Skip to content
Post Views: 2,880
அத்தியாயம் 31
கதிர் கண்ணம்மை மகன், ராஜவேல் என்ற வேல் இனியன் மொட்டை அடித்து தொட்டில் கட்டும் விழா இவர்கள் குடும்ப வழக்கபடி சிறப்பாக முடிந்தது. கண்ணம்மையின் அப்பா அம்மா தங்கை மூவரும் அன்று மாலை இவர்கள் வீட்டில் தான் இருந்தனர்.
Advertisement
மாலை அனைவரும் இலகுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பாலுவும் முத்துவும் தவிர மற்றவர்கள் அனைவரும் இருந்தனர். பாலு மேல் படிப்பிற்காக இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறான்.
“சேந்தன், ஒரு முருகன் பாட்டு பாடு ராசா.. கேக்கனும் போல இருக்கு” என்றார் முருகம்மை ஆச்சி.
Advertisement
Advertisement
“மருதமலை மாமணியே முருகய்யா… “ என்று உடனே பாடினான் சேந்தன்.
“தமிழு நீ ஒரு பாட்டு பாடு” என்றார் அன்னம். உடனே தமிழினியும் தன் மழலை குரலில் “கந்தனுக்கு வேல் வேல்.. முருகனுக்கு வேல் வேல்..” என்று பாடினாள்.
Advertisement
உடனே அவளை தொடர்ந்து மகிழினி “குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்..” என்று பாட துவங்கினாள்.
முத்து ஆச்சி, “நாளைக்கு வேல் இனியனும் இப்படி பாடனும். கேக்க ரெண்டு காதும் இல்ல போதலை. பிள்ளைகளுக்கு சுத்தி போடனும்.. நானும் ரெண்டை பெத்தேன்… எப்ப பாரு ஹிந்தி சீரியலும் வம்பு பேச்சும் தான்..” என்று நொடித்துக்கொண்டார்.
சரியாக அப்பொழுது “கண்ணும் கண்ணும் நோக்கியா… “ என்று பாடிக்கொண்டு வந்து அமர்ந்தாள் கண்ணம்மை.
முத்து ஆச்சி மகளை கண்டனமாக பார்த்தார். அதை எல்லாம் கண்டுக்காமல், “அப்பறம் கொழுந்தனாரே.. என்ன சங்கதி?” என்றாள் சுப்புவை பார்த்து.
“ஆத்தி… அண்ணி, இன்னிக்கு நான் தான் உங்க டார்கெட்டா? விட்டுடுங்க அண்ணி” என்று அலறினான்.
“போலீஸ்காரரே, பாட்டு எப்படி?” என்றாள் கதிரை பார்த்து. கண்ணம்மை சொன்ன குறிப்பை சரியாக கேட்ச் பிடித்து விட்டான் கதிர்.
“போச்சு.. புருசனும் பொண்டாட்டியும் யார் தலையை உருட்ட போகுதோ இன்னிக்கு” என்றான் வீரா நல்லம்மையிடம்.
“அநேகமா சுப்பு தம்பி தான்னு நினைக்கிறேன்” என்றாள் நல்லம்மை.
“ஏத்தா சௌந்தரம், படிப்பு முடிஞ்சதா? வேலைக்கு சேரனுமா?” என்றார் முருகம்மை ஆச்சி கண்ணம்மையின் தங்கை சௌந்தரம் என்ற சௌந்தர்யாவிடம்.
“நல்லா கேளுங்க அத்தை.. படிச்சிட்டு வேலைக்கு போக சொன்னா, சீரியல்ல நடிக்க போறேன்னு நிக்குறா.. எல்லாம் பெருசு பண்ண வேலை.. சீரியல்லா பார்த்து கெடுத்து வெச்சிருக்கா சின்னத்த.. நாட்டுல பொம்பளை பிள்ளைங்க எப்படி முன்னோக்கி இருக்குங்க.. இவ சீரியல் நடிக்கிறேன்னு நிக்குறா” என்று பொங்கி விட்டார் சொக்கலிங்கம்.
“ஆமா, தமிழ் சீரியல் தானே? இல்ல ஹிந்தி சீரியல்லா?” என்றார் தெய்வா.
‘நீங்களுமா?’ என்று பார்த்தார் சொக்கலிங்கம்.
“பிடிச்ச விஷயத்தை செய்றதுல தப்பில்லை மாப்பிள்ளை. பிடிச்ச விஷயத்தை முழு மனசா செய்யுனும்.. அஞ்சு விரலும் ஒன்னு போலவா இருக்கு? ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி” என்றார் முருகம்மை ஆச்சி.
அந்த காலத்து பெண்மணியிடம் எவ்வளவு முற்போக்கு எண்ணம், என்று வியப்பாக இருந்தது சொக்கலிங்கத்திற்கு.
“ஒரு தமிழ் வெப் செரீஸ்ல சின்ன கேரக்டர் கிடைச்சிருக்கு. நல்லா செஞ்சா பெரிய வாய்ப்பு கிடைக்கும்” என்றாள் சௌந்தரம்.
“சூப்பர் சௌந்தர்யா.. முயற்சி செய்ங்க. நிறைய வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துக்கள்” என்றான் சுப்பு உடனே.
“தேங்க்ஸ்.. “ என்றாள் சௌந்தர்யா முகமெல்லாம் பல்லாக.
அனைவரும் இப்பொழுது சுப்புவை குறுகுறுவென பார்த்தனர். சுப்புவின் பார்வையும் சௌந்தர்யாவின் பார்வையும் அவ்வப்பொழுது சந்தித்து கொண்டிருந்தது. இதை குறிப்பாக தான் கண்ணம்மை கணவரிடம் கூறினாள்.
“விசா.. எங்க மம்மி டாடி லவ் மாதிரி இன்னொரு காதல் மலரும் போல தெரியுதே” என்றான் கதிர் விசாகாவிடம் மெதுவாக.
“அப்படி தான் தெரியுது.. அவங்க எல்லாரும் வீட்டுக்கு போனப்பறம் பேசுவோம் அண்ணே” என்றாள் விசாகா பதிலுக்கு.
அன்று இரவு குடும்பத்தினர் மட்டும் இருக்கும் போது, “ஏன் மம்மி, பெரிய மம்மி கல்யாணத்துல , அப்பாவை சைட் அடிச்சு லவ் பண்ணினீயே..” என்று ஆரம்பித்தான் கதிர்.
“ஓ, அப்படியா? இன்ட்டர்ஸ்ட்டிங்… அத்தை உங்க லவ் ஸ்டோரி இன்னும் என்கிட்ட சொல்லவே இல்லையே?” என்று வந்தாள் கண்ணம்மை.
“டேய், ஏன்டா? நான் உன் அம்மாடா ” என்றார் தெய்வா பாவமாக.
“கண்ணு, அதே மாதிரி தான் இப்ப புது கதை ஓடுதே, அதை பாப்போம்… ஓல்ட் ஸ்டோரி எதுக்கு?” என்றான் கதிர்.
“என்னடா சொல்ற?” என்றார் ராஜா இடையிட்டு.
“நம்ம சுப்பு, சௌந்தர்யாவை சைட் அடிக்கிற மாதிரி இருக்கு” என்று விஷயத்தை போட்டு உடைத்தான் கதிர்.
“என்ன பேச்சு இது கதிர், எல்லாம் விளையாட்டு பேச்சு இல்லை“ என்று கண்டித்தார் சாலா.
“என்ன சுப்பு? உனக்கு விருப்பமா?” என்றார் அருண் சுப்புவிடம்.
“என்ன சுப்பு, உனக்கு விருப்பமா? இல்ல ரெண்டு பேருக்கும் இஷ்டமா?” என்றார் சுந்தரம்.
அனைவரது பார்வையும் சுப்புவை சுற்றியது.
“இஷ்டம் அப்படியெல்லாம் இல்ல.. இன்னிக்கு தான் ஒரு தடவை பேசினேன். வாழ்த்து தானே சொன்னேன்” என்றான் சுப்பு.
“அடப்பாவி முழு பூசணிக்காயை சோத்துல மறைச்சிட்டானே” என்றான் கதிர் விசாவிடம்.
“அடுத்து உங்க கல்யாணம் தானே சுப்பு அண்ணா.. உங்களுக்கு பிடிச்சா சௌந்தர்யாவையே கேட்கலாமே” என்றாள் விசாகா. அவளுக்கு அண்ணனின் மனது புரிந்தது.
“பேசலாமே, பெரியவர்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே” என்றான் பவ்வியமாக.
“அப்படி ஒன்னும் பெரியவங்களுக்காக நீங்க என் தங்கச்சியை கல்யாணம் பண்ண வேணாம், கொழுந்தனாரே” என்றாள் கண்ணம்மை.
அதை கேட்டு, திரு திரு என முழித்தான் சுப்பு. சுப்புவின் திருட்டு முழி அனைவருக்கும் அவனது விருப்பத்தை கூறிவிட்டது.
சுப்புவின் விருப்பம் தெரிந்தவுடன் பெரியவர்கள் பேசி மகிழ்ச்சியுடனே இருவர் திருமணத்தையும் நிச்சயம் செய்தனர். அடுத்த மூன்று மாதங்களில் திருமண தேதியும் குறித்தனர்.
இதற்கிடையில் கதிருக்கு புனே நகருக்கு பணி மாற்றம் கிடைத்திருந்தது. நேர்மையான அதிகாரிகளுக்கு பணி மாற்றம் அடிக்கடி வருவது இயல்பு தானே. ஆனால், இதை கேட்டதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்தது. அனைவரும் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றுவிட்டனர்.
“நம்ம மேல எவ்வளவு பாசம் பார்த்தீங்களா, போலீஸ்காரரே.. யாராலயும் பேசக்கூட முடியலை?” என்று கணவனிடம் தொடங்கி, “கவலை படாதீங்க.. பிளைட்ல வந்தா ரெண்டு மணிநேரத்துல நாங்க வந்துடுவோம்” என மற்றவர்களை பார்த்து கூறினாள் கண்ணம்மை.
“நீ வேற கண்ணா.. நீ ஹிந்தி சீரியல் பார்த்தே எங்களை பாடாய் படுத்துவ. இப்ப ஹிந்தி பேசுற ஊருக்கே போறீயா… எப்படி நாங்க தாக்கு பிடிப்போம்னு பீதியா இருக்கு” என்றாள் வள்ளிமயில்.
“அக்கா…” என்று சினுங்கினாள் கண்ணம்மை.
_——–
குறித்த முகர்த்ததில் சௌந்தர்யா சுப்பிரமணியன் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
சுப்புவின் திருமணத்திற்கு பின், அருணும் விசாலாட்சியும் கம்பெனி பொறுப்புகளை தம்பி பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு நச்சாந்துபட்டிக்கு வந்துவிட்டனர். தேவை என்றால் அருண் அவ்வப்பொழுது சென்னை சென்று பார்த்துக்கொள்வதாக ஏற்பாடு.
அவர்களை போலவே, சுந்தரம் அன்னம் இருவரும் அவர்கள் சொந்த ஊரான மிதிலைப்பட்டிக்கு வந்துவிட்டனர்.
முத்து கருப்பனின் கனவு இல்லத்தை பெரியவர்கள் நால்வரும் முன்னின்று கட்ட உதவி செய்தனர். பெரியவர்கள் நால்வரும் முத்து கருப்பனின் எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தனர்.
அனைவரின் முயற்சியாலும் , முருகன் அருளாலும் அழகாக தொடங்கப்பட்டது,
“கந்த பவனம்”
error: Content is protected !!