Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Kaathal Kanaa

Aruna Kathirs என் காதல் கனா 2

என் காதல் கனா

2

அண்ணா, நேக்கு இந்த சொத்து அவசியம் இல்லை. ஆனா என் பொண்ணோட படிப்புக்கு இந்த வீடு தேவை. இன்னைக்கு இந்த வீட்டை வித்தா குறைஞ்சது எழுபது லட்சமாவது பெரும் என்று தன் அண்ணாவின் முகத்தில் இருந்து கண்களை அகற்றாமல் பேசிய லக்ஷ்மியிடம் இந்த முறை ராமனாதன் அசட்டை காட்டவில்லை.

அப்படியே விக்கறதுன்னாலும், அதுல சரிபாதி எங்களுக்கு மட்டும் இல்லையா என்னவிக்கணும்னா நாங்களும் சம்மதிக்கனுமில்லையா என அமைதியாக நின்று விட்ட கணவரை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே லலிதா  கேட்க, உங்களுக்கு தெரியாது மன்னி. அண்ணா சொல்லியிருக்க மாட்டார். அப்பா இறந்தப்பறம் அப்பாவோட கவர்மெண்ட் உத்தியோகத்தை பி.எஸ்.ஸி படிச்ச எனக்கு குடுக்கறதா இருந்துச்சுஅண்ணா டுவல்த்ங்கறதால அண்ணாவுக்கு நல்ல ஸ்திரமான வேலையில்லை. அதனால பொண்ணு கிடைக்கறதில சிக்கல். எனக்கு கிடைக்க இருந்த வேலையை தனக்கு வேணும்னு கேட்டார். அம்மாவோட மனசை மாத்தி, உத்தியோகத்தை நான் வச்சுக்கறேன், அவளை விடவும் எனக்குத் தான் உத்தியோகம் அவசியம்அதுக்கு பதிலா தன்னோட பங்கு வீட்டை லக்ஷ்மிய எடுத்துக்க சொல்லுங்கன்னு கேட்டு வாங்கிண்டார். என கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல தனது அண்ணியிடமும் அண்ணன் மகனிடமும் மொழிந்தார் லக்ஷ்மி. ராமனாதன் மறுத்தோ, எதிர்த்தோ பேசவேயில்லை. கண்களில் கோபம் கொப்பளிக்க தங்கையை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.



Advertisement

இதெல்லாம் நீங்க ஒரு நாளும் என்ணண்ட சொல்லவேயில்லையே என ஏமாந்து போய்விட்டோமோ என்ற கோபத்துடன் கணவரிடம் லலிதா கேட்க, கொஞ்சம் பேசாம இருஎன மனைவியை அடக்கியவர், இப்போ நீ முடிவா என்னதான் சொல்லற? இந்த வீட்டை வித்துட்டு எங்களை நடுத்தெருவில நிக்கவைக்கணுமாஎன லக்ஷ்மியிடம் கராராகக் கேட்டார்.

 

[the_ad id=”6605″]

Advertisement

 

Advertisement

 

 

இந்த வீட்டை விக்கணும்கற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை அண்ணா. எனக்கு என் பொண்ணை படிக்கவைக்கணும். அவ ஆசைபட்ட படிப்பு படிக்கணும். அதுக்கு அவ பேர்ல பேங்கில டெபாஸிட்டா இருபது லட்ச ரூபாய் அளவு பணமும், இந்த வீட்டை அவ பேர்ல மாத்தி எழுத நீங்க சம்மதிக்கணும்…..

Advertisement

, இன்னைக்கு உங்களுக்கு நாங்க அடிமை, இனிமேல் உங்க பொண்ணுக்கு நாங்க அடிமையா இருந்து சேவகம் செய்யணுமோ? என்று லலிதா கேட்க மனைவியை கையமர்த்தினார் ராமனாதன்.

மன்னி, இது நாள் வரைக்கும் இந்த வீட்டில சம்பளம் வாங்காத வேலைக்காரியாத்தான் வாழ்ந்திருக்கேன். உங்க எல்லாருக்கும் சமைச்சுப் போட்டு, வீட்டைப் பராமரிக்கற வேலையை நானா விரும்பி செஞ்சிருக்கேன். என் புருஷன் இறந்து நான் அம்மா வீடே கதின்னு வந்த இந்த பதினஞ்சு வருஷத்தில ஒரு நாளாவது இது என் வீடு, நான் தான் ராணிங்கற மாதிரி நடந்திருக்கேனா? இருங்கோ….இதுக்கு நீங்க பதில் சொல்ல வேண்டாம், இதுக்கான பதிலை இன்னேரம் உங்க மனசாட்சி உங்களுக்கு சொல்லியிருக்கும். எனக்கு உங்க ஆனுதாபமோ ஆறுதலோ தேவையில்லை.. எனக்கு இப்போ முக்கியம் என் பொண்ணோட எதிர்காலம்….

என்ன பெரிய தியாகி மாதிரின்னா பேசறஏன் இவ்வளவு நாளும் உன் பொண்ணையும், உன்னையும் பத்தரமா நாங்க பார்த்துக்கலையா? சோறு போடாம, துணிமணி வாங்கிக் குடுக்காம கொடுமையா படுத்திட்டோம். இதோபோனவாரம் கூட என் தூரத்து உறவுல ஒரு வரன் இருக்கு, நம்ம சுஜிக்கு பார்க்கலாமான்னு உன்னண்ட நான் கேட்டேனே….

எது? ப்ளஸ் டூ கூட முடிக்காம, ஏதோ கோவில்ல பூஜாரியா இருக்கான்னு சொன்னேளே..அந்த வரனா? என் பொண்ணைப் பார்த்தா எப்படி இருக்கு உங்களுக்கு? எஞ்சினியரிங்க படிச்சிருக்கா, அதிகமா கூட வேண்டாம், அவ படிப்புக்கு தோதா, மாச சம்பளம் வாங்கற, கொஞ்சம் சுமாரா வசதி இருக்கற குடும்பமா ஒரு பையனை யோசிக்காம, ஏதோ ஐயாயிரம் சம்பளம் வாங்கற வரனுக்கு பார்த்திருக்கேளே, எவ்வளோ நல்ல மனசு இருந்திருக்கணும்….ஏன் உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கே, அவளுக்கு இப்படிபட்ட மாப்ளை தான் பார்ப்பீங்களா?

பாருங்க, நான் நல்லது செஞ்சா கூட தப்பாவே பேசறதை என லலிதா முனுமுனுக்க,

அவ்வளவு நல்ல மனசு உள்ளவள், ஏன் நம்ம ஸ்ரீராம் இருக்கானே அவனுக்கு கொடுக்கலாம்னு என்னண்டை ஒரு நாள் கூட கேட்டதில்லையே. வெளிய பொண்ணு எடுத்தா நன்னா சீர் சினத்தி கிடைக்கும், நான் என்ன பெருசா செஞ்சிடப்போறேன்னு நினைச்சிருப்பீங்க இல்லையா மன்னி என லக்ஷ்மி விடாமல் வாதாட,

ரெண்டு பேரும் கொஞ்சம் வாயை மூடறீங்களா?என ஆத்திரமாக கத்தினார் ராமனாதன்.

 

[the_ad id=”6605″]

 

 

 

முடிவா என்ன தான் சொல்லற லக்ஷ்மி? இந்த வீட்டை விக்கப் போறியா

வீட்டை விக்கணும்னு எனக்கு அவசியம் இல்லைஆனா அப்படி ஒரு நிலைமை வந்தா அதையும் செய்ய நான் தயங்க மாட்டேன்என்னோட தேவைகளை நான் சொல்லிட்டேன், நீ ஏற்பாடு பண்ணி பணமா என் பொண்ணூ பேர்ல பேங்கல போட்டா போதும். வீட்டை இப்போதைக்கு சுஜி பேர்ல கிரையம் பண்ணணும். அவ படிப்பு முடிய ரெண்டு வருஷம் ஆகும். அதுக்கு அப்பறமா, இந்த முழு வீட்டையும் உனக்கே எழுதிக் குடுத்தற்றேன். எங்களுக்கு எதுவும் வேண்டாம்னு சுஜியும் எழுதி கையெழுத்து போடுவாஎன்றார் லக்ஷ்மி.

லக்ஷ்மியின் பேச்சைக் கேட்டு, லலிதாவின் முகம் அப்போதுதான் கொஞ்சம் தெளிவடைந்தது. மனம் வேகமாக சாதக பாதகங்களை அலசியது. எழுபது லட்சம் பெருமானமுள்ள வீட்டிற்கு வெறும் இருபது போதும் என்று லக்ஷ்மி கேட்கிறாள். கணவர் எங்கே எக்குத்தப்பாக ஏதேணும் பேசி, குழப்பிவிடுவாரோ என பயமும் எட்டிப் பார்த்தது. ஆனால் லலிதா பயந்தது போல் ராமனாதன் உடனே மறுத்துப் பேசவில்லை.

எனக்கு ரெண்டு நாள் டைம் குடு. யோசிச்சு சொல்லறேன்.. என்று மட்டும் பதிலளித்தவர், தங்களது அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டார். பின்னேயே லலிதாவும் ஸ்ரீராமும் எழுந்து உள்ளே சென்றுவிட, கூடத்தின் சோபாவின் கால்கள் நடுக்க அமர்ந்தார் லக்ஷ்மி. அதுவரையில் அறையின் வாசலில் நின்றிருந்த சுஜினி, சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தாயிடம் கொடுத்தாள். அதை வாங்கி மடமடவெனக் குடித்தவர், வேறு எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டார்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் இரண்டு யுகங்கள் போலக் கழிந்தது. யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. வீடு தன் கதியில் இயங்கிக் கொண்டிருக்க, இரண்டாம் நாள் மாலை, வீடு திரும்பிய ராமனாதன், லக்ஷ்மியின் கையில் அந்த பையை திணித்தார்.

இதுல, இருபது லட்சம் இருக்கு. உன் பொண்ணு பேர்ல பேங்கல போட்டுக்க சொல்லு. நாளைக்கு ப்ரோக்கர் வருவான், அவன் மூலமா சுஜி பேர்ல உன் பங்கை மாத்தி எழுத ஏற்பாடு பண்ணிடு. அவ படிச்சு முடிச்சு, ஒரு வருஷம் கழிச்சு மறுகிரையத்துக்கு ஏற்பாடு பண்ணிக்கலாம்னு எழுதிக் கொடுத்திடுஎன தங்கையின் முகம் பாராமல் மொழிந்து கையில் பணப்பையை கொடுத்துச் சென்றார். லக்ஷ்மியின் மனம் சொல்லமுடியாத ஆனந்தத்தில் திளைத்தது. மகளை இழுத்துக் கொண்டு கபாலீஷ்வர்ரை தரிசித்து வர சென்றார்.

பிரகாரத்தை சுற்றிவிட்டு, நவகிரக சன்னதி முன்பு தாயும் மகளும் அமர்ந்தனர். சுஜினிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மறுபக்கம் தாயை இவ்வளவு கஷ்டப்படுத்துகிறோமே எனவும் சங்கடமாக இருந்தது. என்னால உனக்கு நிறைய கஷ்டம்…. இல்லையாம்மா..என்றாள் மெல்லமாக. சுஜினியின் வருத்தம் தோந்த முகத்தைக் கண்ட லக்ஷ்மி, மகளின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொதித்துக் கொண்டார். உன்னால என்னைக்குமே எனக்கு கஷ்டம் இல்லைம்மா…. என்று மென்மையாக சிரித்தார்.

உன்னைக் கேட்காம வீட்டை மாமாவுக்கு எழுதித் தர்றேன்னு சொல்லிட்டேனேன்னு உனக்கு என்மேல கோபம் இல்லையே சுஜி?என சிறிது நேர அமைதிக்குப் பின் மொழிந்தார் லக்ஷ்மி.

சே, என்னம்மா, நீங்க எது செஞ்சாலும் அது என் நன்மைக்குத் தான்னு எனக்குத் தெரியாதா? ஆனா அம்மா, இவ்வளவு நாளும் இந்த வீடு நம்மளுதுங்கற மாதிரி நீங்க ஏன் நடந்துக்கலை. அவங்க வீட்டில நாம இருக்கோம்ங்கற மாதிரி தானே எப்போவும் இருப்போம். அந்த பத்துக்கு பத்து ரூம் மட்டும் தான் நம்ம வீடுங்கற நினைப்பிலேயே இருபோமே

உனக்கு சொன்னா புரியாது சுஜி. உன் அப்பா இறந்தப்போ உனக்கு மூனு வயசு, எனக்கு இருப்பத்தி ஆறு வயசு. தனியா நான் என்ன செஞ்சிருப்பேன். வேலை கிடையாது, கையில பணம் கிடையாது. முக்கியமா ஆதரவு கிடையாது. அப்போ மனசாற என்னை அம்மா வீட்டில ஏத்துகிட்டா. அண்ணாவோ, மன்னியோ என்னை வேண்டாம்னு துறத்தலை. அதேபோல இத்தனை வருஷமும் மானத்தோட வாழ நமக்கு வழி செஞ்சிருக்கா. அதுக்கான நன்றிக்கடனாத் தான் நான் இவ்வளவு நாளும் பேசாம இருந்தேன்.

ஆனா என்னால பேசும் படி ஆகிடுச்சு இல்லையாம்மா?

சே, சே இல்லம்மாஇந்த பிரச்சனை உன் படிப்புக்குன்னு இன்னைக்கு வந்திருக்கு, அது இல்லாம போயிருந்தா நாளைக்கு உன் கல்யாணத்துக்குன்னு வரும். ஏப்ப சோப்பையா வரன் பார்ப்பா உங்க லலிதா அத்தை. அப்போ இதே பிரச்சனை கண்டிப்பா தலைதூக்கியிருக்கும்.

ஆனா அவ்வளவு விலையுள்ளா சொத்தை இப்படி கால் காசுக்கு தூக்கி குடுத்திருக்க வேண்டாமேம்மா

தெரியும் சுஜி….ஆனா வேற வழியில்லையே. மூனு மடங்கு கிடைக்கும்னு ஆசை காமிக்கப் போயி தானே, ரெண்டு நாள்ல இருபது லட்சம் பிரட்டியிருக்கான். இல்லையின்னா, இன்னைக்கு நாளைக்குன்னு இழுத்துட்டே போயிருக்கும். வீட்டை என் ஒரு ஆளால தனியா விக்க முடியுமா? வீட்டை வாங்க வர்றவங்ககிட்ட உன் மாமா பிரச்சனை பண்ணுவான். உடனே நமக்கு காசு கைக்கு வர இது ஒண்ணு தான் வழின்னு தோணுச்சு சுஜி

அதெல்லாம் சரிம்மா, நாளைக்கு உனக்கு இந்த வீடு வேண்டவே வேண்டாமா? நீ இவ்வளவு வருஷம் வாழ்ந்த வீட்டைவிட்டு குடுத்துட்டியே

ஹ ஹ …. அப்படி என்னம்மா எனக்கு இந்த வீட்டின் பேர்ல நல்ல மலரும் நினைவுகளா இருக்கு? கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் சந்தோஷமா இருந்திருக்கேன் தான். உன் அப்பா போனதுக்கு பிறகு, இந்த வீட்டில ஒரு விருந்தாளி மாதிரி தானே ரெண்டு பேரும் வாழ்ந்திருக்கோம். நமக்குன்னு எதுவுமே இங்க இல்லைங்கற மாதிரி தானே நம்மை நடத்தியிருக்காங்க. எனக்கு சமையல்கட்டு, உனக்கு உன் ரூம், இதைத் தவிர இந்த வீட்டில நமக்கு என்ன இருக்கு?

அதென்னம்மோ உண்மை தான்ம்மாஇருந்தாலும் சொத்துன்னு பார்க்கறப்போ, அதும் இன்னைக்கு மதிப்பில

எனக்கு இருக்கற ஒரே பெரிய சொத்து நீ தான் சுஜினி. எனக்கு ரெண்டு வருஷம் கழிச்சு இந்த வீடு தேவைப்படாது. உனக்கும் இந்த வீடு வேண்டாம். நீ ஆசைப்பட்ட மாதிரியே அமெரிக்கா போய் படி. முடிஞ்சா அங்கையே நல்ல உத்தியோகமா சம்பாரிச்சுக்கோ. போற இடம், நீ தொடர செயல் எல்லாத்திலையுமே உனக்கு வெற்றி கிடைக்கும். சுஜினின்னு உனக்கு பேர் வச்சதே அதுக்குத்தான். தேவி மகேஸ்வரியோட அம்சம். வெற்றி தருபவள்ன்னு தேடிபிடிச்சு உங்க அப்பா உனக்கு பேர் வச்சார் என்று அருள்வாக்கு போல் அம்மா கூறியதைக் கேட்டு சுஜினிக்கு மெய் சிலிர்த்தது.

இருவருமே எதுவும் பேசாமல் நீண்ட நேரம் பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர். அம்மாவின் முகம் நிம்மதியில் ஜொலிப்பதைப் போன்று சுஜினிக்கு பிரம்மை உண்டானது. அம்மாவின் ஆசையை தன் கடின உழைப்பால் நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதி சுஜினியின் மனதில் உண்டானது. எப்படியாவது படிச்சு முடிச்ச உடனே அமெரிக்காவில, நல்ல வேலை தேடிக்கணும். ஒரு வருஷத்தில அம்மாவையும் கூட கூட்டிட்டுப் போயிடணும்.என மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!