Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நாம் கேட்ட காலங்கள்

நாம் கேட்ட காலங்கள் – 6(2)

நாம் கேட்ட காலங்கள் 6(2)

ஜீவபிரகாஷ் அவனது அலுவலகத்தில் ‘எவிடன்ஸ் போர்ட்’டை உற்றுப்பார்த்தான். தனக்கு எதிரில் நின்ற ரமேஷிடம்,

“பாசிபில் சஸ்பெக்ட்ஸ் எல்லாம் விசாரிச்சு முடிச்சிட்டோம். வேற யாராவது இருக்காங்களா ரமேஷ்” என்று கேட்டான்.

“இல்லை சார்.”



Advertisement

“ராஜமகேந்திரனை விசாரிச்சது அவங்க வீட்ல சொன்னதை வச்சு. மோரோவர் திலக் இப்படியானால் அவரைத்தான் நாம் ப்ரைம் சஸ்பெக்ட்டா நினைப்போம் தெரியும். அவரை விசாரிச்ச வரைக்கும் நோ லீட்ஸ்.”

“கட்சில சிலரை வாட்ச் பண்ண சொன்னேனே? என்னாச்சு?” என்று புருவம் உயர்த்தினான்.

“அவங்களை இன்னமும் வாட்ச் பண்ணிட்டுதான் இருக்கோம் ஸர். அரசியல்ல நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை சொல்ற மாதிரி இப்போ எல்லாரும் திலக் இப்படியானதால ஃபீல் பண்றாங்க. அது திலக்கோட தாத்தா, அப்பா சம்பாரிச்ச பெயர் அப்படி. உண்மையை சொல்லப்போனா அவங்களுக்குத் திலக் பதவிக்கு வந்தா நன்மை அதிகம், விசாரிச்ச வரைக்கும் கட்சில மகேந்திரனை விட திலக்கை நிறைய பேர்  எலெக்ஷன்ல நிற்க நாமினேட் பண்ணியிருக்காங்க. மகேந்திரன் லாஸ்ட் மினிட் சாய்ஸ்”

Advertisement

“கட்சில மட்டும்தான் எதிரி இருக்கணுமா? அரசியல்வாதின்னா எல்லாருமே எதிரியா இருக்கவும் வாய்ப்பிருக்கே?” என்ற ஜீவபிரகாஷ் பெருமூச்சோடு உட்கார்ந்தவன் பட்டென்று எழுந்தான்.

Advertisement

“நம்ம ரஞ்சனை மீட் பண்ணனும் வாங்க” என்றவன் ரஞ்சனை சந்திக்க சென்றான்.

“உங்களை விசாரிச்சப்போ உங்கண்ணா நைட் ஒன்பதரைக்கு மேல எந்த அப்பாயிண்ட்மெண்ட்டும் வச்சுக்க மாட்டார் சொன்னீங்க. முடிஞ்சவரை அந்த டைம்ல வீட்ல இருப்பார் சொன்னீங்க? அப்போ அன்னிக்கு மட்டுமே ஏன் அந்த மிட்நைட்ல வெளியே இருந்தார்?” என்று ஜீவா கேட்க, பிரபஞ்சன் முகத்தில் யோசனை.

அவனுக்குமே அதன் காரணம் தெரியவில்லை.

Advertisement

விழித்தவன், “தெரியல ஸர். எதாவது முக்கியமான வேலையா இருக்கலாம்” என்றான்.

“அது என்னனு தெரிஞ்சிட்டு சொல்லுங்க பிரபஞ்சன். உங்கண்ணாவோட பி.ஏ அவரையும் கூப்பிடுங்க” என்றதும் திலக்கின் பி.ஏ கபீரை அழைத்தான்.

கபீரிடமும் அதே கேள்விகளைக் கேட்டான் ஜீவா.

கபீர் ஜீவாவிடம், “ஸர் எப்பவும் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்துடுவார். முடிஞ்சவரை பத்து மணிக்குள்ள வீட்டுக்குப் போக நினைப்பார். சில நேரம் அவர் தனியா நைட் ரைட்ஸ் போவார், எம்.பியா இருந்தவரை செக்யூரிட்டி ரீசன்ஸ்காக அப்படி போறதை ரொம்ப குறைச்சிட்டார், போனாலும் கார்ட்ஸ் கூட போவாங்க. இப்போ அப்படி இல்லை, எலெக்ஷன்ல அவர் சீட் உறுதியாகல. மகேந்திரன் ஸர், முத்தரசன் இரண்டு பேரும் அவங்களுக்கு சீட் வேணும்னு கட்சில பிரச்சனை. மே பீ ரிலாக்ஸ் ஆக அவர் போயிருக்கலாம்”

“ஏன் ஸர் அண்ணா அந்த டைம் வெளியே போவார்னு எங்களுக்கே தெரியல, அவரோட இருக்க கபீருக்கும் தெரியல. அப்போ எப்படி அந்த ஆக்சிடெண்ட் நடந்திருக்கும்? ஒருவேளை அது உண்மையில ஆக்சிடெண்டா இருந்திருந்தா?” ரஞ்சன் குழப்பத்தோடு கேட்டான்.

“நீங்க சொல்ற மாதிரி இருந்தா ஏன் அந்த ட்ரக்’ல போலியான நம்பர் ப்ளேட் இருக்கணும்? உங்களுக்கு உங்க அண்ணா போறது தெரியாம இருக்கலாம், ஆனா அவரை கண்காணிச்சவங்களுக்குத் தெரியாம இருக்காதே.” என்றதும் ரஞ்சன் முகம் வாடியது.

“அண்ணா முடிஞ்சவரை யாரையும் பகைச்சிக்க மாட்டார் ஸர். அவர் ரொம்ப நல்ல மாதிரி, அவரைப்போய் இப்படி…” என்றவனுக்கு அவ்வளவு கோபம். அதனை ஜீவா முன் காட்ட முடியாமல் நின்றான்.

“டோண்ட் வரி ரஞ்சன். ஐ வில் டேக் கேர்” என்று அவனது தோளில் லேசாகத் தட்டிச் சென்றான் ஜீவா. ஜீப்பில் ஜீவாவும் ரமேஷும் மீண்டும் அலுவலகம் சென்றனர்.

“ஏன் ஸர்? திலக் சீட் தனக்குக் கிடைக்குமான்னு டென்ஷனா இருந்ததா கபீர் சொல்றார். ஒருவேளை சிம்பதிக்காக திலக்கே இப்படி ப்ளான் பண்ணியிருந்தா?” என்று கேட்டு ஜீவாவின் முகம் பார்த்தான் ரமேஷ்.

“இல்லை ரமேஷ், சீட் கிடைச்ச அப்புறம் அப்படி செஞ்சா கூட யூஸ். சீட் கிடைக்காம சிம்பதி வோட் வாங்க முடியாதே. நீங்க மகேந்திரன், முத்தரசன், கபீர், ரஞ்சன், திலக் எல்லாரோட போன் ரெகார்ட்ஸ் செக் பண்ணுங்க. அவங்க பேங்க் ஸ்டேட்மேண்ட் வாங்குங்க. சரியா சம்பவம் நடக்குறதுக்கு ஆறு மணி நேரம் முன்னாடி,  நடந்து ஆறு மணி நேரம் வரைக்கும் வந்த எல்லா கால்ஸும் நோட் பண்ணுங்க. சந்தேகமா இருக்கிறதை எனக்கு சொல்லுங்க” என்றான் ஜீவா.

**********

பிரசன்னவர்தினி வீடு சென்றபோது வைதேகி, வித்யாதரன் வீட்டில் இருந்தனர். பிரசன்னவர்தினியிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

“எப்படி இருக்கீங்க மாமா?” என்று இருவரையும் பொதுவாகப் பார்க்க,

வைதேகி, “ராஜா உங்க ரூம்ல இருக்கான். போய் பாரு வர்தினி” என்றார்.

“காஃபி, டீ எதாவது குடிச்சிட்டுப் போம்மா” என்று வித்யாதரன் சொல்ல, வைதேகியோ

“அவ என்ன கெஸ்ட்டா?” என்றார் கிண்டலாக.

“கெஸ்ட் இல்லைன்னாலும் இவ்வளவு தூரம் ட்ரைவ் பண்ணிட்டு வந்திருக்கா, அப்போ எதாவது சாப்பிட சொல்லலாம் தானே?” என்றிட, வைதேகியும் தலையசைத்தார்.

“உட்கார் வர்தினி. என்ன சாப்பிடுற?” என்று கேட்க,

“அய்யோ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அத்த. தாத்தா எங்க?” என்றாள். அவள் பார்வை அவர் அறையை வட்டமடிக்க,

“அவர் ரத்னா தாத்தாவைப் பார்க்க போயிருக்கார்.” என்றார் வைதேகி. மாடியிலிருக்கும் அவர்கள் அறைக்குச் செல்ல மிகுந்த பிரயர்த்தனப்பட்டாள் பிரசன்னவர்தினி.

அவளது மிகப்பெரிய வருத்தம் கணவனிடம் இரக்கமின்மை மட்டுமில்லை. இவள் இரவு சண்டைக்குப் பின் கோபத்தோடு காலையில் எழுந்தவுடனே சென்னை சென்றுவிட்டாள். வீட்டில் அந்த நேரம் யாருமே இல்லை. வித்யாதரனும் வைதேகியும் மருத்துவமனை சென்றிருக்க, தேசிகனும் மகேந்திரனும் கட்சி அலுவலகம் சென்றனர். அங்கிருந்து வேட்புமனு தாக்கல் செய்ய சென்றனர். இரவு மகேந்திரன் பல வருட கனவிற்கு விதையிட்டு வீட்டுக்கு வந்தால் பிரசன்ன வர்தினி இல்லை. திலக்கைப் பார்க்க போயிருப்பாள் என்று இயல்பாக நினைத்தவன் அவளுக்கு அழைத்தான். அழைப்பை ஏற்ற பிரசன்னவர்தினியோ,

“நான் எங்க இருந்தாலும் நீங்க கவலைப்பட போறதில்லையே” என்று சொல்ல, மகேந்திரனுக்கு ஒரு இயலாமை. தன் மனைவி தன்னோடு நிற்காமல், தன்னை நினைக்காமல் போய்விட்டாள் என்ற உண்மை அவ்வளவு சுட்டது. அந்த காயத்தின் காரணமாக அவளை வா என்று அழைக்கவே இல்லை. அவனும்,

“என்னை நம்பாம போன இல்லை. போடி” என்று வைத்துவிட்டான். அவன் தேர்தல் வேலைகளில் தீவிரமாக மூழ்கிப்போயிருந்தான். வெற்றி வாகை சூடியபோதும் பிரசன்னவர்தினியிடம் இருந்து ஒரு வாழ்த்தில்லை. ராஜமகேந்திரன் எந்தவுணர்வையும் வெளிகாட்டவில்லையென்றாலும் அத்தனை உணர்வையும் உள்ளத்தில் சேமித்து வைத்திருந்தான். எந்த நேரம் அந்த எரிமலை வெடிக்கும் என்று தெரியாத நிலையில் இருந்தான்.

பிரசன்ன தயங்கி தயங்கி உள்ளே வர, அவளுக்கு முன் அவளது கொலுசொலி மகேந்திரனின் செவி தொட்டது. இதழ்களில் லேசாய்ப் புன்னகை உதயமானது. பிரசன்னா அவன் முன் பிரசன்னம் ஆனபோது அது முற்றிலும் மறைந்து போனது. பல நாட்கள் கழித்து அவர்கள் அறையில் அவள்.

ஒரு முழுமை மின்னலாய்த் தாக்கியது. பிரசன்னா ராஜமகேந்திரனிடம், “அத்த ஃபீவர்னு சொன்னாங்க? எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள். பிரசன்னா உட்காராமல் நிற்க,

“இந்த பெட்ல உருண்டு இருக்க, உட்கார என்ன யோசனை? ஜுரம் வந்திடும்னா?” என்றான் நக்கலாக.

“ஜுரம் வந்தாலும் நீங்க அடங்கமாட்டீங்க இல்ல.” என்றாள் முறைப்பாக.

“ஓஹ், ஜுரம் என்ன எமெர்ஜென்சியா எல்லாரையும் அடக்க? ஹ்ம்ம்?” என்று கேட்க,

“ப்ச்” என்று பிரசன்னா அவன் முகம் பார்க்காமல் திரும்பினாள். அவள் பார்வை அறையைச் சுற்றியது.

“என்ன? உன் சந்தேகம் தீர்ந்திடுச்சா? இல்லைனா வீட்டுப்பக்கம் வர மாட்டேன்னு நின்னியே?” என்று மீண்டும் கேட்க

“உங்களை நான் சந்தேகப்படல.”

“முழுசா நம்பவும் இல்லை.” என்றான் ராஜமகேந்திரன்.

“இப்போ இதைப்பத்தி பேச வேண்டாம்” என்ற பிரசன்னா “ஜுரம் குறைஞ்சிருக்கா?” என்று கேட்க,

“அப்போ நீ இன்னும் அப்படியே இருக்க? ரைட்! என்னைப் பார்க்க என் அப்பா, அம்மா இருக்காங்க. நீ என்னைப் பார்க்கணும்னு நான் கிடக்கல, போடி” என்றான் எடுத்தெறிந்து. அவனது அந்த அணுகுமுறையும் ஆவேசப் பேச்சும் பிரசன்னாவை கலங்க வைத்தன.

பிரசன்னாவை அப்படி பார்க்கவும் மகேந்திரனுக்குப் பிடிக்கவில்லை. நமக்கு மிகவும் பிடித்தவர்கள் நம் முன் நமக்காக கலங்கி நின்றாலும் கூட காண சகிக்காதே. அப்படித்தான் மகேந்திரன் நிலை. அது வெறும் வருத்தம் தராமல் எரிச்சலையும், இயலாமையும் கொடுத்தது. இழுத்தணைத்து இறுக்கப்பற்றிட அவன் மனம் துடித்த போதிலும் அவன் குணம் விடவில்லை.

காதலின் இருமுனைக் கத்தி இருவரையும் குத்திக் காயப்படுத்தியது.

**********

ரமேஷ் சொன்னதைக் கேட்ட ஜீவாவின் கண்கள் விரிந்தன. மகேந்திரனின் பேச்சில் அவனை முழுவதுமாக நம்பிவிட்டான் என்றே சொல்ல வேண்டும்.

திலக் விபத்துக்குள்ளான பத்து நிமிடத்தில் அவனுக்கு ஒரு அழைப்பு வந்திருப்பதை ரமேஷ் சொல்ல,

“அந்த நம்பர் யாரோடதுனு ட்ரேஸ் பண்ணுங்க, அந்த நம்பரோட கால் ரெகார்ட்ஸும் ட்ரேஸ் பண்ணுங்க” என்றவன் மகேந்திரனை மீண்டும் விசாரிக்க கிளம்பினான்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!