Skip to content
Post Views: 3,604
எப்போது உறங்கினாள் எப்போது எழுந்தாள் என்றே தெரியவில்லை.
அதிகாலையிலே எழுந்து பொறுப்பாய் வேலைகளை தொடங்கிவிட்டாள்.
வாசல் தெளித்து கோலமிட்டு சாமி அறையில் விளக்கேத்தி கும்பிட்டாள். டிபன் சாம்பார் வைக்க பருப்பு ஊறவைத்துவிட்டு காபிக்கு பால் வைத்து விட்டு வெங்காயம் உரிக்க தொடங்கினாள்.
பால் காய்ந்தவுடன் தனக்கு மட்டும் காபி கலந்து கொண்டு ஹாலுக்கு வந்தாள். காபியை உறிந்து கொண்டே கண்ணாடியில் முகம் பார்க்க கண்ணீர் அருவியாய் கொட்டியது.
Advertisement
போலீஸ் அடி அல்லவா…. கன்றி போய் இருந்தது.
கோபம் கோபம் மனம் முழுதும் கோபம். கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இரவு தேய்க்காமல் குவிந்து கிடந்த அவ்வளவு பாத்திரத்தையும் பரபரவன்று துலக்கினாள்.
பாத்திரம் கழுவி அடுக்கிக் கொண்டிருந்தாள். என்ன சுபி அதுக்குள்ள எழுந்துட்ட? காத்தான் சம்சாரம் தான் வரேன்னு சொல்லல்லியிருக்காளே….. இவ்வளவு சாமானை துலக்கி இருக்க…. கவலை கொண்டார் பாப்பாத்தி.
Advertisement
அவள் பதில் எதுவும் பேசவில்லை.
Advertisement
வாடிய முகமும் கன்னத்தில் தடமும் அவரை பதற வைத்தது.
சுபி…. என்ன நடந்துச்சுன்னு நான் கேட்க மாட்டேன்! வெளியில் யாரோடவும் எதுவும் பேசிக்க வேண்டாம்மா என்றார் கெஞ்சுதலாய் அவள் கரம் பற்றி.
அவருக்கு தெரியாதா? எதை மெல்லலாம் என்று காத்திருக்கும் மூத்த மருமகள்கள் பற்றி…. அதிலும் சங்கீதா ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவாள்.
Advertisement
இந்த பையனுக்கு என்ன அவ்வளவு கோபம் வேண்டிகிடக்கு? ஊரான் வீட்டு பொண்ணை கட்டிக்கிட்டு வந்து இப்படி அடிக்கிறதா? ஓரகத்திக முகத்தை இவ எப்படி நிமிர்ந்து பார்ப்பா? சுபிக்கு எவ்வளவு சங்கடம்…. மிகுந்த கவலை அவருக்கு.
“———————-“
டீ போட்டு எடுத்துக் கொண்டு அவரே போனார்.
என்னமா சுப்பு இல்லையா? கொட்டாவி விட்டு உடம்பை வளைத்தான்.
தம்பி சின்னவனே நீ இப்படி நடந்துக்குவேன்னு நான் நினைச்சு கூட பார்க்கல என்றார் சுற்றி வளைக்காமல்.
அம்மா… என்ன நடந்துச்சுனா?
எது நடந்திருந்தாலும் அது அனாவசியம். நீ எப்படி கை நீட்டலாம்?
ஏற்கனவே நீ எப்படி குடும்பம் நடத்துவன்னு ஆர்வமா கூடி கூடி பேசிகிட்டாளுங்க உங்க அண்ணிகாரிங்க. இப்போ அவளுகளுக்கு குளு குளுன்னு இருக்கும். ஏம்ப்பா இப்படி? அவர் குரல் உடைந்து தளர்ந்து அமர்ந்துவிட்டார்.
ம்மா ஸாரி…. நான் வேணும்னு அடிக்கல…. தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருக்கிறவனுக்கு இந்த பேச்சு இன்னும் வேதனையை கொடுத்தது.
தம்பி இதுவே கடைசியா இருக்கட்டும்! நொண்டி மாடா இருந்தாலும் சண்டி மாடா இருந்தாலும் சாமர்த்தியமா வண்டியை ஓட்டிட்டு போகணும்!
“—————————-“
குடல் குழம்புலாம் நான் சாப்பிட்டதே இல்லத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்த்தாள் சுப்ரஜா.
குடல் அலசி சுத்தம் பண்றது ரொம்ப கஷ்டம் என்று சிரித்தவர் கவனமாய் குடலுக்குள் ஒரு குச்சை நுழைத்து பிரித்து அலசினார் பாப்பாத்தி.
எங்க வீட்டுல தீவாளினாலே இட்லி குடல் குழம்பு தான் ஸ்பெஷல்! பெருமை பீத்தினாள் சங்கீதா.
என்ன சுபி கன்னம் வீங்கின மாதிரி இருக்கு? அஞ்சலி குறுகுறுப்பாய் பார்த்தாள்.
பயத்துடன் பாப்பாத்தி நிமிர்ந்து பார்த்தார்.
அப்படியா? எனக்கு ஒன்னும் தெரியலையே வேண்டும் என்றே வலது கன்னத்தை தொட்டு பார்த்தாள்.
இந்த பக்கம்…. நல்லா சிவந்து இருக்கு…. அப்படியான்னு கேட்குற? வலிக்கலையா? அஞ்சலி நம்பாத பார்வை பார்த்தாள்
வண்டு ஏதாவது கடிச்சிருக்கும் இல்ல சுபி என்றாள் சங்கீதா.
அவள் கேட்ட தொனியிலும் இழுத்த இழுவையிலும் மளுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது சுபிக்கு.
அத்தை நான் இஞ்சி பூண்டு அரைச்சு வைக்கிறேன் என்று உள்ளே சென்றுவிட்டாள்.
அக்கா நிஜமா வண்டு கடிச்சிருக்கும்னு சொல்ற? வண்டு கடிச்சா இப்படியா இருக்கும்? அஞ்சலி விடுவதாய் இல்லை.
வண்டு கடிச்சதோ,அடிச்சதோ இப்போ அதுவா முக்கியம்? இன்னும் டிபன் ரெடியாகலை அதை போய் பாப்போம் வா! நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு போனாள் சங்கீதா. புரிந்துகொண்ட பாவனையுடன் கண்ணடித்து சிரித்தாள் அஞ்சலி.
வேதனையோடு சமைக்க போனார் பாப்பாத்தி.
மன்னர் காலையில் டிபன் கூட சாப்பிடாமல் கிளம்பிவிட்டான்.
யாரையும் பார்க்கும் தைரியம் அவனுக்கு இல்லை.
“———————”
இதை இப்போ யாருகிட்டயாவது சொல்லனுமே இல்லாட்டா என் மண்டை வெடிச்சிடுமே நான் என்ன செய்வேன்…. போனை எடுத்து தலையில் தட்டிக் கொண்டவள் தீபாவிற்கு அழைத்துவிட்டாள்.
தெரியுமா தீபா சேதி. இந்த குரங்கு பய பொண்டாட்டிகிட்ட கை நீட்டிட்டான் போல…. குரும்பூர்காரி கன்னம் வீங்கி கிடக்குறா! காலையிலே ஆரம்பித்து விட்டாள் அஞ்சலி.
என்னக்கா சொல்ற? தீபாவால் நம்ப முடியவில்லை.
அடிக்க மாட்டானே? தங்கம் தங்கம்னு கொஞ்சிட்டு தானே இருந்தான். என்னவா இருக்கும்? அவ்வளவு ஆவல் அவளுக்கு.
யாருக்கு தெரியும்? ராத்திரி சிரித்த முகமா போனா காலையில வீங்கி போய் வெளியில் வாரா…. இவளுக்கும் வாய் கொழுப்பு அதிகம். எடக்குமுடக்கா பேசி வாங்கி கட்டியிருப்பா…. ஆனாலும் அழுத்தகாரி தான் மூச்சு விடலையே….
மாமியார் கிழவிக்கு தெரியுமா?
தெரியாமலா இருக்கும்?. மருமகளையே பார்க்குது… கண்ணால பேசுது. என்னவோ நடக்குது போ!
சரிக்கா அவர் ஆபிஸ் கிளம்புறார் நான் நைட் பேசறேன் தீபா வைத்துவிட்டாள்.
இப்போ இந்த பேச்சு தேவையா? சரவணன் கடுப்பாகி விட்டான்.
என்ன பேசிட்டோம் எகிறிட்டு வறீங்க?
அவங்க புருஷன் பொண்டாட்டிகுள்ள என்னவோ நடக்குது நீ அதை லைவ் டெலிக்காஸ்ட் பண்ணனுமா? நீ எல்லாம் திருந்தாத ஜென்மம்!
அடடா…. நீங்க இருக்கப்போ பேசி தொலைவேனா என் புத்தியை சோட்டால அடிக்கணும்!..
வெளியில் தான் இருக்கு கொண்டு வந்து தரவா? முறைப்புடன் கேட்டான்.
அடி ஆத்தி இந்தாளு அடிச்சாலும் அடிச்சுடுவாரு….. உஷாராக வெளியேறி விட்டாள் அஞ்சலி.
“—————————-“
ஓரகத்திகள் அவளையே உத்து உத்து பார்ப்பது கண்டு பாப்பாத்திக்கு கஷ்டமாக இருந்தது. கூடுமானவரை அவளை தன்னோடே வைத்துக்கொண்டார்.
குடல் குழம்பும் இட்டலியும் தோசையும் சாம்பாரும் என்று கலந்து கட்டி சாப்பிட்டு ஓய்வெடுக்க ஒதுங்கி கொண்டனர் ஓரகத்திகள்.
சுபி சாப்பிடும்மா! கெஞ்சினார் பாப்பாத்தி.
பசிக்கலத்தை என்று மற்றுமொரு டீ போட்டாள் குடிப்பதற்கு.
மன்னர் சற்று முன்புதான் தாய்க்கு போன் பண்ணி இருந்தான் எப்படியாவது அவளை சாப்பிட வையுங்க என்று….
சுபி,குடும்பத்தில் பிரச்னை என்ன வேணா இருக்கட்டும் அதுக்காக வயித்தை காய போடக்கூடாது. அது என்ன பழக்கம் சண்டையில சாப்பிடாம போறது?
சொன்னா கேளும்மா அத்தைக்காக ஒரே ஒரு தோசை சாப்பிடு தங்கம்…. கெஞ்சி கெஞ்சி ஒரு தோசை சாப்பிட வைத்தார்.
சரி நீ போய் கொஞ்சம் தூங்கி எழுந்திரு…. மதியத்துக்கு சிம்பிளா ஏதாவது செய்துக்கலாம் என்றார்.
குழந்தைகளை கார்ட்டுன் பார்க்க விட்டு சங்கீதா அறையில் தஞ்சம் புகுந்திருந்தாள் அஞ்சலி.
நெனச்சேன்….. நக்கலாய் சிரித்தாள் சங்கீதா.
நானும் தான் நினைத்தேன் இப்படி நீங்க சிரிப்பீங்கன்னு…. அவளா அசருவாள்?
சரி அதை விடு! என்ன பிரச்சனையா இருக்கும்? மன்னாரு ரொம்ப கோபப்பட மாட்டானே… சங்கீதா மூளையை கசக்கினாள்.
மன்னாரு கோபப்பட மாட்டான் சரி….குரும்பூர்காரி கோபப்படுத்தி இருந்தா….?
கரெக்ட்! இது பாயிண்ட்…. இதுக்குதான் அஞ்சலி வேணும்ங்கிறது…
கிண்டல் இல்லைன்னு நம்புறேன்…. தோளை குலுக்கி சிரித்தாள் அஞ்சலி.
ஏதாவது கேட்டு அடம் புடிச்சிருப்பா…. அவனுக்கு பொறுமை பறந்து போயிருக்கும் கோவத்துல ஒரு தட்டு தட்டி இருப்பான்….. நேரில் பார்த்தது போல் அச்சரம் பிறழாமல் அழகாய் சொன்னாள் அஞ்சலி.
நீ எல்லாம் பிரதிலிபியில் கதை எழுதுனா வியூஸ் அள்ளும் அஞ்சலி. உனக்குள்ள எவ்வளவு பெரிய கதாசிரியர் ஒளிஞ்சி இருக்காங்க தெரியுமா? சங்கீதா வஞ்சப்புகழ்ச்சியாய் புகழ அது புரிந்தும் நக்கலாய் சிரித்து வைத்தாள் அஞ்சலி.
நம்மைப் பார்த்து நம்மை மாதிரி வாழனும்னு அவளுக்கு ஆசை….. நம்மைப் பார்த்து பார்த்து ஏக்கத்தில் எச்சில் முழுங்குறா. அவ கண்ணுல படக்கூடாதுன்னு தான் நான் போட்டிருந்த நகையெல்லாம் கழட்டி வச்சிட்டு வந்தேன் தெரியுமா என்றாள் சங்கீதா.
“—————————-“
என்ன பாப்பாத்தி ஏதோ யோசனையிலே இருக்க மாதிரி இருக்கு…. வெற்றிலையின் காம்பை கிள்ளி சுண்ணாம்பை பக்குவமாய் தடவினார் பூமாலை.
மாமரத்தடியில் கட்டிலில் அமர்ந்திருந்தனர் அந்த தம்பதியினர்.
என்ன இன்னைக்கு சின்னவன் நேரமா கிளம்பி போயிட்டான்?
அவன் பொண்டாட்டி கூட ஏதோ சண்டை போல…. ரகசியமாய் கிசுகிசுத்தார்.
என்ன சொல்ற?
அந்த புள்ள கன்னம் வீங்கி கிடக்கு!
பாப்பாத்தி….. மனுஷன் பதறிவிட்டார்.
யாரு கொடுத்த தைரியம்? அவன் போலீசா இருந்தா அவன் ஸ்டேஷனோட….. வீட்டுல வந்து வீரத்தை காட்டுவாராமா?
கொஞ்சம் பொறுமையா பேசுங்க! கெஞ்சினார் பாப்பாத்தி.
என்ன பொறுமை வேண்டி கிடக்கு? பொண்ணை பெத்தவங்க வந்து கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுவ?
கொஞ்சம் நிதானமா இருங்க…. என்ன நடந்துச்சுன்னு நமக்கு தெரியாது.
மன்னரை பத்தி நமக்கு தெரியாதா? அவன் உண்டு அவன் வேலை உண்டுங்கிற ரகம். பேராசை, பொறாமை எல்லாம் அவனுக்கு இல்லை. அவன் போக்குல எதார்த்தமா வாழறவன் அவனை இந்த பொண்ணு புரிஞ்சுக்கிட்டு அனுசரிக்க கூடாதா? கலங்கி தவித்தார் பாப்பாத்தி.
போலீசுல இருந்தாலும் நம்ம புள்ள பத்தரை மாத்து தங்கம். அவனுக்கு கோபம் வர அளவுக்கு இந்த புள்ள என்ன பேசுச்சோ…. மனம் தாளாது புலம்பினார்.
மருமகளும் நல்ல குடும்பத்து பொண்ணு தான்! பெரியவளுங்க கிண்டி கிளறி பார்த்தாளுங்க அந்த புள்ள வாயை திறக்கல…. அவ்வளவு பெருமை அவருக்கு.
மாமனாரும் மாமியாரும் பேசுவதை மல்லிகை பந்தலடியில் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள் சுப்ரஜா. விரக்தியான சிரிப்பு வந்தது.
வீட்டுக்கு பேசலாம் என்று போன் எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்தவள் அவர்கள் பேச்சில் நின்றுவிட்டாள்.
வீட்டில் பேசி மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது…? பெருமூச்சுடன் அறைக்குள் சென்று படுத்துவிட்டாள்.
“————————-“
இரண்டரை மணி போல எழுந்தவளுக்கு பசி வயிற்றை பிராண்டியது.
இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே… அவசரமாய் கிச்சனுக்கு ஓடினாள்.
வா சுபி சாப்பிடு!
மிளகாய் கிள்ளி போட்டு சாம்பார் வச்சிருக்கேன், அப்பளம் பொறிச்சிருக்கேன், முட்டை பொரியல் பண்ணியிருக்கேன் என்றார் பாப்பாத்தி.
என்னை எழுப்பி இருக்கலாமே என்றாள் சங்கடமாய்.
சிம்பிளா தானே செய்தேன் உன்னை ஏன் தொந்தரவு பண்ணனும்?
பக்கத்தில் உட்கார்ந்து அவளை சாப்பிட வைத்துவிட்டு தான் மறுவேலை பார்த்தார்.
சுபி சரவணனுக்கு சுழியம் சாப்பிடணும் போல இருக்காம். சாயந்திரம் செய்வோமா என்றார்.
சரிங்கத்தை என்றாள்.
அத்தை ரவை, மைதா, வெல்லம் போட்டு பணியாரம் ஊத்துவீங்களே அது சூப்பரா இருக்கும் என்றாள் சங்கீதா.
வந்ததே தின்று கொழுக்க தான் என்பது போல் இருந்தது.
எந்நேரமும் சமைக்க,சாப்பிட, பாத்திரம் கழுவ ,டீ போட ஸ்னாக்ஸ் செய்ய என்றே மூன்று நாட்களாக செல்கிறது. பாப்பாத்தி பாவம் முடியாவிட்டாலும் இழுத்து பிடித்து செய்து கொண்டிருக்கிறார்.
“—————————“
கடலை பருப்பு பூரணத்தை உருண்டைகளாக்கி மைதா கரைசலில் முக்கி எண்ணெயில் பொரித்துக் கொண்டிருந்தார் பாப்பாத்தி.
டீயில் ஏலக்காய் இஞ்சி தட்டி போட்டுக் கொண்டிருந்தாள் சுபி.
நேரமாய் வீட்டுக்கு வந்திருந்தான் மன்னர். இன்ஸ்டாவில் ஏதோ ரீல்ஸ் காட்டி சங்கீதா சிரிக்க அஞ்சலி அதை பார்த்து இன்னும் சிரிக்க… கிச்சனுக்குள் எட்டி பார்த்தான். அங்கே மாமியாரும் மருமகளும் வியர்வை பூக்க வேலை செய்து கொண்டிருந்தனர்.
சுப்பு கொஞ்சம் வா! சத்தமாய் அழைத்துவிட்டு அறைக்குள் போய்விட்டான்.
இந்தா டீ, சூடா சுகியம் ரெண்டு எடுத்துட்டு போ என்றார் பாப்பாத்தி.
உள்ளே நுழைந்தவளை கண்டவன் உன் போன் எங்கே என்றான்?
அவள் பதில் பேசாது ஸ்னாக்ஸ் தட்டை டேபிலில் வைத்தாள்.
அவன் கால் செய்கிறான் மெசேஜ் செய்கிறான் என்று கடுப்பில் சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்தாள்.
உங்க அம்மா கால் பண்ணி இருந்தாங்க! டீயை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.
அம்மாவா என்னாச்சு? பதறினாள்.
ஒண்ணுமில்ல உங்க அண்ணி வந்திருக்காங்கலாம்… அவங்களுக்கு உடம்பு சரியில்லையாம்.
அண்ணிக்கு என்னாச்சு?அவள் படபடப்புடன் போனை தேட…. உன்னை பார்க்கணும் போல இருக்காம். ஊருக்கு போய் வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுது தானே? கிளம்பு ஊருக்கு போகலாம் என்றான்.
இந்நேரத்துலயா? நாளைக்கு….
ஏன் இப்போ மணி நாலு தானே ஆகுது. போய் கிளம்பு! கட்டளையாய் சொன்னான்.
தாயிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
அக்கா நான் ஊருக்கு போயிட்டு வரேன் என்றாள் ஓரகத்திகளிடம்.
அவன் பொண்டாட்டி ரொம்ப வேலை செய்றாளாம் அது தான் ஆத்தா வீட்டுக்கு அழைச்சுட்டு போறான் கிசுகிசுத்தாள் சங்கீதா.
எப்போ வருவீங்க என்றாள் அஞ்சலி?
போயிட்டு போன் பண்ணி சொல்றோம் என்றான் மன்னர்.
சுபி புகுந்த வீட்டு பிரச்னையை பிறந்த வீட்டுக்கு கொண்டுட்டு போக கூடாது. பெத்தவங்க மனசு கஷ்டப்படும் என்றார் பாப்பாத்தி.
பைக் சாவியை எடுத்துக் கொண்டு மன்னர் முன்னே சென்றான்.
கார் எடுத்துட்டு போக வேண்டியது தானே என்றார் பாப்பாத்தி.
இன்னும் RC மாத்தலைம்மா என்றான்.
சுப்ரஜா வண்டியில் ஏறி அமர…. கரகாட்டகாரன் கார் உனக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும்! அது தான் பைக்லே போகலாம் என்றான்.
————தொடரும்————
கதையை படிச்சுட்டு கமெண்டை அள்ளி தெளிப்பீங்களாம்.
error: Content is protected !!