Skip to content
Post Views: 2,698
கருவின் குரல்
அத்தியாயம் 5
தேவாவிற்கு பேஷன் டிசைனிங்கில் ஆர்வம். அதனால் பேஷன் டெக்னாலஜி படித்திருந்தான். அது தற்போது உதவியது. நெகமமில் உள்ள சேலை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் டிசைனராக மாதம் பதினைந்தாயிரம் சம்பளத்திற்கு சேர்ந்தான்.
வீட்டில் இருவர் புழங்கும் அளவே பொருட்கள் இருந்தன.
ஜானகி இரவு அவனுக்கு பிடித்த பூரியும் உருளைக்கிழங்கு மசாலாவும் செய்தாள். எந்த ஓசையும் இல்லாமல் அமைதியாக கிச்சனுள் நுழைந்தான். எதையோ எடுக்க திரும்பிய ஜானகி, திடீரென ஒரு உருவம் பின்னால் நிற்பதை பார்த்து கத்திவிட்டாள்.
“தேவா, நான்தான்! கத்தாதே. இந்தா பூ,” என நீட்டினான்.
Advertisement
ஜானகி வெட்கப்பட்டு கொண்டு, “சினிமாவுல ஹஸ்பண்ட் தானே பூ வச்சு விடுவாங்கே, நீ என்ன என் கையிலே தரே?” என்றாள்.
தேவாவும் சிரித்துக்கொண்டே பூவை அவள் தலையில் வைத்துவிட்டான்.
ஜானகி இதுவரை கிச்சன் பக்கம் சென்றதே கிடையாது. ஈஸ்வரியே அனைத்தும் பார்த்துக்கொள்வாள். இன்று யூடியூப் பார்த்து சமைத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் தேவா அப்படி அல்ல. நல்ல சாப்பாட்டு பிரியன். வீட்டில் வேலையாட்கள் இருந்தாலும், விரும்பியதை சமைத்து வீட்டில் இருப்பவர்களுக்கு பரிமாறும் வழக்கம் உள்ளவன்.
Advertisement
தேவா, அவளுக்கு பூரிக்கு ஏற்ப மாவை ரெடி செய்து தர, ஜானகி அடுப்பில் பூரியை சுட்டெடுத்தாள். இரவு உணவை முடித்துவிட்டு, இருவரும் தங்கள் எதிர்கால திட்டங்களை பற்றி பேச ஆரம்பித்தனர்.
Advertisement
தேவா, ஜானகியின் மடியில் படுத்துக்கொண்டான். ஜானகி, அவன் தலையை கோதிவிட்டுக்கொண்டே அவன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
“நாம் நம் இருவருக்கும் சொந்தமாக வீடு கட்ட வேண்டும். வீட்டிற்கு நிறைவாக பொருட்கள் வாங்க வேண்டும்,” என்றான்.
“நம் வீட்டில் ஏற்றுக்கொள்ளவார்களா?” என கவலை தோய்ந்த முகத்துடன் ஜானகி கேட்டாள்.
Advertisement
“ஒரு பிள்ளை பெற்றுக்கொள்வோம். பிறகு அவர்கள் சமாதானமடைந்து விடுவார்கள்,” என்று கண்ணடித்துக்கொண்டே சொன்னான். ஜானகியும் வெட்கமாக சிரித்தாள்.
“சரி, நமக்கு பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?” என ஜானகி கேட்டாள்.
நிறைய பெயர் அலசலுக்குப் பிறகு “எழில்” என்று தேவா தேர்ந்தெடுத்தான். அவளுக்கும் அது சம்மதமே. ஆண், பெண் எது பிறந்தாலும் எழில் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என இருவரும் முடிவு செய்தனர்.
எண்ணிலடங்காத எதிர்கால கனவுகளுடன் தங்கள் வாழ்வை ஆரம்பித்தனர்.
ஒரு மாலை வழக்கம்போல் தேவா வீட்டிற்கு திரும்பினான். ஜானகி இல்லை. போன் செய்தான். “நான் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றிருக்கிறேன்,” எனக் கூறினாள்.
தேவா ப்ரஷ் ஆகி கண்ணாடி முன்பு நின்று விசிலடித்துக்கொண்டே தலையை வாரினான். அவள் மெதுவாக நடந்துவந்தாள். முகத்தில் எப்போதும் போல ஒரு சின்ன புன்னகை.
“இவ்வளவு நேரமா? நீ என்னை ரொம்ப வெயிட் பண்ண வெச்சுட்டே,” என்றான் தேவா, பிள்ளை மாதிரி முகம் சுழித்தபடி.
“கோவிலில் கூட்டம்,” என்றாள் ஜானகி மெதுவான குரலில்.
தேவா சிரித்துவிட்டு, “நா பாவமில்லை ஜானு… எவ்வளவு நேரம் உனக்காக காத்துட்டு இருக்கே, ரொம்ப பசி வேறு!” என்று சொல்ல, அவள் முகம் சிவந்தது.
“சரி, நான் சீக்கிரமாக சமைக்கிறேன்,” என்று கிச்சனுள் சென்றாள். அவனும் பின் தொடர்ந்து சென்றான்.
கிச்சனில் இருந்து ஹாட் பாக்ஸை திறந்து அவளிடம் காட்டினான்.
“இது என்ன? நீ சமைச்சியா?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.
திறந்து பார்த்தாள். பேபி கார்ன் புலாவ் மற்றும் எக் கிரேவி செய்திருந்தான்.
“ஆமாம். சாப்பிட்டு பாரு!” என்றான்.
ஜானகி ஒரு ஸ்பூன் வாயில் போட்டதும் முகத்தைச் சுழித்தாள். காரம் கண்ணீர் வரவைத்தது.
“அய்யயோ தேவா! ரொம்ப காரம் இருந்தாலும் 80 மார்க்ஸ் தரே. என்கிட்டே சமையலுக்கு கொஞ்சம் ட்ரெயினிங் எடுத்துக்கே!” என்று கிண்டல் செய்தாள்.
தேவா அவளது முகத்தை ரசித்துக்கொண்டிருந்தான்.
“நான் சமைக்கத் தெரியாம இருக்கலாம். ஆனா உன்னை சிரிக்க வைப்பதில் மட்டும் நான் எப்போதும் ஜெயிப்பேன்,” என்று புன்னகையுடன் சொன்னான்.
அவள் அவனை நேராகப் பார்த்தாள். அந்த ஒரு கணத்தில், அவளது உள்ளம் சொல்லாத காதலை உணர்ந்தாள்.
என்ன நடந்தாலும் இந்த மனிதன் தான் என் வாழ்க்கை என்று தனக்குள்ளே மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொண்டாள்.
பெற்றவர்கள் ஏக்கம் ஜானகிக்கு வராதவாறு தேவா அவளை தாங்கி பார்த்துக்கொண்டான். இருவரும் ஒன்றாக சிறிது தூரம் நடப்பது, அன்றாட நிகழ்வுகளை பகிர்வது, வீட்டு வேலைகளுக்கு தேவாவும் உடன் சேர்ந்து உதவுவது, எதிர்கால திட்டங்கள் என கணவன் மனைவி என்றில்லாமல் நல்ல நண்பர்களைப் போல வாழ்ந்தனர்.
ஜானகியை பொருத்தவரை தனது கல்யாண வாழ்வில் யாரும் வாழாத நல்வாழ்வை வாழ்வதாக சந்தோஷத்தில் திளைத்தாள்.
ஈஸ்வரியின் தங்கை ஜெயந்தியும், அவன் கணவன் சண்முகமும் வந்து ஜானகியை பார்த்துச்சென்றனர். அவர்களிடம் கண்ணீர் மல்க, அம்மா அப்பா தம்பி இடம் மன்னிக்க வேண்டுவதாக கேட்டுக்கொண்டாள்.
“மகள் நன்றாக வாழ்ந்தால் சந்தோஷம்,” என அவர்களும் வாழ்த்தினர்.
கருணா மட்டும் கோபம் தீராமல் இருந்தாள். சக்கரவர்த்திக்கு மகன் இல்லாத இடம் வெற்றிடமாக உணர்ந்தார். மகனின் சந்தோஷத்திற்கு முன் கௌரவம் பெரிதல்ல என எண்ணினார். தேவாவைப் பார்க்க முடிவெடுத்து கிளம்பினார்.
அன்று தேவா டிசைன் செய்து கொடுக்க தாமதமாகிவிட்டது. அந்த நிறுவன மேனேஜர் கோபத்தில் இவனை திட்ட, சட்டென இவனும் வேலையை விட்டு விட்டு வெளியேறினான்.
அவன் தேங்காய் நிறுவனத்தில் குறைந்தது 200 பேராவது வேலை செய்வார்கள். சம்பளம் கொடுத்த பழக்கப்பட்ட கை. இன்று சம்பளம் வாங்கி வேலை செய்ய ஒப்பவில்லை. இருந்தாலும் தன் மனைவி, தன் குடும்பம் என்று வர வேலைக்கு சென்று விட்டான்.
பஸ்ஸில் சென்று வருவது தான் வழக்கம். இன்றும் வழக்கம் போல பஸ்ஸில் இருந்து இறங்கி சோர்ந்த முகத்துடன் வீட்டை நோக்கி நடந்தான். எப்படிச் செலவுகளை சமாளிப்பது என ஒரு குடும்பத்தலைவனாக கவலைப்பட்டான்.
வீட்டின் முன் சக்கரவர்த்தி கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலையில் இருந்தார். தான் போடும் டிரெஸ்ஸிற்கு மேட்சாக கார் எடுத்து செல்பவன், இன்று பஸ்ஸில் இருந்து இறங்கி வருவதை பார்த்து மனமுடைந்துவிட்டார்.
தேவாவும் “அப்பா!” என ஓடிச்சென்று தழுவிக்கொண்டான்.
“வாங்க அப்பா வீட்டிற்கு,” என அழைத்தான்.
அவர் மறுத்துவிட்டார்.
“என்னுடன் வந்து விடு தேவா. அப்பாவிற்கு உன்மேல் கோபம் இல்லை,” என்றார்.
“சரிப்பா, நானும் ஜானகியும் உங்களுடனே வந்து விடுகிறோம்,” என்றான்.
“நீ மட்டும் வருவதாக இருந்தால் வா. இந்த வாழ்வு உனக்கு வேண்டாம். அப்பா உனக்கு நல்ல வாழ்வை அமைத்து தருகிறேன்,” என்றார்.
“ஜானகியுடன்தான் வருவேன்,” என உறுதியாக கூறினான்.
“நீ பிறந்த உடன் தான் இந்த வசதி எல்லாம் நமக்கு வந்தது. அதை உதறிவிட்டு இந்த தினக்கூலி வாழ்வு உனக்கு தேவைதானா? அப்பா காத்திருக்கிறேன். ஒரு நல்ல முடிவாக எடு,” எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
வருத்தத்துடன் வீட்டின் உள்ளே சென்றான். ஜானகி உடம்பு முடியாமல் படுத்திருந்தாள். தொட்டு பார்க்க உடம்பு நெருப்பாகக் கொதித்தது. ஹாஸ்பிடலுக்குக் கொண்டு சென்றான். டாக்டர் பரிசோதித்து விட்டு ஜானகி கர்ப்பமாக இருப்பதாகக் கூறினார்.
இருவருக்கும் முகம்கொள்ளாப் புன்னகை. ஆனாலும், ஜானகி வீக்காக இருப்பதாகவும் ரெஸ்ட் எடுக்கவும் அறிவுறுத்தினார்.
அன்று இரவு முழுவதும் தேவா தூங்கவில்லை. வேலை விட்டாச்சு, குழந்தை, தந்தை சந்திப்பு என குழப்பம். மறுநாள் நிறைய இடத்தில் வேலை தேடினான். எங்கும் அமையவில்லை.
வீட்டில் சமையலுக்கு இருந்த பொருட்களும் காலியாகிவிட்டன. கையிலும் பணம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல், அவன் வழக்கமாக செல்லும் பார்க் கிற்கு சென்று அமர்ந்துவிட்டான்.
ஜானகி போன் செய்து, “எங்கே இருக்க? ஏன் இன்னும் வீட்டுக்கு வரலே?” எனக் கேட்டாள்.
அப்போதுதான் மணியை பார்த்தான். இரவு 9.30. உடனே வீடு திரும்பினான்.
ஜானகி எதுவும் சமைக்கவில்லை. “ஏன்?” எனக் கேட்டான்.
“வீட்டில் ஒன்றும் இல்லை,” என்று அவள் சாதாரணமாகத்தான் கூறினாள்.
இவன் கோபத்தில் ஏதாவது சேமித்து வைத்திருக்கலாம் தானே என அவளை கத்திவிட்டான். ஏற்கனவே வாந்தி, மயக்கம் என சோர்ந்திருந்த ஜானகி, இவனின் செய்கையால் அழ ஆரம்பித்தாள்.
“என் அப்பா என்னை இப்படி எல்லாம் என்றுமே நடத்தியது இல்லை,” எனக் கூற, தேவாவிற்கு கோபம் தலைக்கேறியது.
அவன் வீட்டில், அவனை சக்கரவர்த்தி ராஜாவாக வளர்த்து வந்தார். காதலால் இன்றைய அவன் நிலை அவனுக்கே அவன்மேல் பரிதாபத்தை கொடுத்த நிலையில், இவளின் அந்த சொல் அவனை சங்கடப்படுத்தியது.
பொழுது விடிந்ததும் தேங்காய் எண்ணை ஆலைக்கு சென்று, சக்கரவர்த்தியிடம் தன் நிலையை கூறினான். அவர் பிடியில் இருந்து அவர் இறங்கி வரவே இல்லை.
“ஜானகியை விட்டுவிட்டு வா,” எனக் கூறினார். இவனையும் நன்றாக மூளை சலவை செய்தார்.
இறுதியாக ஜானகியை பிரியும் முடிவை எடுத்தான்.
— கருவின் குரல் ஒலிக்கும்…
error: Content is protected !!