Skip to content
Post Views: 7,445
அத்தியாயம் 10
கூட்டத்தில் உள்ளவர்களில் சிலர், சத்யப்ரகாஷ் மிரண்டு காணப்பட்டான் என்றார்கள், இங்கு வந்துவிட்டு செல்லும் வழியில்தான் தன்னிடம் சிக்கியிருக்கிறான்.
நண்பனிடம் விசாரித்தவரை, முன்பை விட சத்யப்ரகாஷின் பணபலமும், ஆள்பலமும் அதிகம்தான் ஆகியிருக்கிறது. பின்னே ஏன் பொன்மணிக்கு அடிபணிகிறான்?
Advertisement
ஊரார் முன்னே உண்மையை ஒப்புகொள்ளும் அளவிற்கு அப்படி என்னதான் சொல்லி இவனை மிரட்டியிருப்பாள்? என யோசித்தவனுக்கு ஏதும் பதில் கிடைக்காமல் போக, எதுவாகினும் இனி அவள் என் மனைவி. இனி பொன்மணியை நினைக்கக்கூட சத்யப்ரகாஷிற்கு தைரியம் வரக்கூடாது என்றெண்ணியபடி சத்யப்ரகாஷ் வீட்டிற்கு சென்றான்.
வீட்டின் முன்னே பைக்கை நிறுத்தி இறங்க, காவலாளி உள்ளே செல்ல அனுமதி கொடுக்க மறுத்தார்.
“அண்ணா, கட்டுக்கடங்காத கோபத்துல வந்துருக்கேன். நான் யாருனு தெரியாம என்னை தடுக்க முயற்சி பண்ணாதிங்க” என்று காவலாளியின் இரு கைகளையும் பிடித்தபடி வீட்டு வாயில் வரை வந்த பின்னே காவலாளி கையை விடுவித்து, “கை வலிச்சா எதாவது மருந்து போட்டுக்கோங்க” என்று வீட்டினுள் சென்றான்.
Advertisement
கவுன்சிலருக்கும் சத்யப்ரகாஷிற்கும் திருனேஷ்வரனை அடையாளம் தெரிந்தது. சத்யப்ரகாஷை ஆட்டிப்படைக்க இல்லாத குழந்தையால் மட்டுமே முடியும் என்பதால் அத்தனை கலவரம் ஆனபோதும், குழந்தையிருக்கிறது என்று சத்யப்ரகாஷிடம் சொன்ன பொய்யை அவனின் மனைவியிடம் சொல்லவில்லை பொன்மணி.
Advertisement
ஆனால் அன்று நடந்த சம்பவத்திற்கு சத்யப்ரகாஷ்தான் காரணம் என்று சத்யப்ரகாஷ் மனைவியிடம் சொல்லியிருந்தாள்.
உன் மனைவியிடம் இதனை ஒப்புகொள்ள வில்லை என்றால் கற்பழித்ததையும் அதற்கு சாட்சியாக குழந்தையிருப்பதையும் சொல்வேன் என்று சத்யப்ரகாஷையும் மிரட்டியிருந்தாள்.
திருனேஷ்வரன் வீட்டிற்கு சென்று வந்ததும் பேரம் பேசியதும் ஆதாரமாக இருக்க, கற்பழித்ததும் குழந்தை இருப்பதும் தெரிய வந்தால் தனது மாமனார் தன்னை கொன்றேவிடுவார் என்ற பயத்தில் பொன்மணி சொன்னதை போல் தனது குற்றத்தை ஒப்புகொண்டிருந்தான் ஊரார் முன்னே.
Advertisement
குழந்தை இருக்கும் விசயம் இவனுக்கு தெரியுமோ? மனைவியிடம் சொல்லிவிடுவானோ என்ற அச்சத்தில் சத்யப்ரகாஷ் இருக்க, மகனின் வாழ்வை காப்பாற்ற எண்ணுவதைவிட, எம்.எல்.ஏ சம்மந்தியின் கோபத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்ற அச்சத்தில் சத்யப்ரகாஷின் தந்தை இருந்தார்.
ஏற்கனவே உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் நடந்த சம்பவங்களை படம் பிடித்திருந்தனர். விசயம் வெளியே வராமல் அவர்களுக்கு பணத்தை கொடுத்து தற்போதைக்கு சமாளித்திருக்கிறார் சத்யப்ரகாஷின் தந்தை.
திருனேஷ்வரனின் வரவு வேறு என்னென்ன விளைவுகளை உண்டாக்குமோ என்ற பதைப்பிலிருந்தனர் தந்தையும் மகனும்.
சத்யப்ரகாஷின் மனைவிக்கு திருனேஷ்வரன் யார் என தெரியாமல் போகவே, சத்யப்ரகாஷிற்கு தெரிந்தவனாக இருப்பான், நண்பனுக்கு ஆதரவளிக்க வந்திருப்பான் என்ற கோபத்தில், “யார்டா நீ? வீடு திறந்திருந்தா உள்ள வந்துருவியா?” என்றாள்.
சத்யப்ரகாஷின் மனைவி பேச்சிற்கு சத்யப்ரகாஷை அறைந்திருந்தான் திருனேஷ்வரன். இவன் கணவனுக்கு வேண்டியவன் இல்லையோ என்பதாய் சத்யப்ரகாஷின் மனைவி திகைத்து நிற்க, “பரதேசி நாயே… யார்கிட்ட எப்படி பேசனும்னு உன் பொண்டாட்டிக்கு சொல்லி வைக்க மாட்ட?” என முறைத்தவன்,
சத்யப்ரகாஷின் தந்தையையும் பார்த்தவாறு, “உன்னால நான் பட்ட உடல்வலிக்கும் மனவலிக்கும் வெளில வந்ததும் உன்னை கொன்னுருக்கனும். ஆனா பொன்மணியே உனக்கு சரியான செருப்படி கொடுத்துட்டா.
பொன்மணி இப்படி பண்ணிட்டாளேனு அவளுக்கோ, அவங்க குடும்பத்துல உள்ள ஆளுங்களுக்கோ உன்னால எதாவது பிரச்சனை ஆனது… நீ நினைச்சே பார்க்காத விளைவுகளை சந்திப்ப” என கடுமையாக எச்சரித்து,
சத்யப்ரகாஷின் மனைவியிடம், “ஸ்கூல் படிக்கிற பிள்ளைகிட்ட தப்பா நடந்துருக்கான். இவன் சுயரூபம் தெரிஞ்சதுக்கு அப்புறமும் இவன்கிட்ட அப்படி என்ன இருக்குனு இன்னும் இவனோட இருக்க?
இப்படி அயோக்யனையெல்லாம் மன்னிச்சு குடும்பம் நடத்த உன்னை மாதிரி ஆள்கள் இருக்கிற வரைக்கும் இவனுங்களை திருத்த முடியாது” என்றான்.
சத்யப்ரகாஷின் அன்னை ஓரிடத்தில் பரிதவிப்போடு நின்றிருக்க, “பையன் எங்க போறான்? என்ன பண்றானு கண்டுக்கிறதில்ல. நல்லா கத்தை கத்தையா பணத்தை கொடுத்து சீரழியுறதுக்கு வழி வகுக்குறதே உங்களை மாதிரி ஆளுங்கத்தான்.
மகன் கேடுகெட்ட வேலையை செய்திருக்கானு தெரிஞ்சதுக்கப்புறமும் அவனை கண்டிக்காம, அதை எப்படி மூடி மறைக்கலாம்னு யோசிச்சிருக்கிங்க.
அஞ்சு வருசத்துக்கு முன்னாடி மூடி வச்சது இப்போ எப்படி நாறியிருக்கு பார்த்திங்களா? உங்களுக்கெல்லாம் தொண்டைக்குள்ள இறங்குறது சோறா இல்ல, வேறெதுவுமா? ச்சை…” என்றான் அத்தனை அருவருப்பாக.
“அண்ணா… நீங்கதான் இவனை பஞ்சர் பண்ணிவிட்டிங்களா? ஒன்னுக்கு இரண்டுக்கு கூட போக முடியாம கிடக்குறான். உக்காருங்க, காபி குடிச்சிட்டு போவிங்க” என்று சத்யப்ரகாஷின் மனைவி இன்முகமாக சொல்ல,
“நீ முடியாம இருக்கும்போது உன் பொண்டாட்டி சந்தோசப்படுறா, இதுக்கே நீ செத்துருக்கனும்டா” என்று மீண்டும் சத்யனை சாடி, வெளியேறினான் திருனேஷ்வரன்.
*** *** *** *** *** *** ***
இன்று நடந்த சம்பவம் நிச்சயம் பெற்றோரை நிம்மதியாக இருக்க விடாது. குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்காவது அனைவரையும் சென்னைக்கு அழைத்துச் செல்லலாம் என, தனது யோசனையை பெற்றோரிடம் சொன்னாள் பொன்மணி.
“எனக்கு லீவ் போட முடியாது” என்றாள் கலைசெல்வி.
“ஓடி ஒளிஞ்சா மட்டும் எல்லாம் சரியாகிடுமா? ஒரு மாசத்துக்கு அங்க வந்துட்டா இங்க தொழில் படுத்துக்கும் பொன்மணி, அஞ்சு வருசமா பார்க்காததா? எங்களை நாங்க பார்த்துப்போம், இந்த நிலைமைல நீ தனியா இருக்குறதுதான் கஷ்டம். கொஞ்ச நாள் லீவ் போட முடியுமா பாருடா” என்றார் அசோகன்.
“வேலைக்கு சேர்ந்து ஒன்றரை மாசம்தான்ப்பா ஆகுது, ஒரு வாரம் லீவ் கிடைச்சதே பெரிய விசயம், இன்னைக்கு நைட், இல்லைனா நாளைக்கு காலைல நான் கிளம்பியாகனும்” என்றாள் பொன்மணி.
“அம்மா, அவர் கால் பண்றார். அவங்கம்மா உங்ககிட்ட பேசனும்னு சொன்னாங்க, அட்டன் பண்றேன், பேசுங்க” என்றபடி மதியரசனின் அழைப்பை ஏற்றாள் கலைசெல்வி.
“நான் பேசமாட்டேன், அந்த குடும்பத்தை எனக்கு பிடிக்கல” என்ற அஞ்சுகத்தின் பேச்சு, மதியரசனுக்கும் கேட்டுவிட, “இது வேலைக்கு ஆகாது கலை, நான் என் அப்பாம்மாகிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணினேன்ல? உன்னால உங்கம்மாவை கன்வின்ஸ் பண்ண முடியாதா?” என்று கோபத்தோடு இணைப்பை துண்டித்தான் மதியரசன்.
“பெத்தவங்க கண்ணு முன்னாடியே யார் பர்மிஷனும் கேட்காம தாலி கட்டினவன் நல்லவன். கல்யாணத்துக்கு சம்மதம் கேட்குற மதியரசன் கெட்டவனாம்மா?” என்றாள் ஆற்றாமையோடு.
“அந்த தம்பி பொன்மணி சொன்ன பொய்யால பாதிக்கப்பட்டவர். அவரை தடுக்குற உரிமையும் தைரியமும் எங்களுக்கு இல்ல. அதனால தாலி கட்டும்போது அமைதியா இருந்தோம்.
மதியரசன் அப்படியா? அவங்கம்மா உன் தங்கையை கேவலமா பேசும்போது அமைதியா உக்கார்ந்திருந்தான். அன்னைக்கு பொன்மணி பொய் சொன்னதே உன்னை காப்பாத்ததான்.
கூடப் பிறந்த அக்காக்கும் நம்ம நிலைமை வரக்கூடாதுனான் மனசை கல்லாக்கிக்கிட்டு பொய் சொன்னா. ஆனா பொன்மணியை அவங்க கேவலமா பேசுறது உனக்கு உரைக்கவேயில்லையில்ல?”
“அதுக்குத்தான்ம்மா அவங்க மன்னிப்பு கேட்குறேனு சொன்னாங்க, நீங்கதான் வாய்ப்பு கொடுக்கமாட்டேங்குறிங்க” என்றவள், தந்தையின் இறுகிய முகம் கண்டு, “திருனேஷ்வரனோட அம்மாவும்தான் நம்ம மொத்த குடும்பத்தையும் கேவலமா பேசினாங்க. அவங்க மகன் தாலி கட்டும்போது மட்டும் எப்படி சம்மதிச்சிங்க?” என்றாள் ஆற்றாமையோடு..
அஞ்சுகம் எதோ சொல்ல வர, மனைவியை பார்வையால் அடக்கியவர், “உனக்கு விருப்பம்னா எங்கையோ போய் கல்யாணம் பண்ணிக்கோனு அன்னைக்கே சொல்லிட்டேன்” என்றார்.
“பண்ணிகிட்டு உங்களையும் மறந்துட சொன்னிங்கப்பா, பொன்மணியை மட்டும் ஏத்துக்கிட்டிங்க, அவ புருசன் இங்க வந்தப்போ உள்ள வர சொன்னிங்க, அவர் போன் செய்தாருனு பொன்மணியை அனுப்பி வச்சிங்க. என்னை கட்டிக்கப்போறவர்க்கு அந்த உரிமை தரமாட்டேனு சொல்றிங்க, இது அநியாயம் இல்லையாப்பா?”
“பொன்மணிக்கு செய்யுற நியாயம் உன் பார்வையில அநியாயமா படுது. பரவால்ல இருக்கட்டும், எனக்கு வாதாட சக்தியில்ல, உன் விருப்பம் என்னவோ அதை செய்துக்கோ. ஆனா இப்போதைக்கு ஊராரையும், உறவுக்காரங்களையும் அழைச்சு உனக்கு கல்யாணம் பண்ற நிலைமைல நான் இல்ல, அதுக்கு அந்த பையன் தகுதியானவனும் இல்ல” என்று தன்மையாகவே சொல்லி அறைக்குள் சென்றுவிட்டார் அசோகன்.
“ம்மா நாளைக்கு அவர் ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிக்க கேட்குறார். தப்போ ரைட்டோ, எனக்கு அவரை தவிர வேற யாரையும் கல்யாணம் செய்துக்க பிடிக்கல. அவங்க குடும்பத்துல எல்லாரும் சம்மதிச்சிட்டாங்க, எனக்காக நீயாவது வாம்மா” என்றாள்.
“அடிப்பாவி மகளே… இன்னைக்கு எத்தனை பிரச்சனை நடந்துருக்கு, பொய் சொன்னோம், பணத்துக்காக அப்பாவியை மாட்டிவிட்டுட்டோம்னு ஊரே கறிச்சு கொட்டினாங்க.
இந்த பிரச்சனையில இருந்து வெளிவரவாவது எங்களுக்கு இரண்டொரு மாசம் டைம் கொடுக்கக்கூடாதா? கொஞ்சம் பொறுமையாத்தான் இருந்தா என்ன?” என அங்கலாய்த்தார்.
“அவருக்கு இந்த மாசத்துலயே கல்யாணம் செய்தாகனுமாம்மா, பொன்மணிக்கு இன்னைக்கு இப்படி நடக்கும்னு தெரியாதும்மா, இரண்டு நாள் முன்னாடிலயிருந்து கேட்டுட்டு இருக்காங்கம்மா” என்றவள்,
“பரவால்லம்மா, நான் கல்யாணத்தை தள்ளி வைக்க சொல்லிக்கறேன், ஆனா நீங்களும் அப்பாவும் வருவிங்களா?” என்றாள் எதிர்பார்ப்போடு.
“நாங்க வந்தா போதுமா? இப்போ கூட பொன்மணியை யோசிக்கல நீ” என வேதனையோடு சொன்னவர், “என் புருசன் இல்லாம நான் எங்கையும் வரமாட்டேன்” என்றுவிட்டார்.
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், உடன்பிறந்தவளை அசிங்கப்படுத்தியவர்கள் என்றாலும், எனக்கு பிடித்திருக்கிறது. நாளை திருமணம் செய்ய இருக்கிறேன் என்ற மகளின் பேச்சை உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த அசோகன் மொத்தமாய் உடைந்து போனார்.
தந்தையின் மனநிலையை நினைத்து வேதனையடைந்த பொன்மணி, அறைக்குள் சென்றாள்.
“க்கூம்… என்னம்மா? ஏதும் முக்கியமான விசயமா? அப்புறம் பேசலாமா? எனக்கு கொஞ்ச நேரம் படுக்கனும்” என்றார் பொன்மணி முகம் பாராமல்.
“அப்பா…” என்று தந்தையின் அருகே அமர்ந்து மார்பை வருடிக் கொடுத்தவள், “என்னை யார்தான்ப்பா பேசல? பொய் சொன்னேன் பொய் சொன்னேனு ஊரே பேசினாங்க. மதியரசனோட அம்மா பேசினதை மட்டும் ஏன் இவ்வளோ பெருசா எடுத்துக்கனும்?
கலை பக்கம் இருந்து யோசிக்கலாமே ப்பா, அக்காவா தேடி லவ் பண்ணின மாப்பிள்ளை இல்ல, புரோகர் மூலமா நீங்க பார்த்து ஏற்பாடு செய்தவர்தான்.
பார்த்ததும் கலைக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு போல, அவருக்கும் அப்படி இருக்கப்போய்தான் இத்தனை முறை கேட்குறாங்க.
அன்னைக்கு எதோ பேசப்போய் தப்பாகிடுச்சு. இன்னைக்கு மன்னிப்பு கேட்குறேனு சொல்றாங்கதான? மன்னிச்சுடுங்கப்பா. நம்ம கலைக்காக”
சின்ன மகளை அசோகன் பரிதாபமாக பார்க்க, “நிஜமா எனக்கு வருத்தமில்லப்பா. அப்போ இருந்ததுதான், ஆனா இப்போ கலையை நினைச்சா பாவமா இருக்குப்பா.
அதோட, அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை கிடைக்காம போக நான் காரணமா இருக்க வேண்டாம். ப்ளீஸ்ப்பா, அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ விட்டுடுங்க, இல்லைனா அதுவும்தான் உங்க மனசை உறுத்திட்டே இருக்கும்” என்றாள்.
“அதான் விட்டுட்டேனாம்மா” என்றார் கரகரப்பான குரலில்.
“ப்பா” என அணைத்துக்கொண்டாள் தந்தையை.
சில நொடிகளுக்கு பின்னே தந்தையிடமிருந்து விலகி அமர்ந்து அரைமணி நேரம்வரை பேசிக்கொண்டிருந்தாள். கலைசெல்வி பேசுவது நியாயம் இல்லை என்றபோதும் திருமண விசயத்தில் அவளின் பிடித்தத்தையும் பார்க்க வேண்டும் என்று தந்தையை சமாதனம் செய்ய முயற்சித்தாள்.
அசோகன் சமாதானம் ஆனாரா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை பொன்மணிக்கு. ஆனால் கலைசெல்வி மதியரசனை திருமணம் செய்துகொண்டால் அதை அவமானமாக நினைக்காத அளவிற்கு தந்தையின் மனநிலையை மாற்ற முயற்சித்தாள்.
“பார்த்துக்கலாம் டா, எது நடக்கனும்னு இருக்கோ எல்லாத்தையும் பார்த்துதான ஆகனும்? நீ கவலைப்படாத” என்றார்.
பொன்மணி மொபைல் ஒலிக்க, ஏற்று பேசியவள், “ப்பா எனக்கு இன்னைக்கே சென்னை போகனும், நாளைக்கு ஒரு இம்பார்ட்டண்ட் மீட் இருக்கு” என்றாள்.
“கிளம்பனுமா? ட்ரைன் டிக்கட் புக் பண்ணலையேடா”
“ஸ்லீப்பர் பஸ் இருக்கும், இல்லைனா கார் கூட அரேன்ஜ் பண்ணிக்க்லாம், வேற வழியில்ல”
காலையில் திருமணம் நடந்திருக்கிறது, திருமணம் நடந்து இரண்டு மணி நேரத்திலேயே திருனேஷ்வரன் வீட்டிற்கு வந்தான். மகளை தனியே வெளியே அழைத்துச் சென்றான். மகளிடம் விசாரித்ததில் பழசு ஏதும் பேசவில்லை என்றாள்.
தற்போது அவரிடம் சொல்லாமல் எப்படி மகளை கிளம்ப வைப்பது? இங்கிருப்பாள் என்று மீண்டும் தேடி வந்தால்? என்று யோசித்த அசோகன், “மாப்பிள்ளைகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடும்மா” என்றார்.
‘மாப்பிள்ளையா? அவரோட வாழப்போறேனு நினைக்கிறாரா?‘ என உள்ளுக்குள் அதிர்ந்தவள், “ச… சரிங்கப்பா” என்றாள்.
error: Content is protected !!