Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சொல்லி விடு வெள்ளி நிலவே

சொல்லி விடு வெள்ளி நிலவே – 7

அன்று ஒரு சனிக்கிழமை.

எல்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை.

மற்ற மாணவர்களுக்கு மட்டும் அரை நேரம் பள்ளி இருந்தது.

பள்ளி மெயின் கேட்டுக்கு வெளியில் ரித்து வேனில் காத்திருந்தான்.



Advertisement

அன்று அவன் வேனில் மானுவை மட்டுமே அழைத்துப் போக வேண்டியிருந்தது அவனுக்கு.

கேஜி குழந்தைகளுக்கு லீவ், மற்றவர்களில் இரு சகோதரர்களில் பெரியவனுக்கு வயிற்று வலி வந்து அவனை பதினோரு மணிக்கே அவன் அப்பா அழைத்துப் போய் விட்டார்! கூடவே அவனது தம்பியையும்!

மற்ற ஒரு பிளஸ் டூ மாணவியையும் அவரது அம்மா டூ வீலரில் கூட்டிக் கொண்டு போய் விட்டார் அன்று.

Advertisement

இப்போது மானு மட்டுமே வேனில் வர வேண்டும்.

Advertisement

ஆனால் பள்ளி நேரம் முடிந்து ரொம்ப நேரம் ஆகியும் அவளைக் காண வில்லை.

ரித்து காத்திருந்தான்.

மணி ஒன்னரை ஆகி விட்டிருந்தது.

Advertisement

கிட்டதட்ட பள்ளி வாகனங்கள் எல்லாமே கிளம்பி விட்டிருந்தன.

மேலும் ஒரு கால் மணி நேரம் சென்று, ஆசிரியர்கள் ஒவ்வொருவராக நடந்தோ, அல்லது டூ வீலரிலோ வெளியேறிக் கொண்டிருந்தனர்.

 மானுவை மட்டும் இன்னும் காணோம்.

நேரம் சென்று கொண்டிருந்தது! மணி இரண்டாகி விட்டது.

ஸ்கூல் பிரின்சிபால் கார் வெளியே வந்தது.

பின், பள்ளி அலுவலகப் பணியாளர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்துக் கொண்டிருந்தனர்.

வாட்ச்மேன் ஸ்கூல் பள்ளியின் பெரிய கேட்டை இழுத்து மூடி விட்டார்.

சிறிய கேட் மட்டுமே திறந்து இருந்தது.

வெளி வாகனங்களுக்கு பள்ளியின் உள்ளே அனுமதி இல்லை.

ரித்துவிற்கு கொஞ்சம் டென்சன் ஆனது. மானு வெளியே வருகிறாளா என்று பள்ளி  வாயிலினுள்ளே எட்டிப் பார்த்தான்.

அவள் வருவதாக தெரியவில்லை. நேரம் சென்று கொண்டிருந்தது.

இப்போது பள்ளியில் துப்பரவு வேலை செய்யும் ஆயாக்களும் வெளியேறிக் கொண்டிருந்தனர்.

மணி இரண்டரை ஆகி விட்டிருந்தது. இனி பொறுத்துப் போவதில்  அர்த்தம் இல்லை என்று நினைத்து , ரித்து  பள்ளியின் உள்ளே சென்று வாட்ச்மேன் அமர்ந்திருக்கும் அவரது அறைக்கு சென்று விசாரித்தான்.

“அண்ணே, எல்லா பசங்களும் போயிட்டாங்களா?”

“நீங்க யாரு தம்பி?”

“நான் வேன் டிரைவர் அண்ணே. என் வேனில் வரும் ஒரு பொண்ணு இன்னும் வரல. அதான் கேட்டேன்”.

“அவங்க  பேரன்ட்ஸ் வந்து கூட்டிட்டுப் போய்ட்டாங்களான்னு கேட்டீங்களா?”

“இல்ல, அவங்க யாரும் கூட்டிட்டுப் போகல, நான் தான் கூட்டிட்டுப் போகணும். ரொம்ப நேரமா வெயிட் பண்றேன். இன்னும் வரல அதான் கேட்டேன்”.

“எத்தனையாவது படிக்கிற பொண்ணு தம்பி?”

“ப்ளஸ் டூ அண்ணே”.

அவர் ஏதோ சொல்ல ஆரம்பிக்குமுன்,

“கடன்கார, மென்டல் பிடிச்சவன். எப்போ பாரு இவனோட ஒரே ரோதனையா போச்சு!

சனிக்கிழமை அரை நேரம் தான் ஸ்கூல். வெள்ளனே கிளம்பிறலாம். வீட்டுக்குப் போய் துணி துவைக்கலாம்ன்னு காலையிலேயே ஊறப் போட்டுட்டு வந்தேன்.

எங்க.. இந்த சனியன் பிடிச்சவனால எப்போதும் போல தான் வீட்டுக்குப் போவோம் போல!

இவனுக்கு தான் பொண்டாட்டின்னா பயம்! வீட்டுக்குப் போகப் பிடிக்கல. நமக்கு அப்படியா?”

கொஞ்சம் சத்தமாகவே திட்டிக் கொண்டே வாட்ச்மேன் அருகில் ஒரு ஸ்டூலை எடுத்துப் போட்டு உட்கார்ந்தார் ஆயா ராணி!

“வாம்மா ராணி.. என்ன இப்படி திட்டிட்டே வர்ற? யாரை திட்டுற?” என்று கேட்டார் வாட்ச்மேன்.

“எல்லாம் அந்த மென்டல்பய செல்வராஜை தான்!”

“ஏன் இன்னிக்கு என்ன பண்ணுனான்?”

“இன்னும் ஒரு பொண்ணை அனுப்பாம வச்சுட்டு தொல்லைப் பண்ணிட்டு இருக்கான்! பாவமா இருக்கு அந்த பொண்ணைப் பார்த்தா? அழகா பிறந்தது அவள் தப்பு போல?

இன்னிக்கு இரண்டு பொண்ணுங்கள இப்படி நிறுத்தி வச்சுருந்தான்.

ஒரு பொண்ணை அவ அப்பா வந்து கூப்பிட்டதுனால அனுப்பி வச்சுட்டான்.

இன்னும் ஒருத்தியைப் போட்டு தொல்லைப் பண்ணிட்டு இருக்கான்!”

கொஞ்சம் வெளியே நின்று  கொண்டிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த ரித்து பதறினான்.  ஒரு வேளை இந்த ஆயா சொல்றது  மானுவைப் பத்தி தானா?

“ஸ்கூல் முடிஞ்சு லேபைக் கூட்டி சுத்தம் பண்ணிட்டு பூட்டி சாவியைக் கொடுத்துட்டு கிளம்பலாம்னு பார்த்தா, அவன் இன்னும் கிளம்பவே இல்ல!

அந்த பொண்ணையும் விடறதா இல்ல”, ஆயா மேலும் புலம்பிக் கொண்டிருக்க,

சட்டென உள்ளே நுழைந்து, அவன் போனில் இருக்கும் மானுவின் போட்டோவைக் காட்டி, “இந்த பொண்ணு தானா ஆயா, கொஞ்சம் பார்த்து சொல்லுங்க” என்று கேட்டான்.

ஆயா அவள் போட்டோவைப் பார்த்து விட்டு, “இவ தான். நீங்க யாரு தம்பி?”

“அவர் ரொம்ப நேரமா அந்த பொண்ணைத் தான் இன்னும் வரலன்னு கேட்டுட்டு இருந்தார். வெளி வேன் டிரைவர்!”என்றார் வாட்ச்மேன்.

“ஆமா தம்பி இந்த பொண்ணைத் தான் இன்னும் அனுப்பாம இருக்கான் அந்த மென்டல் வாத்தியார்!”

“அய்யோ அப்ப தப்பா நடந்துட்டு இருக்கானா? அந்த பொறுக்கி, உள்ளே போய் கையைக் காலை உடைக்கிறேன் பாருங்க”. என்று ரித்து உள்ளே போக எத்தனிக்க,

“அய்யோ. கொஞ்சம் நில்லுங்க தம்பி! நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் அங்க ஒன்னும் நடக்கல!

கோபப்படாதீங்க. சும்மா நிக்க வச்சு கேள்வி கேள்வியா கேட்டுட்டு இருப்பான் அந்த ஆள்! மத்தபடி தப்பா எல்லாம் நடந்துக்குற ஆள் எல்லாம்  இல்லை அவன்!” ஆயாம்மா பதறியபடி அவனைத் தடுத்தார்.

ஆயா சொல்லுவதும் உண்மை தான்! அவர் குறிப்பிட்ட அந்த டீச்சர் அழகாய் இருக்கும் மாணவிகளுக்கு மட்டும் அவ்வளவு சீக்கிரம் ரிக்கார்ட் நோட்டில் சைன் பண்ணி விட மாட்டான்!

அவர்களை மட்டும் ரொம்ப நேரம் நிற்க வைத்து பாடத்தில் இருந்து வளைத்து வளைத்து கேள்விகள் கேட்டு தொல்லைப் பண்ணுவான்!

நல்லவேளையாக அவன் எடுப்பது பிசிக்ஸ் என்பதால், அந்த வரையில் மாணவிகள் கொஞ்சம் தப்பித்தார்கள்!

அவனுக்கு கல்யாணமும் ஆகியிருந்தது. ஆறு வயதிலும் மூன்று வயதிலும் இரண்டு மகன்கள் வேறு இருந்தனர்.

பார்க்க கொஞ்சம் நன்றாகவே இருக்கும் அவன் மேல் ஆசைக் கொண்ட அவனது மாமாவின் மகளை சொத்துக்காக என்று கல்யாணம் செய்துக் கொண்டவன்!

அவளோ கொஞ்சம் சுமாராக தான் இருப்பாள்.

அவன் தம்பியோ சொத்துக்கு  முக்கியத்துவம் கொடுக்காமல் அவன் ஆசைப்பட்ட பொண்ணை திருமணம் செய்து இருந்தான். அவளோ நல்ல அழகி மட்டும் இல்லை குணவதியும் கூட!

இவனுக்கு வாய்த்த மனைவிக்கோ இரண்டும் இல்லை!

அது கொஞ்சம் பொறாமை உணர்வைத் தூண்டி, அழகான பெண்களைப் பார்த்தாலே கொஞ்சம் எரிச்சல் வர வைத்தது!

அது கடைசியில் அவன் வகுப்பில் படிக்கும் அழகான மாணவிகள் தலையில் வந்து விடிந்தது.

அவன் யாரிடமும் இது வரை அத்து மீறி நடந்தது இல்லை என்பதால், அவன் மீது குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு எந்த புகாரும் இது வரை இல்லை!

மேலும் அவன், மிகவும் நன்றாகவே வகுப்பு எடுப்பான். நிறைய முறை  பொதுத் தேர்வில் அவன் மாணவிகள் மாநில அளவில் முதலிடம்  பெற்றும் இருக்கிறார்கள்! அதனால் அவனது இந்த செய்கைகள் பெரிதாகக் கண்டுக் கொள்ளப்படவில்லை!

அன்று மானுவும் இன்னொரு மாணவியும் அவனிடம் மாட்டிக் கொண்டார்கள்.

அவனிடம் ரிக்கார்ட் நோட்டில் வாங்க வந்தவர்களை, பார்க்க மிகவும் அழகாக இருந்த அவர்களை நிறுத்தி வைத்தான்.

அன்று லேபில் விளக்கெண்ணையை  வைத்து செய்யும் ஒரு எக்ஸ்ப்ரிமென்ட் செய்தார்கள்.

ஒரு திரவத்தின் பாகுநிலை – விஸ்காசிடி(viscosity) கண்டுபிடிக்கும் சோதனை!

அதுவும் வேறு மாணவர்கள் செய்து விட்டு வைத்து விட்டுப் போனது அது!

சோதனை செய்யும் போது, எண்ணையில் போடப்பட்ட உலோக உருண்டைகளை, மானுவையும் இன்னொருவளையும் வெளியில் எடுக்க சொல்ல, முகம் சுளித்த அவர்களைப் பார்த்து விட்டான் அவன்!

அவர்கள் அவற்றை எடுத்துக் கொடுத்த பின்னும் உடனே சைன் பண்ணி அனுப்பி விடாமல் நிறுத்தி வைத்து, பாடம் சம்பந்தமாகவே கேள்விகளை வளைத்து வளைத்துக் கேட்க ஆரம்பித்தான்.

இரு மாணவிகளும் திணறினர்.

மானுவிற்கு பசி. அவள் லஞ்ச் வீட்டில் போய் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று எடுத்து வரவில்லை.

மேலும் அவள் பள்ளியிலே பீரியட்ஸ் வேறு ஆகி விட்டாள்.

அப்போது அவளுக்கு வாந்தியும் வயிற்று வலியும் வரும். பொறுத்துக் கொண்டு தான் லேபில் இருந்தாள்.

பசியோடு, கூடவே இந்த விளக்கெண்ணை வேறு குமட்டலை ஏற்படுத்தியது.

இது போதாது என்று கேள்விகள் வேறு!

அவளுக்கு விடை தெரிந்தாலும் சொல்ல முடியவில்லை.

 அப்படியே சொன்னாலும் அதிலிருந்து எடக்கு முடக்காக கிளை கேள்விகள் வேறு கேட்டுக் கேட்டு அவளை ஒரு வழிப் பண்ணிக் கொண்டிருந்தான் அந்த மென்டல் வாத்தி!

கூட இருந்த அந்த இன்னொருப் பெண்ணை அவள் அப்பா வந்து அழைத்து சென்று விட, இப்போது சிக்கியிருப்பது மானு மட்டுமே!

அவளோ கிட்டத்தட்ட அரை மயக்க நிலைக்குப் போய் விடுவாள் போல இருந்தாள்.

நிலைமை இப்படி இருக்க, அங்கு வாட்ச்மேன் அறையில் கொந்தளித்துக் கொண்டிருந்தான் ரித்து!

“என்ன சொல்றீங்க நீங்க? ஸ்கூல் ஒரு மணிக்கே முடிஞ்சுடுச்சு. இப்ப மணி மூனு ஆகப் போகுது.

இன்னும் ஒரு ஸ்டுடென்ட் கிட்ட அப்படி என்ன கேள்விக் கேட்டுட்டு இருக்காரு அந்த ஆள்!” பல்லைக் கடித்தான் ரித்து.

“கோபப்படாம கொஞ்சம் நில்லுங்க. நான் உள்ளே போய் அந்த பொண்ணை அழைச்சுட்டுப் போக வீட்டில் இருந்து அவங்க மாமா வந்து ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கார்ன்னு சொல்லி அனுப்பி வைக்குறேன்” என்று சொல்லி எழுந்துப் போனாள் ஆயாம்மா!

“மாமாவா.. இல்ல நான் அவ மாமா இல்லை! நான் வேன் டிரைவர்” என்று சொன்ன ரித்துவிடம்,

“இல்ல தம்பி அப்படி சொன்னா தான் அந்த ஆள் விடுவார். வேன் டிரைவர்ன்னு சொன்னா, வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிடுவான்.

 நான் போய் சொல்லிக் கூட்டிக் கொண்டு வரேன்!” என்று சொல்லி லேப் இருக்கும் ப்ளாக்கிற்கு சென்றார் ஆயாம்மா.

ரித்துவிற்கு பொறுமை இல்லை! அவனும் பின்னாடியே போய் விட்டான்.

லேப் உள்ளே போன ஆயா, “சார்.. இந்த பொண்ணைக் கூட்டிட்டுப் போக வந்து அவ மாமா ரொம்ப நேரமா வெளியே காத்துட்டு இருக்கார்!”

“மாமாவா.?” என்று கொஞ்சம் ஆச்சர்யப்பட்ட மானு, உள்ளே நுழைந்து விட்ட ரித்துவைக் கண்டதும், கொஞ்சம் நிம்மதியாக, கூடவே ரொம்பவே பாதுகாப்பாக உணர்ந்தாள்!

“உன் மாமாவா இவர்?” கேட்டான் செல்வராஜ்.

“ம்ம். ஆமா.” என்றாள் மானு.

“சரி போ.” என்று உடனே சொல்லி விட்டான். அவனுக்கு கல்லூரி மாணவனாக இருந்தாலும், ரித்துவின் வாட்டசாட்டமான உடலமைப்பும் அவன் முகத்தில் தெரிந்த அடக்கி வைக்கப்பட்ட கோபமும் உள்ளுக்குள் கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது!

இருந்தும் வெளிக் காட்டிக் கொள்ளாமல், மேலும் எதுவும் கேட்காமல் மானுவை அனுப்பி விட்டான்.

ஸ்கூல்பாகை எடுத்துக் கொண்டு வந்த மானுவை அழைத்து சென்றான் ரித்து.

மானு அவனுடன் கொஞ்ச தூரம் நடந்தவள், திடீரென்று கொஞ்சம் வேக நடைப் போட்டு அருகிலிருந்த மாணவர்கள் கை கழுவும் தொட்டி அருகே சென்றவள் குபுக்கென்று வாந்தி எடுத்தாள்.

கொஞ்சம் தள்ளியிருந்து இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஆயா, பதறி இவர்கள் அருகில் வந்து அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“வீட்டில் இல்லையா பாப்பா?’ என்றாள்.

அதற்கு மவுனமாக தலையசைத்தாள் மானு.

கூட இருந்த ரித்துவிற்கு இவர்கள் பேசிக் கொண்டது ஒன்றுமே புரியவில்லை.

அவனுக்கு சகோதரிகள் யாராவது இருந்திருந்தால் புரிந்திருக்கும்.

அப்படி தான் யாரும் இல்லையே!

மேலும் அவன் வீட்டில் அவன் ஒரு தனித் தீவு!

இதில் எங்கு இது மாதிரி பேச்சுக்கள் அவனுக்குப் புரியும்!

ஆனால், மானுவிற்கு உடம்பு முடியவில்லை என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.

அதற்குள், “ஆயா..” என்ற செல்வராஜின் குரல் லேபில் இருந்துக் கேட்கவே,

“தம்பி இப்படியே கொஞ்சம் தலையைப் பிடிச்சுக்கோங்க. அந்த ஆள் கூப்பிடறான். போகலன்னா பயங்கரமா திட்டுவான்” என்று சொல்லி மானுவை அவனிடம் விட்டுவிட்டு சென்று விட்டாள்.

இப்போது மானுவின் தலையைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்த அவனுக்கு எல்லாமே புது அனுபவம்!

அவள் வாந்தி எடுத்து முடித்து, வாய் கொப்பளித்து விட்டு முகம் கழுவி விட்டு, திரும்பினாள்.

இதுவரை அவன்  கையில் இருந்த ஸ்கூல்பாகை வாங்க கை நீட்டினாள்.

“இல்ல. பரவாயில்ல. நானே கொண்டு வரேன். நீ வா..” என்று அழைத்து சென்றான்.

இன்னும் கொஞ்சம் நேரம் சென்றவுடன் அவளுக்கு மீண்டும் கொஞ்சம் வயிற்று வலியும் கொஞ்சம் மயக்கமும் வந்து விட தள்ளாடினாள்.

தள்ளாடிக் கொண்டிருந்த அவளைத் தன் தோளுடன்  சேர்த்து தாங்கிப் பிடித்துக் கொண்டு நடத்திக் கொண்டு போய் அருகில் இருந்த ஒரு ஸ்டோன் பெஞ்சில் அவளை உட்கார வைத்து அருகில் அமர, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் மானு.

அவளுக்கு அவள் அப்பாவின் தோள் மாதிரி பாதுகாப்பாக தோன்றியது அப்போது!

அந்நிய ஆடவன், அதிலும் ஒரு வயது பையன் தோளில் சாய்ந்து கிடக்கும் உணர்வே அவளுக்கு எழவில்லை!

ஏதோ ஆபத்தில், சங்கடத்தில் இருந்து தப்பி வந்த உணர்வு!

அவனிடம் தஞ்சம் கொண்டது போல சாய்ந்து கொண்டாள் அவள்!

ரித்துவிற்கு ஆச்சர்யமாக போய் விட்டது!

சிறு குழந்தையைப் போல் தன் தோள் சாய்ந்து இருக்கும் இவள் உண்மையிலேயே குட்டிமா தான்!

இனி என் குட்டிமாவும் கூட!

அவன் மனம் ஏதோ ஏதோ நினைவுகளில் இருக்க, இப்போது அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசம் ஆகி, தன் அமர்ந்து இருக்கும் நிலை கண்டு, கொஞ்சம் பதறி எழுந்தாள்.

ரித்துவும் எழுந்துக் கொண்டு, “போலாமா? இப்ப பரவாயில்லையா?” என்று கேட்டான்.

அவள் தலையசைக்கவும், பேகை தூக்கிக் கொண்டு அவளுடன் சென்று வேனை எடுத்தான்.

பள்ளியைத் தாண்டி கொஞ்சம் தூரம் கடைத்தெரு பக்கமாக வேன் போன போது, “கொஞ்சம் வேனை நிறுத்துங்க. மெடிக்கல் ஷாப் போகணும்” என்றாள்.

“நீ இரு. என்ன மெடிசன்னு சொல்லு நான் வாங்கிட்டு வரேன்”. என்று சொல்லி வேனை ஓரமாக நிறுத்தினான்.

“இல்ல.. பரவாயில்ல. நானே வாங்கிக்கறேன்”  என்று சொல்லி அவன் அடுத்து பேசுமுன் கதவைத் திறந்து கொண்டு இறங்கி விட்டாள் மானு.

மெடிக்கல் கடை ஷோகேஸில் அடுக்கியிருந்த நாப்கின்களைப் பார்த்தவுடன், புரிந்து கொண்டான்.

ஸ்..ஸ்..அப்பா..   நாமெல்லாம் பிகர். அது இதுன்னு சைட் அடிக்கிற பொண்ணுங்களுக்கு மாசா மாசம் இப்படியெல்லாம் வலி வேதனை இருக்கா?

எல்லா பெண்களுக்காகவும் முதலில் யோசித்தவன், அப்போ அவங்கள நாம நல்லா நடத்தனும் இல்ல என்று நினைத்து, குட்டிமாவை ரொம்ப கேரிங்கா பார்த்துக்கணும் அந்த நாட்களில் என்றும் யோசித்த அவன் மனத்தைக் கடிவாளம் கொண்டு அடக்கினான்.

அதற்குள் கையில் கருப்பு கவருடன் அவள் வேனில் ஏறி அமர்ந்து கொள்ளவும் அவள் வீட்டில் வேனை நிறுத்தி, அவள் பேகை எடுத்துக் கொண்டு அவள் பின்னால் சென்றான்.

வாசலில் காத்துக் கொண்டிருந்தார் அவள் அம்மா.

“ஏண்டி இவ்வளவு லேட்?”

“லேபில் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. எனக்கு பயங்கர வயித்து வலிம்மா.. நீ வேற கேள்வியா கேக்காத!” அவள் வேதனையுடன் முனகலாக சொல்லி உள்ளே போக முற்பட,

“வயித்து வலியா? அப்ப தூரம் ஆகிட்டியா? ஏய். அப்ப பின்னாடி வழியா வீட்டுக்குள்ள வா!” என்று சொல்லி அவளை பின் வழியாக அனுப்பினார்.

பின் பேகுடன் நின்று கொண்டிருந்த ரித்துவைப் பார்த்து, “உள்ளே வாங்க தம்பி. ஆனா ஸ்க்ரீன் மேல படாம வாங்க” என்றார்.

“என்ன?” என்று அவன் கொஞ்சம் கோபமாக பார்த்த போது,

“நீங்க அவளைக் கூட்டிட்டு வரும்போது அவளைக் தொட்டு இருப்பீங்க.  அவளைத் தொட்டுட்டு இப்படி ஸ்க்ரீனையும் தொட்டுட்டா, அப்புறம் நான் அதையும் அலசி போட்டுட்டு இருக்கணும் அதான்!” என்றார் விளக்கமாக.

ரித்துவிற்கு கோபம் போய் கொஞ்சம் ஆச்சர்யம் வந்தது.

“என்ன? அவளைத் தொட்டு விட்டேனா?”

கொஞ்சம் தவறான ஆளாக தான் இருந்தால், இல்லை வேறு யாராவது ஆட்கள் இங்கு இருந்து அவர் வார்த்தையைக் கேட்டிருந்தால் எவ்வளவு தப்பா நினைச்சு இருப்பாங்க!

என்ன இந்த அம்மா இப்படி யோசிக்காம பேசுது. ஆளைப் பார்த்தால், தவறான பெண்மணி போலும் தெரியவில்லை!

குட்டிமாவைப் போலவே அவருக்கும் குழந்தைத் தனம் மாறாத முகம் தான்!

ஆனால் ஏன் இப்படி பேசுறாங்க? என்று அவன் குழம்பிய போது, அவனுக்கு சட்டென்று அவன் வேனில் வரும் பையன் சரத், மானு அம்மாவை ஒரு முறை அரை லூஸு என்று சொல்லி கிண்டல் அடித்ததும், அப்போது மானுவின் கண்கள் கொஞ்சம் கலங்கி “அப்படி சொல்லாதடா சரத்” என்று அவனிடம் கெஞ்சியதும் நினைவு வந்தது!

ஓ. மானுவின் அம்மாவிற்கு கொஞ்சம் மனப்பிரச்சினை இருக்கு போல. அது தான் இப்படி பேசுறாங்க. என்று நினைத்தவன், “சரி ஆண்ட்டி. நான் எதையும் தொடாம வந்து, இதோ இங்க வச்சுட்டுப் போறேன்” என்று சொல்லி பேகை வைத்து விட்டு சென்றான்.

பின் பக்கமாக உள்ளே வந்த மானு, அம்மா பேசியதைக் கேட்டு கொஞ்சம் அவஸ்தையும், கொஞ்சம் அவமானமும் அடைந்தபடி நின்றிருந்தவள் தவிப்புடன் அவன் முகம் பார்த்தாள்.

அவன் முகத்தில் நக்கலோ, நமுட்டு சிரிப்போ இல்லை! முதலில் கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்த்தவன், அவள் அப்பா மற்றும் மாமா அவள் அம்மாவிடம் பேசும் தொனியில் ரொம்பவும் கேரிங்காக பேசி சென்றது அவளுக்கு அவன் மேல் மிகவும் மரியாதையை ஏற்படுத்தி விட்டது!

பாமா இப்படி தான் எதாவது பேசி விடுவார் என்பதால் யாரையும் அதிகம் அவர்கள் வீட்டுக்கு அழைப்பதில்லை!

பாமாவிற்கு அவர் அம்மா என்ன சொல்லிக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாரோ அது தான்  அவர் மூளையில் பதிக்கப்பட்டிருக்கிறது.

சமையல், வீட்டை நேர்த்தியாகப் பார்த்துக் கொள்வது, மானுவைப் பார்த்துக் கொள்வது எல்லாம் சரியாக செய்பவர், இப்படி பேசும் போது மட்டும் தெளிவில்லாமல், எதையும் யோசிக்காது பேசி விடுவார்.

அப்படியான பொழுதுகள் அவருக்கு லூஸு என்ற பெயரையும் மானுவிற்கும் அவள் அப்பாவிற்கும் சங்கடத்தை ஏற்படுத்தி விடும்!

இப்போதும் அது போல நிலை தான் மானுவிற்கு!

ஆனால் ரித்து அதை தவறாக நினைக்க வில்லை என்பதும், அடுத்து  அவன் நடவடிக்கைகளினால் தெரிந்து கொண்ட மானுவின் மனதின் உள்ளே நுழைந்தான் ரித்து.

அங்கே மானுவின் மனதிலும் தான் நுழைந்து விட்டதை அறியாமல், இப்போது எதிர்ப்பதமாக யோசிக்க ஆரம்பித்தான் ரித்து.

அய்யோ. இந்த மாதிரி வெகுளியான மாமியார் எல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாதே!

என் வீட்டில் இருப்பது மொத்தமும் விஷம்!

என் மம்மியைத் தவிர.

மம்மியோ ஒரு நாளும் அந்த குடும்பத்தை விட்டு வெளியே வர மாட்டாங்க.

குட்டிமா பேமிலி எல்லாம் என் குடும்பத்தைத் தாங்காது!

அவர்கள் பாட்டுக்கு ஒரு தனியா கூடு கட்டி வாழ்றது மாதிரி வாழ்ந்துட்டு இருக்காங்க.

இதுல நாம போய் நம்மை லவ்வை சொல்லி, நம்ம முட்டாள் பீசு மாமன்களால அவங்களுக்கு ஏதாவது தொல்லை வந்துட்டா என்ன பண்றது!

அய்யோ. குட்டிமா வேற எங்கியாவது நல்ல அன்பான குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டு போகட்டும்! நாம விலகி இருக்கறது தான் என் குட்டிமாவுக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டான்.

ஆனால் குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது போல , காதலிப்பவனின் இந்த காதல் வேண்டாம் என்கிற வைராக்கியம் எல்லாம் அவன் காதலியைக் காணும் வரை தானே என்பதை அறியாமல் அன்று தூங்கினான் ரித்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!