37.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,857
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 37.2
.
பாறையின் மேல் தோழர்களோடு நின்றிருந்த ரகுவின் சட்டையைப் பிடித்து நிற்க நினைத்தாள் ஓடி வந்த ஒருத்தி. ரகுவை பிடித்தாலும் பாறை சருக்கிவிட நிலை தடுமாறி விழுந்தாள். விழுந்தவள் அவனையும் தடுமாறச் செய்தபின்னரே விழுந்தாள். பிடிமானம் இல்லாது நின்றிருந்தவன் தடுமாறி அவள் பின்னோடு சருக்கிக் கொண்டு சென்றான். எல்லாம் நொடி நேரத்தில் நிகழ்ந்துவிட அங்கு நின்றிருந்தவர்களுக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. ரகுவின் நேரம் நன்றாக இருந்ததோ என்னவோ, ரகு சென்ற திசையில் இருந்த பாறையில் ரகுவின் உடல் இடித்து நின்றது.
Advertisement
பாறையில் வழுக்கிக் கொண்டு சென்றது மட்டும் தான் ரகுவின் நினைவில் இருந்தது. அதன் பின் ரகு கண் விழித்த பொழுது அவன் அருகின் நண்பன் அமர்ந்திருந்தான். நினைவு தப்பித் திரும்பியிருந்த நண்பனைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ஜீவன்.
“இன்னைக்கும் கண் முழிக்காம இருந்திருந்தா உன் அப்பாக்கு போன் போட்டிருப்பேன்” என்றவனை ரகு பார்த்த பார்வையில் என்ன இருந்ததோ… “போலீஸ் எல்லாம் இன்வால் ஆகி… ரெண்டு நாளா ஒரே டென்ஷன் டா. இதுல நீயும் கண்ண திறக்கிறதும் மூடுறதுமா இருந்த. இந்த ஹாஸ்பிட்டலையும் அப்படி ஒரு ஃபெசிலிட்டியும் இல்ல. உனக்கு ஒண்ணும் இல்லன்னு சொன்னாலும் நீயும் கண்ண திறக்கல… அதுதான் வீட்டுக்கு சொல்லிடலாம்ன்னு நினைச்சேன்.” என்ற தோழனைப் பார்க்காது, ரகு படுத்திருந்த அறையைச் சுற்றிப் பார்த்தான். ஜென்மங்கள் முன் சுண்ணாம்பைக் கண்டிருந்த அந்தச் சின்ன அறை அழுது வடிந்தது.
Advertisement
“இங்க இருக்க ஓரே ஹாஸ்பிட்டல் இது தான். அல்ட்ரா மாடர்ன் ஃபெசிலிட்டி இல்லாட்டாலும், காயத்துக்கு தையல் போட்டு டிரிப்ஸ் போடற வசதி வரை இருக்கு.” எனப் புன்னகைத்தவன், “உயிரோட இருக்க. அத நினைச்சு சந்தோஷப் படு.” என நண்பனின் கையை தட்டிக் கொடுத்தான்.
கண்களை மூடி நடந்ததை ஒரு முறை உள்ளுக்குள் ஓட்டி பார்த்த ரகுவிற்கு அப்படி ஒன்றும் நினைவில் வரவில்லை. பெரிய பாறை மீது நின்று, கீழே பச்சை கம்பளியைப் போர்த்தியிருந்த பள்ளத்தாக்கில் வழுவழு கூழங்கள் அளவு பாறைகளும், காப்பர் சல்ஃபேட் நிறத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றையும் பார்த்திருந்தான். அதன் பின் லக்ஷா அவனை இடித்தாள். விழப்போனவள் இவன் சட்டையைப் பிடிக்க, இவன் அவளைப் பிடித்தான்… அவளோடு விழுந்தான். விழுந்த வேகத்தில் தலை நங்கென்று பாறை ஒன்றில் இடித்தது. அதன் பின்? என்ன முயன்றும் நினைவில் வரவில்லை.
“எப்படி இருக்க?” எனக் கேட்பவனிடம் என்னவென ரகு கூறுவான்? தலை தெறித்துவிடும் அளவிற்கு வலிக்கிறது என்றா? அதைவிட அதி முக்கியமாக அவளைப் பற்றித் தெரிய வேண்டுமே.
“லக்ஷா எப்படி இருக்கா?” எனக் கேட்டவனுக்கு, பெருமூச்சு ஒன்றைப் பதிலாகக் கொடுத்தான் தோழன். அபாயகரமான இடத்திலும் தனக்குப் பயமில்லை என உலகிற்குக் காட்டும் முனைப்பை அவள் பத்திரத்தில் காட்டியிருக்கலாம்.
“லோக்கல்ல இருந்து மீட்புக் குழு வந்து பாடிய எடுத்தாங்க. போலீஸ்… ஹாஸ்பிட்டல்ன்னு கைடுக்கு தான் தலவலியா போச்சு. எல்லாத்தையும் சரிகட்டி நேத்து கிளம்பினாங்க. உனக்கு ஒரு காமடி சொல்லணுமே…” எனச் சிரித்தான் ஜீவன்.
‘என்ன?’ எனப் பார்த்தான் ரகு.
“நம்ம ரூமேட்டோட உயிர் தோழன்… மிஸ்டர். பிளே பாய் அண்ட் குடிகாரன் தான் உனக்கு ரத்தம் கொடுத்து காப்பாதினான்”
யார் எனக் கேட்கவில்லை ரகு. மெல்லச் சிரித்தான். “எப்படி இங்க?”
“அவனுங்களுக்கு வேற என்ன ஜோலி? ஹிமாலயாஸ் பைக் ரைடிங் போறதுக்கு முன்ன ஒரு சின்ன ட்ரிப் இந்த பக்கம் போட்டானுங்க போல. அவனுங்க கேங்கல ஒருத்தனுக்கு மூச்சு விட முடியாம இங்க தூக்கிட்டு வந்தாங்க. அப்போ உனக்கு ரத்தம் தேவைப்பட… மூணு மாசமா ஹிமாலயாஸ் போறதுக்கு டிரெயினிங்ல இருந்தனால, சார் சரக்கு பக்கம் போகலன்னு உனக்கு ரத்தம் கொடுத்து உன்ன காப்பாத்தி விட்டான்.”
“என்ன டா பிளாக் அண்ட் வையிட் காலத்து கதை சொல்ற?” வினவியவனுக்கு, தான் இருக்கும் இடம் பற்றி மறந்து போனது போலும்.
“நானும் அதைத் தான் நினைச்சேன். உலகமே முன்னேறி போன நிலையில இந்த இடம் மட்டும் ஒரு சென்சுரி பின்னால இருக்கு. உன் பிள்ட் குரூப் ரொம்ப ரேர். இங்க இருக்கிற பேங்கல போதிய அளவு இல்ல. அதிசியத்துலும் அதிசயமா அவனுக்கும் உன் கூருப் தான். அப்பறம் என்ன? இப்போ எல்லாம் இல்லாத வழக்கமா, கௌதமன் கிட்ட இருந்து எடுத்த ரத்தத்த உனக்கு கொடுத்தாங்க.”
“ஓஹ்”
“நாம நினைச்ச மாதிரி இல்ல டா… பந்தா எல்லாம் ஒண்ணும் இல்ல. முக்கியமா எந்த நோயும் இல்ல. கலகலன்னு பேசறான். பழகவும் நல்லவனா தான் இருக்கான். பேசின வரைக்கும்… உனக்கு அப்படியே ஆப்போசிட் அவன்! சரி அத விடு… நீ எப்பிடி இருக்க இப்போ? ஓகேவா?”
“உடம்பு பூரா வலிக்குது. ஏதாவது பெயின் கில்லர் கிடைக்குமான்னு கேளு” எனக் கண்களை மூடிக் கொண்ட ரகு மீண்டுமாக உறங்கிப்போனான்.
விண்விண்னெனத் தெறிக்கும் தலை வலியோடு அங்கும் இங்கும் சில சிராய்ப்புகள் இருந்தன… மற்றபடி சிறிய அறுவை சிகிச்சையின் பலனாய் பிளாஸ்திரி ஒட்டப்பட்ட மார்பு பகுதி என ரகு நன்றாகவே இருந்ததால் அன்றே அதிக வசதி இல்லாத அந்த மருத்துவமனையிலிருந்து கிளம்பினர் தோழர் இருவரும்.
“சரியான லூசுங்க. கையில ஒரு போன வச்சுகிட்டு இதுங்க ஓவரா சீன் காட்டாம இருந்திருந்தா டிரிப் நல்லபடியா முடிஞ்சிருக்கும். சம்பந்தமே இல்லாத நீ இப்படி ஹாஸ்பிட்டல்ல இருந்திருக்க வேண்டியிருக்காது” எனப் புலம்பாது இருக்க முடியவில்லை ஜீவனால். “இனி மேல் இதுங்க கூட எல்லாம் எங்கையும் போகக் கூடாது.”
“சௌமி?”
“கீழ இருந்த ஃப்ரெண்ட ஃபோன்ல சூம் பண்ணி தேடிட்டு இருந்தா. இருந்த கடுப்புல கபில் ஃபோன பிடுங்கி போட்டத நீ பாத்திருக்கணும்” என வெறுப்போடு சிரித்தவன், “சிலர் எல்லாம் பட்டாலும் திருந்த மாட்டாங்க” எனப் பெருமூச்சு ஒன்றை விட்டான்.
ரகு நன்றாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள, ஜீவனின் மைத்துனன் ‘உடனே வா’ எனத் தலையும் வாலும் இல்லாது அழைக்க, ஜீவன் சென்னைக்குக் கிளம்பினான். வெளி உணவு, மருத்துவமனை வாசம், அதிகப்படியான மருந்து மாத்திரை என அனைத்தும் சேர்த்து செரிமானப் பிரச்சனையைக் கொண்டு வந்ததோ என்னவோ… வீட்டிற்கு வந்த இரு தினங்களில் வாந்தி, தலைச் சுற்றல் என ரகு ஒரு வழியானான்.
உடல் காயம் வலித்தது. தலை வலித்தது. மனம் அதையும் விட வலித்தது. ஏதோ ஒரு வெறுமை. யாருமற்ற தனிமை ரகுவை அதிகம் பாதித்தது. நான்கு நாட்கள் தான் ஒருவரோடும் பேசவில்லை என்றாலும், தன்னை தேட நாதி இல்லை. தான் செத்து கிடந்தாலும் தன்னை திரும்பிப் பார்க்க ஒருவரும் இல்லாத நிலையை எண்ணியவனுக்கு வாழும் ஆசையே விட்டுப்போனது.
உடல் உபாதை ரகுவை படுத்தியது. விழுந்ததால்… தலை அடிபட்டதால் வாந்தி வந்திருக்கலாம் என எண்ணும் மனநிலையில் ரகு இல்லை. மருத்துவரைக் காணும் எண்ணமும் இல்லை. இதற்கு மேல் முடியாது என்று தெரியவும், வீட்டின் அருகில் இருந்த மருந்தகத்திற்கு அழைத்து வயிற்றுக்கு, வாந்திக்கு, உடல் வலிக்கு எனத் தனக்கு தானே மருத்துவம் பார்த்து ரகு உடல் தேறி வர வாரம் இரண்டானது.
வாரங்கள் நகர்ந்தன. விபத்தும் லக்ஷாவும் மெல்ல மெல்ல ரகுவின் நினைவலைகளை விட்டு நீங்கின. வாரங்கள் மாதங்களாக மாறியது. அடுத்து வந்த வருடமும் ரகு திருச்சி பக்கம் செல்லவில்லை. ஓரிருமுறை தாத்தா பாட்டி வந்து சென்றனர். “என்ன டா ஆச்சு உனக்கு? வா ரகு” என சந்திரிகா அழைக்க, மனம் உறவுகளைத் தேடினாலும், “கொஞ்சம் பிஸி… வரேன் மா” என்றவன், ஒருவரையும் காண திருச்சிக்குச் செல்லவில்லை.
ரகுவின் ஒதுக்கம் நான்காம் வருடத் தேர்வு முடியும் வரை நீண்டது. சேர்ந்திருந்த குருவிகள், படிப்பு முடியவும் அதனதன் பாதையில் பறந்திருந்தனர். மீண்டுமாக நான்கு சுவர்களுக்குள் ரகு மாட்டிக் கொள்ளும் முன் ரகுவை பெற்றவர் வந்திறங்கினார். ரகுவின் பட்டம் அளிப்பு விழா முடியும் வரை மகனோடு இருந்தவர், மகனின் மௌனத்தைப் பொறுக்க இயலாதவராய் அமர்ந்திருந்தார்.
காபி கோப்பை காலி ஆகும் வரையும் சாலையில் அவ்வப்போது ஊர்ந்து செல்லும் வாகனங்களின் சத்தம் மட்டுமே அந்த வீட்டிற்குள் கேட்டது. அந்த நிமிடம் அந்தச் சூழல் கனமாகவே இருவருக்கும் சென்றது.
“என் கூட வா… போகலாம். இங்க தனியா ஏன் இருக்கணும்? கல்யாணம் குழந்தைங்கன்னு வந்த பிறகு எப்படியோ… ஆனா, இப்போ ஏன் தனியா இருக்கணும்? உனக்கு அப்பா, அம்மா, தம்பி, தங்கைன்னு நாங்க இருக்கோமே” என நகுலன் கடினபட்டு வார்த்தைகளை உதிர்த்தார்.
தகப்பனை ஒற்றை பார்வை பார்த்தான். பேச விருப்பமற்றவனாக, எழுந்த கோபத்தை, வருத்தத்தைத் தொண்டைக்குள் விழுங்கியவன் மீண்டுமாகக் காப்பி கோப்பைக்குள் புதைந்தான்.
பெற்ற மகனும் தானும் அருகருகே இருந்தாலும், மகனை அணுக முடியா தூரத்தில் இருப்பதை எப்படிச் சரிசெய்வது? திண்டாடி அமர்ந்திருந்தார் தகப்பன். ஒரு முறை நடந்ததை… தன் பக்கக் கதையை… தன் தவற்றை மகனிடம் உரைத்தால், மகன் தன்னை மன்னிக்கலாம், தன்னை ஏற்றுக் கொள்ளலாம், என நினைத்தவர், நாணயத்தின் மறுபக்கத்தைக் காட்ட முற்பட்டார்.
“படிப்பு முடிஞ்சு வேலைன்னு போன பிறகு எவ்வளவோ முறை ‘என் கூட வாங்க’ன்னு கூப்பிட்டேன். ‘எங்க உடம்புல உயிர் இருக்க வரை எங்கள நாங்களே பார்த்துப்போம். உன்ன வளர்த்து விட்டாச்சு உன் பொழப்ப பாரு. உனக்கு வசதி படும் போது வந்து பார்த்துட்டு போ. எங்கள கூப்பிடாத’ன்னு சொல்லிட்டாங்க. என் அப்பா அம்மாவ என் கூடவே வச்சுக்க எனக்கு ஆசை தான்… அவங்க பிடிவாதம், என் வேலை, எங்களால சேர்ந்து இருக்க முடியல. கல்யாணம் முடியவும் சந்தியாவும் சேர்ந்து இருக்க எவ்வளவோ கேட்டா, சேர்ந்து இருக்கதுல அவங்களுக்கு விருப்பம் இல்லன்னு சொல்லும் போது எங்களால, லீவுக்கு வந்து போக மட்டும் தான் முடிஞ்சுது.”
காலியான கோப்பையிலிருந்து கண்களை எடுக்காது தகப்பன் பேச ஆரம்பிக்க, மகனின் முழுக் கவனமும் அவர் வார்த்தைகளில் இருந்தாலும், அவன் பார்வையும் அவன் இரு கைகளுக்குள் பொத்தி வைத்திருந்த காலி கோப்பையின் மீதே இருந்தது. நகுலன், இன்றே தன் மனதைக் கொட்டிவிட நினைத்தார் போலும்…
“சந்தியா நல்ல ஆரோக்கியமா தான் இருந்தா. ஆனா… நமக்கு அவ கூட வாழ கொடுத்துவைக்கல… போயிட்டா. ஓர் ஆணோட துணையில்லாம பொண்ணால ஒரு குடும்பத்தை பாத்துக்க முடியும். குழந்தைய நல்ல முறையில வளர்க்க முடியும். என்னாலையும் முடியும்ன்னு நினைச்சேன். முயற்சி பண்ணாம இல்ல… ஆனா… ப்ச்!
அன்னைக்குத் தனி ஆளா எனக்குக் கைக்குழந்தையான உன்னையும் பார்த்துட்டு வீட்டையும் பார்த்துட்டு வேலைக்கும் போக முடியல. இந்த வீட்டுல தான் உன்னோட வந்து நின்னேன். இங்க இருந்த வரை உன்ன நல்லா பாத்துகிட்டாங்க. ஆனா சென்னைல வேலைய வச்சுகிட்டு எவ்வளவு நாள் என்னால இங்க இருக்க முடியும்? நம்ம கூட சென்னைக்கு வந்து உன்னை பாத்துக்க முடியாதுன்னு அம்மா கை விரிச்சுட்டாங்க. வேற கல்யாணம் பண்ணிக்கோ, வரவ பொறுப்பா பார்த்துப்பான்னு வீட்டுல சொன்ன போது எரிச்சல் வந்துது. பால் மணம் கூட மாறாத உன்னை எப்படி…? ப்ச்… என்னால யோசிக்கக் கூட முடியல.
எவ்வளவு மாசம் லீவ் போட முடியும்? உன்ன தூக்கிட்டுத் திரும்பவும் சென்னைக்குப் போனேன். நான் இல்லாத நேரம் உன்ன பாத்துக்க வேலைக்கு ஆள் வச்சேன். வேலைக்கு வந்த யாருமே உன்ன ஒழுங்கா பாத்துகல. அப்பவும் எனக்கு வேற கல்யாணம் எல்லாம் பண்ணிக்கிற நினைப்பு இல்ல. ஆனா அன்னைக்கு நான் வீட்டுக்குள்ள நுழைஞ்ச நேரம், உன்ன மடில வச்சுட்டு அந்த பொண்ணு தூங்கிட்டு இருந்தா. அவ கை உன் கழுத்துக்கு கீழ இல்லாம முதுகுக்கு வந்திருந்துது. உன் பாதி உடம்பு தொங்கிட்டு இருக்க, உன் வாய்ல பால் பாட்டில். பார்த்துட்டு வந்த எனக்கு உயிரே போயிடுச்சு. ஓடிப் போய் உன்ன தூக்கினா உன் வாயிலயும் மூக்குலயுமா பால் வருது. உன் கிட்ட பேச்சு மூச்சே இல்ல. ஒரு தகப்பனா நான் அன்னைக்குச் செத்தே போயிட்டேன்.
என் மூத்த குழந்த நீ… என் மனைவி அவ உயிர கொடுத்து எனக்கு பொக்கிஷமா என் கையில் கொடுத்துட்டு போன என் உயிர் நீ… என் எல்லாமே நீ மட்டும் தான்னு இருந்த எனக்கு வேற வழி தெரியல.
அக்ஷரா அப்போ சின்ன பொண்ணு. அவள ஆசபட்டு நான் கல்யாணம் பண்ணலனாலும், அவ உன் மேல நிஜமான பாசத்தோட இருந்தா. அவளுக்கான பொம்மை மாதிரி உன்னை ரொம்ப நல்லா பார்த்துகிட்டா. நீயும் அவ கூட நல்லா ஒட்டிகிட்ட. அன்பான அம்மா, சந்தோஷமான குழந்தை. நிறைவா உணர்ந்தேன்.
முதல் பிரசவத்துல சமாளிச்சவளால ரெண்டாவது குழந்தை உண்டானதும் முடியவே இல்ல. எதுவும் வயத்துல தங்கல. நான் வீட்டுல இல்லாத நேரம் ரெண்டு குழந்தைகளையும் வீட்டையும் பாக்க ரொம்ப சிரம பட்டா. ரொம்ப செல்லமா வளர்ந்தவ… அவளுக்கு முடிலனதும், அவள வளர்த்த அத்தை, வீட்டோட வந்து அவளையும் வருணையும் மட்டும் கவனிச்சுகிட்டாங்க. அவங்க பாரபட்சம் பாக்கிறத அக்ஷராவால சகிச்சுக்க முடியல.
அப்போ உன்னப் பாக்க வந்த உன் அம்மம்மாட்ட அவ புலம்ப, அவங்க ரெண்டு மாசம் எங்க கூட இருக்கட்டும்ன்னு கேட்டாங்க. அவ வேண்டாம்ன்னு தான் சொன்னா… நான் தான் அவ அத்தை கூட உன்ன விட பிடிக்காம, உன் நிம்மதிக்காக உன்ன ரெண்டு மாசம் திருச்சில… உன் அம்மம்மாட்ட விட முடிவெடுத்தேன்.
ஒண்ணு ரெண்டு மாசத்துல தல சுத்தல் வாந்தி நிக்கும்ன்னு நாங்க கணக்கு போட்டா… அவ பிரசவ வார்டுக்குள்ள போகும் போது கூட வாந்தி எடுத்துட்டே தான் போனா. அப்பறமும் அவ உடம்பு தேறவே இல்ல. எனக்கு அவ்வளவு பயம். எங்க இவளும் என்னை விட்டுட்டு போயிடுவாளோன்னு. மூணு குழந்தைங்கள வச்சுட்டு நான் என்ன செய்வேன்?
முழுசா ஒம்பது மாசம் ஆச்சு அவ எழுந்து நடக்க. அப்பறம் உன்ன எங்களோட வச்சுக்கதுக்காக கூட்டிட்டு வந்தா, உனக்கு பிடிக்கல. போதாத குறைக்கு அழுது அழுது ஜுரத்த இழுத்து வச்சு… ஃபிட்ஸ் வந்து… ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகின்னு ஒரு கூத்தே நடந்தது. திருச்சில இருந்து ஒரு கூட்டமே வந்தது. என்ன மாயமோ… அவங்க வந்த பிறகு தான் உடம்பு சரி ஆச்சு உனக்கு. உன் அம்மம்மா, எங்களோட இருக்கட்டுமேன்னு கேட்டாங்க.
அதே தப்ப ரெண்டாவது முறையா பண்ணினேன். ரெண்டு வருஷம் போகட்டும், வளந்தா புரிஞ்சுப்பன்னு அவங்களோட அனுப்பி வச்சேன்.
பெத்துட்டா எல்லாம் தெரியணும்ன்னு இல்ல. எனக்கு ஒரு அப்பனா இருக்க தெரியல போல… உன்ன விட்டுட்டேன். தப்புக்கு இன்னும் தண்டனையை அனுபவிக்கிறேன்.” என்றவர் கண்களிலிருந்து சொட்டு சொட்டாகச் சிதறிய நீர் பூமியில் விழ, அதில் பார்வையைப் பதித்தவன் மனம் ஏதோ இலேசாகுவது போல் இருந்தது.
“ப்பா” என்றவன் கரம் கோப்பையை அழுந்த பிடித்திருந்தவர் கரம் மீது படவுமே, “சாரி டா… எனக்கு உன்ன நெருங்க தெரியாம… வளக்க தெரியாம நிறைய சொதப்பிட்டேன். கூடவே வச்சிருக்க வேண்டிய போது உன்ன விட்டுட்டு, உன்ன விட்டுப்பிடிக்க வேண்டிய நேரம் இறுக்கி பிடிச்சு…சாரி. இதுக்கு மேல என்னை ஒதுக்கி வச்சு தண்டிக்காத.” என மகனின் கரத்தை பிடித்துக் கொண்டார்.
தகப்பனது கரம் தந்த கதகதப்பு அவர்களின் விரிசலை எவ்வளவு சீர் செய்தது என ரகுவிற்கு தெரியவில்லை. ஆனால் தந்தை மீதான வருத்தமும் கோபமும் நீர் மட்டத்தை அடைந்த குமிழிகளாய் வெடித்துக் காணாது போயிருந்தன. வாழ்க்கை மீது ஒரு தெளிவும் வந்தது. தானும் இப்படி தள்ளியே இருந்தால், இவரைப் போல் சொந்தத்தை இழந்து நிற்க வேண்டி வரும் என்பதை நன்றாகவே உணர்ந்தான் ரகு.
காகம் அதன் கூட்டை அடையும் முன் பாட்டி அழைத்தார். அவர் பின்னால் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில், ‘கண்ணா உனைத் தேடுகிறேன் வா… கண்ணீர் குயில் பாடுகிறேன் வா… உன்னோடு தான் வாழ்க்கை… உள்ளே ஒரு வேட்கை’ எனப் பலகீனமாகப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
திரையை மறைத்துக் கொண்டிருந்த உருவத்தின் முதுகு மட்டுமே தெரிந்தது. அதன் கரத்திலிருந்த புல்லாங்குழல் அந்தப் பாடலை வாசிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாலும் அவன் அதைப் புன்னகையோடே ரசித்தான்.
‘இந்த ஜென்மத்துக்கு நீ தான் டி’ என நினைத்தவன் உள்ளம் குதூகலிக்க, அவன் குரலிலும் அது தெரிந்தது.
“என்ன பாட்டி… காத்து திசை மாறி வீசிடுச்சா? நம்ம வீட்டுக்குள்ள மல்லி மணக்குது?” என்ற ரகுவின் ஆர்ப்பாட்டமான சத்தம் கைப்பேசியின் ஒலிபெருக்கி வழி மென்மையாக அறைக்குள் கசிந்தது. அந்த ஆழமான சத்தத்திற்குப் புல்லாங்குழல் தள்ளாடியது.
அன்று இரவு ரகுவின் பேபிக்கு பசிக்கவில்லை, தூக்கம் பிடிபடவில்லை. அதுமட்டுமா… போதை ஏறிய மனமும் தள்ளாட்டம் கொண்டது.