புன்னகை அவளைக் காந்தமாக இழுத்தது. “ஆர், உங்க பேர். வீ?” எனக் கேள்வியாக அவனைப் பார்த்தாள். ‘கேள் பிரெண்டுன்னு சொல்லிடாத’ என மனம் அடித்துக் கொண்டது.
Advertisement
புன்னகைத்தவன் பதில் கூறவில்லை. வீ-யின் சொந்தக்காரன் நினைவில் மூழ்கினான் ராஜீவன்.
இவர்களின் பின் நின்று கைப்பேசியில் பட நாயகனுடன் பேச்சுவார்த்தையில் இருந்த கௌதமன் காதில் ‘டாட்டூ’ விழ அவன் பார்வையின் திசை மாறியது. நிஹிராவின் பார்வை சென்ற இடத்தைப் பார்த்தவன் மனம் படபடக்க, கரம் தன்போல் கேசத்தினுள் நுழைந்து தன் பிடரியை வருடியது. சில நாள்களாகவே நேரம் காலம் பாராமல் படப்பிடிப்பை மட்டுமே நினைவில் வைத்து சலனமின்றி ஓடிக் கொண்டிருந்தவனுள் மீண்டுமா சிறு கல் விழுந்தது. ஜீவனிடம் கேட்டால் தன் மார்பில் இருக்கும் டாட்டூவை பற்றித் தெரிந்து கொள்ள முடியுமா? தெரியலாம்… ஆனால் என்னவென்று கேட்பது? ‘இதயம் இன்னும் துடிக்கிறது… முன்பொரு காலத்தில் அது யாருக்காகத் துடித்தது தெரியுமா?’ என்றா? பெருமூச்சு வந்து போனது.
Advertisement
இத்தனை நாள்களாக ஜீவனை இவன் கவனிக்கிறான், அவன் கவனம் முழுவதும் செய்யும் தொழிலில் மட்டுமே உள்ளது. பேசுவான் சிரிப்பான், ஆனால் முதல் முதலாகப் பார்த்த ஜீவனிடம் இருந்த அந்த உயிர்ப்பு இன்றைய ஜீவனிடம் இல்லை. அவன் மௌனமும், முகத்தில் படிந்திருக்கும் மெல்லிய சோகக் கீற்றின் காரணமும் அறிய மனம் கூப்பாடு போட, விக்ரமை அழைத்தான்.
அட்லீஸ்ட் அவனோட ஃயூனரலுக்கு வந்திருந்தா ஒரு கிளோஷர் கிடைச்சிருக்கும். ஹாஸ்பிட்டல்ல நடந்த எல்லாமே வெளி உலகத்துக்கு மறைச்சுட்டோம். சோ… என்னால இவனுக்கும் ஒண்ணும் சொல்ல முடியல. இவனா விஷயம் தெரிஞ்சு திருச்சிக்கு வந்து சேரும் போது அவனோட சாம்பல கூட கண்ணுல பாக்க முடியல. இவனுக்கும் சேர்த்து சிரிச்சுகிட்டே… அவன் போட்டோ ஃபிரேமுக்குள்ள போயிட்டான்.
உயிர்ப்பே இல்லாம இருக்கானே, கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு பார்த்தாங்க. ஒருத்தி காதல்ங்கிற பேர்ல அவன அசிங்கப்படுத்தி விட்டா. வீர் இருந்தான் தாங்கி பிடிக்க. அடுத்தவ… ப்ச்… நீ தான் கல்யாணம் நின்ன அழக நேர்ல பார்த்தியே. இவனுக்கு என்ன குறை? ஒரு கெட்ட பழக்கம் இல்ல. ரொம்ப பாசமா இருப்பான். கையில ஒரு தொழில். அன்பான குடும்பம். பாக்கவும் அவ்வளவு ஹேன்சம். அவனுக்கு இப்படி ஆகும்ன்னு நானே எதிர்பார்க்கல.
Advertisement
அதோட ஓஞ்சு போயிட்டான். நானா பேசினா, எண்ணி ரெண்டு வார்த்த பேசுவான். அவனுக்கு என் மேல கோபம். வீர் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனது தெரிஞ்சும், அவன் கூடவே இருந்தும், ஏன் ஒரு வார்த்த சொல்லன்னு சட்டைய பிடிச்சான். ‘நீ எல்லாம் ஒரு ஃபிரெண்டு’ன்னு ஒரு பார்வை பார்த்தான். அவ்வளவு தான். ஒதுங்கிட்டான்.
பாவம் டா அவன், வீர் ஏற்படுத்தின வெற்றிடத்த நிரப்ப ஆள் இல்லாம, கேமரா மட்டும் தான் அவன் வாழ்க்கைன்னு ஓடிட்டு இருக்கான்.”
மதியம் வரை காத்திருந்து, ஹீரோ வருவதற்கான அறிகுறிகள் இல்லாது போகவும் ஷூட்டிங் ரத்தாகிவிட, வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தவன் காதுகளில் விக்ரம் கூறியது ஒலித்துக் கொண்டிருந்தது. மனம் வெகுவாய் வலித்தது. உயிர்த் தோழனாம். வீரின் பிரிவு, உயிரை பிடுங்கியது போல் அவனுக்கு வலிக்கிறதாம்.
தன்னால் அவனின் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா? அவனிடம் பேசவேண்டும். உண்மையைக் கூறினால் என்ன? எப்படியாவது ராஜீவனின் வாழ்வைச் சரி செய்தே ஆகவேண்டும் என மனம் கூப்பாடு போட்டது.
யோசனையோடே கிளம்பியவன் உணவை மறந்திருக்க, வீட்டின் மதில் சுவருக்குள் நுழைந்த பின்னரே வயிறு என்ற ஒன்று இருப்பது நினைவில் வந்தது. வீடு பூட்டியிருக்க, கௌதமன் முகம் கேள்வியைத் தேக்கி நின்றது. இவன் கதவைத் திறக்காது நெற்றியை தேய்த்து நிற்பதைப் பார்த்த வாயில் காவலாளி, “ஏதாது பிரச்சனைங்களா” எனக் கேட்டுக் கொண்டே ஓடிவந்தான்.
“ஓஹ்… தேங்கஸ்” என்றவன் அவசர அவசரமாக மகளைக் காண விரைந்தான்.
‘பகலெல்லாம் இரவாகிப் போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன’ வீட்டினுளிருந்து கசிந்த இசை அவனை வருடியது. வரிகள், எந்த அர்த்தத்தில் எழுதப்பட்டதோ… இருந்த பசியிலும் களைப்பிலும் அவனுக்கு விடியா இரவு வேண்டும் போல் இருந்தது.
சாத்தியிருந்த கதவை தட்டவென அதில் கை வைக்க, கை பட்டதும் கதவு தானாகத் திறந்து கொண்டது. திறந்த கதவின் வழி வாடிய பூக்களின் வாசம் நாசியைத் தொட்டது. நடுக்கூடத்தில் பாய் விரித்து அதில் அச்சோ அம்மாவும், அவள் கரத்தில் குட்டி மகளும் நல்ல உறக்கத்திலிருந்தனர்.
மகள் நிறம் தீட்டியிருந்த புத்தகத்தின் தாள்கள் படபடத்துக் கொண்டிருந்தன மின்விசிறியின் உபயத்தால். ஓரமாகக் கிடந்த கட்டிடம் கட்டும் பிளாக்ஸ், படங்கள் கொண்ட குட்டி குட்டி அட்டைகள், நிறம் தீட்டும் கிரையான்ஸ், சிதறிக் கிடந்த பல வகை மலர்கள்… மகளின் நாள் எப்படிக் கடந்தது என்பதைச் சத்தமாக உரைத்தன.
ஒரு பக்கமாகச் சரிந்து படுத்திருந்த யசோவின் இடுப்பில் ஒற்றைக் காலும், மற்றது அருகில் இருந்த தலையணையிலுமாக மகள் குட்டி வாய் பிளந்து உறங்கிக் கொண்டிருக்க, மகளை அணைத்துப் படுத்திருந்த யசோவின் மீது அவன் பார்வை சென்றது. எந்த யோசனையுமின்றி அவளைப் பார்த்தே நின்றிருந்தான்.
மகள் தூக்கத்தில் புரண்டாள். தூக்கத்தினிடையே யசோ மகளை மார்போடு அணைத்தாள். மகள் நிம்மதியாக உறக்கத்தைத் தொடர்ந்தாள். இருந்த அசதிக்கு அப்படியே அவர்கள் அருகில் படுத்துக் கொள்ள மனம் ஆசை கொண்டது.
ஆசை பேராசையாக மாறிய நொடி, ‘நான் படுத்துக் கொண்டால், என்னையும் அணைத்துத் தூங்க வைப்பாயா?’ என மனம் சத்தமாகக் கேட்டது. காதலோ காமமோ இல்லை… அவன் தலை சாய்க்க, கண்மூட, அவன் துயர் போக்கி நித்திரை தர ஒரு தோள் தேவைப்பட்டது. அவ்வளவு தான். ஆனாலும் அவன் சிந்தனை சென்ற திசை? அடுத்த நொடியே தன் மனம் செல்லும் திசையைப் பார்த்துப் பயந்து போனான் கௌதமன்.
கதவைத் திறந்த பின்னும் உள்ளே நுழையாது நின்றிருந்தவன், இதற்கு மேல் நிற்பது சரி இல்லை என நினைத்து கதவை இருந்த வாக்கிலேயே சாத்தி, வெளியே செல்லத் திரும்பவும், அரவிந்தன் வந்தார்.
“வா பா கௌதமா, யாழிய தேடி வந்தியா? பால் வாங்கப் போயிருந்தேன்… டையர்டா தெரியற… வா காபி வச்சு தரேன்” என அவர் கௌதமனை அழைக்க,
“இல்லங்க ஐயா இருக்கட்டும். அவங்க ரெண்டு பேரும் தூங்கிட்டு இருக்காங்க” என இவன் பதில் கொடுக்க, சத்தம் கேட்டு விழித்த யசோ எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.
இவன் முகம் சரியில்லாததைக் கண்டு, மகளுக்காக வருந்துகிறானோ என நினைத்தவர், “சளி பிடிச்சதுல உடம்பு கத கதன்னு இருக்கவும் பிளே ஸ்கூலுக்கு அனுப்பல. இன்னைக்கு ஒரு நாள் பார்த்துட்டு நாளைக்கு டாக்டர்ட்ட காட்டலாம். பயப்படர அளவுக்கு ஒண்ணும் இல்ல“ என ஆறுதல் வார்த்தை கூறினார்.
கதவு திறக்கும் அரவத்திற்குத் திரும்பிப் பார்த்தவன் பார்வை யசோவின் மீது நிலைத்து நின்றது. தூக்கம் கலையாது பாதிக் கண்கள் மூடிய நிலையில், “அம்மா” என வந்த குழந்தையை இடுப்பில் தூக்கி வைக்க, மகள் அன்னையின் தோளில் முகம் பதித்தாள். அணைத்துப் பிடித்த குழந்தையும், வளைந்த இடையும், கலைந்த தலையும், கசிந்த கண்மையுமாகக் கௌதமன் கண்களுக்கு உயிர் ஓவியமாகத் தெரிந்தாள் யசோதரா.
மகளின் தலை யசோவின் கழுத்தில் உரசியதின் விளைவாக மகளில் உச்சிக் குடுமியில் பூத்திருந்த பன்னீர் பூக்கள் அதன் நறுமணத்தை வீசின. மூச்சை ஆழ உள்ளிழுத்தவனுக்குள் மலர் அதன் மணத்தைப் பரப்பியது. சம்பந்தமே இல்லாது, அவன் கண்ட கனவு நினைவில் வந்தது. இதே வாசத்தோடு அவன் கையில் இருந்த மலரோடு அவன் வனதேவதையைப் பார்த்தது கனவு என்பதை மறந்து அந்தக் கனவு தேசத்தினுள் மீண்டுமாக நுழைந்தான்.
அங்கு அவள், அந்த மங்கலான வெளிச்சத்தில் அவனுக்கு முதுகைக் காட்டி நின்றிருந்தாள். அவன் கரத்திலிருந்த வெண் மலர்கள், கௌதமனுக்கு முதுகைக் காட்டி நின்ற வனதேவையின் விரித்திருந்த கார்கூந்தலில் நட்சத்திரங்களாகக் கண்சிமிட்டின. காலம் காலமாக இவனுக்கு உரிமைபட்டவளை அணைப்பது போல், இடையோடு அவளைக் கட்டிக்கொண்டு கூந்தல் காட்டில் முகம் புதைத்தான். பூ குவியலுக்குள் அவளோடு விழுந்தவன் உடல் சுகத்திலும், மனம் ஆனந்தக் களிப்பிலும் திளைத்தது. “உனக்கான என் அன்பை இன்னும் எவ்வளவு நாள் அடக்கி வைப்பேன்?” என அவள் மேனியில் காதல் பேசினான். காமத்தில் திளைத்தான். கரடு முரடான பயணக் களைப்பு தீர அவள் மார்பில் புதைந்தான்.
உயிரோடு உடல் இணைந்தால் இப்படித் தான் இருக்குமோ? உள்ளுக்குள் அடக்கி வைக்க முடியாது காதல் கரைபுரண்டது. “விட்டுவிட்டுச் சென்றுவிட மாட்டாயே?” சோகம் வழியக் கேட்டவளிடம், “என் இதயம் துடிக்கும் வரை” எனச் சத்தியம் செய்தான். காதலியின் மென் மார்பில் வழிந்த வியர்வை துளி அவன் முகத்தை ஈரப்படுத்தியது.
“உள்ள போப்பா” என்ற அரவிந்தனின் சத்தம் அவனைக் கானகத்திலிருந்து அழைத்து வந்தாலும், கரம் முகத்தில் இல்லாத ஈரத்தைத் துடைத்தது.
அவன் வனதேவதையோடு கனவில் காதல் புரிந்ததும்… பெருங்காதலோடு அவள் பின்னோடு சென்றதும்… அவள் முகம் காண இவன் முயல, தொங்கிக் கொண்டிருந்த பூக்களுக்கு இடையே மந்தகாசப் புன்னகையோடு அவனைப் பார்த்து கண் சிமிட்டியது என அனைத்தும் கண்முன் தோன்ற உடல் கூசியது. அந்த ஒரு முறை மட்டுமா… எத்தனை முறை வந்தாள்? பல இரவுகளையும், பல பகல்களையும் இரக்கமற்றதாக மாற்றிச் சென்றவள், அவள் முகத்தை மட்டும் காட்டியதே இல்லை.
“வாங்க” என வாயசைத்த யாசோ, அவன் வீட்டினுள் நுழைய வழிவிட்டு முன்னே நடந்தாள். கலைந்திருந்த பின்னலில் அங்கும் இங்குமாக பன்னீர்ப் பூக்கள் சொருகப்பட்டிருக்க, அவை நட்சத்திரங்களாகக் கௌதமனை பார்த்துக் கண்சிமிட்டின. இதயம் படபடக்க, கௌதமனின் உள்ளங்கை ‘இதயம் துடிக்கும் வரை உன்னோடு’ என்ற வாசகம் தாங்கியிருந்த இதயப் பகுதியை அழுந்த தேய்த்துவிட்டது.
“உள்ள போப்பா” என்ற அரவிந்தனின் சத்தம் ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து வருவது போலிருந்தது.
முகத்தை மட்டும் திருப்பி, தூக்கம் கலையா விழியை ஒரு முறை மூடி திறந்து கௌதமனை பார்த்து மந்தகாசப் புன்னகையை சிந்திச் சென்றாள், கௌதமனின் கனவு காதலி.
“விழுந்தாழும் உன் கண்ணில், கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில், நினைவாக நான் எழுவேன்
மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உனையே தான் மீண்டும் சேர்வேன்
இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே”
யசோவின் கைப்பேசியில் சிந்துஜாவும் விகானும் பாடலை உருகி உருகிப் பாடிக் கொண்டிருந்தனர். கௌதமன் உறைந்து நின்றிருந்தான்.