Skip to content
Post Views: 3,248
கருவின் குரல்
அத்தியாயம் 2
புதுமனை புகுவிழா சில சலசலப்புகளுக்கிடையே இனிதே நிறைவடைந்தது.
அவிழ்ந்திருந்த பந்தல்கள், பூக்களின் மணம், சிரிப்பு சப்தங்களால் அந்த மாலை சிறப்பாக முடிந்தது.
அனிஷ்கா வீடு திரும்பியதும், அவள் உடையை ஜானகி மாற்றிக்கொண்டிருந்தாள். அப்போது அங்கு நடந்த ஒவ்வொன்றையும் ஆர்வத்துடன் அம்மாவிடம் பகிர்ந்து கொண்டாள்.
Advertisement
“மம்மி! அங்கே நிறைய ஐஸ்கிரீம், சாக்லேட்… எனக்கு ரொம்ப பிடிச்ச பாதுஷாவும் இருந்துச்சு.”
அவள் சொன்னதுமே, ஜானகியின் உள்ளம் தேவாவை நினைத்தது. அந்த பாதுஷா அவனுக்கும் பிடிக்கும். அந்த நினைவால் சற்றே முகம் வாடினாள்.
“ மம்மி… நான் ஒன்று சொல்லுவே. ஆனால் நீ என்னை திட்டக்கூடாது…” என்றாள்.
Advertisement
மகள் முகத்தை பார்த்தவுடன், ஜானகிக்கு புரிந்தது – ‘இவள் ஏதோ குறும்பைச் செய்து விட்டு வந்து இருக்கிறாள்.’
“சரி… முதலில் சொல்லு. பிறகு திட்டணுமா வேண்டாமானு அம்மா முடிவு பண்ணுறேன்,” என்றாள் அவள்.
Advertisement
அதற்குள் அனிஷ்காவின் முகம் சற்றே கலங்கியது. “அங்கே இருந்த தட்டை… நான் தள்ளிட்டேன்,” அதிலே நிறைய கலர் பவுடர் இருந்துச்சு எல்லாம் கீழே விழுந்துருச்சு, எல்லாரு என்னைவே பார்த்தாங்க என்று அவமானத்துடனும் பயத்துடனும் சொன்னாள், அம்மா முகம் மாறுவதை கவனித்து அழ ஆரம்பித்தாள்.
“ நான் எந்தத் தப்பும் பண்ணலே மம்மி… என்னை அடிக்க கூடாது!” என்று அழுது தழுவிக்கொண்டாள்.
மகளின் கண்ணீரைப் பார்த்த ஜானகியின் கோபம் கரைந்தது. அவள் மெதுவாக தன் கையை மகளின் தலைமீது வைத்து, “இனி அங்கே போகக் கூடாது…” என்று கூறினாள்.
Advertisement
தனது தவறை கூறிய பின்பும், “அம்மா அடிக்கலே!” என்ற மகிழ்ச்சியில், அனிஷ்கா கைகளை இணைத்து, “காட் ப்ராமிஸ்! இனிமேல் அங்கே போக மாட்டேன் மம்மி!” என்று குண்டு கண்ணங்கள் குலுங்க சிரித்துக்கொண்டே உறுதியளித்தாள்.
ஜானகி 26 வயது இளம்பெண்; ஐந்து வயது மகளின் தாய்.
பொள்ளாச்சியின் ஒரு பிரபல பள்ளியில் கேஷியராக வேலை செய்கிறாள். அதே பள்ளியில் தான் அனிஷ்கா யு.கே.ஜி படித்து வருகிறாள். தாய் அங்கே வேலை பார்க்கிறாள் என்பதால், மகளுக்கு கட்டணத்தில் சலுகை கிடைத்தது. இல்லையென்றால், அவளது வருமானத்தில் அந்த அளவிலான பள்ளியில் படிப்பது கனவாகவே இருந்திருக்கும்.
அந்த நாள் முழுவதும் ஜானகி வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை.
அடுத்தவீட்டாரான சுதாவும், தீபாவும், “ ஜானகி, ஏன் பங்சனுக்கு வரலே? இப்போதும் வெளியே வராம இருக்கே?” என்று கேட்டார்கள்.
“உடம்பு சரியில்லை. வீட்டிலும் நிறைய வேலை. இன்று மட்டும்தான் லீவு, அதனால் சற்று ஓய்வெடுத்தேன்…” என்று பொய்யுரைத்தாள் அவள்.
அவர்கள் வற்புறுத்தியபோதும், “இல்லை, இரவு உணவுக்குக் கூட வர முடியாது,” என்று மறுத்துவிட்டாள்.
அவர்கள் அனிஷ்காவையாவது அழைக்க முயன்றனர். ஆனால், “ அம்மா வரலேன்னா நானும் வரமாட்டேன்!” என்று குழந்தை மறுத்துவிட்டாள்.
அம்மா கூறிய ‘அங்கே போகக் கூடாது’ என்ற வார்த்தை, அவள் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது போல.
இரவு நேரம் வந்ததும், மற்ற இரண்டு காம்பவுண்ட் வீடுகளின் மக்கள் வழக்கம் போல வெளியே அமர்ந்து அரட்டை அடித்தனர். அனிஷ்கா மட்டும் வெளியே விளையாடிவிட்டு, இரவு உணவிற்காக அம்மாவுடன் உட்கார்ந்தாள்.
இருவரும் அமைதியாக இட்லி சாப்பிட ஆரம்பித்தனர். தாயின் முகத்தில் சோர்வும் கவலையும் தெரிவதை அனிஷ்கா கண்டு கொண்டாள். தாயை சிரிக்கச் செய்வதற்காக, அனிஷ்கா தனது பொம்மைக்குச் சாப்பாடு ஊட்டுவது போல செய்தாள், அது உண்ண மறுக்கும்போது, ஜானகி தன்னை சாப்பிட வைக்க எப்படி அதட்டுவாளோ அப்படி நடித்து தனது பொம்மைக்கு உணவளிக்கும் நாடகத்தைச் செய்தாள்.
மகளின் குறும்பில் தன்னையே கண்ட ஜானகி சிரித்துவிட்டாள். அந்த சிரிப்போடு இருவரும் இரவு உணவை முடித்து உறங்க சென்றனர்.
இரவு 10.30 மணி. காம்பவுண்ட் முழுதும் அமைதியாகி விட்டது. அந்த அமைதியில், பழைய நினைவுகள் ஜானகியின் மனதை அசைத்தன.
ஜானகியின் தந்தை மருதாச்சலம், பொள்ளாச்சியில் ஒரு சிறிய பழக்கடை நடத்தி வந்தார்.
தாய் ஈஸ்வரி, கணவனின் சொல்லுக்கும் வருமானத்துக்கும் கட்டுப்பட்டு, அவரை மட்டுமே நம்பி வாழும் ஒரு சாமான்ய குடும்பத் தலைவி.
தம்பி கோகுல், இன்னும் படிப்பிலேயே இருந்தான்.
ஜானகி வெளி உலகம் அதிகம் அறியாத, வெகுளியான பெண். கல்லூரியை முடித்ததும், தந்தை உடனே திருமண வரன் தேட ஆரம்பித்தார். ஆனால் ஒன்றும் அமையவில்லை.
“சரி, ஒரு வருடம் வேலைக்குச் செல்லட்டும், பிறகு பார்ப்போம்,” என்றார் மருதாச்சலம்.
அவளை தேவராஜின் தேங்காய் எண்ணெய் நிறுவனத்தில் கேஷியராக வேலைக்கு அனுப்பி வைத்தார்.
அப்போது ஜானகிக்கு 20 வயது; தேவாவுக்கு 26 வயது.
அப்போதுதான் தேவாவின் அண்ணன் அறிவழகனின் திருமணம் முடிந்திருந்தது, வீட்டில் தேவாவுக்குப் பெண் தேட ஆரம்பித்திருந்தனர்.
பல பெண்களை கடந்திருந்தாலும், ஏனோ ஜானகியை பார்த்தவுடனே தேவாவுக்கு பிடித்துவிட்டது.
அவளது மீன் போன்ற கண்கள், நடை, உடைபாவனை, பேச்சு எல்லாமே அவனைக் கவர்ந்தன.
அவளை அருகில் வைத்துக்கொள்வதற்காக, “அந்த பைல் எங்கே? இன்னும் யாருக்கு ஏற்றுமதி செய்யணும்?” என்றெல்லாம் அடிக்கடி அழைத்தான்.
முதலில், ஜானகி அவனது நோக்கத்தை உணரவில்லை. ஆனால் போகப்போக அவனது நடத்தையில் மாறுபாடு கண்டவுடன், தள்ளி நின்றாள்.
அவளின் மறுப்பு தேவாவுக்கு கோபத்தைத் தந்தது. ஒருமுறை கடிந்து கொண்டான். ஆனால் அவனுக்கும் நன்றாகவே தெரியும் ‘இது நடக்கப்போவதில்லை’என்று .
ஏனெனில், தனது அந்தஸ்துக்கு குறைவாக உள்ள ஜானகியை சக்கரவர்த்தி ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை. கருணாம்பிகை ஜானகியை வீட்டின் உள்ளே கூட அனுமதிக்கமாட்டார்.
அதை அறிந்திருந்தும், அவளிடம் இருந்து பிரிய மனமில்லை.
நாட்கள் கடந்து செல்லச் செல்ல, தேவாவின் ஆளுமையும், மனிதநேயமும் ஜானகியின் உள்ளத்தையும் கவர்ந்தது.
அவனின் ஆஜானுபாகுவான தோற்றம், திறமை, நுண்ணறிவு எல்லாம் அவளது மனதை மாற்றின.
அவன் தந்தை சக்கரவர்த்தியைப் போலவே, ஈகை குணமும், இரக்கமும் கொண்டவன் என்பதால், அவளுக்கு அவன் மேல் அன்பும், நம்பிக்கையும் பிறந்தது.
அவர்களின் காதல் மெதுவாக வேரூன்றி, வானில் சிறகடிக்கத் தொடங்கியது.
மருதாசலம் பற்றிய பயம் இருந்தாலும், தேவா சமாளித்து கொள்வான் என்ற நம்பிக்கையில் இவளும் காதலில் திடமாக நின்றாள்.
வீட்டில் எதிர்ப்பு வரும் என்றாலும், ஜானகியை கைவிடக்கூடாது என்பதில் உறுதியாக இவனும் இருந்தான்.
எல்லா காதலர்களைப் போல அல்லாமல், கொஞ்சம் மெச்சூர்டாகவே நடந்து கொண்டனர் இருவரும். ஊரில் “இன்னார் மகன், மகள்” என்பதில் பிரபலம் என்பதால், எப்போதும் ஊருக்கு வெளியே உள்ள பார்க்கில் சந்தித்து கொள்வது வழக்கம்.
தேவாவுக்கு காரசாரமான உணவு பிடிக்கும். ஜானகி அவனுக்காக சமைத்து எடுத்துவந்து, அவனை மகிழ்ச்சிப்படுத்துவாள். அவன் கண்ணசைவிற்கு அவளும் இசைந்து போக ஆரம்பித்தாள்.
தேவாவும் அவள் அருகில் இருக்கும் போது, தன்னைவிட உலகில் யாரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என எண்ணினான். சின்ன சின்ன சண்டைகள், செல்ல சமாதானம் என்று அவர்களின் உலகில் சந்தோஷமாக இருந்தனர்.
ஆனால் விதி தனது கோர முகத்தை காட்ட தொடங்கியது.
இருவரின் காதல் விஷயம் சக்கரவர்த்தியின் காதுக்கு எட்டியது.
நேரடியாக மகனிடம் கேட்க விரும்பவில்லை. ஜானகியை ஏற்றுக்கொள்ளவும் மனம் ஒப்பவில்லை.
கருணாம்பிகையும் நெஞ்சில் அடித்துக்கொண்டு, ‘இவன் புத்தி ஏன் இப்படி போகுது?’ என்று கதறினார், தீவிரமாக மகனுக்கு பெண்ணை பார்க்க வற்புறுத்தினார்.
தீவிர தேடுதலுக்குப்பிறகு,
தனது அந்தஸ்திற்கு சற்றும் குறைவில்லாத சுப்ரமணியம்–ராஜேஸ்வரி தம்பதியின் இரண்டாவது மகளான மைதிலியை தன் மகனுக்கு பேசி முடித்தார்.
_ கருவின் குரல் ஒலிக்கும்…
error: Content is protected !!