Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் நதி

காதல் நதி 17

ஜிஎன்டி ரோட்டில் அந்த மெக்கானிக் ஷாப்பைக் கண்டுபிடிப்பதில் வசுமதிக்கு பெரிய சிரமம் ஒன்றும் இல்லை.
“என்னக்கா.. காத்துப் பிடிக்ககணுமா?” என்றான் குட்டி.
“இல்லப்பா..” என்றபடி தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வந்தாள்.
“இங்க சங்கருங்கிறது..?”
“அண்ணன் பக்கத்துலதான் போயிருக்காரு. உக்காருங்க வந்துடுவாரு.” பக்கத்திலிருந்த மர ஸ்டூலைக் காட்டினான் குட்டி.
உட்கார்ந்தாள் வசுமதி.
அந்த இடத்தில்தான் முதன்முதலாக மதனைப் பார்த்தது ஞாபகம் வந்தது.
“மதன் இங்க வருவாரா?”
“எங்கக்கா வர்றாரு.. வேலை கிடைச்சதுக்கப்புறம் எங்களை எல்லாம் மறந்துட்டாரு. எப்பவாச்சும் நாயித்துக்கிழமை வந்தாருன்னா, ஒரு டீயக் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டுப் போவாரு.”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தனது பல்சரில் வந்து இறங்கினான் சங்கர்.
அவளை ஏறெடுத்தும் பார்க்காமல், குட்டியைப் பார்த்துக் கேட்டான்.
“என்னடா.. பஞ்ச்சரா?”
“இல்லணா.. உங்களைத்தான் பார்க்க வந்துருக்காங்க.”
முகத்தில் கேள்விக்குறியோடு அவளிடம் திரும்பினான். அவனைப் பார்த்து சற்று தர்மசங்கடமாய்ச் சிரித்தாள் வசுமதி.
“என் பேரு வசுமதி.. அதான், நேத்து செகண்ட் ஹாண்ட் டூவீலருக்காகப் பேசினேனே..” தயங்கித் தயங்கிப் பேசினாள்.
“ஓ.. நீங்கதானா அது? அதுக்கு ஏங்க இப்படித் தயங்கறீங்க? நேத்து, அந்த நேரம் கொஞ்சம் தலைவலியோட இருந்தேன், அதனால சரியாப் பேச முடியலை.” மற்றொரு பிளாஸ்டிக் ஸ்டூலை அவளுக்கு எதிராகப் போட்டு உட்கார்ந்தான்.
“சொல்லுங்க.. உங்க பட்ஜெட் என்ன? எந்த மாதிரி வண்டி வேணும்?”
“அது வந்து..” அவள் பேசத் தயங்கினாள்.
“அது சரி, உங்களுக்கு யாரு என்னோட நம்பரைக் கொடுத்தது?”
அவனுக்குப் பதில் சொல்லாமல் தன் கைப்பையைத் திறந்து அந்த பேப்பரை எடுத்தாள்.
“வண்டி வாங்கணும்னு சொன்னது உங்களை மீட் பண்றதுக்காகச் சொண்ண ஒரு பொய்க் காரணம்தான். உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்.” என்றவாறு அந்த பேப்பரை அவனிடம் தந்தாள். அது, சங்கரின் புகைப்படத்தோடு கூடிய அவனது ஜாதகப் பேப்பர்.
“இது எப்படி உங்களுக்குக் கிடைச்சது?” முன்பைவிட அமைதியான குரலில் பேசினான் .
அவனது கேள்விக்குப் பதிலாக, குட்டி இருந்த திசையைப் பார்த்தாள் வசுமதி.
“டேய் குட்டி, நீ போயி டீ எதுனா சாப்டுட்டு, அங்க பஸ் ஸ்டாப் பக்கத்துல இருக்குற பாலாஜி பவன்ல ரெண்டு காபி வாங்கிட்டு வா.” காசைக் கொடுத்து அவனை அனுப்பிவிட்டு, மறுபடியும் அவளைப் பார்த்தான்.
“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”
அவளின் நேரடியான இந்தக் கேள்விக்கு, எதிர்மறையாகத் தலையாட்டிவிட்டு மறுபடியும் அந்தக் கேள்வியைக் கேட்டான்.
“இது உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?”
“தரகர் மூலமா வந்ததுதான். எங்க அம்மாவுக்குப் பிடிக்கலை…ஆனா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!”
அவனது முகத்தைப் பார்த்து நேரடியாகச் சொன்னாள்.
சில நொடிகள் அமைதியாக இருந்தான் சங்கர். அவன் இதை எதிர்பார்க்கவில்லை.
“இதப் பாருங்க.. ம்ம் உங்க பேரு என்ன சொன்னீங்க?”
“வசுமதி.”
“ஆங்.. வசுமதி, இது முறையான்னு எனக்குத் தெரியலை. இதை நாங்க கொடுத்து மூனு நாலு மாசம் இருக்குமே?”
“நான் நேத்துதான் இதைப் பார்த்தேன், எங்க அப்பாவோட மேஜையில. அதுவுமில்லாம..” அவள் மேற்கொண்டு பேசமுடியாமல் தலையைக் குனிந்தாள்.
“அதுவுமில்லாம?”
அவள் அழுவது போல் தெரிந்தது. சங்கர் பதறிப் போனான்.
“வசுமதி, என்ன இது? இப்ப ஏன் அழறீங்க? யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க?” ஸ்டூலில் இருந்து எழுந்தே விட்டான்.
“அ..அதுவுமில்லாம. எனக்குப் பிடிக்காத ஒருத்தருக்கு கட்டிக் கொடுக்கப் பார்க்குறாங்க!” கண்களைத் துடைத்துக் கொண்டே சொன்னாள் வசுமதி.
“அதனால..?”
“அதனால நாம கல்யாணம் பண்ணிக்கலாம். சிம்பிளா ரிஜிஸ்டர் மாரேஜ் பண்ணிக்கலாம்.”
சங்கருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதப் பாருங்க வசுமதி, வீட்ல உள்ளவங்க மேல இருக்கிற கோபத்துல, உடனே இப்படி உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கிறது நல்லது இல்லை. இப்ப வீட்டுக்கு போங்க. ரெஸ்ட் எடுங்க. அப்பா, அம்மாகிட்ட பேசலாம். அவசரத்துல எந்த முடிவும் எடுக்காதீங்க..” அவன் பேச பேச வசுமதிக்கு அவன் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
“என்ன உங்களுக்கு பிடிக்கலையா?”
மாசு மருவற்ற அவளது முகம் ஒரு சோக ஓவியம் போல் இருந்தது. அவளது வலது தாடையில் இருந்த சிறிய அழகான மச்சத்தில் ஒட்டிக்கொண்ட தன் கண்களைத் திரும்ப எடுக்க முடியாமல் தடுமாறினான் சங்கர்.
“ கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, ஒரு அழகான பொண்ணு திடுதிப்புன்னு வந்து நின்னு, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா, ஒருத்தனோட மனநிலை எப்படி இருக்கும். உங்களைப் பிடிக்காமப் போறதுக்கு எனக்கு மட்டுமில்ல, யாருக்குமே ஒரு காரணமும் இருக்காது.”
“அப்புறம் இன்னொரு தகவல்.. நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்.”
வசுமதிக்கு அவன் மேல் இருந்த ஆர்வம், அன்பாகவும் மரியாதையாகவும் உருவெடுத்தது.
“ஓ.. ஸாரி.. நான் காதலுக்கு எதிரியெல்லாம் இல்லை. எனக்கும் காதல் பிடிக்கும்தான். ஆனா, இதுவரைக்கும் நான் யாரையும் காதலிச்சதில்லை.”
குட்டி வந்துவிட்டான். கையோடு கொண்டு வந்த கப்புகளில் இருவருக்கும் காபியை ஊற்றிக் கொடுத்தான்.
அமைதியாக காபியைக் குடித்துவிட்டு எழுந்தாள்.
“தேங்க்ஸ்.. பார்க்கலாம்.”
“நேரா வீட்டுக்குத்தான் போகணும்.. நான் வேணும்னா வீடு வரைக்கும் வந்து விடட்டுமா?”
“இல்லை வேண்டாம். நான் ஆபீஸ் போகணும். ரெண்டு மணி நேரம் பர்மிஷன் போட்ருக்கேன்.”
தனது ஸ்கூட்டரில் ஏறிப் போய்விட்டாள்.
சிறிதுநேரம் அசையாமல் அவள் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளது வீடு எங்கே, ஆபீஸ் எங்கே.. என்று எதுவுமே விசாரிக்காமல் விட்டுவிட்ட தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டான்.
****
ரமணி அன்று ஓய்வில் இருந்தாள். துரைப்பாண்டி வாட்ஸாப்பில் அனுப்பிய அந்த ஒளிப்படங்களையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது மில்லில் வைத்து, வசுமதி மற்றும் பிரபுவுடன் துரைப்பாண்டி எடுத்த செல்ஃபி படங்கள். வசுமதி.. பெயருக்கேற்ற அழகான முகம். அந்தக் கண்கள்.. அப்படியே சரவண அத்தானின் கண்கள். அந்தச் சிறுவன் பிரபுவும் அழகாகத்தான் இருந்தான். ரமணியின் இளைய மகன் சரண் வயதில் இருந்தான்.
அருகில் சிரித்தபடி நின்ற துரைப்பாண்டியைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அவனைப் பற்றிக் கேள்விப்பட்ட செய்தி அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லை.
கிருஷ்ணாபுரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக இருக்கும் சீதாலட்சுமி, ரமணியோடு படித்தவள். இருவரும் அடிக்கடி பேசிக்கொள்ளும்படியாக அவர்களின் நட்பு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி கேள்விப்பட்டதுதான் துரைப்பாண்டியின் கல்யாணப் பேச்சு. உடனே அவனுக்கு போன் போட்டாள்.
“ஹாய் அத்தை நல்லாருக்கீங்களா?”
“ஏண்டா எருமை.. புது சொந்தக்காரங்க கிடைச்சதும் எங்களை மறந்துட்டியோ?”
“அதல்லாம் இல்லை..நான்தான் உங்களுக்கு எல்லாத்தையும் வாட்ஸாப்புல போட்டுக்கிட்டே இருக்கேனே. அப்புறம் அத்தை, கூடிய சீக்கிரமே நீங்க ஊருக்கு வரவேண்டி இருக்கும். தெரியுமா?”
“ம்ம்..கேள்விப்பட்டேன்.. கல்யாணம் முடிக்கப் போறியாமே?”
“ம்ம்.. பொண்ணு யாருன்னு தெரியுமா?”
“தெரியும் தெரியும். ஏண்டா அந்த வீட்டு ஆம்பளைங்களுக்கு அறிவே கிடையாதாடா? எல்லாமே நீங்களா முடிவு பண்ணிக்குவீங்களோ?”
“ஏன் அத்தை.. என்னாச்சு?”
“வாழப்போற அந்தப் பொண்ணுகிட்ட சம்மதம் கேட்டீங்களா?”
“இதுக்குத்தானா திட்டினீங்க.. அதல்லாம் பார்த்துக்கலாம் அத்தை. அந்தப் பிள்ளைக்கு என்ன விவரம் தெரியும்? அந்த அத்தைக்குப் பிடிச்சிப்போச்சி.”
“அப்ப சரவணன் அத்தானுக்குப் பிடிக்கலைன்னு சொல்லு.”
“அதெப்படி.. அவருதான் சொல்லிட்டாராமே.. மகளுக்குப் பிடிச்சா சரிதான்னு.”
“அவளுக்குப் பிடிச்சா சரிதான். சரிடா.. வாழ்த்துக்கள்! அந்தப் பிள்ளையோட நம்பர் இருந்தா அனுப்பு. நானும் ஒரு வார்த்தை பேசிக்கிடுதேன்.”
போனை வைத்து விட்டாள். ரமணி வசுமதியிடம் பேசப் போகிறாள் என்ற செய்தியில் துரைப்பாண்டி குதூகலமானான். முதல் வேலையாக ரமணிக்கு வசுமதியின் நம்பரை அனுப்பினான்.
****
அன்று மாலையில் சீக்கிரமே வந்துவிட்டாள் வசுமதி. ஒருநாளில் என்னவெல்லாம் நடந்துவிட்டது. தன்னுடைய பரிதாப நிலையை எண்ணி மிகவும் நொந்து போனாள். முன்பின் தெரியாத ஒருவனிடம் போய் அழுததும், கலயாணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னதும் சற்று அபத்தமாகவே பட்டது. இருந்தாலும் துரைப்பாண்டிக்கு மனைவியாவதைவிட அது ஒன்றும் பெரிய அபத்தமில்லை என்றும் தோன்றியது. சங்கர் கொஞ்சமும் பிடி கொடுக்காமல் பேசியதுதான் வேதனையாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக அம்மாவை எதிர்கொள்வதும் கஷ்டமாகவே இருந்தது. என்னதான் தனக்கு அப்பாவின் ஆதரவு இருந்தாலும், அவர் இந்த விஷயத்தில் கடுமை காட்டி அம்மாவை அடக்கி, ஆரம்பத்திலேயே விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கவேண்டும் என்று தோன்றியது.
செல்போன் ஒலித்தது. துரைப்பாண்டிதான் அழைத்தான். அடித்துக்கொண்டே இருந்தது. அந்தப் பேரைப் பார்த்தாலே வசுமதிக்கு எரிச்சலும் கோபமுமாக வந்தது. ஓ-வென்று அழ வேண்டும்போல் இருந்தது.
“போன் விடாம அடிச்சுக்கிட்டே இருக்கே.. எடுத்துப் பேசினாத்தான் என்ன?” சமையலறையிலிருந்து கத்தினாள் மலர்.
“அது மார்க்கெட்டிங் கால்மா!” என்று பதிலுக்குக் கத்தினாள். எழுந்து, தன் அறைக் கதவை அடைத்துவிட்டுக் கட்டிலில் சாய்ந்தாள். மறுபடியும் போன் அடித்தது. இப்போது துரைப்பாண்டி இல்லை. புது நம்பராக இருந்தது. வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காதில் வைத்தாள்.
“ஹலோ..”
“நான் ரமணி..”
அந்த ஒருநொடியில் உறைந்து போனாள் வசுமதி.
****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!