Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 9.1

  அத்தியாயம் 9

மகன் இப்படி செய்யத் துணிவான் என்று எதிர்பார்க்கவேயில்லை திருனேஷ்வரனின் பெற்றோர். பொன்மணியால் அனுபவித்த வேதனை பத்தாமல் அவளையே மணந்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை செல்லம்மாவால்.

இது ஒரு குடும்பமா? இவள்தான் சின்னபொண்ணு. இவங்கப்பாம்மாவும் சேர்ந்தே பொய்யுரைத்திருக்கிறார்கள். இவர்களை பார்க்கும்போதெல்லாம் என் தலை தானா தொங்கிப்போகும். அப்போ கூட உன் மகன் நல்லவன்னு சொல்ல குடும்பத்துல ஒருத்தருக்கும் வாய் வரல.



Advertisement

இப்படி அமுக்கமானவங்க பெத்த பிள்ளை மட்டும் நல்லவளா இருப்பாளா? எனக்கு சம்மந்தியா வரதுக்கு கொஞ்சம் கூட அருகதை இல்லாதவங்க. போயும் போயும் இவளா என் மருமக?” என்றவர் அடுத்த வார்த்தை பேசும் முன்னே “ம்மா இவதான் உன் மருமக” என்றான் அழுத்தமாக.

பெற்றவளின் மனதை விட இவள் உசத்தியாக போயட்டாளா என்பதாக மகனைப் பார்க்க,  “பொன்மணியை பேசினா எனக்கு வலிக்கும்” என்றான்.

மகனின் இந்த வார்த்தையை கேட்டதும் பேச்சு வரவில்லை செல்லம்மாவிற்கு. கண்ணீர் அருவியாய் கொட்ட, மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினார் வில்வராஜ்.

Advertisement

பொன்மணியின் பெற்றோரிடம் “இரண்டு ரூபா மஞ்ச கயித்தை கட்டிட்டா அது மாங்கல்யம் ஆகிடுமா? தாலின்றது பெத்தவ மனசு குளிர பெரியவங்க ஆசிர்வாதத்தோட கட்டனும். இங்க நடந்ததுக்கு பேரு கல்யாணம் இல்ல” என்றார் திருனேஷ்வரனின் அத்தை.

Advertisement

“இது கல்யாணமா இல்லையானு எனக்கும் பொன்மணிக்கும் தெரிஞ்சா போதும். நீங்க கிளம்புங்கத்தை” என்றான் கட்டளையாக.

இத்தனை பேர் முன்னிலையில் இப்படி பேசிவிட்டானே என வெம்பியபடி கிளம்பினார் விஜயா.

கூடியிருந்த கூட்டம் கலையவேயில்லை. சத்யப்ரகாஷின் தந்தைக்கு பயந்து அவனின் இழிச்செயலை பேச பயந்த கூட்டமெல்லாம் தற்போதைய திருமணத்தைப் பற்றி இடைவெளியின்றி பேசியது.

Advertisement

“பொன்மணியை பழி வாங்கத்தான் தாலி கட்டியிருக்கான், இல்லைனா அந்தபுள்ள அவ்வளோ மறுத்தும் கட்டுவானா? இவளால அஞ்சு வருசம் ஜெயில்ல இருந்துட்டு வந்திருக்கான், பின்ன சும்மா விடுவானா?” என தனது அனுமானத்தை சொல்லிக்கொண்டிருந்தனர் பொதுமக்கள்.

பொன்மணியின் அன்னையிடம் “பொன்மணியை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போங்க” என்றான்.

அஞ்சுகம் அசோகனுக்கும் வேறு வழியில்லையே. எத்தனை நேரம்தான் தெருவில் நிற்பது? மகளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

திருனேஷ்வரனும் நண்பனோடு வீட்டிற்கு கிளம்பினான்.

*** *** *** ***

தனது காலருகே பணிந்திருந்தவளை தூக்கிவிட்டு நண்பனிடம் மஞ்சள் கயிற்றை வாங்கியதும் அதிர்ந்து போனாள் பொன்மணி.

“எனக்கா கட்டப்போறிங்க?” என்றாள்.

ஆமாம் என்பதாய் தலையசைத்ததும், “வேண்டாம், எனக்கு கல்யாணம் செய்துக்க விருப்பமில்லை. நான் உங்களுக்கு தகுதியில்லாதவ. சத்தியமா என்னால உங்களோட வாழ முடியாது, ஏற்கனவே செய்த பாவத்துக்கே ப்ராயச்சித்தம் பண்ண முடியாம தவிச்சிட்டிருக்கேன்.

என் கழுத்துல இதை கட்டி உங்களோட மிச்ச வாழ்க்கையையும் பாழாக்கிக்காதிங்க” என்ற பொன்மணியின் கெஞ்சலை சுவாரஸிமாக கேட்டபடி மாங்கல்யத்தை கட்டியிருந்தான் திருனேஷ்வரன்.

“என்னை அரஸ்ட் பண்ணின நாள்ல இருந்து நீ என்னை நினைக்காத நாள் இல்லைனு புரிஞ்சது. நான் உன்னை கல்யாணம் செய்துக்கலனாலும் என்னை நினைக்காம இருக்கப்போவதில்லைனும் புரிஞ்சது.

கல்யாணம் செய்துக்க இதைவிட வேற தகுதி தேவையில்லைனு தோணுச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.  இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு. உனக்கு அப்படி எப்போ தோணுதோ அப்போ வாழ ஆரம்பிக்கலாம்” என்றான்.

“யாரையோ லவ் பண்ற போல, நீ ஜெயிலுக்கு போய்ட்டு வந்ததால பொண்ணு கேட்டா தரமாட்டாங்கனு திடீர் கல்யாணம் செய்துக்கிறேனு நினைச்சு சந்தோசமா வாங்கிட்டு வந்தேன்டா.

போயும் போயும் அந்த பொண்ணுதானா உனக்கு கிடைச்சா? உங்கப்பாம்மாவை கொஞ்சமாவது யோசிச்சியாடா? செய்யாத தப்புக்கு மகனை ஜெயிலுக்கு அனுப்பியவளை யார்தான் மருமகளா ஏத்துப்பாங்க?” என்ற நண்பனை முறைத்தான் திருனேஷ்வரன்.

“முறைச்சாலும் நான் சொல்றது உண்மையில்லைனு ஆகிடுமா? ஒத்த மகனை பெத்தவங்க இப்படி பொண்ணை மருமகளா ஏத்துப்பாங்க?” என்றான் ஆற்றாமையோடு.

“உன் பாஸ்கிட்ட சண்டை போட்டதால பொன்மணி நல்லவ இல்லைனு நீயா நினைச்சிட்டிருக்க. உன் நினைப்புக்கு நான் பொறுப்பாக முடியாது” என்றவன், பாக்கட்டில் உள்ள பணத்தை எடுத்துக்கொடுத்தான்.

“மாலை கூட வாங்கல, அஞ்சுரூபா கயித்துக்கு ஐநூறு ரூபாவா?” என முறைத்து, “நிஜமா நீ நடத்திக்கிட்டது கல்யாணமாடா?” என்றான்.

“ம்… இப்படி கல்யாணம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா ஊரே கூடியிருக்கும்போது கல்யாணம் பண்ணலைனா பொன்மணி என்னை ஏத்துக்கிறது ஈஸியில்லனு தோணுச்சு.

அதோட எங்கப்பாம்மாகிட்ட சம்மதம் வாங்கி அவளை கல்யாணம் செய்துக்கிறதுங்கிறது இந்த ஜென்மத்துல நடக்கவே நடக்காத விசயம்” என்று தனது திடீர் திருமணத்திற்கு விளக்கம் கொடுத்தவன்,

“நான்தான் புதுசா கல்யாணம் செய்துக்கிறேன். தாலி வாங்கிட்டு வாடானா அதை மட்டுமா வாங்கிட்டு வருவ? மாலைதான் கிடைக்கலன்ன… குங்குமமாவது வாங்கிட்டு வந்துருக்க வேண்டியதுதான?” என அதட்டி,

“அஞ்சு ரூபா கயிறுனாலும் அதை சொன்ன நேரத்துக்கு வாங்கிட்டு வந்ததுக்கு எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் தகும். ஆனா இப்போதைக்கு பாக்கட்ல இவ்வளோதான் இருந்தது” என்று நண்பனின் சட்டைப்பையில் பணத்தை திணித்து, “சரி கிளம்புடா” என்று நண்பனை அனுப்பிவிட்டு தனது வீட்டிற்குள் நுழைந்தான் திருனேஷ்வரன்.

“வாழ்க்கையில முக்கியமான முடிவு… உனக்கு எங்க யாரு சம்மதமும் தேவையில்லாம போச்சில்ல?” என வெடித்தார் செல்லம்மாள்.

“சொல்லியிருந்தா சம்மத்திச்சிருப்பிங்களாம்மா?”

“பொண்ணாடா அவ? என்னென்ன பண்ணியிருக்கா தெரியுமா?”

“ம் தெரியும்”

“என்ன தெரியும்? என்னடா தெரியும்? உனக்கு ஒன்னுமே தெரியாது. நீ வரதுக்கு முன்னாடி என்னென்ன நடந்தது தெரியுமா? அந்த பையன் செய்த தப்பை மறைக்க பத்து லட்சம் கொடுத்திருக்கான். அதை வாங்கிக்கிட்டுதான் பழியை உன்மேல போட்டுருக்காங்க. மொத்த குடும்பமும் சேர்ந்தே இந்த வேலையை பண்ணியிருக்காங்க.

அந்த சத்யப்ரகாஷ் பையன் நம்ம வீட்டுக்கு வந்ததை வீடியோ எடுத்து வச்சிருக்கா. ரௌடி மாதிரி வேலை பார்த்திருக்கா, இப்படி பிள்ளையோட நீ வாழ நான் சம்மதிக்கனுமா?”

“இதெல்லாம் எதுக்கு பண்ணனும் அவ?”

“எதுக்கு பண்ணனும்னா? உப்பை திண்ணவ, தண்ணி குடிக்கிறா”

“உங்களைப் பொறுத்தவரை அப்படி. ஆனா அது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல, எல்லாமும் அவ எனக்காக பண்ணியிருக்கா.

அப்போ சின்னபொண்ணு. அப்பாம்மா பேச்சை மீற முடியாம பொய் சொன்னவளுக்கு இப்போ உறுத்தியிருக்கு. ஒருநாள் இரண்டுநாள் உறுத்தல் இல்லைம்மா, அவ சொன்ன ஒருபொய் அஞ்சு வருசமா அவளை வதைச்சிட்டிருந்திருக்கு.

பொய் சொன்னதால உண்டான மனவலியை தாங்க முடியாமத்தான் அவ கேரக்டரை பணையம் வச்சு எனக்கு நல்ல பேரு வாங்கி தர நினைச்சிருக்கா. அவ இத்தனை செய்ததாலதான் அன்னைக்கு என்னை தப்பா பேசின வாயெல்லாம் இன்னைக்கு பாவம், நல்லவன்னு சொன்னுச்சு.

கடந்த அஞ்சு வருசமா இதைப் பத்தி மட்டுமே யோசிச்சிட்டிருந்திருக்கா. அவ சொன்ன பொய்யை எப்படி என்னால மறக்க முடியாதோ, அதேபோலத்தான் எனக்காக அவ எடுத்துக்கிட்ட சிரமத்தையும் என்னால இந்த ஜென்மத்துல மறக்க முடியாது.

அவளை கல்யாணம் செய்துக்கிட்டா சரியா இருக்கும்னு தோணுச்சு. பண்ணிக்கிட்டேன்” என்றான்.

“எதாவது கேட்குறிங்களா? உங்க அமைதிக்கு என்ன அர்த்தம்? மகன் செய்த கல்யாணம் சரின்றிங்களா? உங்க தங்கை மகளை பேசினோமே, இப்போ அதுக்கு என்ன பதில் சொல்லப் போறிங்க” என மகனை விடுத்து கணவனிடம் காய்ந்தார் செல்லம்மாள்.

பிரச்சனையை வளர்க்க விரும்பவில்லை வில்வராஜ். “தங்கை பொண்ணை பண்ணிக்க சொல்லி நாமதான கேட்டோம்? அவன் சம்மதிக்கலையே. நடந்து முடிஞ்ச கல்யாணத்தைப் பத்தி என்ன பேசுறது? அந்த பொண்ணை பேசினா எனக்கு வலிக்கும்னு சொல்லிட்டானே” என மிகுந்த வருத்தத்தோடு சொன்னபோதும்,

“சின்ன வயசுலயிருந்து அவன் விருப்பத்துக்கு எதுவும் நடக்கல, அவனோட கல்யாணமாவது அவன் விருப்பத்துக்கு நடந்துருக்குனு சந்தோசப்பட்டுக்கோ செல்லம்” என்றார்.

“அண்ணா, அப்போ அவதான் உன் மருமகளா? நீங்களும் முடிவு பண்ணிட்டிங்களா?” என வெம்பினார் வில்வராஜின் தங்கை.

“ஆமாம் விஜயா. என்னைக்கா இருந்தாலும் எங்க குடும்பத்தை தழைக்க வைக்கப்போறது அந்தபொண்ணுதான்” என்றார் உறுதியாக.

தந்தையின் பேச்சில் சற்று நிம்மதியடைந்தது திருனேஷ்வரன் மனது.

சிறு வயதிலிருந்தே வயதிற்கேற்றார் போல் எத்தனையோ பிரச்சனைகள், வலிகள். எதற்கும் மாற்றுவழி இருந்ததேயில்லை திருனேஷ்வரனுக்கு.

இனி வாழப்போகும் நாள்களில் எந்த முடிவானாலும் நான்தான் தீர்மானிக்க வேண்டும் என்று சிறையிலிருந்து வெளிவந்தபோதே முடிவெடுத்திருந்தான்.

பெற்றோரிடம் அனுமதி கேட்கக்கூடாதென்றில்லை. கேட்டால் சம்மதம் கிடைக்காது என்பதோடு அவசரமாக மாற்று வழி ஏற்பாடு செய்து, தன்னையும் கட்டாயப்படுத்துவார்கள் எனத் தெரியும் திருனேஷ்வரனுக்கு. அதனாலேயே அப்பொழுதே தனது திருமணத்தை நடத்திக்கொள்ள திட்டமிட்டான்.

தன் அவப்பெயர் போக்க எண்ணி, ஒவ்வொருவரின் சுடு சொற்களையும் இதனை வாங்க மட்டுமே நான் தகுதியானவள் என்பதுபோல் வாங்கிக்கொண்டிருந்தவளைப் பார்த்ததும் அவளின் அந்த நிலை ஏனோ பிடிக்கவேயில்லை திருனேஷ்வரனுக்கு.

எதாவது செய்து அவளின் அவநிலையை போக்க வேண்டும் என்றெண்ணிய தருணம் திருமணம் ஒன்றே சரியெனத் தோன்றியது. பொன்மணி மறுக்க மறுக்க இவளே தனக்கானவள் என்று இன்னுமின்னும் வலுவாய் தோன்ற, மஞ்சள் கயிற்றினை கட்டி மனைவியாக்கிக்கொண்டான் பொன்மணியை.

அண்ணனின் உறுதியான பேச்சில் மனம் உடைந்திட, “நான் கிளம்பறேன்” என்று மகளையும் கிளம்ப ஆயத்தமாகச் சொன்னார் விஜயா.

அத்தை மகளிடம் “நல்லா படிச்சு சுயமா சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ” என்றான் அறிவுரையாக.

விஜயா, “என் பிள்ளைக்கு நல்லது கெட்டது சொல்லி கொடுக்க நான் இருக்கேன்” என்றார் ரோசத்தோடு.

வெண்பாவிடமிருந்து அழைப்பு வந்தது. நேற்றே வீடியோ கால் செய்ய சொன்னதை நினைத்தபடி அழைப்பை ஏற்று அறைக்குள் சென்றான் திருனேஷ்வரன்.

அண்ணனின் முகத்தில் முன்பிருந்த கடுமையில்லாமல் போக, “அம்மாப்பா மேல உள்ள கோபம் போயிடுச்சாண்ணா?” என்றாள் ஆர்வமாக.

“ம் போய்டுச்சு, ஆனா அவங்கதான் என்மேல செம கோபத்துல இருக்காங்க” என்றான் சிறு புன்னகையோடு.

நீண்ட வருடங்களுக்கு முன்னே பார்த்தது அண்ணனின் சிரிப்பை. தற்போது பார்க்கவும் மனம் நிறைந்தது தங்கைக்கு.

“அப்பாம்மாவாவது உங்க மேல கோபப்படுறதாவது” என்று மகிழ்வோடு சொன்னவள், “இல்லையில்ல, நீங்க இன்னைக்கே சென்னை கிளம்பனும்னு சொல்லியிருப்பிங்க, அதனால கோபமா இருப்பாங்களாயிருக்கும்” என்றாள்.

“இல்லைடா, அவங்க கோபப் படுறமாதிரி நானொரு விசயம் செஞ்சிட்டேன்” என்றான் தயக்கத்தோடு.

தனது செயல் தங்கைக்கு தவறான உதாரணமாகிடக் கூடாது என்று மனம் தவிக்க, தயக்கம் வந்திருந்தது.

“இல்லையில்ல, என் அண்ணன் எந்த தப்பும் செய்யமாட்டாங்க, அம்மாதான் நீங்க செய்யிறதை தப்பான விசயம்னு நினைச்சிருப்பாங்க, எடுத்துச்சொன்னா அம்மா புரிஞ்சிப்பாங்கண்ணா” என்றாள்.

“இல்லடா, அவங்க கோபம் நியாயமானதுதான்” என்றவன், “நான் கல்யாணம் செய்துக்கிட்டேன்டா, ஏன் இந்த திடீர் கல்யாணம்ன்றதை உன்னை நேர்ல பார்க்கும்போது சொல்றேன்” என்றான்.

“என்ன? கல்யாணமா? யாரைண்ணா பண்ணுனிங்க? முன்னாடியே லவ் பண்ணுனிங்களா?”

“இல்லடா. அப்படிலாம் இல்ல. திடீர் முடிவுதான்”

“யாரைண்ணா பண்ணிக்கிட்டிங்க?”

“பொன்மணியை”

“ஓ… அவங்களா?”

“பொன்மணியைப் பத்தி வேற ஏதும் கேட்காத வெண்பா. ஆனா இப்படி கல்யாணம் கண்டிப்பா சரி கிடையாது சரியா…” என்றான்.

“நீங்க பயப்படாதிங்கண்ணா, நான் ஏதும் அப்படி பண்ணிடமாட்டேன்” என்றாள் அண்ணனை புரிந்து.

“ம்” என்று மெச்சுதலாக சொல்ல, “இந்த வாரம் ஊருக்கு வரேன், அந்தக்காவை பார்க்கனும்” என்றாள்.

“அக்காவா?” என சிரித்தவன், “இனி அண்ணி சொல்லனும்,  இப்போதைக்கு நீ பொன்மணியை பார்க்க ட்ரை பண்ண வேண்டாம். அப்பாம்மா கோபம் குறைஞ்ச பின்னாடி பார்த்துக்கலாம்.

முக்கியமான விசயமா மதியம் சென்னை கிளம்பறேன். நீ அலைச்சல் பட்டுக்காத. படிப்பை பாரு, டைம் இருக்கும் போது நானே வந்து பார்க்கறேன்.” என்று சற்று நேரம் பேசியிருந்து இணைப்பை துண்டித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!