Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத உறவே!...

நீங்காத உறவே!… அத்தியாயம் 8

நீங்காத உறவே!…

அத்தியாயம் 8

    நிறை ஒன்றை அறிந்தாள் வீட்டின் வரவு செலவு எல்லாம் பெரிய வீட்டு ஆட்கள் தான் பார்ப்பது . அதாவது, வீரணன் பார்த்துக் கொள்வார். இதுவரை அதில் பிரபாகரனும் அடங்கியிருந்தான். திருமணம் ஆகாததால் தன் வருமானத்தையும் பெற்றவர்கள் கையிலே கொடுத்து வந்தான். இந்த முறையும் அதேபோல் பிரபாகரன் பணத்தை கொடுக்கும் போது தடுத்துவிட்டார் வீரணன்.

“கல்யாணத்துக்கு பின்னாடி உன் அண்ணன்ங்க ரெண்டு பேரும் தனியா சொத்து, இடம் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. உன் வருமானத்தை நீ வச்சுக்கோ… என்னால முடிஞ்சது உங்களை படிக்க வைத்து, கல்யாணமும் பண்ணி வச்சுட்டேன். இனி, உங்க திறமைக்கு தக்க நீங்க முன்னேறிக்கீங்க” முடித்துக் கொண்டார் வீரணன்.



Advertisement

நிறை மெதுவாக தன் கணவனிடம் மட்டும் தாய் வீட்டுக்கு பணம் கொடுத்ததை சொல்லிவிட்டாள். யாரும் கேட்காமல் போனாலும் மறைத்து வைக்க விரும்பவில்லை. ஏதோ அது ஒரு குற்றமாக மனதில் பதிந்து போனது. அதனால் கணவனிடம் மட்டும் சொல்லிவிட்டாள்.

 பிரபாகரன் என்ன சொல்வான். கணவனிடம் தான் நிறைக்கு பயமே கிடையாதே. அவள் நினைத்தது போலவே,

“பரவாயில்லை விடு நிறை. அவங்களுக்கு என்ன கஷ்டமோ?.. இவ்வளவு நாளா நீ தான் கூட இருந்து பார்த்த, திடீர்னு விலகியும் நிக்க முடியாது. அவங்களுக்காக தான் உன் படிப்பை விட்டு வேலைக்கு போன, அப்படி இருக்கும்போது அவங்க கஷ்டப்படுறது எப்படி உன்னால பார்க்க முடியும்” அவள் மன சஞ்சலத்தை போக்கும் விதமாக சமாதானம் பேசினான்.

Advertisement

கணவரே, உங்கள் வருமானத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று கடைசி மகனிடம் சொன்னதால்… கல்யாணியும் பெரிதாக நிறையின் சம்பளம் குறித்து கேட்கவில்லை.

Advertisement

மறுநாள் காலையும் பிரபாகரன் சீக்கிரமாக கிளம்பி விட்டான். ஓரளவு நன்றாக இருந்த நிறையும் வீட்டு வேலையை ஆரம்பிக்க,

“நிறை எனக்கு சாப்பாடு வேண்டாம். கொஞ்சம் அவசர வேலை இருக்கு வெளிய பாத்துக்குறேன்” என்றதும்,

நிறை அவசரமாக காலை உணவை கொண்டு வந்து வைத்தாள்.

Advertisement

“நான் தான் வெளிய பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல.. எதுக்கு பிரஷர் ஏத்திக்கிற” என்ற கணவனுக்கு…

“கோழி கொத்துற மாதிரி சோறு சாப்பிடுறீங்க, அதையும் வெளியே பார்த்துக்கொள்ளவா முடியும். எனக்கு என்ன பிரஷர், உங்களை வேலைக்கு அனுப்புறத விட” அவனோடு பேசிக்கொண்டே மதியத்துக்கு சாப்பாடு கட்டி கொடுத்தாள்.

நிறை விதவிதமாக எல்லாம் செய்ய மாட்டாள். அதற்கு நேரமும் இருக்காது. ஆனாலும் ஏதாவது ஒன்றை அவனுக்கு திருப்திகரமாக செய்து கொடுத்து விடுவாள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, “நிறை, நேத்தே நினைச்சேன்” என்றவன் தன் பையில் இருந்து சம்பளகவரை மனைவியிடம் கொடுத்தான்.

“எனக்கு பஸ்சுக்கு ஆயிரத்தி நூறு ரூபாய் வரும். என் செலவு அவ்வளவு தான்” என்றதும்,

“நீங்க வெளியில எதுவும் சாப்பிட மாட்டீங்களா? உங்களுக்கு வேற செலவு எதுவும் இருக்காதா” என்றாள் நிறை.

“ரொம்ப அவசரம் தவிர வெளியே சாப்பிட மாட்டேன். அடிக்கடி டீ சாப்பிடுற பழக்கமும் கிடையாது. இப்ப தான் நீ எப்படியும் எனக்கு சாப்பாடு கொடுத்து விட்டுற, வேற என்ன செலவு எனக்கு இருக்கப் போகுது நிறை” என்றவன்,

“உன் செலவுக்கு போக, மிச்சத்தை சேர்த்து வைத்திரு.. வேற பெருசா நமக்கு செலவு வராது” உண்மைதான் தம்பதிகளாக இவர்களின் முதல் சேமிப்பு இதுதான் என்பதால் பெரிதாக செலவு எதுவும் இல்லை. சேமிப்பாகவே கையில் நின்றது.

அங்குதான் கல்யாணியும் சற்று தள்ளி சமையல் கட்டில் ரோகினியும், சினேகாவும் நின்றிருந்தார்கள்.

கல்யாணி “நிறையும் சம்பளம் வாங்குறாளே பிரபா. வேறு என்ன செலவு இருக்கப் போகுது” அவளுக்கு ஏன் பணம் கொடுக்கிற என்ற ரீதியில் தாய் கேள்வி எழுப்ப,

“இல்லம்மா இந்த மாசம் நிறைக்கு சம்பளம் இல்லை… அத்தை வீட்டில் ஏதோ கஷ்டம் போல, அதனால நிறை, அங்க பணம் கொடுக்க வேண்டியதா போச்சு” என்று பிரபாகரன் சாதாரணமாக முடிக்க, கல்யாணி முகம் மாறிப்போனது.

அதை மகன் கவனிக்கவில்லை தவிர மருமகள் கவனித்து விட்டாள். நிறைக்கு பெரிதாக பயம் வந்தது. கணவன் முழுதாக சம்பளத்தை வாங்கி வந்து தன் கையில் கொடுக்க, தான் அப்படி உண்மையாக இல்லையே என்று வருத்தம் ஒரு பக்கம், மாமியாரின் மாறிய முகம்  பயமாக இருந்தது.

அங்குதான் மற்ற இரு மருமகள்களும் இருந்தார்கள். தன்னை சுயநலவாதி என்று நினைப்பார்களோ!… சங்கடப்பட்டு நின்றாள் திருநிறைச்செல்வி.

 வீரணன் வருமானத்தை கேட்காத போது கல்யாணி தனியாக கேட்க முடியாது. ஆனால், மருமகள் செயல் அவருக்கு பிடிக்கவில்லை. திலகவதி பெரிதாக செய்ய மாட்டார் என்று தெரிந்தும் பெண் மட்டும் போதும் என்று தான் எடுத்தார்கள். அதற்காக கட்டிக் கொடுத்த பின்பும், நிறை அவர்கள் வீட்டையே பார்ப்பதற்கு எதற்கு கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும். தன் பெரிய மகளை தன் வீட்டோட வைத்துக் கொள்ள வேண்டியதுதானே…

பெண் எடுக்கிறோம் என்ற வாக்கு தவறக்கூடாது என்பதால் தான் கடைசி மகனுக்கு முடித்தது. தற்போது தவறோ என்று நினைத்தார். அன்றே கணவன் சொல்லியதை கேட்டிருக்க வேண்டுமோ?

பிரபாகரன் வேலைக்கு சென்ற பின் நிறை ரெண்டு, மூணு முறை தானாக வலியே சென்று கல்யாணியிடம் பேச்சு கொடுத்தாள். கல்யாணி பெரிதாக பட்டுக் கொள்ளாமல் பதில் சொன்னார். அப்போதே நிறை புரிந்துகொண்டாள்.

அவளுக்கே புரிந்தது நல்லா இருந்த மாமியார் உறவை கெடுத்துக் கொண்டோம் என்று… ஆனாலும் பெற்றவர்கள் இருவரும் அழுது கெஞ்சும் போது வேற வழி தெரியவில்லையே. அடுத்த மாதம் சமாதானம் செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

தான் குளித்து கிளம்ப அறைக்கு சென்றதும், வெளியே மீட்டிங் தொடங்கியது.

 “பாத்தீங்களா அத்தை உங்க புதுமருமகளை.. என்னவோ விவரம் தெரியாத மகனுக்கு, விவரமான மருமகளை கட்டி வச்சீங்களே!.. உண்மையாவே அவ ரொம்ப விவரம் தான். தன் சம்பாத்தியத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புருசன் சம்பாத்தியத்தை கையில் வாங்கி வச்சுக்கிட்டு. ஹாயா.. வேலைக்கு போறேன்னு வீட்ல ஒரு வேலையும் செய்றதில்லை” என்று ரோகினி ஆரம்பிக்கும் போதே கல்யாணியின் மனது மருமகளின் பேச்சை ஆதரித்தது.

அவர்கள் வீட்டை பொருத்தவரை ஆண்கள் வேலைக்கு போவார்கள். பெண்கள் வீட்டை பார்த்தால் போதும் என்ற எண்ணம் தான். பொதுவாக, கல்யாணியிலிருந்து யாரும் பெரிதாக வெளி வேலைக்கு என்று சென்றதில்லை. அவர்கள் கணவன் கைக்குள் நின்றவர்கள். சம்பாதிக்கும் மனுசன் அவருக்கு எல்லாம் தெரியும். பெண்கள் ஏன் கணவனின் வருமானத்தை எல்லாம் கேட்க வேண்டும்.

வீரணன் தொடங்கி வீரராகவன் வரை, “வீட்ல எல்லாம் சரியா இருக்கா? வீட்டுக்கு என்ன தேவையோ அதை வாங்கி போடுவோம். உங்களுக்கு என்ன தேவையோ அதையும் நாங்க பாப்போம். அதை விட்டு வெளியில ஆயிரம் வேலைக்கு போற ஆம்பளைங்க கிட்ட கணக்கு கேட்கிறதோ.. வருமானம் கேட்கிறதோ கூடாது என்ற கொள்கையை உடையவர்கள். அப்படியிருக்கையில் பிரபாகரன் தன் முழு வருமானத்தையும் மனைவி கையில் கொடுத்தது, விவரம் இல்லாதவன் என்ற நினைப்பை உண்டாக்கியது.

 சினேகாவே சொல்லிவிட்டாள் “இந்த வீட்டிலேயே கஷ்டப்படுறது பிரபா தம்பி தான். பெரிய படிப்போ, நல்ல வேலையோ கிடையாது. அப்படி இருக்க அந்த தம்பியை தூக்கி விடாம, வீணா செலவு செஞ்ச பெத்தவங்களுக்கு காசு கொடுத்துட்டு வந்து நிக்கிறா.. நான் கூட ஆரம்பத்தில் நிறை நல்ல பொண்ணுன்னு நினைச்சேன். கடைசில அப்பாவியா இருக்கிற பிரபாகரனை ஏமாத்த போறா போல” அவளுக்கு என்னவோ நிறை மேல் அப்படி ஒரு அபிப்பிராயம் தான் வந்துவிட்டது.

அதே எண்ணம் தான் கல்யாணிக்கும்… விபரம் இல்லாத மகனை ஏமாற்றி அவனின் சம்பாத்தியத்தையும் கொண்டு போய் தாய் வீட்டில் சேர்த்து விடுவாளோ என்ற பயம் வந்தது.

கூடத்தில் அவர்கள் பேசியது காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் வேலைக்கு கிளம்பினாள் நிறை. அந்த வீட்டிலே மொத்தம் நாலு பெண்கள் தான். அதில் மற்ற மூன்று பேரும் சேர்ந்து கொண்டு இவளை பேசுவது மனதுக்கு வருத்தமாக இருந்தது. அப்படி என்ன பெரிய தப்பு செய்து விட்டேன். பெற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது கொடுத்தது ஒரு தவறா?… நானும் நிறைய நகை, சீர் கொண்டு வந்திருந்தால் என்னை பேசியிருக்க மாட்டார்களோ?… அவர்கள் மகன் வருமானத்தை ஒன்னும் கொடுக்கவில்லையே, என் சம்பாத்தியத்தை நான் கொடுத்தேன். அதில் இவர்களுக்கு என்ன வந்தது. இவ்வளவு பெரிய விஷயமாக மாநாடு போட…

 கேள்வி மனதில் தோன்றும் போதே உடலில் சோர்வு வந்தது. இந்த மாதம் இவளின் செலவுக்கு கணவனின் வருமானத்தை தான் எடுக்க வேண்டும். அவர்கள் பேசுவதும் நியாயம் தானே. வேலைக்கு தகுந்த ஊதியம் இல்லாமல் சிரமப்படுவது பிரபா தான். அவனுக்கு தன்னால் ஒன்றுமே நன்மை இல்லையோ?… கணவனுக்கு தான் பாரமாக இருக்கிறோமா? மனது சஞ்சலமாகவே கடைக்கு கிளம்பினாள் நிறை.

கூட்டுக் குடும்பத்தில் நாலு பெண்கள் இருக்க, அதில் ஒருத்தி மட்டும் ஒதுக்க பட்டு நின்றால் வரும் வலியை நிறை உணர்ந்தாள். அன்று இரவு வீட்டுக்கு வரும்போதே கை நிறைய பொருட்களை அள்ளி வந்தாள். எப்படியாவது மாமியாரை சமாதானம் செய்து விடத்தான்.

“நிறை, என் மகன் வாங்குவது கொஞ்ச சம்பளம். அதையும் உன் இஷ்டத்துக்கு தாம் தூம்ன்னு செலவு பண்ணுவியா? ஒரு ரூபாய பத்து ரூபாயா மாத்துறவ தான் குடும்ப பொண்ணு” என்றதும்,

 “இல்லை அத்தை வீட்டுக்கு தேவையான மளிகை பொருள்தான்” என்று எடுத்து சொல்ல,

“என்கிட்ட கேக்காம உன்னை யார் வாங்க சொன்னது.. வீட்டுக்கு என்ன தேவைன்னு வீட்ல இருக்குற எங்களை விட உனக்கு தெரியுமா? கடன் வாங்கி கூட கண்டபடி செலவு செய்ற உங்க வீட்டு புத்திய இங்க வைக்காத”என்று கடுமையாக சொன்னதும், கண் கலங்கிவிட்டது திருநிறை செல்விக்கு…

நிறை முகத்தை பார்த்து கல்யாணிக்கு ஒரு மாதிரி இருந்தாலும், திலகாவை நன்கு அறிவார். இது எல்லாம் ஆரம்பம்தான் இப்பொழுது சூடாக கொடுக்கவில்லை என்றால் விபரம் இல்லாத தன் மகனை இவளும் சேர்ந்து ஏமாற்றி விடுவாள். பிரபா விபரம் இல்லாதவன் எல்லாம் கிடையாது. அவனைப் பொறுத்தவரை தன்னைவிட நிறை பொறுப்பான பெண் என்று தெரியும். அதனால்தான் வருமானத்தை அவள் கையில் கொடுத்தது.

கணவன், மனைவி இருவரில் யாரோ ஒருவர் குடும்பத்தை பொறுப்பாக எடுத்து நடத்தினால் தான் என்ன? சம்பாதிக்கும் ஆண் தான் செலவழிக்கும் உரிமை உள்ள ஆளா என்ன? கணவன் மனைவிக்கான அன்னியோயத்தின் அடிப்படை இவர்களுக்கு புரியவில்லை. கணவனின் கஷ்டத்தை கண்ணாரக் கண்ட நிறை, எப்படி அந்த பணத்தை விருதாவாக விடுவாள்.

மறுநாள் சீக்கிரமே எழுந்து வீட்டு வேலைகளை பார்த்தாள் நிறை. ஓடி ஓடித்தான் வேலை செய்தாள். என்னதான் சொந்தமாக இருந்தாலும் புதிதாக மணமாகி வந்தவள், உடனடியாக வீட்டில் எல்லோரையும் பகைத்துக் கொண்டது பயமாகவும், கஷ்டமாகவும் இருந்தது. எப்படியாவது எல்லோரையும் சரி கட்டி விட நினைத்தாள்.

நிறை இறங்கி வர மற்றவர்களுக்கு கொண்டாட்டம். கல்யாணி வேலையை பிரித்துக் கொடுக்கவில்லை. தொட்டதற்கெல்லாம் குறை சொல்ல ஆரம்பித்தார். வீரணன் தொடங்கி எல்லோரும் அமைதியாக கவனித்தார்கள்.

குடும்பத் தலைவருக்கு புரிந்தது. ஒரு மாத சம்பளம் என்பது பெரிதல்ல. ஆனால், திலகவதி யோசிக்க வேண்டிய ஆள் அல்லவா..

அன்றும் பிரபாகரன் சீக்கிரமாக வேலைக்கு கிளம்ப, பரபரப்பாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தாள் நிறை. விசேஷ நாள் என்பதால் உணவு வகைகளும் நிறைய இருக்க… குட்டி குட்டி டப்பாக்களில் தனித்தனியாக அடுக்க ஆரம்பித்தாள். ஏதாவது, விசேஷமாக சமைத்தால் பிரபாவுக்கு கொஞ்சம் சேர்த்து உணவு உள்ளே போகும். எல்லாவற்றையும் எடுத்து வைக்கும் போதே,

“நிறை நீங்க வச்சிருக்கிற டிபன் பாக்ஸ் என்னோடது, எங்க அம்மா வீட்ல எனக்கு கொடுத்தது. அதை எடுக்காதீங்க” பட்டென்று சொன்னாள் சினேகா.

 திகைப்பாக இருந்த போதும், என்ன இது பேச்சு என்று திரும்பி மாமியாரை பார்க்க.. அவர் கண்டு கொள்ளவே இல்லை. கூட்டுக்குடும்பமாக இதுவரை உன் பொருள், என் பொருள் என்று பிரித்தெல்லாம் பார்த்ததில்லை. நிறை கடைசி மருமகள் என்பதால் எது, யாரோடது என்று கூட தெரியாது.

எதுவும் சொல்ல முடியாமல் வாழை இலையில் உணவுகளை மாற்றி வைத்து கணவனை வேலைக்கு அனுப்பினாள்.

டீ போட பால் எடுத்தால், பால் நான் வாங்கி வைத்தது என்று வந்து நின்றாள் ரோகினி.

 பிரபாகரனுக்கு தினமும் ஏதேனும் ஒரு வகை பழங்களை வெட்டி வைத்து விடுவாள். அப்படி பிரிட்ஜை திறக்க,

“இந்த பழம் எல்லாம் நேத்து என் வீட்டுக்காரர் வாங்கி வந்தது. உங்க இஷ்டத்துக்கு தொடாதீங்க. வாங்கி வந்த எங்களுக்கு தேவை இருக்காதா?” என்று ரோகினி கேட்டதும் வேகமாக தன் அறைக்கு வந்து விட்டாள் நிறை.

 இவர்களுக்கு ஏன் தன்னைப் பிடிக்கவில்லை. இவர்கள் வழிக்கே தான் போவதில்லையே. தான் உண்டு தன் வேலையுண்டு என்று ஒதுங்கி நின்றாலும் விடாமல் இது என்ன பேச்சு?… சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கணக்கு பார்த்து குறை சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி இவர்களோடு தன் வாழ்க்கை போகும். அப்படி என்னதான் பெரிய தப்பு செய்து விட்டோம். என் சம்பாத்தியம் என் உரிமை அல்லவா… ஆரம்பம் தொட்டு பெரிய மருமகள் இருவருக்கும் தன்னைப் பிடிக்கவில்லை என்பதை அறிவாள். அதன் காரணம் பெரிதாக என்ன இருந்து விடப் போகிறது. இவர்கள் கணவன் பெரிய மன்மதர்கள், இவர்களை கட்டிக் கொள்ள தவம் கிடந்தேனாம். வீரராகவன் இந்த வீட்டில் தான் இருக்கிறானா என்று கேட்கும் அளவுக்கு தள்ளித்தான் இருக்கிறாள் நிறை. அப்படி இருந்தும் இவர்களுக்கு தன்மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு. காரணமே இல்லாமல் ஒருத்தரை வெறுத்து ஒதுக்க முடியுமா?..

சொந்தம் என்று தாய் மாமன் மகனுக்கு கழுத்தை நீட்டியது தவறோ என்று யோசிக்கும்போதே பிரபாகரன் முகம் மனதில் முன்வந்து நின்றது. அந்த ஒருத்தனுக்காக மட்டுமே இந்த வாழ்க்கை. கீழே குனிந்து தன் கழுத்தில் கிடக்கும் தாலியை எடுத்துப் பார்த்தாள். கனவில் கூட நினைத்ததில்லை இவன் கையால் தாலி வாங்குவோம் என்று…

ரெண்டு மாதங்களுக்கு முன்பு வரை கூட ஒருத்தனுக்கு மனைவியாக போவோம் அதுவும் தான் சின்ன வயது முதல் பார்த்து வளர்ந்த ஒருத்தனை கணவனாக ஏற்ப்போம் என்று நினைத்தது கூட இல்லை. இனிமேல் தனக்கொரு நல்ல திருமண வாழ்க்கை அமையுமா? என்றெல்லாம் யோசித்து இருக்கிறாள்.

ஏதோ கனவு போல ஒரு திருமணம், தானும் ஒருவனுக்கு மனைவி, தன்னை நம்பி தனக்காக காத்திருக்கும் ஒரு ஜீவன்.

தன்னை மாதிரி பிரபா என்றாவது மனைவி என்ற நிலையில் தன்னை வைத்து யோசித்து இருப்பானா?.. தன் கழுத்தில் கிடக்கும் தாலியை பார்க்க பார்க்க பிரபாவின் முகம் மனதில் ஒட்டியது.

அங்கு வந்த பிரபாகரன் “தாலியை பார்த்து என்ன யோசிச்சிட்டு இருக்க நிறை?” என்றதும்,

லேசான தயக்கத்தோடு அவன் முகம் பார்த்தவள், “நீங்க தாலிய பார்த்து என்ன யோசிப்பீங்க?” அவளுக்குள் என்னவோ ஒரு ஆர்வம்.

“நான் தான் தாலியை பார்க்கவே இல்லையே” என்றதும்,

“மொத பார்த்து இருப்பீங்கல்ல”

“மொத எப்போ? உன் கழுத்துல தாலி கட்டும் போது பார்த்தது தான்”

“நான் அதை கேக்கல. என் கழுத்துல தாலி கட்டுனதுக்கு அப்புறம், இந்த தாலியை நீங்க பாத்தீங்களா? உங்களுக்கு என்ன தோணுச்சு?” வாய் திறந்து கேட்டு விட்டாள்.

“அதுக்கப்புறம் நான் எங்க பார்க்கிறது. நீதான் உள்ள போட்டு மறச்சு வச்சிருப்பியே” சாதாரண வார்த்தைகளாக தான் சொன்னான்.

நிறைக்குத்தான் முகம் எல்லாம் சிவந்து போனது. மனம் ஒரு மாதிரி படபடப்புக்கு ஆளானது. என்ன சொல்கிறான் இவன்? பெண் மனம் குதர்க்கமாக யோசித்தது.

“என்ன சொல்றீங்க?” என்றால் தன் மனதை சமன் செய்து.

“என்ன சொல்லுவாங்க. உனக்கு என்ன ஆச்சு நிறை. என்னவோ யோசிச்சிட்டு, எதுவோ என்கிட்ட கேட்டுட்டு இருக்க” என்று மனைவியின் அருகில் வந்தவன், அவள் கையில் இருந்த தாலியைப் அருகில் வந்து பார்த்து விட்டு,

“இதுல என்ன இருக்கு. எனக்கு ஒன்னும் தெரியல” என்றதும், என்னவோ சொல்வான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம்தான்.

“அதெல்லாம் ஒரு ஃபீல். உங்களுக்கு ஒரு மண்ணும் வராது” என்றாள் கடுப்பாக.

“எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற.. அப்படி என்ன ஃபீல். எனக்கு ஒரு ஃபீலும் வரல. உனக்கு என்ன பீல் வந்துச்சு”

சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கி, “அந்த ஃபீலிங் ஃபர்ஸ்ட் ஆம்பளைகளுக்கு தான் வருமாம். அதுவும் கல்யாணமான ஆம்பளைகளுக்கு தான் முதல்ல வருமாம். அதுக்கப்புறம் தான் பொண்ணுங்களுக்கு வருமாம்”

என்ன சொல்றா இவ.. நமக்கு ஒன்னும் புரியலையே என்று நினைத்தவன், ஒருவேளை அப்படி இருக்குமோ என்று அவன் மனம் யோசித்தது. சேச்ச, இருக்காது கல்யாணம் ஆகி ஒன்றரை மாசம் தான் ஆகுது. தேவையில்லாமல் அவளிடம் பேசி தன்னுடைய மதிப்பை குறைத்துக் கொள்ளக் கூடாது என்று அமைதியாகிவிட்டான்.

இன்னும் தன்னளவுக்கு கூட அவனுக்கு நினைப்பு இல்லை என்று புரிந்தவளும் அமைதியானாள். இருவரும் கணவன், மனைவி என்ற நினைப்பு மனதில் இருந்தது அதைத் தாண்டிய ரசனையும், ஆசையும் எதிர்பார்ப்பும் அவர்களுக்குள் முளை விட வில்லை. பெண்ணாக வெட்கம் உடைத்து பேச நிறையால் முடியவில்லை.

நிறைக்கு கணவனின் ஆதரவு மட்டும் தான். மற்றபடி வீடு தலையிடியாக இருந்தது. ஏதோ ஒரு மண் குடத்தை மூன்று மருமகள்களும் தூக்கிப் பிடித்து விளையாடுவது போல்… யார் உடைப்பது என்பது தான் போட்டியே! அந்த அளவுக்கு வீட்டின் சூழல் மாறிப்போனது. ஆரம்பத்தில் அமைதி காத்த நிறையும் முகம் தூக்க தொடங்கினாள். பின்ன எவ்வளவு நாள் தான் சாடை பேச்சுகளை கண்டு கொள்ளாமல் இருப்பது… ரோகினிக்கு தன் கணவன் தான் அதிகம் சம்பாதிக்கிறான். தங்கள் உழைப்பில் தான் இவள் இருக்கிறாள் என்பது போல் ஒரு எண்ணம்.

கூட்டுக் குடும்பத்தில் தான் மட்டும் அதிக உழைப்பு கொடுப்பது போலவும், வேலைக்கு செல்கிறேன் என்று நிறை தப்பித்துக் கொள்வது போலவும் ஒரு எண்ணம் சினேகாவுக்கு…

 நிறைக்குத்தான் தலைவலி. தான் புது மருமகள். ஏதாவது ஒன்றை பேசி முகத்தை தூக்கி, குடும்பம் உடைந்து விட்டால் மொத்த பழியும் இவள் மீது தான் வந்து விழும். அதனால நிறைய நேரங்களில் தன்னைத்தான் பேசுகிறார்கள் என்று தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்து கொள்வாள்.

அன்று பிரபா வீட்டில் தான் இருந்தான். நிறை வெளியில் துணிகளை துவைத்து அலசி கொண்டிருந்தவள். ஈர உடலோடு வேக வேகமாக இவன் முன் வந்து நின்றாள்.

“உங்க வீட்ல என்னதான் நினைக்கிறாங்க. உங்க அம்மா ஒரு பக்கம், உங்க சின்ன அண்ணி ஒரு பக்கம், உங்க பெரிய அண்ணி ஒரு பக்கம். எப்ப பாரு நச நசன்னு ஏதாவது பேசிட்டே இருக்காங்க. என்னோட பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கு. அப்புறம் நானும் பேசிப்புடுவேன். நீங்க எதுவும் சங்கடப்படக்கூடாது” என்றாள் கோபமாக,

“நீயும் பேசு. உன்னை யார் வேணாம்னு சொன்னது. அவங்க என்ன சொன்னாலும் பதிலுக்கு நீயும் சொல்லிட்டு வர வேண்டியதுதானே.. எதுக்கு என்கிட்ட வந்து கத்திட்டு இருக்க”

“என்னோட நியாயத்தை நான் உங்ககிட்ட சொன்னா.. உங்களுக்கு கத்துற மாதிரி தெரியுதா?” கடுப்பாக கேட்க.

“உன் நியாயத்தை அவங்க கிட்ட கேட்க வேண்டி தானே. இந்த பொம்பளைங்க சண்டைக்குள்ள என்னை இழுக்காத”

“உங்களை இழுக்காம, குடும்ப பிரச்சினையை புருசன் கிட்ட சொல்லாம, ரோட்ல போறவங்கள கூப்பிட்டு வச்சா பேசுவாங்க”

 “நான் தான் உன்னை பேசினா, நீயும் பதிலுக்கு பேசுன்னு சொல்லிட்டேன்ல.. அதை விட்டுட்டு என்னைத்தான் கத்துற” அவனும் என்ன செய்வான் அவர்கள் வீட்டு ஆட்கள் ஏதாவது செய்தால் நிறை இவனைத்தான் பிடித்துக் கொள்கிறாள்.

“சண்டை போட்டா, புது மருமகள் வந்து குடும்பத்தை உடைத்து விட்டான்னு என்னை தான் பேசுவாங்க” என்று அமைதியாக சொல்ல,

“அப்ப எதையும் கண்டுக்காம போ”

“அப்படித்தான் இவ்வளவு நாளா போய்க்கிருக்கேன். ஆனாலும், ஏதோ ஒரு ஆதங்கம். யார்கிட்ட காட்ட? அதான் என் கோபம் தீருர வரைக்கும் உங்களை கத்திட்டு வந்துடறேன்” என்றதும்,

“அடிப்பாவி” என்று அவளைப் பார்த்தவன் அப்போதுதான் அவள் நிற்கும் கோலத்தை உணர்ந்தான்.

துணியை அலசி கொண்டிருந்தவள், ஈர நைட்டியோடு இவன் அருகில் வந்து நின்றிருந்தாள். முதல் முறையாக பிரபாகரன் மனம் தடுமாறியது. தன் மனைவி தானே என்ற உரிமை உணர்வு தோன்ற, பார்வை விதம் மாறியது.

அதை உணராதவள் “என்ன பாக்குறீங்க?” என்று வேறு கேட்க.

“நிறை, அன்னைக்கு கல்யாணம் ஆனவங்களுக்கு மட்டும் வர ஒரு ஃபீலிங்ஸ் பத்தி பேசினில்ல”

“ஆமா”

“அதப்பத்தி கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணுவோமா” என்று விசமமாக சொல்ல,

“பிள்ளை பூச்சிக்கு நினைப்பு பாரு. கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மடியில வையுன்னானாம். என்னைக்கு வீடு நாலாக போகுதுன்னு தெரியல. இவருக்கு இப்பதான் ஃபீலிங்ஸ் வருதாம்” என்றவள்,

“துணியை அலசி வச்சிருக்கேன். எடுத்து காய போடுங்க. நான் குளிச்சிட்டு வந்துடறேன்” என்று விட்டு நகர்ந்து போனாள் நிறை.

அடுத்த மாதத்தில் சம்பளம் வந்ததும் வீட்டின் பிரச்சினை ஓயும் என்று நிறை நினைத்திருக்க… வீரணன் மூன்று மகன்களையும் தனித்குடித்தனம் செல்ல சொல்லி விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!