Skip to content
Post Views: 2,885
பகலில் தூங்கிக் கொண்டிருந்தான் ரித்து.
தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு தன் நெஞ்சில் கொஞ்சம் பாரமாய் தெரிய கண் விழித்துப் பார்த்தான்.
ஒரு குழந்தையைப் போல அவன் நெஞ்சில் தலை வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் மானு.
புன்னகையுடன் அவளைப் பார்த்தவன், அவள் நெற்றியில் மெல்ல முத்தமிட்டு, “குட்டிமா எழுந்திரு!” என்றான்.
Advertisement
அவர்கள் இருவருக்கும் செமெஸ்டர் எக்ஸாம் நெருங்கிக் கொண்டிருந்தது.
ரித்து பைனல் இயர் என்பதால் அவனுக்கும் படிப்பதற்கும் நிறைய இருந்தது. மானுவுக்கும் இருந்தது.
அவள் வீட்டில் தனியாக படித்தால் போரடிக்கிறது, முன்பு போல கான்சென்ரேட் பண்ணிப் படிக்கவே முடியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
Advertisement
இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ள நேரம் இல்லாமல் ரித்துவிற்கும் வகுப்புகள் அதிகம் இருந்தன.
Advertisement
வெறும் வாட்ஸ்அப் சாட்டில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.
“அப்ப ஒண்ணு செய், இந்த சனிக்கிழமை என் வீட்டுக்கு வந்திடு. நீயும் நானும் க்ரூப் ஸ்டடி பண்ணலாம்” என்று அழைத்தான் மானு.
படிப்பு விசயத்தில் அவன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான்.
Advertisement
எனவே மானுவும் காலையிலேயே வந்து விட்டாள்.
அவள் அம்மாவிடம் ஸ்பெசல் கிளாஸ் என்று சொல்லி விட்டு!
வந்தவள், அவனோடு சேர்ந்து உட்கார்ந்து படித்தாள்.
இருவருக்கும் மதியம் உணவு அவன் வெளியில் போய் பார்சல் வாங்கி வந்தான்.
சாப்பிட்டு விட்டு, “குட்டிமா, நான் கொஞ்ச நேரம் இப்படி படுத்து தூங்குறேன். லஞ்ச் கொஞ்சம் ஹெவியா சாப்பிட்டு விட்டேன். எல்லாம் உன்னால தான்! எல்லாத்தையும் என் கிட்ட தள்ளி விட்டுட்ட. ஒரு மணி நேரம் தான் தூங்குவேன்.
நீ படிச்சுட்டு இரு. சரியா ஒரு மணி நேரம் கழிச்சு என்னை எழுப்பி விட்டுடு. எழுப்புறியா, இல்ல.. நான் போனில் அலாரம் செட் பண்ணட்டுமா?” என்று கேட்டான்.
“இல்ல. நானே உன்னை எழுப்பி விடுறேன். நீ தூங்கு” என்று சொன்னவள், இப்போது அவளும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள்!
“குட்டிமா எழுந்திரு”, என்று அவள் கன்னம் தட்டி மீண்டும் எழுப்பிட, ஒரு வழியாக கண் திறந்தாள் மானு.
“ஏண்டி. உன்கிட்ட நான் என்ன சொன்னேன், நீ என்ன பண்ணிட்டு இருக்க?
உன்னைப் போய் எழுப்ப சொல்லிட்டு தூங்குனேன் பாரு, என்னை சொல்லணும்!
எருமை.. எருமை. உன்னைப் படிக்க இங்க கூட்டிட்டு வந்தேனா, இல்ல இப்படி குறட்டை விட்டு தூங்கவா?” அவள் தலையில் குட்டினான் ரித்து.
“வலிக்குது ரித்து” என்று தலையை தடவிக் கொண்டவள்,
“நீ தூங்குறத பார்த்தா, எனக்கும் தூக்கம் வந்துச்சு, அதான் கொஞ்சம் கண் அசந்துட்டேன்.
வீட்டில் எங்கம்மா தூங்குறாங்க, மாத்திரைப் போட்டுட்டு.
அவங்க தூங்குறத பார்த்தா, எனக்கும் தூக்கம் வருதுன்னு தானே, நானே இங்க உன் கூட படிக்க வந்தேன். வந்தா, என்னை மட்டும் படிக்க சொல்லிட்டு, நீ தூங்குற!
அத பார்த்தா, எனக்கும் தூக்கம் வந்துச்சு. நீ ரொம்ப மோசம் ரித்து. இப்பெல்லாம் என்னை கொஞ்சம் கூட கொஞ்சறதே கிடையாது. எப்போ பார்த்தாலும் திட்டு தான் கொட்டு தான்! போ..” என்று அவள் மூக்கை உறிஞ்சிக் கொண்டு சொன்னாள்.
“ஹேய்.. ஹேய்.. அப்படி எல்லாம் இல்லடி குட்டிமா!
எனக்கு இப்பெல்லாம் உன் மேல ரொம்ப உரிமை தோணுது.
உன்னை என் பொண்டாட்டி போல தான் நினைக்குறேன்.
அதான் நீ எதாச்சும் சொதப்புனா கோபம் ரொம்ப வருது!
சரி. சரி. இனி திட்டறத கொறைச்சுக்கிறேன். மூஞ்சியை இப்படி தூக்கி வச்சுக்காத.
இப்ப என்ன என் குட்டிமாவ கொஞ்சணும் அவ்வளவு தானே!” என்று சொல்லி அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டவன், “இது எனக்கு” என்று சொல்லி அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டான்.
“ரொம்ப நாள் ஆச்சுல்ல குட்டிமா, நாம கிஸ் பண்ணி..” என்று சொல்லி, மீண்டும் முத்தமிட குனிய அவன் போன் அடித்தது.
“சை.. இது வேற நேரம் காலம் தெரியாது.. அடிக்கட்டும் போ.” என்று சொல்லி அவன் செயலை தொடர்ந்தான்.
ஆனால் போன் பண்ணியவர் விடுவதாக இல்லை. மீண்டும் ஒரு கால். பின் ஒரு மெசேஜ்.
“போய் அட்டென்ட் பண்ணு ரித்து” என்றாள் மானு.
“சரி” என்று சொல்லி அவளிடம் இருந்து விலகியவன், போனை எடுத்து “ஹலோ” என்றான் எரிச்சலாக.
“தம்பி. நீங்க ரித்தீஸ், சன் ஆப் சதீஷ் தானே?”
“ஆமா”.
“என் பேர் கருணாகரன், லாயர்.”
“யோவ்.. நீ கருணாகரன் இல்லை. கருணையே இல்லாத கரடி.” என்று மனதில் நினைத்துக் கொண்டு, “சொல்லுங்க” என்றான்.
“நான் உங்க அப்பா சதீஷோட பாமிலி லாயர். உங்கப்போவோட ப்ராபர்ட்டி பார்டிசன் விஷயமா உங்க கிட்ட பேசணும். என் ஆபீஸ் அட்ரஸ் அனுப்புறேன். வந்து மீட் பண்ணுங்க. ரொம்ப இம்பார்ட்டன்ட், அவசரமும் கூட!”
“சார். இந்த ப்ராபர்ட்டி விசயமா எல்லாம் நீங்க என் அம்மா கிட்ட பேசுங்களேன்”.
“இல்ல தம்பி. உங்கம்மாவை தான் காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணினோம்.
அவங்க இப்ப இங்க இல்ல சிங்கப்பூர்ல இருக்கங்களாம்.
அப்படியே ஈஸ்ட் ஏசியன் கண்ட்ரீஸ் பூராவும் இந்த மாசம் முழுக்க அவங்களுக்கு பிசினெஸ் ட்ரிப் இருக்காம். அவங்க கிட்ட பேச முடியாதுன்னு சொல்லிட்டாங்க.
அதுவில்லாம நீங்க இப்போ மேஜர். எனக்கு நீங்க மட்டும் இருந்தா போதும்.
அவங்க வரணும்னு தேவையில்ல.
சும்மா இன்பார்ம் பண்ண தான் அவங்க கிட்ட பேச நினைச்சேன். மத்த படி நீங்க இருந்தாலே போதும்”.
“ஓ. அப்படியா, சரி உங்க அட்ரஸ் அனுப்புங்க. நான் வந்து மீட் பண்றேன்”. சொல்லி போனை வைத்தான் ரித்து.
“யாரு ரித்து போனில்?” மானு கேட்க அவன் விபரம் சொன்னான்.
“இது வரைக்கும் அப்போவோட ரிலேடிவ்ஸ் யாருகிட்டயும் காண்டாக்ட் இல்ல. இப்ப தான் அவங்க சைட்ல இருந்து ஒரு போன். என்னனு தெரியல. போய் பார்த்தா தான் தெரியும்!”
“சரி வா. உன்னை உன்ன வீட்டுக் கிட்ட இறக்கி விடுறேன். படிக்கிற மூட் போய்டுச்சு. நைட் உடகார்ந்து தான் படிக்கணும்.
நீயும் போய் படி. ஓகேயா?”.
சொல்லி அவளை வீட்டில் விட்டு விட்டு வந்து அவன் அம்மாவுக்கு போன் பேச முயற்சித்தான்.
அவனுக்கும் போன் போகவில்லை.
ஒரு வழியாக அவரின் மேனேஜர் லைனில் வர,
“அண்ணா, அம்மாகிட்ட பேசணும். கொடுக்கறீங்களா?” என்று கேட்க,
“இல்ல தம்பி அம்மா முக்கியமான மீட்டிங்கில் இருக்காங்க. அவங்க போனே என்கிட்ட தான் இருக்கு! விசயம் என்னன்னு என்கிட்ட சொல்லலாம்னா, சொல்லுங்க, நான் மேடம் கிட்ட கன்வே பண்ணிடறேன், ப்ரேக் கிடைச்சு அவங்க வரும் போது”.
“ம்.ம்.” என்று கொஞ்சம் யோசித்து விட்டு, “எங்க அப்பாவோட ப்ராபர்ட்டி விஷயமா அவங்க சைட்ல இருந்து ஒருத்தர் என்னை காண்டாக்ட் பண்ணினார். அத அவங்களுக்கு தெரியப் படுத்தணும். அவ்வளவு தான்”. என்று அவரிடம் விவரம் சொன்னான் ரித்து.
பிற்பகல் அவரிடமிருந்து தகவல் வந்தது. “நீங்க சொன்ன விஷயம் பத்தி அவங்க கிட்ட சொல்லிட்டேன். ஆனா மேடம் இப்போ அவசரமா அடுத்த மீட்டிங் போய்ட்டாங்க. மீட்டிங் முடிஞ்சுதக்கு அப்புறம் வந்து உங்க கிட்ட பேசுறேன் என்று சொன்னாங்க.
ஏதாவது ரொம்ப அர்ஜென்ட் என்றால், உங்க பாமிலி லாயர் ரவி சாரை காண்டாக்ட் பண்ண சொன்னாங்க”. என்று சொன்னார் அவன் அம்மாவின் மேனேஜர்.
“சரி” என்று சொல்லி விட்டு அவன் அம்மாவின் போனுக்காக காத்திருந்தான் ரித்து.
அதற்குள் கருணாகரன் ஆபிசில் இருந்து மூன்று முறை போன் செய்து விட்டார்கள்.
வேறு வழியில்லாது ரித்து அவர்கள் லாயர் ரவியைத் தொடர்பு கொண்டான்.
ஆனால் அவரும் ஊரில் இல்லை. டெல்லி சென்று இருந்தார்.
அவரின் ஜூனியர் விஷ்வா தான் இருந்தான் ஆபிசில். அவனுக்கும் அவன் குடும்ப விவரங்கள் பெரும்பாலும் தெரியும் என்பதால், அவன் துணைக்கு வந்தான் ரித்துவோடு.
கருணாகரன் கேட்ட டாகுமென்ட்ஸ் எல்லாம் ரித்துவிடமிருந்து பெற்று கொடுத்தான் விஷ்வா.
சதீஷ் குடும்ப பொது சொத்து ஒன்று, ஒரு பெரிய வீடு பிரிக்கப்படாமல், பராமரிக்கப் படாமலும் இருந்து வந்தது, பல வருடங்களாக!
பொது சொத்து என்பதால் ஒரு சுண்ணாம்புக்கு கூட வழியில்லாமல் தான் களையிழந்து இருந்தது!
திருச்சியிலிருந்து கரூர் செல்லும் ரோட்டில் இருந்த அதன் அருகில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளைத் திறக்க, அந்த ஏரியாவுக்கு கொம்பு முளைத்து விட்டது போல அதன் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கி, ரியல் எஸ்டேட் காரர்கள் கண்ணில் இந்த வீடும் பட்டு விட்டது.
பத்துக்கும் மேற்பட்டவர்கள் அதற்கு வாரிசு என்றிருக்க, ஒரு கட்டுமான நிறுவனம் இறங்கி வேலைப் பார்த்தது.
எல்லா வாரிசுகளிடமும் பேசி, ஒருங்கிணைத்து, அதில் கொஞ்சம் பணத் தேவை உள்ளவருக்கு ஆசைக் காட்டி, ஜாயின்ட் வென்ச்சர்ஸ் டீல் போட்டு, மற்ற அப்ரூவல்கள் எல்லாம் அவர்கள் செல்வாக்கில் விரைந்து வாங்கி, ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் ஒன்றை கட்ட ப்ளான் செய்து விட்டார்கள்.
ரித்துவின் அப்பா, சதீஸ் இறந்து விட்டதால் அவர் பங்கு அவரின் வாரிசு ரித்துவுக்கு.
இருபது லட்சம் பணமாகவும் அவனுக்கு ஒரு முதல் தளத்தில் ஒரு பிளாட்டும் ஒரு பங்காக தந்து, அவனிடமும் சம்மதம் வாங்குவதற்கான டீல் பேச தான் அவர்கள் தரப்பு லாயர் கருணாகரன் ரித்துவைத் தேடிக் கண்டுபிடித்து பேசியது!
கூட வந்த விஷ்வா எல்லா டாகுமென்ட்ஸ்களையும் செக் செய்து விட்டான்.
அவன் சரி என்று ஒப்பீனியன் கொடுத்த பின், ரித்துவும் கருணாகரனிடம் சம்மதம் சொல்லி, ரிஜிஸ்ட்ரேசனின் போது தான் கண்டிப்பாக வருவதாக சொல்லி வாக்கு கொடுத்து விட்டு வந்து விட்டான்.
கூட வந்த விஷ்வா முகத்தில் மட்டும் இன்னமும் கொஞ்சம் குழப்ப ரேகைகளைக் கண்டவன், “என்ன ஏதாச்சும் வில்லங்கம் இருக்கா? இருந்தா இப்ப கூட ஒண்ணும் கெட்டுப் போகல, மம்மி வந்தப் பிறகு பார்த்துக்கலாம்” என்றான் ரித்து.
“இல்ல. அவங்க சைட் எல்லாம் கிளியர் தான்! நம்ம சைட் தான் கொஞ்சம் குழப்பம். சீனியர் வந்ததும் கிளியர் பண்ணிக்கிறேன். ரொம்ப அர்ஜென்டான விஷயம் ஒண்ணும் இல்ல அது!” என்று சொல்லி கிளம்பி சென்றான் விஷ்வா..
“ஓகே” என்று தோளைக் குலுக்கிக் கொண்டு அவனிடம் விடைப் பெற்று சென்றான் ரித்து.
மனதில் கொஞ்சம் உற்சாகம் பிறந்தது.
யார் என்ன சொல்லிக் கொண்டு இருந்தாலும், பணம் நிச்சயம் ஒரு மனிதனுக்குள் சந்தோசத்தைக் கொடுக்க தான் செய்கிறது! சொத்து வரப் போவது என்பது அவனுக்குள் கொஞ்சம் தன்னம்பிக்கையை வளர்த்தது.
ஒருவேளை அவன் மம்மி, குட்டிமாவை ஏற்றுக் கொள்ளாவிட்டால், வழக்கம் போல தான் ஏதாவது ஸ்டன்ட் அடிக்க வேண்டியிருக்கும், அவர் சம்மதத்தைப் பெற!
வீட்டை விட்டு வெளியில் வந்து வேலைக்கு சென்று அவளைக் காப்பாற்ற வேண்டியிருந்தாலும் வரலாம்! சொல்லுவதற்கில்லை!
முன்பு இதே போல ஸ்டன்ட் செய்த போது, அவன் தனி மனிதன். பாச்சிலர்.
ஆனால் குட்டிமாவையும் வெளியே அழைத்து வந்து விட்டு அவளைக் கஷ்டப்பட விட்டு விடக் கூடாது!
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த ரித்துவிற்கு, அவனைத் தேடிக் கொண்டு வந்த இந்த சொத்து மகிழ்ச்சியையே அளித்தது!
அதே மகிழ்ச்சியுடன் கடமை தவறாது செமஸ்டர் எக்ஸாமுக்கு படிக்கவும் செய்தான்!
ஒரு வாரம் சென்று, சதீஸ் மற்ற உறவினர் தரப்பில் எல்லோரும் வந்து விட, இவனும் போய் கையெழுத்துப் போட்டான்.
அவனிடம் ஒரு டாகுமென்ட் காபியும் தரப்பட்டது. பாதி பணம் கேஷாகவும் பாதி பணம் டிடி ஆகவும் கொடுத்தார்கள்.
ஏற்கனவே கட்டுமான வேலைகள் எல்லாம் கிட்டதட்ட முடிந்தே இருந்தது!
அடுத்த வாரமே அவனின் பிளாட் சாவியை அவனிடம் கொடுத்து விட்டார்கள்.
ரித்து அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லி, சாவியை அவருடன் கொடுக்க எண்ணிக் கொண்டிருக்க, அதற்குள் அவன் அம்மாவின் பிசினஸ் ட்ரிப் நீண்டு கொண்டே போய்க் கொண்டிருந்தது!
பணத்தை மட்டும் நம்பிக்கையான ஒரு தொழில் முறை நண்பரிடம் சொல்லி ஒரு நிலத்தில் இன்வெஸ்ட் பண்ண சொல்லி போனில் சொல்லி விட்டு, அவன் அம்மா அடுத்த நாட்டுக்கு கிளம்பி போய் விட்டார்.
ரித்து அந்த ரியல் எஸ்டேட் நபரிடம் பேசினான்.
“ரெண்டே வருஷம் தம்பி, இது டபுள் ஆகிடும் தம்பி! அப்படியே இல்லைனாலும் குறைஞ்சது நாப்பது பர்சண்டேஜ் ஆவது விலை ஏறிடும்!” என்று உற்சாகமாக சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.
அவரது உற்சாகம் அவனையும் தொற்றிக் கொண்டது. எதிர்காலம் பற்றிய மிகுந்த நம்பிக்கையையும் கொடுத்தது!
குட்டிமாவுடன் அவன் கல்யாணம் கிட்ட தட்ட உறுதிதான். மம்மி மட்டும் சம்மதித்தால் போதும். மாமன்களைப் பற்றியெல்லாம் அவனுக்கு கவலை இல்லை!
முன்பு பாபு அண்ணாவிடம் வேலைக்கு போய் ஸ்டன்ட் அடித்தது போல ஏதாச்சும் செஞ்சு மம்மியை சம்மதிக்க வச்சுடலாம்! அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை!
குட்டிமா அப்பாவிற்கும் தன் மேல் நல்ல அபிப்ராயம் தான் இருக்கிறது. அவரையும் எப்படியும் சம்மதிக்க வச்சுடலாம்!
ரித்து மிகுந்த நம்பிக்கையோடு இருந்தான்.
அதே நம்பிக்கை, மற்றும் சந்தோசத்துடன் கல்லூரி சென்றான்.
மானுவை சந்தித்தான். அவளிடம் பேசும் போது அவன் கன்னத்தில் இருந்த சின்ன காயம் அவளின் கண்ணில் பட்டு அவள் கவலைப் பட,
“அத விடு குட்டிமா, ஷேவ் பண்ணும் போது லேசா காயம் பட்டுடுச்சு!” என்றிட,
அவள் கவனம் முழுவதும் அவன் காயத்தின் மேல் தான்!
அவன் சொன்ன சொத்து விவரங்களையோ, எதிர்கால ப்ளான்களையோ அவள் காதில் கூட வாங்க வில்லை!
“மருந்து போட்டியா?”
“ஏய். நான் எவ்வளவு முக்கியமான விஷயம் பத்தி சொல்லிட்டு இருக்கே, நீ இந்த சின்ன காயத்தைப் பத்தியே கேட்டுகிட்டு இருக்க! ரொம்ப அக்கறையா இருந்தா நீ மருந்து போட்டு விடு!”
“கொடு. போட்டு விடறேன்” என்றாள் மானுவும் அவன் காயத்தை விட்டு இன்னும் கண்களை எடுக்காமல்!
“ம்ம். அத வீட்டிலயே வச்சுட்டு வந்துட்டேன். காலேஜ் முடிஞ்சு கூடவே வந்து போட்டு விட்டுட்டு போ! பேசறா பார்! நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், அத கவனிக்காம..” ரித்து செல்லமாக கோபப்பட்டான் அவன் குட்டிமாவிடம்!
ஆனால் சொன்னது போலவே கல்லூரி முடிந்தவுடன், அவனைத் தேடிக் கொண்டு வந்தாள் மானு.
“நானும் வரேன், உன் வீட்டுக்கு!”
“எதுக்கு?”
“உனக்கு ஆயின்மென்ட் போட்டுவிட தான்!”
“ஓ. அப்படியா. சரி ஏறு” என்று கொஞ்சம் விஷமமாக சிரித்துக் கொண்டே சொல்லி அவளையும் அவன் வீட்டுக்குக் கூட்டிப் போனான் ரித்து!
என் மூட் பத்தி தெரியாம, வாண்டடா வண்டியில ஏறுது பாரு லூஸு என்று சிரித்துக் கொண்டே அவளை அவன் வீட்டுக்கு கூட்டிப் போனான்.
லிப்ட்டில் போகும் போது அவர்களுடன் அவன் மாமாவின் நண்பரும் ஏறினார்.
இன்னும் இரண்டு பேரும் லிப்டில் ஏற, தன்னிச்சையாக ரித்துவின் முழங்கையோடு தன் கையை இணைத்துக் கொண்டு ஒதுங்கி நின்றாள் மானு.
அவர்கள் நெருக்கத்தை அவரும் நன்றாக கவனித்து விட்டே சென்றார்!
வீட்டுக்குள் போனவுடன் “மருந்து எங்கே?” என்று மானு கேட்டாள்.
“ம்ம். இங்கே!” என்று அவள் உதட்டைக் காட்டினான் ரித்து.
“ஏய்.. அப்ப கிஸ் பண்ண தான் உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தியா?” மானு செல்லமாக கோபம் கொண்டு அவன் நெஞ்சில் குத்தினாள்.
அவளை இறுக கட்டிக் கொண்டு, “நீயா தான் வாண்டடா வண்டியில ஏறின, ஐயாவோட மூட் தெரியாம! நான் என்ன பண்ணட்டும்?” என்று குறும்பாக சொல்லி அவளின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டு, மேலும் முன்னேறினான்!
வழக்கம் போல இல்லாமல் கொஞ்சம் அதிகப்படியாக இருந்தது அவனின் செயல்கள்!
“என்ன ரித்து, கொஞ்சம் உன் கண்ரோல் விட்டுட்ட போல?” மானு அவனை விட்டு விலகாமலே கேட்டாள்.
“ம்ம். ஆமா, நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். ரொம்ப கான்பிடண்டா இருக்கேன்! இன்னும் ரெண்டே வருஷம்! உன் படிப்பு முடிஞ்சவுடன், நாம கல்யாணம் பண்ணிக்கிறோம், குட்டிமா என் மம்மிய பாட்டிமா ஆக்குறா. ஓகே!” என்று சொல்லி அவளின் நெற்றியில் முட்டினான் ரித்து உற்சாகமாக!
“ஆனா, நீ இன்னிக்கு செய்யறது எல்லாம் ரெண்டு வருஷம் எல்லாம் பொறுமையாய் இருக்க மாட்டேன்னு தான் சொல்ல வைக்குது!”
அவள் நாக்கில் என்ன இருந்ததோ அன்று, அது தான் பலித்தது அடுத்த சில மாதங்களில்!
“ஆமா, நீ சொல்றது சரி தான். நீ போடி இங்கிருந்து மொதல்ல! நல்லா ஸெல்ப் கண்ரோலோட இருந்த பையனை, மாத்திக்கிட்டு!” என்று அவளிடம் அவனும் செல்லமாக கோபித்துக் கொண்டு, அவளை விலக்கினான்.
பின் அவளை வீட்டில் கொண்டு போய் விட்டான்.
போகும் போது ஒரு சிக்னலில் பைக்கை நிறுத்த வேண்டியிருக்க, ரித்து அவன் ஹெல்மெட்டை கழற்றிவிட்டு கர்ச்சீப் கொண்டு அவன் முகம் துடைத்தான்.
அப்போது எதிர்புறம் சிக்னலில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்ஸில் டிரைவர் சீட்டில் இருந்த மானுவின் அப்பா மணி அவனை பார்த்து விட்டார்! அவனை மட்டுமில்லாமல், பின் சீட்டில் அவன் முதுகின் மேல் சாய்ந்து கொண்டு ஏறக்குறைய அவனைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த மானுவையும்!
அவள் தன் முகத்தை முழுவதும் துப்பட்டாக் கொண்டு மூடியிருந்தாலும், அவளின் கால்கள் அவளைப் பெற்றவருக்குத் தெரியாதா? அவளின் கால்களும், அதில் அவள் அணிந்திருந்த கொலுசும், அவர் முந்தைய வாரம் தான் வாங்கிக் கொடுத்து அவள் போட்டிருந்த செருப்பும்!
அவருக்கு பயங்கர அதிர்ச்சி!
அதிலிருந்து மீளாமல் அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிக்னல் மாறி அவர்கள் சென்று விட்டார்கள்.
ரித்து வீட்டுக்குப் போய், ரிலாக்ஸ் ஆகி விட்டு, அவன் மம்மியின் போன் காலுக்கு காத்திருந்தான்.
போன் வந்தது. மம்மியின் போனை எதிர்பார்த்திருந்தவனுக்கு, வந்தது மானுவிடம் இருந்து போன்!
“ரித்து.. ரித்து.. “அவளின் பதட்டக் குரல் கேட்டது!
“என்ன குட்டிமா என்ன ஆச்சு, ஏன் இப்படி டென்சனா பேசுற?”
“ரித்து.. அப்பாக்கு.. அப்பாக்கு ஹார்ட் அட்டாக்காம்”.
மானுவின் பதட்ட குரலில் அதிர்ந்து நின்றான் ரித்து!
error: Content is protected !!