Skip to content
Post Views: 2,193
கருவின் குரல்
அத்தியாயம் 13
ரிஷியின் பெற்றோர் கேஸ் கொடுத்து விட்டனர். தேவா சக்கரவர்த்தியை அழைத்து சொல்ல வந்து விட்டார்.
தனது செல்வாக்கை பயன்படுத்தி, கேஸை ஒன்றும் இல்லாமல் செய்தார்.
இருந்தும், அனிஷிற்கு ஒருமுறை கவுன்சிலிங் கொடுக்க முடிவு எடுத்தனர்.
அதன்படி, பிரபல சைல்டு சைக்காரிஸ்ட் லீனாவிடம் அழைத்துச் சென்றனர்.
லீனாவின் அறையில், முன் வரிசையில் அனிஷ் அமர, பின்வரிசையில் ஜானகி, சக்கரவர்த்தி, தேவா, சுதா அமர்ந்திருந்தனர்.
லீனா அனிஷை பார்த்து, “உங்க பெயர் என்ன?” என கேட்டார்.
பயந்தவாறே அனிஷ்கா தேவி என்றாள்.
சாக்லெட், பொம்மை எல்லாம் கொடுத்து, இயல்பு நிலைக்கு அவளை கொண்டு வந்தார் லீனா.
Advertisement
“இப்போ மறுபடியும் சொல்லுங்க, உங்க பெயர் என்ன?” என கேட்க, அனிஷ்கா தேவி — “ஆனா என்ன அனிஷ் பாப்பா அன்னு கூப்பிடாதா பிடிக்கும்!” என்றாள்.
“சரி,அனிஷ் பாப்பா உங்க வீட்டுல யார் எல்லாம் இருக்கீங்க?” லீனா.
“நானும் எங்க மம்மியும்,” என ஜானகியை காட்டினாள்.
“அப்பா என்ன ஆனாங்க?” என கேட்க, இரு விழிகளையும் உருட்டி சுற்றி இருந்தவர்களை பார்த்து விட்டு,
“அப்பா பத்தி எல்லாம் பேச கூடாதுனு அம்மா சொல்லிருக்காங்க,” என்றாள்.
“ஏன் அப்பா பத்தி பேச கூடாது?” என லீனா கேட்க,
ஜானகி குறுக்கிட்டாள். “மேம், அனிஷ்க்கு அவங்க அப்பா பத்தி எதும் தெரியாது. கொஞ்சம் மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்… நாங்க பிரிஞ்சுட்டோம்,” என்றாள்.
Advertisement
“ஓ, ஆர் யூ டிவோர்ஸி?” — லீனா.
“ஆம்,” என தலையாட்டினாள்.
“அனிஷ்க்கு எவ்ளோ ஏஜ் இருக்கும் போது பிரிஞ்சீங்க?” என அடுத்த கேள்வி.
சற்று சங்கடமாக நெளிந்து, “அனிஷ் வயிற்றில் கருவாக இருக்கும் போதே,” என்றாள்.
Advertisement
லீனா தன் இரு புருவங்களையும், “அப்படியா…” என பரிதாபமாக மேலே தூக்கினார்.
“மேரேஜ் ஆகி எவ்ளோ இயர்ல பிரிஞ்சீங்க?”
“ஒன் மந்த்,” — ஜானகி.
“வாட்ஸ் வாராங் வித் யூ? முதலில் உங்களுக்குதான் கவுன்சிலிங் கொடுக்கனும் போல!” என கூறி,
“நீங்க எல்லா இவங்களுக்கு என்ன வேணும்?” என மீதமிருந்தவர்களை பார்த்து கேட்டார் லீனா.
அனிஷ் முந்திக்கொண்டு, “இது சுதா அக்கா, இது எங்க ஹவுஸ் ஓனர், இது ஹவுஸ் ஓனர் அப்பா,” என்றாள்.
மழலை மொழி கேட்டு புன்னகைத்தவாறே, “இப்போ அனிஷ் அப்பாவை இங்க வர சொல்ல முடியுமா?” — லீனா.
“இல்லை மேம், அவரு வர மாட்டார். எங்களுக்குள்ள எந்த பேச்சுவார்த்தையும் இல்லை,” என்றாள் ஜானகி.
Advertisement
“சரி, உங்களுக்கு உங்க வீட்டுல இருந்தோ இல்ல உங்க ஹஸ்பண்ட் வீட்டுல இருந்தோ ஏதாவது ஃபினான்சியல் சப்போர்ட் இருக்கா?” என கேட்க,
சுதா, “இல்லை மேம். இரண்டு வீட்டுல இருந்தும் இல்லை. ஜானகியோட சம்பளம் மட்டுதான் அவங்க வாழ்வாதாரம்,” என்றாள்.
“எவ்வளோ சம்பளம்?” என லீனா ஜானகியை பார்த்தார்.
“பனிரெண்டாயிரம்,” என்றாள்.
“உங்க ஹஸ்பண்ட்கிட்டிருந்து ஜீவானாம்சம் வாங்க வேண்டியது தானே?” என்ற கேள்விக்கு, ஜானகி மெளனமாக தலையை கீழே குனிந்து அமர்ந்தாள்.
“சக்கரவர்த்தி சார், நீங்க எவ்வளோ பெரிய ஆளு. இந்த பொண்ணுக்காக இவ்வளவு தூரம் நீங்களே இறங்கி வந்து இருக்கீங்க, நினைக்கவே பெருமையா இருக்கு! ஆனா இந்த பொண்ணோட ஹஸ்பண்ட் பாருங்க… பெண் குழந்தையை கொடுத்துட்டு டைவர்ஸ் வாங்கிட்டு, ஜீவானாம்சம் கூட தராம இருக்கா? நீங்க ஏதாச்சும் ஸ்டெப் எடுத்து, இவங்க ஹஸ்பண்ட் கிட்டிருந்து அதை வாங்கி கொடுங்க!” — லீனா.
சக்கரவர்த்தி முகத்தில் ஈயாடவில்லை. திக்கி தடுமாறி, “சரிங்க,” என்றார்.
மீண்டும் லீனா அனிஷை பார்த்து, “அனிஷ், இன்னைக்கு ஸ்கூல என்ன ஆச்சு?” என கேட்டார்.
“நாங்க எல்லா பால் விளையாடினோம். ரிஷி எனக்கு பால் தரலே. அப்பறோம் அவ என்ன ‘அன்லக்கி அனிஷ்’னு தான் இனிமே கூப்பிடுவேன்’னு சொல்லிட்டா. அதான் அடிச்சேன். அவனுக்கு ரத்தம் வந்துருச்சு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு,” என்றாள்.
“நீங்க பண்ணுனது தப்புதானே?” — லீனா.
“ஆமா,” என்று தலையாட்டினாள்.
“இனிமே இப்படி பண்ணக்கூடாது. உங்களுக்கு ஏதாச்சும் வேணும்னா மேம் கிட்ட கேக்கனும். இல்ல வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறோம் உங்க அம்மா கிட்ட கேக்கனும். இந்த மாதிரியான பேட் விஷயங்களை செய்யக்கூடாது,” என கூறி பெல் அடித்து தனது உதவியாளரை அழைத்து,“குழந்தைகள் விளையாடும் பால் நிறைய வாங்கி வா,” என்றார் லீனா.
“அனிஷ், உங்களுக்கு நான் பால் வாங்கி தரேன். நீங்க அதை வச்சு விளையாடுங்க,” என்றார்.
“வேற என்ன எல்லாம் அனிஷ்க்கு ரொம்ப பிடிக்கும்?” என கேட்க, சிறிது யோசனைக்குப் பிறகு,“மம்மி, என்னோட பிங்கி, சுதா அக்கா, பாலா அண்ணா, அப்பறோம் பூஜா அக்கா, இப்போ ஹவுஸ் ஓனரை கூட புடிச்சு இருக்கு,” என்றாள்.
“பிங்கி யாரு? டாக் ஆ?” — லீனா.
“இல்லை, அது என்னோட சைக்கிள். நான் குறும்பு பண்ணுனே, மம்மி அதை பஞ்சர் பண்ணிட்டாங்க. நான் பர்ஸ்ட் ரேங்க் எடுத்தா சைக்கிள் ரெடி பண்ணி தருவாங்க. அப்பறோம் நானும் பிங்கியும் ஜாலியா ரவுண்ட் அடிப்போம்.
நான் பெரியவளா ஆகி வேலைக்கு போய், நானும் மம்மியும் ஒரு பெரிய வீடு கட்டி ஹாப்பியா இருப்போம். எங்க அப்பச்சி, அம்மாச்சி, மாமா, அத்தை யாரையும் எங்க கூட சேத்திக்க மாட்டோம்!” என்று கடகடவென அனைத்தையும் ஒப்பித்தாள்.
“ஏன் அவங்கள சேத்திக்க மாட்டீங்க?” — லீனா.
“அவங்களுக்கு என்னை புடிக்காது. ஏனா, நான் எங்க அப்பாவோட புள்ளையாம். என்னை ஆசிரமத்துலே விட்றேனு சொன்னாங்க. அதான் நானும் மம்மியும் இந்த வீட்டுக்கு வந்துட்டோம்,” என்றாள்.
தற்போதுதான் சக்கரவர்த்திக்கு ஜானகியின் வீட்டில் நடப்பது புரிந்தது.
“சரி, அவங்க வேண்டாம். அப்பா திரும்ப வந்தா சேத்திக்குவீங்களா?” — லீனா.
“இல்ல, டாடி பத்தி பேச கூடாதுனு மம்மி சொல்லிருக்காங்க,” என்றாள் ஜானகியை பார்த்தவாறே.
“ஜானகி, நீங்க கொஞ்சம் வெளியே இருங்க,” — லீனா.
அவள் தயக்கியவாறே வெளியே சென்றபின், “இப்போ சொல்லுங்க, அனிஷ், அப்பா வந்தா சேத்திக்குவீங்களா மாட்டீங்களா?”
கண்களில் ஏக்கம் தெரிந்தது. “ஓ, சேத்திக்குவோமே,” என்றாள்.
“சரி, உங்க அப்பா பேரு என்ன?” — லீனா.
“எனக்கு அப்பா பேரு எல்லாம் தெரியாது. ஆனா என்னோட ஐடி கார்டுல இருந்து ஸ்பெல்லிங் மெமரி பண்ணி வைச்சுருக்கேன்,” என்றாள்.
தனது பிரிஸ்கிரிப்ஷன் ஒன்றை கிழித்து, ஒரு பேனாவையும் அவள் கைகளில் தந்தார் லீனா.
அச்சுபிசிறாமல் ” எஸ். தேவராஜ் ” என்று ஆங்கிலத்தில் எழுதினாள்.
அதை பார்த்ததும் எல்லோரும் ஒரு நிமிடம் அதிர்ந்தனர், தேவா ஒரு நிமிடம் மூச்சை நிறுத்தி வெளியே விட்டான்.
சுதா அதிர்ச்சியோடு தேவாவை பார்த்தாள்.
இதுவரை அவளுள் அவன்மேல் இருந்த சகோதர உணர்வு சற்று ஆட்டம் கண்டது.
“உங்க அப்பாவை நீங்க பார்த்திருக்கீங்களா அனிஷ் ?” — லீனா.
“இல்லை, ஆனா ஒரு டைம் பாக்கனுனு ஆசையா இருக்கு,” — அனிஷ்.
“ஒரு டைம் மட்டும் போதுமா?” — லீனா.
“போது. மம்மி சொல்லிருக்காங்க டாடி நம்ம கூட எல்லா இருக்க மாட்டாங்கனு,” — அனிஷ்.
“ஏன் அப்படி சொன்னாங்க?” — லீனா.
“எங்க வீடு ரொம்ப குட்டி வீடு. ஒரு பெட்தா வைச்சிருக்கோம். அப்பறோம் மம்மி கிட்ட ஒரு ஜூபிடர் தான் இருக்கு. எங்க பீரோவும் சின்னது. டாடி டிரஸ் எல்லாம் வைக்க பத்தாது. ஆனா டாடி வந்தாருனா நாங்க எல்லாமே டாடிக்கு தருவோம். நானும் மம்மியும் கீழே தூங்கிட்டு, டாடிய பெட்ல தூங்க வைப்போம். மம்மி ஜூபிடர் கொடுத்துருவோம். நானும் டாடியும் அந்த ஜூபிடர் ல தான் ஸ்கூலுக்கு போவோம். நா நிறைய டைம் பாத்துருக்கேன். பூஜா அக்கா, பாலா அண்ணா கூடதான் காலேஜ் போவாங்க. எனக்கு எங்க டாடி கூட பைக்ல போகனுனு ரொம்ப நாள் ஆசை,” என்றாள்.
தேவாவின் கண்களில் கண்ணீர் வந்ததை சக்கரவர்த்தி குறித்துக் கொண்டார்.
எந்த வாழ்க்கைக்காக தற்போது தேவா ஏங்கிக்கொண்டிருக்கிறானோ, அந்த வாழ்வு அவன் ஆசைப்படி கண்முன்னே இருந்தது.
ஆனால் அனுபவிக்கும் தகுதியை அவன் இழந்திருந்தான்.
ஜானகியை உள்ளே அழைத்து, “உங்க மேலையும் கொஞ்சம் ஃபால்ட் இருக்கு ஜானகி. குழந்தையை ரொம்ப கன்ட்ரோல் செய்யாதீங்க. அதுவே அவங்க அடமன்ட் ஆ மாற நிறைய சான்ஸ் இருக்கு. நீங்க சைக்கிளை பர்ஸ்ட் ரெடி செஞ்சு தாங்க. அப்பறோம் அனிஷ் அப்பா கிட்ட பேசி, வீக்லி ஒன்டே அனிஷையும் அவரையும் மீட் பண்ண வைங்க. எப்போ எந்த ஹெல்ப் நாலும் தயங்காம என்னை கான்டேக்ட் பண்ணுங்க,” என தன் விசிட்டிங் கார்டை கொடுத்தார்.
“நீங்களும் செகண்ட் மேரேஜ் பண்ணுங்க. ஒருமாத வாழ்க்கையிலே என்ன வாழ்ந்து இருக்கப் போறீங்க? பார்க்க யங்கா இருக்கீங்க,” என சொல்ல,
நிமிர்ந்து திடமான குரலில், “என் ஆயுள் முழுவதுமான வாழ்க்கையை அந்த ஒரு மாதத்திலேயே வாழ்ந்து முடித்து விட்டேன். எனக்கு துணை தேவை இல்லை. இனி என் வாழ்வு என் மகளுக்காக மட்டுமே,” என்றாள்.
தேவாவிற்கு, ஜானகி தன் முகத்தில் எச்சிலை உமிழ்ந்ததைப் போன்ற உணர்வு. சக்கரவர்த்தி, “இப்படி ஒரு மகனை பெற்றதற்காக சரியான தண்டனையை ஜானகி தனக்கு தந்து விட்டாள்,” என குறுகினார்.
இன்னும் சில கவுன்சிலிங் பெற்றபின் அவர்கள் வீட்டிற்கு திரும்பினர்.
சுதா ஜானகியிடம், “தேவாதான் உன் கணவனா?” என கேட்டாள். தலையை நிமிராமல், “ஆம்,” என்றாள்.
“ஏதோ கணவனுடன் தகராறு, பெற்றவர்கள் துணை இல்லை, கையில் பிள்ளையோடு இருக்கேனு நானும் நினைச்சேன். ஆனா உன்னை மாதிரி எல்லாம் திடமா என்னாலே இருக்க முடியாது. இனி நீ உன் வாழ்க்கையிலே ஜெயிக்கிறதுதான், அவங்களுக்கு நீ தரும் பதிலடி,” என்றாள்.
நாட்கள் செல்ல, ரிஷியும் உடல்நிலை தேறினான். பள்ளியில் மற்ற குழந்தைகளிடம் இருந்து அனிஷை தனிமைப்படுத்துவதாக ஜானகி நினைத்தாள்.
அதுமட்டுமின்றி, பள்ளி மேனேஜ்மென்ட் பக்கமிருந்து இன்னும் ஆறுதலான வார்த்தையோ, கோப வார்த்தையோ வரவில்லை.
மாற்றாக, “இவர்கள் தானே…” என்ற அலட்சிய பார்வை மட்டுமே வந்தது.
அதை ஜானகி விரும்பவில்லை.
அனிஷை வேறு பள்ளியில் சேர்த்து விட்டு, இவளும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கேசியராக சேர்ந்தாள்.
அதுவரை மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்பியவள், இன்று வர பத்து ஆகிறது.
மகளுடன் நேரம் செலவிடுவது குறைந்தது.
அன்று இரவு, ஜானகி வேகமாக வீட்டிற்கு வர, வாசலில் அனிஷின் சைக்கிள் பஞ்சர் அடிக்கப்பட்டு, ஓட்டுவதற்கு தயாராக நின்றது.
“யார் இதை சரி செய்தது?” என்ற யோசனையுடன் வீட்டிற்குள் நுழைய, தேவாவும் அனிஷும் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்…
—கருவின் குரல் ஒலிக்கும்…..
error: Content is protected !!