Skip to content
Post Views: 3,456
மனைவி பரிமாற அமைதியாக உண்டவன் எதுவும் பேசவில்லை.
ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்தால் இன்னும் முறுக்கிக் கொள்வாள் என்று கண்டுகொள்ளாமலே கிளம்பினான்.
ம்மா நான் கிளம்புறேன்! சுப்பு வரட்டுமா…. சீருடையுடன் கிளம்பிவந்தவன் விடைபெற்று கிளம்பினான்.
சோறு வடித்து வைத்துவிட்டு ஏரி வேலைக்கு கிளம்பிவிட்டார் பாப்பாத்தி.
Advertisement
சுபிம்மா சாப்பிட்டு ரெஸ்ட் எடு! ரொம்ப தலைவலின்னா மாத்திரை போட்டுக்கோ…. எல்லா வேலையும் நான் முடிச்சுட்டேன். அவர் கிளம்பி போய்விட்டார்
சோர்வுடன் கிச்சனுக்குள் வந்து பார்த்தாள். எல்லா வேலையும் முடிந்திருந்தது. சமைத்த பாத்திரங்களை கூட கழுவி வைத்து விட்டார் பாப்பாத்தி.
ஏனோ அவளுக்கு அழுகையாய் வந்தது. மீண்டும் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.
Advertisement
பதினோரு மணி போல் கடுமையான தலைவலி. குளித்து வந்தவள் டீ போட்டு குடித்துவிட்டு மீண்டும் போய் படுத்துக் கொண்டாள்.
Advertisement
மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பூமாலை மருமகளை தேடி அறையை எட்டிப் பார்த்தார்.
அவள் படுத்திருந்தாள்.
உடல் நிலை சரியில்லாமல் மருமகள் படுத்திருக்கிறாள் என்று சத்தம் இல்லாமல் போய் அவரே எடுத்து வைத்து சாப்பிட்டார்
Advertisement
மகனுக்கு அழைத்தார்….
அப்பா சொல்லுங்க! என்ன இந்நேரத்துல? கொஞ்சம் படபடப்பு மன்னருக்கு.
காரணம் இல்லாமல் அவராக மகனுக்கு அழைத்து பேச மாட்டார்.
தம்பி மருமக பொண்ணுக்கு உடம்பு சரியில்லையா என்னனு தெரியல… படுத்திருக்கு! மணி ரெண்டாக போகுது. இன்னும் சாப்பிடல. பாப்பாத்தி இருந்தா பரவாயில்லை என்னன்னு கேட்கும். நான் போய் எப்படி கேட்க? நீ போன் பண்ணி என்ன ஏதுன்னு பாருப்பா.
சரிப்பா நான் பார்த்துக்கறேன் என்றான் சற்று விரக்தியுடன்.
மூன்று முறை போன் செய்து விட்டான் அழைப்பு ஏற்கப்படவில்லை. சுப்பு என்னாச்சு? என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டான் பதில் இல்லை.
“————————“
பாப்பாத்தி வேலை முடிந்து வேகாத வெய்யிலில் அரக்கப்பறக்க வந்தார்.
சாப்பிட சென்றவர் பாத்திரத்தை எல்லாம் திறந்து பார்த்துவிட்டு கவலையாகிப் போனார். வைத்துவிட்டு போன காலை டிபன் சாப்பிடாமலே இருந்தது. மதிய உணவும் அப்படியே….
பின்வீட்டுக்கு சென்று பார்க்க அங்கு பூமாலை ராமாயணம் படித்துக்கொண்டிருந்தார்.
என்ன பாப்பாத்தி சாப்பிட்டியா? என்றார்.
மருமக சாப்பிடல போல என்றார்.
ஆமான்னு நினைக்கிறேன். மன்னருக்கு போன் போட்டு சொன்னேனே… நீ போய் பாரு! என்றார்.
அறைக்குள் சென்று பார்த்தார், சுபி படுத்திருந்தாள்.
சுபி… அம்மாடி சுபி என்றார் கனிவாய்.
ம்ம்ம்ம்ம் என்று சொல்லக்கூட அவளுக்கு தோன்றவில்லை. இத்தனைக்கும் விழித்துக் கொண்டு தான் படுத்திருந்தாள்.
என்னாச்சும்மா? அவள் முன் வந்து நின்றார்.
இதற்கு மேல் உறங்குவது போல் நடிக்க முடியாதே…. முகத்திற்கு எதிரே நிற்கிறாரே…..
ஒண்ணுமில்ல என்று எழுந்தமர்ந்தாள்.
என்னம்மா பண்ணுது? பதட்டத்துடன் நெற்றியில் கை வைத்து பார்த்தார்.
ஒண்ணுமில்ல தலை வலிக்குது என்றாள்.
காலையில் இருந்து சாப்பிடாம இருக்குறதா… என்னம்மா இப்படி சின்ன பிள்ளையா இருக்க?
லேசா சளி வைத்த மாதிரி இருக்கு. குரல் எல்லாம் நடுங்குது. காய்ச்சல் வர மாதிரி இருக்கா? அது தான் பசியில்லையா?
இல்லை… அவள் தடுமாறினாள்
இரு நான் சூடா கஞ்சி கொண்டுவரேன் என்று ஓடினார்.
“———————–“
தன் பசியை மறந்து மருமகளுக்கு கஞ்சி வைக்க ஆரம்பித்தார்.
மன்னர் அழைத்துவிட்டான் அம்மாவிற்கு.
நானே போன் பண்ணனும்னு இருந்தேன். சுபிக்கு காய்ச்சல் வர மாதிரி இருக்கு போல…. சாப்பிடவே இல்லை. அவளுக்கு தான் கஞ்சி வச்சுட்டு இருக்கேன். நீ கொஞ்சம் சீக்கிரம் வரப்பாருப்பா என்றார்.
சரிம்மா என்றவன் மனைவிக்கு அழைக்கவில்லை. இதுவரை நான்கு முறை அழைத்துவிட்டான். உறங்கி இருந்தாலும் தவறிய அழைப்பில் இருக்கும் அல்லவா? பார்த்திருப்பாள் வேண்டுமென்றே தவிர்க்கிறாள். மீண்டும் ஒரு சமாதான படலாமா? ஊப் என்று மூச்சை உள்ளிழுத்து வெளியில் தள்ளினான்.
கணவன் அழைத்ததும் குறுஞ்செய்தி அனுப்பியதும் பார்த்திருந்தாள் ஆனால் பதில் அளிக்க தோன்றவில்லை.
எப்படி என்னை குறை சொல்லலாம் என்பதிலே அவள் மனம் உழன்று கொண்டிருந்தது.
கஞ்சியும், பச்சை மாங்காய் ஊறுகாயும் கொண்டுவந்தார் பாப்பாத்தி.
சுட சுட குடிம்மா அப்போ தான் கொஞ்சம் தெம்பு வரும் என்றார். நான் குடிக்கிறேன் நீங்க போய் சாப்பிடுங்க என்று ரெஸ்ட் ரூம் சென்றாள்.
ஒரு மணி நேரத்தில் மன்னர் வந்துவிட்டான். மூடி வைத்தகஞ்சி நீர்த்து போய் ஆறிகிடந்தது.
சுப்பு என்றான் கரகரத்த குரலில்.
அவள் கண் திறக்கவில்லை.
கதவை பூட்டிவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான். கழுத்தில் கை வைத்து பார்த்தான் சாதாரணமாகவே உடம்பு இருந்தது.
ம்ப்ச் என்ற சத்தம் மட்டுமே அவளிடம் இருந்து.
சுப்பு எழுந்திரு ஹாஸ்பிடல் போகலாம். காலையிலிருந்து வெறும் வயிரா இருக்க இந்த கஞ்சியை குடிக்கிறதுக்கு என்ன? கோபத்தை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டு சன்னமான குரலில் தான் பேசினான்.
எனக்கு வேண்டாம். ஒரு நாள் சாப்பிடாம நான் செத்து போயிட மாட்டேன். அத்தனை ஆவேசம் அவள் குரலில்.
என்னம்மா…. நெற்றியை நீவிக் கொண்டான்.
என்ன என்னம்மா? என்னை கேட்கறீங்களே…. போய் உங்கம்மாவை கேளுங்களேன் அழுகையை அடக்கி உதடு கடித்தாள்.
என்ன கேட்கணும்?
இன்னைக்கு ஏன் சோறு வடிச்சு வச்சிட்டு போனாங்க? எனக்கு பதமா வடிக்க தெரியலைன்னு நக்கல் பண்றாங்களா?
இது ஒரு பிரச்னையாடி? நொந்து போனான்.
இல்லையா பின்ன? நேத்து ஒரு நாள் தவறு நடந்திடுச்சு அதுக்காக எனக்கு எதுவும் தெரியாதுன்னு மட்டம் தட்றாங்களா? இன்னைக்கு நான் கரெக்ட்டா செய்ய மாட்டேனா? விசும்பினாள்.
அவங்க ஆக்கி வச்சுட்டு போறதை வெட்கம் இல்லாம நான் சாப்பிடணுமா? அப்படியா நான் சூடு சொரணை இல்லாம இருக்கேன்.
“——————-“
நீ ஏன் இப்படி பேசறேன்னு எனக்கு புரியல!
உனக்கு தனிக்குடித்தனம் போகுற ஆசை இருக்குன்னா நேரடியா சொல்லு! இறுக்கமான குரலில் கேட்டான்.
நான் எப்போ அப்படி சொன்னேன்? கோபம் இன்னும் பெருகியது அவளுக்கு.
நீ நடந்துக்குறதுக்கு பெயர் என்ன?
நீங்க நடந்துக்குறது ரொம்ப சரியா இருக்கோ?
இப்போ என்ன பண்ணலாம்னு நீயே சொல்லிடு! மூத்த மருமகளுங்க மாதிரி உஷாரா கழட்டிட்டு போகணுமா? இல்லை எங்கம்மா உன்கிட்ட மன்னிப்பு கேட்கணுமா? இல்லை கோச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போகணுமா? இல்லை சத்தம் போட்டு பேசி அக்கம் பக்கத்து மனுஷங்க சிரிக்கிற மாதிரி நிலைமையை மாத்தணுமா?
அவன் பேச்சில் ஆடிவிட்டாள். என்ன பதில் சொல்வது என்று அவளுக்கே தெரியவில்லை. இவ்வளவு நேரம் வாய் ஓயாது ஏதேதோ பேசியவள் இந்த நொடி மௌனியாகி விட்டாள்.
சிலநேரங்களில் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று நமக்கே தெரியாது. இப்போது சுபியின் நிலையும் அதுவே.
அமைதியாக குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள்.
அம்மா சமையல் சாப்பிட மாட்டேன்னா தனியா சமைச்சு சாப்பிடு! ஆனா பட்டினியா கிடக்காதே….உன் முடிவு என்னன்னு இன்னைக்கு சொல்லிடு! எதுனாலும் எனக்கு ஓகே தான். வேதனையுடன் வெளியேறினான்.
மகனுக்கு டீ போட்டு எடுத்து வந்த பாப்பாத்தி அறைவாசலில் நின்று அவ்வளவும் கேட்டு விட்டார்.
மனம் நொறுங்கி போனது அந்த பெண்மணிக்கு.
என்று மாமியார் முகத்தை காட்டினோம்? குழந்தை போல் தானே கவனித்தேன் இந்த பெண்ணை… நெஞ்சம் அடைத்தது அவருக்கு.
கண்ணீர் வழிய… பின்வீட்டுக்கு சென்று விட்டார்.
தாய் தளர்ந்த நடையுடன் செல்வதை கண்டு கொண்டான். உடைந்தே போனது மனது.
“————————‘
ம்மா டீ என்று அவர் அருகில் சென்று கை நீட்டினான்.
மன்னரு…. சாமி அம்மா கொடுமைகாரி இல்ல ராசா…. உதடு துடிக்க விம்மினார்.
ம்மா… கண்ணில் நீர் நிறைந்துவிட்டது அவனுக்கு.
நான் சூட்சமமா பேசலை சாமி. பார்த்து பதமா சோறு வடிச்சிருக்கலாமேனு கேட்டேன். அது இந்த பொண்ணு மனசை இவ்வளவு காயப்படுத்தும்னு சத்தியமா நினைக்கலப்பா. அப்போ பேசிட்டு அப்போவே மறந்துட்டேன் நானு.
இன்னைக்கு இந்த பொண்ணுக்கு உடம்பு சரியில்லையேன்னு தான் அவசரமா சோறு வடிச்சுட்டு போனேன். மத்தபடி நான் எதையும் மனசுல வச்சுக்கிற ஆளு இல்லை.
அம்மா விடுங்கமா…. அவ சின்ன புள்ள மாதிரி நடந்துக்குறா அதுக்கு நீங்க இப்படி… அவன் மனம் துடியாய் துடித்தது.
சாமி அம்மா ஒன்னு சொல்லட்டா…. நீங்க தனிக்குடித்தனம் போகணும்னா தாராளமா கிளம்புங்க! அம்மா அழுது புலம்ப மாட்டேன். எங்கிருந்தாலும் நான் பெத்த மக்க சந்தோஷமா நிம்மதியா இருந்தா போதும். கிழவனும் கிழவியுமா எங்க காலத்தை இங்கே ஓட்டிக்குவோம்.
உங்கண்ணன்காரனுங்க கிளம்புன மாதிரி நீங்களும் நல்லவிதமா கிளம்புங்க ஆனா சண்டை சச்சரவோட முகத்தை முறிச்சிகிட்டு வேணாம் சாமி உடைந்து அழுதார்.
ம்மா… அதட்டினான்.
இந்த பொண்ணு அவங்க வீட்டு மனுஷங்கட்ட என்னை கொடுமைகாரியா சொல்லிட்டா நான் தாங்க மாட்டேன் சாமி கையெடுத்து கும்பிட்டார்.
பாப்பாத்தியின் குணம் ஊருக்கே தெரியும். மிகச்சிறந்த குணவதி அவர். புள்ளபூச்சி என்று பூமாலை மனைவியை கேலி செய்வதுண்டு.
அவர் தான் இன்று உடைந்து அழுது கொண்டிருக்கிறார்.
தாய் கண்கலங்க அனுமதிக்காத மகன் மன்னர். தந்தையை விட தாய் தான் அதிக நெருக்கம். அம்மா செல்லம் அவன். இன்று அன்னை கண்கலங்க அதை சகிக்க முடியாமல் உள்ளம் வெதும்பி நின்றான்.
ம்மா எதுக்கு இவ்வளவு அழுகை? இப்போ என்ன நடந்துடுச்சு? அவங்க வீட்டில் சொல்லட்டுமே உங்களை கொடுமைகார மாமியார்னு…
இவன் பேசிக் கொண்டிருக்க கிச்சனில் ஏதோ சத்தம்.
பூனை எதையோ உருட்டுகிறது என்று மன்னர் ஓடி பார்க்க… அங்கு கஞ்சியை சூடு பண்ணிக் கொண்டிருந்தாள் சுபி.
“—————————-“
சுப்ப்ப்ப்பு என்று செவி மடலை உரசி சிருங்காரமாய் அழைப்பான் மன்னர். அப்படி கூப்பிடாதீங்க எனக்கு பிடிக்காது என்று வேண்டுமென்றே சிணுங்குவாள். ஆனால் அவன் அழுத்தம் திருத்தமாய் ரகசியமாய் சுப்ப்ப்ப்பு என்று அழைக்கும் போது அவள் உணர்வுகளில் அத்தனை காதல் பூக்கள் பூக்கும்.
அந்த மூன்று நாட்களில் மட்டுமே அவள் தரையில் போர்வை விரித்து படுத்திருப்பாள். மற்றபடி அவன் முகம் பார்க்க அவன் மார்பில் முட்டி மோதி தான் உறங்க வேண்டும். அவ்வளவு இம்சை செய்வான்.
இதோ இரண்டு நாட்களாய் அவன் இறுக்கமாய் இருக்கிறான். அவளுக்கு தாங்கவில்லை. படுக்கையில் தொட்டுவிடும் இடைவெளி தான் ஆனால் மனதளவில் மிகப்பெரிய இடைவெளி அல்லவா உருவாகி இருக்கிறது.
தன் மீது என்ன தவறு?என்றே அவள் மனம் இப்போதும் வாதிட்டது.
உறவுகளை கையாளும் கலை எல்லாருக்கும் வாய்க்கப் பெறுவதில்லையே….
வயது முதிர்ந்தால் முதிர்ச்சி வந்துவிடும் என்பதல்ல…! சிலருக்கு எத்தனை வயதானாலும் பக்குவம் வருவதில்லை.
வாழ்க்கை பாடத்தை சிலர் கற்று திருந்துவதுண்டு. சிலர் எத்தனை பாடம் கண்டாலும் தன்னிலையில் பிடிவாதமாய் நிற்பது உண்டு. சுபி எப்படி என்று போக போக தான் தெரியும்.
மனம் ஏங்கி தவித்து புலம்பி கலவையான உணர்வுகளை பிரதிபலித்ததால் சீக்கிரம் உறக்கம் வரவில்லை. பகலில் வேறு நன்றாக உறங்கிவிட்டாள் அல்லவா?
“———————-“
காலையில் வழக்கம் போல் எழுந்த பாப்பாத்தி அவர் வேலையை தொடங்கி விட்டார்.
மருமகளுக்கு டீ கொடுப்பதா? வேண்டாமா? தவித்து விட்டார்.
கோலம் போட்டுவிட்டு அடுப்படிக்கு வந்தவள் டீயை அவளே எடுத்துக் கொண்டாள்.
என்ன பேச என்று தெரியாது அவளுக்கு முதுகு காட்டி பூண்டு உரித்துக் கொண்டிருந்தார்.
இட்லிக்கு என்ன சட்னி என்றாள்.
அத்தை என்று அவள் அழைக்காததை கவனித்து தான் இருந்தார்.
பூண்டு சட்னி செய்யலாம்னு….
ம்ம்ம்ம்ம் என்றவள் அவளும் நாலு கட்டி பூண்டு எடுத்து உரிக்க தொடங்கினாள்.
மன்னருக்கு டீ….
ம்மா நானே வந்துட்டேன் என்று வாங்கிக் கொண்டான்.
தாயும் தாரமும் முறுக்கிக் கொள்ளவில்லை என்றாலும் முகம் பார்த்துக் கொள்ளவில்லை. சற்று சலிப்பாக இருந்தது அவனுக்கு.
எதற்கெடுத்தாலும் அவள் கோபித்துக் கொள்வதும் அவன் சமாதானம் செய்வதும்…. இந்த நான்கு மாதத்தில் நான்கைந்து பிணக்கு.
error: Content is protected !!