Skip to content
Post Views: 1,827
அத்தியாயம் -12
பளார் என்ற சத்தம் நின்றிருந்த அனைவரையுமே கொஞ்சம் நடுங்க தான் செய்தது. அந்த சத்தம் அங்கிருந்தவர்களின் காதை பிளக்க, பயத்தில் அனைவரும், ஒரு வினாடி கண்ணை மூடி திறந்தனர்.
Advertisement
அவர்கள் கண் விழிக்கும் போது தெரிந்தது எல்லாம், கிஷோரின் வாயிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட பற்கள் கொட்டியது தான்.
கிஷோருக்கே, ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியவில்லை. தலையை உலுக்கி நிதானத்திற்கு வர பார்த்தவனால் சுத்தமாக முடியவில்லை. தடுமாறி கொண்டே இருந்தான்.
Advertisement
Advertisement
தடுமாறி விழ போனவனின் சட்டையை கெத்தாக பிடித்தவன்,
“நான் இப்போ எதுக்கு உன்னை அடிச்சேனு உனக்கே தெரியும்.
Advertisement
நடந்தது என்னன்னு இப்போ மட்டும் நீ உண்மையை சொல்லல, உன்ன கொன்றுவேன் பார்த்துக்கோ” என கண்களை உருட்டி கேட்க, அவனுக்கு அவன் பேசுவது வேற ஒழுங்காக கேட்கவும் இல்லை.
இளங்கோ, தள்ளியே நின்று கொண்டார். வெற்றியின் ஆக்ரோஷத்தை பார்ப்பது இதுவே முதல் முறை என்பதால், அவருக்கு அவனை நெருங்கவே பயமாக இருந்தது. கோபப்படுவான் என்பது தெரியும். ஆனால், இத்தனை ஆக்ரோஷத்தை அவர் எதிர்பார்க்கவில்லை.
“வெற்றி..,” என நாச்சியார் அவன் கூறியதில் பதறி அழைக்க, மெதுவாக அவரை திரும்பி பார்த்தவன்,
“உண்மை என்னன்னு தெரியணும்ல அப்பத்தா. அது அவனே சொன்னா தானே எல்லாரும் நம்புவாங்க. இப்போ சொல்லிடுவான். இல்லைன்னா இன்னும் இருக்கிற பல்லு எல்லாத்தையும் கழட்டிட வேண்டியது தான். இனி எதுக்குமே வாயே திறக்காத அளவுக்கு பண்ணிட்டா போச்சு. என்ன நடந்ததுன்னு சொல்லாத வாய் இனி இருந்தா என்ன? இல்லைனா என்ன?” என சாதரணமாக கூற, நடுங்கியது கிஷோருக்கு.
அடுத்த அடி அவன் அடிப்பதற்காக கையை ஓங்க,
“சொல்லிறேன், உண்மையை சொல்லிறேன்” என்று அலறினான் கிஷோர். அதற்குள் அங்கு வந்து சேர்ந்தனர் கனகவல்லியும், சண்முகமும்.
அப்பொழுது தான் வேக வேகமாக வந்திறங்கினார் திருநாவுகரசும். அனைவரும் வேடிக்கை பார்க்க, கிஷோரோ,
“வெண்பா அந்த செயினை எடுக்கல, நான் தான் அவளோட பையில் போட்டு அவளை மாட்டி விட்டேன்” என பட்டென்று உண்மையை போட்டு உடைக்க, அனைவருக்கும் அத்தனை அதிர்ச்சி. இளங்கோவோ போச்சு டா’ என தலையில் கைவைத்து கொண்டார்.
“எதுக்காக இப்படி பண்ண? அவ மேலே உனக்கு அப்படி என்ன கோவம்?” என மீண்டும் அவனை ஓங்கி அறைய, வலியில் துடிதுடித்து போனான் கிஷோர்.
“அது.. அது..” என அவன் தயங்கி நிற்க, வெற்றியோ, அவன் கையை பிடித்து, லேசாக பின்பக்கம் வைத்து முறுக்கி,
“உண்மையை சொல்றீயா? இல்ல கையை உடைச்சுடட்டுமா? “ என்றதும் பயத்தில் அவனோ,
“ஒன்னும் பண்ணிடாதே! சொல்லிறேன்., சொல்லிறேன்” என்றவன், அவன் அவளிடம் அடிவாங்கிய விஷயத்தையும், அதனால் அவளை பழிவாங்க இப்படி செய்ததாகவும் கூற, முறுக்கிய கையை இன்னும் இன்னும் முறுக்கி கொண்டே போனான் வெற்றி.
அவனுடைய அலறல் எட்டு திக்கும் ஒலிக்க, வெண்பாவோ பயந்து போனாள்.
“மாமா, வேண்டா மாமா, விட்டுட்டுங்க. வேண்டாம்” என அவள் கெஞ்ச, எதையும் அவன் காதில் வாங்கவில்லை. முறுக்கிய கையை பட்டென்று உடைத்து விட, வலியில் சுருண்டு விழுந்தான் கிஷோர்.
வெற்றியால் சிறிதும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. திருநாவுகரசிற்கோ, பயம் பிடித்து கொண்டது. மகன் எங்கே அவனை கொன்று விடுவானோ, என்று அச்சம் தோன்ற, அவனருகில் ஓடி வந்தவர் அவனை பிடித்து கொண்டார்.
“வெற்றி, வேண்டாம் விடு செத்து போய்ட போறான்” என அவனை அங்கிருந்து தள்ளி கூட்டி வர, கதிர்வேலும் மற்றொரு பக்கம் வந்து பிடித்து கொண்டான்.
“வேண்டா ண்ணா விடுங்க. அவன் செத்த பாம்பு அவனை எதுக்கு மறுபடியும் சாகடிச்சுக்கிட்டு” என்றவன், கிஷோரை பார்த்து,
“அப்பவே சொன்னேன்ல நாளைக்கு உன் முகத்தை பார்க்க முடியாதுனு. நீயே உன் முகத்தை பார்க்க முடியாத கோலத்தில் தான் இருக்க. தேவையா உனக்கு” என நக்கலடித்தான் அவனை
“விடுங்க ப்பா, என்ன தைரியம் இருந்தா, நம்ம வீட்டு பொண்ணை கைப்பிடித்து இழுத்து இருப்பான். அன்னைக்கே தெரிஞ்சு இருந்தா, பிடிச்ச கையை தனியா உடம்பில் இருந்து எடுத்து இருப்பேன்.
அதுமட்டுமில்லாமல், வெண்பா மேலையே திருட்டு பழி போட்டு அவமானப்படுத்தி இருக்கான். இவனை கொன்னா கூட என் ஆத்திரம் அடங்காது. இவனை..” என ஆவேசம் தீராது வெற்றி கத்த, நடுங்கி போனான் கிஷோர்.
“வெற்றி.. வேண்டாம் விடு, அதான் உண்மையை சொல்லிட்டான்ல. எல்லாருக்கும் என்ன நடந்ததுனு இப்போ தெரிஞ்சதுல அது போதும். விடு” என திருநாவுக்கரசு அவனை சாந்தப்படுத்த முயல,
“இவனை நான் எதுவும் பண்ண கூடாதுன்னா, இவன் என் கண் முன்னாடியே இருக்க கூடாது. இவனை முதலில் அவன் ஊருக்கு கிளம்பி போக சொல்லுங்க. இங்க இருந்தா, நிச்சயம் கொன்னுடுவேன்” என கோபம் குறையாது கத்த, திருநாவுகரசோ திரும்பி இளங்கோவை பார்த்தார்.
அவர் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட இளங்கோ கிஷோரை வந்து தூக்கி,
“இவன் இப்படி பண்ணுவானு எனக்கு தெரியாது மச்சான். தெரிஞ்சு இருந்தா நானே இவனை அடிச்சு துரத்தி இருப்பேன். இப்பவும் ஒன்னும் கெட்டு போகல, இப்பவே டிக்கெட் போட்டு அனுப்பிறேன்” என உடனே அந்தர் பல்டி அடித்தார்.
கிஷோரால் நிற்க கூட முடியவில்லை. தள்ளாடி, தடுமாறி கொண்டிருந்தான்.
“அதுக்கு முன்னே அவனுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு,” என்ற வெற்றி, அவனை அவர் பிடியிலிருந்து, தன் பிடிக்கு கொண்டு வந்தான்.
அனைவரும் என்னவோ, ஏதோவென்று பதற, அவனோ தனக்கு பின்னால் நின்றிருந்த வெண்பாவின் காலடியில் அவனை தள்ளிவிட, அவளோ பயத்தில் இரண்டடி தள்ளி நின்றாள்.
“அவ கிட்ட கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேளு,” என வெற்றி கூற, கிஷோரும் தூக்க முடியாத தன் கைகளை வலியுடன் கோர்த்து, அவளை பார்த்தான்.
மன்னித்து விடு என அவனால் வாய் திறந்து கேட்க முடியவில்லை. ரத்தம் சொட்ட சொட்ட இருந்த வாயை மெல்ல அசைக்க, அவளோ அவனை வெறுப்புடன் பார்த்தாள். அவளோ விலகி போய் தாய் தந்தையரிடம் போய் நின்று கொண்டாள்.
“பாவி, பாவி நல்ல இருப்பியா நீ? என் புள்ள மேலே அநியாயத்துக்கு பழி போட்டு இப்படி பண்ணிடியே!!. மனுஷ ஜென்மமா நீ. ச்சீ” என கனகவல்லி அவனை அருவருப்பாக பார்த்தார்
“வேணும்னே என் புள்ள மேலே பழியை போடு அவளை நரக வேதனை அனுபவிக்க வச்சீங்களே, இப்போ என்ன ஆச்சு? உண்மை ரொம்ப நாளைக்கு தூங்காது. இப்போ தெரிஞ்சு இருக்குமே என் பொண்ணு யாருன்னு” என மறைமுகமாக நாச்சியாரை குத்தி காட்டி பேச, நாச்சியாருக்கோ மிகுந்த அவமானமாகி போனது. குனிந்த தலையை அவர் நிமிரவே இல்லை.
“ஏன் டி அமுதா, நேத்து நான் சொல்லும் போது, அவ்வளவு பேசின, இப்போ வாயே திறக்காம இருக்க. நீ கூட்டிட்டு வந்தவன் தான், திருடன், பிராடு, கிரிமினல்.
வெளிநாட்டில் இருந்து வந்தவங்க நாங்க, நாகரிகம் தெரிஞ்சவங்கனு ரொம்ப அதிகமா தான் அலடிக்கிட்ட, இதான் உங்க நாகரீகமா? அடுத்தவங்க குடியை எப்படி கெடுகிறது தான் சொல்லி தராங்களா? நீ, உன் புருஷன், பொண்ணு எல்லாம் இதைத்தான் அங்கிருந்து கத்துக்கிட்டு வந்தீங்களா? விளங்கும்”
என கனகவல்லி ஒருத்தரை விடவில்லை. யாரெல்லாம் வெண்பாவை பழி சொன்னார்களோ அவர்களை எல்லாம் பேசியே நோகடித்தார்.
இளங்கோ கிஷோரை அழைத்து கொண்டு வெளியேற போக,
“ஒரு நிமிஷம்” என்றவன், “அவன் கூட நீங்களும் இங்கிருந்து கிளம்பிடுங்க” என வெற்றி இளங்கோவை பார்த்து கூற அவருக்கோ அத்தனை அதிர்ச்சி.
“வெண்பா மேலே நீங்களும் தானே பழி சொன்னீங்க? அவனுக்கு மட்டும் தண்டனை கொடுத்துட்டு உங்களை அப்படியே விட முடியாதே! அதனால் அவன் கூட நீங்களும் கிளம்பினா நல்லா இருக்கும்”
என வெற்றி கூறியதும் இளங்கோவிற்கோ அத்தனை அவமனமாக இருந்தது.
“வெற்றி.., நான் இந்த வீட்டு மாப்பிள்ளை. என்னை இப்படி அவமானப்படுத்துறது கொஞ்ச கூட நல்லா இல்ல” என அவர் கோபப்பட,
“அப்போ இதையே வெண்பாவுக்கு பண்ணும் போது மட்டும் நல்ல இருந்துச்சா?” என திருப்பி கேட்டான் வெற்றி.
அவரால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. இருந்தாலும்,
“அத்தே, என்ன இது? கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறீங்களா? ஊர்ல வேலையா இருந்தவனை வா வானு கூப்பிட்டிட்டு வந்ததும், வீட்டை விட்டு வெளியே போக சொல்றீங்க?
நான் எவ்வளவு பெரிய ஆள், என்ன அந்தஸ்து என்ன? கௌரவம் என்ன? இருக்க இடமில்லாமலையா இங்க இருக்கேன். இதே ஊரில் எனக்கு ஏகப்பட்ட வீடு, சொத்துலாம் இருக்கு. இருந்தும் உங்க பேசுச்சுக்கு மதிப்பு கொடுத்து இங்க இருந்தா நல்ல மரியாதை செய்யுறீங்க?”
என அவர் நாச்சியாரிடம் நியாயம் கேட்க, அவரோ வெற்றியை பார்த்தார். அவன் அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.
“வீட்டுக்கு விருந்தாளியா வந்தா, நல்லா சாப்பிட்டோமா! தூங்கினோமோ! நாலு நல்ல வார்த்தை பேசிட்டு கிளம்பினோமானு இருக்கணும். அதைவிட்டு நீங்க என்ன பண்ணி இருக்கீங்க?!
நான் நல்லவிதமா சொல்லும் போதே, இங்க இருந்து போய்ட்டா உங்க உடம்புக்கு நல்லது, இல்லைனா நான் வேற மாதிரி சொல்ல வேண்டி இருக்கும்” என அவன் கை காப்பை ஏற்றி விட்டபடி கூற, அவருக்கோ பயம் பிடித்து கொண்டது.
error: Content is protected !!