Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நமக்காக வாழ்வோம் வா

நமக்காக💞13

எப்படி உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

உறங்கி எழுந்தவள் கொட்டாவி விட்டப்படி அருகில் இருந்த மொபைலை எடுத்து பார்க்க மணி நான்காக இன்னும் ஐந்து நிமிடமே இருந்தது.

“இவ்வளவு நேரமா தூங்கிட்டோம்?” கூச்சமாக இருந்தது அவளுக்கு.

பொதுவாக பகலில் தூங்கும் வழக்கம் அவளுக்கு இல்லை. இன்று உறங்கிவிட்டாள்.



Advertisement

போனை பார்த்தவள் தவறிய அழைப்பில் இருக்கும் கணவனின் எண்ணை கண்டு தலையில் அடித்துக் கொண்டாள்.

அய்யோ… ரெண்டு முறை கால் பண்ணியிருக்காரே…. “இப்படியா சுபி தூங்குவ?” தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

நாமே அழைப்போம் என்று அவள் அழைத்துவிட்டாள்.

Advertisement

நம்பர் பிஸி என்று வந்தது. மீண்டும் அழைப்பது நாகரிகம் அல்ல என்று எண்ணியவள் எழுந்து முகம் கழுவ சென்று விட்டாள்.

Advertisement

முகம் கழுவி வந்து கண்ணாடி முன் நின்று முடியை ஒதுக்கிக் கொண்டிருந்தாள்.

மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ

ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீஎ

Advertisement

ந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்

எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய்

மன்னவா.. ஓ மன்னவா .. வா வா

மொபைல் பாடி அழைக்க சிரித்து விட்டாள் பெண்ணவள்.

“கணவனுக்காக அவள் அமைத்த காலர் டியூன் இது”. அதுவும் மதியம் தான் செட் பண்ணினாள். இப்போது அந்த பாட்டு ஒலிக்கவுமே பக்கென்று சிரித்து விட்டாள்.

ஹலோ என்று காதில் வைத்தாள்.

ஹலோ…. என்ன மேடம் நல்ல தூக்கமோ என்றான்.

சும்மா படுத்தேன்…. அப்படியே கண்ணசந்துட்டேன் என்றாள்.

பகலில் தூங்குறது நல்ல பழக்கம் இல்லை சுப்பு என்றான்.

“நைட்ல தூங்க விட்டா தானே….” பட்டென்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

ஹம்ம்ம்ம்ம்ம்….. மென்மையாய் சிரித்துக்கொண்டான்.

தூங்க விடாம என்ன பண்ணினேன்? கிசு கிசுப்பாய் கேட்டான்.

பேச்சை மாற்றும் விதமாக

நீங்க சாப்பிட்டீங்களா?என்றாள்.

“ம்ம்ம்ம்ம் ஆச்சு!” என்றான் சிரிப்புடன்.

சரி போய் செடிகளுக்கு தண்ணீர் விடு. நான் சீக்கிரம் வர பார்க்கிறேன் என்றான்.

“———————–“

அவ்வளவு செடிகள் இருந்தது. மொட்டு விட்ட மல்லிகையை நெருங்கவே அவ்வளவு ரம்மியமாய் இருந்தது.

மயில் மாணிக்கத்திற்கு அழகாய் பந்தல் போட்டிருந்தனர். பிளாஸ்டிக் இலைகளோ என்று எண்ணும் அளவிற்கு அவ்வளவு பசுமையாய் கண்ணை கவர்ந்தது அதன் இலைகள்.

கனகாம்பரத்திலே அத்தனை விதம் பூத்திருந்தது.

பெண் பிள்ளை இல்லாத வீட்டில் இவ்வளவு அழகாக தோட்டம் வைத்திருக்கிறார்களே…. ஆச்சரியப்பட்டு போனாள்

புல், பூண்டு இல்லாமல் தோட்டம் அவ்வளவு சுத்தமாக இருந்தது.  மல்லி,கனகாம்பரம், ரோஜா, செம்பருத்தி, நந்தியாவட்டை செடிகள் நிறைந்திருந்தது.

மிளகாய் செடி, புதினா, மல்லி என்று கூட சிறு சிறு பாத்திகள் இருந்தது.

கவனமாய் ஹோஸ் போட்டு செடிகளுக்கு தண்ணீர் விட்டவள். சந்தன முல்லை கொடியின் கீழ் கண்மூடி ரசித்து நின்றாள்.

மாலை நேரத்தின் அழகை இன்னுமாய் சுகிக்க வைத்தது விரியத் தொடங்கிய மொட்டுக்கள்.

மருமகளுக்கு டீ கொண்டுவந்து கொடுத்த பாப்பாத்தி அரும்பு பறிக்க கையோடு கிண்ணமும் கொண்டு வந்திருந்தார்.

நான் பறிக்கிறேன்த்த என்றவள் டீயை குடித்துவிட்டு ஜாதி முல்லை, சந்தன முல்லைகளை பறித்து போட்டாள்.

பறித்த மொக்குகளை மாமியாரும் மருமகளுமாய் தொடுக்க தொடங்கினர்.

சுபிக்கு போன் அழைப்பு. இப்போ தானே பேசினார் வெட்கத்துடன் எடுத்து பார்த்தாள் அழைப்பில் தேவிகா.

ஹலோ அக்கா… என்றாள்.

“ஹலோ என் தங்கச்சி சுப்ரஜாவா? இல்லை வேறு யாருமா?” சிரிப்புடன் கேட்டாள் தேவிகா.

அக்கா…. சிணுங்கினாள்.

“மேடமுக்கு அக்கா ஞாபகம் இருக்கா? “சீண்டினாள்.

“அக்கா டூ மச்சா பண்ணாத…. “

“யாரு நான் டூ மச்சா? “நாலு நாள் ஆகுது மாமியார் வீட்டுக்கு போய் ஒரு போன் பண்ணியா நீ?

அய்யோ சாரிக்கா…. தலையை சொரிந்தாள்..

இந்த மாப்பிள்ளை வேண்டாம்னு அழுது கரைந்த எங்க சுபி இப்போ எங்களையே மறந்துட்டா போலயே…

போக்கா… வெட்கத்தில் சிணுங்கினாள்.

அம்மாட்ட பேசினியா?

ம்ம்ம்ம் நேத்து பேசினேன். அண்ணன் கூட கால் பண்ணுச்சுக்கா.

உனக்கு அங்கே ஓகே தானே? பொறுப்புள்ள தமக்கையாய் விசாரித்தாள்.

நான் இங்கே நல்லா இருக்கேன்க்கா.

அப்புறம் இந்த குயினோட கிங் எப்படி இருக்காரு?

அவர் இன்னைக்கு டியூட்டியில் ஜாயின் பண்ணிட்டாரு.

ஓ….. உனக்கு போரிங்கா இருக்கா?

அப்படிலாம் இல்லைக்கா.

இந்த வீக் எண்ட் திருச்சி வாங்க. உங்க மாமா விருந்துக்கு முறையா இன்வைட் பண்ணுவார்.

லக்க்ஷனா ஸ்கூல் முடிந்து வந்தாச்சா?

ம்ம்ம்ம்ம் மேடம் டிராயிங் பண்ணிட்டு இருக்காங்க.

லக்க்ஷி சித்தி பேசறா…. மொபைலை மகளிடம் கொடுத்தவிட்டு போனாள் தேவிகா.

பெரிய மனுஷி போல் பேசும் ஐந்து வயது அக்கா மகளிடம் வாயடித்துக் கொண்டே கொஞ்சம் மலரத் தொடங்கிய அரும்பை கட்டினாள்.

“————————“

தொடுத்த சரத்தை சுவாமி படத்துக்கும் விளக்கிற்கும் வைத்து விளக்கேற்றி சாமி கும்பிட்டாள்.

மலரத்தொடங்கிய சரத்தை தானும் சூடிக் கொண்டவளுக்கு ஒரு சிலிர்ப்பு.

அத்தை என்ன டிபன் பண்ண போறீங்க என்றாள்.

விபரமாய் பேசும் மருமகளை பார்த்து உள்ளுக்குள் நகைத்துக் கொண்டார்.

சப்பாத்தி செய்வோமா என்றார் பாப்பாத்தி.

சரிங்கத்த…. நான் மாவு பிசைந்து திரட்டி தரேன் நீங்க குருமா வச்சிடுங்க என்றாள் உஷாராய்.

மாமியாரும் மருமகளும் பேசிக் கொண்டே வேலை செய்தனர்.

கொஞ்சமா மாவு பிசைஞ்சுக்கோம்மா உங்க மாமனாருக்கு சப்பாத்தி எல்லாம் மெல்ல முடியாது என்றார்.

நீங்களே அளவா எடுத்து வைங்க என்றாள்.

அத்தை பெரிய மாமா பெங்களுரிலே செட்டில் ஆகிட்டாரா?

இல்லம்மா சென்னையில் தான் இருந்தாங்க. நல்ல சம்பளத்தில் பெங்களுருவில் வேலை கிடைக்கவே  போயிட்டாங்க. போய் ரெண்டு வருஷம் தான் ஆச்சு.

அத்தை தீபாக்கா உங்களுக்கு சொந்தமா?

ம்ம்ம்ம்ம்… உன் மாமனாரோட ஒன்னு விட்ட தங்கச்சி பொண்ணு என்றார்.

அப்படியா என்று கேட்டுக் கொண்டே மாவை அடித்து பிசைந்தாள்.

தீபா தங்கச்சி நித்யாவை மன்னருக்கு பார்த்தோம். ஒத்துவரல விட்டுட்டோம் என்றார்.

ஏன் என்று கேட்க துடித்த நாவை அடக்கிக் கொண்டு ம்ம்ம்ம்ம் என்று கேட்டு கொண்டாள்.

மாமியார் குருமா வைக்கும் போது பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அம்மா சமைக்கும் போது ஆயிரம் முறையாவது கூப்பிடிருப்பார். பக்கத்தில் வந்து பாரு… கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கோன்னு கெஞ்சி அழைப்பார்.

போம்மா சமையல் என்ன கம்ப சூத்திரமா யூட்டியுப் பார்த்து செய்துட்டு போறேன் என்பாள்.

இன்று மாமியார் சமையலை கண்ணும் கருத்துமாய் கவனிக்கிறாள். திருமணம் என்ற ஒற்றை நிகழ்வு எவ்வளவு பெண்கள் வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது!

அம்மாடி நான் சாப்பிட எட்டு எட்டரை ஆகும். நீ சாப்பிடு!

அவர் வரட்டும்த்த என்றாள்.

அவனை எதிர் பார்க்கிற பழக்கம் வச்சுக்காதம்மா அப்புறம் தேவையில்லாம மனசு சங்கடப்படும். சொன்ன நேரத்துக்கு வர வேலையா பார்க்குறான்? போக போக பழகிப்ப…

சன் டிவியில ராமாயணம் போட்டுடுவான். நான் போய் பார்க்கிறேன் அவர் போய்விட்டார்.

பூமாலையும் தவறாமல் ராமாயணம் பார்ப்பார். கணவன் மனைவி இருவருமாய் ராமாயணம் பார்க்க அமர்ந்துவிட்டனர்.

ஏழு மணி கூட ஆகாம என்னத்த சாப்பிட என்று யோசித்தவள் தங்கள் அறைக்கு போய்விட்டாள்.

போரடிக்குது…. எவ்வளவு நேரம் மொபைலை நோண்டுறது… சலிப்புடன் அறையை சுற்றி வந்தாள்.

ஜன்னலை திறந்து வைத்து தோட்டத்தை பார்க்க ஆரம்பித்தாள்.

அன்னம்…. அன்னம் என்று அடுத்த சீரியலுக்கான பாடல் ஒலித்தது.

நவமணியும் சீரியல் பைத்தியம் தான். இந்த அம்மாங்க எப்படி தான் அலுக்காம சீரியல் பார்க்கிறாங்களோ…. எல்லா சீரியலும் ஒன்னு போல தானே இருக்கு. நாலு அண்ணன் தம்பி, இல்லைனா நாலு அக்கா தங்கச்சி. வீட்டுக்குள்ளே அழகா மேக்கப் போட்ட வில்லி, பழி போடறது, பழி வாங்குறது ஜெயிலுக்கு போறது, ஹீரோயின் கோயில் பக்தினு செண்டியை பிழியறது. ஹீரோ கல்யாணத்தை ஒரு வருஷமா காட்டுறது. ஹீரோயினை பிள்ளைதாய்ச்சியா ரெண்டு வருஷம் காட்டுறது. அட போங்கடா நீங்களும் உங்க சீரியலும்…. அமைதியாக உட்கார்ந்து கொண்டவள் மன்னர் எப்போ வருவான் என்று சுவர் கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிங்கப்பெண்ணே போய் கொண்டிருந்தது. இன்னும் காணோமே…சரி நாம போய் சாப்பிடுவோம் என்று அவள் கிச்சனுக்குள் நுழைந்தாள்.

சப்பாத்தியை அவள் தேய்த்துக் கொண்டிருக்கும் போதே மன்னர் வந்துவிட்டான்.

கிச்சனுக்குள் உருட்டும் சத்தம் கேட்கவே நேரே அங்கு நுழைந்துவிட்டான்.

சந்தன வண்ண சுடிதார் அணிந்திருந்தாள். தோளில் மலர்ந்து இதழ் விரித்த ஜாதி மல்லி மணம் பரப்பிக் கொண்டிருந்தது. மைசூர் சாண்டல் சோப்பின் நறுமணம் இன்னும் நாசியை நிரப்பியது.

மெல்ல பின்னால் வந்து மல்லியின் வாசம் பிடித்தான்.

“போலீஸ் நாயா? “திரும்பி பாராமல் சிரிப்புடன் கேட்டாள்.

“அடியேய்… “சினந்து விட்டான்.

“மோப்பம் பிடிக்குறது போலீஸ் நாயான்னு கேட்டேன்…. “மீண்டும் உசுப்பி விட்டாள்.

“குரும்பூர்காரிக்கு குறும்பை பார்த்தியா?” நீ இந்த போலீஸ்காரனை நாய்ன்னு சொன்னாலும் சொல்லுவ… கழுத்தில் கை போட்டு இழுத்து கன்னத்தை கடித்தான்.

“விடுங்க அத்தை வரப்போறாங்க…” திமிறினாள்.

வர மாட்டாங்க. “திருடன் நுழைஞ்சாலே இந்நேரம் வர மாட்டாங்க. மகன் நுழைஞ்சா வந்துடுவாங்களா? ” மீசையால் அவள் கன்னத்தை உரசினான்.

“சீக்கிரம் வந்துட்டீங்க….”அவன் பிடிக்குள் இருந்து கொண்டே கிசுகிசுப்பாய் கேட்டாள்.

புது பொண்டாட்டி காத்துட்டு இருப்பாளே…. அதே குரலில் சொன்னான்.

அப்போ பழசாகிட்டா? முறைப்புடன் கேட்டாள்.

ஸ்டேஷனே கதின்னு கிடக்க வேண்டியது தான் என்றான்.

போய்யா… அவன் விலாவில் இடித்து தள்ளிவிட்டு தேய்த்து வைத்த சப்பாத்திகளை சுட்டெடுக்க ஆரம்பித்து விட்டாள்.

பயம் விட்டுப் போச்சு! வலிக்காமல் அவள் கன்னத்தை பற்றி திருகினான்.

“நான் ஏன் பயப்பட்டணும்?” இடுப்பில் கையூன்றி கேட்டாள்.

அப்போ உனக்கு பயம் இல்லை…. சிரித்துக்கொண்டே கேட்டான்.

இல்லை என்றாள்.

கட்டிலுக்கு வா சொல்றேன் என்றான் கண்சிமிட்டலுடன்.

அடச்சீ… சப்பாத்தி தேய்க்க வைத்திருந்த கோதுமை மாவை அள்ளி அவன் முகத்தில் பூசி விட்டாள்.

ஏய்… சிணுங்கியவன் கன்னத்தை தேய்த்துக்கொண்டே குளிக்க போய்விட்டான்.

“——————“

“அப்புறம் இன்னைக்கு நாள் எப்படி போச்சு? ” மனைவியின் தோள் சாய்ந்து சுவாரஸ்யமாய் கேட்டான்.

அத்தை பின்னாடியே வால் பிடிச்சு சுத்திட்டு இருந்தேன். கொஞ்சம் தூங்கினேன், தோட்டத்துல ரொம்ப நேரம் இருந்தேன்.அரும்பு பறிச்சு கட்டினேன், அக்கா போன் பண்ணாங்க.அப்படியே நேரம் போயிடுச்சு என்றாள்.

புக்ஸ் படிக்க பிடிக்கும்னா நம்ம தெருவில் லைப்ரரி இருக்கு அங்கே மெம்பரா சேர்த்து விடவா? என்றான்.

ம்ம்ம்ம்ம் தேங்க் யூ  என்றாள்.

அப்புறம் என்ன ஸ்பெஷல்? என்றான் அவள் கன்னத்தில் கோடிழுத்தபடியே….

உங்கட்ட ஒன்னு கேட்கணும்னு இருந்தேன் என்றாள் இழுத்தபடி.

அதென்ன ஒன்னு? எத்தனை கேட்டாலும் கொடுப்பேன் என்றான் அவள் உதட்டை மென்மையாய் வருடியபடி.

அய்ய…. நினைப்பை பாரு! அவன் கரத்தை தட்டிவிட்டவள் தீபாக்கா தங்கச்சியை உங்களுக்கு பார்த்தாங்களா? என்றாள்.

ம்ம்ம்ம்ம்ம் எங்கெங்கோ பொண்ணு தேடி அலைஞ்சுட்டு இருந்தாங்க அப்பா சொன்னாரு தீபா தங்கச்சியை கேட்கலாம்னு.

பொண்ணு நல்லா இருப்பா… சரி கேளுங்கன்னு சொன்னேன்.

“நல்லா இருப்பான்னா? “க்ஷண நேரத்தில் முகம் மாறியது சுப்ரஜாவிற்கு.

“நல்லா இருப்பான்னா நல்லா இருப்பா” என்றான் உயர்த்திய குரலில்.

சரி ஏன் செட்டாகலை?

இப்போ இந்த பேச்சு அவசியமா? விருப்பமின்மையை குரல்வழி கடத்தினான்.

சொல்லுங்க! ஏன் அந்த பொண்ணு செட் ஆகல?

தெரியல என்றான் அசட்டையாய்.

அது எப்படி சொந்தத்துக்குள்ள காரணம் தெரியாம போகும்?

ஜாதகம் பொருந்தலையா? பதில் தெரிந்து கொள்ளும் முனைப்பு அவளுக்கு.

தெரியலன்னு சொன்னேனே….. என்றான் அழுத்தமான விரும்பாத குரலில்.

அது எப்படி காரணம் தெரியாம இருக்கும்?ஒரு வேளை போலீஸ் கான்ஸ்டபில் வேண்டாம்னு தட்டி கழிச்சிட்டாங்களோ… நான் தொக்கா வந்து மாட்டிக்கிட்டேனோ?

அவள் கேட்ட தொணியும் அதில் இருந்த குமுறலும் நிச்சயம் விளையாட்டாய் பேசியது போல் இல்லை.

சட்டென்று அவளை விலக்கியவன் எழுந்தமர்ந்தான்.

அவன் செயலில் விக்கித்து போனாள்.

என்னங்க…. அது நான்… சும்மா தான்…. எச்சில் விழுங்கினாள். பேச்சின் வீரியம் அவளுக்கே புரிந்துவிட்டது.

உன்னை கூட நிறைய பேர் வந்து பொண்ணு பார்த்துட்டு வேண்டாம்னு சொல்லியிருக்காங்களே…. ஏன்?

அவன் ஒற்றை கேள்வியில் உடைந்து விட்டாள்.

இப்படி சுருக்கென்று கேட்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

நல்ல வேலையில் உள்ள மாப்பிள்ளைகள் அவள் படிப்பை காரணம் காட்டியே மறுத்து சென்றனர் அல்லவா?

அவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. கண்கலங்க உறைந்து அமர்ந்து விட்டாள்.

இதை வாயால் கெடுவது என்று சொல்லலாமா? இல்லை அறியாமை என்று கொள்ளலாமா?

—————தொடரும்————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!