னா, அம்மா கூட ஒன்னும் சொல்லலையே. மித்ரன் கூட அம்மாகிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டாங்க”

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!