Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நமக்காக 💞19

தீபாவிற்கு மாமியார் மீது கடும் அதிருப்தி. அவள் சொந்தத்தில் இருந்து வந்தவள் அவளை இப்படி பார்த்து பார்த்து கவனிக்கவில்லை. அந்நியத்தில் இருந்து வந்த சுப்ரஜாவை  இப்படி தாங்குகிறாரே….

அவளுக்கு மேலும் தூபம் போட்டுவிட்டாள் அஞ்சலி.

தீபா, புருஷனை கொண்டு தான் புகுந்த வீட்டில் மரியாதை கிடைக்கும். இந்த கிழவி சுப்ரஜாவை இப்படி சீராட்டலைனா மன்னாரு பய ஆஞ்சிடுவான்.

நம்ம வீட்டு ஆளுங்க வேஸ்ட் பீசுங்க. நாம கண் காணாம இருக்கோம். இதுங்க கூடவே இருந்து கிழவன் கிழவியை மயக்கி கைக்குள்ள வச்சிருக்குதுங்க என்றாள்.



Advertisement

தேவிகா சுகன்யாவிடம் கிசுகிசுத்தாள் அந்த வீட்டு மருமகள்களின் முக மாற்றத்தையும்,அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதிருப்தியையும்.

விடுங்க அண்ணி இதை ஏன் நாம கண்டுக்கணும்? அசட்டையாய் ஊதிவிட்டாள் சுகன்யா. யார் பொறாமையில் யார் பொசுங்கி விட முடியும்? எண்ணம் போல் வாழ்க்கை என்று தட்டிவிட்டு கடந்து செல்லவேண்டும்.

“———————-“

Advertisement

சுப்ரஜா மாமியாரோடு இணக்ககமாகவே இருந்தாள்.

Advertisement

உனக்கு அது தெரியல இது தெரியல என்று குறை சொல்லும் மாமியாராக பாப்பாத்தி இல்லை.

மருமகளோடு போட்டி போடாமல் அவளோடு இணைந்து அவரும் வேலை செய்வார்.

மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை மொத்தமாய் வாங்கி வந்துவிடுவான் மன்னர். கரண்ட் பில், கேபிள் கட்டிவிடுவான். வாரம் தவறாமல் கறியோ, மீனோ வாங்கி வந்துவிடுவான்.

Advertisement

மன்னரும் மனைவியை எங்கும் விட்டுக் கொடுப்பதில்லை. அவளுக்கு குறை என்று எதுவும் இல்லாத மாதிரி பார்த்துக்கொள்கிறான்.

நன்றாக போய் கொண்டிருந்தது வாழ்க்கை. பாப்பாத்தி வயலில் நடவு, களை எடுப்பது என்று  அடிக்கடி ஆட்களை அழைத்துக் கொண்டு போய்விடுவார். அப்போது கூட மருமகளை வா என்று அழைக்க மாட்டார். அவளும் வயலுக்கு போக ஆர்வம் காட்டமாட்டாள்.

மொபைல் பார்த்துக் கொண்டும், புத்தகம் படித்துக்கொண்டும் நேரத்தை ஓட்டும் மனைவி சாயந்திர நேரம் காய்கறி தோட்டத்திற்கு போய் பார்க்கலாமே என்று மன்னர் நினைப்பதுண்டு. சொன்னால் கோபித்து கொள்வாளே….

அந்த ஏரியாவில் உள்ளவர்கள் சேர்ந்து வண்டி வைத்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய் ஏற்றி அனுப்புகிறார்கள்.

ஏற்றும் போது எடை போட்டு ஏற்றுவார்கள். அதை தோட்டத்தின் உரிமையாளர் இருந்து பார்ப்பது நல்லது அல்லவா? அவனுக்கு எங்கே விடுமுறை இருக்கிறது? இவள் போய் பார்க்கலாம். ஆனால் ஆர்வம் காட்டுவதில்லை. நீ போய் பார் என்று மன்னர் சொல்லவில்லை. அவள் அதை எப்படி புரிந்து கொள்வாளோ?

சம்பாதிக்கும் ஆர்வம், உழைக்கும் ஆர்வம் எல்லாம் தானாக வர வேண்டும். பிறர் சொல்லி சொல்லி செய்யும் வேலை வேண்டாவெறுப்பாக தான் இருக்கும். எதையும் விரும்பி செய்ய வேண்டும்.

யூடியுப் பார்த்து புதுசு புதுசாக ஏதாவது ஸ்னாக்ஸ் செய்ய, சாப்பிட,டிவி பார்க்க,தூங்க என்று அவள் சொகுசாகவே இருக்கிறாள். இந்த நான்கு மாதத்தில் ஒரு சுத்து பெருத்தே இருக்கிறாள்.

அம்மாடி சுபி எனக்கு ஏரி வேலை இருக்கு. பாவக்காய் மொச்சக்கொட்டை போட்டு புளிக்குழம்பு வச்சிட்டேன், சேப்பங்கிழங்கு வறுத்துட்டேன், சின்ன தூக்குல தயிர் உறைப்போட்டு வச்சிருக்கேன். பதினோரு மணிக்கு மேல சோறு மட்டும் வடிச்சுக்கோ என்றார்.

சரிங்கத்த என்றாள் அறைக்குள் இருந்து.

நான் வர ரெண்டரைக்கு மேல ஆகிடும்.மாமா வந்தா சாப்பாடு போடு!

சரிங்கத்தை.

சரி நான் போயிட்டு வரேன் என்றவர் மண்வெட்டி, பாண்டு சகிதம் தெரு பெண்களுடன் சேர்ந்து ஏரி வேலைக்கு கிளம்பிவிட்டார்.

“————————–“

ராகி கூழ் மோர்விட்டு கரைத்து தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயமும் மாங்காய் ஊறுகாயும் தூக்கில் போட்டு எடுத்து போயிருந்தார் பாப்பாத்தி.

மதியம் கூழ் குடித்தார் என்றாலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மதகடியில் இருந்து வேகாத வெய்யிலில் நடந்து வந்தது அவருக்கு அலமலர்ந்து போனது. சர்க்கரை நோயாளி அல்லவா அது தான் காதடைத்து கண்பூத்தது.

வீடு வரும்போது மூன்று மணி கிட்ட ஆகிவிட்டது.

பசி மயக்கம் காதடைக்க அவசரமாய் கை கால் கழுவி சாப்பிட வந்தவர் சோத்தை கரண்டியில் அள்ளும் போதே அது பொங்கலாய் கரண்டியில் ஒட்டியது.

புளிக்குழம்புக்கும் அந்த குழைந்த சோறுக்கும் ஒட்டவே இல்லை. சாப்பிட பிடிக்காமல் கழனி பானையில் கழுவி ஊத்திவிட்டு மீண்டும் கொஞ்சம் சோறு போட்டு மோர் ஊற்றி சாப்பிட்டார். பசி அடங்கவில்லை சாப்பிட்ட திருப்தியும் இல்லை அவருக்கு.

ODI உலக கோப்பை பைனலில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த மேட்ச்சின் ஹைலைட்ஸ் போய் கொண்டிருந்தது. ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்ரஜா.

என்னம்மா சுபி மாமா வந்து சாப்பிட்டாரா? என்றார்.

ம்ம்ம்ம்ம் என்றாள்.

சோத்தை கொஞ்சம் பார்த்து வடிச்சிருக்கலாமே என்றார்.

இல்லத்தை நான் பார்த்து தான் வடிச்சேன். இது புது அரிசி போல என்றாள்.

உண்மையில் அவள் உலை கொதித்ததும் அரிசியை போட்டு சிம்மில் வைத்துவிட்டு டிவி முன்னால் அமர்ந்துவிட்டாள்.

தண்ணீர் கொதித்தால் தானே சோறு ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வேகும். தீயை குறைத்துவிட்டால் புழுங்கி அடியில் அமர்ந்து விடும் அல்லவா? இவள் ஆற அமர போய் வடிக்கும் போது சோறு குழைந்து கஞ்சி கோர்த்துக் கொண்டது.

அவசரமாய் கொட்டி ஆறவைத்து பார்த்தாள் அப்படியும் குழைவாய் தான் இருந்தது.

பூமாலை சாப்பிடும் போது எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு எழுந்துவிட்டார். ஆனால் மாமியார் கேட்டுவிட்டார்.

தினமும் அந்த அரிசி தானே வடிக்கிறோம் என்றவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பின் வீட்டுக்கு போய்விட்டார்.

“——————“

என்ன பாப்பாத்தி என்றார் பூமாலை.

ஒண்ணுமில்ல…. சாப்பிடீங்களா?

ம்ம்ம்ம்ம் என்றவர் புளிக்குழம்பு நல்லா இருந்துச்சு என்றார்.

அப்படியா என்றார்.

நீ சாப்பிடல?

மோர் போட்டு சாப்பிட்டேன் என்றார்.

ஏன்?

இல்லை குழைஞ்ச சோத்துக்கு குழம்பு செட் ஆகல என்றார்.

சரி விடு! மருமகளுக்கு பதம் தெரியல…. போக போக பழகிக்கும் என்றார்.

ஐயோ நான் ஒன்னும் சொல்லலை என்றார் பதட்டமாய்.

மாமியார் மாமனார் உரையாடலை கேட்ட சுபிக்கு ஆத்திரமும் அழுகையும் முட்டிக்கொண்டு வந்தது.

ஒரு நாள் சோறு குழைந்து போனதுக்கு இவ்வளவு அக்கப்போரா?

இவங்களுக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா இப்படி தான் குத்திக்காட்டி பேசுவாங்களா?

பாப்பாத்தியை கொடுமைகார மாமியார் லிஸ்டில் வைத்துவிட்டாள் சுபி.

மாமியாருங்கன்னா இப்படி தான் இருப்பாங்க போல…. குமைந்து போனாள்.

“———————–“

துணி மடிக்கும் போதோ, தோட்டத்தில் பூ பறிக்கும் போதோ மாமியாரிடம் எதுவும் பேசவில்லை.

பாப்பாத்தி டீ கொண்டுவந்து கொடுக்கும் போது எதுவும் பேசாமல் எடுத்துக்கொண்டாள்.

என்னம்மா சுபி முகம் வாடிகிடக்கு? அக்கறையாய் கேட்டார்.

தலைவலி என்றாள். அவரையோ?!

இரவு கொஞ்சம் சீக்கிரமே வந்துவிட்டான் மன்னர். உர்ரென்று இருக்கும் மனையாளின் வாட்டத்தை கண்டு கொண்டான்.

என்னாச்சு சுப்பு? உடம்பு எதுவும் சரியில்லையா? அக்கறையாய் கேட்டான்.

எனக்கு என்ன கேடு? குத்து கல்லாட்டமா நல்லா தான் இருக்கேன் என்றாள் வெடுக்கென்று.

என்ன காரம் அதிகமா இருக்கு? சிரிப்புடன் கேட்டான்.

நான் குண்டூர் மிளகா அப்படி தான் இருக்கும் என்றாள்.

“என்னமோ சரியில்லை….” எழுந்து ரெஸ்ட் ரூம் போய் விட்டான்.

இரவு உணவின் போது கூட உர்ரென்று தான் இருந்தாள்.

அம்மா,அப்பா சாப்பிட்டாங்களா? என்றான்.

தெரியாது என்றாள் கடுமையான குரலில்.

அவனுக்கு புரிந்து போனது. என்னவோ நடந்திருக்கிறது.

தங்கள் அறைக்கு வந்தவுடன் கேட்டான் அம்மா ஏதாவது சொன்னாங்களா?

அவள் பதில் சொல்லாமல் அழுத்தமாய் உட்கார்ந்திருந்தாள்.

அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்களே….

“ஏன் உங்ம்மா அவ்வளவு நல்லவங்களா?” வார்த்தை அடைத்தது அவளுக்கு.

என்ன சொல்ற?

ம்ம்ம்ம்ம் சோறு குழைஞ்சுடுச்சுன்னு சொல்றேன் என்றவளுக்கு இவ்வளவு நேரம் அடைபட்டு கிடந்த கண்ணீர் சீறி பாய்ந்தது.

என்னம்மா….. அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்தான்.

சோறு எப்படி குழைந்தது என்று சொல்லாமல் பாப்பாத்தி பேசியதை மட்டும் சொன்னாள். கண்ணோடு சேர்ந்து மூக்கும் ஒழுகியது. அவ்வளவு வருந்தி அழுதாள். கடைக்குட்டி செல்லமாய் வளர்ந்த பொண்ணு. பிறந்த வீட்டில் யாரும் குரலை உயர்த்தி கோபப்பட்டு அவளிடம் பேசியதில்லை.

அவள் சொன்னதை கேட்டவனுக்கு சங்கடமாய் இருந்தது. ஒரு வார்த்தை கூட பாப்பாத்தி தவறாக பேசவில்லையே…சோத்தை கொஞ்சம் பார்த்து வடிச்சிருக்கலாமே என்றது தவறான வார்த்தையா?

இதில் எங்கே இருக்கிறது மாமியார் தொனி? இயல்பிலே பொறுமையானவர் பாப்பாத்தி. யாரையும் புண்படுத்தி பேச தெரியாதவர்.

நான்கு மகன்களுக்கு திருமணம் செய்து நான்கு மருமகளை கண்டவர். ஒரு மருமகளும் அவரை உட்கார வைத்து வேலை செய்ததில்லை. பதினாறு வயது குமரி போல் அவர்தான் விழுந்தடித்து வேலை செய்வார்.

காலாண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை என்றால் சங்கீதாவும் சரி அஞ்சலியும் சரி பிறந்த வீட்டிற்கு போக மாட்டார்கள் மாமியார் வீட்டிற்கு தான் வருவார்கள்.

மருமகள்களையும் பேரக் குழந்தைகளையும் உட்கார வைத்து விதவிதமாக சமைத்து போட்டு சந்தோஷப்படும் அருமையான குணம் கொண்ட பெண்மணி பாப்பாத்தி.

அவர் இயல்பாய் சொன்ன ஒரு வார்த்தையை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறாளே….

சுப்பு ஏன் இவ்வளவு சென்சிட்டிவா இருக்க?அவங்க தவறா என்ன சொல்லிட்டாங்க? நியாயமாக தான் கேட்டான்.

எதிர் பார்த்தேன் இப்படி தான் நியாயம் பேசுவீங்கன்னு எதிர்பார்த்தேன். “என்ன இருந்தாலும் உங்க அம்மா இல்லையா?” வெட்டிவிடும் பார்வை பார்த்தாள்.

சுப்பு எனக்கு நியாயமா நியாயம் பேசி தான் பழக்கம்.

அந்தம்மா பெத்த மகனாச்சே? உங்களுக்கு இப்படி தான் பேச வரும்.

மாமியாரா நினைக்காம என் அம்மாவா நினைச்சேன் பாருங்க எனக்கு இது தேவை தான். மாமியார் புத்தியை காட்டிட்டாங்க.

சுப்பு உன்னை ஏதாவது திட்டினாங்களா? குறை சொன்னாங்களா? ஜஸ்ட் ஒரு வார்த்தை கேட்டிருக்காங்க! இதை ஏன் பெருசு படுத்துற? உங்கம்மாவா இருந்தா இப்படி தான் சீரியசா எடுத்துப்பியா?

எங்கம்மாவா இருந்தா ஏன் என்னை சோறு வடிக்க சொல்ல போறாங்க? வெடுக்கென கேட்டாள்.

அவனும் எவ்வளவு நேரம் தான் பொறுமை காப்பான். அதையெல்லாம் அவங்க சொல்லியிருக்கணும் அப்படி சொல்லி இருந்தா எங்கம்மா சொல்ல வேண்டிய அவசியம் வந்திருக்காது.சற்று சலிப்புடன் சொல்லிவிட்டான்.

ஒன்னும் சொல்லிக் கொடுக்காம என்னை கட்டி கொடுத்து அனுப்பிட்டாங்கான்னு சொல்ல வறீங்க… அழுகையும் ஆவேசமும் அவளுக்கு கூடியது.

எதுக்கு இப்படி அழற? நீ ஆவேசப்படற அளவிற்கு இப்போ என்ன நடந்து போச்சு? கோபம் வந்துவிட்டது மன்னருக்கு.

என் தலை எழுத்து அழறேன்! தெண்ட சோறா உட்கார்ந்திருக்கேனே நீங்க பேசறதை எல்லாம் கேட்டு தானே ஆகணும்?மூக்கை உறிஞ்சினாள்.

இவள் ஏன் இப்படி பெருங்குரலெடுத்து பேசுகிறாள். வெளியில் இருக்கும் அம்மா அப்பா கேட்பார்களே…

நல்ல மனுஷங்கன்னு எங்க வீட்டில் பூரிச்சு போறாங்க! இங்கே இருந்து குப்பை கொட்டி பார்த்தா தானே தெரியும்? அவள் வாய் ஓயவே இல்லை.

இப்போ என்ன பண்ணனும் உனக்கு? கையை ஓங்கிவிட்டான்.

உள்ளுக்குள் மிரண்டு விட்டாள். ஆனாலும் முணங்கி கொண்டு தான் இருந்தாள்.

உனக்கு எல்லாம் வேற மாதிரி மாமியார் கிடைத்திருக்கணும் அப்போ தெரிஞ்சிருக்கும். என்றவன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டான்.

நீங்க யாரை குத்திக் காட்டி சொல்றீங்கன்னு எனக்கு தெரியும்! எங்க அக்கா மாமியாரை தானே ஜாடையா சொல்றீங்க?

உங்க அம்மாக்கு பெரிய மருமகளுங்க மூனு பேரும் தான் சரி…  இவங்க சங்காத்தமே வேண்டாம்னு கழட்டிகிட்டு போயிட்டாங்க பாரு!

அதிகம் பேசின பல்லை உடைச்சுடுவேன்… பொண்ணாடி நீ? படிச்சவ மாதிரியா நடந்துக்குற?கண்கள் சிவந்து போனது அவனுக்கு.

எதுவும் பேசாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ச் சீ…. போடி…. நீயும் உன் பேச்சும்! ஆவேசமாய் இடித்து கட்டிலில் தள்ளிவிட்டு வெளியேறினான்.

இங்கிருந்தால் கண்டிப்பாக அடித்து விடுவான் அவ்வளவு கோபம் அவள் மீது.

எங்கெங்கோ சுற்றிவிட்டு பதினோரு மணி போல் தான் வீட்டுக்கு வந்தான்.

“———————–“

என்னப்பா சுபிக்கு உடம்பு சரியில்லையா? ஆறு மணிக்கு மேல் ஆகியும் அவள் எழுந்து வரவில்லையே…

இல்லம்மா தலை வலிக்குதுன்னு நைட்டே சொன்னா

கஷாயம் போட்டு தரவா?

அவ எழுந்திருக்கட்டும் பார்க்கலாம் என்றான்.

ஏழரை மணிபோல் எழுந்து வந்தாள். கண்கள் சிவந்திருந்தது முகம் வீங்கி இருந்தது.

சுபி டீ குடிக்கிறியா? அக்கறையாய் கேட்டார் பாப்பாத்தி.

இல்லை வேண்டாம் என்றாள் எங்கோ பார்த்தபடி.

சமையல் வேலையை கிட்டத்தட்ட முடித்துவிட்டார் பாப்பாத்தி.

பொங்கல்,சாம்பார் செய்துவிட்டு, முருங்கை காய் பொரித்த குழம்பு வைத்து, ரசம் வைத்து,வடகம் பொரித்து வைத்திருந்தார்.

என்னம்மா காய்ச்சல் இருக்கா? பரிவுடன் அவள் நெற்றியில் தொட்டு பார்த்தார்.

அதெல்லாம் இல்லை என்றாள் முறுக்கிக் கொண்டு.

சாப்பிட வந்த மன்னருக்கு வருத்தமாய் இருந்தது.

மாமியார் பதவி ஒன்றும் உ­லக வங்கி தலைவர் பதவி இல்லை தான், ஆனால் வயதிற்கு என்று ஒரு மரியாதை கொடுக்க வேண்டும் அல்லவா? எவ்வளவு அன்பாக அக்கறையாக பேசுகிறார். இப்படி முகத்தை திருப்புகிறாளே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!