Skip to content
Post Views: 6,408
கணவன் நேற்றிரவே சென்றிருக்க, மகன் மகளும் இல்லாத நிலையில் வீட்டிலிருக்க முடியவில்லை. அதோடு திருனேஷ்வரனின் அன்னைக்கு தன்னைப்பற்றி தவறான கருத்திருக்கும், அவர்கள் இங்கிருக்கும்போதே அதை சரி செய்திடலாம். அது தனது கடமையும் கூட என்று கிளம்பி வந்துவிட்டார்.
காவல்துறையின் வாகனத்தில் வந்ததோடு, சீருடையில் வரவும், “திருனேசு…” என்றார் உள்ளே போன குரலில்.
அன்னையின் பதட்டத்தில் வாயிலைப் பார்த்த திருனேஷ்வரன் “வாங்க மேடம்… ஹேப்பி மார்னிங்” என வரவேற்றான் மலர்ந்த முகத்தோடு.
“ம்” என்றபடி காலனியை கழற்றிவிட்டு உள்ளே வந்தவர், “எப்படி இருக்கிங்க?” என்றார் திருனேஷ்வரனின் அன்னையிடம்.
Advertisement
“நல்லா இருக்கோம் மேடம்” என்றவர், “உக்காருங்க” என்று எழுந்து நின்றார்.
“நீங்களும் உக்காருங்க” என்று, “எங்கடா உன் பொண்டாட்டி?” என்றார் திருனேஷ்வரனிடம்.
“உள்ள இருக்கா மேடம், கூப்பிடட்டுங்களா?”
Advertisement
“அப்புறம் கூப்பிட்டுக்கலாம்” என்றவர், “தப்பு செய்யாம தண்டனை அனுபவிச்சிருக்கான். ஜெயில்லயிருந்து வெளில வரவங்களுக்கு வேலை கிடைக்குறது அவ்வளோ ஈஸி கிடையாது. கையில காசில்லாம என்ன பண்ணுவானு ஹெல்ப் பண்ணினேன். அதை தப்பா நினைப்பிங்களா?” என்றார் செல்லம்மாவிடம்.
Advertisement
ரூபலஷ்மி என்னவோ திருனேஷ்வரன் நல்லவன் என்று புரிய வைக்கத்தான் பேசினார். ஆனால் சீருடை அணிந்திருப்பதாலோ என்னவோ… அவரின் அதிகாரபலம் தன்போல் வந்திருக்க, குரல் அதட்டலாக வந்தது.
“அப்படியில்லங்க” என செல்லம்மாள் திணற… அன்னையின் பயத்தை சகிக்க முடியாமல் “என் அம்மா பாவம் மேடம்” என்றான் பாவமாக.
திருனேஷ்வரனை முறைத்து, “எனிவே… நீங்களாவது உங்க மகனை நம்புறிங்களா?” என்றார் வில்வராஜிடம்.
Advertisement
“நான் மட்டுமில்லங்க மேடம், என் பொண்டாட்டியும் நம்புறா. பட்ட கஷ்டமும் மனவேதனையும் எல்லாத்தையும் தப்பா நினைக்க வச்சிடுச்சு. திருனேஷ் எடுத்து சொல்லவும் செல்லம்மா புரிஞ்சிக்கிட்டா.” என்றார் பணிவாக.
“உங்களை தப்பா நினைச்சதுக்கு மன்னிச்சிடுங்க” என்று மனமாற மன்னிப்பு வேண்டினார் செல்லம்மாள்.
“ஹம்” என நிம்மதியாக சொல்லி, “இனி உன் செலவை நீ பார்த்துப்பதான? வாடகை நான் கட்ட தேவையில்லல்ல?” என்றார் திருனேஷ்வரனிடம்.
“நான் பார்த்துக்கிறேன் மேடம், வீட்டை காலி பண்ணிக்கலாம்னு இருக்கேன்”
“ஏன் இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்? பாதுகாப்பான ஏரியா”
“பொன்மணிக்கு இங்கயிருந்து ரொம்ப தூரம் ட்ராவல் பண்ண வேண்டிவரும் மேடம், அதான்”
“கூப்பிடு அவளை” என்றார்.
இவன் அழைக்கவே பொன்மணி வெளியே வந்தாள். சத்யப்ரகாஷால் கற்பழிக்கப்பட்டபோது, திருனேஷ்வரன் நலன் கருதி தன்னை உண்மையை சொல்ல வைக்க பெரு முயற்சி எடுத்த ரூபலஷ்மியை நன்றாக நினைவிருந்தது பொன்மணிக்கு.
ரூபலஷ்மியை பார்த்ததும் கண்ணீர் வந்துவிட, கை கூப்பி வணங்கி “சாரி மேடம்” என்றாள்.
“ச்சுப்… பழசெல்லாம் நினைக்கக்கூடாது. உன்னை விரும்பி கல்யாணம் செய்திருக்கான். சந்தோசமா வாழப்பாரு. உன் புருசனையும் சந்தோசமா வச்சுக்கோ” என்று கிளம்ப எழுந்தார்.
“டிபன் சாப்பிடுறிங்களா? பத்து நிமிஷத்துல செய்துடறேன்” என்றாள்.
“தண்ணி மட்டும் கொடு, டைமாகுது” என்று தண்ணீர் வாங்கிப் பருகி, “நீ வா” என்று திருனேஷ்வரனிடம் சொல்லி முன்னே சென்றார்.
வண்டியினுள் ஏறி அமர்ந்த பின்னே, திருனேஷ்வரனின் சான்றிதழ்கள் அடங்கிய பையை நீட்டினார் அவனிடத்தில்.
தனது சான்றிதழாகத்தான் இருக்கும் என்று தெரிந்த போதும், தன் கண்பார்க்க வைக்க வேண்டி, “என்னதுங்க மேடம்?” என்றான்.
“உன் சர்ட்டிஃபிகேட்ஸ்”
“என்னை பார்க்க மாட்டிங்களா மேடம்?”
ரூபலஷ்மியின் கண்கள் கலங்கிவிடவே, “சாரி… அன்ட் தேங்க்ஸ்” என்றார் ஸ்டியரிங்கில் தாளமிட்டபடி.
“இரண்டுமே எனக்கு வேணாம் மேடம், இதை சொல்லி என்னை அவாய்ட் பண்ணப் பார்க்குறிங்களா?”
ரூபலஷ்மி இயலாமையோடு பார்க்க, “எதுக்கு மேடம் இப்படி கில்ட்டா ஃபீல் பண்றிங்க?” என்றான்.
“உனக்கு தெரியாதா?” என கடுகடுத்து, “அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடாத” என்றார்.
சிரித்தவன், “உங்க ஆட்டிட்டியூட் பார்க்கவும் அட்வைஸ் பண்ணத்தான் நினைச்சேன்” என்று, “சின்ன விசயத்துக்கு தேங்க் பண்றிங்க, அப்போ நானெல்லாம் உங்களுக்கு லைஃப்லாங் தேங்க் பண்ணிட்டே இருக்கனும்” என்றான்.
இவன் பெருந்தன்மையானவன் என்பதுதான் ரூபலஷ்மிக்கு தெரியுமே. ஆனாலும் நானாக அத்தனை இழைந்தும் இவன் விலகி நின்றதால்தான் தைரியமாக நேரில் வந்து பேச முடிகிறது. அதற்காகவே பெரிய நன்றியை சொல்ல வேண்டும் என நினைத்தார்.
நன்றியை ஏற்றிருந்தால் கூட இத்தனை நிம்மதி கிடைத்திருக்காது. தன்னிடமிருந்து அவன் எதிர்பார்ப்பது தோழமைதானே தவிர நன்றி கிடையாது என்பதும், இத்தனைக்குப் பிறகும் தன்னை கீழாக பார்க்காமல் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் குணமும், திருனேஷ்வரனின் உரிமையான பேச்சும், பெரும் நிம்மதியை கொடுக்க, “இதை பிடி. எனக்கு டைம் ஆகுது, கிளம்பனும்” என்றார்.
சான்றிதழ்களை வாங்கியவன், “உங்க ஃப்ரண்ட்ஸிப் எனக்கு லைஃப்லாங் வேணும் மேடம், எதாவது உதவினா உங்களுக்குத்தான் கால் பண்ணுவேன்” என்று உரிமையாய் சொல்லியே ரூபலஷ்மிக்கு விடைகொடுத்தான்.
வீட்டினுள் வர, செல்லம்மாள் “என்னை மன்னிச்சிடு திருனேசு” என்றார் மனதாற.
“விடுங்கம்மா” என்று அன்னையை தேற்றி “குளிச்சிட்டு வரேன், சமையல் அவளை செய்ய சொல்லவா? இல்ல நீங்க செய்றிங்களா?” என்றான்.
சுமூக சூழலில் இருக்கும்போதே அனைத்தையும் பழகிக் கொள்ளலாம் என்று “மருமகளை சமைக்க சொல்லு திருனேசு” என்றார் வில்வராஜ்.
“நானே செய்யிறேன்ங்க” என்று சமையலறைக்குள் சென்றார் செல்லம்மள்.
உண்டு முடித்ததும் பொன்மணியை அவளின் அலுவலகத்தில் விட்டுவிட்டு, பெற்றோரையும் படுக்கும் வசதி கொண்ட பேருந்தில் ஊருக்கு அனுப்பி வைத்து அலுவலகம் சென்றான் திருனேஷ்வரன்.
*** *** *** *** *** ***
ஒரு மாதம் முடிந்திருக்க, இன்று அதீத சந்தோசத்தில் இருந்தான் திருனேஷ்வரன். ஜெர்மன் ப்ராஜக்ட் முடிவடைந்து உழைப்பிற்கான பணம் அவனின் கைக்கு வந்திருந்தது.
அதோடல்லாமல் அடுத்த ப்ராஜக்ட்டையும் தன் வசமாக்கியிருந்தான். இவ்வளவு பணம் அவனுக்கா என்று ராஜ்குமாருக்கு தாள முடியாத ஆற்றாமைதான்.
ஆனால் அவனில்லாமல் இது சாத்தியமல்ல என்பதாலும், அவனிடம் முரண்டு பிடித்தால் நட்டம் நமக்குத்தான் என்று மாமனார் எச்சரித்ததாலும் அமையானான்.
காலை பதினொரு மணிபோல் மனைவிக்கு அழைத்தான். “என்னங்க இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கிங்க?” என கிசுகிசுத்தாள் பொன்மணி.
“புருசன் பொண்டாட்டியை எதுக்குடீ கூப்பிடுவான்?” என இவனும் கிசுகிசுக்க, குப்பென முகம் சிவந்தாள் பொன்மணி.
“என்ன பேச்சை காணோம்? கனவுலகத்துக்கு போய்ட்டியா?” என்றான் கிண்டலாக.
“எம்.டி பக்கத்து கேபின்லதால் இருக்காரு. என்ன விசயம்னு சீக்கிரம் சொல்லுங்க”
“பர்மிஷன் போட்டுட்டு கிளம்பு” என்றான் கட்டளையாக.
“அச்சோ… இப்போவா? சத்தியமா முடியாது. மதியம் வேணும்னா ட்ரை பண்றேன்”
“போடீ” என்று இணைப்பை துண்டித்தவன் அன்னைக்கு அழைத்தான்.
மகனின் நலம் விசாரித்து, “ஊருக்கு வாயேன்டா” என்றார் ஏக்கமாக.
“வரேன்ம்மா” என்றவன் “உனக்கென்ன வேணும்?” என்றான்.
“என்ன வேணும்னா?”
“கம்மல், செயின் இப்படி”
“பணம் நிறைய இருக்கோ?” என்றார் மகிழ்வோடு.
“ம்… அதனாலதான கேட்குறேன்”
“எனக்கு ஏதும் வேணாம், கடனும் பெருசா ஏதும் இல்ல”
“சரி எனக்கு பிடிச்சமாதிரி நானே எதாவது வாங்கறேன்” என்று இணைப்பை துண்டித்து, வீட்டிற்கு கிளம்பினான்.
உடல்நிலை சரியில்லை என்று எம்.டி முன்னே போய் நின்றவள், பல திட்டுகளை வாங்கிய பின்னே ஒரு வழியாக அனுமதி கிடைக்க, மகிழ்வோடு வீட்டிற்கு கிளம்பினாள் பொன்மணி.
இப்படியெல்லாம் வேலை நேரத்தில் அழைக்கமாட்டான், என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி பயணம் செய்தவளுக்கு அசோகனிடமிருந்து அழைப்பு வந்தது.
நலம் விசாரித்த பின்னே, “கலை வீட்டுக்கு வந்துருக்காம்மா” என்றார்.
“நான்தான் சொன்னேனேப்பா…” என மகிழ்ந்தவள், “நீங்க பேசுனிங்களாப்பா?” என்றாள்.
“ம்… பேசினேன். பேசியாக வேண்டிய சூழ்நிலை. அதனால பேசினேன்”
தந்தையின் குரலில் சிறிதும் மகிழ்வில்லை என தற்போதுதான் புரிய, “என்ன விசயம்ப்பா?” என்றாள்.
“திருனேஷ்வரனும் எங்க அனுமதியில்லமத்தான் தாலி கட்டினான், என் புருசனை மட்டும் ஏத்துக்கமாட்டேங்குறிங்க, பொன்மணியோட பேசுறமாதிரி என்கிட்ட பேசமாட்டேங்குறிங்கனு பழசேதான் பேசினா. ஆனா அதுல புதுசா ஒரு விசயம் சேர்ந்திருக்கு”
“என்னப்பா? அவளுக்கும் அவ புருசனுக்கும் எதாவது பிரச்சனையாகிடுச்சா?” என்றாள் பதட்டத்தோடு.
“அப்படியொன்னும் தெரியல. ஆனா சொத்து எதிர்பார்க்குறா, அவளுக்கான பங்கை எதிர்பார்க்குறா. உன்மேல உள்ள பாசத்துல அவளுக்கு கொடுக்காம விட்டுடுவோம்னு நினைக்கிறா”
“கொடுத்துடுங்கப்பா, என்னைக்கானாலும் கொடுக்குறதுதானே?”
“சரிம்மா, உனக்கு லன்ச் டைம் முடிஞ்சிடும், சாப்பிடு” என்க, “இல்லப்பா… பர்மிஷன் போட்டுட்டு வீட்டுக்கு போய்ட்டிருக்கேன், அவர் வர சொன்னார்” என்றாள்.
“சரிடா சரிடா… பார்த்து பத்திரமா போ” என்று இணைப்பை துண்டித்தார்.
பின்னே அஞ்சும் அழைத்து பெரிய மகள் எதிர்பார்ப்பதையும், அதை சொன்ன தோரணையும் சொல்ல, கோபத்தோடு வேதனையும் சேர்ந்திட, “அப்படிலாம் முடியாதுனு சொல்லிடும்மா, நீங்க இரண்டு பேரும் பார்த்து கொடுக்குறதுதான். வேணும்னா வாங்கிக்கட்டும், வேணாம்னா அவ இஷ்டம்” என்று கோபமாக சொல்லி இணைப்பை துண்டித்தாள்.
*** *** *** ***
சரியாக ஒரு மணிக்கு பொன்மணி வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே வர “டோய்” என சத்தமாய் சொல்லி பயமுறுத்தி அணைத்துக்கொண்டான் பேரன்போடு.
“என்ன இன்னைக்கு இவ்வளோ சந்தோசம்?”
“ம்… ரொம்ப சந்தோசமா இருக்கேன், ப்ராஜக்ட் முடிச்சி இன்னைக்கு பார்ட்டி செலபரேட் பண்ணினோம். என்னோட ஷேர் மட்டும் செவன்ட்டி ஃபைவ் லாக்ஸ். என் அக்கௌண்ட்ல இருக்கு. சாப்பிட்டு ஷாப்பிங் போலாம்” என்றான்.
முகம் கை கழுவி, தனக்கானதை கைப்பையிலிருந்து எடுத்து வெளியே வைத்து, திருனேஷ்வரனுக்கான உணவை எடுக்க கிச்சன் சென்றவள், காலையில் சமைத்து வைத்ததை பார்த்து, “காலைல சொல்லியிருந்தா இப்போ சூடா சமைச்சிருப்பேன், வேற சமைக்கலாம்னா வேஸ்ட் பண்ண வேண்டாம்னு சொல்லுவிங்க” என்று குறைபட்டபடி குழம்பை சூடுபடுத்தி எடுத்து வந்தாள்.
“எனக்கு பிரச்சனை இல்ல, உனக்கு வேணும்னா வேற சமைச்சுக்கோ, இல்லைனா ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாமா?” என்றான்.
“வேணாம், இதையே சாப்பிடலாம்” என்று பரிமாறி, “என்ன ப்ளான்? என்ன வாங்கனும்?” என்றாள்.
“முதல்ல உனக்கு ஒரு தாலிக்கொடி வாங்கனும், அப்புறம் அம்மாக்கு, வெண்பாக்கு உனக்கு கொஞ்சம் நகைகள் வாங்கனும். எனக்கு பைக் வாங்கனும். இப்போதைக்கு இதான் என் ப்ளான். உனக்கு வேற என்ன வேணும்னு யோசிச்சிக்கோ” என்றபடி உண்டான்.
“வாங்க வாங்க எல்லா பணத்தையும் காலி பண்ணிடறேன்” என்றாள் சிரிப்போடு.
“அதுக்குத்தான சம்பாதிக்கிறது?” என சாப்பாடு கையோடு செல்லமாக கன்னத்தை பிடித்து ஆட்ட, “அச்சோ… இப்போதான் முகம் கழுவினேன்” என முறைத்தவாறு உண்டாள்.
“முறைச்சினா முகம் கழுவறதோட போகாது. குளிக்க வச்சிடுவேன்” என்றான் மிரட்டலாக.
திருனேஷ்வரன் பேச்சு கவனத்தில் பதியாதது போல உண்ட பாத்திரங்களை எடுத்துக்கொண்டு சமையலறை புகுந்தாள் சிவந்த முகத்தோடு.
பின்னே இருவரும் பிரபல நகைகடைக்கு சென்றனர். தன் அன்னை போட்டுருப்பது போல திருனேஷ்வரன் கொடி காண்பிக்க, “ரெகுலர் யூஸ்க்கு இவ்வளோ பெருசு வேணாம்ங்க. சின்னதா போதும்” என்றாள்.
பொன்மணியின் விருப்பப்படி சிறிதாய் கொடி வாங்கியவன், தனது விருப்பப்படி அன்னை மனைவி, தங்கை மூவருக்கும் நகைகள் வாங்கினான்.
“வேற எதாவது எமர்ஜன்ஸியா வாங்கனும்னா சொல்லு, இல்லைனா பைக் வாங்க போலாம். கோவிலுக்கு போய் பூஜை பண்ணிட்டு, ரூபலஷ்மி மேடம் வீட்டுக்கு போய் பைக்கை விட்டுட்டு வரனும்.
“எதுவும் வேணாம். பெரிய அமௌண்ட்டா இருக்கு, யூஸ்ஃபுலா எதிலாவது இன்வஸ்ட் பண்ணங்களேன்” என்றாள்.
“ம் பண்ணலாம் பண்ணலாம், அதுக்காக தேவைகளை குறைச்சிக்கனும்னு இல்ல. உனக்கு டிரஸ் ஏதும் வேணாமா?” என்றான்.
“வேணாம். நிறைய இருக்கு.
“எல்லாம் சுடிதார். சேரி வாங்கலாம், நீ சேரி கட்டி இன்னும் நான் பார்க்கவேயில்ல” என்று அழைத்துப் போனான்.
ஒரு வழியாக இவர்கள் வேலைகளை முடித்து, ரூபலஷ்மியின் வீட்டிற்கு வந்தான் மாலை ஐந்து மணிபோல.
இந்த நேரம்தான் யுகன் யுகதி வீட்டில் இருப்பார்கள் என்று கணக்கிட்டு வந்தான்.
திருனேஷ்வரனை வரவேற்ற சந்திரா “யுகன் யுகதி இரண்டு பேரும் ஊர்ல இருக்காங்க தம்பி, நாளைக்குத்தான் வருவாங்க, மேடம் வரதுக்கும் எட்டு மணிபோல ஆகிடும்” என்றார்.
ரூபலஷ்மிக்கு அழைத்து “புது பைக் வாங்கிட்டேன் மேடம்” என்றான்.
“கங்ராட்ஸ்…” என வாழ்த்தி, “என் பைக்கை குகன்கிட்ட கொடுத்துவிடு, நான் கால் பண்ணி சொல்றேன்” என்றார்.
“நானே எடுத்துட்டு வந்துட்டேன் மேடம். உங்க வீட்டுலதான் இருக்கேன்” என்றான்.
“ஓ… சரி சாவியை சந்திராகிட்ட கொடுத்துடு” என்றார்.
“உங்கப்பா யூஸ் பண்ணின பைக் கொடுத்துருக்கிங்க. நன்றின்ற வார்த்தைலாம் பத்தாது” என்றவன்… சில நொடிகளுக்கு பின்னே “என்னை உங்க ஃப்ரண்ட் லிஸ்ட்ல வச்சிருக்கிங்கதான?” என்றான்.
“ம்… ஆனா ஃப்ரண்ட்ஸோட டைம் ஸ்பெண்ட் பண்ற அளவுக்கு நான் வெட்டி கிடையாது. வைடா போனை” என்று இலகுவாக சொல்லி இணைப்பை துண்டித்தார் ரூபலஷ்மி.
ஒன்பது மணிபோல வீட்டிற்கு வந்தவன், “எங்கடீ கிளம்பிட்ட?” என்றான் அதிர்வாக.
இன்று உல்லாச மனநிலையில் இருந்தவனுக்கு, மனைவி கிளம்பி நிற்பது அதிர்ச்சியை உண்டாக்க, வாயிலிலேயே நின்றிருந்தவனை கைப்பிடித்து உள்ளே இழுத்து, “வெண்பாவை பார்க்க திருநெல்வேலி கிளம்பலாம்” என்றாள்.
“இன்னைக்கேவா? நாளைக்கு போலாம்டீ” என்றான் கெஞ்சலாக.
“ம்ஹூம்… அடுத்த ஒர்க் ஸ்டார்ட் பண்ணிட்டா எங்கேயும் வரமாட்டிங்க. இன்னைக்கே கிளம்பியாகனும்”
“சரி ஒரு மணி நேரம் கழிச்சு போலாம்”
“வேணாம் சாமி… ஒரு மணி நேரம்னு சொல்லி ஒரு மணிக்கு விடுவிங்க. நான் உள்ளயே வரமாட்டேன். சமைச்சு வச்சிருக்கேன். சாப்பிட்டதும் கிளம்பனும். வெண்பாக்கு கால் பண்ணி காலைல அங்க இருப்போம்னு சொல்லிட்டேன். அவ எதிர்பார்த்திட்டிருப்பா. ஏமாத்தக் கூடாது. சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புங்க” என்றாள் கட்டளையாக.
தங்கையிடம் சொல்லிவிட்டாளா? எத்தனை முறை வருவதாக சொல்லி போகாமல் ஏமாற்றுவது என்று நினைத்தபடி “ரொம்பத்தான்டீ ஆர்டர் போடுற, திருநெல்வேலி போய்ட்டு வந்ததும் இருக்கு உனக்கு” என முறைத்தபடி உணவுண்ண அமர்ந்தான்.
error: Content is protected !!