38.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,490
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 38.2
.
எதைக் குடித்தால் பித்தம் தெளியும்? எங்குச் சென்றால் தன் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும்? கௌதம புத்தருக்கு போதி மரம் கிடைத்தது போல் எனக்கும் ஏதேனும் போதி மரம் கிடைக்குமா? மனம் நிம்மதியைத் தொலைத்துத் தவித்தது.
Advertisement
தொலைத்த இடத்தில் தேடினால் தானே தொலைத்ததை அடைய முடியும். தொலைத்தது என்ன என்பது தெரியவில்லை. பாவம் கௌதமன் எதையும் தொலைக்கவில்லையே. அதனால் இந்த உணர்வு தனக்கானது அல்ல என்ற முடிவுக்கு வந்தான். தனக்குள் எழும் உணர்வுகள் தனக்கானது என்ற தெளிவு வரும் வேளை அவன் தேடல் முடியுமோ என்னவோ?
தன் மாற்றத்தின் ஆரம்பப் புள்ளியைத் தேட வேண்டியிருக்கவில்லை. அதை நன்கு அறிவான். அறுவைசிகிச்சை! மகள் விளையாட்டு கூடம் சென்றிருக்க, கௌதமன் அவன் சிகிச்சையைப் பற்றிய ரிப்போர்ட் அடங்கிய பெட்டியை எடுத்தான். பெட்டியினுள் அவனைப் பார்த்துச் சிரித்தது பத்திரம் ஒன்று. ‘வீர்’ வாய் முணுமுணுத்தது. பத்திரத்தை எடுத்தவனுள் மருத்துவமனை நினைவுகள் அலைமோதியது.
Advertisement
Advertisement
‘உங்க டோனரோட மெம்மொரிஸ்சா இருக்கலாம் இல்லையா? ஒத்த ஆர்கன் டிரான்ஸ்பிளான்டுக்கே இப்படியான விஷயங்கள கேள்விப்பட்டிருக்கோம்… உங்க நிலைல, இந்த மாதிரி அவரோட செல்லுலார் மெம்மொரீஸ் உங்களுக்குள்ள வரது அதிகமா இருக்க வாய்ப்பு இருக்கு கௌதமன். மேக் பீஸ் வித் ஹிஸ் பாஸ்ட். டோன்ட் ஃபைட் இட்’ என மருத்துவர் என்றோ கூறியது இன்றும் நினைவில் உள்ளது. மீண்டும் ஒரு முறை அந்த வீட்டிற்குச் சென்று பார்த்தால் என்ன? யோசித்தான்.
கிரங்கள் அனைத்தும் நேர்கோட்டில் வருவது என்பது நிகழாத காரியம். ஆனால் இன்று கௌதமனின் வானில் கிரங்களின் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது போலும். சுமார் நான்கு வருடங்களுக்கு முன் இவனிடம் உதிர்த்த, ‘நாங்க அவன ஒழுங்கா பாத்துகல. நீ… அவன பாத்துகோ’ என்ற வார்த்தைகளின் சொந்தக்காரர் அழைத்தார்.
Advertisement
“சின்னவனுக்குக் கல்யாணம் பேசி இருக்கோம்… உன்ன நேர்ல பாக்கலாமா?” என அனுமதி கேட்டு நின்றார் வீரின் தகப்பன். சிகிச்சையின் போதே வைஷாலி திட்டவட்டமாக வீரின் குடும்பம், கௌதமனோடு தொடர்பில் இருப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதைக் கூறிவிட்டிருக்க, அவர்களும் இன்று வரை கௌதமனோடு தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று சின்ன மகன் வாழ்வில் நல்லது நடக்கவிருக்க, அவரால் மூத்த மகனைப் பற்றி எண்ணாது இருக்க முடியவில்லை. அழைத்துவிட்டார் கௌதமனுக்கு.
“வீட்டுல வேண்டாம். வெளியில பாப்போமா?” எனக் கேட்பவரிடம் என்ன கூறிவிடப் போகிறான் கௌதமன்? சரி என்றான். அவருக்காகக் காத்திருந்தவனுக்குள் இனம்புரியா பதட்டம். பூங்காவில் மகள் விளையாடிக் கொண்டிருக்க, அவளைப் பார்த்து அமர்ந்திருந்தவன் அருகில் வந்து அமர்ந்தவரை பார்த்தான். வாஞ்சையோடு கௌதமனை பார்த்தவருக்கு வார்த்தைகள் வரவில்லை.
“நல்லா இருக்கியா? உடம்பு எப்படி இருக்கு?” என்றவர் பார்வை கௌதமனை ஏதோ செய்தது. இவரை எப்படி அழைக்க வேண்டும்? தடுமாறினான் கௌதமன். “இருக்கேன்… நல்லா ஆரோக்கியமா இருக்கேன்” என்றான் அவர் கரம் பற்றி. அவன் கரத்தை கண்களில் ஒற்றிக் கொண்டவரின் இமைகள் மூடியிருந்தாலும் விரலில் ஈரம் உணர்ந்தான் கௌதமன். என்ன கூறி அவரை சமாதானம் செய்வான்?
‘நன்றாக இந்த உடலைப் பேணிக் காக்கிறேன்’ என்பதை தவிர வேறு என்ன நிம்மதியை அவருக்குத் தந்திட முடியும்? “எந்தப் பிரச்சினையும் இல்ல. சின்னதா ஜுரமோ சளியோ கூட வரதில்ல. நல்ல ஆரோகியத்தோட இருக்கேன்” என்றவனுக்கும் தொண்டை கமறியது.
“நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” எனப் பேச்சை ஆரம்பித்தான். மெள்ள மெள்ள இருவரும் சகஜ நிலைக்கு வந்தனர். நலம் விசாரிப்புகளோடு பேச்சு தொடர்ந்தது. அவன் பற்றிய கரத்தை அவர் பிடித்துக் கொண்டார். அவர் கரம் கொடுத்த கதகதப்பு அவனுக்கும் தேவையாக இருக்க, அவர் பொத்திப் பிடித்திருந்த கரத்தை அவனும் விடுவித்துக் கொள்ளவில்லை.
“மாமனாருக்கு முடியல, அவர் பேத்திய வருணுக்கு முடிக்கணும்ன்னு பார்க்கிறார். எல்லாரும் நேரா பாண்டிச்சேரிக்கு கிளம்பிட்டாங்க. ஏர்போர்ட்ல விக்ரம பார்த்தேன். உனக்கு என்கேஜ்மென்ட்டுன்னு தெரிஞ்சிருந்தா ஒரு வாரம் முன்னமே வந்திருப்பேன்… கல்யாணத்துக்குக் கண்டிப்பா கூப்பிடணும், சரியா? எப்போ கல்…” என அவர் ஆரம்பிக்கவுமே, ‘இவரை அழைக்க எப்படி மறந்தோம்’ எனத் தடுமாறிப் போனவன், அவசர அவசரமாக, “வெட்டிங் இல்ல… கல்யாணம் நின்னுடுச்சு.” என்றான் கௌதமன்.
வாசுதேவனை விட இவர் அடைந்த அதிர்ச்சியும் துன்பமும் அதிகம் என்றே கூறலாம். கசங்கிய முகத்தோடு வாய்க்குள், “திரும்பவுமா?” என்றது இவனுக்கு நன்றாகவே கேட்டாலும், அதற்கான பொருளை ஆராயவில்லை கௌதமன்.
ஏன்… என்னானது என்ற கேள்விகள், அதற்கான கௌதமனின் பதில்… அதனோடு நடந்த பேச்சு என நேரம் சென்றது.
“அப்பா ஆலி பேபிக்கு பசிது” என ஓடிவந்த குழந்தையைப் பார்த்தவர் கண்கள் அப்பட்டமாக அதிர்வைக் காட்டின. ‘திருமணமாகமலே குழந்தையா?’ என்ற அதிர்வாக இருக்கும் என நினைத்தவன், புன்னகை முகமாக, “என் மக யாழினியாள்” என மகளைத் தூக்கி இவன் மடியில் அமர்த்திக் கொள்ள, “ஓஹ்…” என்றவருக்கு, குழந்தையை விட்டு விழியை அகற்ற முடியவில்லை.
“வணக்கம் தாத்தான்னு சொல்லுங்க” எனக் கௌதமன் கூறவும், “அலோ தாத்தா, வக்கணம்” என கைகூப்பிய குழந்தையின் கன்னம் தட்டியவர், “வணக்கம் யாழினியாள்” என்றார். யாழியைப் பற்றி விசாரிக்கத் துருதுருத்தாலும், தன் எல்லையை அறிந்தவராய், குழந்தையைக் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டு, “குழந்த ரொம்ப கியூட்” என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
மூவருமாக வெளியே உண்டு, சில மணித் துளிகளை ஒன்றாகச் செலவிட்டு, கிளம்பும் வேளை, “உனக்கு ஒரு மாற்றம் தேவைன்னு நினைச்சா, திருச்சியில் போய் இருந்துட்டு வாயேன். அந்த வீடு… அந்தச் சூழல் கண்டிப்பா உனக்கான தேடலுக்கு ஒரு முடிவ கொடுக்கும். உன் கனவு எல்லாமே அந்த வீட்ட சுத்தி தானே இருந்துது. அவ்வளவு சம்பளம் கொடுத்த வேலையை விட்டுட்டு… தோட்டம் தொரவ பார்த்துட்டு… கல்யாணம் செய்து… குடும்பமாக அங்க தான் வாழணும்ன்னு எவ்வளவு ஆச பட்ட வீர்…” என உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தவரை தடுக்காது, அவரையே பார்த்து நின்றான்.
“போரியா?” எனக் கேட்டவர் கண்களில் ஏன் அத்தனை எதிர்பார்ப்பு?
“என்ன பார்க்கிற வீர்? அது… அது உன் இடம்… உனக்கு உரிமைபட்ட இடம். தோப்பும் உன் பேர்ல அப்படியே இருக்கு. உன் தாத்தா அளவுக்கு பார்த்துக்க தெரியலனாலும், ஆள் வச்சு பார்த்துட்டு இருக்கேன். நீ… நீ போரியா வீர்? நீ போகிறதுக்குள்ள உனக்கு வீடு சுத்தமா இருக்கும். ரெடி பண்ணவா? வீட்டுச் சாவி, வாசல்ல தொங்குற குட்டி கிளி கூண்டுகுள்ள இருக்கும். மலர்ட்ட சொன்னா போதும். அவ பார்த்துப்பா. போர தான?” யாசகமா… பசமா… என்ன உணர்வை அந்தக் கண்கள் காட்டுகிறன? மகனை இழந்த ஒரு தகப்பனின் உணர்வை எந்த விதத்திலும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் மிக மிகக் கவனமாக இருந்த கௌதமன், எதையுமே யோசிக்காது, ‘சரி’ என்பதாகத் தலை அசைத்தான். தலை அசைத்ததால், இப்பொழுது, மகளோடு திருச்சியை வலம் வந்து கொண்டிருக்கிறான்.
“அப்பா லிவல் எப்போ போலோம்?” என்ற மகளிடம், “இப்போ” எனக் கூறியவன், போர்ஷாவின் கதவைத் திறந்தான். மகளைப் பின் இருக்கையில் குழந்தைக்காக பொருத்தியிருந்த பேபி சீட்டில் அமரவைத்து பெட்ல் போட்டு, அந்தச் சொகுசு காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.
தன் வீட்டிலிருந்து எதையும் எடுக்கும் நோக்கமில்லாது கிளம்பி நின்றவனை வாசுதேவன் பிடித்துக் கொண்டார். மனைவி, மகனைப் பார்த்துக் கூறிய, ‘அப்பான்னு உன்னேயே சொல்லிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு? ஒண்ணு அவ உன் ரத்தமா இருக்கணும். இல்ல உன் சம்பாதியத்துல வளக்கணும். ரெண்டுமே இல்லாத போது நீ எப்படி அந்தக் குழந்தைக்கு அப்பா ஆன?’ என்ற வார்த்தைகளின் பிரதிபலிப்பு தான் அவன் வெறுங்கையோடு கிளம்புவது எனத் தெரியாதவரா வாசுதேவன்?
“சுயமா வாழு. நான் தடுக்கல. உன் சம்பாதியத்துல உன் பொண்ணுக்கு செய், நான் தடுக்கல. ஆனா… நான் இன்னும் உன் அப்பா தான். நீ ஒண்ணுமில்லாததுல இருந்து ஆரம்பிக்க எந்த அவசியமும் இல்ல. கொஞ்ச நாள் தனியா இருக்கணுமா? இரு. நீ என்ன பண்ணனும்ன்னு ஒரு முடிவுக்கு வந்ததும் சொல்லு, நானும் தோள் கொடுக்கிறேன். இல்ல… சேர்ந்து செய்யலாம்ன்னு நீ நினைச்சா, சேர்ந்தே செய்யலாம். நீ தனியா கஷ்டப்பட்டு யாருக்கும் ஒண்ணும் ப்ரூவ் பண்ண வேண்டாம். நீ அடிமட்டத்துல இருந்து ஆரம்பிக்கதுக்காக ஒண்ணும் நான் ராப்பகலா உழைக்கல.
என் உழைப்பு உன் உரிமை. எப்பவும் யாருக்காகவும் அதை விட்டு கொடுத்திடாத” என்பதை மகன் காதுகளிலும் மனைவியின் காதுகளிலும் நன்றாக விழும்படி அழுத்தமாகக் கூறினார் வாசுதேவன்.
அப்பாவின் பேச்சிற்குச் செவி மடுத்தவனால் அன்னை கூறிய, “எந்தக் குறையும் இல்லாம நான் குழந்தைய பார்த்துகிறேன். நம்பி விட்டுட்டு நீ மட்டும் போ. என்ன சாதிக்கணுமோ சாதிச்சுட்டு வா” என்ற வார்த்தைகளுக்குச் செவிமடுக்க முடியவில்லை.
“கொஞ்ச நாள் இருந்துட்டு வந்துடணும். பத்திரமா இருந்துகோ… குழந்தையும் பத்திரம்” என வைஷாலி மனமே இல்லாது மகனுக்குத் தலை அசைத்தவர், யாழினியாளை கட்டி அணைத்து, “பாட்டிய மன்னிச்சுடு குட்டி” என உச்சந்தலையில் முத்தம் பதித்து அனுப்பி வைத்தார்.
என்ன நடக்கிறது எனப் புரியாது, “டாடா தாத்தா… பை பாட்டி. நானுக்கும் அப்பாவும் டாடா போலோம்” என முத்தங்களைப் பறக்கவிட்ட மகளின் முகத்தில் புன்னகை இன்னும் வாடவில்லை.
அவன் சிந்தனையோடு சேர்த்து கார் பயணம் முடிவுக்கு வந்தது. கல்லணையின் மீது நின்று காவிரியின் அழகைக் கண்ட குழந்தை, “பீச் மாடிடியே நலைய வாட்டர் அப்பா” எனக் கண்கள் விரித்தாள்.
“ஆமா பேபி… பீச் மாதிரி இதுலயும் நிறைய வாட்டர். ஆனா பீச் வாட்டர் உப்பா இருக்கும்.” என்றான்.
“இடு குட் வாத்தரா?” என்ற மகளின் முகத்தில் தான் எத்தனை பாவங்கள்? எல்லாவற்றிற்கும் கண்கள் விரித்து அபிநயம் காட்டும் மகளுக்கு உலகையே சுற்றிக் காட்டக் கௌதமனுக்கு ஆசை பிறந்தது. மலையும், ஆறும், வயலும், தோப்பும் என திருச்சியின் அழகை மகளோடு சேர்த்து கௌதமனுமே விழுங்கிக் கொண்டிருந்தான்.
இவன் பழக்கப்படுத்தியதாலா… இல்லை யாழியைப் பெற்றவனின் மரபணுவா தெரியவில்லை, யாழிக்குப் புது புது இடங்களை பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் இருந்தது. பார்க்கும் அனைத்தையும் ரசித்தாள். சின்ன சின்ன விஷயங்களிலும் ஆனந்தம் கொண்டாள். பார்த்த பலவற்றையும் நினைவில் வைத்துக் கொண்டாள்.
சிலர் நீரில் குதித்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த குழந்தை, “அப்பா நானுக்கு ஸ்விமிங்” என நீரில் குதிக்க ஆர்வம் காட்டினாள்.
“நீ அப்பா மாதிரி பெருசான பிறகு, அப்போ சேப்பா இருந்தா யோசிப்போம்” என்றவனுக்கு உண்மையிலுமே அந்தச் சிறுவர்களும் பெரியவர்களும் காட்டிக் கொண்டிருந்த ஸ்டன்ட் பயத்தைக் கொடுத்தது. இந்த அபாயகரமான விளையாட்டெல்லாம் எப்பொழுது வேண்டுமென்றாலும் ஆபத்தில் முடியலாம் எனக் கௌதமனுக்கு தெரியாதா?
“பேபி எப்போ அப்பா மாதிடி பிக் ஆவேன்?” மகள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள். தகப்பனும் அலுக்காது பதில் கொடுத்துக் கொண்டே வந்தான்.
சூரியன் களைத்து உறங்கச் சென்றபின் தங்கள் கூட்டை நோக்கி வந்தனர் அப்பாவும் மகளும். அலைச்சலின் காரணமாக, வாகனத்தில் இருந்த குழந்தைக்கான கார் சீட்டில் அமர்ந்த அடுத்த நிமிடமே மகளின் கண்கள் சொருக ஆரம்பித்தன. மெல்லிசை காரை நிரப்ப, அலுங்காது குலுங்காது போர்ஷா வீட்டை வந்தடைந்தது.
காரை நிறுத்தி… வெளி இரும்பு கேட்டை திறந்து… மீண்டும் காரை உள்ளே நிறுத்தி, கேட்டை பூட்டி, மகளைத் தூக்கிக் கொண்டு வீட்டின் கதவைத் தானே திறந்து முடிக்கும் முன் கௌதமனுக்கு போதும் போதும் என்றானது.
இப்படி அவன் அமரும் காரின் கதவைக் கூட திறந்து பழக்கப்படாதவனுக்குச் சத்தியமாக முடியவில்லை. அனைத்தையும் அவனே பார்க்க வேண்டியிருக்கக் கௌதமனின் விழி பிதுங்கியது. பிறந்ததில் இருந்தே பணத்தில் உருண்டு புரண்டவனுக்கு இவ்வளவு சின்ன வீட்டில் இன்னும் எத்தனை தினங்கள் தன்னந்தனியாகத் தள்ள முடியும் எனத் தெரியவில்லை.
உறங்கிக் கொண்டிருந்த மகளைத் தோளிலிருந்து இறக்காது சோஃபாவில் அமர்ந்தான். வழியில் இருவரும் உண்டிருக்க, இனி உறங்க வேண்டிய வேலை மட்டுமே இருந்தது.
உறங்கிக் கொண்டிருந்த மகளை எழுப்பி கழிவறையை உபயோகிக்கச் செய்து, உடை மாற்ற வைப்பதற்குள் தலையில் தண்ணீர் குடித்தான். ஒரு தந்தையின் அத்தனை பொறுப்புகளையும் இந்த இரண்டு நாள்கள் கௌதமனுக்கு உணர்த்தியிருக்க, கௌதமன் திக்குமுக்காடிப் போனான்.
குளிர்ந்த நீரின் அடியில் களைப்பு தீர நின்று குளித்து வந்தான். தலையின் ஈரம் காயும் முன்னமே படுக்கையில் விழுந்தவன் மனம் முழுதாக விழித்திருந்தது. இரு நாள்களாகக் குளிக்க, உறங்க என வீட்டை ஹோட்டல் அறையைப் போல் பாவித்து வருகிறான். மூன்று வயது நிரம்பாத குழந்தைக்கு இந்த வாழ்க்கை முறை சரி இல்லை எனத் தெரிகிறது. ஆனால் எப்படி… எங்கு ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. ஒன்றிரண்டு நாள்களில் வீட்டு வேலைக்கு என இதே வீட்டில் வேலையில் இருந்த பெண்மணியை ஏற்பாடு செய்திருப்பதாக வீட்டின் அருகில் இருக்கும் இஸ்திரி போடும் பெரியவர் கூறியிருந்தார்.
அவள் வரும்வரை அனைத்தையும் பார்த்துப் பார்த்து எவ்வாறு செய்வதெனத் தெரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை. அவனால் கண்டிப்பாக இந்த மாதிரி உதவி இல்லாத நடுத்தர வாழ்வை வாழ முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. ‘பத்து நாள் போகட்டும்… இங்கு இருப்பதா இல்லை சென்னைக்கே போவதா எனப் பார்ப்போம்’ எனத் தனக்குள் கூறிக்கொண்டான். தன் கழுத்தைக் கட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த மகளை அணைத்தவாறு கண்ணயர்ந்தான்.
நல்ல தூக்கத்தில் இருந்தவன் செவிப்பறைக்குள் வெடித்து சிதறும் பாறாங்கற்கள் விழுந்தது. தூக்கம் கலைய ஆரம்பித்தது கௌதமனுக்கு. முன் தினம் போலவே இன்றும் மிக்சியின் சத்தம் காதுக்குள் குடைந்தது. ‘இன்னைக்குமா?’ என அலுத்துக் கொண்டவன், தலையணையைக் காதின் மீது அழுத்திப் பிடித்து, விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தான்.
சில வினாடிகள் கழித்து மீண்டும் மிக்சி ‘கொட மொட’ எனக் காதுக்குள் குடைந்தது. ‘நடு ஜாமத்துல இது என்ன வேல இந்தம்மாக்கு’ என மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டான். சத்தம் அவர்கள் வீட்டின் பின்னால் இருந்த வீட்டிலிருந்து வந்தது. வந்த அன்று அந்த வீடு இருட்டில் மூழ்கி இருந்தாலும், நேற்று காலையிலும் இதே சத்தம் தான் அவனை உலுக்கி எழுப்பியது.
இன்றும், மிக்சி விடுவேனா பார் எனத் தலையணையைத் தாண்டி இவன் மண்டைக்குள் குடைந்தது. எழுந்து அமர்ந்தான் கௌதமன். கண்கள் கரித்தன. ஈரத் தலையோடு படுத்தது தலை வலியைத் தந்திருக்க, நொந்துக் கொண்டான் கௌதமன். சத்தம் மகளைத் தொடவில்லை போலும், கன்னம் நசுங்கக் குட்டி வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
எழுந்து குளியலறை சென்றவன், காலை காரியங்கள் அனைத்தும் முடித்து வெளியே வந்தான். மகள் எழுந்து குட்டி கால்களின் பெருவிரலில் நின்று கொண்டு ஜன்னல் வழி வேடிக்கை பார்த்து நின்றிருந்தாள்.