Skip to content
Post Views: 1,580
அத்தியாயம் 10
கொள்ளை சந்தோஷம் முகத்தில் கொட்டி கிடக்க அலுவலகத்தின் கண்ணாடி கதவை திறந்த ஆராத்யா கண்முன் கண்டவனை பார்த்து உறைந்து நின்றிருந்தாள்.
Advertisement
“சார் நிஜமா அப்படி யாரும் இங்க வேலை பாக்கல!” விக்ரம் புதியவனிடம் எரிச்சலாய் சொல்லிக் கொண்டு இருக்க,
“உங்களுக்கு தெரியலைனு சொல்லுங்க.. என் குட்டி இங்க தான் வேலை பாக்குறதா சொன்னாங்க.. எப்ப வருவா?” என்று கேட்டவன் பேச்சில் மேலும் எரிச்சல் வர,
Advertisement
Advertisement
“இன்னும் அரை மணி நேரத்துல எல்லாரும் வந்துடுவாங்க சார்.. அப்ப கேட்டு தெரிஞ்சுக்கோங்க..” என்ற விக்ரம்,
‘லூசு மாதிரி கேட்டதையே கேட்டுட்டு இருக்குறான்’ என்று முணுமுணுத்து அவனை கண்டு கொள்ளாமல் தன் இடத்தில் அமர போனவன்,
Advertisement
“வா ஆரா!” என்றான் வாசலில் நின்றவளைப் பார்த்து.
அதில் அந்த புதியவனும் வாசல் பக்கம் திரும்பிப் பார்த்தவன், “குட்டி!” என்று அழைக்க, அதிர்ச்சியில் நின்றவள் காதை மூடிக் கொண்டாள் அந்த அழைப்பை கேட்டு ஆராத்யா.
“யார்ரா இவன்!” நினைத்த விக்ரம் குழம்பி நிற்க,
“எப்படி இருக்க குட்டி? இப்படியா சொல்லிக்காம வருவ? உன்னை எங்க எல்லாம் தேடுனேன் தெரியுமா?” என்று கேட்டபடி வாசல்நோக்கி வர, விக்ரமும் வேகமாய் அருகில் சென்றான் ஆராத்யாவிடம்.
“உனக்கு தெரிஞ்சவங்கள ஆரா?” விக்ரம் அந்த புதியவன் அருகில் நின்று கேட்க, பயத்தில் வியர்த்து நின்றவள் அருகில் சுற்றிலும் பார்த்தாள். தேடினாளோ?
“கேட்குறாங்க இல்ல.. சொல்லு குட்டி.. நான் உன் மாமானு சொல்லு.. கல்யாணம் பண்ணிக்க போறவன்னு சொல்லு!” என்றவன் பேச்சில் காதோடு கண்களையும் மூடிக் கொண்டவள் கண்ணாடிக் கதவின் ஒருபுறம் பயந்து ஒட்டி நிற்க,
“இங்க வா குட்டி! என்கிட்ட வா!” என்று அவன் அருகில் வர முயற்சிக்கவும்
“கிட்ட வராத!” என்றாள் வாயை திறந்து.. ஒற்றை கையை நீட்டி அவனை தடுத்தவள் பயந்து கைப்பயை துழவ,
“ஆரா! யார் இது? வாட் ஹப்பெண்ட்?” என்ற விக்ரமும் குழப்பமாய் பார்த்து,
“ஹேய் யார் நீ? என்ன வேணும் உனக்கு?” என வந்தவனிடம் கேட்க,
“அதை என் குட்டி சொல்லுவா.. என்ன குட்டி நீ? எங்கிட்ட போய் பயந்துகிட்டு…” என்றவன் அடுத்த அடி எடுத்து வைக்க,
“அங்கேயே நில்லு டா.. இல்ல… இல்ல…” மூச்சு வாங்க கூறியவள் கைப்பை கீழே விழ,
“குட்டி!” என்று வெகு அருகில் குரல் கேட்கவும், தன் ஒரு கையில் கிடைத்ததைக் கொண்டு மறுகையில் ஆராத்யா கண்களை மூடி கீறலிடவும், ஆராத்யா சாய்ந்திருந்த கண்ணாடி கதவை திறந்து ரகு வரவும் சரியாய் இருந்தது.
ரகு மேலேயே சாய்ந்த ஆராத்யாவை எதிர்பாராமல் “ஹே!” என்று பிடித்தவன் ஆராத்யா தான் என்றதும் என்னவென்று பார்க்க, கைகளில் இரு சொட்டு ரத்தம் சொட்ட யாரென்று கூட பாராமல் அவனில் இருந்து பிரிந்து அவன் பின்னே சென்று நின்று கொண்டாள் பயத்தில் கையால் அவன் சட்டையை தோளோடு இறுகப் பற்றியபடி.
“அய்யோ குட்டி! நீ வா! நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.. நீ போய் வேலை எல்லாம் பார்த்துகிட்டு..” என்றவன் ஆராத்யா அருகே வர முயல,
ரகு அவளின் பயந்த விழி, வியர்த்த முகம் அதை விடவும் அவன் சட்டையை அவள் பற்றியிருந்த விதம் என பார்த்து முன்னே பார்த்த போது தான் இவ்வாறு கூறி இருந்தான் அவன்.
“ஹூ ஆர் யூ? எப்படி உள்ள வந்த?” என்று ரகு கேட்டவன், விக்ரம் இன்னும் குழப்பத்தில் நிற்பதை பார்த்து,
“விக்ரம்!” என்று அழைக்க,
“ஐ டோன்ட் க்நோவ் சார்! உள்ள வந்து குட்டிய பாக்கணும் குட்டிய பாக்கணும்னு சொல்லி கலாட்டா பண்ணாத குறை.. இப்ப ஆராத்யாகிட்ட..” முழுதாய் சொல்ல தெரியாமல் அவனும் குழப்பத்தில் பார்க்க,
“என்கிட்ட கேளுங்க சார்! நான் பரமசிவம்.. குட்டியோட மாமா!” என்று கூறியபோது, இன்னும் தன் தோளை இறுகப் பற்றிய ஆராத்யாவின் கை வலிமையில் அவள் பயத்தை முழுதாய் உணர முடிந்தது ரகுவிற்கு.
“லுக்! இது ஆஃபிஸ்! அன்ட் அவங்களுக்கு உங்க கூட வர விருப்பம் இல்லை.. எதுவா இருந்தாலும் வெளில பேசிக்கோங்க!” என்று ஆராத்யாவிற்காக யோசித்து நிதானமாய் ரகு கூற,
வாசலில் ரகுவும் ரகுவை அழுத்தமாய் பற்றிக் கொண்டு ஆராத்யாவும் நின்றதால் அவர்களுக்கு பின் அலுவலகம் வந்த அனைவரும் சலசலத்து வெளியில் நின்றன.
பிரேம் கார்த்திகாவும் அங்கே நிற்க, “என்ன ப்ரோப்லேம்?” என்று முன்னே சென்ற பிரேம் அங்கே ரகு, ஆராத்யாவைப் பார்த்துக் அருகில் வர,
“என்ன பேசுறது? அவ என் குட்டி.. நான் தான் அவளை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. அவளுக்கு உன் வேலை எல்லாம் வேண்டாம்.. குட்டி! வா போவோம்” என்று அருகே வர,
“செக்யூரிட்டி!” என்று சத்தமாய் அழைத்தான் ரகு.
“யோவ்! நீ யாரை வேணா கூப்பிடு.. நான் என் குட்டியோட தான் போவேன்!” அவனும் நிற்க,
“விக்ரம்! போலீஸ்க்கு கால் பண்ணு!” என்ற ரகு,
“வெயிட்!” என்று கூறி தானே மொபைலை கையில் எடுக்க,
“யோவ்! நான் அவ மாமா.. என்ன சொல்லுவ போலீஸ்ட்ட? பூச்சாண்டி எனட்டயேவா?” என்று பரமசிவம் கேட்க, கோபத்தில் கையை இறுக்கமாய் மூடி திறந்தவன்,
“ஆரா!” என்று அழைத்து தன் முகத்துக்கு வெகு அருகே பின்னால் தெரிந்த அவளின் முகம் பார்க்க,
“இல்ல.. இல்ல.. நான் போ மாட்டேன்.. எனக்கு யாரும் இல்ல.. நான் போ மாட்டேன்..” என்றவள் ரகுவின் தோளில் அத்தனை அழுத்தமாய் பிடித்து சட்டையிலேயே முகத்தை மறைத்து அவன் பின்னால் புதைந்து நின்று கொள்ள,
“போலீஸ் கூப்பிட்டா… முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க விருப்பம் இல்லாத பொண்ணை கம்பல் பண்றதுக்கு.. போறியா இல்ல கூப்பிடவா?” என்றவன் இழுத்து வைத்த நிதானம் அங்கிருந்தோருக்கு புரிய வாய்ப்பில்லை.
“குட்டி…” என்று அவன் உறும, இவள் கைகளின் அழுத்தம் கூடிக் கொண்டே சென்றது ரகுவினுள்.
“செக்யூரிட்டி!” என்று மீண்டும் அத்தனை கோபத்தோடு கர்ஜனையாய் ரகு அழைக்க,
“சார் செக்யூரிட்டி அங்க இல்ல..” என்று பிரேம் வர,
“நான்சென்ஸ்!” என்றவன் அலைபேசியை எடுத்து எண்களை அழுத்த,
“டேய் யாரு நீ? ஆபீஸ்ல வந்து ப்ரோப்லேம் பண்ணிட்டு இருக்க?” என்று பிரேம் அந்த புதியவன் அருகில் சண்டைக்கு செல்வதை போல நெருங்க, உதவிக்கு விக்ரமும் வர, பின்னே நின்ற மற்ற ஆட்களுமாய் வரவும், தன் பின் ஒடுங்கி நின்றவள் கைகளைப் பற்றி அழுத்தம் கொடுத்து அவளோடு அதே நிலையில் ஓரமாய் ரகு நகர, கைகலப்போடு அவனை வெளியே இழுத்து சென்றனர் மற்றவர்கள்.
“ஆரா!” என்று வந்து கார்த்திகா ஆராத்யாவைப் பிடிக்க, கார்த்திகாவின் கைகளில் மயங்கி சரிந்தாள் ஆராத்யா. அவள் கைகளின் ரத்தம் முழுதும் கரையாய் ரகுவின் சட்டையினில்.
“ஓஹ் ஷிட்!” ரத்தத்தை பார்த்த ரகு பதறி, எப்படி எங்கு ரத்தம் என்று பார்க்க, அவள் கைகளில் தான் வடிந்து கொண்டிருந்தது.
விஷால் அப்போது தான் வந்தவன் அந்த பரமசிவத்திடம் பேச்சு வார்த்தையில் இருக்க, மற்றவர்களும் அங்கே சண்டைக்கும் நிற்க, பெண்கள் என சிலரே இங்கே.
அதற்குமேல் தாமதிக்காமல் கார்த்திகாவின் மடியில் கிடந்தவளை பூவாய் தூக்கி தன் அறைக்கு வந்தவன் அங்கிருந்த டேபிளில் அவளை பத்திரமாய் இட, பின்னோடே கார்த்திகாவும்.
தன்னிடம் இருந்த கைக்குட்டை கொண்டு ரத்தம் வரும் இடத்திற்கு சற்று மேலே இறுக்கமாய் கட்டியவன், மொபைலில் மருத்துவருக்கு அழைத்து வர வைத்தான்.
“விக்ரம் வர சொல்லுங்க கார்த்திகா!” என்றும் ரகு கூற, அப்பொழுது தான் பரமசிவத்தை அடித்து விரட்டிவிட்டு உள்ளே நுழைந்திருந்தனர் மற்றவர்கள்.
“டேய்! என்ன டா நடந்துச்சு? ஆரா இஸ் ப்ளீடிங்!.. என்ன ஆச்சு?” என்று வெளியே வந்த கார்த்திகா விக்ரமிடம் கேட்க,
“சொல்றேன் கார்த்தி.. ஆரா எங்க?” என்று விக்ரம் கேட்க, விக்ரம், பிரேம், கார்த்திகா மூவரும் ரகு அறைக்கு வரும் பொழுது விஷாலும் அங்கே நின்றிருந்தான்.
மருத்துவரும் உடனே வந்துவிட, மருந்தை ஊசியின் வழியே செலுத்தி, சில நிமிட ஓய்வுக்கு பின் ஆராத்யா நலமாகிவிடுவார் என்று கூறி, வேண்டிய முதலுதவியினையும் செய்து சென்றார் அவர்.
“விக்ரம் என்ன ஆச்சு? யார் அவன்? ஆராத்யா கூட சண்டை போட்டானா? அவனால தான் ஆராக்கு இப்படி ஆகினதா? நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க?”
இந்த இரண்டு வருடங்களில் வெகு சில நாட்கள் தவிர்த்து ஆராத்யாவுடன் தான் காலை நேரம் அலுவலகத்தில் ஆரம்பம் ஆகும் ரகுவிற்கு.
இன்றும் எப்பொழுதும் போல அவளுடன் அவளுக்கு முன் என தான் வந்திருந்தால் அவளுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது தானே என நினைத்து அத்தனை கோபம் தன் மேலேயே அவனுக்கு. அது குரலும் வெளிப்படுத்தி இருக்க,
“சார் என்ன சொல்றதுன்னே தெரியல.. ரெண்டு மூணு பேர் தான் சார் வந்திருந்தோம் மொத்தமே.. அந்த டைம்ல குட்டி குட்டினு என்னைய டார்ச்சர் பண்ணினான்.. அப்படி யாரும் இல்லைனு சொல்லியும் வெளில போக மாட்டேன்னு சொன்னான்.. திடிர்னு ஆராவை பார்த்துட்டு குட்டின்னு அவ பக்கமா போனான்” விக்ரம் சொல்லிக் கொண்டு இருக்க,
“அப்போ! அவன் தான் ரத்தம் வர காரணமா?” ரகு கோபமாய் கேட்க,
“இல்ல சார்! அவனை கிட்ட வரவே விடல ஆரா.. அவனை பார்த்து ரொம்ப டென்ஷன் ஆகிட்டா.. அப்பவும் அவன் ஆராகிட்ட போக போயி ஆரா தான் ஹாண்ட்பேக்ல இருந்து எதையோ எடுத்தா.. அந்த சிடுவேஷன்ல எனக்கும் என்னனு ஷாக் ஆகி நின்ன நேரத்துல என்ன செய்யுறதுன்னு தெரியாம பயத்துல அவளே தான் என்னவோ பண்ணிக்கிட்டா நினைக்குறேன் சார்!” என்றான் விக்ரம்.
“இது ஆரா நின்ன இடத்துல கிடந்துச்சு சார்!” என பிரேம் சிறிய கட்டர் ஒன்றினை நீட்ட,
“இது அவளோடது தான்.. சேஃப்டிக்கு தேவை இருக்கும்னு பேக்ல எப்பவும் வச்சிருப்பா..” என்றாள் கார்த்திகா.
“சார் நான் ஆராத்யா அட்ரஸ்க்கு கால் பண்ணி அவங்க பேமிலில யாரையாச்சும் வர சொல்லிடுறேன்.. அதான் சேஃப்..” யோசித்து ரகு நின்ற நேரம் விஷால் கூற,
“நீங்க போய் வேலையை பாருங்க!” என்றான் மற்றவர்களை ரகு.
ஆராத்யாவைப் பார்த்து கார்த்திகாவோடு அனைவரும் தயங்க,
“பிரண்ட்டோட ரிலீட்டிவ்னு ஒருத்தன் வந்திருக்கான்.. அவன் யார் என்னனு தெரியல.. அவ்ளோ தான் பிரண்ட்ஸ்குள்ள அண்டர்ஸ்டாண்டிங்கா? இதுல என் ரூம்ல விட்டுட்டு போக இப்படி பாக்குறீங்க?” கோபமான கோபமாய் ரகு சொல்ல,
“அய்யோ இல்ல சார்.. ஆராக்கு அவ பேமிலி பத்தி பேசினாலே புடிக்காது.. அம்மா அப்பா இல்லைன்றதால அவ ஹர்ட் ஆகிட கூடாதுன்னு எதுவும் நாங்களும் கேட்டுக்க மாட்டோம்.. இப்படி நடக்கும்னோ இல்ல அவளுக்கு பிரச்சனை இருக்குனோ ஆரா சொன்னதில்ல சார்!” என்றாள் கார்த்திகா.
“ஆமா சார்! மத்தபடி உங்க ரூம்னு எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல.. சாரி சார்!” என்றான் விக்ரமும்.
ரகுவின் கோபம் பதட்டம் அவன் ஆராவைப் பார்த்துக் கொண்ட விதம் என எதுவும் மற்றவர்களை தவறாய் நினைக்காவோ பாதிக்கவோ விடவில்லை விஷாலை தவிர்த்து.
அலுவலகம் வந்து ஒரு நபருக்கு உடல்நலம் சரி இல்லை என்றால் மருத்துவரை பார்க்க வைப்பது எல்லாம் சரி.. உடனே வீட்டிற்கு அழைத்து சொல்ல வேண்டும் என்பது தான் விதிமுறை.
விஷால் நியாபகப்படுத்தியும் ரகு அதற்கு பதில் சொல்லாமல் இருக்க, யோசனையாய் நின்றான் விஷாலும்.
“சரி கிளம்புங்க!” என மற்றவர்களை சொல்லியவன்,
“கார்த்திகா! நீங்க இங்க இவங்களோட இருங்க!” என்று கூறி மற்றவர்களோடு வெளியே வந்துவிட்டான் ரகுவும்.
error: Content is protected !!