Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நமக்காக 💞37

நீங்க கொஞ்சம் குடிங்களேன்…. பாவமாய் கெஞ்சினாள்.

நானா பிள்ளையை சுமந்துகிட்டு இருக்கேன்…. உதடு கடித்து சிரித்தான்.

நீங்களும் தான் அப்பா ஆகிட்டீங்க பிள்ளையை வளர்க்க உங்களுக்கும் தெம்பு வேணும் தானே? 

நல்லா பேச கத்துக்கிட்ட போ….! அடக்க முடியாமல் சிரித்து விட்டான்.



Advertisement

காசு கொடுத்து பால் வாங்கினால் கொஞ்சமா கொடுப்பாங்க வீட்டிலேயே மாடு இருக்கு…. அதுக்காக இப்படி அரை லிட்டர் பாலா கொண்டு வருவீங்க? அதிருப்தியாய் முகம் சுணங்கினாள்.

வெறும் பாலா குடிக்கிறதுனால உனக்கு கஷ்டமா இருக்கு நாளைக்கு பாதாம் மிக்ஸ் வாங்கிட்டு வரேன். 

என்ன கலந்தாலும் எனக்கு பால் பிடிக்காது உதடு பிதுக்கினாள் பாவமாய்.

Advertisement

உனக்கு யார் கொடுக்கிறது? குழந்தைக்கு தான்.

Advertisement

அப்போ உங்க குழந்தை வந்த உடனே கொடுங்க! சிலுப்பிக்கொண்டாள்.

என் குழந்தை வந்த உடனே எப்படி கொடுக்கனும்னு எங்களுக்கு தெரியும். இப்போ உன் மூலமாக தானே கொடுக்க முடியும்? வம்படியாய் அவளை மிரட்டாமல் பாதி பாலை அவன் குடித்துவிட்டு மீதியை அவளுக்கு கொடுத்தான். பிடிக்காமல் குடித்து வாந்தி எடுத்து விட்டால் கஷ்டம் தானே….?

  நான் ஊருக்கு போனபோது இங்கே ஏதோ கொஞ்சம் சலசலப்பு போல? கணவன் புறமாய் ஒருக்களித்து படுத்து ஆர்வமாய் கேள்விக்கணைகளை தொடுத்தாள்.

Advertisement

அதெல்லாம் ஒன்னும் இல்ல… கொஞ்ச நேரம் தூங்கு! அவனுக்கு அசதியாய் இருந்தது.

எனக்கு தூக்கம் வரலை போலீஸ்கார்.

உங்க அம்மாவை கூப்பிடவா?

எதுக்கு?புரியாமல் கேட்டாள்.

தாலாட்டு பாட தான்…. சிரிப்பை அடக்கிக் கொண்டு கண் மூடி தூங்க முயன்றான்.

கொழுப்புதான்! கொணட்டினாள்.

இல்லையே பர்ஃபெக்ட் பிட்டா இருக்கேனே…..

லூசு…. தலையணையை அவன் மீது எறிந்தாள்.

நீ பகல் நேரத்தில் நல்லா தூங்கிடற உனக்கு நைட்டில் தூக்கம் வரல….

இனிமே அப்படித்தான் இருக்குமாம் அத்தை சொன்னாங்க!

வேற என்ன சொன்னாங்க உங்க அத்தை?

ம்ம்ம்ம்…. சொத்து பிரிக்க முயற்சி பண்ணின கதையை கூட சொன்னாங்க எங்க அத்தை. அழுத்தம் திருத்தமாய் அவன் முகத்தைப் பார்த்தாள்.

தூங்கு சுப்பு… அவளுக்கு முதுகு காட்டி படுத்து விட்டான்.

அதுதானே உங்க குடும்பத்தை பத்தி பேசினா பேச்சை பக்குவமா மாத்திடுவீங்களே….

” அது என்ன உன் குடும்பம் என் குடும்பம்? “அடிபடுவ! 

உனக்கு சொல்ல வேண்டிய விஷயம் என்றால் கண்டிப்பா சொல்வேன். அதெல்லாம் உப்பு சப்புக்கு பெறாத விஷயம் அதை போய் உனக்கு ஏன் சொல்லி கஷ்டப்படுத்தணும்? குடும்பம் என்றால் சின்ன சின்ன சலசலப்பு வர தான் செய்யும் மண்டைல ஏத்திக்க கூடாது. இப்போ நீ மகிழ்ச்சியா இருக்க வேண்டிய காலகட்டம்.

தூங்குமா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு! 

“————————–“

பூஜை அறையில் சாமி கும்பிட்டு மருமகளுக்கு விபூதி பூசிவிட்டவர் வேப்பிலை பறித்து அவள் தலையில் சொருகினார் பாப்பாத்தி.

எதிரில் யாரு வராங்கன்னு பாத்துட்டு வரேன்…. சகுணம் பார்த்து வந்தார்.

ஜூஸ், தண்ணீர், ஸ்னாக்ஸ் என்று பையில் தயாராய் எடுத்துவைத்திருந்தார்.

கிளம்பலாம் மன்னரு என்றார் மகனிடம்

ஜாக்கிரதையா போயிட்டு வாங்க என்றார் பூமாலை.

அனைத்தையும் பார்த்துக் கொண்டு அவர்களோடு கிளம்பினார் நவமணி

கரகாட்டகாரன் காரில் தான் போகப்போறோம் என்றான் மனைவியிடம்.

அவள் கோபமாய் முறைத்து பார்த்தாள்.

மன்னர் காரை கிளப்ப சுப்ரஜா முன்னால் அமர்ந்து கொண்டாள், நவமணியும் பாப்பாத்தியும் பின்னால் ஏறிக் கொண்டனர்.

மன்னர் கார் வாங்கும் எண்ணம் கொண்டதே இதற்கு தான்.

இன்று தான் அவள் இந்த காரில் பயணிக்கிறாள்.

கள்ளக்குறிச்சியின் புகழ்பெற்ற கோட்டைமேடு ஸ்ரீ சஞ்சீவி மருத்துவனையில் தான் அப்பாயின்மெண்ட் வாங்கியிருந்தான்.

புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் பவானி தணிகாசலம் அவர்களை பார்க்க காத்திருந்தனர்.

அடிக்கடி மனைவி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஜூஸ் குடிக்கிறியா சுப்பு? அவள் சோர்வாக இருப்பது போல் தோன்றியது அவனுக்கு.

கேட்டுகிட்டு இருக்க…. எடுத்து கொடு! மகனை கடிந்தார் பாப்பாத்தி.

அத்தை வீட்டில் இருந்து வந்து அரைமணி நேரம் கூட ஆகல…. சாப்பிட்ட இட்டலி இன்னும் செரிமாணம் ஆகல….. சலித்துக் கொண்டாள் சுபி.

இது போல் தன்னால் கவனித்துக் கொள்ள இயலாது என்று எண்ணினார் நவமணி. மூத்த மகள் தேவிகா கர்ப்பமாக இருந்த போது கூட இப்படி எல்லாம் அவர் கவனித்துக் கொள்ளவில்லை.

ஏன் இரு வாரங்களுக்கு முன்பு மருமகள் சுகன்யா கர்ப்பம் என்று வந்து நின்றபோதும் இப்படி ஈடுபாட்டுடன் இவ்வளவு அக்கறை எடுத்து அவர் கவனிக்கவில்லை.

மகளுக்கு அமைந்த வாழ்வை எண்ணி அவ்வளவு பூரிப்பு அவருக்கு.

சிறுநீரகம் மற்றும் ரத்தம் பரிசோதனைக்கு கொடுத்துவிட்டு காத்திருந்தார்கள்.

ரிப்போர்ட் வர ஒரு மணிநேரம் ஆகும் என்றார்கள்.

நவமணியும் பாப்பாத்தியும் வெளியே சென்றுவிட்டார்கள் மரத்தடி பிள்ளையாரை வழிப்பட.

மொபைலை நோண்டிக் கொண்டிருந்தாள் சுபி. டப்பாவில் இருந்த பாதாமை எடுத்து நீட்டினான்.

சும்மா திணிச்சுக்கிட்டே இருக்கீங்க…. முணு முணுத்துக் கொண்டே இரண்டு எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

அதிகம் மொபைல் பார்க்காதே சுப்பு என்றான்.

ம்ம்ம்ம்ம் என்றவள் “மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் போல…. பீஸ் அதிகமோ?” விழி விரித்துக் கேட்டாள்.

அதனாலென்ன என்றான்.

ஒண்ணுமில்ல என்றாள்.

அவள் கேட்க வந்தது அவனுக்கு புரிந்தது. 

கோபம் கொப்பளித்தது…. அப்படி என்ன கஞ்சத்தனத்தை கண்டு விட்டாள் என்னிடம்.

மருத்துவர் அழைக்கும் வரை அவன் எதுவும் பேசவில்லை.

ரிப்போர்ட் வந்துவிட்டது என்று உள்ளே அழைத்தார்கள்.

கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. ஐம்பது நாட்கள் கடந்துவிட்டது இன்றே ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்றார் மருத்துவர்.

ஸ்கேன் பார்த்து கருவின் வளர்ச்சி நன்றாக இருப்பதாக கூறினார்.

என்னென்ன சாப்பிட வேண்டும் என்றெல்லாம் பாப்பாத்தி மருத்துவரிடம் கேட்டுக் கொண்டார்.

எது சாப்பிட்டாலும் வாந்தி எடுக்குறா அதுக்கு ஏதாவது மருந்து மாத்திரை கொடுங்க! என்றார்.

கர்ப்ப காலத்தில் அப்படி தான் இருக்கும் என்று சிரித்த மருத்துவர் அதற்கும் சேர்த்தே மாத்திரை எழுதினார்.

அடுத்த செக்கப்பிற்கு மூன்றாம் மாதம் வர சொன்னார்.

மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டு கிளம்பினர்.

“————————“

அமைதியாகவே இருந்தான் மன்னர்.

ஹோட்டலுக்கு சென்று மதிய உணவை முடித்துக் கொண்டனர்.

ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை, ஏன் மனைவியை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

அவளுக்கு புரிந்து போனது.

வீட்டுக்கு வந்தவுடனே ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார் நவமணி. வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது அந்த மனுஷன் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்? என்று புலம்பினார்.

குட்டி எனக்கு கூட இப்படி பார்த்துக்க தெரியாது உன் மாமியாரும் புருஷனும் உன்னை அப்படி தாங்குறாங்க. 

சந்தோஷமா இருக்கணும்! நல்லா சாப்பிடணும். பொறுமையா இருக்கணும் என்று மகளுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர் கிளம்பினார்.

அண்ணி பார்த்துக்கோங்கன்னு சொல்லவே தேவையில்லை. நீங்க உள்ளங்கையில் வைத்து தாங்குறதை நான் பார்த்துகிட்டு தான் இருந்தேன். 

நெகிழ்ச்சியுடன் பாப்பாத்தி கரம் பற்றி விடைபெற்றார்.

மாமியாரை கொண்டுப்போய் பஸ் ஏற்றி அனுப்பி வைத்தான் மன்னர்.

மன்னரு எழில் தீபாக்கு இந்த நல்ல செய்தியை சொல்லணும் என்றார் பாப்பாத்தி.

சொல்லுங்க என்றான்.

எப்படி சொல்ல? தயங்கினார்.

இரண்டரை ஆண்டுகளாகிறது அவர்களுக்கு திருமணமாகி. இன்னும் மழலை வரம் கிட்டவில்லை. இந்த ஆறுமாதமாக மருத்துமனைகளுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருக்கு. அவ மனசு கலங்குவாளே….

ம்ம்மா அவங்களுக்கு எப்போவோ தெரிந்திருக்கும்! உங்க மூத்த மருமகளுங்க டமாரம் அடித்திருப்பாங்க. இருந்தாலும் நாம சொல்லி ஆகணும். இல்லைனா தப்பாகிடும்.

சுப்பு நீ கால் பண்ணி தீபா அண்ணிக்கு பேசு என்றான்.

அவள் போன் செய்தாள், உடனே அழைப்பு ஏற்க்கப்பட்டது.

நலம் விசாரிப்புகள் எல்லாம் முடிந்து அக்கா நீங்க பெரியம்மா ஆகப்போறீங்க என்றாள் சுபி.

அப்படியா சந்தோஷம் சுபி என்றாள்.

அடுத்து என்ன பேசுவது என்று சுபிக்கு தெரியவில்லை.

கல்யாணம் ஆன கையோட குழந்தை பாக்கியம் கிடைக்கிறது கொடுப்பினை சுபி.பணத்தை பணமா பார்க்காம தண்ணியா செலவு பண்ணிட்டு இருக்கோம் ஆனா கடவுள் எங்க விஷயத்துல கண்ணை திறக்கல. எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்!

சுபிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நாங்க பணத்தை கொட்டி வைத்தியம் பார்க்கிறோம் நீ பைசா செலவு இல்லாமல் உண்டாகி விட்டாயே என்ற மறைப்பொருளா இது?

தீபாக்கு சொன்னாலும் தவறு, சொல்லாவிட்டாலும் தவறு என்ற நிலை தான்.

அவருக்கு லீவ் கிடைக்கிறப்போ நாங்க பார்க்க வரோம் என்றாள்.

சரிங்கக்கா உங்களுக்கு டைம் கிடைக்கும் போது வாங்க!

அக்கா கவலை படாதீங்க சீக்கிரம் நல்லது நடக்கும், நம்பிக்கையோட இருங்க என்று பேச்சை முடித்துக் கொண்டாள்.

ஸ்பீக்கர் போட்டு அவள் பேசுவதை மன்னரும் பாப்பாத்தியும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.

மன்னருக்கு உள்ளுக்குள் அவ்வளவு வருத்தம். எப்படி பேச வேண்டும் என்பதே சிலருக்கு தெரிவதில்லை. பிறர் மனம் சங்கடப்பட்டால் நமக்கென்ன?  நாம் பேச வேண்டியதை எல்லாம் பேசி விடுவோம் என்ற மனநிலையிலேயே இன்று நாட்டில் முக்கால் வாசிப்பேர் இருக்கிறார்கள்.

தீபாவை குறை சொல்வதற்கு இல்லை அவளின் ஆதங்கம் அவள் ஏதோ புலம்புகிறாள் என்றே எண்ணிக்கொண்டனர்.

“——————————-“

மருமகளை அமர்த்தி உப்பு மிளகாய் சுத்தி விறகடுப்பில் போட்டு திருஷ்டி கழித்தார் பாப்பாத்தி.

நேரமாகவே இரவு உணவை முடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் நடக்கணும் என்று கட்டளையிட்டார்.

இரவில் தினம் தோசை சாப்பிடுபவளுக்கு இன்று இட்லி ஊற்றி கொடுத்தார்.

இரவு அறைக்குள் வரும்போது மொபைல் பார்த்துக் கொண்டிருந்தான் மன்னர். நண்பர்கள் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அவள் வந்து நின்றதை அவன் கண்டு கொள்ளவே இல்லை.

தன்னை திரும்பி பார்ப்பான் ஏதாவது பேசுவான் என்று அசையாமல் நின்றாள்.

அவன் கண்டு கொள்ளாது படுக்கையை விரித்து படுத்து விட்டான்.

பொறுக்க இயலாதவளாய், “என்ன கோபம்?” என்று அவன் அருகில் அமர்ந்து விட்டாள்.

ஒன்னும் இல்ல நீ போய் படு! என்றான்.

எனக்கு புரிஞ்சிடுச்சு என்றாள்.

அதுதான் புரிஞ்சிடுச்சே அப்புறம் என்ன? போய் நேரமா மாத்திரை போட்டு தூங்கு.

எது சொன்னாலும் குத்தமா போகுது உங்களோட. முகம் சுளித்தாள்.

என்ன தப்பா கேட்டுட்டேன்?அந்த ஹாஸ்பிடலில் செலவு அதிகமாகும். நீங்க கொஞ்சம் யோசித்து செலவு பண்ணுவீங்களே… சங்கீதா அக்கா கூட சொன்னாங்க கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனாலும் போவீங்கன்னு.

செருப்பால அடிப்பேன் மூடிகிட்டு போய் தூங்கு. அவ்வளவு கோபம் தெறித்தது அவன் வார்த்தையில்.

பயத்துடன் அவனைப் பார்த்தாள். அடித்து விடுவானோ என்று உள்ளுக்குள் ஒரு நடுக்கம்.

கோபத்தை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதால் அவனுக்கு மேலும் கீழுமாய் மூச்சு வாங்கியது.

ஏன் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் அவ்வளவு மட்டமா? அங்கே பிரசவம் பார்த்துக்கிறவங்க மனுஷங்க இல்லையா?

கவர்மெண்ட் வேலையில் இருக்கும் மாப்பிள்ளை வேணும் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் வேணாமா?

உங்க சங்கீதா அக்கா பெரிய டேஷ்….. அவங்களுக்கு என்ன அவங்க புருஷன் லட்ச லட்சமா ஐடியில் சம்பாதிக்கிறான் என்ன வேணா பேசுவாங்க.

அப்போ கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் தான் டெலிவரி பார்ப்பீங்களா? தான் ஒரு அரைவேக்காடு என்று இப்போதும் நிரூபித்தாள்.

தயவுசெய்து வாயை மூடு. இருக்கிற கோபத்திற்கு கையை நீட்டிடுவேன்.

நாங்க இல்லாதபட்டவங்க எங்க சக்திக்கு தான் செய்ய முடியும். முதல் டெலிவரி அம்மா வீட்டில் தானே பார்க்கணும்?உங்க அம்மாவை அப்பலோவில் கூட்டிட்டு போய் பார்க்க சொல்லு! விளக்கை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டான்.

அவனிடம் இந்த பேச்சை எதிர்பார்க்காதவள் கண்ணீருடன் படுத்துக் கொண்டாள்.

தன் கணவன் இப்படி பேசக்கூடியவன் அல்ல என்று அவளுக்கு தெரிகிறது. ஆனாலும் அந்த வாய் சும்மா இருப்பதில்லையே…. எதையாவது உளறி கிளறி ஏழரையை இழுத்து விட்டு விடுகிறாள்.

இதோ பார் அந்தக்கா அதை சொன்னாங்க இந்த அக்கா இதை சொன்னாங்கன்னு என் காதுக்கு வரவே கூடாது.

அவங்க சங்கீதா நீ சுப்ரஜா. அவங்க புருஷன் ஐடி எம்ப்ளாயி உன் புருஷன் போலீஸ் கான்ஸ்டபிள்.  இதை எப்பவும் மறக்காதே சொல்லிட்டேன்.

கடுமையாய் பேசிவிட்டு வேறு புறம் திரும்பி படுத்துக் கொண்டான்.

அழுது கொண்டே அவள் உறங்கி விட்டாள் அவனுக்கு தான் உறக்கம் போக்கு கட்டியது.

இவளை என்னதான் செய்ய? எப்படி திருத்த? சோர்ந்து போனான்.

இந்த மாதிரி நேரத்தில் அவளை கோபப்படுத்தக் கூடாது என்பது புரிந்தது. 

பிள்ளை பெற்று வளர்க்க கூட வக்கில்லாதவன் என்றா நினைத்துக் கொண்டாள்? மனம் கசந்தது. அழகான மனைவி அமைவதை விட அனுசரணையான மனைவி அமைவது வரம்! பெருமூச்சுடன் போராடி உறங்க முயன்றான்.

“————————“

காலையில் அவள் கண் விழிக்கும் போது அறைக்குள் மன்னர் இல்லை.

இரவில் நடந்த பேச்சுவார்த்தையை எண்ணி பார்த்தவளுக்கு அவ்வளவு சோர்வாக இருந்தது. தான் பேசிய விதம் தவறு என்றும் அவளுக்கு பட்டது.

படுக்கையை விட்டு எழ வேண்டும் என்று தோன்றவில்லை. கண்மூடி படுத்திருந்தவள் சோர்வுடன் மொபைலை எடுத்து பார்த்தாள். மனதிற்கு இதமாய் ஏதாவது இன்ஸ்ட்டாவில் பார்க்கலாம் என்ற எண்ணம். இன்றைய நாள் தொடக்கமே வருத்தத்துடன் அமைந்து விடுமோ என்ற பயம்! மனதை திசை திருப்பத்தான் மொபைலை கையில் எடுத்தாள்.

மன்னர் மெசேஜ் அனுப்பி இருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!