Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 5.1

    அத்தியாயம் 5

பொன்மணிக்கு அழைப்பு வர, எதிர்பார்த்த அழைப்புதான், ஆனால் இத்தனை சீக்கிரமாக தனது எண்ணை கண்டுபிடித்து அழைத்திருக்கிறான், அந்த பயம் இருக்கட்டும் என்று நினைத்தபடி சின்ன புன்னகையோடு அழைப்பை ஏற்றாள்.



Advertisement

“பொன்மணியா?” என்றான் பெரும் தவிப்போடு.

“ம்… பொன்மணியேதான்”

“நீ எதோ ப்ளான் போட்டுருக்க, நான் என்ன பண்ணனும்னு சொல்லு?”

Advertisement

“பார்டா… என்ன சொன்னாலும் செய்வியா?”

Advertisement

இந்த பக்கம் பெருத்த அமைதி நிலவ, “என் குழந்தைக்கு அப்பா நீதானு உன் பொண்டாட்டிகிட்ட சொல்லனும். செய்வியா?” என்றாள்.

“பொன்மணி” என்றவன் குரல் உள்ளே சென்றிருக்க, “என்னோட படுக்கத் தெரிஞ்ச உனக்கு அதை ஒத்துக்க கட்ஸ் இல்ல பார்த்தியா? ஆம்பிளையாடா நீ?” என்று கேவலமாக சொல்லி,

“அன்னைக்கு நான் பொய் சொல்ல பத்து லட்சம் தந்த. இன்னைக்கு அதுக்கான வட்டியை கொடுக்கிறேன், அதை மட்டும் வாங்கிக்கோ” என்றாள்.

Advertisement

என்ன சொல்கிறாள்? பணத்தை கொடுப்பாளாம், நான் வங்கிக்கொள்ள வேண்டுமா? அவ்வளவுதானா? என்று சத்யப்ரகாஷ் யோசித்திருக்க, “ம்… நான் வட்டினு சொன்னது பணத்தை இல்ல, உன் குழந்தையை” என்றாள்.

“பொன்மணி” என்றான் பேரதிர்வாக.

“என்ன வாங்கிக்கமாட்டியா? உன் குழந்தை இல்லைனு சொல்வியா? இல்ல… அன்னைக்கு எனக்கு பத்து லட்சம் கொடுத்ததை போல, டாக்டருக்கும் அமௌண்ட் பேசி குழந்தை உன்னோடது இல்லைனு சொல்ல சொல்வியா?”

“கு… குழந்தைக்கான செலவு எல்லாத்தையும் நான் ஏத்துக்கிறேன், நீ உன் லைஃப்பை பாரு. ஆனா இந்த விசயம் நம்மளோட இருக்கட்டும்” என்றான் கெஞ்சலாக.

“என்னை நீ ஒரு நாள் யூஸ் பண்ணிக்கிட்டதை போல, உன் பொண்டாட்டியை யாருக்காவது ஒருநாள் விட்டு கொடுப்பியா?” என்றதும், “பொன்மணி” என்றான் ஆத்திரமாக.

“மாட்டல்ல? அப்பறம் எப்படிடா என்னை மட்டும் கல்யாணம் பண்ணிக்க சொல்ற? கட்டாயப்படுத்திதான்னாலும் உன்கூட படுத்து ஒரு குழந்தையை பெத்த என்னை யார் கல்யாணம் செய்துக்குவா?”

“அது யாருக்கும் தெரியாதுதான? பாலியல் சீண்டல்னுதானே எல்லாருக்கும் தெரியும். நா… நானே நல்ல பையனா?” என்றான் தயக்கத்தோடு.

“நிறுத்துறியா?” என்றாள் அதீத கோபத்தோடு.

சத்யனிடம் சத்தமில்லாமல் போகவே, ச்சு… இவன்கிட்ட எதுக்கு என் எதிர்காலம் குறித்த பேச்சு? என தன்னைத்தானே கடிந்து, “என் வாழ்க்கையை பார்க்க எனக்கு தெரியும். எனக்கு வேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்.

திருனேஷ்வரன் இன்னும் வீட்டுக்கு வரல, விடுதலையாகிட்டாராம். உன்னாலதான் இங்க வரல, திருனேஷ்வரனோட அப்பாம்மாகிட்ட அவர் தப்பு செய்யாதவர்னு நீ சொல்லனும். எப்பாடு பட்டாவது அவங்களை நம்ப வைக்கனும்”

அந்த பக்கம் அமைதி நிலவ “இதை செய்யலைனா சத்யப்ரகாஷ்கிட்ட நான் பேசமாட்டேன், அவன் மக சத்யப்ரியாதான் பேசுவா. பரவால்லையா?”

“வே… வேணாம்”

“வேணாம்ல? அப்போ திருனேஷ்வரன் வீட்டுல இன்னைக்கே போய் பேசு. அவர் வீட்டுக்கு வரும்போது மத்த எல்லாருக்கும் தப்பா தெரிஞ்சாலும் பெத்தவங்களுக்கு நல்லவரா தெரியனும்” என்றாள் கட்டளையாக.

இதை செய்தால் கட்டாயம் விசயம் வெளியே வந்துவிடும், மனைவி தன்னைவிட்டு பிரிந்திடுவாள். அடுத்த தேர்தலில் தன்னை கவுன்சிலர் பதவிக்கு நிற்க வைப்பதாக மாமனார் பேசியிருக்கிறார். அனைத்தும் பாழாகிவிடும்.

அதோடு உண்மை குற்றவாளி நான் என்பது திருனேஷ்வரன் அறிந்தால் அவன் வேறு பழிவாங்க கிளம்புவான், தேவையில்லாத இம்சைகள் என்று நினைத்தவன், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள,

“இல்ல… இப்படி செய்தா உனக்கும்தான் பிரச்சனையாகும். பொய் பேசினேன்னு உன்னையும்தான் தப்பா பேசுவாங்க, வேணும்னா அந்த திருனேஷ்வரனுக்கு வேற வகையில உதவி செய்றேன், லைஃப் டைம் செட்டில்மண்ட் போல பண்றேன்”

“எனக்கு ஆகுற பிரச்சனையை ஃபேஸ் பண்ண எனக்குத் தெரியும். வேற லைஃப் தேடிக்கிற எண்ணம் எனக்கில்ல. நான் பொய் பேசினேனு தெரிஞ்சாலும் எனக்கு பிரச்சனையில்லை.

திருனேஷ்வரனோ, அவங்க அப்பாம்மாவோ திட்டினாலும், தண்டனை கொடுத்தாலும் சந்தோசமா வாங்கிப்பேன். எனக்குள்ள உள்ள குற்றவுணர்வை கொஞ்சமாவது போக்கும்.

என் எதிர்காலத்தை பத்தி நீ கவலைப்பட தேவையில்ல, திருனேஷ்வரன் நல்லவர்னு அவங்கம்மாப்பாக்கு தெரியனும். இது நடந்தே தீரனும். உன் விசயம் திருனேஷ்வரனோட அப்பாம்மாவோட முடியனுமா? இல்ல… உன் பொண்டாட்டி, அப்பாம்மா வரை போகனுமானு நீயே முடிவு பண்ணிக்க. உனக்கு இன்னைக்கு ஒரு நாள்தான் டைம்” என்று இணைப்பை துண்டித்தாள் பொன்மணி.

எப்படியும் நிறைய யோசிப்பான். எதாவது புது திட்டம் தீட்டியபின்னேதான் திருனேஷ்வரன் வீட்டிற்கு செல்வான். அதற்குள் நாம் இன்னொரு வேலையை செய்து முடிப்போம் என்று சத்யப்ரகாஷின் வீட்டிற்கு வேலை செய்ய செல்லும் பெண்ணை பார்க்க கிளம்பினாள் பொன்மணி.

ஒரு மணி நேர தேடலுக்கு பின்னே, “அக்கா” என்றாள்.

“யாரைம்மா கூப்பிடுற?”

“உங்களைதான்க்கா, நீங்க கவுன்சிலர் வீட்டுலதான வேலை பார்க்குறிங்க?”

“ஆமாம்”

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்க்கா”

“ம்மா, நான் அவங்க வீட்டுக்கு சமைக்கத்தான் போறேன், உனக்கு எதாவது தேவைனா கவுன்சிலர் ஐயாவையே பாரு”

“இல்லக்கா, எனக்கு உங்க உதவிதான் வேணும், வீட்டுக்கு வந்தாலோ, இல்ல போன்ல பேசினாலோ உங்களுக்கு தேவையில்லாத பிரச்சனை வரும்னுதான் இங்க வந்துருக்கேன், இந்த நேரம் நீங்க ஸ்கூல்ல பிள்ளைகளை விட வருங்கனு தெரிஞ்சு வந்துருக்கேன்”

“இது எதோ வில்லங்கம் போல, ஆளை விடு சாமி. அங்க சமைக்கிறதைதான் தினமு என் பிள்ளைகளுக்கு கொடுக்குறேன். என் பொழப்பை காலி பண்ணிடாத”

“அச்சோ அப்படிலாம் இல்லக்கா. உங்க கவுன்சிலர் ஐயாவோட மருமகளுக்கு நல்லதுதான் செய்யுறேன். என் அப்பாக்கு தெரிஞ்சா, உனக்கெதுக்கு தேவையில்லாத வேலைனு என்னை திட்டுவார்னுதான் உங்க உதவியை எதிர்பார்க்குறேன், இதை செய்தா அந்தக்கா உங்களை பாராட்டத்தான் செய்வாங்க”

ஐயா மருமகளுக்கு நல்லதா? என யோசித்தவள் “என்ன விசயம்?” என்றாள்.

“இப்படி வாங்க” என்று சற்று நேர நடைபயணத்திற்கு பின்னே வந்த கோவிலில் அமரச் செய்து, திருனேஷ்வரனின் விலாசத்தை செல்லி, “அவர் வீட்டுக்கு உங்க சின்னய்யா இன்னைக்கு போகப்போறார். அதை மட்டும் உங்க சின்னய்யா பொண்டாட்டிக்கிட்ட சொல்லிடுங்க”

“அந்த பையன் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவன்தான?”

“ஆமாம்க்கா”

“எனக்கெதுக்கும்மா இந்த தேவையில்லாத வேலை? எதாவது வில்லங்கம் ஆகிடுச்சுனா கவுன்சிலர் ஐயா என்னை கொன்னுடுவார்”

“அப்படிலாம் ஏதும் ஆகாதுக்கா. நீங்க என்ன பொய்யா சொல்லப்போறிங்க? உங்க சின்னய்யாவை இன்னைக்கு ஒருநாள் மட்டும் ஃபாலோ பண்ணுங்க, நான் சொன்ன மாதிரி அவர் திருனேஷ்வரன் வீட்டுக்கு போவார். அதுவும் யாருக்கும் தெரியாம திருடன் மாதிரி போவார். அவர் போறது உண்மைதானு தீர தெரிஞ்ச பின்னாடி அவங்க பொண்டாட்டிக்கிட்ட சொல்லிடுங்க”

யோசித்தபோதும் அப்பெண் மறுக்கவே, “இதை செய்திங்கனா உங்களுக்கு அம்பதாயிரம் தரேன்” என்றாள்.

ஆவென வாய்பிளக்க, “உண்மையை சொன்னா அம்பதாயிரம், உங்க சின்னய்யா அவங்க வீட்டுக்கு போறதை வீடியோ எடுத்து எனக்கு அனுப்பினா அதுக்கு தனியா அம்பதாயிரம். மொத்தமா ஒரு லட்சம் தரேன்” என்றாள்.

ஒரு வார்த்தை சொல்ல ஒரு லட்சமா? இதற்கு பின்னால் எதேனும் ஆபத்திருந்தால்? என்று பணிப்பெண்ணுக்கு பயம் வரவே, மறுத்தாள்.

அரைமணி நேரம் பேசி சம்மதிக்க வைத்து, “இதை செய்து முடிச்சா உடனே பணம் தரேன். கோவில்ல வச்சு சொல்றேன்… சாமி சத்தியமா ஏமாத்தமாட்டேன்” என்று தனது கைப்பையிலிருந்த பணத்தை எடுத்து, “அட்வான்ஸா பத்தாயிரம் வச்சுக்கோங்க. மிச்சத்தை செய்து முடிச்சதும் தரேன்.

திரும்பவும் சொல்றேன்க்கா, நீங்க பொய் சொல்லப்போறதில்ல, உண்மையைத்தான் சொல்றிங்க” என்று அப்பெண்ணுக்கு தைரியம் அளிக்க, “சின்னம்மாகிட்ட மட்டும் சொல்றேன். வீடியோ உனக்கே அனுப்பிடறேன்” என்றாள்.

“வீடியோவை அனுப்ப உங்க சின்னம்மா நம்பர் வேணுமே”

இவள் தயங்க, “உங்களை எப்போவும் காட்டிக்கொடுக்க மாட்டேன்க்கா” என்று உறுதியளித்து சத்யப்ரகாஷின் மனைவி எண்ணை பெற்றுக்கொண்டு “ரொம்ப தேங்க்ஸ்க்கா” என்று வீடியோ அனுப்பி வைக்க தனது எண்ணை கொடுத்துவிட்டு வெற்றி உணர்வோடு வீட்டிற்கு கிளம்பினாள்.

 *** *** *** *** *** ***

“எவ்வளோ நேரமா சாப்பிடக்கூப்பிடறேன், வரியா வெண்பா?” என கடுகடுத்தார் செல்லம்மாள்.

வெண்பாவின் கண்கள் கலங்கிச் சிவந்திருக்க, தற்போதுதான் மகளைப் பார்த்தவர், “என்னடீ ஆச்சு? எதுக்கு இப்படி அழுதிருக்க?” என்றார்.

“அம்மா… அந்த அக்காகிட்ட பேசினேன்”

“எந்த அக்காகிட்ட”

“பொன்மணி அக்காகிட்ட”

“அச்சோ… அந்த புள்ளைகிட்ட எதுக்குடீ பேசின? என்ன சொன்னா? உன் அண்ணனால என் வாழ்க்கைப் போச்சுனு அழுதாளா? நம்ம குடும்பத்தை கேவலமா பேசினாளா?” என்றார் பதட்டத்தோடு.

“அப்படிலாம் ஏதும் பேசலம்மா, பொன்மணிக்கானு நான் கூப்பிட்டதும், என்னை அக்கானு கூப்பிடாதனு சொன்னாங்க. நான் கூட கோபமா சொல்றாங்களோனு நினைச்சு, சாரிங்க, நீங்க என்னை விட பெரியவங்கனுதான் அப்படி கூப்பிட்டேன்னு சொன்னேன்.

அவங்க கண்ணு கலங்க ஆரம்பிச்சிடுச்சு. அண்ணா தப்பு செய்திருந்தா நான் கூப்பிட்டதும் கோபம்தானே பட்டிருக்கனும்? ஏன் அழறாங்கனு தோண ஆரம்பிச்சது.

அவங்களை பார்க்கும் முன்னாடி இருந்த தயக்கம் குற்றவுணர்வு எல்லாமும் அவங்களைப் பார்த்ததும் போய்டுச்சும்மா, எங்கண்ணா உண்மையாவே தப்பு செய்தாரானு கேட்டேன்.

உங்கண்ணன் மேல எந்த தப்பும் இல்ல, அன்னைக்கு பொய் சொல்லவேண்டிய கட்டாயத்துல நாங்க மாட்டிக்கிட்டோம், அவர் வீட்டுக்கு வந்தா குற்றவாளி போல பார்க்காதிங்கனு அழுதுட்டே சொன்னாங்கம்மா” என்றாள் வெண்பா.

“என்ன சொல்ற வெண்பா? நிஜமா அந்த பொண்ணே அப்படி சொன்னுச்சா?”

“ஆமாம்மா, நாமதான் அண்ணாவை தப்பா நினைச்சிட்டோம், அன்னைக்கு என்ன நடந்ததுனு அண்ணாகிட்ட கேட்டிருக்கனும்”

“கேட்குற சூழல்லயா இருந்தோம்? போலீஸ் ஒரு பக்கம்… ஊரார் ஒரு பக்கம், இதெல்லாத்துக்கும் மேல அந்த பொண்ணு திருனேஷ்வரன்தான் தப்பு செய்ய முயற்சி பண்ணினானு மந்திர வாக்கு மாதிரில்ல சொன்னுச்சு, ஒரு பொண்ணு இந்த விசயத்துல பொய் சொல்லுவாளானு கண்டோமா?” என தவித்துக் கலங்கினார் செல்லம்மாள்.

“வெண்பாம்மா, என்னடா சொல்ற? அந்த பொண்ணே இப்படி சொன்னுச்சா?” என்ற வில்வராஜிற்கு நெஞ்சை அடைத்தது.

“ஆமாம்ப்பா, அண்ணா யாரோ மாட்டி விட்டுருக்காங்க”

“அப்போ தப்பு செய்தவன் யாருனு கேட்க வேண்டியதுதானே?” என்றார் செல்லம்மாள்.

“நான் கேட்குறதுக்கு முன்னாடி அவங்களே சொன்னாங்கம்மா, தப்பு செய்வனே உங்ககிட்ட மன்னிப்பு கேட்க வருவான்னு சொன்னாங்க”

மகன் தவறிழைக்கவில்லை, ஆனாலும் வெளியுலகம் தவறானவன் என்றுதானே நினைக்கும் என்பதை தாள முடியாமல்தான் திருனேஷ்வரன் வீட்டிற்கு வரவில்லை என்று நினைக்க கண்ணீர் வந்தது வில்வராஜிற்கு.

“இனி தப்பு செய்தவன் வந்து பேசி மட்டும் என்னவாகப்போகுது வெண்பாம்மா? மகனும் நாமளும் பட்ட அவமானம் மறைஞ்சிடுமா?” என்றார் கலங்கிய கண்களோடும் கரகரத்த குரலோடும்.

“அப்பா… சந்தர்ப்பம் அப்படி நினைக்க வச்சிடுச்சு, இனி எல்லாமும் சரியா நடக்கும்னு நம்புவோம், நாம சென்னை கிளம்பலாம், அண்ணாவை தேடி கண்டுபிடிச்சு, அண்ணாவை தப்பா நினைச்சதுக்கு மன்னிப்பு கேட்டு எப்படியாவது கெஞ்சி வீட்டுக்கு அழைச்சிட்டு வரலாம்” என்றாள் வெண்பா.

“உனக்கு காலேஜ் போகனுமே, நீ கிளம்பு, நாங்க பார்த்துக்கிறோம்” என்றார் செல்லம்மாள்.

வெண்பாவிற்கு நாளை பரிட்சை இருக்கிறதுதான், ஆனால் ஏற்கனவே அண்ணன் வீட்டிற்கு வராதது பாதித்திருக்க, தற்போது குற்றவாளி அல்ல என சம்மந்தப்பட்டர்களே சொன்னதும் வெகுவாய் மனம் தவித்தது தங்கைக்கு. எனவே “ம்மா இப்போவே சென்னை கிளம்பலாம், அண்ணாவை பார்த்துட்டு நாளைக்கு எக்ஸாம்க்கு காலேஜ் போய்டறேன்” என்றாள்.

“வேணாம் வெண்பா, அது ரொம்ப அலைச்சலாகிடும், நீ காலேஜ் போ, உன்னையாவது அவனா வந்து பார்க்கட்டும்” என கண்ணீர் வடித்தார் செல்லம்மாள்.

“ப்ச் ம்மா, அழாத” என்று செல்லம்மாளின் கண்ணீரை துடைக்க துடைக்க, வழிந்துகொண்டே இருந்தது.

பத்து நிமிடத்திற்கு மேல் அழுது கரைந்தவர், “என் மகன் நல்லவன், இது போதும் எனக்கு” என்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “என்னதான் சூழ்நிலைனாலும் இந்த விசயத்துல ஒரு பொண்ணு பொய் சொல்லலாமா? அந்த சூழ்நிலை அப்படி சொல்ல வச்சாலும், மூணுமாசம் கழிச்சுதான தண்டனை உறுதியானது, அஞ்சு வருசம் ஜெயில்ல இருக்கனும்னு தெரிஞ்சதுக்கப்புறம் கூடவா அவளுக்கு மனசாட்சி உறுத்தல?

ஒத்த வார்த்த இதை அப்போவே சொல்லியிருந்தா என் மகன் இத்தனை வருசம் ஜெயில்ல இருக்க தேவையிருந்திருக்காதே… யாரை காப்பாத்த என் மகனை பலிகடா ஆக்கினா?

ஊரே என் மகனை கரிச்சு கொட்டினாங்களே, எப்பேர்பட்ட பழி? இத்தனையும் செய்துட்டு, தப்பு செய்தவன் யாருக்கும் தெரியாம வந்து மன்னிப்பு கேட்பானாமா? அதனால யாருக்கு என்ன லாபம்?

யாராயிருந்தாலும், எந்த கொம்பனா இருந்தாலும் வரட்டும் அவன்… அவன் உண்மை முகத்தை வெளியுலகத்துக்கு சொல்லி, என் மகன் பேரை மீட்டெடுக்கறேன்” என்று சவால் விடுவதாக நினைத்து புலம்பித் தீர்த்தார் செல்லம்மாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!