Skip to content
Post Views: 11,330
நீங்காத உறவே!…
அத்தியாயம் 7
மகளின் அதிர்ந்த முகம் பார்த்தே தங்களை, அவள் எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது. திலகாவுக்கு தற்போது மிகுந்த தர்ம சங்கடம்.
“என்னம்மா இங்க நிக்கிறீங்க?” என்றாள் நிறை.
Advertisement
நிறை என்று கணவனைப் பார்த்துக் கொண்டே பேசத் தொடங்கியவருக்கு வார்த்தை மட்டும் வரவில்லை. அவளும் பெற்றவர்களை பார்த்த வண்ணம் தான் இருந்தாள். வேறு எதுவும் பேசவில்லை.
“நிறை அம்மாவுக்கு கொஞ்சம் பணம் வேணும்” என்றதும் அதிர்ந்து போனவள்,
“என்னவாம்?”
Advertisement
“அவசரம் நிறை. உன்கிட்ட கேட்கவே கூடாதுன்னு தான் இருந்தேன். ஆனால், என்ன பண்ண இந்த கையாலாகாத மனுசன வச்சிட்டு ஒரு காரியத்துக்கும் லாயக்கு இல்லை” என்றதும், அருகில் வந்த தெய்வம்,
Advertisement
“நானும் வெளியே எங்கெங்கயோ கேட்டுப் பார்த்தேன். கிடைக்கவே இல்லை. சமாளிக்க முடியாம தான் கடைசில உன்கிட்ட வந்தது நிறை” என்றார் தந்தை.
“எதை சமாளிக்க? என்ன விபரம்? தெளிவா சொல்லுங்க?” என்றதும்,
“அதுதான் நிறை வளர்க்கு சீர் செஞ்சோம்ல… மழைக்காலம்னு பழக்கடையும் ஒழுங்கா ஓடல, உங்க அப்பாவுக்கு ஒரு இடத்துல வேலைக்கு சொன்னோம் அதுவும் தோதா அமையல… வட்டிக்காரன் உங்க அப்பாவ நெரிக்கிறாங்க”
Advertisement
நிறை முகத்தில் பிடித்தமின்மை வெளிப்பட்டது. பின்ன போன மாசம் தான் திருமணம்.. கடன் வாங்கி செய்தார்கள். முதல் மாசமே வட்டி கட்ட காசு இல்லை என்றால் எதற்கு கடன் வாங்கணும். இதில் தந்தை அதற்கு மேல் வட்டி கட்ட கடன் வாங்க போனாராம். கடன் வாங்கி அந்த கடனுக்கு வட்டி கட்ட மேலும் கடன் வாங்கி.. கடைசியில் ஒன்றுக்கும் வழியில்லாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். அவ்வளவு எரிச்சலாக இருந்தது நிறைக்கு…
அவர்தான் சரியில்லை என்றால், இந்த அம்மாவாவது ஒழுங்காக இருக்க வேண்டியதுதானே.. தகப்பனோடு சேர்ந்து கொண்டு செலவழிக்க வேண்டியது, கடன் என்றதும் ரெண்டு பேரும் கையை பிசைய வேண்டியது.
“எப்படியாவது சமாளிங்கமா என்கிட்ட பணம் இல்லை”
“ஐயோ நிறை, நாங்க உன்னை நம்பித்தான் இருக்கோம்”
“என்ன எதுக்கு நம்புறீங்க. இந்த பணத்துக்கு நான் எப்படிமா பொறுப்பேற்றுக்க முடியும். கடன் வாங்கி குடும்பமா சேர்ந்து செலவழிச்சாலும் பரவாயில்லை, உனக்குத்தான் செஞ்சோம், பாருன்னு சொல்றதுக்கு… நீங்க வாங்கின காசுல பத்து ருபாய் கூட நான் தொடல. ஒரு மாசம் முழுக்க நான் வேலை செஞ்ச சேர்த்த காச கொடுப்பேன்னு எப்படி எதிர்பார்க்கிறிங்க” அவ்வளவு கோபம் அவள் குரலில்… இப்படியா கொஞ்சமும் விபரம் இல்லாமல் ஒரு பெற்றவர்கள் இருப்பார்கள்.
“அம்மாவுக்கு புரியாம இல்ல நிறை. எப்படியாவது இந்த ஒரு மாசம் மட்டும் கொடுத்து உதவுடி. அடுத்த மாசம் நாங்க எப்படியாவது சமாளிச்சுக்கிறோம்” பேசி பார்க்க ஆரம்பித்தார்.
“அம்மா புரியாம பேசாதீங்க. எனக்கும் கல்யாணம் ஆயிருச்சு. இந்த ஒரு மாசம் நான் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு டெய்லி பேக்கை தூக்கிட்டு வந்துட்டேன். எங்களோடது கூட்டு குடும்பம் வேற… அவங்க வீட்ல உட்கார்ந்து அவங்க காசுல சாப்பிட்டுட்டு சம்பளத்தை மட்டும் நான் எப்படி உன்கிட்ட கொடுக்க முடியும். என் புருஷன் கணக்கு கேட்க மாட்டாரா”
“எங்க அண்ணன் வீடு தான் நிறை. எங்க அண்ணன் மகன பத்தி எனக்கு தெரியாதா?” என்று ஆரம்பிக்க,
“அம்மா வாய மூடுங்க என்னை எதுவும் பேச வைக்காதீங்க சொல்லிட்டேன். அண்ணே மகன்னு இன்னும் எவ்வளவு காலத்துக்கு சொல்லுவீங்க. என்னைய சும்மா தள்ளிடீங்க. அந்த வீட்ல வெளியே சொல்லாம நான் எவ்வளவு சங்கடத்தை அனுபவிக்கிறேன் தெரியுமா?.. எனக்கு முன்னாடியே ரெண்டு வாழ வந்த பிள்ளை அங்க இருக்காங்க. அவங்க என்னை ஒரு புல்லுக்கு சமமா கூட மதிக்க மாட்டாங்க. ஏன்னா நான் சும்மா வந்தவ… அந்த வீட்ல ரெண்டு வாஷிங் மெஷின் இருக்கு. நான் இன்னமும் கையில தான் துவைக்கிறேன். ஏன்னா, அது அவங்க கொண்டு வந்தது நான் சும்மா வந்தேன். அந்த வீட்ல இருக்கிற எல்லாம் அவங்க கொண்டு வந்தது எனக்குன்னு பெருசா என்ன கொடுத்துட்டீங்க அதெல்லாம் எடுத்து யூஸ் பண்ண எனக்கு எவ்வளவு சங்கடமா இருக்கு தெரியுமா?”
“காலையில் எட்டு மணிக்கு அறையும் குறையுமா சாப்பிட்டுட்டு வந்து நின்னா, வீட்டுக்கு போக நைட்டு பத்து மணி ஆயிரும். வெறும் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு இப்படி ஓடிட்டு இருக்கேன் நான்… என் புருஷன் என்ன விட பாவம். நேர காலம் தெரியாம வேலைக்கு போயும் பெரிய அளவுல சம்பாத்தியம் இல்லை. நாளைக்கு எங்களுக்குன்னு புள்ள குட்டி எல்லாம் வந்தா எப்படி சமாளிக்கன்னு தெரியல” என்று புரிய வைக்க முயற்சிக்க,
“அப்ப நீ பணம் தரமாட்டியா நிறை. உன்ன நம்பித்தான் நானும், உங்க அப்பாவும் வந்துட்டோம். இந்த ஒரு மாசம் மட்டும் கொடு நிறை”
“ஏம்மா என்ன புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க. அங்க வீட்ல கேட்ட நான் என்ன பதில் சொல்லுவேன். சம்பளத்தை வாங்கி பெத்தவங்க கிட்ட குடுத்துட்டு, டெய்லி நான் வேலைக்கு போறேன்னு ஜம்பமா என் மாமியார் கிட்ட பேச முடியுமா?.. நான் இப்படி எல்லாம் பண்ணுனா என்ன சொந்தமா இருந்தாலும் என்ன பேசிடுவாங்க. எனக்கு பயமா இருக்கு”
திலகா தம்பதிகளுக்கே தெரியும் பணம் கேட்பது முறையில்லை என்று… அதனால்தான் கடையில் வைத்து கேட்டது. அங்கு நிறை வீட்டில் வைத்து கேட்க முடியாதல்லவா!…
“நிறை எங்களுக்கும் உன்ன விட்டா யார் இருக்கா? எல்லாத்தையும் நீ தானே பார்த்த”
“இந்த நினைப்பு எல்லாம் கடன் வாங்கி உங்க சின்ன மகளுக்கு சீர் செய்யும் போது எங்க போச்சு?”
“என்னடி இப்படி பேசுற.. வளரு உன் தங்கச்சி தான அவ மேல உனக்கு என்ன?” நிறைத்து சலிப்பாக இருந்தது. எப்படி சொன்னாலும் இவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் வளர்க்கு செய்வதால் தான் இவள் இப்படி பேசுகிறாள் என்று நினைப்பு தான் இருக்கும்.
“என்னால உதவி செய்ய முடியாதும்மா.. எந்த தைரியத்துல கடன் வாங்கினீங்களோ அந்த தைரியத்துல கழிங்க” முடித்து விட்டாள் நிறை.
திலகாவுக்கு அழுகை வந்துவிட்டது, “இப்படி ஒரேடியா எங்களை கைவிட்டா எப்படி நிறை. நான் வேற யாரை எதிர்பார்ப்பேன் சொல்லு” அழுகை பொங்கியது அவருக்கு…
கல்யாணம் முடிந்து அடுத்த மாசத்துலே மகள் கணவன், கணவன் வீடு என ஒதுங்கிக் கொண்டாளே என்று…
பெற்றவள் அழுகை, நிறைக்கு மனதை அழுத்தியது.
“அம்மா முதல்ல என்னோட சூழ்நிலையை புரிஞ்சுக்கோங்க. நீங்க வளர எதிர்பார்க்கலாம் இல்ல.. அவ புருஷன் கவர்மெண்ட் வேலை பாக்குறவரு, வசதியானவங்களும் கூட.. அவளுக்காகத்தானே கடன் வாங்கினீங்க, நிச்சயம் உதவி செய்வா”
“அது எப்படி நிறை அடுத்த வீட்டில் பொண்ணை கட்டி குடுத்துட்டு, அவங்க கிட்ட போய் கேட்க முடியும். நம்ம குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க”
“அப்புறம் நான் மட்டும் என்ன? என்னை ஒருத்தன் கையில புடிச்சு குடுத்து இருக்கீங்க” என்றதும்,
“நீ வீட்டுக்கு பெரியவ, அது என்ன இருந்தாலும் சொந்தம்” என்று ஆரம்பிக்கும் போதே கைநீட்டி தடுத்து விட்டாள் நிறை, அடுத்து தாய் என்ன சொல்வார் என்று தெரியும்.
“அம்மா, ஒரு விஷயத்தை சொல்றேன் நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க. என்னால முடிஞ்சது மாசம் சாப்பாட்டுக்கு அரிசி, மளிகை வாங்கி போடுறேன். அதுதான் அம்மா என் வசதிக்கு முடியும். நான் இங்க கடையில வேலை பாக்குறனால என் கணக்கில் சொல்லி எடுத்து போட்டுக்கிறேன். வேற எதுவும் என்கிட்ட எதிர்பாக்காதீங்க நான் கடனும் சுமக்க முடியாது” என்று தெளிவாக சொல்ல,
திலகா நிறையின் கையைப் பிடித்து விட்டார்.
“நிறை, இந்த ஒரு தடவை மட்டும் எப்படியாவது உதவி பண்ணு நிறை. நேத்தே வந்து அந்த ஆளு சத்தம் போட்டு போனாரு.. வீட்டுக்கு போகவே பயமா இருக்குடி. இந்த ஒரு மாசம் மட்டும் எப்படியாவது நீ சமாளி. நாங்க ரெண்டு பேரும் உன்னை நம்பித்தான் வந்தோம் நிறை எங்கள கைவிடாதே” இன்று மகள் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு அழுக,
நிறைக்கும் கண்களில் கண்ணீர் நிரம்பியது. தாயின் அழுகையை உதாசினம் செய்து பணத்தை எடுத்துக்கொண்டு செல்ல முடியவில்லை.
“நிறை, அப்பா லோடுமேன் வேலைக்கு கேட்டு இருக்கேன். நாளைல இருந்து நான் போயிடுவேன். கடனா காசு கொடு நிறை” என்று தந்தையும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.
திலகாவும், மகள் கைகளை விடவில்லை எப்படியாவது பணம் கொடு என்றுதான் நின்றார். நிறை மிகவும் சோர்ந்து போனாள். வளரின் கணவர் வாங்கும் சம்பளத்திற்கு எட்டாயிரம் எல்லாம் பெரிய விஷயம் கிடையாது. ஆனால், நிறைக்கு அப்படி அல்ல. அதுதான் அவள் ஒரு மாத வருமானம். எதுவும் பேச முடியாமல் பணத்தை எடுத்து அவர்கள் கையில் கொடுத்து விட்டு சோர்ந்த நடையோடு பேருந்தை நோக்கி நகர்ந்தாள்.
வீட்டுக்குள் போகவே கால் கூசியது. காலையில் எல்லோரோடும் சேர்ந்து பார்க்கும் வேலை மட்டும்தான். மற்றபடி எந்த வேலைக்கும் அவளுக்கு நேரம் இருப்பதில்லை. அவள் வீட்டிலும் இருப்பதில்லை. ஒரே காரணம் நான் வேலைக்கு போகிறேன் என்பது மட்டும்தான். மனதில் அவ்வளவு பயம். சம்பளம் எங்கே என்று மாமியார் கேட்டால் என்ன சொல்வது?…
இன்னும் பிரபாகரன் வீடு வந்திருக்கவில்லை. அவனை நினைத்து மனம் அதிக கவலை கொண்டது. எதுவும் பேசாமல் அறையில் போய் முடங்கிக் கொண்டாள். அழுகை வரும் போல இருந்தது. ஆனாலும் பெற்றவர்களுக்கு தானே கொடுத்தேன். விட்டுத்தள்ளு என்று இன்னொரு மனமும் வாதிட்டது.
“நிறை, என்ன வந்ததும் படுத்திட்ட? என்று வந்தார் கல்யாணி.
“ஒன்னும் இல்ல அத்தை. சோர்வா இருந்துச்சு. இப்ப முகம் கழுவிட்டு வாரேன். என்ன பண்ணனும், தோசை ஊத்தவா” என்று எழுந்திருக்க,
“வேணாம் நீ வர வேணாம் கொஞ்சம் படு. வேலைக்கு போயிட்டு வர, உனக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைப்படும். நான் தோசை கொண்டு வரேன். சாப்பிட்டு படு, உன் புருசன் வர லேட் ஆகும் போல, போன் பண்ணி என்னன்னு கேளு” என்றுவிட்டு போனார் கல்யாணி.
நிறை பிரபாகரனுக்கு அழைத்தாள்.
“ஹலோ, என்னங்க”
“ஹான், நிறை. நான் தான் சொல்லு?”
“எப்போ வீட்டுக்கு வாரீங்க. லேட் ஆச்சு. அத்தை தேடுறாங்க” என்றதும்,
“வர லேட் ஆகும். ரெண்டு இட்லி எடுத்து வச்சிட்டு நீ தூங்கு. அம்மா கிட்ட போன குடுக்குறியா?” என்றதும் சரி என்றவள்,
“அத்தை, உங்க மகன்” என்றாள்,
இவளை பார்த்ததும் ரோகினி முகத்தை திருப்பிக் கொண்டாள். “வந்ததும் மகாராணி சொகுசா படுத்துட்டா.. இவளுக்கும் சேர்த்து நாங்க பாக்கணும்” எரிச்சலாக இருந்தது ரோகினிக்கு..
“அங்க நாலு தோசை இருக்கு, எடுத்து சாப்பிட்டுட்டு நீ போய் தூங்கு” என்றதும், அப்போதிருந்த மனநிலைக்கு நிறையும் தலையாட்டி சென்றாள்.
“சினேகா ஒரு இடுக்கு இட்லி ஊத்தி வை.. சின்னவனுக்கு இட்லி வேணுமாம். பாவம், நிறைக்கு முடியல போல.. ஒரு வீட்டுக்குள்ள ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யுங்க” என்றார் கல்யாணி.
ஆனால், சினேகா முகம் மாறிப்போனது. இது எதுவும் நிறைக்கு தெரியாது. பேருக்கு உண்டு விட்டு படுத்து விட்டாள். லேட்டாக பிரபாகரன் வந்ததோ, சாப்பிட்டு விட்டு வந்தவன் சோர்வாக படுத்திருந்த மனைவியை தொட்டுப் பார்த்ததை கூட நிறை உணரவில்லை.
காலையில் நிறைக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. பயத்தில்தான் காய்ச்சல் வந்தது போல… என்னதான் நல்ல மாமியார், கணவன் என்று இருந்தாலும் தாய் மாமனை நினைத்து பயம். அவர் என்ன நினைத்து தன்னை இந்த வீட்டின் மருமகளாக எடுக்க மாட்டேன் என்று சொன்னாரோ!.. அதை நிரூபிப்பது போல் அல்லவா தன்னுடைய நடவடிக்கையும் இருக்கிறது.
“என்ன பண்ணுது நிறை?” என்றான் கணவன்.
“ஒன்னும் இல்லை. கொஞ்சம் முடியல அவ்வளவுதான்”
“அப்ப இன்னைக்கு வேலைக்கு போக வேணாம். வீட்ல ரெஸ்ட் எடு. ஈவினிங் நம்ம ஹாஸ்பிடல்ல போய் பார்ப்போம்” என்றதும் சரி என்று தலை அசைத்தாள்.
கணவனை வேலைக்கு அனுப்ப எழுந்து கொள்ள பார்க்க, “நீ படு நான் என் சாப்பாட்டுக்கு அம்மாவை பாத்துக்குறேன்”
இவ்வளவு அனுசரணையாக இருக்கும் கணவனுக்கு தன்னால் எந்த பிரயோஜனமும் இல்லையே!… இந்த கடன் பஞ்சாயத்து, பணக்கஷ்டம் இல்லாத நிம்மதியான வாழ்க்கை எங்கு கிடைக்கும். மனம் கவலையில் அரித்தது.
பிரபாகரன் உணவுக்காக வந்ததும் அவன் பொறுப்பை அவன் அண்ணன் மனைவிகளிடம் ஒப்படைத்து ஒதுங்கிக்கொண்டார் கல்யாணி. அவருக்கு வேற ஒரு வேலை இருக்க இவ்வாறு செய்தார்.
“ஏன் தம்பி, நீங்க சாப்பிடுறது ஒன்றை தோசை. அதுக்கு கூட அந்த மகாராணி வரமாட்டாளாமா?”
“அவங்களுக்கு முடியல அண்ணி. வேலைக்கு போறதால ரொம்ப சோர்வா இருக்கும் போல”
“ஆமா, பெரிய கலெக்டர் வேலை. பொட்டிக்கடையில பொட்டலம் போடுவதற்கு முடியாம போய் சோர்வு வருதாக்கும்” தொடர்ந்து நிறையை விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள் ரோகினியும், சினேகாவும்…
“தம்பி இருங்க உங்க அண்ணன்கள் இரண்டு பேரும் சாப்பிடட்டும். அப்புறம் உங்களுக்கு தோசை ஊத்தி தாரேன்” என்று ரோகினி சொல்லும் போது தான் மெல்ல வெளியே எழுந்து வந்தாள் நிறை.
உணவருந்த உட்கார்ந்திருந்தான் பிரபாகரன். இன்னும் அவன் அண்ணன்கள் இருவரும் வரவில்லை. அவர்கள் இருவரும் வந்து சாப்பிட்டு, அதன் பின் இவனுக்கு கொடுக்க வேண்டும். பிரபாகரன் முகம் யோசனையாக இருக்க, தாங்கவில்லை நிறைக்கு…
வேகமாக சமையல் அறைக்கு வந்தவள் என்ன இருக்கு என்று பார்க்க… அவர்கள் செய்ததை தொடவில்லை . பழைய சாதம் இருந்தது அதை மோரில் கரைத்து, ரெண்டு மிளகாயை கிள்ளி போட்டு, கணவன் அருகில் சென்று வைக்கவும்… பிரபாவிடம் ஒரு பேச்சு, சத்தம் எதுவும் இல்லை. அமைதியாக மனைவி என்ன கொடுத்தாளோ நிறைவாக உண்டு விட்டான்.
அவன் உணவை முடிக்கும் முன் நிறை, ஒரு தக்காளி இரண்டு கேரட் ரெண்டு பீன்ஸ் வைத்து ரவா கிச்சடி செய்தாள். உணவை பொருத்தவரை நிறைக்கு பிரபாகரன் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டான். நிறைக்கு உடல் சோர்வாக இருந்தாலும் கணவன் கிளம்பும் வரை அங்கிருந்து விட்டு அவன் சென்றதும், இருந்த கொஞ்ச டீயை சூடு பண்ணி அருந்திவிட்டு போய் படுத்து கொண்டாள். என்னவோ பண்ணுங்கள் என்று…
நிறை கண்மூடிபடுத்து கால் மணி நேரம் கடந்து இருக்கும், யாரோ தன் நெற்றியில் கைவைத்து பார்க்கும் உணர்வு வர பட்டென்று எழுந்து கொண்டாள். அங்கு இருந்தது பிரபாகரன் தான்.
“என்னாச்சு” என்றதும், அவன் கையில் பார்சல் இருந்தது.
“இதுல நாலு இட்லி இருக்கு, மாத்திரை இருக்கு சாப்பிட்டு போட்டு படுத்து தூங்கு” என்ற கணவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள் மனைவி.
அவள் முகம் பார்த்து லேசாக தயக்கம் வந்தது அவனுக்கு… உணவு என்ற ஒன்றை பெற்ற தாய்க்கு பின் உரிமையாக செய்வது மனைவி மட்டுமே என்று உணர்ந்து கொண்டான்.
உண்மையில் நிறைக்கு நல்ல காய்ச்சல், எழுந்திருக்கவும் முடியவில்லை. “எனக்கு முடியல நீங்க சாப்பாட்டுக்கு வெளியே பாத்துக்கோங்க” என்ற ஒற்றை வார்த்தையில் நிறை முடித்திருந்தாலும் அவன் ஒன்றும் சொல்லிருக்க போவதில்லை.
பிரபாகரனுக்கு பழைய சாப்பாடு எல்லாம் பிரச்சனை இல்லை. தனக்கு முடியாவிட்டாலும் ஏதோ ஒன்றை செய்து கணவனின் பசி போக்க வேண்டும் என்று நினைத்தாள் அல்லவா!… தன் கணவன் உணவுக்காக சொந்த அண்ணன் மனைவிகளிடம் கூட காத்திருக்க கூடாது என்று நினைத்தாள் அல்லவா!… பிரபாகரனுக்கு தன் மனைவியை பிடித்திருந்தது.
error: Content is protected !!