Skip to content
Post Views: 2,359
கருவின் குரல். அத்தியாயம் 7
ஜானகிக்கு கருவை அழிப்பதில் விருப்பம் இல்லை. இருந்தும், வீட்டில் இருப்பவர்களை எதிர்த்து பிள்ளையை பெற்று அதை எப்படி வளர்த்து ஆளாக்குவது, வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்றெல்லாம் குழம்பினாள்.
இருந்தும் அவளின் தாய்மை உணர்வு அவளை கலங்க வைத்தது.
கரு உருவான நாள் கொண்டு நிறைய கனவுகள். இந்த குழந்தை மூலம் இரு வீட்டு சொந்தங்களும் இணைந்து விடும்; குழந்தையின் படிப்பு, கல்யாணம் என ஆசையாக வயிற்றை தடவி பார்த்து பூரித்து கொண்டிருந்தாள். ஆனால் அனைத்தும் ஒரு நொடியில் கானல் நீர் ஆனது. கூடவே தேவாவின் திருமணச் செய்தி இதயத்தை துண்டாக வெட்டி எடுத்த வலியை தந்தது.
செய்வதறியாது, பெற்றவர்களின் கைப்பொம்மை ஆனாள்.ஈஸ்வரியும், ஜெயந்தியும் ஜானகியை தங்களுக்கு நல்ல பழக்கமுள்ள ஒரு லேடி டாக்டரிடம் அழைத்துச் சென்று, கருவை கழிக்கும் வேலையை முடித்தனர்.
Advertisement
நான்கு மாதம் கடந்த நிலையில் கருவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. டாக்டருக்கும் கூட ஆச்சரியமாக இருந்தது. அவர் கருவை அழிக்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விட்டார். ஆனால் கரு அழியவே இல்லை.
ஜானகி கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் நன்றி கூறினாள்.
அவளைத் தவிர மற்ற அனைவருக்கும் கருவை நினைத்து கோபமும், ஜானகி எதிர்காலத்தை நினைத்து பயமும் உண்டானது. நாளுக்குநாள் வயிறு பெரிதாவது அக்கம்பக்கத்துக்கு தெரிந்தால், ஜானகிக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பதில் சிக்கல் ஏற்படும் என மருதாசலத்திற்கு உள்ளூர பயம்.
சண்முகம் ஒரு யோசனை கூறினார்.
“தனக்கு தெரிந்த ஒரு இடம் உள்ளது. அங்கு திருமணத்திற்கு முன் கர்ப்பமாகும் இளம்பெண்களை பிள்ளை பிறக்கும் வரை பராமரித்து, குழந்தை பிறந்த பின் அதை ஆசிரமத்திற்கோ அல்லது குழந்தை இல்லாத தம்பதிக்கோ விற்று விடுவர்,” என கூறினார்.
Advertisement
மருதாசலத்திற்கு கேட்டதும் சற்று தயக்கமே. அந்த அளவிற்கு தன் பெண்ணின் வாழ்க்கை அதாள பதாளத்திற்கு சென்று விட்டதாக கண்ணீர் விட்டார் ஈஸ்வரி. கோகுலுக்கு அக்காவின் நிலை வயதிற்கு மீறிய பக்குவத்தை தந்தது.
Advertisement
தந்தையும் தாயையும் தேற்றி, “சித்தப்பா சொல்வது சரி. அக்காவை நாம் அங்கு அழைத்துச் செல்லலாம். குழந்தை பிறந்த பின் அதை அங்குள்ள ஆசிரமத்தில் சேர்த்து விடலாம். பின் அக்காவிற்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தரலாம்,” என கூறினான்.
மகனின் தைரியமான பேச்சு மருதாசலத்திற்கு நம்பிக்கையை தந்தது.
இதற்குள் சக்கரவர்த்தி தடபுடலாக தேவாவிற்கும் மைதிலிக்கும் திருமணத்தை நடத்தி முடித்தார். புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக சுவிட்சர்லாந்திற்கு சென்றனர்.
Advertisement
ஜானகியையும் ஈஸ்வரியையும் சண்முகம் சொன்ன இடத்திற்கு அனுப்பி வைத்தார் மருதாசலம்.
அவர்கள் சென்ற இடம் வைத்திரி – வயநாடு.
மாவட்டத்தின் இதயப்பகுதியில் மழை நனையும் மலைகளால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம். மூடுபனியில் நனைந்த மரங்கள், தேயிலைத் தோட்டங்கள், சிறிய நீர்வீழ்ச்சிகள், வனப்பகுதிகளில் மிதக்கும் மங்கலான பனி இவை அனைத்தும் சேர்ந்து கடந்த கால வலியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஜானகிக்கு, அந்த இடம் தாய்மடியாய் அமைந்தது.
அங்கு சென்றவுடனே காற்றில் ஒரு வித்தியாசமான நறுமணம் அவளை இழுத்தது. மண்ணின் மணமும் புது இலைகளின் வாசனையும் கலந்து ஒருவித மயக்கத்தை உண்டாக்கியது. குன்றுகளின் வழியே ஓடும் சிறு ஓடைகள், பறவைகளின் குரல்கள், தூரத்தில் மிதக்கும் பனி இவை அனைத்தும் அவளின் மனதை அமைதிக்குள் இழுத்துச் சென்றது.
வைத்திரியின் காலை நேரம் ஒரு கனவு போல இருந்தது. சூரியன் மெல்ல மலைமீது எழும்பும் போது பனியால் மூடப்பட்ட மரங்களுக்குள் தங்க ஒளி படர்ந்தது. குளிர்ந்த காற்று அவளின் முகத்தை வருடியது.
மாலை நேரம் இன்னும் அழகாக இருந்தது; வானம் மெல்ல மாறி நீலத்தில் இருந்து சிவப்பாகும் வரை ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து பார்த்து இரசிப்பாள். அந்த அமைதி அவளுக்கு ஒரு மருந்தைப் போல மனதை நிம்மதியாக்கியது.
அங்கு உள்ள இயற்கையின் அழகு மட்டும் அல்ல, மனதை ஆற்றும் சூழ்நிலையும் தான் வைத்திரியின் சிறப்பு. பலர் இங்கு வந்து தங்களின் துயரங்களை மறந்து புத்துணர்வுடன் திரும்பிச் செல்வதை ஜானகி கவனித்தாள். புது வாழ்க்கைக்கு ஒரு தொடக்கம் தேடுகிறவர்களுக்கு வைத்திரி ஒரு அமைதியின் தாயகம்.
இவற்றுடன் அவளது கருவும் நன்றாக வளர்ந்தது. அது உதைக்கும் போது தொட்டுப் பார்த்து பரவசமடைவாள். அவளோடு தங்கி இருந்த பெண்கள் குழந்தை பிறந்தவுடன் தங்கள் கடமை முடிந்தது போல குழந்தையை விற்றும் ஆசிரமத்திற்கு கொடுத்து விட்டும் சென்றனர்.
நிறைமாதம் ஆனதும் ஜானகிக்கு வளைகாப்பு ஆசை.எப்போது குழந்தை பிறக்கும் பிறந்த அடுத்த நொடி ஆசிரமத்திற்கு கொடுத்து விட்டு
அவளை அழைத்துச் செல்ல காத்திருக்கும் பெற்றவர்களிடம் இதையெல்லாம் கூற முடியாமல் தனக்குள் மெளனமாக கண்ணீர் வடித்தாள்.குழந்தையின் தலை திரும்பி விட்டதாகவும் எப்போது வேண்டுமானலும் குழந்தை பிறக்கலாம் என டாக்டர் கூற ஜானகிக்கு படபடப்பு.
“ஆண் குழந்தையா இல்லை பெண் குழந்தையா? குழந்தை எப்படி இருக்கும்? எப்போது தொட்டுப் பார்ப்பேன்?” என்றெல்லாம் எண்ணினாள்.
மருதாசலமும் ஈஸ்வரியும் ஒரு 35 வயது மதிக்கத்தக்க தம்பதியுடன் வந்தனர்.
“ப்ரதீப்- ரேஷ்மா”.
அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. ஜானகிக்கு குழந்தை பிறந்தவுடன் அதை அவர்களுக்கு விற்று விட மருதாசலம் முடிவெடுத்து, ஒப்பந்த பத்திரத்தில் ஜானகியிடம் கையெழுத்து வாங்கினர். மேலும் அவர்கள் அட்வான்சாக 25 லட்சத்தை மருதாசலம் கைகளில் தந்து விட்டு கிளம்பினர்.மருதாசலத்திற்கு பணம் வாங்குவதில் விருப்பம் இல்லைதான் இருந்தாலும் ஜானகியின் எதிர்காலத்திற்கு தேவைப்படலாம் என வாங்கிக்கொண்டார் .
ஜானகிக்கு இதில் எல்லாம் உடன்பாடு இல்லை. தலைசுற்றுவது போல இருந்தது.அவர்கள் கிளம்பிய உடன் ஜானகிக்கு பிரசவ வலி வந்தது. உயிரே போகும் வலி. அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
மயக்கம் தெளிந்து கண் முழிக்கும் முன்பே குழந்தையை ப்ரதீப் – ரேஷ்மா தம்பதியினர் மீதித் தொகையும் கொடுத்து தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டனர்.
ஜானகி எழுந்தவுடன் ஒரே கதறல் “ஒரு முறையாவது என் குழந்தையை பார்க்க வேண்டும்!” என.
ஈஸ்வரி இனி அது உன் குழந்தை இல்லை
அந்த கேடு கெட்டவன் உன்னையும் பிள்ளையும் வேண்டானு சொல்லிட்டு புது கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா இருக்கா நீ அவனுக்கு பொறந்தத பாக்கனுனு அழுகறே என்று திட்டினார்
என்ன சொல்லியும் ஜானகியை மாற்ற முடியவில்லை தன் குழந்தையை பார்க்க பிடிவாதமாக இருக்க,ரேஷ்மாவும் ப்ரதீப்பும் குழந்தையை எடுத்துக்கொண்டு அங்கு வந்தனர்.
ஜானகி கைகளில் குழந்தையை வாங்கிப் பார்த்தாள். ரோஜா குவியலைப் போல அழகாக இருந்தாள் அவளின் மகள். அமைதியான தூக்கம் , அப்படியே தேவாவை உரித்து வைத்திருந்தாள்.
பார்த்த உடன், “தந்து விடலாம்… அதுதான் நம் விதி,” என முடிவெடுத்திருந்தாள்.
ஆனால் மகளை கைகளில் வாங்கிப் பார்த்த பின் அவளை விட முடியவில்லை.என் மகள் எனக்கு வேண்டும் என பயந்து கொண்டே மருதாசலத்தை பார்த்து கூறினாள்.
மருதாசலம் கோபத்தின் உச்சியில் இருந்தார். முகம் முழுவதும் சிவந்து, கண்களில் எரிச்சல் மின்னியது.
“நீ மட்டும் தான் எங்களுடன் ஊருக்கு வர வேண்டும்; அவனின் பிள்ளை வேண்டாம்!” — என்றார் அவர் குரல் இடி போல் ஒலித்தது.
அவருடைய வார்த்தைகளில் தீர்மானம் இருந்தது, ஆனால் அந்த தீர்மானம் ஒரு தந்தையின் பாசத்தை விட கோபத்தால் நிரம்பியது.
ஜானகி நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளின் கண்களில் நீர் துளிகள் வழிந்தது.
“அப்பா… அது என் பிள்ளை… என்றாள் மெதுவாக.
மருதாசலம் அவளது வார்த்தையை முடிக்க விடாமல், கையை உயர்த்தினார்.
அவரது குரல் கடுமையாக ஒலித்தது “அந்த குழந்தை தான் உன்னை இவ்வளவு அவமானப்படுத்தி விட்டது! உன் தாயின் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு நீ தாழ்ந்துவிட்டாய்!”என்றார். என் மகள் எனக்கு வேண்டும் என திரும்ப திரும்ப கூறினாள் ஈஸ்வரிக்கு கோபம் வந்து மகளை இரண்டு அடி வைத்தார்.
ப்ரதீப் உடனே வந்து அவர்களை பிரித்தான். தயவுசெய்து அமைதியாகுங்கள். ஜானகியின் மனநிலை
இப்போ சரியில்லை.”
நீங்களும் அவளை காயப்படுத்தாதீர்கள் என இருவரையும் வெளியே அழைத்துச் சென்றான். ஜானகி மெதுவாக எழுந்து நாற்காலியில் உட்கார்ந்தாள்.
“நான் எதற்காக இவ்வுலகில் உயிரோடு இருக்கிறேன்…?” என் காதல், என் நம்பிக்கை, எல்லாமே இழந்தேன்… என கண்ணீரிலேயே கரைந்தாள்.அவள் மெதுவாக ஜன்னல் வழியே பார்த்தாள். வெளியே கருமை நிறைந்த மேகம் மின்னிக் கொண்டிருந்தது.
அந்த மேகத்தில் அவளுக்குத் தன்னுடைய மனநிலை தெரிந்தது இருளும் மின்னல்களும் கலந்த ஒரு பயம்.
திடீரென அவள் எழுந்து கதவின் அருகே ஓடினாள்.
“இனி உயிரோடு இருந்தால்,இந்த உயிருக்கு அர்த்தமே இல்லை. நான் சாகப்போகிறேன் …” என்று கதறினாள்.
ரேஷ்மா உடனே அவளை தடுத்து
“ஜானு… நீ என்ன சொல்றே?” என்றாள்
“ எனக்கு எல்லாமே முடிஞ்சுருச்சு. என் குழந்தை இல்லாம நான் ஏன் இருக்கணும்? என் அப்பா கூட அதை வேண்டாம் சொல்றார்…”
அவள் கதறி அழுதாள்.
என் மகளை என்னிடம் இருந்து பிரித்தால்,
“நான் இந்த மலையில் இருந்து குதிச்சு விடுவேன். இதுவே முடிவு.” ரேஷ்மா அவளை அமைதியாக்கினாள்.
தனது காதல் ,கல்யாணம் அனைத்தையும் ரேஷ்மாவிடம் அழுது கொண்டே கூறினாள் ஜானகி.
ரேஷ்மா உடனே அவளது கையை பிடித்துக் கொண்டாள்.
“ஜானு, நீ இப்படிச் சொல்றது சரியில்லை. உயிரை விடுவது தீர்வு இல்லை. நீயும் உன் பிள்ளையும் தண்டனைக்கு உரியவர்கள் அல்ல. உலகம் மாறும் ஜானு… ஒரு நாள் நீயே உன் மகளுக்காக பெருமைபடுவாய்.”
ஜானகி கண்ணீருடன் ரேஷ்மாவின் முகத்தைப் பார்த்து,
“எனக்கு நம்பிக்கை இல்லை யாரும் என்னை புரிந்துகொள்ளவில்லை”,என்றாள்.
ரேஷ்மா அவளது தலையைத் தடவினாள்.
“நான் இருக்கேன் ஜானு. நீ என்னை நம்பு , உன் வாழ்க்கை இன்னும் முடிவடையலை. இதெல்லாம் ஒரு தற்கால இருட்டு.”
அவள் ஜானகியின் முகத்தை தூக்கி , “இப்போ உன்னாலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுது விடு… ஆனால் நாளை எழுந்து நிற்கணும். உன் குழந்தைக்காக.”என்றாள்.அந்த வார்த்தைகள் ஜானகியின் இதயத்தில் ஒலித்தன.
அவள் மெதுவாக தலையாட்டினாள்.
வெளியில் மழை பொழியத் தொடங்கியது.
அந்த மழை ஜானகியின் கண்ணீருடன் கலந்து அவளது துன்பத்தைத் தணித்தது.அந்த இரவு முழுவதும் ரேஷ்மா அவளுடன் இருந்தாள்.
ஜானகி உறங்காமல் குழந்தையை தன் கையில் தாங்கிக் கொண்டாள்.
அவள் தனக்குதானே சொல்லிக்கொண்டாள் “இந்தக் குழந்தை தான் நான் வாழ்வதற்கான புதிய நோக்கம்.”
அந்த இரவில் முதல் முறையாக அவள் மனதில் ஒரு குரல் கேட்டது
“அம்மா… நான் இருக்கேன்…”
என்று அவள் மகள் கூறுவது போல…
அவள் விழித்து பார்த்தாள். அறை முழுவதும் அமைதி.
ஆனால் அந்த குரல் அவளது உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அடுத்தநாள் காலை ரேஷ்மா மருதாசலத்தையும் ஈஸ்வரியையும் அழைத்து, “குழந்தை இல்லாத வலியை இவ்வளவு நாளாக அனுபவித்து உள்ளேன். அதனால் ஒரு தாயிடம் இருந்து குழந்தையை பிரிக்க நான் விரும்பவில்லை. ஜானகியின் கதையை கேட்டபின், இனி எந்த குழந்தையும் தத்து எடுத்து வளர்க்க விரும்பவில்லை. என்னால் முடிந்த வரை ஆதரவற்ற அனைத்து குழந்தைகளுக்கும் தாயாக இருப்பேன்,” என கூறினாள்.
அவளின் முடிவு ப்ரதீப்பிற்கு ஆச்சரியத்தை தந்தது. எத்தனையோ நாட்கள் குழந்தைக்காக ஏங்கியிருந்தாள். ப்ரதீப்பின் தாய் அவனுக்கு மறுமணம் செய்து வைப்பதாக கூறியபின் குழந்தை தத்தெடுக்க முன்வந்தனர். ஆனால் தற்போது மனைவியின் முடிவை நினைத்து அவனுக்கு பெருமையாக இருந்தது.
“குழந்தைக்காக தாங்கள் கொடுத்த பணத்தை அதன் எதிர்காலத்திற்கு வைத்து கொள்ளுங்கள்,” என கூறினர்.
மருதாசலத்தையும் ஈஸ்வரியையும் சமாதானப்படுத்தி ஜானகியை அனுப்பி வைத்தனர்.
வண்டியில் ஏறும் முன் ரேஷ்மா குழந்தையின் நெற்றியில் முத்தம் இட்டாள்.ஜானகி கண்ணீர் மல்க இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தாள்.
ரேஷ்மா, “நான் இந்த குழந்தைக்கு பெயர் மட்டும் வைக்கவா?” என கேட்டாள்.அவளும் தேவாவும் தேர்வு செய்த ‘எழில்’ என்ற பெயரை ஒருமுறை நினைத்துக் கொண்டு ,பின் “சரி,” என்றாள்.
ரேஷ்மா குழந்தையின் காதுகளில் மெதுவாக, “அனிஷ்கா தேவி,” என மூன்று முறை கூறினாள்.
“எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் கேளுங்கள்,” என ப்ரதீப் தன் விசிட்டிங் கார்டை தந்தான்.
அவர்களிடம் விடை பெறும் போது, ரத்த உறவை இழக்கும் வலி ஜானகிக்கு நெஞ்சை பிளந்தது. “இனி எல்லாம் குழந்தைதான். தாயும் தந்தையும் சமாதானமடைந்து விடுவார்கள். என்னை போலவே தன் குழந்தையையும் கவனித்து கொள்வார்கள். தந்தை இல்லாத ஏக்கத்தை கோகுல் தன் மகளுக்கு தீர்ப்பான்,”என்றெல்லாம் எண்ணியவாறே பயணத்தை தொடங்கினாள்.
ஆனால் மருதாசலம், ஈஸ்வரி, கோகுல் மூவரும் வேண்டாவெறுப்பாக பிள்ளையுடன் ஊர் திரும்பினர்.
– கருவின் குரல் ஒலிக்கும்……
error: Content is protected !!