Skip to content
Post Views: 10,941
நீங்காத உறவே!…
அத்தியாயம் 9
வீட்டில் எல்லோரையும் அழைத்து வீரணன் தன் முடிவை கூற, அதிர்ந்து போய் நின்றது என்னவோ கல்யாணி, பிரபாகரன் மற்றும் நிறை இவர்களே… நிறைக்கு மிகுந்த பயமாகி போனது எங்கு தன்னை காரணம் சொல்லி விடுவார்களோ என்று…
ஆனால், வீரணன் மனதில் வேற இருந்தது. உணவை உண்ணும் போது நாக்கில் இருக்கும் ருசி, தொண்டைக்கு கீழ் இறங்கினால் இருக்காது. வயிற்றுப் பசியை மட்டும் போக்கும். அத்தகைய உணவில் கூட என்று தன் பிள்ளைகள் கணக்கு பார்க்க ஆரம்பித்தார்களோ… அப்போதே முடிவு செய்துவிட்டார் சண்டை சத்தம் எதுவும் இல்லாமல் பிள்ளைகளை அவர்கள் வழியில் போக விடுவது என்று… பெரிதாக மகன்கள் இடம் வேறுபாடு இல்லை. ஆனால், மருமகளிடம்?…
Advertisement
அவருக்கு இப்போதே தெரிந்தது ஒற்றுமை என்று கட்டி வைத்தால் நாளைக்கு ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு சண்டையில் முடியும் என்று… அந்த அளவுக்கு தான் மருமகள்கள் நடந்து கொண்டிருந்தார்கள். சாப்பிடும் சாப்பாட்டுக்கு கணக்கு பார்த்த பின் அவரவர் வழியில் பிரித்து விட்டார். இப்போது சண்டை என்று எதுவும் இல்லாமல் சகஜமாகவே ஒதுங்கிக் கொள்ளட்டும்.
வீடு எப்பவும் போல மாற்றம் இல்லை. மேல் வீட்டில் முன்பு போலவே வீரசிவா, வீர ராகவன் குடும்பம் இருந்து கொள்வது. என்ன ஒன்று சமையல் வேலை மட்டும் கீழே நடக்கும் மற்றபடி அவர்கள் குடித்தனம் மேலே தான். கல்யாணியும், நிறையும் முன்பு போலவே கீழே இருந்து கொள்வது. சமையலறையில் ஒட்டி இருந்த மற்றொரு அறையையும் சேர்த்து அவரவர் வசதிக்கேற்ப தடுத்துக் கொள்ளலாம். வீடு ஒன்றுதான் பிள்ளைகளின் வருமானத்திற்கு தக்க அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி கொள்ளலாம். தற்போதைக்கு தீர்வு கண்டு விட்டார்.
ரோகினி, சினேகாவுக்கு பெரிதாக ஆட்சேபனை இல்லை. அவர்களுக்கும் ஆசை இருந்தது. தான், தன் கணவன் என்று வாழும் சின்ன குடும்ப வாழ்க்கைக்கு… அவர்களுக்கு நிறைய செய்திருக்க பெரிதாக சங்கடம் இல்லாமல் ஒதுங்கிக் கொண்டார்கள். இதில் பெரிதும் தடுமாறிப் போனது திருநிறைச்செல்வி தான்.
Advertisement
தனி குடுத்தனம் போகும் அளவுக்கு அவளிடம் பெரிதாக சீதனங்கள் எதுவும் இல்லை. திலகா எப்பொழுதும் சொல்வது போல, “என் அண்ணன் வீடு எங்க அண்ணனுக்கு பெண் பிள்ளைகள் இல்லை நாளைக்கு எல்லாம் என் மகளுக்கு தான்” என்று பேசிய கரைத்து அவளை அனுப்பிவிட்டார். ரோகினி, சினேகா போல உடனே தன் குடும்ப அமைப்பை உடனடியாக கட்டமைக்க முடியவில்லை நிறையால்.. அவளிடம் அடுப்பு கூட கிடையாது.
Advertisement
பிரபாகரனுக்கும் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல நிலைதான். வேலைக்கு போவான், வருமானத்தை தாயிடம் கொடுப்பான், வீட்டில் இருப்பது உண்பான். பெரிதாக பொறுப்பு எடுத்து செய்ததெல்லாம் கிடையாது. அவனுக்கு மேல் இரண்டு அண்ணன்கள் இருக்க, ரொம்பவும் பொறுப்பாக வளர்க்கப்படவில்லை.
இந்தப் பக்கம் கல்யாணி தான் அழுது அரற்றி கொண்டு இருந்தார் , “முடியாதுங்க. நீங்க என்ன சொன்னாலும் நான், என் சின்ன மகனை விட்டு தர முடியாது. அவனுக்கு என்ன தெரியும்னு தனியா விடுறீங்க. கடையில போய் நல்ல காய் கூட வாங்க தெரியாது. விவரம் இல்லாம கைக்குள்ளே வளர்த்த மகன் தனியா நின்னு குடும்பத்தை தாங்குவானா?” ஆதங்கமாக கேட்க.
“அப்புறம் எதுக்கு கல்யாணி அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்ச.. விவரம் இல்லாதவனுக்கு கல்யாணம் மட்டும் எதுக்கு?” என்றார் கணவர்.
Advertisement
“என்னங்க கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம பேசுறீங்க. அந்த வயசு வந்துச்சு கல்யாணம் பண்ணி வச்சோம். அதுக்காக தனி குடுத்திடும் போற அளவுக்கு பக்குவம் வேணாமா?” என்றார்.
“அவனுக்குன்னு பொண்டாட்டி வந்தா, அவனுக்கனா குடும்பம் தனிதான் கல்யாணி. உன் மகனை உன் கைக்குள்ளே வைக்க நினைக்காத.. அவனை நம்பி ஒரு பொண்ணு வந்தாச்சு. அவன் குடும்பத்தை அவன் பார்க்கட்டும். மத்த ரெண்டு பிள்ளைகளை தனியா விட்டுட்டு, இவனை மட்டும் சேர்த்து வைக்கிறது நல்லா இருக்காது” என்று உறுதியாக சொல்ல,
“ஆனாலும் அவன் என் சேலை முந்திய பிடிச்சுக்கே திரிஞ்ச பைய.. மத்த ரெண்டு பசங்க கூட நம்ம கைக்குள்ள நிக்கல. கவர்மெண்ட் வேலை பார்க்கிறானுங்க, பொண்டாட்டி வீட்டிலும் குடுப்பாங்க, எந்திரிச்சு ஓடிருவாங்க. ஆனா, இந்த சின்னது அப்படி கிடையாதே… சாப்பாடு கூட அவன் முகம் பார்த்து நான் போட்டா தான். வாய் திறந்து கேட்க மாட்டான். அவனை நம்ம தனியா விட கூடாதுங்க . ஒரு புள்ள குட்டி ஆகுற வரைக்கும் சேர்ந்து இருக்கட்டும்” என்று விதவிதமாக கல்யாணி பேசிப் பார்த்தும், வீரணன் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
அவருக்கு ஒரே வீட்டில் மற்ற ரெண்டு பேரை தள்ளி வைத்து கடைசி மகனை மட்டும் சேர்த்துக் கொள்ள முடியாது. அது தப்பாக போய்விடும். அவர் முன்பே நினைத்தது தான் பெற்றோர்கள் கடமையை முடித்தாயிற்று. இனி அவர்கள் திறமைக்கு தக்க முன்னேறி கொள்ளட்டும்.
நிறையும், பிரபாகரனும் அங்குதான் இருந்தார்கள். அவர்களுக்கும் தனியாக செல்வதில் உடன்பாடு இல்லை. கல்யாணம் முடித்து முழுதாக மூன்று மாதம் கூட ஆகாமல், தனியாக செல்வது பயமாக இருந்தது.
கல்யாணி பேச்சு தீரவில்லை, “என் பேச்சைக் கேட்காமல் சின்ன பிள்ளையை தனியாக விடுறீங்க. உங்க தங்கச்சி அப்படியே மூத்த மருமகன்னு தாங்கிடுவாளாக்கும். ஒரு நேரம் மாமியார் வீடுன்னு, என் பிள்ளை போய் உட்கார்ந்து சாப்பிட்டாலும், அது அவன் காசு தான் இருக்கும்” என்று நொடித்து கொள்ள,
கலங்கம் கண்களோடு முகத்தை திருப்பிக் கொண்டாள் நிறை. என்ன சொல்கிறார் தன் மாமியார், இவளின் வருமானம் மகனின் பணமா? தன் மகன் சம்பாத்தியத்தில் மாமியார் வீடு இருக்கு என்ற சொல்கிறார். பதிலுக்கு பதில் பேச முடியாமல் வாயடைத்து ஊமையாகி நின்றாள் நிறை. பெற்றவர்களை நம்பி மாமியாரிடம் வீர வசனம் பேச முடியாது. அவர்களுக்கும் இவளை விட்டால் வேற கதி இல்லையே!… தான் திருமணம் செய்தது தான் தவறோ!…
கல்யாணி நிமிர்ந்து நிறையை பார்த்தார், எல்லாமே அவளுக்கு சாதகமாக நடப்பது போல் ஒரு எண்ணம். சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் பெற்றோருக்கு பணம் கொடுத்தால் என்று புரியவில்லை,
“இனி என்ன உனக்கு கொண்டாட்டம்தான். இப்ப ஒன்னுக்கு ரெண்டு வருமானம் ஆச்சு. உன் தங்கச்சி உன்னோட தானே கல்யாணம் ஆச்சு. மாசமா இருக்காளாம். இனி அவளுக்கு சீர் செய்யணும் பிள்ளைக்கு பார்க்கணும் வரிசையா இருக்கு வேலை. அதெல்லாம் நீ சமாளிச்சுப்ப.. அந்த விவரம் இல்லாதவன் தான் உன்ன முழுசா நம்புறானே” என்றவர்,
“குருடனுக்கு குருடன் வழிகாட்ட முடியாதுன்னு சொல்றது சரியா போச்சு” என்று எழுந்து செல்ல,
துடித்துப் போனாள் நிறை. அன்று திலகாவும் இதே வார்த்தையை தான் சொன்னார். இருவருக்கும் கட்டி வைத்தால் முன்னேற முடியாது என்று… இன்று மாமியாரும் அதே வார்த்தையை தான் சொல்கிறார். அப்படி என்ன தாங்கள் பொருத்தம் இல்லாத ஜோடி. அவரையும் தப்பு சொல்ல முடியாது. அவர் சொல்வதும் ஒருவகையில் உண்மைதான். இனி வளரை கொண்டு நிறைய செலவு வரும். எல்லாவற்றையும் திலகாவே தனியே சமாளிக்க மாட்டார். கண்டிப்பாக நிறையின் உதவியை எதிர்பார்ப்பார். அதையெல்லாம் தான் எவ்வாறு சமாளிக்க? இந்த வாழ்க்கை தனக்கு தேவைதானா? கடவுள் ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு பூஞ்சை நெஞ்சத்தை படைத்தார்.
அதே குடும்பத்தில் பிறந்த வளர், பெரிதாக எதையும் தலையிடாமல் தன் கணவன், குடும்பம் என்று இருக்கும் போது.. தான் மட்டும் ஏன் எல்லாவற்றையும் தன் தலையில் போட்டுக் கொள்கிறோம். மற்றவர்கள் நினைப்பது போல என்னோடு சேர்ந்து என் கணவரையும் சிக்கலில் மாட்டி விடுவேனோ? வாழ்க்கையை குறித்து பயம் அதிகமானது.
ஆனால், திருநிறை செல்வி பயந்ததற்கு நேர் மாறாக அவளின் தனிக்குடுத்தன வாழ்க்கை அமைதியாக தொடங்கியது. அதற்குப் பெரும் பங்கு வீர பிரபாகரனுக்கு மட்டுமே. நிறை ஒரே வீட்டிலே தாங்கள் தனியாக வசிப்பதை பற்றி திலகாவிடம் மூச்சு விடவில்லை. அவர் என்ன பெரிதாக சொல்லப் போகிறார், செய்யப் போகிறார். ஏற்கனவே தான் சரியில்லை என்பது போல பேச்சு. இதெல்லாம் அவரையும் கூட்டி வைத்து, பெற்றவர் ஏதேனும் சொல்லி வம்பை விலை கொடுத்து வாங்க விரும்பவில்லை. தற்போது இருக்கும் நிலையில் நிறை தான் தனிக்குடித்தனத்திற்கு காரணம் என்று நினைக்கும் கல்யாணி கையில் சிக்கினால் அவ்வளவுதான்.
கூட்டுக் குடும்பத்தில் ஆட்கள் நிறைய இருந்தாலும், வேலையும் பிரித்துக் கொடுக்கப்படும். பொதுவாகவே காலை வேலையை எல்லோரும் பங்கெடுத்துக் கொள்வார்கள். ரோகினி இட்லி, சாதம் வைத்தால், சாம்பார், சட்னி நிறை செய்வாள், மேல் வேலையை சினேகா பார்த்துக் கொள்வாள். காலை எட்டு மணிக்கு எல்லாம் வீட்டு வேலை முடிந்து விடும். ஆனால், இப்பொழுது இருவருக்கு தான் என்றாலும் வேலை அதிகமாக இருந்தது. ஒவ்வொருவரும் தனித்தனியாக நிறைய வேலை செய்யும்படி இருந்தது. கொஞ்சம் இலகுவாக கடந்தது என்றால் திருநிறை செல்வி தான்.
உணவில் பெரிதாக ஆர்வமில்லாத பிரபாகரனுக்கு, அவள் நேரத்துக்கு தகுந்தது போல சமைத்து விடுவாள். தனி குடுத்தனம் என்பது பெயரளவில் சமையல் வேலை மட்டும்தான் தனித்தனியாக நின்றது. மற்றபடி எல்லோரும் ஒரே வீடு என்பதால் பெரிதாக மாற்றமில்லை.
ஒரே குடும்பமாக இருக்கும்போது குற்றம் குறை கண்டுபிடித்தவர்கள். இப்போது ஒரே வீட்டில் இருந்தாலும் பேசுவதற்கு கூட பஞ்சமாகி போனது. இதில் நிறைக்கு தான் நல்ல கொண்டாட்டம். அந்த வீட்டின் கட்டு திட்டங்கள் எதுவும் அவளை சாரவில்லை. ஏனெனில் அவள் கணவன் அந்த அடக்குமுறைக்குள் அவளை வைக்கவில்லை.
இரண்டு பேருக்கு ஐந்து தோசை, ஒரு காரச் சட்னி, ஒரு காய்கறி சாதம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும். அதனால், அரக்க பறக்க எழுவதெல்லாம் கிடையாது. மற்ற வீட்டின் பெண்களுக்கு காலை ஐந்து மணிக்கு விடியல் என்றால் நிறை, அவள் தோதுக்கு தக்க தான் எழுந்திருப்பாள்.
வீரணன் சொல்லிவிட்டார், “தனியாக சென்று விடுங்கள் என்று சொல்லிய பின், அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைப்பது சரி கிடையாது கல்யாணி” என்று…
“டேய் சின்னவனே என்னடா இது? உன் பொண்டாட்டி அநியாயம் பண்றா? வீட்டு பொம்பளை காலைல சீக்கிரம் எந்திரிக்க மாட்டாளோ?” என்று மகனிடம் தான் காய்வார்.
“விடுமா, நிறையும் வேலைக்கு போயிட்டு வர்ற பிள்ளை. கை, கால் அசதி இருக்கும் தானே. ரெண்டு பேருக்கு சமைக்கிறதுக்கு காலையில் ஐந்து மணிக்கு எந்திரிச்சு என்ன பண்ண போகுது” என்ற மகனை முறைத்து பார்ப்பார்.
பிரபாகரன் சொல்வது போல ஏழு மணிக்கு எழுந்தாலும் அரை மணி நேரத்தில் பட்டென்று எல்லா வேலைகளையும் முடித்துக் கொள்வாள் நிறை.
அவளிடம் கிரைண்டர் கிடையாது. வேலை விட்டு வந்து பத்து மணிக்கு மேல் மிக்ஸியில் தான் மாவு அரைப்பாள். பார்த்த அவள் கணவன் விடுவானா,
“நம்ம ரெண்டு பேர் தான நிறை. எனக்கு தெரிஞ்சவங்க வீட்லே மாவு ஆட்டுறாங்க. அவங்க கிட்ட சொல்லி வச்சிட்டேன். தினமும் நானே வாங்கிட்டு வந்துருவேன். நீ சிரமப்படாத” என்றான். தனக்காக எவ்வளவு பார்க்கிறான், மனம் நிறைவாக உணர,
“உங்களுக்கு என்னங்க பிடிக்கும்? நான் எனக்கு தோன்றதெல்லாம் செஞ்சு வச்சுட்டு இருக்கேன். உங்களுக்கு புடிச்ச மாதிரி சொல்லுங்க. வாரத்துல நாலு நாளாவது உங்க மெனு தான்” சந்தோஷமாக வாக்கு கொடுத்தாள்.
“எனக்கு என்ன நிறை? நீ என்ன கொடுத்தாலும் நான் சாப்பிட்டுப்பேன். பெருசா இதுதான் புடிக்கும் எல்லாம் கிடையாது” என்றான் கணவன்.
“அது எப்படி எதுவுமே பிடிக்காம இருக்கும். நீங்க சொல்லுங்க உங்களுக்கு எது பிடிக்கும். நான் வெஜ் நல்லா சாப்பிடுவீங்களா? பார்த்தா அப்படி ஒன்னும் தெரியல”
“உன் சமையல் ரொம்ப நல்லா இருக்கு நிறை. உண்மையா எனக்கு பிடிச்சிருக்கு. அதனால நீ என்ன செஞ்சாலும் நான் சாப்பிட்டுப்பேன்” என்றதும், வேற என்ன வேண்டும் நிறைக்கு, முகம் பூரித்து போனது.
ஆனாலும், கணவனின் உணவு முறைகளில் கவனம் செலுத்தினாள் மனைவி. தினமும் அவன் உணவு டப்பாக்களை ஆராயும் பொழுதே அவனுக்கு பிடித்த உணவுகளை கண்டறிந்து விடுவாள். முழுதாக உண்டு வந்தால் அந்த உணவின் சுவை அவனுக்கு பிடித்தம் என்று அறிவாள். அதன்பின் அந்த வகையான உணவுகள் வாரத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து வரும். அதைப் பிரபாகரனும் அறிவான். தான் எதுவும் சொல்லாமலே தன் உணவு பழக்கத்தை கையில் எடுத்த மனைவியை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்து கொள்வான்.
அந்த வாரத்திலேயே திலகா மகளுக்கு போன் செய்தார்.
“நிறை, வளரு இரண்டு நாள் நம்ம வீட்ல இருக்க வந்து இருக்கா.. உங்க அப்பாவும் கறி மீன் எடுப்போம் பெரிய பிள்ளையும் வர சொல்லுன்னு சொல்றாரு”
“நான் வேலைக்கு போகணுமேம்மா” என்றதும்,
“காலையில வேலைக்கு போயிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வா நிறை. தங்கச்சியும் வந்திருக்கா, உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பார்த்தே ரொம்ப நாள் ஆகி போச்சு. ஒரு ரெண்டு நாள் மட்டும் வீட்டுக்கு வந்தா என்னவாம். அப்பா நம்ம குலதெய்வ கோயிலுக்கு வேற போகணும்னு சொன்னாரு” என்றதும்,
“நான் அவர்கிட்ட கேட்டு உனக்கு போன் பண்றேன்ம்மா” என்று சொன்னாள் நிறை.
பிரபாகரன் ஒன்றும் சொல்லப் போவதில்லை தான். முடிவை இவளே கூட எடுக்கலாம். ஆனாலும் என் கணவனுக்கான மரியாதையை நான் கொடுத்தால் தானே, தன் பிறந்த வீட்டிலும் கொடுப்பார்கள். அதனாலே, என் கணவரிடம் கேட்டு தான் வருவேன் என்று முடித்துக் கொண்டாள்.
அவள் நினைத்தது போலவே பிரபாகரன் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. “போயிட்டு வா நிறை. ரெண்டு நாள் தானே. உங்க அம்மா வீட்டுக்கு நீ போயிட்டு வர, என் முகத்தை ஏன் பாக்கணும். அம்மா இருக்காங்க என்னை பார்த்துப்பாங்க” என்று கணவன் சொன்னாலும்,
நிறை தன் வேலைகளை முடித்தாள். கல்யாணி பார்த்துக் கொள்வார்தான். ஆனாலும் மனைவி என்ற ஒருத்தி வந்தபின், அவரைப் பார்த்துக் கொள்ள செல்வது சரி வருமா?… சாப்பாடு என்றால் பரவாயில்லை மற்றதை தானே முடித்து வைக்க வேண்டும் என்று வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, அவனின் தேவைகளை கவனிப்பது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு, வேலைக்கு சென்று அங்கிருந்து திலகா வீடு சென்று விட்டாள்.
நீண்ட நாள் சென்று அதுவும் திருமணம் முடித்து சென்ற மகள்கள் இருவரும் ஒரே வீட்டில் இருப்பதை காண்கையில் பெற்றவர்களுக்கு நிறைவாக இருந்தது. நிறைக்கும் நல்ல வரவேற்பு தான்.
முதல் நாள் தங்கையோடு அரட்டை நல்ல உணவு என்று நன்றாக போனது. பிரபாகரனை கூட கொஞ்சம் மறந்திருந்தாள் நிறை. நீண்ட நாள் சென்று தாய் வீடு நிம்மதியாக இருந்தது.
திலகா சொன்னார், “வளர்க்கு போனதும் கடவுள் கொடுத்திருச்சு… உனக்கும் ஒன்னு கடவுள் நல்லபடியா கொடுத்துட்டா போதும் வேற எங்களுக்கு எந்த கவலையும் இல்லை” தாய் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்ததும் நிறையின் முகம் சிவந்தது.
அவளுக்கு அந்த நினைவு சுகமாக இருக்க, மகள் தன் கணவனோடு நன்றாக வாழ்கிறாள் என்று புரிந்து கொண்டார் திலகா.
தாய் அப்படி சொன்னதும் நிறைக்கு கணவன் ஞாபகம் வந்தது. இந்த திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் ஒருவரை ஒருவர் பார்க்காமல் தள்ளி இருந்ததில்லை. இதுதான் முதல் முறை. தன்னை நினைப்பானா என்று ஒரு பக்கம் மனம் ஏங்கியது. தினமும் போன் செய்து விசாரிக்கிறான் தான். ஆனாலும், வீட்டில் மனைவி இல்லையே என்ற ஏக்கம் தன் மீது கணவனுக்கு வருமா என்ற ஒரு யோசனை. அவனுக்கு பெரிதாக தன் ஞாபகம் இல்லையோ!…
அடுப்பில் எதையோ கிண்டி கொண்டிருந்தவர்களிடம் “அக்கா இங்க சீக்கிரம் வா, மாமா வந்துட்டாங்க” என்றாள் வளர்.
பதறிப் போனவள் “மாமாவா, யார சொல்ற?” என்றபடி வெளியே வர,
உள்ளே வந்து கொண்டிருந்தான் பிரபாகரன். பார்த்ததும் நிலைப்படியில் சாய்ந்து அப்படியே நின்று விட்டாள். சத்தியமாக அங்கு கணவனை எதிர்பார்க்கவில்லை. தன்னை நினைப்பானா என்று தான் பெண் மனம் ஏங்கியதை தவிர, தன்னைத் தேடி வருவான் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஒரு மாதிரி மனதில் படபடப்பு. அவளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று கூட தெரியவில்லை.
“என்னடி அப்படியே மலைச்சு போய் நிக்கிற பிரபா வந்து இருக்கான், போய் சாப்பிட என்ன இருக்குன்னு பாரு” என்று தாய் சொன்னதும் தான் அவசரமாக உள்ளே சென்றாள்.
அவனிடம் நின்று பேசக்கூட இல்லை. உண்மையில் அவளுக்கு பேச்சு வரவில்லை. தயக்கம், வெட்கம் எல்லாம் கலந்து நின்றது. ஒரு ரெண்டு நாள் தான் பார்க்கவில்லை கணவனை… ரெண்டு நாளில் என்ன வந்தது சகஜமாக எதிர்கொள்ள முடியாமல் ஓடி ஒழிவது எதற்கு? தன்னை எதிர்பார்க்கிறான். தன்னையும் ஒரு ஜீவன் தேடுகிறது. தான் அருகில் இல்லாமல் தன் முகம் காண தேடி வந்து விட்டான். மனதில் சொல்ல முடியாத ஆறுதல். தனக்காக ஒருத்தன் இருக்கிறான் அல்லவா அந்த நிம்மதி.
ஒரு அறை தான் இருந்தது அங்கு அவனை ஓய்வெடுக்க வைத்து விட்டு அவசர அவசரமாக சமையல் வேலையை முடித்து, குளிக்க வெளியில் ஓடினாள். பிரபாகரன் புதுசா ஒன்னும் அவளை பார்ப்பதில்லை. தினமும் பார்ப்பது தான், இருந்தாலும் இன்று என்னவோ அவன் முன் தலையில் எண்ணெய் வைத்து, வேர்த்து போய் சோர்ந்து நிற்க விரும்பவில்லை.
“ராத்திரி பத்து மணிக்கு மேல எதுக்கு தலைக்கு குளிச்சிட்டு வார?” என தாய் கேட்க.
“ஒரு மாதிரி கசகசன்னு இருந்துச்சும்மா” என்றாள் மகள்.
திலகாவுக்கு கொஞ்சம் புரிந்தது. நிறை, சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு எட்டி கணவனை பார்க்க, வேலை விட்டு நேரா இங்கதான் வந்திருப்பான் போல, சோர்ந்து படுத்திருந்தான். முதலில் அவனுக்கு சாப்பாடு கொடுக்கணும் என்று நினைத்துக் கொண்டாள்.
அதற்குள் வெளியில் சத்தம், திரும்பவும் என்ன என்று எட்டிப் பார்க்க, வளரின் கணவன் ஆனந்த் வந்திருந்தான்.
என்ன இந்த நேரத்தில் வந்திருக்கிறான் என்று நினைத்தாலும் நிறை வரவேற்றாள்.
நொடியில் வீடு பரபரப்பாகியது. திலகா வராத மருமகன் வந்து விட்டான் என்று ஓடி ஓடி கவனித்தார்.
“சாப்பாடு வேணாம் அத்தை கொஞ்சம் டயர்டா இருக்கு” என்று ஆனந்த் சொன்னதும்,
திலகா, “பிரபா நீ வெளிய வா, மாப்பிள்ளை வந்திருக்காரு பாரு. அவரு கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும். நீ வெளியே கயிறு கட்டில் இருக்கு. அங்க உங்க மாமா இருக்காரு அவர்கிட்ட பேசிட்டு இரு.. வளரு நீ மாப்பிள்ளை உள்ள கூட்டிட்டு போ. நிறை பாலை சுண்ட காட்சி எடுத்துட்டு வா” என்று திலக பரபரப்பாக வேலை ஏவ, நிறைமுகம் முழுதாக மாறிப்போனது.
error: Content is protected !!