Skip to content
Post Views: 3,352
“சீக்கிரம் எழுந்துக்க மாட்டேன்னு சொன்ன, ஆனா இப்ப இவ்வளவு சீக்கிரம் எழுந்து மேக்கப் போட்டுட்டு ரெடியாயிருக்க ஜோ” என்று அவளை வம்பிழுத்தான் கவுதம்!
“போ அண்ணா..” என்று சிணுங்கினாள் அவள்!
“ஏது? அண்ணனா! இது ஏதுடா மெடிக்கல் மிராக்கிள்! நம்ம ஜோவா இது? உனக்கு ரிஷியைத் தாண்டி என்னைக் கூட உன் கண்ணுக்கு தெரியுதா?” என்றவனை பெருமைப் பொங்க பார்த்தான் ரிஷி!
“டேய்.. விடுடா.. இன்னிக்கு கூட அவளை கலாய்க்கணுமா?” என்ற ரிஷியை, காந்தி ஆச்சி, “மாப்பிள்ளை நீங்களும் மான்ஸியும் வாங்க” என்று அழைத்து,
Advertisement
“மான்சி, நீயும் மாப்பிள்ளையும், இந்தா, இங்கன போய் உட்கார்ந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.
காலையில் வெள்ளன எழுந்தது, உங்களுக்கு உறக்கம் வரும் தான்!
ஆனா உறங்கிடாதீக. ஆட்கள் வர ஆரம்பிச்சுடுவாக!” என்று சொல்லி அவர்களை மாடியில் இருந்த ஒரு அறைக்குள் அனுப்பி வைத்து விட்டு சென்றார் காந்தி ஆச்சி!
Advertisement
காலை டிபன் ரெடி ஆகிக் கொண்டு இருந்தது!
Advertisement
மிக நெருங்கிய சொந்தக் காரர்கள் மட்டுமே அந்த அதிகாலையில் கோவிலுக்கு வந்திருந்தனர்!
மற்றவர்கள் இப்போது தான் வர ஆரம்பித்துக் கொண்டிருந்தனர்!
ஆனாலும் சொற்ப கூட்டமே இருந்தது அப்போது!
Advertisement
அன்று நல்ல முகூர்த்தம் என்பதால், நிறைய பேருக்கு ஒரே நாளில் இரண்டு மூன்று திருமணங்களுக்கு போக வேண்டியிருந்தது!
“வெளியே நல்ல க்ளைமேட் மான்சி! மழை வர மாறி இருக்கு!
சூப்பர் க்ளைமெட், சூப்பர் பொண்டாட்டி பக்கத்துல! தனி ரூம்!
வேற என்ன வேணும்? உன் அத்தான் செம் ஹாப்பி!” என்று சொல்லி அவள் தோளில் அப்படியே சாய்ந்தான் ரிஷி!
“ஆமா மாப்பிள்ளை, மழை வர மாறி தான் இருக்கு! ரெண்டு கல்யாணப் பொண்ணுல எவ அரிசி தின்னான்னு தெரியல!
அதான் அவங்க கல்யாணத்தன்னிக்கி இப்படி மழை வர மாறி இருட்டிக்கிட்டு வருது!” என்றபடி எழுந்து உட்கார்ந்து தன் தலைமுடியை அவிழ்த்து விட்டு லேசாக உதறி விட்டு கொண்டை போட்டு முடிந்தார் சுப்பு ஆச்சி!
அது வரை அந்த ரூமின் தரையில் ஒரு ஜமுக்காளம் விரித்துப் படுத்துக் கொண்டிருந்தவர்!
லேசாக திடுக்கிட்டு மான்சியை விட்டு விலகினான் ரிஷி.
“அய்யோ. பாட்டி, நீங்க இங்க என்ன பண்றீங்க?”
“நானா தம்பி, காலையில வெள்ளன எழுந்தது, எனக்கும் உறக்கமா வந்துச்சு. காந்தி வேற இங்க வெள்ளிப் பாத்தரம் பண்டம் எல்லாம் இருக்கு, நீ போய் காவலா அங்க போய் படுத்து இருன்னு அனுப்பி வச்சா” என்றார்.
ஆச்சி, அதுக்கு காவலா அனுப்பி வைக்கல, மான்சிக்கு காவலா அனுப்பி வைத்து இருக்கார்ன்னு புரிந்தது இருவருக்கும்!
உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் மான்சி!
காண்டானான் ரிஷி!
கொஞ்சம் கடுப்புடன், கழுத்தில் இருக்கும் மாலையை கழற்றப் போக, சரியாக அப்போது உள்ளே வந்த சாந்தாம்மா,
“டேய்..டேய்.. அத நீயா கழட்ட கூடாது, உன் மாமா வரணும்! அவர் கீழே சாப்பிட போய் இருக்கார்!
மான்சி உனக்கும் தான்! சதா வரணும்! அது வரை பொறுமையா இருங்க! இந்தா காபி குடிங்க” என்று சொல்லி மூவருக்கும் காபியை கொடுத்தார்.
“அம்மா..நீங்களும் இங்கயே ரெஸ்ட் எடுங்க. உங்களுக்கு அலைஞ்சு அலைஞ்சு மூட்டு வலி வந்திடும் அப்புறம்.” என்று அவரை அங்கேயே அமர்த்திக் கொண்டு விட்டான் ரிஷி.
“டீ.. சுப்பு.. நீ போய் சாப்பிட்டு வா” என்று சுப்பு ஆச்சியை சாப்பிட அழைக்க வந்த காந்தி ஆச்சியை, சாந்தாம்மா தன்னுடன் அவரையும்
“நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று அமர்த்திக் கொண்டார் சாந்தம்மா.
“காபி வந்துச்சா இங்க?’ என்று கேட்டுக் கொண்டு கோமதியும் அங்கு வந்து விட்டார்!
அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, கவுதமும் அங்கு வந்து விட்டான்!
“ரிஷி.. இங்க ஜீவன் இருக்கானா?” என்று கேட்டபடி!
‘ஜீவனா, அவனை தான் போட்டோ ஷூட் எடுத்துகிட்டு இருந்தாங்களே! பிருந்தா கூப்பிட்டு இருந்த அந்த போட்டோக்ராபர்!
அவங்க வித்தியாசமா பேக் க்ரவுண்ட் வேணுமின்னு எங்கயாச்சும் நிக்க வச்சு எடுத்துட்டு இருப்பான் போய் நல்லா தேடு!” என்றார் சாந்தாம்மா.
“சரி.. பெரியம்மா” என்று சொல்லி அவன் கிளம்புமுன் அறை கதவு மீண்டும் தட்டப் பட, வந்தது சனூப்!
“ஜீவன் இங்க இருக்கானா? அவன எல்லா இடமும் தேடிட்டேன்! காணல. ஒரு வேளை உங்ககிட்ட பேசிட்டு இருக்கான் போலன்னு வந்தேன்” என்று சொல்லி விட்டு வேறு இடங்களில் தேடப் போனான்!
எங்க போனான் இந்த ஜீவன்? எங்கியாவது ரெஸ்ட் ரூம் போய் இருக்கானா? ஒவ்வொரு இடமாக தேடினான் சனூப்!
“அப்பா ஜீவனைப் பார்த்திங்களா?” என்று அன்வரிடம் கேட்டான்.
“அவனை போட்டோ எடுத்திட்டு இருந்தாங்களேப்பா. போய் பாரு” என்றார் அவரும்!
ஜீவனை ஒரு இடத்திலும் காண வில்லை!
மண்டபத்திற்கு ஒவ்வொருவராக வர தொடங்கி விட்டனர்!
சதாவின் நண்பர் ராஜுவும், அவரது மனைவியும், மகன் நவ்தீப் சகிதம் வந்து விட்டார்.
பிருந்தாவின் பிறந்த வீட்டில் இருந்து, முதல் நாளே எல்லோரும் வந்து விட்டனர்!
அவள் பெரிய அண்ணன் பிரபாகரன், அண்ணி கீதா, சின்ன அண்ணன் புருஷோத்தமன் அண்ணி புனிதா எல்லோரும்!
கூடவே பிருந்தா ஜோவிற்கு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட புருஷோத்தமன் புனிதாவின் மகன் பிரதீப், மகள் பிரனிதா இருவரும் கூட முதல் நாளே வந்து விட்டிருந்தார்கள்!
பிருந்தாவின் அண்ணிகளுக்கு, அவர்கள் பயந்த படிக்கு, பிருந்தா தங்களிடம் சம்பந்தம் பேச வராததால் மிகுந்த மகிழ்ச்சி!
ஜோ மீது நாத்தனாரின் பெண் என்கிற பாசமும் உண்டு தான்!
ஜோவை எல்லாம் அவர்கள் வீட்டு மருமகளாக கனவிலும் ஏற்றுக் கொள்ள முடியாது!
அழகில் குறை இருக்கலாம்! கருப்பாக இருப்பதோ, இல்லை குண்டாக இருப்பதோ கூட அவர்களுக்கு குறையாக தெரியவில்லை!
படிப்பு கூட ஒரு பிரச்சினை இல்லை!
ஆனால் குணம்!
பழக்க வழக்கம்! எதற்குமே லாயக்கு இல்லாத அந்த தடித்தனத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!
ஆரம்பத்தில் இருந்தே அண்ணிகள் இருவரும் அழகை பெரிதாக மதிக்காதவர்கள்!
பணத்தையும் கூட பெரிதாக நினைத்து இருக்க வில்லை!
ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது நல்ல குணம்!
அவர்கள் பிரதீப்புக்கு மான்சியை கூட பெண் கேட்கலாம் என்று இருந்தார்கள் தாம்!
ஆனால் அதற்குள் பிரதீப் அவனும் தன்னுடன் வேலைப் பார்க்கும் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லி விட்டான்!
அந்த பெண்ணை அவர்களுக்கும் ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது!
எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர்கள் கல்யாணம், அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கிறது!
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் அந்த பெண்ணின் அக்காவின் திருமணம் முடிந்த பின்!
எனவே பிருந்தாவின் அண்ணிகள் இருவரும் தைரியமாகவே பிரதீப்பை அந்த கல்யாணத்திற்கு கூட்டி வந்திருந்தனர்!
அதற்கு முன்னால் எல்லாம் பிருந்தாவின் பாசமலர் அண்ணன்கள் தங்கைக்கு ஏதாவது வாக்கு கீக்கு கொடுத்து விடப் போகிறார்கள் என்ற பயத்தில் அவனை ஊர்ப்பக்கமே வராது செய்து இருந்தார்கள்!
அவர்களும் இரண்டாம் மாடியில் இருந்த அறைகளில் தான் தங்கியிருந்தனர்!
————
ரிதனி அவள் ரூமில் தன் லாப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தாள்!
அவள் லீவில் இருந்த போதும், ஒரு முக்கியமான டாஸ்க் ஒன்று முடித்து தர வேண்டியிருந்தது.
அதை தான் ஒரு அறையில் இருந்து கொண்டு செய்து கொண்டிருந்தாள், கோவிலில் இருந்து வந்தவுடன் அறைக்கு வந்து லாப்டாப் சகிதம் உட்கார்ந்து விட்டாள்!
—————
இந்த சதா எங்க போனான்? வந்தவங்கள எல்லாம் வரவேற்க கூட இங்க நிக்காம என்று அதுவரை வந்த விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்த சுவாமிநாதன் சதாவை போனில் அழைத்தார்.
“டேய்.. எங்கடா போய்ட்ட? இங்க வா ரிசப்சனில் நில்லு.
நான் ரெஸ்ட் ரூம் கூட போக முடியாம நின்னுட்டு இருக்கேன்!
பாரு இங்க அன்வர் சார் மட்டும் தான் இருக்கார்!
நம்ம வீட்டு சார்பா நாம நிக்க வேண்டாமா? சீக்கிரம் வா”
“சரிண்ணே” என்று சொல்லி போனை வைத்தார் அதுவரை பார்க்கிங் பக்கம் ஒரு மூலையில் நின்று கொண்டு தம் அடித்துக் கொண்டிருந்த அவர்!
கீழே வந்து வருபவர்களை எல்லாம் வரவேற்றுக் கொண்டிருந்தவருக்கு சின்ன அதிர்ச்சி!
அங்கு விருந்தினராக வந்து சந்தனம் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தவன் வைத்தி!
பிருந்தாவின் சின்ன வயது க்ரஷ்!
அந்த விபரம் சதாவிற்கும் தெரியும்! மறைக்க முயற்சிக்க வில்லை பிருந்தாவும்!
ஆனால் கல்யாணம் ஆன பிறகு அவனை அவள் திரும்பியும் பார்க்க வில்லை என்பதையும் சதா அறிவார்!
ஆனால் அவன் தான் என்னமோ அவனும் பிருந்தாவும் ரொம்பவும் பழகியது போல தொனியில் அவர் முன்பே பிருந்தாவிடம் பேசுவான்!
ஆனால் பிருந்தா அவனை நாசூக்காக தவிர்த்து விடுவார்!
அவனைக் கண்டதும் சதாவிற்கு எரிச்சல் மண்டியது!
“வாங்க” என்று தலையசைத்து வரவேற்றாலும், இவனுக்கு யார் பத்திரிக்கை வச்சுருப்பா என்ற எண்ணமே!
அவனின் பெற்றோர் முகத்துக்காக இன்னமும் அவன் வீட்டுக்கு பத்திரிகை வைப்பது வழக்கமாக இருக்கிறது அவர்கள் உறவினர் வட்டத்தில்!
அவருக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் போல இருக்கவே அவர் மீண்டும் தனிமையை நாடினார்!
————
எல்லா ரூமிலும் தேடியும் ஜீவனைக் காண வில்லை என்றதும் சனூப்பிற்கு ஏதோ தவறாகப் பட்டது!
ஆனால் யாரிடமும் சொல்லி கலவரப்படுத்தாமல் மேலும் தேடினான்!
ஒரு இடம் விடாமல்!
மண்டபத்திற்கு எல்லோரும் வர தொடங்கி விட்டிருந்தனர். சிலர் காலை டிபன் பந்தியில்!
அவர்களை பந்தி விசாரித்துக் கொண்டிருந்தார் சுவாமிநாதன்!
ஜோவும் பிருந்தாவும் இருக்கும் அறைக்கு கூட சென்று கவுதம் பார்த்து விட்டு தான் வந்திருந்தான்!
ஜீவன் இருக்கும் இடம் தான் தெரியவில்லை!
“ஆண்ட்டி, ஆண்ட்டி, ஜீவனைக் காணோம்னு எல்லோரும் தேடிட்டு இருக்காங்க! உங்களுக்கு தெரியுமா?” என்றபடி அந்த அறைக்குள் வந்தாள் ஜம்மி!
“ஏய்..ஏய்.. போதும்டி.. ஓவரா கூவாத! நீ கொடுக்கிற காசுக்கு மேல கூவுவன்னு எனக்கும் தெரியும்!
சொல்லு. இங்க யாரும் இல்ல. நானும் ஜோவும் மட்டும் தான் இருக்கோம்!
என்ன எல்லோரும் அவனைத் தேட ஆரம்பிச்சுட்டாங்களா?” என்றார் பிருந்தா சிரித்தபடி!
அதைக் கேட்டு அதிர்ந்து நின்றாள் ஜோ!
error: Content is protected !!