Skip to content
Post Views: 8,251
திருனேஷ்வரன் குற்றவாளி இல்லை என்று தெளிவாக தெரிந்தபோதும், எத்தனை முயற்சி செய்தும் அதனை நிரூபிக்கும் வழியில்லாமல் போனது ரூபலஷ்மிக்கு.
ஆம்… மருத்துவ ரீதியாக ஆதாரம் இல்லையென்றபோதும் பொன்மணியின் வாக்குமூலம் திருனேஷ்வரனை வலுவாக சிக்க வைத்தது.
சிறுபெண் ஆதலால் முறையற்ற தீண்டல்களையே கற்பழிப்பு என்று நினைத்துவிட்டாள். தக்க தருணத்தில் அவ்வழியாக ஆள் வரும் அரவம் கேட்டதும் திருனேஷ்வரன் தப்பித்து ஓடிவிட்டான். பலத்த காயங்களோடு மாணவி காப்பாற்றப்பட்டிருக்கிறாள் என்றனர் காவலர்கள்.
ரூபலஷ்மியே பொன்மணியை நேரில் சென்று பார்த்தார். எத்தனை தைரியமூட்டியபோதும் பொன்மணியின் பதிலில் மாற்றமில்லை. எப்படி மாற்றிப்பேசுவாள்?
Advertisement
கற்பழித்தவன் பொன்மணியின் அக்காவிற்கும் இதே கதி வரும் என்று பொன்மணியின் பெற்றோரை பயமுறுத்தியல்லவா வைத்திருக்கிறான்.
பழைய குற்றவாளிகளின் போட்டோவை காண்பித்து இவனா என்று விசாரித்தார்கள். கற்பழித்தவன் யாரென்ற விபரம் பொன்மணிக்கும் தெரியவில்லை. ஆனால் தன்னை கற்பழித்தவனின் முகம் நன்றாக தெரியும் ஆதலால் காவலர்கள் காட்டிய புகைப்படத்தில் யாரையும் குற்றம் சாட்டவில்லை பொன்மணி.
திருனேஷ்வரனின் புகைப்படத்தை காட்டி பொன்மணியிடம் விசாரித்த போது முதலில் இவன் இல்லை என்றுதான் கூறினாள் பொன்மணி.
Advertisement
ஆனால் காவலர்கள் சொற்படி இவன்தான் என்று மகளை சொல்ல வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள் பொன்மணியின் பெற்றோர்.
Advertisement
தவறிழைக்காத ஒருவனின் வாழ்வை சீரழிக்கிறோம் என்று குற்றவுணர்வு அசோகன் அஞ்சுகாவை வாட்டியபோதும் மகளைப் பெற்ற மனம் சுயநலமாகத்தான் யோசிக்க வைத்தது.
சின்ன மகளின் நிலையே பெற்றோரை நிலையிழக்கச்செய்ய, பெரியவளுக்கும் இதே நிலையா? என்பதை யோசிக்கக்கூட முடியவில்லை. அதோடு மகள் கற்பழிக்கப்பட்ட்டுவிட்டாள் என்பது மாறி வற்புறுத்தல் மட்டுமே என்று பத்திரிக்கைகளில் வரும்போது மகளின் அவமானம் சற்று துடைக்கப்படுவதாய் நம்பினார்கள்.
விசயம் மீடியா வரை சென்றுவிட்டதால் குற்றவாளியை கண்டுபிடிக்க மேலிடத்திலிருந்து பெரிதாய் அழுத்தம் வந்தது காவலர்களுக்கு.
Advertisement
பக்கத்து ஊரில் வசிக்கும் குற்றவாளியோ பணத்தை வாரி இறைத்தான். கேமராவில் பதிவான உருவத்திற்கு திருனேஷ்வரன் நன்றாக பொருந்திவர அழைத்துச்சென்றுவிட்டனர்.
மகன் குற்றவாளி இல்லை என்று அழுது கரைந்து வாதாடிய திருனேஷ்வரனின் பெற்றோரும், பொன்மணியின் வாக்குமூலத்தில் ஆடிப்போயினர்.
திருனேஷ்வரனின் பெற்றோரிடம், ‘பையனை ஹாஸ்டல்ல விட்டு படிக்க வச்சிருக்கிங்க. அப்பாம்மா கைக்குள்ள வளர்ற பசங்களே பல கேடி வேலைகளை பார்க்குறானுங்க. இவன் அப்படி செய்திருக்கமாட்டானு எப்படி நினைக்கிறிங்க? உங்க பொண்ணுக்கு இப்படியொரு நிலைமை வந்தா இப்படித்தான் இருப்பிங்களா?’ என்று காவலர்கள் திருனேஷ்வரன் பெற்றோரை நன்றாக குழப்பிவிட்டார்கள்.
இங்கே “நாங்க சொல்ற மாதிரி சொல்லைனா உன் அக்காவுக்கும் இதே நிலைதான் வரும்னு மிரட்டுறாங்கம்மா, அப்படி ஒரு நிலைமை வந்தா நாங்க செத்து போய்டுவோம்’ என்று பொன்மணியை பொய்யுரைக்க வைத்தனர் அவளின் பெற்றோர்.
மகன் அப்படி செய்திருக்கமாட்டான் என்று முதலில் திடமாய் மறுத்த திருனேஷ்வரனின் பெற்றோர், பொன்மணியின் வாக்குமூலம், மற்றும் காவலர்களின் கலந்துரையாடலுக்கு பின்னே பெரிதாய் எதிர்ப்பு காட்டவில்லை.
தற்போதைக்கு தப்பித்துவிட்டோம், ஆனால் பின்னாளில் கூட இப்பிரச்சனை வெளிவரக்கூடாது. தற்போது தனது மிரட்டலுக்கு பயந்து பொய் சொன்னவள், பின்னாளில் விபரம் வந்து என்றாவது தன்னை காட்டிக்கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக, பொன்மணியின் பெற்றோர் மறுத்தபோதும் பல லட்சங்களை அவர்களுக்கு திணித்து, பொய்யுரைத்ததற்காக பணம் வாங்கிய குற்றவுணர்வை பொன்மணியின் பெற்றோருக்கு கொடுத்திருந்தான் சத்யப்ரகாஷ்.
பதினைந்து நாள்கள் கழித்து உடல் தேறிவந்த நிலையில் மனம் நொந்துபோனது. பதினைந்து நாள் கழித்து திருனேஷ்வரன் வழக்கு விசாரணையின் போது பொன்மணியின் தந்தையும் வந்திருந்தார். மகளைப் பற்றிய விபரங்கள் சொல்லும்போதே மனம் மறித்துப் போனது தந்தைக்கு.
வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் “அந்த பையனை ரொம்ப அடிச்சிட்டாங்க, நடக்கவே முடியாம கோர்ட்டுக்கு நடந்து வந்தான். அஞ்சு வருசத்துக்கு மேல ஜெயில்ல இருக்கமாதிரி தண்டனை தர வாய்ப்பிருக்காம்’ என்று திருனேஷ்வரனைப் பற்றி தந்தை அன்னையிடம் வேதனையோடு பேசியதை கேட்டுவிட்டாள் பொன்மணி.
தனது அக்காள் மானம் காப்பாற்ற, தவறிழைக்காதவனை மாட்டிவிட்டோமே என்று மனம் வெம்பியது. உடலளவில் தேறிவந்தவளுக்கு எத்தனை முயற்சித்தும் மனம் மட்டும் தேறவேயில்லை.
பள்ளிக்கு செல்லமாட்டேன் என்றுவிட்டாள். ஒரு மாதம் கழித்து பொன்மணியை கட்டாயப்படுத்தி நாமக்கலில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அசோகன்.
அத்தை வீட்டிலும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. வேறு வழியறியாமல் அங்கேயே பள்ளியில் சேர்த்து விடுதியில் தங்க ஏற்பாடு செய்தனர்.
உன்மேல் எந்த தவறும் இல்லை, கடந்து வா என்று சுலபமாக சொல்கிறார்கள் உறவினர்கள். ஆனால் பொன்மணியால் சுலபமாக கடக்க முடியவில்லை.
தனது வீட்டில் இருக்கும்போது பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வருபவர்கள், அவன் (திருனேஷ்வரன்) வீட்டிலும் பொன்மணி வயதில் தங்கை இருக்கிறாள், அவளுக்கு இப்படி நேர்ந்தால்தான் உங்களோட வலி புரியும்.
நம்ம புள்ளையை நாசம் பண்ணினவன் நாசமாத்தான் போவான் என்பது போல அனுதினமும் தவறாமல் திருனேஷ்வரனை சாடுவதை கேட்ட பொன்மணிக்கு தவறிழைத்தவனை விட தண்டனை அனுபவிப்பனே மனதில் தங்கினான்.
திருனேஷ்வரன் குற்றவாளி என்று தீர்ப்பளித்து, கற்பழிப்பு முயற்சி, மற்றும் பொன்மணியின் உடலில் உள்ள காயங்களின் தன்மையையும் கருதி செக்ஸூவல் அசால்ட் விதிப்படி ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை என்று வழங்கினார் நீதிபதி.
திருனேஷ்வரன் சிறைக்கு சென்றுவிட்டான். தனியார் பள்ளியில் வேலை செய்து வந்த செல்லம்மாளை பணியிலிருந்து விலக வற்புறுத்தப்பட்டார்.
சக ஆசிரியர்களின் கீழ்தரமான பார்வையால் செல்லம்மாளிற்கும் பள்ளியில் வேலை செய்ய பிடிக்காமல் போனது. ஆனாலும் வருமானத்திற்கு வழி செய்தாக வேண்டும்.
அதோடு வீட்டிலிருந்தால் மனநிலை பாதிக்கப்படும் நிலை கூட வரும் என்பதால் ப்ரபல ஜவுளிக்கடைக்கு வேலைக்கு போனார்.
இவையெல்லாம் தனது அக்காள் மூலமாக பொன்மணி கேட்டறிந்திருந்தாள். நடந்த சம்பவத்திலிருந்து மீண்டு வந்தாளா என பொன்மணி அறியாள். ஆனால் திருனேஷ்வரனுக்கு செய்த பாவத்திலிருந்து பொன்மணியால் மீண்டு வரமுடியவில்லை.
இதோ வருடங்கள் ஓடிவிட்டது. தற்போது பொன்மணி நான்கு வருட கணினி படிப்பை முடித்து, ஓர் தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது.
ஓராண்டு பள்ளி படிப்பு முடியும்வரை விடுமுறை என்றாலும் கூட சேலத்திற்கு வரமாட்டாள். அத்தை வீட்டிலேயே தங்கியிருப்பவள் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் முன்னே ஒருமுறை சேலம் வந்துபோனாள்.
தாய் வீட்டிற்கு வந்தவள் வீட்டை விட்டு வெளிவரவே இல்லை. ஓராண்டே முடிந்துவிட்டது, இன்னும் அதையே நினைத்துக்கொண்டிருக்கிறாயா என்று பலரும் கேட்பார்கள். யாருக்கும் பதிலளிக்கமாட்டாள் பொன்மணி.
அதன் பின்னே கல்லூரி படிப்பு முடியும் வரையிலும் சேலத்திற்கு வரவில்லை. பெற்றோர்கள்தான் இவளை வந்து பார்த்து செல்வார்கள்.
கடந்த ஐந்து வருடத்தில் மகளின் பழைய இயல்பில் பாதியளவேனும் கொண்டுவர அசோகனும் அஞ்சுகமும் எத்தனையோ பேசிப் பார்த்துவிட்டார்கள். பெற்றவர்களால் அது முடியவேயில்லை.
வீண்பழியை சுமத்துகிறோம் என்று அப்போதே குற்றவுணர்வு இருந்ததுதான். ஆனால் உரைக்கப்போகும் பொய்யின் வீரியம் இத்தனை கொடிதாய் இருக்கும் என்று பொய்யுரைக்கும் போது புரியவில்லை பொன்மணிக்கு.
தற்போது இருபத்தியொரு வயது நிரம்பிய பட்டதாரி அல்லவா? தனது சுயநலத்திற்கு அப்பாவியை குற்றவாளியாக்கி, அவர்களின் குடும்பத்திற்கு தீராத பழிச்சொல்லை உண்டாக்கிவிட்டோமே என்பதே பொன்மணியை வாட்டியது.
அதுவும் திருனேஷ்வரன் சிறைக்கு சென்ற அடுத்தடுத்த வருடத்திலேயே அவனின் தாத்தா பாட்டி இறந்து போய்விட, தன்னால்தான்… தான் பொய்யுரைத்ததால்தான் அவமானம் தாளமுடியாமல் பெரியவர்கள் போய் சேர்ந்துவிட்டார்கள் என்ற எண்ணம் வலுவாய் நின்றுவிட்டது பொன்மணி மனதில்.
ஐந்து வருட சிறைதண்டனை என்றார்களே… இந்த மாதத்தோடு தண்டனை காலம் முடிவடையுமே… திருனேஷ்வரன் சேலம் வருவாரா? என யோசித்தவளுக்கு ஊருக்கு போலாமா? அவர்கள் வீட்டு வழியாகத்தான் தனது வீட்டிற்கு செல்ல வேண்டும்.
இனி எதையும் மாற்ற முடியாது என்றபோதும் உங்கள் மகன் தவறிழைத்தவர் இல்லை என்று உண்மையை திருனேஷ்வரனின் பெற்றோரிடம் சொல்லி, அவர்கள் மகன் உத்தமன்தான் என்ற நிம்மதியையாவது கொடுக்கலாமா? என்று பலமாய் யோசித்தபடி படுத்திருந்தவள் எப்பொழுது உறங்கினாள் என்று அவளே அறியவில்லை.
காலையில் பொன்மணிக்கு வழக்கம்போல் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் விசயம் வழக்கமானது அல்ல. ஆம்… பெரிய மகளுக்கு திருமணம் பேசி முடித்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை மகிழ்வான செய்தி.
ஆனால் பொன்மணிக்கு மனதை பிசைந்தது. தமக்கைக்கும் தன்நிலை வந்துவிடக் கூடாதென்று எண்ணி அன்று பொய் சொன்னேன். இது தனது அக்காவிற்கும் தெரியும்.
இன்று அனைத்தும் மறந்து கலைச்செல்வி ஓர் நல்வாழ்வில் இணையப்போகிறாள். ஆனால் திருனேஷ்வரனை கெட்டவனாக்கி அவரின் வாழ்க்கையில் அழியாத கரும்புள்ளியை உண்டாக்கிவிட்டோம்.
இத்தனை ஆண்டு தண்டனைக்குப் பிறகு விடுதலை ஆனாலும் கூட அவரால் நிம்மதியாக இருக்க முடியுமா? இனி அவரை யார் மதிப்பார்கள்? சிறையில் இருந்ததை விட வெளியில் இன்னும் காயப்படுவாரே என்று நினைக்க கண்ணீர் பெருகியது பொன்மணிக்கு.
error: Content is protected !!