Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 10

அத்தியாயம் 10

அப்பா தன்னை பார்த்ததும் என்ன சொல்வாரோ? எப்படி எதிர் கொள்வாரோ என்று பயந்துகொண்டே தான் வீட்டினுள் நுழைந்தால் தமயந்தி. அவளுக்கு அழைத்த அனந்தன் அங்கிள் தான் உடன் வந்தார். 



Advertisement

தர்மராஜ் சங்கடத்துடன் மனைவியின் பின் சென்றார்.

வீட்டு வாயில் கதவு திறந்து தான் இருந்தது. ஆனால் ஒரே அமைதியாக இருந்தது.

Advertisement

“அவி… அப்பா அவி…” என்று குரல் கொடுத்தார் அனந்தன்.

Advertisement

“தாத்தா ஒரு நிமிஷம் இருங்க… தாத்தா பாத்ரூம் போயிருக்காங்க… இதோ வரேன்..” என்று உள்ளிருந்து ஒரு குரல் மட்டும் வந்தது.

Advertisement

திக்.. திக்.. நிமிடங்கள் தமயந்திக்கும் தர்மராஜிற்கும்.

ஐந்து நிமிடம் சென்று வெளியே வந்தான் ஒரு இளைஞன். அவன் ஜாடையில் இருந்தே அண்ணன் மகன் என்று புரிந்து கொண்டார் தமயந்தி.

புதியவர்களை பார்த்ததும் ஒரு நிமிடம் திடுக்கிட்டு நின்றுவிட்டான்.

“உங்க அத்தையும் மாமாவும் அவி.. உங்க தாத்தாவை பார்க்க நான் தான் வர சொன்னேன்” என்றார் அனந்தன்.

“ஓ..” அதற்கு மேல் அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“இவன் தான் ம்மா அவினாஷ்… உங்க அண்ணன் பையன் “ என்று அவனையும் தமயந்திக்கு அறிமுகம்  செய்து வைத்தார்.

“சரி வா போய் உங்க அப்பாவை பார்க்கலாம்” என்றார்.

தமயந்தி அவினாஷை பார்க்கவும் , அவன் “நான் என்ன சொல்லனும் இப்போ ?” என்று கேள்வியாக பார்த்தான்.

அவன் முகத்தில் கொஞ்சம் கூட ஒரு சிநேக பாவம் இல்லை.

“நீ வா ம்மா.. அவனை எதுக்கு பார்க்கிற..அவன்  என்ன சொல்லுவான்?” என்று அனந்தன் முன்னே சென்றார். 

தயக்கத்துடன் தமயந்தி பின்னே சென்றார். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து தன் அப்பாவை பார்க்க போகிறாள். அவளது பதினைந்தாவது வயதில் தாய் தவறி இருந்தார். அப்பொழுதில் இருந்து தன் திருமணம் வரை தாயுமானவராக இருந்த அப்பா…  

படுக்கையில் இருந்த மனிதரை பார்த்ததும் தமயந்தி அதிர்ந்தே விட்டார். என் அப்பாவா இது? உடம்பு முடியாமல் இருக்கிறார் என்று தெரிந்த போதும் இப்படி ஒரு நிலைமையில் அவரை கனவிலும் எதிர் பார்க்கவில்லை. எத்தனை கம்பீரமானவர் என் அப்பா.. அவரா இப்படி.. உருக்குலைந்து இருக்கிறாரே.. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது… பேச்சே வரவில்லை. தர்மராஜும் திருமணத்திற்கு முன்பு அவரை பார்த்திருக்கிறார். அவராலே இன்றைய அவரது தோற்றத்தை ஜீரணிக்க முடியவில்லை.

“ஏம்ப்பா வேதா.. இங்க பாரு யாரு வந்திருக்கா உன்னை பார்க்கன்னு.. “ என்றார் அனந்தன்.

மெல்ல கண் திறந்து பார்த்தார் வேதாச்சலம். பார்த்தது பார்த்தபடி அப்படியே திகைத்துவிட்டார்.

கண்கள் முதலில் லேசாக கலங்கியது. காட்சி மங்கியது.. பின் முழுவதும் கலங்கி கண்ணீர் இறங்கியது. காட்சி இப்பொழுது தெளிந்தது.. கண் முன்னே தன் மகள்… தன் செல்ல மகள்.. மகளே இல்லை என்று தலை முழுகிய மகள்…

எந்த மகள் இறந்து விட்டாள் என்று கோபத்தில் கூறினாரோ, இன்று அந்த மகள் வந்தபொழுது வா மகளே என்று அழைக்க தோன்றினாலும் அழைக்க  முடியவில்லை.

இடது பாகம் முழுவதும் செயலிழந்து விட்டது. மெல்ல தன் வலது கையை தூக்கி வா என்று செய்கை செய்தார்.

“எத்தனை  வருஷம் … என்னை வான்னு சொல்ல எத்தனை வருஷம் ப்பா..”  என்று விம்மிக்கொண்டே அவர் அருகில் சென்று அமர்ந்தார்.

மெல்ல அவர் மகள் கைகளை பிடித்துக்கொண்டார்.

பலவருட வலி.. ஏமாற்றம், நிராசை, கோவம், பாசம், தவிப்பு.. எல்லாம் கண்ணீர் மூலமே பகிர்ந்துகொண்டனர் இருவரும்.

பின் மெதுவாக தர்மராஜை பார்த்தார். அவரையும் செய்கையால் வாருங்கள்  என்பது  போல கை அசைத்தார்.

“எங்களை மன்னிச்சிருங்க மாமா.. அந்த வயசுல எப்படி என்ன செய்றதுன்னு தெரியாம உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டோம்.. அதுக்காக நாங்க வருத்தபடாத  நாளே இல்லை. உங்களை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு” என்றார் தர்மராஜ் வேதனை நிறைந்த குரலில்.

கண்களை மூடி திறந்தார் பெரியவர்.

பரவாயில்லை.. போனது போகட்டும் என்று சொல்ல வந்தாரோ.. இன்னும் கோவம் தான் என்று சொல்ல வந்தாரோ.. காலம் தான் எல்லாவற்றையும் மறக்க செய்து  விட்டது என்று சொல்ல வந்தாரோ… ஏதோ ஒன்று.. முடிவில்லா தவிப்பிற்கு ஒரு விடுதலை கிடைத்ததை போல இருந்தது அனைவருக்கும்.

“நான் தான் வேதா வர சொன்னேன். அவி பையன் தனியா கஷ்டப்படறதை பார்க்க முடியல … “ என்றார் அனந்தன்.

“நான் எனக்கு கஷ்டமா இருக்குன்னு எப்ப சொன்னேன்?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் அவன்.

அவன் குரலில் ஒரு சீற்றம் இருந்தது. 

தமயந்தி பாவமாக அவனை பார்க்கவும், “சாரி.. நீங்க வந்தது பத்தி நான் எதுவும் சொல்லலை. எங்க தாத்தாவை பார்க்கிறது எனக்கு கஷ்டம் இல்லை, அதை தான் சொன்னேன்”

மெல்ல சிரித்து கொண்டார் தமயந்தி.

“நீங்க காபி சாப்பிடுவீங்களா டீயா?” என்று கேட்டான்.

“பரவாயில்ல.. கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றார் தமயந்தி.

“இல்ல … நீங்க களைப்பா தெரியறீங்க.. என்ன குடிப்பீங்கன்னு சொல்லுங்க”

“காபி ..” என்றார் தமயந்தி அண்ணன் மகனை மெச்சுதலாக பார்த்துக்கொண்டு.

சற்று நேரத்தில் மூவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தான். கூடவே தாத்தாவிற்கு தனியாக பால் கொண்டு வந்திருந்தான்.

மெதுவாக ஆற்றி கொஞ்சம் கொஞ்சமாக தாத்தாவிற்கு கொடுத்தான்.

“உனக்கு” என்றார் தர்மராஜ்.

“நான் பாப்பா வந்ததும் குடிச்சிக்குகிறேன்…”

பாப்பாவா என்றார் தர்மராஜ் உற்சகமாக. அவருக்கு பாப்பா என்றதும்  கருணாம்பிகை ஞாபகம் வந்துவிட்டது.

“ஆமாம்மா.. சின்னவ.. ஆறாவது படிக்கிறா.. ஸ்கூல் போயிருக்கா.. இப்ப வந்துடுவா..” என்றார் அனந்தன்.

காபி அருந்தியதும் “சரி நீங்க பேசிட்டு இருங்க.. நான் வீட்டுக்கு போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்று கிளம்பி விட்டார் அவர்.

அனந்தன் வேதாச்சலத்தின் நண்பர். இவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் ஒரே மனிதன் இப்பொழுது.

“நீங்க அந்த ரூம்ல ரெப்பிரேஷ் பண்ணிக்கோங்க” என்று ஒரு அறையை காட்டி கூறினான் அவினாஷ்.

மறுக்காமல் இவர்களும் சென்று முகம் கழுவிக்கொண்டு வந்தார்கள்.

“அண்ணா… அண்ணா…” என்று கூவிக்கொண்டே வந்தாள் ஒரு பெண்.

“வா.. வா.. என்ன ஆச்சு பாப்பா..” என்று கேட்டுக்கொண்டே  ஓடி சென்றான் அவினாஷ்.

“கீழே விழுந்துட்டேன்” என்று தன் முழங்கையை காட்டினாள் அழுது கொண்டே.

“பார்த்து வர மாட்டியா? என்ன பாப்பா நீ.. வா கை  கழுவி மருந்து போடுவோம்”

“வேண்டாம் மருந்து போட்டா  எரியும்… “

“அது விழுந்து வார்றதுக்கு முன்னாடி  யோசிச்சிருக்கணும்.. வா இப்போ”

“எனக்கு வலிக்கும் வேண்டாம்..” என்று அழுதாள் சிறுமி.

இதை கேட்டுக்கொண்டே வந்த தமயந்தி, “எங்க காயத்தை காட்டு நான் பார்க்கிறேன்” என்றார்.

புதியவரின் குரலை கேட்டதும் மருண்டு விழித்தாள். சென்று அண்ணன் பின்னே மறைந்து கொண்டாள்.

“பாப்பா, இது… “ என்று ஒரு வினாடி நிறுத்தி பின் “அத்தை டா.. தாத்தாவை பார்க்க வந்திருக்காங்க” என்றான்.

அதுவரை அத்தை என்றோ மாமா என்றோ உறவு சொல்லி அழைத்திருக்கவில்லை. தமயந்திக்கு அவனை புரிந்து கொள்ள முடிந்தது.

தர்மராஜ் வாய் பிளந்து அந்த சிறுமியை பார்த்துக்கொண்டிருந்தார். பின்னே தமயந்தியை  உரித்து வைத்திருந்தாள். கண் மூக்கு வாய் என்று அனைத்தும் தமயந்தி ஜாடை தான்.

அவர் பார்வையை பார்த்ததும், அவினாஷ்,”தாத்தா சொல்லிட்டே இருப்பாங்க.. அப்படியே உங்க அத்தை மாதிரி இருக்கான்னு” என்றான் மெதுவாக.

“உன் பெயர் என்ன?” என்று கேட்டார் தமயந்தி.

“அருந்ததி…” என்றாள் மெல்ல.

“சரி வா, நான் உன் காயத்தை பார்க்கிறேன்” என்று கூறினார்.

“அவ மருந்து போட பெரிய கலாட்டா செய்வா… நீங்க விடுங்க நான் பார்த்துகிறேன்.” என்றான் அவினாஷ்.

அதற்குள் உள்ளே இருந்து தாத்தா அழைத்தார். அவரால் கூப்பிட முடியாது என்று மருத்துவமனையில் இருப்பது போல ஒரு பெல்லை வைத்திருந்தார்கள். அதை அழுத்தவும்.. ‘ஒரு நிமிஷம்’ என்று அவினாஷ் உள்ளே விரைந்து விட்டான்.

தமயந்தி மெல்ல அருந்ததியிடம் பேச்சு கொடுத்தார்.

“நீ வா பாப்பா… நான் உனக்கு ஹெல்ப் பண்ணவா.. உன் டிரஸ் எல்லாம் எங்கே இருக்கு..”

இவர்கள் இருந்த அறையை கை காண்பித்தாள். 

“ஓ  இது உன் ரூம்மா ? நாங்க யூஸ் பண்ணிட்டோமே?”

 

“அச்சோ.. என் ரூம் எல்லாம் இல்லை. அந்த ரூம்ல என் டிரஸ் இருக்கு.. அவ்வளவு தான்..”

“வாங்க” என்று அவருடன் உள்ளே சென்றாள்.

தர்மராஜ் அமைதியாக நீளிருக்கையில் அமர்ந்துகொண்டார்.

மெல்ல பேச்சு கொடுத்துக்கொண்டே அருந்ததியின் காயத்தை சுத்தம் செய்து மருந்தும் போட்டுவிட்டார்.

பின் அவரே அடுப்படிக்குள் நுழைந்து பாலை சூட செய்து, அவளுக்கு  ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தார்.

பெண் இல்லாமல், ஒரு சிறு பையனே நோயாளி தாத்தாவையும் பார்த்து வீட்டையும் நிர்வகிக்கிறானே என்று ஆச்சர்யமாக இருந்து தமயந்திக்கு.

அவினாஷ் வந்து தங்கையும் அத்தயையும் ஆச்சர்யமாக பார்த்தான். 

“சூப்பர் பாப்பா.. மருந்து போட்டுக்கிட்டியா?”

அவள் உம்மென்று அண்ணனை பார்த்தாள். அதுவே சொன்னது ‘எனக்கு போட விருப்பமில்லை. வேறு வழி  இல்லாமல் அமைதியாக இருந்தேன்’ என்று.

“நீங்க எதுக்கு கஷ்டப்படறீங்க.. நான் வந்து ஹார்லிக்ஸ் போட்டிருப்பேனே..” என்றான் தமயந்தியை பார்த்து.

“நீ எங்களுக்கு காபி கொடுத்த தானே.. அதே மாதிரி தான்” என்றார் தமயந்தி இலுகுவாகவே.

மீண்டும் தமயந்தி அப்பாவின் அருகில் சென்றார்.

“என்ன பேசுவது … எப்படி பேசுவது..” என்று தயக்கங்கள் வரிசை கட்டி நின்றது . 

அண்ணன் தங்கை இருவரும் இப்பொழுது உள்ளே வந்து விட்டார்கள்.

“அப்பா எங்க கூட வந்துடறீங்களா?” என்றாள் தமயந்தி தன தகப்பனிடம்.

அவர் அமைதியாக இருந்தார்.

அருந்ததி அத்தையின் கேள்வியில் அதிர்ச்சி ஆகிவிட்டாள்..

“அண்ணா தாத்தாவும் அம்மா அப்பா மாதிரி நம்மளை விட்டுட்டு போய்டுவாங்களா?” என்று மெதுவாக தான் அண்ணனிடம் கேட்டாள். மெதுவாக என்றாலும், அங்கே இருந்த அமைதியான சூழலில் அனைவருக்கும் அது கேட்டது. 

மனத்தை கனக்கச்  செய்தது அந்த கேள்வி.

“உங்களை விட்டுட்டு இல்ல தங்கம்… உங்க மூனு பேரையும் தான் நான் கூட்டிட்டு போக போறேன்” என்றாள் தமயந்தி.

“இல்ல அது சரி வராது.. நாங்க வரலை” என்றான் அவினாஷ் உடனே.

“தீடீர்ன்னு அத்தைன்னு வந்து நின்னா உனக்கு ஏத்துக்க கஷ்டமா தான் இருக்கும். ஆனா, அங்க சென்னை வந்தீங்கன்னா, நான் தாத்தாவை பார்த்துப்பேன்.. நீயும் படிக்கலாம்..பாப்பாவையும் அங்கேயே ஸ்கூல்  சேர்த்துரலாம்..யோசி.. அப்புறம் முடிவு செய்யலாம்”

“அது வேண்டாம் அத்தை… நாங்க இங்கேயே இருந்துகிறோம்” என்றான் ஒருவாரு  இறுகிய குரலில்.

“அப்பா நீங்க சொல்லுங்க அப்பா.. அவன் தான் சின்ன பையன் புரியாம பேசுறான்.” என்றார் தமயந்தி இப்பொழுது தன் அப்பாவிடம்.

‘போவோமா?’ என்று கேள்வியாக பேரனை பார்த்தார். அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தது பேரனுக்கு.

“ஏன் தாத்தா?” என்றான் உள்ளிறங்கிய குரலில்.

அப்பொழுது அனந்தனும் வந்துவிட்டார்.

“இங்க தனியா உனக்கு கஷ்டம் தானே அவி… உங்க அத்தை கூட போய்டுங்களேன்.. உன் மேல இருக்க அக்கறையால் தான் இதை சொல்றேன்” என்றார் அவர் அவினாஷிடம்.

“தாத்தா மட்டும் வேணா போகட்டும் .. நானும் பாப்பாவும் இங்கேயே இருக்கிறோம்” என்றான்.

“அதுக்கு உன் சித்தப்பா விடனும் இல்ல .. இந்த வீட்டை விக்க எங்கிட்ட மட்டும் சொல்லி இருக்கான்னு பார்த்தா, வீட்டு புரோக்கர் கிட்டயும் சொல்லி இருக்கான் பா..”

“அது எப்படி? வீட்ல இவங்களுக்கும் பங்கு இருக்கும் தானே” என்றார் தர்மராஜ் இப்பொழுது.

“இவங்க அம்மா வைத்தியத்துக்கு நிறைய செலவு பண்ணியாச்சு. அதனால இப்ப வீடு அவனுக்கு வேணும்னு கேக்றான்.”

“அப்படி எல்லாம் விட முடியாது.. நாங்க இருக்கோம்ல இப்ப.. அப்படி எல்லாம் விட்ருவோமா?“

“இல்ல மாமா.. சித்தப்பா சொல்றதும் நியாயம் தானே..” என்றான் அவினாஷ் விரக்தியான குரலில்.

எந்த பக்கமும் போக முடியாமல் சூழ்நிலை தங்களை இறுக்குவதாக பட்டது அவினாஷிற்கு.

தமயந்தி மெல்ல “உங்க அப்பாவை வர சொல்லுங்க” என்றார் கணவனிடம். புறப்படுவதற்கு முன்பே முருகானந்ததிற்கு அழைத்து விஷயத்தை கூறி இருந்தார்கள்.

அவரும் அதே ஊர் தானே. மகன் அழைக்கவும் விரைந்து வந்துவிட்டார். 

அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாம் முருகானந்தம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.

சுருக்கமாக அங்கே உள்ள நிலவரத்தை கூறினார் தமயந்தி.

“உன்னை மாதிரி  பிள்ளை கிடைக்க உங்க அப்பா அம்மா புண்ணியம் பண்ணிருக்கணும் தம்பி.. யார் எப்படி இருந்தாலும் உன் பொறுப்புகளை நீ கை விடல.. நீ உன் கடமை தவறாம நிக்குற பாரு, அந்த ஒரு குணம் போதும்.. நீ வாழ்க்கைல கண்டிப்பா ஜெய்ச்சிடுவ ப்பா… “ என்று தான் ஆரம்பித்தார்.

அவரின் ஆளுமைக்கு முன் அவியால் அதிகம் எதுவும் கூற  முடியவில்லை.

வீட்டை தவிர வேற சொத்து என்ன இருக்கு என்று கேட்டார்.

தமயந்தியின் தந்தை பீரோவை காட்டினார்.

அவினாஷ் சென்று தாத்தாவின் பெட்டியை கொண்டு வந்து கொடுத்தான்.

வீட்டை தவிர ஒரு சிறு இடமும் இருந்ததிற்கான பத்திரங்களில் இருந்தது. முப்பது பவுன் நகைகளும் இருந்தது.

அனந்தன் மூலம் தமயந்தியின் அண்ணன் தம்பி இருவரையும் அழைத்து பேசினார். அவர் அவர் நிலைப்பாடுகளை கேட்டுக்கொண்டார்.

“அவினாஷின் அம்மா வைத்திய செலவிற்கு ஈடாக அந்த சிறு இடத்தை தமயந்தியின் தம்பிக்கு முழுவதுமாக விட்டுக்கொடுக்கும் படியும், வீட்டை விற்று வரும் பணத்தை நான்கு பங்குகளாக பிரிக்கவும் கூறினார். பணத்தில் அண்ணன் தம்பி இருவருக்கும் ஆளுக்கொரு பங்கு. அதை அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளலாம்.பெண் பிள்ளை தமயந்திக்கு ஒரு பங்கு, அவர் அப்பா வேதாச்சலத்திற்கு ஒரு பங்கு” என்றார்.

மறுத்து கூற வந்த தமயந்தி மாமனாரின் பார்வையில் அமைதி ஆனார்.

இதற்கு அண்ணன் தம்பி இருவருமே ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு முருகானந்தம் பற்றி தெரியும். ஊரில் மிகவும் பெரிய மனிதர். அவரே வந்து கூறவும் அது மிகவும் நியாயமாக தோன்றவும் மறுபேச்சின்றி ஏற்றுக்கொண்டனர்.

சொத்தை பற்றி  அவ்வளவு தெளிவாக கேட்டு கொண்டவர்கள், அப்பாவின் பொறுப்பை பற்றியோ பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றியோ ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

அனைத்து ஏற்பாடுகளையும் செய்தால், விரைவில் வந்துவிடுவதாக கூறி வைத்து விட்டனர்.

“இப்ப சொல்லு தமயந்தி.. என்ன உன் யோசனை” என்றார் மருமகளிடம்.

“நீங்க சொல்ற மாதிரியே செய்திடலாம் அப்பா.. இவங்க மூனு பேரையும் நம்ம அங்க சென்னைக்கு கூட்டிட்டு போய்டுலாம்” என்றார்.

விருப்பமின்மை அவினாஷ் முகத்தில் நன்றாக தெரிந்தது. இவர்கள் பேச தொடுங்கும் போதே தங்கையை அவள் தோழி வீட்டிற்கு விளையாட அனுப்பிவிட்டான் அவினாஷ்.

“இங்க வாப்பா..” என்று அவனை தனதருகில் அமர்த்திகொண்டார் பெரியவர்.

“இங்கே நிறைய விஷயங்கள் தவறாக நடந்திருக்கு.. ஆனா அது எதுலையும் உனக்கு பங்கு இல்லை”

அவன் கலங்கிய கண்களோடு அவரை பார்த்தான்.

“இன்னொருத்தர் வீட்டுக்கு அடைக்கலாமா போறோம்னு நினைக்கிறியா?”

அவன் அமைதியே அவன் மனதை சொன்னது.

“இங்க வீட்டை வித்துட்டு வாடகை வீட்ல தான் இருக்கனும். உங்க தாத்தா கௌரவம் தான் முக்கியம்னு வாழ்ந்தவரு.. அதனால் தான் இன்னிக்கு வரை உன் அத்தையை கூட ஒதுக்கி வச்சிருந்தாரு..

அவர் வாழ்ந்த ஊர் முன்னாடி இருந்த வீட்டையும் வித்துட்டு வாடகை வீட்ல வாழ்வதை அவரால நிச்சயம் தாங்கிக்க முடியாது. ஏற்கனவே உங்க அப்பா சித்தப்பா எல்லாம் நடந்துக்கிறதை பார்த்து நொந்து போய் இருக்காரு. அவர் வியாதிக்கு இதுவும் ஒரு காரணம்” என்று கூறி வேதாச்சலத்தை பார்த்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக இறங்கியது.

“வேற எங்கயாவது போறதுக்கு பதிலா உங்க அத்தை கூட போகலாமே..

இத்தனை வருட அப்பா ஏக்கத்தில் இருந்து உங்க அத்தைக்கும் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் இல்லையா?”

இவர் என்ன எப்படியும் என்ன சம்மதிக்க வச்சிடுவாரு போலயே என்று ஆயாசமாக அவரை பார்த்த்தான்.

“தாத்தா பங்குல எவ்வளவு பணம் வரும். அவர் டிரீட்மெண்ட்டுக்கு போதுமா?” என்றான் இப்பொழுது.

‘கெட்டிக்காரன்..’ என்று மனதினில் எண்ணி கொண்டார்.

“வீடு மெயின் ஏரியால இருக்கிறதுன்னால நல்ல விலை போகும். அதனால அது கண்டிப்பா வைத்தியத்துக்கு போதும்” என்றார்.

“அங்க எனக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுக்க முடியுமா?” என்று தர்மராஜை பார்த்து கேட்டான்.

“நீ என்ன படிச்சிருக்க? உனக்கு எத்தனை வயசாகுது?” என்றார் தர்மராஜ் இப்பொழுது.

“நான் இந்த வருஷம் தான் பன்னிரண்டாவது  எக்ஸாம் எழுதணும். தாத்தாவை பார்த்துக்கறதுனால எழுத முடியலை  … “ என்றான் மெதுவாக 

“நம்ம பாரி வயசு தான் அப்போ..” என்றார் தமயந்தி.

“நீ படிப்பை பாரு அவினாஷ். மத்ததை நாங்க பார்த்துகிறோம்” என்றார் தமயந்தி அவனிடம்.

“நான் சென்னை வரேன்.. ஆனா நான் வேலைக்கு போய் தான் எங்களை  பார்த்துப்பேன்… நாங்க தனியா ஒரு வீட்ல இருந்துக்கிறோம்” என்றான்.

“நான் என்ன சொல்ல வரேன்னா.. “என்று ஆரம்பித்தார் முருகானந்தம்.

“இல்ல தாத்தா.. இதை மாத்த முடியாது.. நான் உங்களோடு வரேன்.. தாத்தா பங்குல  இருக்கிற பணத்தை வச்சு முதல்ல ஒரு வீடு வாடகைக்கு பிடிச்சுக்கொடுங்க.. அந்த பணத்தை வச்சே டிரீட்மெண்ட்டும் ஆரம்பிச்சிடலாம். அப்புறம் நான் வேலைக்கு போய் மிச்சத்தை சமாளிச்சிக்கிறேன்” என்றான் உறுதியாக.

“நீ சொல்றது சரி தான்.. இப்ப இரண்டு பங்கு பணம் இருக்கு..”

“அத்தை பங்கு எங்களுக்கு வேணாம்” என்றான் ரோஷமாக.

“உனக்குன்னு யார் சொன்னா.. உங்க அத்தை அவ பங்கை அவங்க அப்பா வைத்தியத்துக்கு கொடுப்பா.. அது மகளாய் அவ உரிமை.. இத்தனை வருஷம் கிடைக்காத உரிமையை நீ தட்டி பறிக்க கூடாது..” என்றார் முருகானந்தம்.

“தாத்தா நீங்க என்னை எல்லா பக்கமும் கார்னெர் பண்ணறீங்க” என்றான் கடுப்பாக.

“ஹா ஹா ஹா..” என்று உரக்க சிரித்தார் முருகானந்தம்.

வேதாச்சலமும் பரிவுடன் பேரனை பார்த்தார்.

“இப்ப உங்க தாத்தா பங்கு உங்க மூனு பேர் செலவுக்கும், உனக்கும் உன் தங்கை படிப்புக்கும் தாராளமா போதும். நீங்க யாருக்கும் பாரமா இருக்க மாட்டீங்க… புறப்பட்றதுக்கு எல்லா ஏற்பாடுகளையும் பாருங்க.. நான் வீட்டை விற்க ஏற்பாடு எல்லாம் செய்றேன்..”என்று பேசி அனைவரையும் சமாதானம் செய்து  புறப்பட்டார் முருகானந்தம்.

“யாருக்கும் பாரமா இல்லை” என்றதே வேதாச்சலத்திற்கும் ஆசுவாசமாக இருந்தது.

முழு ஆண்டு பரீட்சை என்பதால், அருந்ததிக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் பள்ளி இருந்தது. அவள் பள்ளிக்கு சென்று டீசி வாங்குவது, வேதாச்சலத்தை  மருத்துவரிடம் அழைத்து சென்று அவர் வைத்தியத்தை  பற்றிய  விவரங்கள் சேர்ப்பது , தேவையான சாமான்களை எடுத்து வைப்பது என்று வேலைகள் வரிசை கட்டி நின்றது. தமயந்தியும் தர்மராஜும் அனைத்து ஏற்பாடுகயும் செய்தனர். 

ஊரில் இருந்து அண்ணன்  தம்பி இருவரும் நேரே பத்திர பதிவு அலுவலகத்திற்கு தான் வந்தனர்.

பேசினால் பொறுப்பு தங்கள் மீது வந்துவிடுமோ என்று பயந்து ,பணத்தை பெற்றுக்கொண்டு  அப்படியே ஓடி விட்டனர்.

இங்கே சென்னையில், சுமதியும் சங்கரும் அவர்கள் தெருவிலே ஒரு வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்துவிட்டனர்.

ஒரே  வாரத்தில், வேதாச்சலம் அவினாஷ் அருந்ததி மூவரும் சென்னைக்கு குடி பெயர்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!