Skip to content
Post Views: 2,378
வேளை 13
லாலா நடந்து அவனது அபார்ட்மெண்ட்டுக்கு வந்தான். நல்ல பசி, அதில் உடன் வேலைப்பார்க்கவும் நண்பர்கள் அழைக்கவும் உண்டுவிட்டான், இப்போது உறக்கம் கண்ணைக் கட்டியது.
Advertisement
“போனதும் தூங்கிடணும்” என்று தனக்குள் பேசியபடி அழைப்பு மணியை அழுத்தினான்.
உதயாவிற்குப் பாதி பசியே போய்விட்டது. ஆனாலும் லாலா வரவும் துரிதமாக ஒரு உற்சாகம் துளிர்விட்டது. சிறியதாக அவர்கள் வாங்கியிருந்த உணவு மேஜையில் சப்பாத்தி, பனீர் பட்டர் மசாலா, இருவருக்குமான தட்டு, தண்ணீர் எல்லாம் வைத்து உண்ண தயாரான நிலையில் வைத்திருந்தாள்.
Advertisement
Advertisement
உற்சாகமாக கதவைத் திறக்க, லாலாவும் சோர்வாக புன்னகைத்தான்.
“சாரி, லேட் ஆகிடுச்சு” என்றவன் அறைக்குள் சென்று உடைமாற்றும் வரை உதயா காத்திருந்தாள்.
Advertisement
“லாலா, பசிக்குது. சீக்கிரம் வாங்க” உதயா குரல் கொடுக்க, லாலா அறைக்குள் இருந்தபடியே
“நீ சாப்பிடு உதயா. நான் சாப்பிட்டேன், டயர்டா இருக்கு தூங்கப் போறேன்” என்றதும் உதயாவுக்கு சுருக்கென ஒரு உணர்வு.
ஒரு நொடி என்றாலும் ஒரு உச்சக்கட்ட எரிச்சல் தோன்றியது. கண்கள் தன்னிச்சையாக கலங்கின.
இருந்தாலும் சிறு நம்பிக்கையோடு அறைக்குள் சென்றவள் கண்டது நன்றாக மெத்தையில் சாய்ந்து படுத்திருந்த லாலாவைத்தான். அவன் இருக்கும் அறையில் கட்டில் கிடையாது, மெத்தை மட்டும் இருக்க அதில் காலட்டிக்கொண்டு கிடந்தான். ஷார்ட்ஸும், டீஷர்ட்டும் அணிந்திருந்தவன் ஏசியை ஆன் செய்துவிட்டு கண்மூடினான்.
இவள் கதவைத் திறக்கும் சத்தம் கேட்க,
“டக்குனு முடு உதயா, ஏசி போட்டிருக்கேன்” என்றதும் ஏசியின் குளிரை அவன் காப்பாற்ற நினைக்க, உதயாவோ தார் பாலைவனத்தின் உஷ்ணத்தில் இருந்தாள்.
“நம்ம ரெண்டு பேரும் சாப்பிடலாம்னு நான் சொல்லியிருந்தேனே லாலா. நீங்க சாப்பிட போறேன் சொல்லியிருந்தா நானும் ஆஃபிஸ்ல சாப்பிட்டு வந்திருப்பேனே. இவ்வளவு நேரம் வீட்டுக்கு வந்து கஷ்டப்பட்டு செஞ்சிருக்க மாட்டேனே” என்றவளுக்குத் தொண்டை அடைத்தது. பசியே போன உணர்வு.
“உனக்கு நான் சாப்பிடப் போறேன்னு மெசெஜ் போட்டேனே உதயா?” என்றான் இயல்பாக. கொஞ்சமும் தனக்காக மனைவி சமைத்தாளே, இன்னும் அவள் உண்ணவில்லையே என்ற உணர்வே இல்லை.
அதை உதய நிலாவால் உணர முடிய அந்த உணர்வு மிகுதியான வலியைக் கொடுத்தது.
“என்ன மெசெஜா? எப்போ?” என்று எரிச்சலாகக் கேட்டவள் விருட்டென வெளியேறி அவள் அலைப்பேசியைப் பார்க்க, ஐந்து நிமிடம் முன் அவன் அனுப்பிய செய்தி அவளுக்கு வந்து சேர்ந்திருந்தது.
“எது இப்போ அஞ்சு நிமிசம் முன்னாடி அனுப்பினதா?” என்று கேட்டு அவன் முகத்திற்கு நேரே தன் அலைப்பேசியைக் காட்டினாள்.
குழப்பமாக பார்த்த லாலா, “ஐயோ, இங்க பாரு நான் சாப்பிட போனப்போ மெசெஜ் அனுப்பினேன். க்ளாஸ் எடுக்கிறப்போ நெட் ஆஃப் பண்ணிடுவேன், அதான் உனக்கு அனுப்பின மெசெஜ் போகல. வீட்டுக்கு வந்ததும் வைஃபை கனெக்ட் ஆகி உனக்கு லேட்டா ரீசிவ் ஆகியிருக்கு. சாரி உதயா” என்றான் வருத்தமாக.
“தேங்க்ஸ்” என்ற உதயாவின் முகத்தில் வெறுமையான ஒரு பாவனை. உள்ளுக்குள் உணர்வுகளை அடக்கியிருந்தாள். அழுகை முட்டியது. விருட்டென அங்கிருந்து வெளியே வந்து உணவு மேஜை இருந்த இடத்திற்கு அருகே உட்கார்ந்தவாக்கில் அழத் தொடங்கினாள்.
அவளால் தாங்கவே முடியவில்லை. கோபம், கண்மண் தெரியாமல் ஒரு கோபம் வந்தது. ஆத்திரத்தில் அருகே கிடந்த தலையணையை வீசினாள். பின்னால் வந்த லாலா உதயாவைக் கண்டு பயந்தான்.
ஆனால் வார்த்தையில் அந்த எச்சரிக்கை உணர்வு இல்லை. ஒருவர் கோபமாக இருக்கும்போது பாகிஸ்தானில் மாட்டிய இந்திய உளவாளியைப் போல மிகுதியான கவனத்தோடும் எச்சரிக்கை உணர்வோடும் இருக்க வேண்டும். உதிர்க்கும் வார்த்தையிலும் கண் பாஷையிலும் கவனம் வேண்டும்.
சிறு பிசகு என்றாலும் போர் முழக்கம்.
“என்ன உதயா? இதுக்குப் போய் அழுவியா? சாரிம்மா. நான் மெசெஜ் போட்டேன், ஆனா வந்து சேரல, தப்பாகிடுச்சு. நீ அழாம சாப்பிடு” என்றான்.
“வாயை மூடிட்டு போ, எங்கிட்ட பேசாத” என்றவள் அழுகை நின்றபாடில்லை.
அழுதுகொண்டிருப்பவளை அப்படியே விட்டு எப்படி செல்ல முடியும்? உறக்கம் வேறு படுத்தியது. காலையில் வேலைகள் வரிசையாக இருந்தன.
“உதயா, அழாம வந்து சாப்பிடு” என்று மீண்டும் அவன் சொல்ல, அவளை பிடித்திருந்த அவன் கையைத் தட்டிவிட்டவள்,
“போயிடு லாலா” என்றாள் மிகுதியான கசப்போடு. லாலாவுக்கு எரிச்சலானது.
“என்னடி பிரச்சனை? பசிச்சது சாப்பிட்டுத் தொலைச்சிட்டேன், அதுவொரு பெரிய பிரச்சனையா உனக்கு? நீயும் சாப்பிடுனு மெசெஜ் போட்டேன். என் கிரகம் உனக்கு வந்து சேரல. அதை ஒரு விசயமாக்குவியா? மனுஷன் காலையில இருந்து க்ளாஸ் எடுத்து வந்தா நிம்மதியா தூங்க கூட முடியல” என்றதும் உதயாவுக்குக் கோபம் கரைத் தாண்டியது.
“போடா, போய் தூங்கு. யார் உன்னைக் கூப்பிட்டா? நான் கூப்பிட்டேனா? நான் சாப்பிட்டா என்ன இல்லன்னா உனக்கு என்ன அக்கறை? நீ சாப்பிட்டது தப்பில்லை, போதுமா? போ” என்றாள் அழுகையும் ஆத்திரமுமாக.
“ஏய்! உதயா!” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து தன்னைப் பார்க்க செய்தவன்,
“இப்படி அழுதிட்டு இருந்தா எனக்குக் கஷ்டமா இருக்காதா டி? ஏன் இப்படி பண்ற? உன்னை இப்படி விட்டு எனக்கு எப்படி தூங்க முடியும்?” என்றான் லாலா லஜபதி ராய்.
“எப்படியோ தூங்கு! போ. இங்க இருந்தா எதாவது சொல்லிடுவேன். போ” என்று கத்த, அந்த சத்தம் லாலாவுக்கு உவப்பாக இல்லை. அதுவும் உதயாவின் கண்ணீரும் கோபமும் கலந்த முகம் அவன் அதுவரை கண்டதே இல்லை. அவனை நடத்திய விதம் அது மிகவும் மோசமாக அவனை காயப்படுத்தியது.
அவள் வார்த்தையோ, அதில் இல்லாத மரியாதையோ லாலாவைப் பாதிக்கவில்லை. அவனை பாதித்தது பாவையின் பார்வை! பாசமற்ற ஒரு குற்றம் சாட்டும் ஒதுக்கமான பார்வை! அது குத்தியது.
“என்னடி சொல்லுவ? நானும் பொறுமையா இருந்தா ஓவரா பண்ற” என்று லாலாவும் அமெரிக்க வரி விதிப்பு போல எக்குத்தப்பாக எகிறினான்.
“உங்கிட்ட கேட்டுத்தானே நான் சமைச்சேன். சமைக்க சொல்லிட்டு நீ பாட்டுக்கு பசிக்குது சாப்பிட்டு வந்தேன்னா என்னடா நினைச்ச என்னை? எனக்கும் உன்னை மாதிரி டயர்டா இருக்காதா? நானும் மெட்ரோ மாறி அலைஞ்சு திரிஞ்சுதானே வேலை செஞ்சுட்டு வரேன். வந்தும் ஹாயா படுக்காம உனக்காக ஆசையா செஞ்சா நீ ஈசியா பசிச்சது சாப்பிட்டேனு சொல்ற? அட்லீஸ்ட் கால் பண்ணி சொல்ல முடியாதா? நான் போனையும் மெசெஜையும் பார்த்துட்டு இருந்தா வீட்ல வேலை ஆகிடுமா?”
“எனக்குப் பசி இல்லையா? உன்னோட சேர்ந்து ஒரு வேளையாச்சும் சாப்பிடலாம்னு நினைச்சேன்ல, என்னை சொல்லணும். எல்லாம் என் தப்பு” என்று அழுகையோடு தலையில் அடித்துக்கொண்டாள்.
என்னவோ அவளுக்கு உடல், உள்ளம் எல்லாம் துவண்டுவிட்டது. இவன் என்னை யோசிக்கவே இல்லையே என்ற எண்ணம் மிகுதியான வலியைக் கொடுத்திருக்க, என் அன்பு ஒருவழியா என்ற ஏமாற்றம் கொடுத்த அழுகை.
லாலாவுக்கு ‘அய்யோ சாமி’ என்ற மனநிலை. அவனால் உதயாவை சமாளிக்க முடியவில்லை, தெரியவில்லை. உதயா சாதாரணமாக, அமைதியாக இருப்பவளை நேசிக்கவும் புரிந்துகொள்ளவும் முடிபவனால் இப்படி அழுது, கோபம் கொள்பவளை கையாள முடியவில்லை.
அவனைப் பொருத்தவரையில் உதய நிலா. அழகான அமைதியான வானத்தை ஒளிரவைக்கும் நிலா! நிலாவிலும் மாசு உண்டு, அதில் தேய்ப்பிறையும் வளர்ப்பிறையும் உண்டு.
அப்படித்தானே மனிதர்களும்? ஒரே மனிதரை நீங்கள் திரும்ப சந்திப்பதே இல்லை என்பதுதான் உண்மை! ஒவ்வொருமுறையும் நீங்கள் ஒரே மனிதனின் வெவ்வேறு தோற்றங்களை சந்திப்பீர்கள்.
இன்று பார்த்த நீங்களும் நாளை பார்க்கும் நீங்களும் ஒன்றல்ல! ஒருவர்தான் ஆனாலும் ஒன்றல்ல! உங்கள் கன்னத்தில் சிறு பரு வந்திருக்கலாம், உங்களின் பின்னந்தலையில் ஒரு நரை முடி தோன்றியிருக்கலாம். உங்களைப் பார்த்து சாலையில் ஒரு குழந்தை சிரித்திருக்கலாம், அதன் சாயலால் உங்களிடமும் ஒரு சிரிப்பு தொற்றியிருக்கலாம்.
உங்கள் அலுவலகத்தில் உங்களை யாராவது திட்டியிருக்கலாம். அதன் பாரத்தை இப்போது நீங்கள் சுமக்கலாம். குழந்தை கொடுத்த சிரிப்பு தொலைந்திருக்கலாம்.
நித்தமும் ஒரு புது நாள், நித்தமும் புது மனிதராக நாம் பிறப்பெடுக்கிறோம் என்பதே நிதர்சனம், உண்மை!
உதயா நிலாவும் உணர்வுகள் நிறைந்த மனுஷியே. அவளால் எல்லா நேரமும் காதலைக் கொட்டிக்கொண்டிருக்க முடியாது! அவள் மனமும் அந்த காதலை ஏக்கத்தோடு எதிர்ப்பார்க்கும்.
சில நேரம் ஏக்கம் ஏமாற்றமாக மாறும்போது அவளுக்கு அழத்தோன்றும். அழும்போது முகம் மாறும்.
திருமணம் என்பது அரிதாரமில்லாத உங்களை நித்தமும் இன்னொருவரிடம் நீங்கள் வெளிப்படுத்துகிற ஒரு நிகழ்வு. திருமணத்தின் உண்மை, உன்னதம் எல்லாம் அதில் இருக்கிறது. உதயா அவளாக இருக்க வேண்டும், அவளுக்குள் இருக்கின்ற கோபம், தாபம், ஏக்கம், ஏமாற்றம், அழுகை, ஆத்திரம் எல்லாவற்றையும் மறைக்காமல் காட்ட வேண்டும்.
அப்படியில்லையென்றால் அதில் என்ன உண்மையும் உற்றிடமும்(இண்டிமசி) இருக்க போகிறது?
லாலாவுக்கு அந்த நேரம் இது எதுவும் புரியவில்லை. நாம் எல்லாருமே வாழ்க்கையை முதன்முறை வாழ்கின்ற சாதாரண மனிதர்கள் தானே?
பிழை செய்தும் பிடித்ததை செய்தும் கற்று கற்றுத்தானே நிற்க பழக வேண்டும். இதுவரை அவனும் ஒரே அறையில் ஒரு பெண்ணோடு வாழ்ந்ததில்லை.
மனிதன் வாழ்வதே ஒரு முறை என்றிருக்க, திருமணமும் அதில் அப்படியான ஒன்றுதானே?
ஒரு கணவனாக எப்படி இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அந்த புரிதலற்ற நிலை இன்னும் இன்னும் புரிதலின்மையைக் கொண்டு வந்தது.
லாலாவுக்கு ஒன்றே ஒன்றுதான்!
‘பசிச்சா சாப்பிட்டிருக்கலாமே’ என்ற எண்ணம். பிரச்சனையே இல்லையே என்றது அவன் அறிவு.
உதயாவுக்கு அது வெறும் உணவு சம்மந்தப்பட்டதாக இல்லை. உணர்வு சம்மந்தப்பட்டதாக இருந்தது.
உணவோடு அவனோடு இருக்கின்ற நேரத்தை அவள் விரும்பினாள்.
அவன் மீதான அவள் விருப்பத்தை, அவனுக்காக சிரத்தை எடுத்து செய்த உணவிலும், அந்த நேரத்தையும் அவள் காதலின் வெளிப்பாடாக நினைத்தாள்.
‘சாப்பிட வரேனு சொன்னேன். பசிச்சது வெளியே சாப்பிட்டேன். இப்போ என்ன அதை ஹாட்பாக்ஸ்ல போட்டா நாளைக்கு சாப்பிட போறேன். சப்பாத்தி கெட்டுப் போகாதுதானே? இதுக்கு ஏன் இவ இவ்வளவு அக்கப்போர் பண்ற?’ என்று நியாயமாக கேட்டது லாலா உள்ளம்.
‘என் நேரத்தை, என் உழைப்பை இவனுக்காக நான் கொடுத்திருக்க அதை எவ்வளவு அலட்சியமாக உதாசீனம் செய்கிறான்?’ என்பதே உதயாவின் உள்ள குமுறல்.
ஆணின் உலகும் பெண்ணின் உலகும் வெவ்வேறாக இருக்க, அதனை ஒரே உலகாக்குவதே காதலின் கரு.
“சரிடி, நாந்தான் தப்பு! இனிமே கால் பண்ணி சொல்றேன். இப்போ இதை ஏன் பெரிய பிரச்சனையாக்குற? தயவுசெஞ்சு சாப்பிடு உதயா” என்றான் கெஞ்சலும் கோபமும் கலந்த குரலில்.
“எனக்குப் பசிச்சா நான் சாப்பிட்டுப்பேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க” என்று கத்தினாள். லாலாவுக்குத் தலைவலித்தது.
உதயாவை நல்ல முதிர்ச்சியான அறிவுள்ள பெண் என்ற எண்ணத்தில் வைத்திருந்தவனுக்கு சிறு விஷயத்தை இப்படி பெரிதாக்குகிறாளே என்று ஏமாற்றமாகவும் எரிச்சலாகவும் இருந்தது.
“உதயா, சாரி ப்ளீஸ். சாப்பிடு” என்று அவன் மீண்டும் சொல்ல, அவனிடம் பதில் சொல்லாமல் எழுந்தவள் ஒரு சப்பாத்தியை எடுத்து வைத்து உண்ண முயன்றாள்.
அதற்கே அவளால் முடியவில்லை. இரவு நேரமானதால் உண்டான அயர்வு, சண்டையிட்ட உளைச்சல் எல்லாம் சேர உணவு இறங்கவில்லை. வீணாக்க விரும்பாதவள் ஒன்றை மட்டும் எப்படியோ விழுங்கி அதன்பின் மொத்தமாக ஒதுங்க வைத்தாள்.
லாலா அவள் செய்வதைப் பார்த்தபடியே தரையில் உட்கார்ந்திருந்தான்.
உதயா எல்லாம் எடுத்து வைத்தவள் அவளிருக்கும் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.
லாலாவும் அவன் தங்கும் அறையில் சென்று படுத்தான். ஆனால் உறக்கம் அருகில் வரவே இல்லை, சிறிது நேரத்தில் உதயாவின் அருகில் இருந்தான்.
அவளோ அவன் வந்ததை உணர்ந்தும் பேசவே இல்லை.
error: Content is protected !!