Skip to content
Post Views: 1,823
நாம் கேட்ட காலங்கள் 6(1)
பிரசன்னவர்தினி முடிவெடுத்து கணவனைப் பார்க்க கிளம்பிவிட்டாலும் மனத்தில் கோபம் கனன்றது. அவள் வீட்டை விட்டு வந்த நாளை நினைத்துப் பார்த்தாள். திலக் விபத்துக்குள்ளாகி மூன்று நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தான். எத்தனைப் போராடியும் உயிரை மீட்டவர்களால் நினைவை மீட்க முடியவில்லை. அவனது ‘கோமா’ நிலை சில நாட்களில் சரியாகலாம், சில வாரங்கள், மாதங்கள் எப்படியாகினும் இருக்கலாம் என்றனர் மருத்துவர்கள். அவர்கள் வீடே ஜீவனற்றுப்போனது. வெங்கட கிருஷ்ணனும் அமராவதியும் முற்றிலும் உடைந்து போனார்கள்.
பிரபஞ்சன் முழுவதும் மாறிப்போனான். மிகவும் இறுக்கமாக அவன் குணம் மாற, பிரசன்னவர்தினி திலக்கோடு எப்போதும் ஒரு மரியாதையான நிலையில் பழகுவாள். அவனின் ஒரே தங்கை என்பதால் அவனின் பாசத்திற்குக் குறையே இருக்காது. அவன் பேச்சில் அத்தனை வாஞ்சை இருக்கும். வெளியே சொல்லாவிட்டாலும் அண்ணனின் அந்த நிலை, அவனின் எதிர்காலம் எல்லாம் யோசித்து மிகுதியான மனசோர்வுக்கு ஆளானாள் பிரசன்னா. கணவனிடம் அவள் குறைந்தபட்ச ஆறுதலை எதிர்நோக்க, அவனோ தேர்தலை எதிர்நோக்கி இருந்தான். இருமுறை மருத்துவமனை வந்ததோடு சரி.
பிரசன்னா புலம்பினாலும், “இப்படி இங்க இருந்து புலம்புறதுக்கு அங்க போயி அவனைப் பார்த்துட்டு வா. ஆனாலும் அங்க போய் எல்லாரும் கூடி நின்னு என்ன செய்யப்போறீங்க? ப்ர்ஸ்ட் க்ளாஸ் ட்ரீட்மெண்ட் அவனுக்குக் கொடுக்குறாங்க.” என்றான் இயல்பாக.
Advertisement
பிரசன்னாவுக்கு ராஜமகேந்திரனின் பேச்சின் தொனி கொஞ்சமும் பிடிக்கவில்லை. புரிந்துணர்வு அற்ற பேச்சாக இருந்தது. அவள் எதிர்ப்பார்த்த வார்த்தைகள் அவனிடமிருந்து வரவில்லை. அதுவே அவளை கோபத்திலும் சோகத்திலும் ஆழ்த்திட, அவனோ இன்னும் ஒருபடி மேல் சென்று வீட்டிற்கு வருவதையும் குறைத்தான்.
அவனையும் குறை சொல்ல முடியாது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன, அவனது பொறுமைக்கா தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். Men may come and men may go, but I go on forever என்ற டென்னிசனின்(Alfred Lord Tennyson) என்ற வரிகளுக்கு ஏற்ப என்ன நடந்தாலும் அன்றாட வாழ்க்கை அரங்கேறிக்கொண்டுதானிருக்க வேண்டும். பூமி சுற்ற வேண்டும், சூரியன் உதிக்க வேண்டும். இதையெல்லாம் புத்தகத்தில் படித்தால் கூட பரவாயில்லை. சிலர் சொல்லிக் கேட்கையில் உண்மை என்றாலும் கூட அதனை செரிக்க முடியாது. அதுவும் பிரியமானவர்களிடமிருந்து அழகான பொய்யை, அரிதாரமிட்ட ஆறுதலையே மனம் யாசிக்கிறது. பிரசன்னவர்தினி அப்படியான நிலையில் இருந்தாள். கணவன் மீது வெறுப்புக்கொள்ள இந்த வார்த்தைகள் போதுமானதாக இருந்தன. அதைவிட அவன் செயல் வலி கொடுத்தது.
“மகேந்திரன்! நீங்க எலெக்ஷன்ல நிக்க வேண்டாமே” என்று அடுத்த நாள் தேர்தல் மனு தாக்கல் செய்ய இருப்பவனை இரவில் பிடித்து வைத்து பிரசன்னா சொல்ல, மகேந்திரன் தலை மறுப்பாக ஆடியது.
Advertisement
“நாளைக்கு நான் வேட்புமனு தாக்கல் செய்யப்போறேன். இப்போ வந்து இப்படி பேசுறது ரொம்ப அதிகம், என்னை இரிட்டேட் பண்ணாதடி” என்றான் எரிச்சலாக. முதல்முறை எம்.பி தேர்தலில் நிற்பவனை வாழ்த்தாவிட்டாலும் தடுக்கலாமா என்ற எண்ணம் தலைவனுக்கு.
Advertisement
“திலக் அண்ணா இப்படி இருக்கப்போ நீங்க உங்களைப் பத்தி யோசிச்சா செல்ஃபிஷா இருக்கும். எனக்கே அது ரொம்ப கஷ்டமா இருக்கு. என் வீட்ல உள்ளவங்களை எப்படி ஃபேஸ் பண்ணுவேன், இதுல உங்களுக்கும் அண்ணாவுக்கும்தான் இந்த தொகுதியில நிற்க பெரிய போட்டியே. அண்ணாவோட ஆக்ஸிடெண்ட் எப்படி, யாராலனு இன்னும் தெரியலங்க. இப்போ போய் நீங்க தேர்தல்ல நின்னா உங்க மோடீவ் என்னனு நினைப்பாங்க?” என்ற பிரசன்னாவின் கேள்வியில் உள்ளே கனன்ற நெருப்பை அடக்கி கட்டிலில் அமர்ந்தான் மகேந்திரன்.
“என்ன நினைப்பாங்க?” என்றான் அவளிடமே.
“நீங்க எலெக்ஷன்ல நிக்க அண்ணாவை இப்படி பண்ணிட்டதா நினைப்பாங்க. ப்ளீஸ் நெக்ஸ்ட் எலெக்ஷன்ல பார்த்துக்கலாம்.” என்று பிரசன்னவர்தினி மிகவும் வற்புறுத்தினாள்.
Advertisement
மகேந்திரனின் பொறுமை கடுகை விட சிறியது, கோபம் கடலை விட பெரியது. அவன் காட்டமாட்டான் என்பது வேறு. அப்படிப்பட்டவன் தனது குணத்தைக் கட்டுப்படுத்தியிருப்பது அரசியல் பொதுவெளியிலும், அவனது மனைவியிடம் மட்டுமே.
“நான் நிக்கலன்னா கட்சில எங்களுக்கு அடுத்து, இந்த தொகுதியில சிவசுப்ரமணியம் நிப்பார். இல்லை அவர் பையனை நிக்க வைப்பார். அப்போ அவங்கதான் செஞ்சாங்க சொல்வியா?”
மகேந்திரனின் பேச்சில் எரிச்சல் மெல்ல தன் முதல் அடியை வைத்தது.
“வேற யார் நின்னாலும் அவங்களைப் பத்தி என்ன பேசினாலும் எனக்கென்ன கவலை? உங்களை யாரும் எதுவும் சொல்லக் கூடாது” காதல் மிகுதியில் காரண காரியங்கள் பின்னால் போக பேசினாள் பிரசன்னவர்தினி.
“என்னைப் பத்தி தெனமும் ஒருத்தன் எதாவது சொல்லிட்டேதான் இருப்பான். அரசியல்வாதியும் ரோடும் ஒன்னு. இஷ்டத்துக்கு எல்லாரும் ஏறி மிதிப்பாங்க, குப்பைக் கொட்டுவாங்க, எச்சித்துப்புவாங்க. இதெல்லாம் உனக்குப் புரியாதா?”
“மத்தவங்க என்ன வேணும்னா நினைக்கட்டும். எங்க வீட்லயே உங்களைத் தப்பா பேசுவாங்க” கவலையும் ஆயாசமும் கலந்து வந்தது பெண் குரல்.
மகேந்திரனோ பிரசன்னாவை இழுத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்தவன், “உங்க வீட்ல என்னைத் தப்பா நினைச்சாலும் எனக்குக் கவலையில்லை. இது என்னோட பத்து வருஷ கனவு, சின்ன வயசுல இருந்து பார்லிமெண்ட் போகணும்னு ஆசைப்பட்டவன் நான். லாஸ்ட் டெர்ம்ல நான் அவ்வளவு போராடியும் கட்சில என்னை விட உங்கண்ணனுக்கு செல்வாக்கு அதிகம். எப்படியோ அவன் சீட் வாங்கிட்டான். இந்த முறை நான் தேடின வாய்ப்பை எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். உங்கண்ணா நெக்ஸ்ட் வீக் கூட கோமாவுல இருந்து வந்துடுவான். எலெக்ஷன் கமிஷனர் என்ன என் மாமன், மச்சானா என்னை என் சௌகரியத்துக்கு வர சொல்ல? A week is a long time in politicsனு சொல்வாங்க. யோசிக்காம எமோஷனலா பினாத்தாத!” என்றான் கோபமான குரலில்.
அவன் சொற்களும், சொற்களின் தோரணையும் பிரசன்னாவைக் காயப்படுத்தின.
“நீங்க தேடின வாய்ப்புன்னா? எப்படி தேடினீங்க?” என்ற பிரசன்னாவின் கேள்வியில் மகேந்திரன் முகத்தில் நக்கலான சிரிப்பு. வெளிக்காட்டாவிட்டாலும் கண்களில் அது தென்பட்டது.
“பெரியண்ணாவுக்குப் போன முறையே எம்.பி சீட் கிடைச்சது. இப்பவும் தொகுதில அவருக்கு நல்ல பெயர். சிட்டிங் எம்.பியை விட்டு புதுசா உங்களுக்குச் சீட் தர என்ன ரீசன்? சொல்லுங்க” என்ற மனைவியின் அறிவை மெச்சத்தான் தோன்றியது.
அவன் வழி நேர்வழி அல்ல! அதை சொல்ல அவன் விரும்பவில்லை.
“எப்படியோ வாங்கினேன்.” என்று தோளைக் குலுக்க, அவனது தோளைப் பற்றிய பிரசன்னாவின் முகத்தில் அப்பட்டமான அச்சம் தெரிந்தது. என்னவோ தவறாகப்பட்டது.
“நிஜமா சொல்லுங்க நீங்க பெரியண்ணாவை ஒன்னும் பண்ணலயா?” என்று பயத்தோடு கேட்டாள்.
“என்ன கேள்வி இது?”
“பதில் சொல்லுங்க. அண்ணாவை என்ன செஞ்சீங்க? எப்படி சீட் வாங்கினீங்க? எதுவும் செய்யாம நீங்க சீட் வாங்கல, உங்க முகமே காட்டிக்கொடுக்குது”
“இப்போ என்னடி சொல்ல வர? திலக்கை நான் ஆக்சிடெண்ட் பண்ணினேனா? அப்படியோ வச்சிக்கோ. ஐ டோண்ட் மைண்ட்” என்றவன் அப்படியே மெத்தையில் சாய்ந்தான். பிரசன்னவர்தினி கணவனை ஏமாற்றத்தோடு பார்த்தாள்.
“நீங்க என்ன செஞ்சீங்க சொல்லல நான் இப்பவே வீட்டை விட்டுப் போய்டுவேன்” என்று மிரட்ட,
“என்ன?” என்றவன் கொஞ்சம் அதிர்வோடு எழ,
அந்த அதிர்வு கொடுத்த துணிவில், “எஸ், சொல்லுங்க. என்ன செஞ்சு சீட் வாங்குனீங்க?” என்றாள் மீண்டும்.
“சொல்ல முடியாது” என்றான் உறுதியான குரலில்.
“அப்போ தப்பு செஞ்சிருக்கீங்க?” என்று பிரசன்னா கண்கள் கலங்க கேட்க,
“உன் நினைப்புக்கு நான் பதில் சொல்ல முடியாது. ஐ டோண்ட் கேர் அபவுட் யுவர் தாட்ஸ்” என்றவன் போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டான். பிரசன்னாவிற்கு அவ்வளவு ஏமாற்றம், கோபம். அண்ணனின் உடல் நிலை, கணவனின் இந்த திமிர்ப்பேச்சு.
தப்பு செய்யவில்லை என்று சொன்னால் என்ன? என்பது பிரசன்னாவின் எண்ணம். மகேந்திரனுக்கோ தப்பே செய்தாலும் என் மனைவி என்னோடு நிற்க வேண்டுமென்ற திண்ணம். பிரசன்னாவிற்கும் மகேந்திரனுக்கும் பிடித்தம் மட்டும் ஒன்றில்லை, பிடிவாதமும் ஒன்றாக இருக்க பிரிந்தனர்.
error: Content is protected !!