Skip to content
Post Views: 2,377
உதயாவின் கன்னங்களில் சூடாக கண்ணீர் இறங்கிக் கொண்டே இருந்தது. நெஞ்சை ஏதோ பாரம் அழுத்திய உணர்வு. அவள் லாலாவை விரும்பினாள், விரும்புகிறாள். அவனை திருமணத்திற்குக் கட்டாயப்படுத்தினாலும், விருப்பம் அது அவனுக்கும் இருந்ததுதானே?
எங்கும் தேனிலவு என்று வெளியூர் செல்லவில்லை. திருமணமானதில் இருந்து வெவ்வேறு அறை. எல்லாம் நினைக்க நினைக்க தன் முடிவு தவறோ என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை.
Advertisement
லாலா ஏன் தன்னை, தன் அன்பை, தன் ஏக்கத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்ற எரிச்சல் அதிகமானது. அவனுக்குப் பிடித்த மாதிரி வேலை இல்லை என்பது கவலையான ஒன்று, அவனது இலக்கை அடையவில்லை என்பது ஏமாற்றம்தான். அவனது மன உளைச்சலை உணர முடிந்தது.
Advertisement
ஆனால் சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாயின் அருகாமையையும் அனுபவிக்க முடியாமல் வாழ்வதே சிரமமான ஒரு சூழலில் வளர்ந்தவளுக்கு அன்பும் அரவணைப்பும் அத்தியாவசியத் தேவையாக இருந்தது.
Advertisement
ஒவ்வொரு முறையும் எனக்கு இது வேண்டும், என்னோடு இரு என்று கேட்டு கேட்டு அவனிடம் நிற்பதே பிடிக்கவில்லை.
Advertisement
ஏன் அவனுக்கே தோன்றவில்லை மனைவியோடு சாப்பிட வேண்டும் என்று? பசி இயற்கையான உணர்வு. பசித்தால் உண்டது தவறே இல்லை. இவளிடம் அதை பகிர்ந்திருக்க வேண்டும். இல்லையா அதில் சிறிதாவது வருந்தி,
‘பசிச்சது சாப்பிட்டேன். ஆனாலும் உன்னோட ஒரே ஒரு சாப்பாத்தி சாப்பிடுறேன் உதயா’ என்று சொல்லியிருக்கலாம்.
திருமண வாழ்க்கைக்குத் அத்தியாவசியத் தேவைகள் காதலும் காமமும் மட்டுமில்லை. அது அன்றாடத் தேவைகளாகவும் இருக்க முடியாது. ஆனால் கரிசனம், அக்கறை அது என்றைக்கும் தேவை.
இவையெல்லாம் காதல் என்ற உணர்வுக்குள் அடங்குபவையாக இருந்தாலுமே காதலில்லாத ஒரு கரிசனம், அக்கறை கூட சக மனிதனுக்குத் தேவை. எப்போதும் காதல், பிடித்தம் என்ற மன நிலையோடு வாழ்தல் முடியாது.
அந்த குறைந்தபட்ச அக்கறை, கரிசனம், நேரம் அதுதான் உதயாவின் தேவைகள். திருமண உறவு கொடுக்கல் வாங்கல் கணக்குத்தான். ஒருவரே எப்போதும் எல்லா நேரமும் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது, கூடாது!
அதற்காக சமமாக பிரித்து அதன்படி வாழ அது கணித சமன்பாடு அல்ல! கல்யாண கணக்குக் கொஞ்சம் வித்தியாசமானது, விசித்திரமானதும் கூட!
எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. கணவனுக்கும் மனைவிக்குமே அது ஒன்றாக இருக்காது. இருந்தும் பிரியமும் புரிதலும் மட்டுமே அதனை வழி நடத்திச் செல்ல உதவும்.
அந்த புரிதல் வர நாளெடுக்கும். அந்த நாட்களையும் நேரத்தையும் கொடுக்காதவன் மீது எப்படி கோபம் வராமல் இருக்கும்?
உதயாவின் கோபத்தை விட அழுகை லாலாவை அசைத்தது. அவன் உள்ளத்தின் ஓரம் எரிச்சல் கொஞ்சம் எட்டிப்பார்த்தாலும் அவளின் அழுத முகம் பார்க்க பாவமாக இருக்க,
“உதயா, என்னை பாரு” என்று அவளைத் தன் பக்கம் திருப்பினான்.
அவள் அசையாமல் இருக்க கட்டாயப்படுத்தித் தன் பக்கம் பார்க்க வைத்தவன்,
“நான் வேணும்னு பண்ணல, பசிச்சது சாப்பிட்டேன்” என்றான்.
“நான் நீங்க சாப்பிட்டதை தப்புன்னே சொல்லல” என்றாள் பல்லைக் கடித்து.
“சரி, என்ன தப்புனு சொல்லு” என்று கேட்க, அவள் விசித்திரமாக பார்த்தாள்.
“நிஜமாத்தான் கேட்குறேன், என்ன தப்புனு சொன்னா மாத்திக்கிறேன்” என்று பொறுமையாக சொல்ல, உதயா அழுகையோடு
“உங்களோட சாப்பிடலாம்னு தண்ணியைக் குடிச்சிட்டு இருந்தேன். உங்களுக்கு சாதாரணமா தெரியலாம், ஆனா எனக்கு அப்படி இல்லை லாலா” என்றபோதே கண்ணீர் வந்தது.
அவள் கன்னத்தை அவன் துடைக்க,
“அப்பா போன அப்புறம் அம்மா என்னைக் காப்பாத்தணும்னு வேலைன்னு ஓடிட்டே இருந்தாங்க. இரண்டு மூணு வீட்ல வேலை செஞ்சவங்களுக்கு சாப்பிடவே நேரமிருக்காது. அப்படியே இருந்தாலும் வேலை செய்ற வீட்ல சாப்பிடுவாங்க. நானா வந்து வீட்ல என்ன இருக்கோ போட்டு சாப்பிடுவேன்”
“டீவி இருந்தா அதுக்குக் காசு கட்டணும்னு அதையும் வித்துட்டோம். கொஞ்சம் பெரிசானதும் அம்மாவைப் பார்த்து சமைக்கக் கத்துக்கிட்டேன், ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்து நானே சமைச்சு சாப்பிடுவேன். தனியா உட்கார்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கு அது பிடிக்காம போச்சு” என்றபோது அவள் முகம் அந்த நினைவுகளை விரட்டித்தள்ளுவதை போல ஒரு தீவிரமான உணர்வில் இருந்தது.
லாலாவுக்கு அதைக் கேட்க கஷ்டமாக இருந்தது. அவனுக்கு டீ போடுவதே இப்போதுதான் தெரியும், எது வேண்டுமானாலும் அம்மா என்று குரல் கொடுத்தால் போதும். இல்லையா அவன் இலவச இணைப்பு தங்கை சரோஜினியைக் கேட்டால் திட்டியாவது செய்து கொடுப்பாள்.
லாலா அவன் வாழ்க்கையில் யாரையும் கவனித்ததே இல்லை. அவனை பார்ப்பதே அவனுக்குப் பெரிய கஷ்டம். இதில் உதயாவைப் பார்ப்பது இன்னும் அவனுக்கு வரவில்லை. லாலாவின் பிரச்சனையே அவனை சுற்றியே யோசிப்பதுதான்.
தனக்கு வேலை வந்துவிட்டால் உதயாவை கவனித்து விடலாம். ஆனால் அன்பு காட்ட, கரிசனம் காட்ட வேளை இருந்தால் போதும், வேலை மட்டும் முக்கியமில்லையே.
அவன் பிடித்த வேலை தேடிக்கொள்ளும் வேளையில் உதயாவிற்கு அவனைப் பிடிக்காமல் கூட போகலாமே?
அதை கொஞ்சமும் அவன் யோசிக்கவில்லை.
“சாரி உதயா” என்றான் மீண்டும் மீண்டும்.
“நிஜமா நீ இவ்வளவு ஃபீல் பண்ணுவன்னு தெரிஞ்சிருந்தா நான் சாப்பிட்டிருக்கவே மாட்டேன்” என்றதும் உதயா மீண்டும் அவள் நினைத்தையே சொன்னாள்.
“ஆமால்ல, கொஞ்சம் கம்மியா சாப்பிட்டிருக்கலாம். எனக்கு இது தோணவே இல்லை” என்றான் கொஞ்சம் வருத்தமாக.
“அதான் ஏன் தோணல லாலா?” என்று உதயா கேட்க, அவன் விழித்தான்.
“சாரி” என்றிட,
“மன்னிப்பு என்னைக்கும் பதிலாகாது லாலா. ஏன் உங்களுக்கு என்னோட இருக்கணும், பேசணும்னு தோணல. ஏற்கெனவே நான் இதுக்கு சண்டைப் போட்டிருக்கேன். காலையில நம்ம ஒன்னா சாப்பிடுறதில்லை, மதியமும் வேலைக்குப் போயிடுவோம். ஒருவேளை சாப்பாடு ஒன்னா உட்கார்ந்து உங்களோட பேசணும்னு எனக்கு ஆசை இருக்காதா?”
“என்ன பிரச்சனை? என்னைப் பிடிக்காம போச்சா? ஏன் என்னோட இருக்கணும்னு தோணல” என்றாள் ஆற்றாமையும் அழுகையும் சேர.
“போதும் உதயா!” என்று அதட்டலாக சொன்னவன்,
“உன்னைப் பிடிச்சதால ஒதுங்கிப் போறேன் தவிர பிடிக்காம இல்லை. உன்னோட இருக்கணும்னு எனக்கு மட்டும் ஆசை இல்லையா? நான் எனக்குள்ள போராடுறது ஏன் உனக்குப் புரியல” என்றவன் அவளை அவளின் அதிர்ந்த பார்வையோடு அள்ளிக்கொண்டான்.
“என்னால பக்கத்துல இருந்துட்டு தள்ளி இருக்க முடியல, எனக்கும் உன்னை இப்படி பிடிச்சிக்கணும், முத்தம் கொடுக்கணும்னு ஆசை இருக்காதா? நானும் உன்னைப் பிடிச்சுத்தானே கட்டிக்கிட்டேன், ஏன் டி இப்படி பேசுற?” என்றவன் இன்னும் இறுக்கமாக உதயாவை கட்டிக்கொண்டான்.
உதயா அவன் இறுக்கத்தில் திண்டாடிப்போனாள்.
“நான் உங்களை தள்ளி இருக்கவே சொல்லல லாலா” என்று அவன் அணைப்பிற்குப் பதில் அணைப்புத் தந்தவண்ணம் அவள் சொல்ல, லாலாவின் கட்டுப்பாடுகள் விடுதலை கொண்டன.
உதயாவின் நெருக்கம், இரவின் மயக்கம் அந்த அணைப்பு எல்லாம் அவனை முத்தமிட தூண்ட ‘ஒரே ஒரு முத்தம்தானே?’ என்று நினைத்து ஆவலாக அவள் கன்னத்தில் ஒன்று கொடுத்தான்.
‘எனக்கு இல்லாத கட்டுப்பாடா? ஒரே ஒரு ஹக், ஒரே ஒரு கிஸ்ஸு’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் உதயாவிடமும் அதையே சொல்ல, அவளும் அவனைப் புரிந்து தலையசைத்தாள்.
ஆனால் முத்தத்திற்கு ஒருமை கிடையாது போல, அது பாவையின் அருகில் பன்மையாக மட்டுமே இருக்க முத்தங்கள் முற்றுப்பெறவில்லை.
‘இன்னும் ஒன்னு’ என்றவன் இன்னுமின்னும் கேட்டதில் உதயா திண்டாடிப்போக, உறங்கப்போனவனின் உறக்கம் தூர போக உதயாவின் மீது உன்மத்தமானவன் மொத்தமாக அவளோடு இணைந்தான்.
லாலாவிற்கு அந்த இரவில் வேறெதுவும் தோன்றவில்லை. சமாதானம் செய்ய வந்தவன் தன் கட்டுப்பாட்டை சமாதானம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான். காதலின் அரங்கேற்ற வேளை அங்கே தொடங்கியது.
காலையில் உதயா எழுந்தவள் கணவனைப் பார்க்க லாலா புன்னகையோடு நின்றான்.
“அதுக்குள்ள கிளம்பியாச்சா?” என்று உதயா உறக்க கலக்கத்தில் கேட்க,
“இன்னிக்குக் காலையில க்ளாஸ் உதயா, நீ ரெஸ்ட் எடு. டீ போட்டிருக்கேன் ஒரு கொதி விட்டு வடிகட்டிக்கோ. சாப்பாடு செய்யத் தெரியல, கத்துக்கிறேன்” என்றான்.
உதயாவின் புன்னகை விரிய,
“இப்படித்தான் சிரிச்சிட்டே இருக்கணும். இன்னிக்கு நீ சமைக்க வேண்டாம், ரெண்டு பேரும் வெளியே போய் சாப்பிடலாம்” என்றான்.
உதயாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அவனை ரசித்துப் பார்க்க,
“இங்க பாரு இப்படியே பார்த்துட்டு இருக்கக் கூடாது! கட்டுப்பாடு முக்கியம், நேத்து நைட் நேத்தோடு போச்சு. லாலா’ன்னா டிசிப்ளின், டிசிப்ளின்னா லாலா” என்றதும் உதயா கிண்டலாக பார்க்க,
“ஹேய்! என்ன அப்படி பார்க்குற? பாவம் பாப்பா அழுதியேனு சமாதானம் செய்யப்போய் அப்படி இப்படி ஆகிடுச்சு. ஐ அம் லாலா லஜபதி ராய்! இப்போ டைம் ஆச்சு, பைய்” என்ற லாலா அவன் வெட்கத்தை உதட்டுக்குள் மறைத்தான்.
உதயாவின் அன்றையை காலையும் அதற்கடுத்த நாட்களும் நன்றாக சென்றன. அப்படியே சென்றிருக்கலாம், ஆனால் லாலாவின் வாயும், அவன் தாயும் இருக்க பிரச்சனைகளுக்குப் பஞ்சமென்ன?
error: Content is protected !!