Skip to content
Post Views: 6,780
பொன்மணி தயாராகி வந்ததும் “கிளம்பறோம்ங்க” என்று எழுந்தார் செல்லம்மாள்.
நெகிழ்ந்த மனதோடும், ததும்பி நிற்கும் கண்ணீரோடும் தலையசைப்பில் மகளுக்கு சம்மதம் கொடுத்தார் அசோகன்.
செல்லம்மாவும் வில்வராஜும் அவர்களின் வண்டியில் முன்னே செல்ல, சம்பந்தி சென்றதும் “ஒரு நிமிஷம் பொன்மணி” என்று உள்ளே சென்று சிறிது இனிப்பும், மகளுக்கு மாற்று துணியும் பையில் போட்டு எடுத்து வந்து பொன்மணியிடம் கொடுத்தார்.
பின்னே மகளின் கன்னம் தடவி திருஷ்டி கழித்து, “சோம்பலா இருக்குனு படுத்துடாத. பதவிசா நடந்துக்கோ” என்று முணுமுணுத்து மகளை மருமகனோடு அனுப்பி வைத்தார் அஞ்சுகம்.
Advertisement
ஒரு தெருதானே? இதோ ஐந்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்திருந்தனர். முன்னே வந்த செல்லம்மாள் ஆரத்தியோடு தயாராக நின்றிருந்தார். மகன் மருமகளுக்கு சுற்றிப்போட்டு, உள்ளே சென்று விளக்கேற்றப் பணித்தார்.
சொன்னதை செய்ததும், “ட்ராவல் பண்ணினது டையர்டா இருக்கும். மதியம் சாப்பாடு செய்துட்டு கூப்பிடறேன், போய் ரெஸ்ட் எடு திருனேசு” என்று அவ்விடம் விட்டு நகர்ந்தார் செல்லம்மாள்.
தனதறைக்கு மனைவியை அழைத்துச் சென்று, தனது கையை வெற்றிப் புன்னகையோடு விரிக்க, மிகுந்த காதலோடு கட்டுண்டாள் கணவனிடம்.
Advertisement
“ஆன்ட்டி இவ்வளோ சீக்கிரம் மாறுவாங்கனு நினைச்சே பார்க்கலங்க.” என்றவளுக்கு குரல் கரகரத்தது.
Advertisement
“ம்… நானும்தான்” என்றவன், “என்னடி இவ்வளோ அழகா இருக்க?” என்றான் ரசனையாக.
இத்தனை நேரம் நன்றாக இருந்த பொன்மணிக்கு சட்டென தடுமாற்றமாகிட, வீடும் சுற்றுவது போல இருக்க, “ஏங்க… எனக்கு ஒருமாதிரி” என்றவள் அதற்குமேல் பேச த்ராணியில்லாமல் மயங்கி சரிந்தாள்.
சட்டென மனைவியை தாங்கியவன், “என்னாச்சு? பொன்மணி” என்று கன்னத்தை தட்ட, அசைவில்லை பொன்மணியிடம்.
Advertisement
பதறியவன் தண்ணீரைத் தேட, அறையில் தண்ணீர் இல்லை என்றதும் பெட்டில் படுக்க வைத்து அவசரமாய் வெளியே வந்து தண்ணீரை எடுத்துக்கொண்டு உள்ளே போக, மகனின் பதட்டத்தில் செல்லம்மாவும் பின்னோடு சென்றார்.
தண்ணீர் முகத்தில் பட்டும் லேசாய் முகம் சுருக்கினாளே அன்றி கண் திறக்கவில்லை பொன்மணி. செல்லம்மாவிற்கு புரிந்துவிட்டது. ஆனால் மகனிடம் எப்படி கேட்பதென, “ஏங்க… டாக்டரை கூட்டிட்டு வாங்க” என்று கணவனை அவசரப்படுத்தினார் அதீத மகிழ்வோடு.
செல்லம்மாவின் சந்தோசத்தில் “அப்படியா இருக்கும்?” என்று மனைவியிடம் கிசுகிசுத்தபடி பைக்கை எடுக்கப்போக, “அப்பா, ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போலாம். அசைவில்லாம கிடக்குறா” என தவித்தான் திருனேஷ்வரன்.
“அட இருடா… இங்க இருக்க டாக்டரைதான் பார்க்க போறாரு. அந்த பொண்ணு வீட்டுக்கே வந்து பார்க்கும்” என்று மகனை அமைதிப்படுத்த, பிறகுதான் அன்னை பதறாமல் இருக்கிறாங்களே, அப்படியும் இருக்குமோ என்று திருனேஷ்வரனுக்கு தோன்றியது.
அதீத மகிழ்வோடு மனையிடம் சென்றவன், அவளின் தலையை தன் மடிமீது வைத்து, நகைகளை அகற்றினான். பொன்மணி லேசாய் கண்விழிக்க, “தண்ணி குடி” என்று மெதுவாக வாயில் ஊற்றி, முகத்தை துடைத்து விட்டு “என்ன பண்ணுது?” என்றான் தவிப்பாக.
தெரியவில்லை என்பதாய் உதட்டை பிதுக்கினாள். “அப்பா டாக்டரை கூப்பிட போயிருக்கார். வந்துடுவார்” என்று மனைவியை தேற்றிக்கொண்டிருந்தான்.
அதற்குள் செல்லம்மாள் வெண்பாவிற்கு அழைத்து பேசினார் பெரும் மகிழ்வோடு. பத்து நிமிடத்தில் மருத்துவரோடு வந்தார் வில்வராஜ்.
பரிசோதனை செய்ததில் அனைவரும் எதிர்பார்த்ததுதான் பதிலாக வந்தது. ஆம்… பொன்மணி கர்ப்பம் தரித்திருந்தாள். அசோகன் அஞ்சுகத்திற்கு தகவல் கொடுக்க மகனிடம் பணித்தார் செல்லம்மாள்.
“பத்து நிமிஷம் கழிச்சி சொல்றேன்மா” என்றதும் மகன் மனைவியோடு தனிமையை எதிர்பார்க்கிறான் எனப்புரிந்து வெளியேறினார் செல்லம்மாள்.
கதவை தாழிட்டவன், மனைவியருகே படுத்து பூப்போல அணைத்துக்கொண்டான். உணர்வுகளின் பிடியில் சிக்கியிருந்த பொன்மணிக்கும் கணவன் அணைப்பு தேவையாய் இருக்க, நெருங்கிப்படுத்து அணைத்துக்கொண்டாள் இறுக்கமாக.
“என் பொண்ணுமணிக்கு ஒரு கண்ணுமணி வரப்போகுது” என்று முத்தமிட்டான் மனைவி நெற்றியில்.
“நாம பேரண்ட்ஸ் ஆகிட்டோம்” என்றவளுக்கு கண்ணில் நீர் ததும்பியது.
பேரண்ட்ஸ் என்ற வார்த்தை எத்தனை உயர்ந்த வார்த்தை என்பதை உணர்ந்த திருனேஷ்வரனுள்ளும் அத்தனை மகிழ்ச்சி. மனைவியை வருடிக்கொடுத்தபடி “ம்ப்ச்… இதுக்கும் அழுவியா?” என கடிந்து கண்ணில் முத்தமிட்டான்.
“அம்மா ஊருக்கே சொல்லுவாங்க, அதுக்கு முன்னாடி உன் அப்பாம்மாக்கு சொல்லலாம்” என்று அழைப்பு விடுத்து தானே விசயத்தை விளக்கினான் மாமனாரிடம்.
இருவரும் பத்தே நிமிடத்தில் வந்திருந்தனர் மகளைக் காண. “வாங்க” என வரவேற்று, “உள்ள இருக்கா, போய் பாருங்க” என்று மகன் அறையை காண்பித்தார் செல்லம்மாள்.
அன்னையின் பேச்சரவத்தில் மனைவியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான் திருனேஷ்வரன்.
மகளின் கர்ப்பத்தை கொண்டாட வார்த்தையில்லை அசோகனுக்கு. பெருமையாய் பார்த்திருந்தார் பொன்மணியை. அஞ்சுகம்தான் இப்படி இருக்கனும், அப்படியிருக்கனும் என்று அறிவுருத்திக்கொண்டிருந்தார்.
எப்பொழுதும் பகலில் உறங்காத பொன்மணிக்கு இன்று கண்களை சுழற்றியது தூக்கம். மகளைப் புரிந்து “கிளம்பலாம் அஞ்சுகம், பொன்மணி ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார்.
பின்னே இருவரும் கிளம்ப, அறைக்குள் சென்று படுத்தவள் ஐந்தே நிமிடத்தில் உறங்கிப்போனாள். தானும் படுப்பதாக சொல்லி உள்ளே வந்தவன், மனைவிக்கு உடைமாற்றிவிட்டு அணைத்தபடி படுத்தவன் ரசித்துப்பார்த்திருந்தான் அவனின் பொன்னெழிலை.
இரண்டு நாள் கழித்து எத்தனை அறிவுருத்தியும் தானும் சென்னைக்கு வந்தாகனும் என்று பிடிவாதம் செய்தாள் பொன்மணி.
“நான் இல்லாத நேரம் மயக்கம் வந்தா என்ன செய்வ?” என்று திருனேஷ்வரன் கோபமாக திட்ட, “வேலையை ரிசைன் பண்ணிடறேன், ரொம்ப முடியலைனா அம்மாவை வர சொல்றேன், ஆனா நான் உங்களோடத்தான் இருப்பேன்” என்றாள்.
“ம்ப்ச்… உயிரை வாங்கதடீ… உண்மையா எனக்கு பயமா இருக்கு. இங்கனா எல்லாரும் பார்த்துப்பாங்க” என்றான் மன்றாடலாக.
“எனக்கு ஒன்னும் ஆகாது. முடியலனா நானே சொல்வேன்” என்றவள், “கர்ப்பிணி ஆசையை நிறைவேத்தமாட்டிங்களா?” என்றாள் பாவமாக.
அப்பொழுதும் திருனேஷ்வரன் மறுக்க, இவள் பிடிவாதம் செய்ய என்று அரைமணி நேரம் கழிய, இறுதியில் பொன்மணிதான் வென்றாள்.
அஞ்சாறு மாசத்துல வளைகாப்பு செய்து அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவாங்க, குழந்தை பிறந்து நாலஞ்சு மாசத்துக்கு பிரிஞ்சிருக்கனும். இப்போ இருந்தே உங்களை விட்டுட்டு இருக்க முடியாதுங்க” என்றவள் கண்கள் கலங்கிவிட, அதற்கு மேல் மறுக்க முடியாமல் இரயில் வண்டியில் சீட் கிடைக்குமா என்று பார்க்கலானான் திருனேஷ்வரன்.
*** *** *** *** ***
ஆறு மாதம் கழித்து கணவனுக்கு அழைத்தார் ரூபலஷ்மி.
ராஜதுரை அழைப்பை ஏற்கவே “பசங்க உங்களை ரொம்ப தேடுறாங்க, எப்போ வருவிங்க?” என்றார்.
“பசங்க தேடினா நீ சமாளி” என்றார் கடுப்பாக.
“நானும்தான்.” என்றார் சன்னக்குரலில்.
“சரி வை… நான் அப்புறம் கால் பண்றேன்” என்று இணைப்பை துண்டித்த ராஜதுரைக்கு தன்னை அழைக்க இத்தனை நாள் அவகாசமா? என்று மனைவி மீது அத்தனை கோபம்.
கணவன் கோபம் புரிந்து, இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கோவை வந்துவிட்டார் ரூபலஷ்மி.
ராஜதுரை தங்கியிருக்கும் குவார்ட்டஸிற்கு வந்த பின்னே அழைப்பு விடுக்க, “நான்தான் நைட் பேசுறேனு சொன்னேன்ல? வை போனை” என்றார்.
“நான் உங்க குவாட்ர்ஸ்லதான் இருக்கேன், இன்ஃபார்ம் பண்ணலைனா சென்னை கிளம்பிடுவிங்க. அதான் கால் பண்ணினேன்” என்று இணைப்பை துண்டித்தார் ரூபலஷ்மி.
மெல்லிய சிரிப்போடு மொபைலை பைக்குள் வைத்து, தனது கையொட்பம் தேவைப்படும் கோப்புகளை சரிபார்த்து கையொட்பமிட்டு, தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களிடம் இன்றைக்கு முடிக்க வேண்டிய பணிகளை முடிக்க உத்தரவிட்டு தங்குமிடத்திற்கு கிளம்பினார்.
ஆறு மாதங்களுக்கு பின்னே மனைவியை பார்க்கிறார். ரூபலஷ்மியின் இளைத்த தோற்றம் சற்று அசைத்தது ராஜதுரையை. “அப்பா…” என்றபடி அறைக்குள்ளிருந்து யுகன், யுகதி வெளியே வர, “ஹேய்… நீங்களுமா வந்திங்க? ஸ்கூல் கட்டடிச்சிட்டிங்களா?” என முறைத்தார் மகனிடம்.
“அப்பா திட்டுவாருனு சொன்னேன்ப்பா, அம்மாதான் டூ டேஸ்தானனு கூட்டிட்டு வந்தாங்க” என்றான்.
ராஜதுரை ரூபலஷ்மியை முறைக்க, “அவங்களும் உங்களை பார்க்கனும்ல?” என்றார் சன்னக்குரலில்.
கணவனை தனியே சந்திக்க தைரியமில்லை ரூபலஷ்மிக்கு. ஆனாலும் அதனை ஒப்புகொள்ளவும் மனமில்லை.
இரவு ஒன்பது மணிவரை பிள்ளைகளோடு பேசி, விளையாடி இருந்தவர், பின்னே உண்டு முடித்து அவர்களை உறங்கப் பணித்து, பிள்ளைகள் உறங்கிய பின்னே, “அந்த ரூம்க்கு வா” என்று மனைவிக்கு கட்டளையிட்டு வெளியேறினார் ராஜதுரை.
ரூபலஷ்மி உள்ளே வர, “பசங்களை எதுக்கு அழைச்சிட்டு வந்த?” என்றார் முறைப்பாக.
கணவனின் கேள்விக்கு பதிலளிக்காமல், “என்னை கில்ட்டா ஃபீல் பண்ண வச்சிட்டிங்க, என்னை கண்டுக்காம விட்டிங்க. எல்லாம் உங்களாலத்தான்” என்றார் எங்கோ பார்த்தபடி.
மனைவியருகே வந்தவர், “அப்படியே அறைஞ்சேனோ பல்லு அத்தனையும் கொட்டிடும் பார்த்துக்க” என மிரட்டி, “எத்தனை மாசம் ஆனாலும் நான் உன்கிட்டதான வரேன்? கண்டுக்காம விட்டா இப்போ வந்த மாதிரி என்னை தேடி வந்துருக்கனும், அதைவிட்டுட்டு அடுத்தவனை” என சொல்ல வந்ததை நிறுத்தினார் பெரும்பாடுபட்டு.
பின்னே “நீ போன பாதை தப்புனு உனக்கு புரிஞ்சாலும் அதை என்கிட்ட ஒத்துக்க முடியாதளவுக்கு ஈகோ பார்க்குறவ, என்னை தேடி எதுக்குடீ வந்த? பிள்ளைகளுக்காகனா அங்க போய் படு” என்று கடுகடுத்து, கட்டிலில் படுத்தார் இறுகிய முகத்தோடு.
“ஆமா ஈகோ இருக்கு. தப்பு செய்தது நான்னாலும் அதுக்கு காரணமானவர் நீங்கதான், என்று தானும் கோபமாகவே சொல்லி, “பிள்ளைகளுக்காக வரல. உங்களுக்காகவும் வரல. நான் இல்லாம உங்களால வாழ முடியும்னு எனக்கு தெரியும்.
என்னாலதான் முடியாது. எனக்காக வந்தேன். ஆனா என் தப்பை நான் உணர்ந்த பின்னாடியும் இன்னொருத்தனை நினைச்சவனு என்னை கேவலமா நினைக்கிறவர் எனக்கு வேணாம்” என்று வெளியேற எத்தனித்தவரின் கையை எட்டிப்பிடித்தார் ராஜதுரை.
“மாமா விடுங்க, போனா போகுதுனு என்னோட வாழ வேண்டாம்” என்றவருக்கு கண்ணீர் எட்டிப்பார்த்தது.
மனைவியை இழுத்து கட்டிலில் கிடத்தி, “பத்து வருசம் முன்னாடி இதை செய்திருந்தேன்னா உன்னை வெட்டிப்போட்டுட்டு இந்நேரம் ஜெயில்ல இருந்திருப்பேன்.
நாற்பது வயசு தர நிதானமா? இல்ல பதினஞ்சு வருசம் வேலை பார்த்ததால கிடைச்ச பக்குவமா? இல்ல உன் தப்பை நீ உணர்ந்துட்டன்னு எனக்கு உன்னை புரிஞ்சதலயா? நம்ம பிரச்சனை பிள்ளைகளுக்கு தெரியும் முன்ன எல்லாம் சரியாகனும்ன்ற தவிப்பானு தெரியல,
நான்தான் முக்கியம்னு பொண்டாட்டி எப்போ போன் பண்ணுவானு காத்திட்டிருந்தேன் பைத்தியக்காரன் மாதிரி” என்றார் முறைப்போடே.
ரூபலஷ்மியின் முகம் வேதனையை காட்ட, மனைவியின் வேதனையையும், கண்ணீரையும் சகிக்க முடியாமலும், இச்சூழலை நீட்டிக்க விரும்பாமலும் “இவ்வளோ அகம்பாவம் பிடிச்சவளாடீ நீ? இத்தனை வருசம் எனக்கு எப்படி தெரியாம போச்சு?” என்றார் கோபம் குறைத்து.
ரூபலஷ்மி கண்ணீர் அதிகமாக, “நான் வேணும்னா நீயா தேடி வரனும்னு சொல்லியும் ஆறு மாசமா ஒரு போன் பண்ண முடியல உன்னால. வெட்டி கோபத்துக்கு குறைச்சலில்ல” என்று மனைவியை நெருங்கினார் ராஜதுரை.
ரூபலஷ்மி மீதான கோபம் முழுதாய் குறைந்ததா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் தகாத நினைவுகளை அகற்றி மனைவி முழுதாய் தன்னிடம் வந்துவிட்டாள் என்று நிம்மதி பிறந்தது ராஜதுரைக்கு.
பழைய காதல் கணவனிடம் உள்ளதா என்று தெரியவில்லை மனைவிக்கு. ராஜதுரையின் வழக்கமான வன்மையில் தன் மீதான உரிமை சிறிதும் குறையவில்லை என்ற புரிய, பெரும் நிம்மதியடைந்தார் ரூபலஷ்மி.
error: Content is protected !!