Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பூத்தூவுதே வானம்!

பூத்தூவுதே வானம் – 05

அவன் கூறிய நேரத்துக்கு சற்று முன்பாகவே ஹாஸ்பிடலை வந்தடைந்த சாருலதா, ரிசெப்ஷனில் தலை காட்டிவிட்டு ஒரு இருக்கையில் ஓய்வாக அமர்ந்து கொண்டாள்.

இளம் வெயிலில் தடுமாறித் திரிந்ததால் போலும் கண்களை இருட்டிக் கொண்டு வந்தன. லேசான தலை சுற்றல் வேறு!

‘இந்த காலத்துப் புள்ளைங்க என்ன ரகம்னே புரிய மாட்டேங்குது. முப்பது, நாப்பது வயசுல நாங்க இந்த ஓடு ஓடறோமே.. இதுங்க ரெண்டு காலடி எடுத்து வைச்சதுமே கண்ண இருட்டுது, தல சுத்துதுன்னுட்டு ஆயிரம் கதை சொல்லுதுங்க!’ என சிறு வயதில் ரேவதி அவளின் தலையில் கொட்டி புலம்பித் தீர்ப்பது நினைவில் வந்துதித்தது.

தாயின் நினைவில் பெண்ணின் இதழோரம் மென்முறுவல் மலர்ந்த அதேநேரம், கண்ணோரம் துளிர்த்த கண்ணீர் துளி அன்றைய நாட்களின் இனிமையைப் பறைசாற்றுவதாய்..



Advertisement

சிறிது நேரத்துக்கெல்லாம் ரிசெப்ஷன் பெண் அவளைத் தட்டி டாக்டர் கூப்பிடுவதாக கூறிச் செல்ல, கலைந்த தலைமுடியை சரி செய்து கொண்டு நிமிர்ந்த நடையுடன் வாசுதேவனின் கேபின் நோக்கி நடந்தாள், சாருலதா.

ஏனென்றே தெரியாமல் அவசியமே இல்லாதவொரு படபடப்பு அவளிடம்!

கதவைத் தட்டி அனுமதி வாங்கிக் கொள்ள முன்பு, மூச்சை ஆழமாக இழுத்து வெளியேற்றி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள மறக்கவில்லை.

Advertisement

‘ஒரு கிளாஸ் தண்ணி இருந்தா தேவல’ என பதட்டப்பட்ட மனம் கூப்பாடு போட்டாலும், இப்போ அது ஒன்னு தான் குறைச்சல் என அலுத்துக் கொண்டவளாய் கதவைத் தட்டினாள்.

Advertisement

“கம் இன்” – உள்ளே அவன் குரல் கணீரென்றது.

“குட் மார்னிங் டாக்டர்” என்ற காலை வாழ்த்துடன் அறைக்குள் நுழைந்தவளுக்கு முன் இருக்கையைக் கை காட்டினான். ஆனபோதும் கையிலிருந்த கோப்பையை விட்டு அவன் பார்வை நிமிரவில்லை.

அதில் சாருவுக்கு சிறு ஏமாற்றமே! அன்று சிரித்து சிரித்துப் பேசியவனின் இன்றைய ஏனோதானோவென்ற வரவேற்பு அவ்வளவு உவப்பைக் கொடுக்காத உணர்வு! சந்திப்பின் ஆரம்பமே சலிப்பை வாரியிறைத்தது.

Advertisement

ஆனால் இது வெறும் தொடக்கமே என்பது போக போகத் தான் புரியலானது, சாருவுக்கு.

உண்மையில் பரஸ்பர சுகநல விசாரிப்புகளில் கூட ஆர்வம் காட்டாமல் தொப்புக்கடீர் என்று விடயத்தில் தான் குதித்தான், வாசுதேவன்.

அவன் எப்போதும் இப்படித்தான். வரவேற்பு, உபசரிப்பெல்லாம் வீட்டு கேட்டோடு நின்று விடும். மருத்துவனையில் சிரிக்கத் தெரியாத – இக்கட்டிலும் கூட ஓரிரு வார்த்தைகள் ஆறுதலாகப் பேசாத முரட்டு வைத்தியன். இது அவனை அறிந்த எல்லோரும் அறிந்த விடயமே!

“டாக்டர், எப்டி இருக்..” என அவள் ஆரம்பிக்க முன்னரே,

“நீங்க சொன்னதை நான் யோசிச்சி பார்த்தேன், மிஸ் சாருலதா. நீங்க உதவினு கேட்டதால நான் ஆதரவு கொடுக்கறேன்னு இல்ல, விசாரிச்சிப் பார்த்ததுல உங்களைப் பத்தி மத்தவங்களோட ஒபீனியன்ஸ், உங்க டேலண்ட்னு எல்லாத்தையும் வைச்சு பார்க்குறப்ப நீங்க இதுக்கு ரொம்ப தகுதியானவங்க தான்னு என் மனசுக்கு உறுதியா தோணுச்சு..” என முடித்து வைத்தான், வாசுதேவன். அன்றைய ஒருமை விளிப்பு இன்று மீண்டும் பன்மைக்குத் தாவியிருந்தது.

இந்த சந்தோஷச் செய்தியை ஏலவே எதிர்பார்த்து வந்ததாலோ என்னவோ பெரிதாக ஆர்ப்பரிக்காமல் மெலிதாய் முறுவலித்தாள், சாருலதா.

முழுமையாக மகிழ முடியாதவாறு உள்ளுக்குள் ஏதோ ஒன்று கனமாய் அழுத்தியது.

‘இப்போ என்ன நடந்திடுச்சுனு இப்படி இருக்காரு? அன்னைக்கு எவ்ளோ ஜாலியா என்கிட்ட பேசுனாரு. கல்லை முழுங்கின மாதிரி.. ப்ச், வாட்ஸ் வ்ரோங்?’ என மனம் எழுப்பிய வினாவை வெளிப்படையாகக் கேட்க தைரியமின்றி,

“ரொம்ம்ப நன்றி டாக்டர்!” என அழுத்தம் நிறைந்த குரலில் கூறிவிட்டு சட்டென்று எழுந்து கொண்டாள்.

அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே புரியாத நிலை! அன்று சில்லென நெஞ்சைத் தாக்கிய ஏதோவொன்று இன்று மிஸ்ஸிங் என்பதாய் மனம் சிணுங்கியது.

அவன் சிறிதாகத் தலை அசைக்க, தலை சாய்த்திருந்தவனை இஷ்டத்துக்கு முறைத்தவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கைப்பையை எடுத்துக் கொண்டு திடும்மென வெளியேறி விட்டாள்.

வீட்டுக்கு வந்த பின்பு கூட ஏனோ யோசனை தீரவில்லை.

‘அந்தாளுக்கு ஒருவேள ஸ்பிலிட் பர்சனாலிட்டியா இருக்குமோ?’ என்று கூட யோசித்தாள்.

“ப்ச், லூசா நீ.. சேவை, கடமைனு வந்துட்டா யாரும் அப்படி தான். அன்னைக்கு நீ சந்திக்க போனது அவரோட வீட்டுக்கு! அதுனால கூட சகஜமா உன்கிட்ட பேசி இருக்கலாம். இது ஹாஸ்பிடல்! இங்க அவரோட தலைமைல தான் ஒவ்வொன்னும் நடக்குது. தலைல இருக்கற அந்த பெரிய பொறுப்பு சுமையை ஓரமா இறக்கி வைச்சிட்டு உன்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுவாருனு நீ எப்டி எதிர்பார்க்கலாம்? ஹவ் சில்லி ஆர் யூ..” என பக்குவப்பட்ட மனம் அதட்டி, அவளை அடக்கியது.

பெரிதாக ஒன்றுமில்லை, அவளைப் பொறுத்த வரை டாக்டர் வாசுதேவன் நல்ல குணவான்; பேசி சிரித்து சகஜமாகப் பழகுவதில் கெட்டிக்காரன். அப்படிப்பட்டவன் திடீரென பாராமுகம் காட்டியதில் சிறு வருத்தம், அவ்வளவே!

“என்னவோ.. எனக்கென்ன வந்துச்சு?” என கடுகடுத்தவளுக்கு எப்போது, எத்தனை மணிக்கு தான் பணியில் அமர வேண்டும் என்ற விவரம் எதையும் அவனிடம் கேட்கவில்லையே என்பது சற்று தாமதமாகத் தான் உறைத்தது.

“ஓ கோட்! இது வேறயா..” என பெரிதாக சலித்துக் கொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலை.

மீண்டும் ரிசெப்ஷன் பெண்ணுக்கு அழைப்பு விடுக்கவும் அலுப்பாக இருந்தது.

“அவரு உன்கிட்ட எப்டி பேசுறாருங்குறது தான் விஷயமா.. நீ கேட்ட உதவிய அவர் செஞ்சிட்டாரு, இதுக்கு மேல நீ என்னத்த பெருசா எதிர்பார்க்கற சாரு? அவர் என்ன உனக்கு உறவா, சொந்தமா.. ஒழுங்கா பேசல, கதைக்கலனு இப்படி சின்ன புள்ளத்தனமா டென்ஷன் ஆகறியே! இது நீ இல்லயே, ஜஸ்ட் பீ யுவர்செல்ப்..” என தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.

இந்த சிறுபிள்ளைத் தனமான நடத்தையை அவளாலேயே ஜீரணிக்க முடியவில்லை. ஓரிரு முறைகள் தலையை சிலுப்பி மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்.

நேரம் நண்பகல் தாண்டி இருந்தது.

கட்டிலில் அங்குமிங்குமாக உருண்டவள் காலம் தாழ்த்தாமல் மறுநாளே டியூட்டியில் அமர்ந்தால் ஒன்றும் கெட்டுவிடப் போவதில்லை என்ற சுய முடிவுடன் எழுந்து அமர்ந்தாள்.

இது ஒரு புறமிருக்க, மூர்த்தியிடம் அவர்களின் வீட்டு அட்ரஸைக் கேட்டறிய வேறு பெரிதாக பாடுபட வேண்டி இருந்தது சாருவுக்கு.

“நிகிலுக்கு சொல்லிட்டியா?”

“நீ சொல்லாம நானோ, திலோவோ சொல்லி அவன் தெரிஞ்சிக்கிட்டா உன்மேல கோவப்படுவானம்மா..”

“இப்போவே என்ன அவசரம்? முதல்ல அவன் வரட்டும், அப்பறம் பொறுமையா டியூட்டில ஜோயின் பண்ணிக்கோ கண்ணு..” என ஏகப்பட்ட கருத்துக்கள், வினாக்கள்!

“சரி, நீங்க எனக்கு வீட்டு அட்ரஸை சொல்லவே வேணாம், நான் டாக்டர் கிட்ட பேசிக்கிறேன்” என அவள் சலிப்பாக நகர்ந்த நேரம் இரக்கப்பட்டு அவர் லொகேஷனைக் கூறிய வரை சந்தோஷம்.

இல்லாவிட்டால் மீண்டும் அவசரக் குடுக்கை என்ற முக லேபலோடு வாசுதேவன் முன்னிலையில் நின்றிருக்க நேரிட்டிருக்கும் என்ற ஆசுவாசம் சாருவிடம்!

ஆனால் மறுநாள் காலையில் – துள்ளித் திரியும் மான்குட்டியாய் புது உற்சாகத்துடன் ஜெயசிம்மனின் வீட்டுக்கு முன்பு அவள் காரிலிருந்து இறங்கிக் கொள்ளும் போது, முதன் முதலாக அவனைத் தான் காண நேர்ந்தது.

வீட்டுக்கும் கேட்டுக்கும் இடையிலான நடைபாதையில் ஜெயசிம்மனிடம் எதையோ கூறிக் கொண்டிருந்தான்.

“போயும் போயும், இவரையா பார்க்கணும் நான்?” என மருண்டவளுக்கு ஓடவும் முடியாத, ஒழியவும் முடியாத நிலை!

டிரைவரை அனுப்பி வைத்துவிட்டு கைப்பையை நெஞ்சோடு அணைத்தவாறு மெல்ல நடக்கத் துவங்கினாள்.

யாரைக் கேட்டு இன்றே நீ பணியில் அமர்ந்தாய் என்ற கேள்வி அவனிடமிருந்து புறப்பட்டு விட்டால் என்ன சொல்வது என்ற நினைப்பு ஒரு பக்கம்; நேற்று போலவே கடுகடுப்பாகப் பேசி இன்றைய நாளின் இனிமையை கெடுத்து விடுவாரோ என்ற பயம் இன்னொரு பக்கம்.

இத்தனைக்கும் அவள் பார்வை அவனை விட்டுக் கிஞ்சித்தும் நகரவில்லை.

பின்முதுகு காட்டி நின்றிருந்தவனின் பரந்த தேகமும், அடர்கேசமும் ரசனையை ஏற்படுத்துவதாய்!

பேனா சொருகப்பட்டிருந்த விரலிடுக்கும், நாலா திசையிலும் காற்றை வெட்டிக் கொண்டு அசைந்த முரட்டுக் கரமும் வேறு அழகாய் தெரிந்தனவே! அவனை நெருங்க இரண்டெட்டு இருக்கையில்,

“வாம்மா!” என்ற இன்முக வரவேற்புறம் ஜெயசிம்மன் வரவேற்க, அவனது பார்வையும் மெல்ல அவள்புறம் பயணித்தது.

தன் வரவைப் பற்றி முன்பே அறிவித்திருப்பது புரிந்து சாருலதா பெரிதாக முறுவலித்தாள்.

“புதுசா ஒரு நர்ஸ் பொண்ணு வரும்னு இப்போ தான் சொல்லிக்கிட்டு இருந்தாரு. பட் இன்னைக்கே வர மாட்டாங்கனு சொன்னிங்களே டாக்டர்..” – முதல் பாதி சாருவிடமும், மீதி வாசுதேவனிடமும்.

‘பதில் கூறு’ எனும் விதமாக அவன் சாருவைப் பார்க்க,

“நான்தான் இன்னும் டூ த்ரீ டேஸ்ல ஜோயின் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, இன்னைக்கே வந்துட்டேன் சார்!” என அவசரமாக முந்திக் கொண்டாள்.

புரிந்ததாகத் தலை அசைத்தவர், “அப்படினா டாக்டர் என் மனைவி, மகனைப் பத்தி எல்லாம் உங்ககிட்ட சொல்லி இருப்பாருனு நினைக்கிறேன்மா! வாங்க..” என்க, திருதிரு முழிப்புடன் வாசுதேவனைப் பாவமாகப் பார்த்தாள் சாருலதா.

இல்லை எனக் கூற முடியாதே! அது பற்றிக் கூட விசாரித்தறியாமல் எதைக் கிழிக்க இங்கு வந்தாய் என்று கேட்டுவிட்டால்..??

“வெயிட், மிஸ்டர் ஜெயசிம்மன். அவங்களுக்கு ஃபர்ஸ்ட் டே இல்லயா? சில விஷயங்கள் க்ளியரா எஸ்பிளைன் பண்ண வேண்டி இருக்கு. எக்ஸ்யூஸ் அஸ் ஃபார் அ பியூ மினிட்ஸ்..” என்றவன்,

“கம் திஸ் வே!” என சாருவிடம் கூறியபடி தோட்டம் பக்கமாக நகர்ந்தான்.

பெரு விருட்சங்களும், இரை தேட வந்த பட்சிகளின் இடைவிடாத கீச்சிடலும் என காலை நேர வீட்டுத் தோட்டம் கண்ணுக்குக் குளிர்ச்சியாக – ரம்மியமாகக் காட்சியளித்தது.

பராக்குப் பார்த்தபடி வாசுதேவனின் பின்னோடு நடந்தவள் அவன் ஒரு இடத்தில் தன் நடையை நிறுத்தியதும் முதற்கண் அவனுக்கு நன்றி கூறிக் கொண்டாள்.

“வீட்டு அட்ரஸ் தான் எனக்கு தெரியுமே! நீ சொல்லி எதுவும் நான் செய்ய தேவலனு நினைச்சிட்டிங்களோ.. என்ன, எப்டி, எப்போனு எதுவுமே கேட்காம நீங்க பாட்டுக்கு எழுந்து போய்ட்டிங்க..” – அவனே தான் முதலில் பேசினான்.

“அ.. ஐயோ அப்படிலாம்..” என பதறி அவள் மறுக்க வருவதற்குள்,

“ஒப்வியஸ்லி நான் பேசிக் மேனர்ஸ் தெரியாதவங்களை பணிக்கு அமர்த்த மாட்டேன், மிஸ் சாருலதா!” என்றான் கராறாக. நொடியில் இறுகிப் போன அவன் முகம் அவளது நடத்தையின் அதிருப்தியைத் தெளிவாகப் பறைசாற்றுவதாய்!

அதற்குள் எங்கிருந்து வந்ததோ அவ்வளவு கோபம்!

“எக்ஸ்யூஸ் மீ, யாரைப் பார்த்து என்ன பேசுறீங்க? நீங்க டாக்டர்னா உங்க இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பேசிடுவீங்களா.. என்னைப் பார்த்தா பேசிக் மேனர்ஸ் கூட தெரியாத மக்கு மாதிரியா தெரியுது?” என நுனி மூக்கு சிவக்க கண்களை உருட்டினாள்.

அந்த சீற்றத்தைப் பொறுமையாக உள்வாங்கியபடி வாசுதேவன் பார்த்த பார்வையில் என்ன தெரிந்ததோ..

“இல்ல.. அது வந்து டாக்டர்! சாரி..” என அவளாகவே தணிந்து வந்து மன்னிப்பு இறைஞ்சினாள்.

கூடவே, “நீங்க நேத்து சிடுசிடுனு இருந்திங்களா.. அதான் அந்நியமா பட்டுச்சு! பேசவே பிடிக்காம டக்குனு எழுந்து போய்ட்டேன்..” என தன்னிலை மறந்த விளக்கமும் கொடுத்தாள்.

வாசுதேவனின் கூர்விழிகள், தாளாத ஆச்சரியத்தில் சாசர் போல் விரிந்தன.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!