“மாடியில இருக்காளா?” என்று கேட்ட மகேந்திரனும் வைதேகி கூப்பிட கூப்பிட வேகமாக படியேறினான்.
மாடிக்குச் சென்றவன் அங்கிருந்தே கீழே பார்த்து,
“ஒன்னுமில்ல மா, நான் நைட் பேசுறேன்” என்று சொல்லி அவர்கள் அறைக்கதவை திறந்தான்.
பிரசன்னா அவன் வருகையை எதிர்ப்பார்த்தவள் போல கைகளைக் கட்டிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்தாள். கண்கள் கலங்கி இருந்தன.
மகேந்திரன் ஒன்றும் பேசாமல் அமைதியாக அவள் அருகே சென்று உட்கார்ந்தான்.
சில நிமிடங்கள் கடக்க,
“அவ்வளவும் திமிர்! ஏன் நீங்களா பேசினா குறைஞ்சுப் போயிடுவீங்களோ? ஏன் என்னை இப்படி பண்ற?” என்றவள் அவன் தோளைப் பற்றி அடித்தாள்.
“ப்ச், என்னாச்சு டி?” என்று ராஜமகேந்திரன் சோர்வோடு கேட்டாலும் பிரசன்னா போகவில்லை என்பதில் அவன் திருப்தியாக இருந்தான்.
அது அவனுக்கு உல்லாச மன நிலையைக் கொடுத்தது.
“அண்ணாவை ஏன் ஸ்பை பண்ணுனீங்க?” என்று பிரசன்னா கேட்க, இப்போதும் மகேந்திரன் அதே பதில் சொன்னான்.
“இப்போ உங்கண்ணனை நான் ஸ்பை பண்ணினதுல என்ன தப்பு? உங்க நொண்ணனை மட்டும் இல்லை, நான் இன்னும் சிலரை கூட ஸ்பை பண்றேன். எல்லாம் உங்கிட்ட சொல்லணுமா?” என்று கேட்டான்.
“எல்லாம் சொல்லத் தேவையில்லை, எங்கண்ணாவை இப்படி பண்ணினா சொல்லணும்தானே?”
மகேந்திரன் பிரசன்னாவின் பேச்சில் சிரிப்பு வந்தது. வாய்விட்டு சிரித்தான்.
“உளவு பார்க்கிறதை ஊரெல்லாம் சொல்லிட்டுப் பார்க்கணுமா? வெரி பேட்!” என்று இன்னும் சிரிக்க, அந்த சிரிப்பு இன்னும் பிரசன்னாவின் சினத்தை தூண்டியது.
பிரசன்னா சில நாட்களாக அவளாகவே இல்லை. சோர்ந்து போயிருந்தாள், காதல் கொண்ட கணவனோடு இருக்க முடியாத தனிமை, அவனை குற்றம் சொல்லும் குடும்பத்தினர் என்று திருமணம் ஆனதிலிருந்தே தேர்தல், திலக்கின் விபத்து என்று பிரச்சனைகள் பிரசன்னாவின் வாழ்க்கையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன.
அந்த பிரச்சார அலையிலிருந்து அவள் மீள்வதற்குள் அடுத்தடுத்த தாக்குதல்கள்.
“எப்படி உங்களால சிரிக்க முடியுது? உன்னால நான் எப்படி ஆகிட்டேன். எனக்கே என்னை பிடிக்கல..” என்ற பிரசன்னா அழுதாள். அதுவரை இயல்பாக இருந்த மகேந்திரனுக்குப் பிரசன்னாவின் அழுகை பிடிக்கவில்லை.
“என்னை செஞ்சேன் உன்னை? இதெல்லாம் எல்லாரும் செய்றதுதான், உங்க தாத்தா கிட்ட போய் கேளு, என்னை வேவு பார்க்க ஆள் வச்சிருக்காரா இல்லையானு. ஏன் நீ எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்கிற? இட்ஸ் ஆல் பார்ட் அண்ட் பார்சல் ஆஃப் பாலிடிக்ஸ். கொஞ்சமாச்சும் யோசி, எமொஷனல் இடியட்டா இருக்காத” என்று அறிவுரை சொன்னதும் பொங்கிவிட்டாள்.
உணர்ச்சி ஏற்றத்தாழ்வுகளால்(mood swings) அவள் மிகுதியாக பாதிக்கப்பட்டிருக்க, புரிந்து கொள்ளாமல் அவளை பேசும் கணவன் மீது கண்மண் தெரியாத கோபம்.
“நான் யோசிச்சுட்டுத்தான் இருந்தேன், எல்லாம் உன்னைப் பிடிக்குறதுக்கு முன்னாடி. உன்னை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி. இப்போ உனக்காக யோசிச்சே நான் நானாவே இல்லை. உனக்கு அதெல்லாம் கவலையே இல்லைல.. உனக்கு உன்னோட வெற்றி, அதான் முக்கியம் இல்ல?” என்று அழுது கொண்டே கேட்டவள் அப்படியே மெத்தையில் சரிந்து படுத்தாள்.
ராஜமகேந்திரனுக்குத் தலைவலித்தது. ஏற்கெனவே உடல்சோர்வு, குறைந்திருந்த காய்ச்சல் அதிகமானது போல தோன்ற அவனும் மனைவியின் பக்கம் அப்படியே சரிந்தான்.
பிரசன்னா அழுதுகொண்டே இருந்தாள். அவள் அழுகையின் சுருதி கூடாமல் குறைவதே மகேந்திரனுக்குப் போதுமானதாக இருக்க, அவள் பேசிய வார்த்தைகள் அவனுக்குள் ஆழ இறங்கி போர் செய்தன.
போர் செய்வதை விட பொறுமையாக இருப்பது மிகவும் கடினமானது அல்லவா? மகேந்திரன் அப்படியொரு நிலையில் இருந்தான். வேறு யாராக இருந்தாலும் தான் ஜெயிக்க வேண்டும் என்று வார்த்தையால் வதைத்திருப்பான்.
பிரசன்னவர்த்தினியிடம் அது முடியாது! அவனுக்குப் பிரியம்வதி அவள், அவனை பிரியத்தால் பிடித்து வைத்திருப்பவள். அவளை ஜெயித்து என்ன கண்டுவிடப் போகிறான்?
அந்த புரிதலில் அவன் அமைதியாக இருக்க, அந்த அமைதியே பிரசன்னாவை பெரிதாக இம்சித்தது.
நான் எப்படி வருந்தினாலும் இவனுக்கு ஒன்றுமே இல்லை என்ற எண்ணம்.
திருமணத்தை விருப்பங்கள் எப்போதும் பிடித்து வைப்பதில்லை. பிடிப்பினை பிடிவாதமாகக் கொண்ட திருமணங்களே ஜெயிக்கின்றன. என்ன செய்தாலும் இவளையோ இவனையோ விடக்கூடாதென்ற பிடிவாதம்.
ராஜமகேந்திரனுக்கு அப்படியொரு பிடிவாதம்.
கிட்டதட்ட இருபது நிமிடங்கள் அழுதே கரைந்தவள் அயர்ச்சியில் உறங்கி போக, அவர்கள் அறையின் இண்டர்காம் சத்தம் கேட்டு கண் திறந்தாள். சிறிது நேரம் என்றாலும் ஒரு தீவிரமான உறக்கம், கண்ணைத் திறக்க முடியாதளவு ஒரு சோர்வு, மெல்ல எழுந்தமர்ந்து இண்டர்காமை எடுத்தவள் பார்வை அருகே உறங்கி கொண்டிருந்த கணவனை தொட்டது.
“பிரசன்னா சாப்பிட வாங்கம்மா” என்று வைதேகி அழைக்க,
“வரோம் அத்த” என்று சொல்லி வைத்தவள் ஓய்வறை சென்று வந்து பார்க்க, மகேந்திரன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். எழுப்பலாம் என்று அவனை மெல்லத் தொட மீண்டும் காய்ச்சல்.
“அய்யோ” என்று வாய்விட்டு சொன்னவள்,
“என்னங்க எந்திரிங்க” என்று சொல்ல, அவனும் நல்ல உறக்கத்தில் இருந்தான்.
“மகேந்திரன்” என்று அவன் தோளைத் தொட்டு மெல்ல உலுக்கவும்,
“அத்தை சாப்பிட கூப்பிட்டாங்க” என்றதும் உடல் ஓய்வுக்குக் கெஞ்சிய அதே சமயம், மருந்தின் வீரியத்தில் உடல் பசிக்காக கெஞ்சிட, தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான்.
தன்னையே பார்த்து நின்ற மனைவியைக் கண்டு புருவமுயர்த்தினான்.
“என்ன செய்யுது?” என்று கேட்க,
“ஒன்னுமில்ல, நீ போய் சாப்பிடு. நான் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்” என்றான்.
“இல்லை, நீங்களும் வாங்க” என்றாள்.
அவள் போகாமல் இருப்பதே மகேந்திரனுக்குப் போதுமானதாக இருக்க, மறுபேச்சின்றி இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி நெட்டி முறித்தவன் கண்கள் சிவந்திருந்தன.
பிரசன்னா காத்திருக்க ஐந்து நிமிடத்தில் மகேந்திரனும் வந்தான். தேசிகன் பெயரனின் உடல்நிலைக் குறித்து விசாரித்தவர்,
“நாளைக்கு உடம்பு பரவாயில்லைன்னா ரத்னாவைப் பார்த்துட்டு வந்திடலாமா டா? ஊர்மி கூட ஊர்ல இருந்து வந்திருக்காளாம். நம்ம பிரசன்னாவை அவன் பார்த்து நாளாச்சுன்னு கேட்டான்” என்றார்.
காஞ்சிபுரம் ரத்னவேல். முன்னாள் எம்.எல்.ஏ. தேசிகனின் உயிர்த்தோழன்.
“ஊர்மி வந்திருக்காளா?” என்ற ராஜமகேந்திரனின் முகத்தில் சின்ன சிரிப்பு. அதே பார்வையோடு மனைவியைப் பார்க்க, அவளோ தேசிகனிடம்,
“நானும் தாத்தாவைப் பார்க்க போகணும் நினைச்சேன். நாளைக்குப் போய்ட்டு வரோம் தாத்தா” என்றாள்.
தேசிகன் முன்னரே வந்திருக்க அவர் விரைவாக உண்டு முடிக்க, வித்யாதரன், வைதேகி, பிரசன்னா, மகேந்திரன் மட்டுமிருந்தனர்.
“டேய்! எங்களை கண்ணு வைக்காத” என்று கிண்டலாக சொன்ன வித்யாதரனை முறைத்தவன் அம்மாவிடம்,
“ஏன் டாக்டர். வைதேகி நைட்ல தூங்குறதுக்கு முன்னாடி காஃபி குடிக்கலாமா? நீங்க எங்கப்பாவுக்குக் கொடுக்கலாமா?” என்று கேட்க,
“ஏண்டா?” என்று வித்யாதரன் பாவமாக பார்க்க,
“அப்பா இன்னிக்கு ஆசைப்பட்டு கேட்டார். ஹாஸ்பிட்டல் காஃபி அவருக்குப் பிடிக்காது, என்னிக்காவது ஒரு நாள் தப்பில்ல எம்.பி ஸார்” என்றவர் மகனுக்கான மாத்திரைகளோடு வந்தார்.
“போடு” என்று சொல்லி தண்ணீரோடு நிற்க,
“மா, எதுக்கு இப்படி சின்ன குழந்தை மாதிரி ட்ரீட் பண்றீங்க? டேப்லெட்டை கொடுத்தா நானே போட்டுப்பேன். பிரிச்சுக் கையில நீட்டணுமா?” என்றான் ஆயாசமாக.
“சின்ன வயசுல உன்னைப் பக்கத்துல இருந்து கவனிக்க முடியல, இப்போ முடியுது. எப்பவும் எனக்கு நீ சின்ன குழந்தைதான்.” என்றவர் மகனிடம் கையை நீட்டிட மாத்திரைகளை விழுங்கியவன்,
“அதுக்குன்னு போன காலம் திரும்ப வராது. அப்போ என்னை கவனிக்காதது, கவனிக்காததுதான்!” என்று கடுப்பாக சொல்லிவிட்டு செல்ல வைதேகிக்கு வருத்தமாகிவிட்டது.
அதைப் பார்த்த பிரசன்னா,
“அத்த, அவர் எனக்குக் குத்தணும் சொல்லிட்டு போறார், உங்களை இல்லை” என்று சொல்ல,
“அந்த ராஸ்கல் அம்மா நான், எனக்குத் தெரியாதா? அவன் என்னையும் உன்னையும் சேர்த்துதான் சொல்றான்” என்றார் மகேந்திரனைப் போல கடுப்பாக.
“என்னமோ வேணும்னா நான் கவனிக்காம இருந்தேன். ஹாஸ்பிட்டலையும் பார்த்துட்டு இவனையும்தான் பார்த்தோம். இவன் புள்ளை வரப்போ இந்த பய பார்லிமெண்ட் போகாம எப்படி புள்ளையைக் கையில வச்சு சுத்துறானா பார்க்கிறேன்” என்று வைதேகி பேச, வித்யாதரன் பிரசன்னாவிடம்,
“அம்மாவும் புள்ளையும் ஒரே மாதிரி. நீ கண்டுக்காம போம்மா” என்று மருமகளை அனுப்பியவர், அவள் சென்றதும்
“அவன் பிரசன்னா இத்தன நாள் கூட இல்லன்னு கோபத்துல பேசிட்டான். நீயும் புரிஞ்சிக்காம நடக்குற வைதேகி” என்று மனைவியைக் கடிந்து கொண்டார்.
வைதேகிக்குக் கண்கள் கலங்கின, “அவன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலன்னு நமக்குக் கஷ்டமே இல்லாத மாதிரி பேசுறான், என்னால தாங்கிக்க முடியலங்க” என்றார்.
“அவன் சின்னப்பையன் விடு” என்று வித்யாதரன் மனைவியைத் தேற்றினார்.
மருத்துவமனையில் மகன் இருந்த அறைக்கு வெளியே சோஃபாவில் வெறித்த பார்வையோடு உட்கார்ந்து இருந்த அமராவதி சட்டென்று நிமிர்ந்தார்.
ஜீவபிரகாஷ் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். காக்கி உடை இல்லாது சாதாரண உடையில் இருந்தான்.
“எப்படியிருக்கீங்க அ..த்.தை?” என்று கேட்டவன்,
“அப்படி கூப்பிடலாமா?” என்று கேட்க, அமராவதி எதையும் யாரையும் மறுக்கும் நிலையில் இல்லை.
மகன் மட்டுமே பிரதானமாக இருக்க, யார் மீதும் கோபத்தை இழுத்துப் பிடிக்க கூட விரும்பவில்லை. அதைவிட ஜீவாவின் மீது கோபமில்லை.
கார்வண்ணனின் மரணத்திற்குப் பின் அமராவதி அன்பழகனைப் பார்க்கவே பிரியப்படவில்லை. தங்கள் கண்முன் இருந்தால் அவர் மாமனார் நிச்சயம் நிம்மதியாக விட மாட்டார் என்று ஒரு காரணம் இருந்தாலும், தன் கணவன் இல்லாது போக அன்பழகனும் ஒரு காரணம் என்ற எண்ணம். அவன் அப்பா செய்தது குற்றம் என்று அறிவுக்குப் புரிந்தாலும், அன்பழகன் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும், அவனுக்காகத்தானே அவன் அப்பா அப்படி செய்தார்.
தன்னையும் மீறி அவனுக்கு ஏதேனும் தீங்கு நினைத்து விடுவோமோ என்ற அச்சம். அதை நிச்சயம் அவள் கார்வண்ணன் விரும்பமாட்டான் என்று தெரியும்.
அதற்காகவே அவர்களைத் தள்ளி நிறுத்தியிருந்தாள். ஆனால் இப்போது ஜீவாவின் குரலை மறுக்க முடியவில்லை.
“தாத்தா செஞ்சதுக்கு அப்பா தினந்தினம் குற்றவுணர்ச்சியில தவிக்குறார் அத்த. திலக் நல்லாகிடுவான், அவனை இப்படி செஞ்சது யார்னு நிச்சயம் நான் கண்டுபிடிச்சிடுவேன். ப்ளீஸ் அவரைப் பார்க்க விடுங்களேன்” என்று கெஞ்சினான்.
கார்வண்ணன் இருந்திருந்தால் நண்பனின் மகன் என்று ஜீவாவைத் தாங்கியிருப்பான் என்பது சர்வ நிச்சயம். அமரா தலையசைத்து சம்மதம் சொல்ல, ஜீவா உடனே அப்பாவிற்கு அழைத்து வர சொன்னான்.
சொல்லிவிட்டு நன்றியோடு அமராவதியைப் பார்த்தவன் அங்கேயே அப்பாவின் வருகைக்காகக் காத்திருந்தான்.
அதற்குள் இன்ஸ்பெக்டர் ரமேஷிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. தள்ளி வந்து பேசினான்.
“என்ன ரமேஷ்?”
“வாட்? இதை எப்படி கவனிக்காம விட்டாங்க?” என்று கடுப்பானவன்,
“நீங்க என்னன்னு முழுசா விசாரிங்க. நான் ஒரு ஒன் ஹவர்ல அங்க இருப்பேன்” என்றவன் பேசி முடித்து நிமிர, அவன் அப்பா அன்பழகன் அங்கே நின்றார்.
தவறே செய்யாமல் தண்டனையை தினமும் சுமக்கும் அமராவதியைப் பார்க்கவும் அன்பழகனின் கண்கள் கலங்கின. வாழ வேண்டிய வயதில் கணவனை, அவன் காதலை இழந்து, அவப்பெயர் பெற்று அமராவின் கஷ்டங்களை நினைக்கையில் நெஞ்சடைத்தது.
அப்பாவின் இந்த குற்றவுணர்வு காலத்துக்கும் போகாது என்று நிஜம் அறைய, இயலாமையோடு அவரைப் பார்த்தான் ஜீவபிரகாஷ்.