Skip to content
Post Views: 3,838
சனூப்பும் ரிதனியும் கைத்தாங்கலாக ஜீவனை லிப்டில் ஏற்றினார்கள்.
பின் அவனை எல்லோரும் இருக்கும் ரூமிற்கு கொண்டு சென்றார்கள்!
ஆபிஸ் அறையில் இருக்கும் முதலுதவிப் பெட்டியை எடுக்க ஓடினாள் ரிதனி.
அதற்குள் அன்வருக்குப் போன் செய்து,
Advertisement
“அப்பா ஒரு எமர்ஜென்சி. நம்ம காரை பின் பக்கமா கொண்டு வந்து நிறுத்துங்க!” என்று சொல்லி விட்டான் சனூப்.
தலையில் காயத்துடன் மயங்கிய நிலையில் இருந்த ஜீவனைப் பார்த்து அலறியே விட்டார் கோமதி!
“டேய்.. தம்பி.. என்னடா ஆச்சு?” என்று பதறிபடி அருகில் வந்தனர் ஆச்சியும் கோமதியும்!
Advertisement
“அண்ணா!” என்று ஓடி வந்தாள் மான்ஸியும்!
Advertisement
ரிஷிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!
அவனும், “ ஜீவன் என்னாச்சு ஜீவன்? உன்னை யார் இப்படி பண்ணினா?” என்று கேட்டவாறு அருகில் போனான் அவனும்!
ஜீவன் மெல்ல கண்களை திறந்து பலவீனமான குரலில் பேசினான்.
Advertisement
“ஒண்ணுமில்ல.. அத்தான்! போட்டோ எடுக்க டெரஸ்க்கு போனோம்!
போகும் போது பிருந்தா அத்தை ஒரு ஜூஸ் கொடுத்தாங்க.
ஆனா அதுல ஏதோ டேஸ்ட்ல வித்தியாசம் தெரிஞ்சது!
ஏதோ புது ப்ளேவர் போல ன்னு நினைச்சு குடிச்சேன்!
அப்பவே எனக்கு கொஞ்சம் கேரா தான் இருந்துச்சு.
அப்புறம் அந்த போட்டோக்ராபர் தான் என்னை மண்டையில ஒரு அடி அடிச்சு அந்த ஸ்டோர் ரூம்ல தள்ளி விட்டு பூட்டிட்டு போய்ட்டான்!
ஏன்ன்னு தான் தெரியல!” என்றான் ஜீவன் வலியில் முனகியப் படி!
பின் தலை பாரமாகவே கண்களை மூடிக் கொண்டான்!
அதற்குள் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸில் இருந்தவற்றைக் கொண்டு தன்னிச்சையாக அவன் தலையில் கட்டுப் போட்டாள் ரிதனி, மான்சி துணையுடன்!
“சனூப் அண்ணா, ப்ளீஸ் வண்டிய எடுங்க. நாம் ஹாஸ்பிட்டல் போலாம்” என்று மான்சி எழ,
“ அம்மாடி.. நீ இப்போ தனியே வெளியே போகக் கூடாதும்மா. நீ இரு. கவுதம் பார்த்துப்பான்” என்றார் சாந்தாம்மா.
“இது என்ன தெரியுமா? ரத்தம்! நிஜ ரத்தம்!
என் அண்ணா தலயில இருந்து வந்தது!
உங்க வீட்டு ஆளுங்களால வந்தது!” அவள் உள்ளங்கையைக் காட்டி சொன்னவள்,
“இதோ உங்க பொண்ணு கையில் இருக்கிற இந்த கிளிசரின் உதவியால வந்த போலிக் கண்ணீர் இல்லை” என்று வேகமாக ஜோ தன் கர்சீப்புடன் சேர்த்து வைத்திருந்த கிளிசரின் குப்பியை வேகமாக தட்டி விட்டாள்!
ரிஷியின் முகத்தில் டன் கணக்கில் அதிர்ச்சி!
அப்போ இது வரை தன் தங்கை அழுதது இதனைக் கொண்டா? எதற்கு இத்தனை நாடகம்?
“நான் போகணும். உடனே போகணும்! இங்கேர்ந்து ஒரேடியா போகணும்! எனக்கு வழி விடுங்க” என்றாள் மான்சி தீராத கோபத்துடன்!
“அச்சோ..இப்படி அச்சானியமா பேசக் கூடாதும்மா.. கொஞ்சம் பொறுமையா இரு! “என்றார் சாந்தாம்மா.
“ஓ, இருக்கலாமே! நம்பிக்கை இருந்தா பொறுமையா இருக்கலாம்!
இங்க தான் அது மருந்துக்கும் இல்லையே!
ஒரு கல்யாண வாழ்க்கை சக்சஸ் ஆகணும்னா, முக்கியமா தேவை மற்ற எல்லாத்தையும் விட, பரஸ்பர நம்பிக்கை!
அது இங்க எங்க இருக்கு?
தங்கச்சி அழறா என்றவுடன், அவளைப் பத்தி நல்லா தெரியும் உங்க பிள்ளைக்கு!
ஆனாலும் கொஞ்சம் கூட யோசிக்காம என்னைப் பார்த்து சொல்லேன் மான்சின்னு என்னை சந்தேகப்பட்டு கேக்குறார்!
எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? அப்படியே உடம்பு பூரா தீப்பிழம்பா எரிஞ்சது!
அவர் இதுக்கு முன்னாடியும் சில விசயங்களில் அவர் என்னை சந்தேகப்பட்டப்ப கூட, அது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தா கூட அவர் மேல இருந்த விருப்பத்தினால் பொறுத்துகிட்டேன்!
ஆனா, இன்னிக்கு, எப்பேர்ப்பட்ட பழிய என் மேல போடுறாங்க!
கொஞ்சமாச்சும் , நம்ம மான்சி அப்படி எல்லாம் செய்து இருக்க மாட்டான்னு அவருக்கு தோணவே இல்லல?
அவ்வளவு நம்பிக்கை என் மேல!
ரொம்ப தாங்க்ஸ் ரிஷி சார்!
முதல்ல உங்களுக்கு மட்டும் தான் என் மேல நம்பிக்கை இல்லாம இருந்துச்சு!
இப்ப எனக்கு ஒட்டு மொத்தமா உங்க குடும்பம் மேலேயே நம்பிக்கை போய்டுச்சு!” என்றவள், ஜீவனைக் காட்டி,
“இந்த அளவு எங்களுக்கு உயிர் பயம் காட்டின, இந்த கொலைக் கார குடும்பத்தில் என்ன நம்பிக்கையில நான் வாழ முடியும்!
சோத்துல விஷம் வைக்க கூட தயங்க மாட்டாங்க, அம்மாவும் பொண்ணும்!
ஏற்கனவே அவ ப்ளானே, அவ அண்ணனைக் கட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு வரப்போற என்னை கொடுமைப்படுத்துற எண்ணம் தான் உங்க ஆசைப் பொண்ணுக்கு!
இப்ப அவ கல்யாணம் வேற நின்னு , நான் மட்டும் கல்யாணம் பண்ணிட்டு உங்க வீட்டுக்கு வந்தா நிம்மதியா இருக்க விடுவாளா ஜோ!
அவ இப்படி கல்யாணம் நின்ன துக்கத்துல இருக்கிறப்போ, உங்க பிள்ளை தான் என் கூட சந்தோசமா குடும்பம் நடத்துவாரா?
உங்களை எல்லாம் கையை எடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்! எங்களை விட்டுடுங்க!
நான் இந்த கல்யாணத்தையே கெட்ட கனவா நினைச்சு மறந்துடுறேன்!
உங்க பிள்ளை கிட்ட பழகினதையும் தான்!”
“ஏய்.. அவசரப் பட்டு வார்த்தையை விடாதேடி” என்று கேவிய கோமதியிடம்,
“அம்மா , இந்த பழைய பட கமலா காமேஷ் டயலாக் ஏதாவது சொல்லி, என் மனசை மாத்தலாம்னு நினைச்சா,
நான் நம்ம வீட்டுக்கும் வரல, சனூப் அண்ணா, எனக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுங்க.
நான் ஹாஸ்டல்ல தங்கிக்கிறேன்.
நீ வா அண்ணா போகலாம்” என்று ஜீவனை அழைத்துக் கொண்டு, பின் வாசல் வழியே அன்வரின் காரில் ஏறி சென்று விட்டாள்.
பின்னாடியே வந்த ஆச்சியையும் கோமதியையும் தன் காரில் ஏற்றிக் கொண்டு சென்று விட்டான் சனூப்!
“இப்ப சந்தோசமா உனக்கு?
ஜோ குட்டி, ஜோம்மான்னு உன் மேல உயிரா இருந்த,
சொல்ல போனா ரிதனியை விட ரிஷிக்கு உன் மேல் தான் பாசம் அதிகம்! அதிகம்னு சொன்னா ரொம்ப சாதாரணமா தெரியும்! கண்மூடித்தனமான பாசம்!
அதுக்கு நீ காட்டின நன்றி, அவன் கல்யாணம் செஞ்ச வுடனே அவன் பொண்டாட்டியைப் பிரிச்சது தான்!
ரொம்ப நல்லாருக்கும்மா” என்று ஜோவிடம் சொன்னவர்,
“சொல்லுடி, ஜீவன் மேல உனக்கு அப்படியென்ன துவேஷம்?
அவனைக் காட்டிலும் வேற நல்ல மாப்பிள்ளை உன் தடித்தனமா இருக்க உன் பொண்ணுக்கு கிடைப்பாளா?
சொல்லுடி? ஏன் இப்படி பண்ணின? அப்படி என்ன ஆங்காரம் உனக்கு அந்த சின்ன பொண்ணு மேலயும் அவ குடும்பத்து மேலயும்!”
“தம்பி.. பெத்த அப்பன் நீங்களே இப்படி உங்க பொண்ணை பத்தி சொல்லலாமா?” சாந்தாம்மா வேதனையிலும் சதாவிடம் குறைப்பட,
“அண்ணி. இந்த வார்த்தை நானா சொன்னது இல்ல? இதோ இவளோட அண்ணிங்க சொன்னது!
இவ என்ன பண்ணியிருக்கா தெரியுமா? மகள் காரியை விட ஒரு படி மேலா கிரிமினல் வேலை செய்துருக்கா!
ஜீவனை போட்டோ எடுக்கறேன்னு சொல்லி மேலே கூட்டிட்டுப் போய் ஸ்டோர் ரூமில் போட்டு அடைச்சு, மாப்பிள்ளை ஓடிப் போய்ட்டான், நான் என்ன பண்ணுவேன், என் பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகும்னு சொல்லி அவங்க அண்ணன் குடும்பத்தில் போய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அவங்க பையனை, இவ ஆசைப்பட்ட மாதிரி ஜோவுக்கு கட்டி வச்சுட்டு, தாலி கட்டுற நேரத்துல, லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடிப்போனவன் தங்கச்சின்னு சொல்லி, மான்சியையும் இந்த வீட்டை விட்டு அனுப்புற ப்ளான் போட்டு இருக்கா!
அதுக்கு சூத்திர தாரி, இதோ நிக்கிறா பாருங்க இந்த ஜிம்மி!
அந்த போட்டோக்ராபர் இவளோட ஆள் தான்!
மான்சிக்கு தெரிஞ்ச அந்த பையனுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல!
எதேச்சையா தான் மான்சி அவனைப் பார்த்துருக்கா, தெரிஞ்சவன்றதுனாலா யதார்த்தமா தான் சிரிச்சுருக்கா!
அதைக் கூட இவளுங்க அவங்களுக்கு சாதகமாக யூஸ் பண்ணிட்டு இருக்காங்க! என்றார் சதா!
இவளை எல்லாம் கழுத்தை நெரிச்சு கொன்னா கூட எனக்கு ஆத்திரம் தீராது” என்று சொல்லி மீண்டும் கழுத்தை நெறிக்க போனவரை இழுத்துப் பிடித்து கட்டிலில் உட்கார வைத்தான் கவுதம்!
அவருக்கு அத்தனை வேகமாக பேசியதில் மீண்டும் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது!
மீண்டும்?
ஆமாம். பிருந்தா ஜோவை ரிஷி இருக்கும் ரூமுக்கு அழுதுக் கொண்டே போக சொல்லி விட்டு, தன் அண்ணனை போனில் அழைத்து
ரொம்ப அவசரம், கொஞ்சம் டெரஸ்ல இருக்கிற அந்த ப்ரைவேட் ரூமுக்கு குடும்பத்தோடு வரும்படி சொல்லி அங்கு சென்றார்.
அப்போது எல்லாம் ஜீவன் நல்ல மயக்கத்தில் தான் இருந்தான் அருகில் இருந்த அந்த ஸ்டோர் ரூமில்!
அவர்களை உள்ளே அழைத்து சென்று,
“அண்ணே” என்று ஓவென்று கதறிக் கொண்டு அண்ணன்களில் காலில் விழுந்தார் பிருந்தா!
“என்னம்மா என்ன ஆச்சு?” என்று பதறியவர்களிடம்,
“அண்ணே, நான் மோசம் போயிட்டேன்ண்ணே” என்று சொல்லி விட்டு,
“ஒண்ணும் இல்லாத பரதேசிக் குடும்பம்னாலும் பரவாயில்ல, பையன் நல்லா படிச்சுருக்கான்.
நல்ல வேலையில் சேரப்போறான்னு சொன்னாங்கனு சொன்னாங்க.
இந்த ரிஷி வேற அங்க வேலைக்கு வந்த அந்த மான்சி கிட்ட ஒரே மயக்கமா இருந்தான்!
கட்டுனா அவளைக் தான் கட்டுவேன்னு ஒரே பிடிவாதமா இருந்தான்!
அவங்க வீட்டுல என்னடான்னா பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்துக்குவோம்னு கட் அன்ட் ரைட்டா சொல்லிட்டாங்க!
அண்ணன் ஆசைப்படுறான்னு ஜோவும் அந்த ஜீவனை கட்டிக்கிறேன்னு சொன்னா!
அந்த பையனும் அவன் தங்கச்சிய பெரிய இடத்துல கொடுக்கனும்ற ஆசையில, பத்து வயசு வித்தியாசம்னாலும் ஒத்துக்கிட்டான்!
இப்போ அவன் தங்கச்சிக்கு கல்யாணம் ஆனவுடன், இப்ப என் பெண்ணைப் பிடிக்கல, குண்டா இருக்கா, கருப்பா இருக்கான்னு சொல்லி லெட்டர் எழுதி வச்சுட்டு எங்கேயோ ஓடிப் போய்ட்டான்!
மணமேடை வரை வந்து பொண்ணுக்கு கல்யாணம் நின்னு போனா, அந்த பொண்ணை யாருண்ணா கட்டிப்பா? நீங்களே ஒரு வழி சொல்லுங்கண்ணே” என்றார் பிருந்தா!
அண்ணன் அண்ணிகள் அதிர்ந்தனர்!
ஜீவன் ஓடிப்போய்ட்டானா?
நாங்க கேள்விப்பட்டவர இவ பொண்ணு தான் ஜீவனை தான் கட்டுவேன் என்று அடம் பிடித்ததாக இல்ல பேசிகிட்டாங்க!
இவ என்ன புதுக்கதை சொல்றா? என்ற குழப்பம் கீதாவிற்கும் புனிதாவிற்கும்!
“வழி சொல்றதுன்னா என்ன பிருந்தா?
நீ என்ன சொல்ல வர? இல்ல நாங்க என்ன பண்ண முடியும் இப்போ?
ஏங்க போலீஸ்ல உங்களுக்கு யாராச்சும் தெரிஞ்சவங்க இருக்காங்களா? ஜீவனை கண்டு பிடிச்சு கொண்டு வர” என்றார் கீதா!
“அய்யோ, இனி அவனை கொண்டு வந்து மட்டும் என்ன ஆகப் போவுது?
கீழே எல்லோரும் வந்துட்டாங்க.
இன்னும் கொஞ்ச நேரத்தில் பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சிட்டு வர சொல்ல போறாங்க! சபை மத்தியில என் மானம் போகப் போவுது!”
“எனக்கு ஒண்ணும் புரியலம்மா, நாங்க என்ன பண்ண முடியும் இதுல?”
“நீங்க நினைச்சா பண்ண முடியும்ண்ணே!
பிரதீப்பை மாப்பிள்ளையா வந்து உக்கார சொல்லுங்க.
என் பொண்ணுக்கு வாழ்க்கைப் பிச்சை போடுங்க அண்ணே!” என்று கதறி கதறி அழுதார் பிருந்தா!
“அய்யோ அழாதம்மா..” என்று அண்ணன்களும் கண் கலங்க, அடுத்து அவர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்று ஊகித்து விட்டார்கள் கீதாவும் புனிதாவும்!
அவர்களை வாயையே திறக்க விடாமல்,
“பிரதீப்புக்கு ஏற்கனவே கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சு!
லவ் மேரேஜ். அதனால நீ சொல்றத எங்களால செய்ய முடியாத சிச்சுவேசன் பிருந்தா” என்று சொல்லி விட,
“என்ன பெரிய காதல்! நாம் சொன்னா பிள்ளைங்க கேக்க வேண்டியது தானே? நீங்க சொல்லுங்க அண்ணே”
“என்ன பெரிய காதலா? அப்போ உன் பையன் கவுதம் பண்ணினது? அதுக்கு நீ பல்லைக் காட்டி சம்மதம் சொன்னது!
பொண்ணு நல்ல பெரிய இடம், அழகா, சாந்தமா இருக்கான்னு தானே!
எங்களுக்கும் உங்க வீட்டு விஷயம் தெரியும் பிருந்தா!
முதல்ல மான்சிய கவுதமுக்கு தான் பேசினீங்க.
அப்புறம் அவன் லவ் பண்றான்னு தெரிஞ்சது அப்புறம் தான் ரிஷிக்கு பேசினீங்கன்னு எங்களுக்கும் தெரியும்” என்றார் கீதா!
“அது.. வந்து. கவுதம் படிக்கும் போதிலிருந்தே அந்த பொண்ணை லவ் பண்றானாம்! அதான் அவன் ஆசைக்காக..”
“உன் பிள்ளை ஆசைப்பட்டா நீ சரின்னு சொல்வ! தடையா இருக்க மாட்ட!
ஆனா நாங்க மட்டும் எங்க பையன் ஆசைய குழித் தோண்டி புதைச்சுட்டு உன் பொண்ணை கட்டிக்க சொல்லணும்! இது எந்த ஊர் நியாயம்?”
“அண்ணி, எனக்கு உங்கள மாதிரி எல்லாம் கட் அன்ட் ரைட்டா எல்லாம் பேச வராது.
நீங்களே கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டா, நான் வேற எங்க போய் மாப்பிள்ளை தேடுவேன்!
நல்லா இருக்க பொண்ணுக்கே , இப்படி மணமேடை வரை கல்யாணம் நின்னு போனா, திரும்ப கல்யாணம் நடக்காது!
என் பொண்ணு வேற கருப்பு, குண்டா வேற இருக்கா!
இனி என் பொண்ணு வாழ்க்கையில கல்யாணம்றது கேள்விக்குறி தான்!”
அப்பவும் அண்ணிகள் கொஞ்சமும் இளகாததால், என்ன பேசுகிறோம் என்று உணராமல், பேசும் வார்த்தையின் வீரியம் புரியாமல் அப்போதைக்கு காரியம் ஆக வேண்டும் என்ற நோக்கில் பிருந்தா வார்த்தையை விட்டார்!
“இப்ப கூட உங்களுக்கு என் மேலே இரக்கம் வரல இல்ல!
என்னை சொல்லணும்! அண்ணிங்க எல்லாம் அம்மா மாதிரி!
எல்லாம் நம்ம நன்மைக்கு தான் சொல்றாங்கன்னு நம்பி, என்னைத் தேடி வந்த நல்ல வாழ்க்கையை,
நல்லா சிவப்பா நல்ல பிட்னெஸோட எனக்கு சரியான பொருத்தமா இருந்த,
என் மேல உயிரா இருந்த அந்த வைத்தியை மறந்துட்டு,
நீங்க சொன்னீங்கனு அந்த கருப்பனை, குண்டனை கல்யாணம் பண்ணி என் லைபை நானே கெடுத்துக்கிட்டேன்!
எனக்கும் வைத்திக்கும் கல்யாணம் ஆகி இருந்தா எங்களுக்கு பொறந்த பொண்ணு, ஊரே மெச்சுகிற அழகோட ரம்பை மாதிரி இருந்துருப்பா!
அவளை கட்டிக்க நான், நீ ன்னு பயங்கர போட்டியா இருந்திருக்கும்!
என்ன பண்றது என் தலையெழுத்து, இப்படி ஒரு கருப்பனுக்கு வாழ்க்கைப் பட்டு, ஒரு கருப்பிய பெத்துக்கிட்டு,
இப்படி அவளுக்கு கல்யாணம் ஆகணும்னு ஒரு ஒருத்தர் காலில் விழ வேண்டியிருக்கு!”
“என்ன பேச்சு பேசுற பிருந்தா? யார் காதிலாவது விழுந்திடப் போவுது! கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் கழிச்சு பேசுற பேச்சா இது? சகிக்கல!
இந்த எக்ஸ்ட்ரீமுக்கு நீ பேசி, எங்கள் ஒத்துக்க வைக்க நினைக்கறதுனால தான் எங்களுக்கு உன் மேலேயே சந்தேகம் வருது!
ஏய்..லூஸு கிறுக்கி! என்ன பண்ணி வச்சுருக்க சொல்லித் தொலை!” என்றார்கள் இரு அண்ணிகளும்!
“அதெல்லாம் ஒண்ணும் செய்யல! என் பொண்ணுக்கு இன்னிக்கு கல்யாணம் ஆகலன்னா, நான் உயிரோடவே இருக்க மாட்டேன்!” என்றார் பிருந்தா!
“அய்யோ.. அப்படி எல்லாம் சொல்லாதடாம்மா” என்று அண்ணன்கள் உருக,
“என்ன சொல்லாதடா?
நீங்க மட்டும் உங்க தங்கச்சி மிரட்டலுக்கு பயந்து, பிரதீப் வாழ்க்கையை கெடுக்க நினைச்சீங்க?
அப்புறம் ரெண்டு பேரும் டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பிடுவோம்! ஊருக்குள்ள உங்க மானம் மரியாதை போய்டும் பார்த்துக்கங்க!
என்ன பிருந்தா.. சாவப் போறியா? போ.. செத்துப் போ. கண்டிப்பா உனக்கு பிறந்த வீட்டு கோடி நல்ல பட்டுப்புடவையா கொண்டு வந்து போட்டுறோம்!
ஏய். இந்த மிரட்டல் எல்லாம் எங்க கிட்ட வேணாம்!
சாகனும்னு முடிவெடுத்தவ, இப்படி வந்து சொல்லிட்டு எல்லாம் இருக்க மாட்டா!
அதுவும் இல்லாம, செத்தவங்க கூட எல்லாம் நாமும் கூட சேர்ந்து போகவா போறோம்!
நீ வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கோ! எங்களை விட்டுடு” என்று தீர்மானமாய் சொல்லி விட்டு இறங்கி சென்று விட்டார்கள்!
அவர்கள் சென்ற பின், எப்படி பேசியும் அவர்கள் ஒத்துக்காத கோபத்தில், ஜிம்மியை போனில் அழைத்து,
“ஜம்மி, நான் நினச்சது ஒண்ணுமே இங்கே நடக்கல!
அட்லீஸ்ட் என் பொண்ணு ஆசைப்பட்டதாவது நடக்கட்டும்!
நான் போய் ரிஷி கிட்ட விசயத்த சொல்லி ஒரு டிராமா போடுறேன்.
கொஞ்ச நேரம் கழிச்சு நீ பின்னாடியே வா, லெட்டரோட!” என்று சொல்லி வைத்து விட்டு அவசரமாக கீழே சென்றார்.
இவர்கள் பேசியது அத்தனையும் மொட்டை மாடியில் தனிமையில் சிகரெட் பிடிக்க வந்த சதா கேட்டுக் கொண்டு தான் இருந்தார்!
அவர்க்கு அதிர்ச்சியில் வலி நெஞ்சை அழுத்தியது!
அப்போ தன் மனைவியுடன் இத்தனை வருட கல்யாண வாழ்க்கைக்கு இது தான் அர்த்தமா?
இன்னும் அவனை நினைத்துக் கொண்டு தான் இருக்கிறாளா என் மனைவி!
ச்சே இருக்காது! இதைப் பற்றி அவளே தான் திருமணம் ஆன புதிதில் மறைக்காமல் சொன்னாள்!
அதற்கு பிறகும் அந்த வைத்தி வலிய நெருங்கி பேச வந்தாலும் கூட இவள் தவிர்த்து விடுவாளே!
ஆனால் இப்போது பேசியது?
இதில் எது உண்மை?
இல்லை.. இல்லை தனக்கு காரியம் ஆக வேண்டும் என்ற வெறியில் இப்படி கண்டதையும் பேசுகிறாள்!
இத்தனை வருடங்கள் கழித்து மனைவியின் வாயால் செய்யப்பட்ட உருவக் கேலி அவர் ரத்த அழுத்ததை கண்டபடி உயர்த்தி விட்டது!
காலை நேரத்து வெயில் வேறு முகத்தில் அடிக்க, கண்கள் சொருக அப்படியே தரையில் விழுந்து விட்டார்.
விழுந்த இடம், அந்த அறையின் ஏ.சி. அவுட்டர் யூனிட் நேர் கீழே!
அங்கு ஏற்கனவே ஏ.சி. அவுட்லெட் தண்ணீர் கொட்டி கொட்டி தரையில் அந்த இடமே பாசான் பிடித்து இருந்தது!
அதன் மேல் தான் சதா விழுந்து கிடந்தார் சில நிமிடங்கள்!
பின் அவர் முகத்திலும் அந்த அவுட்லெட் தண்ணீர் விழுந்து அவரை மயக்கத்தில் இருந்து மீட்டது!
சுய நினைவுக்கு வந்தவர், வேகமாக எழுந்து,
அய்யோ, இந்த பிருந்தா மான்சி ரிஷி வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படுத்துமுன் போய் எல்லாவற்றையும் தடுக்க நினைத்து வேகமாக சென்றும், பயனில்லை!
அதற்குள் ரிஷி வார்த்தையை விட்டு விட்டான்!
மனதுக்குள் நடந்ததை எண்ணியபடி கண் மூடிக் கிடந்தவரை,
கன்னத்தை தட்டி எழுப்பினான் கவுதம்!
கண் விழித்தவர், அங்கு தலையில் இரு கைகளை வைத்துக் கொண்டு இன்னும் அதிர்ச்சியில் இருக்கும் ஸ்வாமிநாதனிடம் சென்று,
“அண்ணே, என்னை, என் குடும்பத்தை மன்னிச்சுடுங்க அண்ணே!” என்று சொல்லி அவர் காலில் விழ,
“டேய்.. யாருடா இவன்? என் குடும்பம் உன் குடும்பம்னு பிரிச்சுப் பேசிக்கிட்டு!
இப்ப என் கவலை எல்லாம் வெளியே இருக்கிற நம் சொந்தக்காரங்க, ஊர்க்காரர்களை எப்படி சமாளிக்க போறோம்னு தான்!
எனக்கு மான்சியை பத்தி தெரியும்! அருமையான பெண்! ஆனா அவளோட கோபத்துக்கும் நான் இப்ப மரியாதைக் கொடுக்க தான் வேணும்!
ரிஷி தான் அவன் வாழ்க்கையை சரி செஞ்சுக்கணும்!
இது நம்பிக்கை பத்தின விஷயம்!
என்ன தான் வீட்டுப் பெரியவங்களா இருந்தாலும், நாம் இதுல தலையிட முடியாது! கொஞ்சம் ஆறப் போடுவோம்!
காலம் எல்லாத்தையும் சரி பண்ணும்.
கொஞ்சம் பொறுமையா தான் இருக்கணும்!
அவசரத்துல கொட்டின வார்த்தையை, அது கொடுத்த வலியை பொறுமையா இருந்து தான் கடந்து வரணும்!
எல்லாம் ஈசன் செயல்! என்று மேலே காட்டி விட்டு,
“இப்போ ஜோவோட வாழ்க்கைக்கு என்ன பண்ண போறோம்? அது தான் இப்ப என்னோட யோசனையே!”
அதுக்கு நான் ஒரு வழி யோசிச்சு வச்சுருக்கேன். நடக்குமான்னு தெரியல! கேட்டுப் பார்ப்போம்! பெத்துட்டேனே என்ன பண்றது?
என்று சொல்லி அவர் ராஜூவை போனில் அழைத்தார்.
ராஜு, கொஞ்சம் நீ, தங்கச்சி, நவ்தீப் மூன்று பேரும் ரெண்டாவது மாடியில லிப்ட் பக்கத்துல இருக்கிற ரூமுக்கு வர முடியுமா? என்றார்.
error: Content is protected !!