Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத உறவே!...

நீங்காத உறவே!… அத்தியாயம் 12

நீங்காத உறவே!…

அத்தியாயம் 12

திருநிறைச்செல்வி தான் பிரபாகரனின் நிலைக்கு காரணம் என்று அவளை எதிரியைப் போலவே பார்த்தார்கள் அவன் வீட்டவர்கள். வாய் வார்த்தையாக யாரும் குற்றம் சொல்லவில்லை தான். ஆனாலும், அவர்களின் பார்வையும், தொடர்ந்து கணவனின் அருகில் கூட செல்ல விடாமல் அவளை தள்ளியே வைத்ததும் அவளுக்கு உணர்த்தியது.

இவர்களின் பார்வை எல்லாம் அவளை அசைக்கவில்லை, உள்ளே இருப்பவனின் குரல் மட்டும்தான் அவளை அசைக்கும். அதுவரை கையில் உயிரைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நிறை. எல்லோரையும் பயமுறுத்தி அதிகாலை நான்கு மணிக்கு கண் விழித்தான் பிரபாகரன். தற்போது அவனுக்கு சுவாசம் சீராக இருந்தது. நார்மல் வார்டில் தான் இருந்தான். தன்னைக் கண்டதும் கண் கலங்கும் தாயைப் பார்த்து லேசாக சிரிக்க முயல,



Advertisement

“பிரபா என்னடா இது எல்லாரைம் பயமுறுத்திட்ட, உன்ன பாத்துக்கறதுக்காக மட்டும்தான் ஒன்னும் இல்லாட்டியும் அவளை இந்த வீட்டு மருமகளா கொண்டு வந்தேன். எல்லாம் என் தப்பு தான். அப்பவே உங்க அப்பா சொன்னாரு அந்த வீட்டு சவகாசமே வேணாம்னு, நான் எங்க கேட்டேன்” என்று அழுக,

அப்போதுதான் கவனித்தான் பிரபாகரன் மனைவியை காணவில்லை என்று…

“உங்க அண்ணன்கள் இரண்டு பேரும் வேணான்னு நின்டானுங்க, நான் தான் சொந்தம், பொம்பள பிள்ளை வாழ்க்கைன்னு யோசிச்சு கடைசில என் பையன் வாழ்க்கையை வீணாக்கிட்டேன்” என்று மேலும் புலம்ப,

Advertisement

பிரபாகரனின் முகம் மாறிப்போனது. அவனின் முகம் மாற்றத்தை கவனித்த வீர சிவா, “அம்மா தேவையில்லாம வார்த்தையை விடாத” என்று அதட்டல் போட,

Advertisement

“உனக்கு என்னடா? இங்க படுத்து கிடக்கிறது எம் மகன் தான.. என் மகனை பார்த்து என் நெஞ்சை ஆடி போச்சு தெரியுமா?” பெரிய மகனையும் அதட்டினார் கல்யாணி.

மகனின் முகத்தை கவனித்த வீரணன், “என்ன பிரபா, உடம்புக்கு என்ன பண்ணுது?” என்று கேட்க.

 “நிறை எங்கப்பா?”

Advertisement

“அவளை எதுக்குடா கேட்கிற” என்றார் கல்யாணி.

 “நீ சும்மா இரு கல்யாணி” என்ற வீரணன், “நிறை வெளிய தான் ப்பா நிக்குது வர சொல்லவா?” என்றதும் தலை அசைத்தான் மகன்.

நிறை, வெளியே தான் அமர்ந்திருந்தாள். தன் அத்தை பேசியதை அனைத்தும் கேட்டு தான் இருந்தாள். நிராகரிப்பதே வலி என்றால் அதை சொல்லியும் காட்டி விட்டார் கல்யாணி. ஏதேதோ எண்ண அலைகளில் வேகமாக உள்ளே வர, பிரபாவின் வீட்டு ஆட்களை தாண்டி கணவனை நெருங்க முடியவில்லை. இவ்வளவு நாளும் தன்னோடு ஒரே அறையில் ஒன்றாக படுத்து உறங்கிய கணவன் இன்று அன்னியமாக தெரிந்தான்.

அவர்களின் பார்வை எல்லாம் அவள் மீதுதான்… நேர்கொண்டு அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தரையைத்தான் பார்த்திருந்தாள். ஆனால், பிரபாகரன் மனைவியை மட்டுமே பார்த்திருந்தான். மனைவியின் கண் இமைகளின் வீக்கம் அவள் எவ்வளவு அழுதுயிருக்கிறாள் என்று உணர்த்தியது.

இம்மியும் விலகாமல் பிரபாகரன் பார்வை மனைவியை தொடர, வீர சிவா தான், “அப்பா வாங்க நாம எல்லாம் வெளியே இருப்போம். நிறைய கொஞ்ச நேரம் அவனை பாத்துக்கட்டும். நாம ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்” என்று நகர,

சின்ன மகனின் பார்வையை உணர்ந்தே தந்தையும் நகர்ந்து கொண்டார். கல்யாணி மட்டும், “நீங்க போங்க நான் என் பிள்ளையை விட்டு எங்கு நகருரதா இல்லை”

“அம்மா” என்று அதிருப்தியாக அதட்டல் போட்டவன் கைபிடித்து நகர்த்திச் சென்றான். நேற்று முழுவதும் புலம்பிக்கொண்டே நிறையை அவ்வளவு குறை சொன்னார். கண் விழித்ததும் கணவன் மனைவியைத்தான் தேடுகிறான். அம்மாவின் செயல் சின்னப்பிள்ளைத்தனமாக இருந்தது.

வீரராகவனுக்கும் தம்பியை பார்த்து ஆச்சரியம்தான். எப்போது இருந்து காதல்?.. கண்களில் அத்தனை காதலோடு அல்லவா நிறையை பார்க்கிறான்.

இன்னமும் நிறை அங்கேதான் நின்று இருந்தாள். தானாக நெருங்கிச் சென்று கணவனை தொட்டு உணரவில்லை.

“நிறை”

“நிறை என்னை பாரு”

 “ம்ச் நிறை, இங்க வா என்கிட்ட” கணவன் எத்தனை விதமாக அழைத்தும் நிறை அவனை நெருங்கி வரவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தான் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

மனைவியின் மௌன அழுகை விசும்பலாகவும், தேம்பலாகவும் தொடர்ந்தது. அவளின் அழுகை அவனுக்கு நிறைய வலியை கொடுத்தது. பட்டென்று எழுந்து ஆறுதல் சொல்லும் படி அவன் நிலை இல்லை.

“தள்ளி நின்னு அழுக கூடாது நிறை. நான் இருக்கும் போது எதுக்கு தனியா நிக்கணும்?” அழுத்தமாக கேட்டான்.

“என் தலையெழுத்து. நான் வாங்கி வந்த வரம் போல.. எனக்கெல்லாம் நல்லது நடந்துட்டாலும், அந்த கடவுளுக்கே பொறுக்காது போல”

“ஏன் உனக்கென்ன? கடவுள் நமக்கு நல்லது தான் செஞ்சிருக்கார் நிறை. நீ வாங்கி வந்த வரம் நான்தான்” என்றதும் நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் வாங்கி வந்த வரம் நீதான். கண்ணை திறந்ததும் உன்னை தான் தேடுனேன். எதுக்கு தள்ளி நின்ன?” என்றதும், வேகமாக அருகில் வந்தவள், அவன் மார்பில் சாய்ந்து அப்படி ஒரு அழுகை.

அவளாகவ தள்ளி நின்னாள். அவளுக்கே சூழல் புரியாமல் மனம் திகைத்து நிற்கும் பொழுது தள்ளி நிறுத்தி விட்டார்கள் அல்லவா!…

மனைவி நிறைய பயந்து இருக்கிறாள் என்று புரிந்தவன் அவள் முதுகை தடவிக் கொடுத்தான். இதுதான் முதல் முறை அவர்கள் இருவரும் நெருங்கி இருப்பது.

நீண்ட நேரம் கழித்து நிறை உணர்ந்தாள், அவன் மேலே விழுந்து அழுத்தி கிடப்பதை..பதறி விலகியவள், தன்னை நிலைப்படுத்த…

பிரபாகரன் எந்த அவசரமும் காட்டாமல் மெதுவாக அவளை விட்டவன்.. அவள் தடுமாறுவது கண்டு விலகி நின்ற முடியை நேர் செய்தான்.

“ரொம்ப அழுது இருக்க போல போய் முகத்தை கழுவிட்டு வா”

“நேத்து இருந்து ரொம்ப பயந்துட்டேன். என் மேல தான் தப்பு. நான் உங்களை சரியா கவனிக்கல போல”

“என்ன நீ சரியா தான் கவனிக்கிற, என்னை ரொம்ப நிம்மதியா வச்சிருக்க. உன்னோட எனக்கு அமைதியான நல்ல வாழ்க்கை தான் நிறை”

கணவனின் வார்த்தையில் அவளுக்கு மனம் பூரித்தது. சற்று முன் தன் அத்தை பேசிய வார்த்தைகள் மனதில் இருந்து காணாமல் போனது.

“நிறை, நான் ஒன்னும் குழந்தை கிடையாது. என்னை மட்டுமே பார்க்கிறதும் உன் வேலை கிடையாது. மழைக்காலத்தில் வர சின்ன தொற்று தான் இது.. இனி கொஞ்சம் கவனமா இருப்போம். ரொம்பவும் மனசு போட்டு யோசிக்காத” என்று அழுத்தமாக சொன்னான்.

தன் உடல் நிலையையும் மறந்து மனைவியை மட்டுமே தேற்றிக் கொண்டிருந்தான். அதற்குள் அவர்களுக்கும் சேர்த்து டீ வாங்கிக் கொண்டு எல்லோரும் வந்து இருக்க, நிறை சற்று நகர்ந்து அமர்ந்தாளே தவிர, பதறி கொண்டு எழுந்து செல்ல வில்லை.

பிரபாகரனும் முன்பிருந்த அழுத்தம் மாறி லேசாக மனைவியின் கையை பிடித்துக் கொண்டிருந்தான். கல்யாணி மகனுக்கு டீ ஊற்றிக் கொடுத்தார்.

 “குடி பிரபா கொஞ்சம் தெம்பா இருக்கும்” என்றதும்,

வாங்கியவன் முதலில் மனைவி கையில்தான் கொடுத்தான்.

“ரொம்பவும் சோர்ந்து போய் தெரியிற நிறை. முதல்ல நீ வாங்கு” என்று அவள் கையில் திணித்தான்.

 நிறை பிகு ஒன்னும் செய்யவில்லை. பயம், பதட்டம் ஏதேதோ எண்ணங்கள் எல்லாம் கணவன் அருகில் இல்லாத வரை தான். பிரபாகரன் ஒரு வார்த்தை சொன்னால் போதும், அவளுக்கு மிகுந்த தைரியமாக இருக்கும்.

அதை நிறையே உணர்ந்தாள். கணவன் தனக்கு மிகப்பெரிய பலம் என்று… மகனின் மனைவி மீதான அக்கறையை கண்டு கல்யாணி கூட வாயை மூடிக்கொண்டார். வீரணன் கூட மகனை கவனித்தார். திருமணம் செய்து வைத்ததோடு சரி, அவர்கள் வாழ்க்கை எவ்வாறு சென்று கொண்டே இருக்கிறது என்றெல்லாம் யாரும் கவனித்து பார்க்கவில்லை.

 அந்த அளவுக்கு பிரபாகரன் தம்பதிகள் விட்டதும் இல்லை. இந்த கொஞ்ச காலங்களும் அவர்களுக்கு தெளிந்த நீரோடையாகத்தான் திருமண வாழ்க்கை சென்றது. அதனால் மற்றவர்கள் கவனிக்கும்படியான அன்னியோன்யமோ அல்லது சண்டை, சத்தமோ வந்தது கிடையாது.

அன்று மதியத்திற்கு மேல் பிரபாகரன் வீடு வந்து விட்டான். நிறையின் முழு வேலையும் கணவனை சுற்றி மட்டுமே..

“என்னை குழந்தை மாதிரி கவனிக்கிறதை விடு நிறை” என்று பிரபாகரன் கூட சொல்லிவிட்டான்.

ஆனாலும், நிறை கணவன் முகத்தில் இருந்த சுணக்கம் போகும் வரை அவனை தனியே விடவில்லை. தற்போது நிறையின் முழு கவனமும் கணவன் மட்டுமே… பிரபாகரன் மனைவியின் கவனிப்பை ஏற்று நான்கு நாட்கள் தான் வீட்டில் இருந்தான். அதற்கு அடுத்த நாளே எப்போதும் போல வேலைக்கு கிளம்பி விட்டான்.

“இவ்வளவு சீக்கிரமா எங்கடா கிளம்புற?” என்றார் கல்யாணி.

“வேலைக்கும்மா, மாச கணக்கா லீவு தருவாங்க. நாலு நாள் தான் லீவு” என்றான் மகன்.

“நீ இப்போதைக்கு வேலைக்கு எங்கும் போக வேணாம் பிரபா” என்றார் தாய்.

கணவனை வழியனுப்ப வந்த நிறையும் புரியாமல் தான் மாமியாரை பார்த்தாள்.

“நான் வேலைக்கு போகாம வீட்டுல இருந்தா, என் குடும்பத்தை யார் பார்ப்பா?” கிண்டலாகவே முடிக்க பார்த்தான் பிரபாகரன்.

“ஒரு நாலஞ்சு மாசத்துக்கு உங்க அண்ணங்க பார்ப்பாங்க” என்றார் கல்யாணி.

அவர் அவ்வாறு சொன்னதும் வீட்டிலிருந்த மூன்று மருமகள்கள் முகமே மாறிப்போனது.

“கல்யாணி என்ன பேசுற ஒரு குடும்பத்தை இன்னொரு குடும்பம் எப்படி தாங்க முடியும்” என்றார் தந்தை.

“என்னத்த தாங்க சொல்றாங்க. ரெண்டு பேருக்கு சாப்பாடு செலவுக்கு இவங்க தர மாட்டாங்களா?” என்றான் பிரபாகரன் முகம் மாறிப்போனது.

“அம்மா என்ன பேசுறீங்க. கொஞ்சம் யோசிச்சு பேசுங்க” என்றான் பிரபா.

“என்னடா இதுக்கு முன்ன அண்ணன்ங்க உன்னை பார்த்ததில்லையா?”

“பார்த்தாங்க. ஆனா, இப்ப வேற, எல்லாருக்கும் அவரவர் குடும்பம் இருக்கு. என் கூட பிறந்த அண்ணன் கிட்ட கை நீட்டுறது. தப்பு கிடையாது. ஆனா, என் பொண்டாட்டியையும் நான் நீட்ட வச்சா, அது ரொம்ப பெரிய தப்பு. என் பொண்டாட்டிய பாத்துக்குறதுக்கும், அவளோட தேவையை நிறைவேற்றுவதற்கு நான் இருக்கேன்” கோபமாகவே வார்த்தை வந்து விட்டது பிரபாகரனுக்கு…

“டேய் என்னடா பேசுற?”

 “நிஜந்தாம்மா, எங்க சம்பாத்தியம் சமமாக இல்லை. ஆனா, இந்த வீட்டு மருமகள்கள் மூன்று பேரும் சமந்தான். அங்க வேற்றுமை வர வேணாம்” என்று உறுதியாக சொன்னவன் வேலைக்கு சென்று விட்டான்.

 விவரம் இல்லாதவன் என்று நினைத்த தன் கடைசி மகனா இவ்வளவு தெளிவாக பேசியது என்று வியந்து பார்த்தார் வீரணன்.

“எப்படி பேசிட்டு போறான் பாத்தீங்களா? முடியாதவன் கைக்குள்ளேயே வச்சுக்க நினைச்சா.. பொண்டாட்டி பேச்சைக் கேட்டுகிட்டு எடுத்து தெரிஞ்சு பேசுறான்” என்றார் கல்யாணி.

“அப்படி இல்ல கல்யாணி. சின்னவே இப்பதான் தெளிவா யோசிக்கிறான்”

“என்னத்த தெளிவா யோசிக்கிறான். மத்த பசங்க மாதிரி அவனுக்கு நிரந்தர வேலையும், வருமானமும் இல்லை. அதனாலதான் அவனை தனியா விடாம சேர்த்து புடிக்க நினைக்கிறேன். மத்த பசங்க வசதியாத்தான் இருக்காங்க, கூட பிறந்தவனை கொஞ்சம் தூக்கி விட்டா.. இவனுக்கு எங்க கௌரவம் குறையுது?” கல்யாணிக்கு மகனின் நல்லதற்கு தானே சொல்கிறோம் என்ற எண்ணம்.

“என்ன அத்தை சொல்றீங்க. உதவி செய்றது வேற முழுசா ஒரு குடும்பத்தை தாங்குறது வேற.. எங்களுக்கு வருமானம் இருக்குன்னா, அதற்கு தகுந்த செலவும் இருக்கும்” என்றாள் ரோகினி.

“உங்க சின்ன மகனுக்கு நீங்க எவ்வளவும் செய்யுங்க, நாங்க கேட்கல. எங்க வரவு செலவு நீங்க பாக்காதீங்க அத்தை” என்று சொன்னது சினேகா.

பெரிய மருமகள் இருவரின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய் கணவனை பார்த்தார் கல்யாணி.

“சின்னவன் பேசின வார்த்தைக்கு அர்த்தம் உனக்கு இப்ப புரியுதா? நாம பெத்த மூணு பசங்களும் சண்டை சத்தம் இல்லாம இருக்காங்களா அதை மட்டும் பாரு கல்யாணி. அவங்கள இழுத்துப் புடிச்சு சேர்த்து வைக்க நினைக்காத… ஒரு வயசுக்கு அப்புறம் தள்ளி நின்னு பிள்ளைகளோட வளர்ச்சியை பாக்குறது தான் பெரியவங்களுக்கு அழகு” என்று விட்டு போனார் வீரணன்.

நிறைக்கு, பிரபாகரன் உடல்நிலை சரியில்லாமல் போனதில் இருந்தே மாமியாரின் நடத்தையில் மாற்றம் வந்ததை உணர்ந்தாள். இப்போதெல்லாம் அவருக்கு தான் வேண்டாத மருமகள். ஆனாலும், நிறை வாய் வார்த்தையில் கூட எதிர்த்துப் பேசவில்லை. அவர் ஆசைப்பட்டு கூட்டி வந்த மருமகள். அந்தப்  பெயரையே நிலைநிறுத்த விரும்பினாள்.

 ஆனாலும், இன்றைய கணவனின் பேச்சு அவளுக்கு உள்ளுக்குள் சாரல் அடித்தது. இதுவரை அவளுக்கு என் குடும்பம் என்ற நினைப்பு வரும்போது எல்லாம் அவளைப் பெற்றவர்கள் தான் முன்னிருப்பார்கள். இன்று பிரபாவின் வார்த்தைகள் அவளுக்கு ஒரு மாதிரி உணர்வை கொடுத்தது. அவன் சொன்னது போல கணவன் தனக்கு வரம் தான்.

இன்று மட்டும் பிரபாகரன் அவன் அம்மாவின் வார்த்தையை கேட்டிருந்தால், நிச்சயம் அவளுக்கு மனம் விட்டுப் போயிருக்கும். என்னதான் நிறை திருமணம் அதற்குப் பின்னான அமைதியான வாழ்க்கை என்று நிகழ்காலம் நிம்மதியாக இருந்தாலும், வலி தரும் கடந்த காலமும் உள்ளுக்குள் ஏதோ ஒரு மூலையில் உறுத்திக் கொண்டே தான் இருந்தது.

 சொந்தமாகவே இருந்தாலும் தன்னை ஏளனமாக பார்த்து நிராகரித்த உறவின் உதவியை ஏற்கும் சூழலை அவளால் நிச்சயம் தாங்கிக் கொள்ளவே முடியாது. இன்றைக்கு கணவனின் வார்த்தை அவளின் மனதில் அவன் நினைப்பை ஆழமாக பதித்தது. எனக்காக என்னைப் பார்த்துக் கொள்ள என் வாழ்நாள் முழுக்க ஒருவர் இருக்கிறார். இந்தத் திருநிறைச்செல்வி தனியாக இல்லை. அவளுக்கு துணை உண்டு. நான் தனி இல்லை. எனக்காக யோசிக்க என் புருசன் இருக்கிறான்.

அடுத்த நாள் முதல் கணவனுக்கு தோள் கொடுக்க நிறை வேலைக்கு கிளம்பி விட்டாள். தன் வேலையில் ஓரளவு மாற்றங்களை கொண்டு வந்தாள். காலையில் அரக்கப் பறக்க ஓடாமல் பிரபாவை பார்த்துக் கொள்வது, மாலை சீக்கிரம் வீடு திரும்பி விடுவது. பிரபாகரன் வேலை விட்டு வீடு வரும்போது மலர்ந்த முகத்தோடு அவனை அரவணைக்க மனைவி தயாராக இருந்தாள்.

அதனால் அவள் வருமானத்தில் குறைவு வந்தது. பரவாயில்லை வீட்டு செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வந்தால் போதும்.. மிச்சத்தை என் புருசன் பார்த்துக் கொள்வான்.

பிரபாகரனுக்கு தற்போது நிறைய உணவு கட்டுப்பாடுகள் வந்தது. செரிமான தொந்தரவு இருக்க சில மாதங்களுக்கு திட ஆகாரங்கள் இல்லாமல் எளிதாக செரிக்கும் வண்ணம் உணவுகளே கொடுத்தாள் நிறை. அவளுமே அந்த உணவுகளையே எடுத்துக் கொண்டாள்.

“உனக்கு நல்லத வச்சு சாப்பிடு நிறை” என்பான் கணவன்.

“ஆமா, வீட்ல இருக்குறது ரெண்டு பேரு. அதுக்கு எதுக்கு தனி தனி சமையல்” என்று சொல்லி கொண்டாலும், அவனும் அறிவான், “மனைவிக்கு தன்னை விட்டு தனியாக வேற ஏதும் ஸ்பெஷலாக உண்பதில் விருப்பமில்லை என்று…”

ஆம், உண்மை தான். அவளுக்கு கணவனை விட்டு தனக்கு மட்டும் அசைவம் சமைத்து உண்பதில் விருப்ப மில்லை. அதனாலே பிரபாகரனுக்கு என்ன கொடுக்கிறாளோ அந்த உணவவே அவளும் எடுத்துக் கொள்வாள்.

அன்று மதியம் கடையில் பொருட்களை பிரித்து அடுக்கி கொண்டிருக்கும்போது திவ்யா, “நிறை, அண்ணே உன்னை பாக்க வந்திருக்காங்க” என்றாள்.

“என்னவாம், எதுவும் சொல்லலையே” என்று நினைப்போடு கணவனை காண சென்றாள்.

“என்னங்க?” கொஞ்சம் சோர்ந்து போய் இருந்தாள்.

“ரொம்ப வேலையா நிறை” என்றான் அக்கறையாக…

“எப்பவும் போல தான். நீங்க என்ன இந்த பக்கம்”

“இங்க எங்க பிரான்ச் மீட்டிங் நடக்குது. அதான் வந்தேன்” என்றவன் தன் கையில் இருந்த பார்சலை கொடுத்தான்.

“எல்லாருக்கும் சிக்கன் பிரியாணி கொடுத்தாங்க. அதான் உனக்கு கொண்டு வந்தேன். நீ சாப்பிடு” என்கவும்,

“என்னைக்கோ ஒரு நாள் தானே. நீங்க சாப்பிட்டு இருக்கலாம்” என்றாலும், லேசாக சிரிக்க மட்டும் செய்தான்.

“நாலு கிலோமீட்டர் பக்கமா உங்களுக்கு.. இனி, இப்படி செய்யாதீங்க”

“சரி செய்யல” அவள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதால் அவள் பேசியதற்கெல்லாம் தலையாட்டினான். அவள் வாங்காமல் என்ன செய்வாள் தனக்காக நாலு கிலோ மீட்டர் ஓடி வந்திருக்கிறான்.

“சரி நான் கிளம்புறேன்”

“பக்கத்துல ஒரு கடை இருக்கு. பழ ஜூஸ் போட்டு தருவாங்க. ஐஸ் போடாம வாங்கி குடிச்சுட்டு. அப்புறம் கிளம்புங்க, என்ன…” என் lகவும்,

சரி என்று கையசைத்து விடை பெற்றான்.

“இருந்தாலும் இந்த அண்ணன் ஓவரா தான் லவ்ஸ் விடுறாரு” என்று திவ்யா கேலி செய்ய, முகம் சிவந்தாள் நிறை.

அப்படி என்ன தான் உசத்தி. தன் மேல் இவ்வளவு அக்கறை, அன்பு, பாசம் எல்லாம்…

வீட்டு செலவுகளை நிறை பார்த்துக் கொள்ள, பிரபாகரனின் வருமானம் சேமிப்பாக நின்றது. கையில் இருப்பு அதிகமாக இருக்க, அவளுக்கு என்று ஏதாவது வாங்க எண்ணம்.

வீட்டில் நிறை மட்டும் தான் கையில் துவைக்கிறாள். மற்ற இருவரும் அவர்கள் அம்மா விட்டு சீதனமாகவே வாஷிங் மெஷின் வந்ததால், அவர்களுக்கு பிரச்சனை இல்லை. அதனால், பிரபா அதை வாங்க நினைக்க,

என்னவோ நிறை சேமிப்பாக இவ்வளவு பணத்தை பார்த்ததும் செலவு செய்யவே மனதில்லை. கணவனின் எத்தனை மாத உழைப்பு அது ஒரே நாளில் தூக்கிக் கொடுக்க அவளுக்கு விருப்பம் இல்லை.

“ஆனாலும், நீ இவ்வளவு கஞ்சமா இருக்க வேணாம் நிறை” என்றான் பிரபா.

“போங்க போங்க வெட்டியாலாம் செலவு பண்ண முடியாது”

“இப்பல்லாம் யாரு வீட்டுல வாஷிங் மெஷின் இல்லை. எல்லார் வீட்டிலும் இருக்கு நீ வேலைக்கு வேற போற”

 “அதெல்லாம் வேணாங்க கையில எவ்வளவு பணம் இருக்கு, அடுத்த மாசம் பார்ப்போம். இதுல குறைய வேண்டாம்” என்று அவளும் வாதாட, பிரபா அவன் தந்தையிடம் சொல்லிப் பார்த்தான். பெரியவர் சொன்னால் வார்த்தைக்கு மரியாதை இருக்கும் அல்லவா…

“வாஷிங் மெஷின் வேணாம் பிரபா. நீ, உனக்கு ஒரு வண்டி எடு” என்று வேற ஒரு யோசனை சொன்னார் தந்தை.

“எனக்கு எதுக்குப்பா இப்ப வண்டி. வண்டி வாங்குற அளவுக்கு நிறைய பணம் கிடையாது”

“டேய் ரெண்டு பஸ் மாறி, அலைஞ்சு லேட்டா தான் வீட்டுக்கு வார.. அந்த அலைச்சல் உனக்கு முடியாமல் போகுது. உன் கைல வண்டி இருந்தா, உன்னோட அலைச்சல் மிச்சம் பிரபா”என்றதும், நிறை யோசிக்க தொடங்கினாள்.

“ஆனா, அவ்வளவு பணம் கையில இல்லப்பா. அதோட நான் நிறைக்கு தான் ஏதாவது வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்தேன்”

“இப்ப உனக்கு தான் வண்டி அவசியம் பிரபா. உங்க அண்ணங்க ரெண்டு பேருக்கும் முன் பணம் நான் தான் கொடுத்தேன். அதே மாதிரி உனக்கும் செய்யணும். கைல இருக்குறத கொண்டு வா, மீதியை நான் போடுறேன் உனக்குன்னு ஒரு வண்டியை வாங்குவோம்”

நிறைக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. அவள் சந்தோஷமாக கணவனைப் பார்த்து தலையாட்ட, அவனுக்கு மனைவியின் வேலைகளை குறைக்க நினைத்தான்.

“இங்க பாரு பிரபா சொந்தமா வண்டி உன் கையில இருந்தா, நிறைக்கும் அலைச்சல் குறையும். அதுவும் உன்னோட சேர்ந்து வேலைக்கு வந்துரும் இல்ல” என்று தந்தை மேலும் எடுத்து சொல்ல,

 இப்போது யோசனை சரியாக இருந்தது. எல்லோரும் ஒரு மனதாக பிரபாவுக்கு வண்டி எடுத்தார்கள்.

கல்யாணி தான், “டேய் சாமி பேர் போட்டு தான் வண்டி எடுக்கணும்” என்றார்.

“சரி ம்மா. அப்படியே நிறை பேரும் சேர்த்து எழுத போறேன்” என்றதும்,

“உன்னை பெத்தவ எம்பேரு எழுத மாட்டியா?” வெடுக்கென்று கேட்டார் கல்யாணி.

“என்னது?” என்று மகன் பார்க்க,

“அப்படியே அப்பா பெரும் சேர்த்து எழுதுடா.. அவர் மட்டும் எதுக்கு தனியா விடனும்” என்றதும்,

“அண்ணன்கள் அவங்க மனைவி பேரும் சேர்த்து எழுதுகிறேனே… அட ஏம்மா நீ வேற இது என்ன பத்திரிகையா குடும்ப பெயர் சாமி பெயர் எல்லாம் போட்டு எழுத. நான் யார் பேரும் போடல போதுமா?” கடுப்பாக சொன்னான் பிரபா.

சமீபமாகவே அம்மா இப்படித்தான். அவர் ஆசைப்பட்டு நடந்த கல்யாணம் தானே இது? அவர் விருப்பப்பட்ட மருமகள் தானே நிறை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!