Skip to content
Post Views: 3,650
*கருவின் குரல்
அத்தியாயம் 1*
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ யெனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா” என்று ஐயர் மந்திரம் கூற, முகம் கொள்ளாத புன்னகையுடன் புதுமனை புகுவிழா கொண்டாடினார்கள் தேவராஜ்–மைதிலி தம்பதியினர். அருகில் துள்ளிக்குதித்தாள், அவர்களின் மூன்று வயது மகள் அதுல்யா.
தேவராஜ், பொள்ளாச்சியின் பிரபல தேங்காய் எண்ணை ஆலை நிறுவனர் சக்கரவர்த்தியின் இரண்டாவது மகன். வயது மூப்பு காரணமாக சக்கரவர்த்தி தனது சொத்துகளை மகன்களுக்கு பிரித்துக் கொடுத்தார். மூத்தவன் அறிவழகனுக்கு எண்ணை ஆலையும், நகர மையத்தில் உள்ள 80 கோடி மதிப்புள்ள பங்களாவும் சென்றது. தேவராஜுக்கு தேங்காய் தோட்டமும், வெளிநாடுகளுக்கு தேங்காய்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமும் எழுதப்பட்டது.
Advertisement
ஆனால் பேராசை கொண்ட அறிவழகனும் அவன் மனைவி செளமியாவும், “இந்த வீடு எங்களுக்கே சொந்தம்” என தேவராஜை தள்ளி வைத்தனர். பங்களா வீட்டில் ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்ற சக்கரவர்த்தியின் ஆசை, இரண்டே ஆண்டுகளில் சிதைந்தது.
மைதிலி பிடிவாதமாக, “புதிதாக வீடு வாங்கினால் மட்டுமே நான் வாழ வருவேன்; இல்லையெனில் அப்பா வீட்டில் தங்கிவிடுவேன்” என அழுத்தம் கொடுக்க, தேவராஜ் இரண்டு படுக்கையறை, மூன்று சிறிய வாடகை வீடுகள் கொண்ட காம்பவுண்ட் வீட்டை விலைக்கு வாங்கி, இன்று புதுமனை புகுவிழா நடத்திக்கொண்டிருக்கிறான்.
மைதிலியின் தாய் ராஜேஸ்வரி, “என் மகள் அன்னாடங்காச்சிகளுடன் எப்படி வாழப் போகிறாள்? வாடகை வீடுகளை காலி செய்யச் சொல்லி, பெரிய வீடு கட்டியிருக்கலாம்” என புலம்பினாள்.
Advertisement
சக்கரவர்த்திக்கும் இது பிடிக்கவில்லை. அவர் எப்போதும் மகன்களைப் பற்றி “என் வாரிசுகள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்” என்ற பெருமிதம் கொண்டவர். ஆனால் இப்போது, மகனின் தேர்வு அவரது கௌரவத்திற்கு குறைச்சலாக தோன்றியது. இருந்தும் மகனின் விருப்பத்திற்கு தடையாக இருக்க விரும்பவில்லை.
Advertisement
தேவராஜ் புதுமனை புகுந்த மகிழ்ச்சியில் இருந்தாலும், அவன் மனம் அமைதியாக இல்லை. ஏனென்றால் அவன் இந்த வீட்டை வாங்கியதற்குக் காரணம் மைதிலி அல்ல. அந்த காம்பவுண்ட் வீட்டில் வாடகைக்கு இருக்கும் *ஜானகி. அவளின் செல்ல மகள் **அனிஷ்கா தேவி*.
அந்த காம்பவுண்ட் வீட்டில்,
*முதல் வீடு* – தீபா, ராஜேஷ் தம்பதியினர். அவர்களின் கை குழந்தை நகுல் அனைவரின் செல்லப்பிள்ளை.
*இரண்டாவது வீடு* பாலா, சுதா. எளிமையும் அன்பும் நிறைந்தவர்கள். அவர்களின் மகள் பூஜா, கல்லூரி படிக்கும் இளம்பெண். சுபாவும் பாலாவும் ஜானகிக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர்கள். பூஜாவும் அனிஷ்காவும் நல்ல நண்பர்கள் போல ஒன்றாகவே இருப்பார்கள்.
Advertisement
*மூன்றாவது வீடு* ஜானகி மற்றும் அவளின் ஐந்து வயது மகள் அனிஷ்கா. ஜானகியின் முகத்தில் எப்போதும் புன்னகை இருந்தாலும், உள்ளுக்குள் விதி விதித்த காயம் எரிந்துகொண்டே இருந்தது.
புதுமனை புகுவிழா என்பதால், காம்பவுண்டின் முதல் இரண்டு வீடுகள் முழுவதும் உற்சாகமாக இருந்தது. தீபா, சுதா, பாலா, ராஜேஷ் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.
ஜானகி மட்டும் பின்தங்கினாள். தனது செல்ல மகள் உறங்கி கொண்டிருக்க, அவளுக்கு காலை உணவு தயாரித்து கொண்டிருந்தாள்.
திடீரென எழுந்த அனிஷ்கா, “அம்மா! இன்னைக்கு ஹவுஸ் வார்மிங் செரிமனி இருக்குனு பூஜா அக்கா சொன்னாங்க. நீ ஏன் என்னை எழுப்பி விடலே? நான் போய் அதை பார்த்துட்டு வரே…” என துள்ளல் நிறைந்த குரலில் கூறினாள்.
ஜானகி அதிர்ந்து, “அங்கெல்லாம் நாம் போகக்கூடாது… வேண்டாம்” என்றாள்.
அதற்குள் பூஜா உள்ளே வந்து, “அனிஷ், நீ இன்னமும் ரெடியாக வில்லையா?” எனக் கேட்டாள். பூஜாவைப் பார்த்ததும் புன்னகையோடு அருகில் ஓடி சென்றாள்.
“பூஜா அக்கா, வாங்க… நாம போலாம்!” என்று கூப்பிட்டாள்.
ஜானகி எவ்வளவு முயன்றும், அனிஷ்காவை வீட்டுக்குள் அடைத்து வைக்க முடியவில்லை. விழா நடக்கும் இடத்திற்கு சென்று விட்டாள் அந்த சின்ன சிட்டு.
அந்த வயதுக்கு உரிய சுறுசுறுப்புடன் அனிஷ்கா எங்கும் ஓடி விளையாடினாள். பூஜாவும் அவளோடு கலந்து சிரித்தாள். ஆனால் அந்தச் சிரிப்பு ஒரு நொடியில் மாறியது.
விழா நடக்கும்போது, அனிஷ்கா ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த தாம்பாளத்தைப் பார்த்தாள். அதில் மஞ்சள், குங்குமம், சாம்பிராணி எல்லாம் இருந்தது. “வாவ்! நிறைய பவுடர்!” என்று எண்ணியவள், சிறு ஆர்வத்தால் கையை வைத்தாள்.
அடுத்த நிமிடமே,
தாம்பாளம் தரையில் சாய்ந்து, மஞ்சள், குங்குமம், சாம்பிராணி எல்லாம் கலந்துவிழுந்தன.
அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தனர். சிலர் முகத்தில் கோபம், சிலரின் பார்வையில் குற்றச்சாட்டு.
பாவம், அனிஷ்கா அப்பாவியாக நின்று புன்னகைத்தாள். “நான் எதுவும் செய்யல… அதை தொட்டேன், விழுந்துடுச்சு…” என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள்.
சுதா விரைந்து சென்று அனிஷின் கையைப் பிடித்து, “மன்னியுங்கள்… குழந்தைதான்” என மெதுவாகக் கூறினாள்.
அந்தக் கணத்தில் விழாவின் மகிழ்ச்சியில் சிறிய நிசப்தம் நிலவியது. குழந்தையின் சின்ன தவறு கூட பெரிய பிரச்சினை போல் அனைவரின் பார்வையில் தெரிந்தது.
அந்த சம்பவத்தை பார்த்த மைதிலியின் மனம் வேறுவிதமாகக் குழம்பியது.
“இந்தக் குழந்தை எங்கள் வீட்டில் எதற்காக இவ்வளவு சுதந்திரமாக இருக்கிறாள்? தேவராஜின் பார்வை அடிக்கடி ஜானகியின் வீட்டு பக்கம் செல்வதை குறிப்பெடுத்துக்கொண்டாள்…” அவளது உள்ளத்தில் பயம் உருவானது.
சக்கரவர்த்தி, அனைவரையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார். விழாவின் புன்னகையோடு அவர் மனதில் ஒரு பிளவு ஆடிக்கொண்டிருந்தது.
“என் இரு மகன்களும் வேறு வீடுகளில் பிரிந்து போனார்கள். இப்படி போனால், நான் சேர்த்த செல்வமும், பெருமையும் எதற்காக?”
அதே நேரம் அவருக்கும், அவரது மனைவி கருணாம்பிகைக்கும் ஜானகி பற்றியும் அவளின் மகள் அனிஷ்கா பற்றியும் தெரியும்.
கருணாம்பிகை மெதுவாகக் கேட்டாள்:
“எல்லாம் சரியாவிடுமா?”
சக்கரவர்த்தி ஆழமாக சுவாசித்தார்.
“விதி தான், கருணா… விதி தான்.” என்று சொன்னார்.
அந்தப் புதுமனை புகுவிழா—மகிழ்ச்சி, கண்ணீர், அச்சம், சந்தேகம், சின்ன தவறு, பெரிய நிசப்தம் கலந்த ஒரு நாளாக அமைந்தது.
__*கருவின் குரல் ஒலிக்கும்…*
✍️ என் பெயர் *கல்பனா சரவணன்*.
நான் ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறேன்.
எனது முதல் கதையான “வாழும் மூலிகையின் காவலன்” பிரதிலிபி தளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அது முடியும் தருவாயில் உள்ளது.
இது எனது இரண்டாவது கதை — “கருவின் குரல்”.
உங்களின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்கிறேன்.
கதை பற்றிய விமர்சனங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி! 🙏
error: Content is protected !!