Skip to content
Post Views: 3,810
உள்ளே சென்று அவர் வைத்திருந்த பொருட்களை எடுக்க அனுமதி கேட்டு உள்ளே வந்த சப் இன்ஸ்பெக்டர் மீனாவின் கேஸ் பற்றிச் சொல்ல ஏனோ அப்படியொரு கோபம் வந்தது அவனுக்கு.
Advertisement
“என்ன போலீஸ் இவங்க ஒருத்தவங்க முகத்தைப் பாத்தாலே தெரியவேண்டாமா அவங்க தப்பானவங்களா இல்லையான்னு அவளைப் பாத்தா அடுத்தவ புருஷனுக்கு ஆசை படுறவ மாதிரியா இருக்கா” என்று அவரை முறைத்தான்.
Advertisement
Advertisement
அவர் சொன்னதை கேட்டுக்கொண்ட இன்ஸ்பெக்டர் “எனக்கு மீட்டிங் இருக்கு கமலா நீங்களே பாருங்க” என்க.
Advertisement
“சரி மேம்” என்று அவர் வெளியேறினார்.
“மேம்…” என்று அழைத்தான் வேலு.
“சொல்லு வேலு” என்றார் அவர் ஏதோ பைல் பார்த்துக்கொன்டே.
“அந்தப் பொண்ணு தப்பானவ இல்ல மேம், அத்த பையனுக்குத்தான் பேசியிருந்தாங்க ஆனா அவங்க அக்காவைக் கட்டிக்குற மாதிரி ஆயிடுச்சு அவன்தான் பிரச்சனை பண்றான் அந்தப் பொண்ணுக்கு வர வரன் எல்லாத்தயும் தடுக்குறான் அது நல்ல பொண்ணு மேம் ஏற்கனவே நிறைய மனக்கஷ்டம்… இங்க அந்தப் பொண்ணு வேண்டாம் மேம் நீங்களே பேசி அனுப்பிடுங்களேன் மேம்” என்றான்.
அவனையே கூர்மையாகப் பார்த்தவர் “ரொம்ப வேண்டியவங்களோ” என்றார் மெல்லிய புன்னகையோடு.
“அப்படி ஆக்கிக்கணும்னுதான் வேண்டிக்குறேன் மேம்” என்றான்.
“ஹ்ம்ம்” என்று அவனையே சில நொடிகள் பார்த்தவர் கான்ஸ்டபிளை அழைத்து மாசிலாமணி அன்னம்மா மற்றும் காமாட்சியை அழைத்துவரச் சொன்னார்.
“நான் வெளில இருக்கேன் மேம்” என்றவன் பைலோடு வெளியேறினான் உள்ளே நுழைந்த மாசிலாமணி அவனைக் கண்டுகொண்டார் தாயும் மகளும் அவனைக் கவனிக்கவில்லை.
உள்ளே அழைத்தவர் விவரத்தை விவரத்தைக் கேட்க இளைய மகளைப் பார்த்தார் மாசிலாமணி, மகள் இங்கிருப்பது அவருக்கு அப்படியொரு வலியைக் கொடுத்தது இனிமேல் யோசிக்க ஒன்றுமில்லை என்று கருதியவர் அனைத்தையும் கூறிவிட்டார்.
சொல்லச் சொல்ல அவரின் குரல் உடைந்து கண்ணீர் வழிய “அப்பா” என்று அவர் தோளை அழுத்தினாள் காமாட்சி, மகளின் கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு மிச்சத்தையும் கூறிமுடித்தார்.
இன்ஸ்பெக்டர் முகம் அப்படியொரு கோபத்தை காண்பித்தது பெண்கள் எப்படி எல்லாம் வாழ்வில் முன்னேறப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் இவள் குடும்பத்தையே இப்படி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறாளே என்று.
காமாட்சியிடம் “நீ என்னம்மா சொல்ற” என்க.
“எனக்குப் படிக்கணும் கல்யாணமெல்லாம் வேண்டாம் அதும் அக்கா புருஷன் வேண்டவே வேண்டாம்” என்றாள் திடமாக.
“சரி வெய்ட் பண்ணுங்க” என்றவர் மீனாவையும் ரகுவையும் உள்ளே அழைத்தார், உள்ளே நுழைந்தவுடன் முதலில் மீனாவின் கன்னம் பழுத்தது அடுத்து ரகுவுக்கும் கன்னம் எறிய ஒன்று கொடுத்தவர் “இது போலீஸ் நேரத்தை வீணடிச்சதுக்கு” என்றவர்.
“ஏண்டி எங்களைப் பாத்தா எப்படி இருக்கு உனக்குத் தூக்கி உள்ள வெச்சு தோலை உரிச்சுடுவேன் உனக்கெல்லாம் வெக்கமாவே இருக்காதா, இவ்ளோ கேடு கேட்ட வேலையைச் செஞ்சிட்டு பெத்தவங்களை இப்படி கொண்டு வந்து நிறுத்தியிருக்க உன்னையெல்லாம் அடிச்சு வெளில துரத்திப் பிச்சை எடுக்க விடணும் ஒக்கார வெச்சு சோறு போடுறாங்கல்ல அந்தக் கொழுப்பு ரெண்டு நாள் உள்ள வெச்சு கரைச்சா சரியாப்போவும்” என்றவர்.
“உனக்கென்னடா அதான் பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்காள்ல அவகூட ஒழுங்கா குடும்பம் நடத்து ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு பிள்ளையை வேற பெத்து வெச்சிருக்கீங்க, அவன் அவன் கோவில் கோவிலா ஏறி இறங்குறான் வேணும் வேணும்னு தவம் கெடக்குறவனுக்கு குடுக்காம உங்களுக்குக் கொடுத்திருக்கு பாரு அந்தச் சாமி”.
“உங்க கொழுப்புக்குப் பிள்ளையைப் பெத்து போடுவீங்க அது இங்கவா அங்கவான்னு தெரியாம அல்லாடுணுமா சேந்து வாழ முடியாதுன்னா நேரா கோர்ட்டுக்கு போங்க அதை விட்டுட்டு இனிமே அந்தப் பொண்ணுகிட்ட பிரச்சனை செஞ்ச எலும்பை எண்ணிபுடுவேன்” என்றவர்.
“உன்னைய பாக்கவே பிடிக்கலன்னு சொல்லுது அந்தப் பொண்ணு ஏதா இருந்தாலும் உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் நடுவுலதான், அடிச்சிக்கோங்க புடிச்சுக்கோங்க ஆனா உங்க ரெண்டுபேருக்குள்ள முடிச்சுக்கணும் அந்தப் பொண்ணு இருக்குற பக்கம் கூட நீ போகக் கூடாது இன்னொருதடவ உன்னைய இங்க பார்த்தேன் அப்புறம் ஒழுங்கா வீடு போய்ச் சேரமாட்ட புரிஞ்சுதா” என்றவர்.
“கமலா ரெண்டு பேர்கிட்டயும் எழுதிவாங்கிட்டு அனுப்புங்க எல்லாரையும் சீக்கிரம் அனுப்பிவிடுங்க” என்க.
“சரி மேம்” என்றவர் மீனாவையும் ரகுவையும் அழைத்துச் சென்றார் அடுத்த பத்து நிமிடத்தில் அவர்கள் அனைவரும் வெளியில் வந்தனர்.
அன்னம்மா மீனாவின் முதுகிலே சுளீர் சுளீர் என்று நான்கு அடி போட்டவர் “எதுக்கு நீயெல்லாம் இன்னும் உயிரோட இருக்க கொஞ்சம் விஷம் வாங்கிட்டுவா எல்லாரும் குடிச்சிட்டு சாவலாம் உன்னைய பெத்ததுக்கு இன்னும் என்ன என்ன அவமானமெல்லாம் படணும் நாங்க, நீதான் நாசமா போன அவ வாழ்க்கையையும் ஏண்டி சீரழிக்குற” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
மருதவேலின் விழிகள் காமாட்சியின் முகத்தைத் தாண்டி எங்கும் செல்லவில்லை தந்தையின் அணைப்பில்தான் இருந்தாள் இப்பொழுதும், காரில் தான் அமர்ந்திருந்தான் வெளியில் வரவில்லை தன்னை அவள் காண வேண்டாம் இப்பொழுது தெரிந்தவர்கள் யாருமில்லை என்ற கொஞ்சம் நிம்மதியாவது இருக்கும் தன்னை பார்த்துவிட்டால் அதும் போய்விடும் என்று எண்ணியவன் தன்னை வெளிப்படுத்தவில்லை.
ஆனால் அந்தக் கான்ஸ்டபிள் மாசிலாமணியிடம் கேட்டிருந்தார் “வேலுவை தெரியுமா உங்களுக்குத் தம்பிதான் உங்களுக்காக இன்ஸ்பெக்டர் கிட்ட பேசினுச்சு” என்று இரண்டு ஆட்டோ பிடித்தவர்கள் நேரே மாசிலாமணியின் வீட்டிற்க்கே சென்றனர்.
“மீனா” என்றழைத்தார் முத்துலட்சுமி, அவள் அவரை நிமிர்ந்து பார்க்க “தாலி மட்டும்தான் கட்டியிருக்கு பதிவு செய்யல அதைக் கழட்டி குடு” என்றார்.
அவள் அதிர்ந்துபோய் அவரைப் பார்க்க “அதுக்கு நீ எந்த மதிப்பும் கொடுக்கல நீயேதான் திட்டம் போட்டு எல்லாம் செஞ்சு அவனைக் கட்டிகிட்ட இந்த மஞ்சள் கயிறு உன் கழுத்துல ஏறிடுச்சுன்னா அவன் உனக்கே சொந்தமாயிடுவான்னு நினச்சு நீ எல்லாம் செஞ்ச”.
“ஆனா அவன் உன்னை ஏதுக்கவோ மாறவோ நீ நேரம் கொடுக்கல உனக்கு எல்லாம் அவசரம் குடிகாரன் போதை எடுக்கிறான் தங்கச்சியை காதலிச்சவன் எல்லாம் தெரிஞ்சுதானே இந்தக் கேடுகெட்ட காரியத்தைச் செஞ்ச, அவனைச் சொந்தமாக்கிட்டியே அவன் மனசை சொந்தமாக்கிக்க என்னடி செஞ்ச”.
“அவன் எப்படியோ போகட்டும் ஆனா இனிமேலும் அவனுக்குப் பொண்டாட்டியா நீ இருக்க கூடாது தாலியை குடுத்துட்டு உன் வழிய பாத்து போ பிள்ளை உங்களுக்குத் தொல்லையா இருக்காது” என்றவர்.
“மணி அவனை வெளில போகச் சொல்லு அவனுக்கும் எனக்கும் இனிமே எந்தச் சம்மந்தமும் இல்ல என் சொத்து உழைப்பு எல்லாமே இனி என் பேரனுக்கு மட்டும்தான் சொந்தம், அவனும் சரி உன் மகளும் சரி என் வீட்டு வாசப்படிய மிதிக்கக் கூடாது மீறி வந்தா அதுதான் அவங்க என்னையும் இந்தக் குழந்தையையும் பாக்குற கடைசி நாளா இருக்கும்”.
“உன் மகளுக்கு என்ன செய்யணுமோ அது உன் இஷ்டம் நானும் கேள்வி கேட்கமாட்டேன் அவனும் கேட்கமாட்டான் அவனுக்கு அந்த உரிமையும் இல்ல” என்றார்.
“அம்மா” என்ற ரகுவின் புறம் திரும்பாமலே “மணி அவனைப் படிக்க வெச்சிருக்கோம் எங்கேயாவது போகச் சொல்லு இல்ல பிச்சை எடுக்கச் சொல்லு அவனுக்கு அம்மான்னு ஒருத்தி இல்ல நான் அந்த வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி அவனுக்கு என்ன தேவையோ எடுத்துட்டு போகச்சொல்லு அவன் போகலேன்னா நான் போய்டுவேன்” என்றார்.
“தப்பு செஞ்சது அவ அவளை வீட்ல வெச்சுட்டு என்ன போகச் சொல்றீங்க” என்று இரைந்தான்.
“அவ அவளோட அம்மா வீட்ல இருக்கா அவளைப் பத்தி நான் முடிவு எடுக்க முடியாது என் வீட்டுக்கு அவளும் சரி இவனும் சரி வரக் கூடாது” என்றார் திடமாக.
“எனக்குத் தாலி கட்டிட்டு இன்னும் இவளையே நினைச்சுட்டு இருக்குறது சரியா அதைப் பத்தி யாருமே பேசமாட்டறீங்க” என்றாள் மீனா.
“நான் ஆரம்பத்துல இருந்தே அவளைத்தான் நினைச்சிட்டு இருக்கேன் நீதாண்டி நடுவுல வந்த” என்று அவளிடம் சீறினான்.
“அப்போ நீ கடைசி வரைக்கும் என்கூட வாழமாட்ட” என்று கேட்டாள் அவனிடம்.
“ உன் கூட வாழறதா அதுக்கு நான் தூக்குல தொங்கலாம்” என்றான்.
கோபம் வெறுப்பு ஆற்றாமை அனைத்தும் சேர தாலியை கழட்டி அவன் முகத்தில் விட்டெறிந்தாள், மற்றவர்கள் யாரும் இவர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.
காலின் கீழே கிடந்த தாலியை பார்த்து நக்கலாகச் சிரித்தவன் “அம்மா நல்ல யோசிச்சு சொல்லு வயசான காலத்துல இந்தக் குட்டி பிசாசை வெச்சுகிட்டு என்ன செய்வ அவ கிட்ட குடுத்துட்டு வா நாம போகலாம்” என்றவன் காமாட்சியை பார்க்க.
“வெளில போடா” என்றார் மாசிலாமணி.
“மாமா” என்றவன் அதிர்வாய் அழைக்க.
“அவ கழுத்துல கிடந்த தாலிக்கான மரியாதை தான் இவ்ளோ நாள் உனக்குக் கிடைச்சது இப்போ அதுவும் இல்ல, எங்களுக்குப் பொறந்த தறுதலை புருஷனை இழந்துட்டு வீட்டோட வந்திடுச்சுன்னு நாங்க நெனச்சுக்குறோம் நீ வெளில போ” என்றார் மாசிலாமணி.
“ஒஹ்… சரி சந்தோசம் ஆனா ஆச்சி எனக்குதான் அவளை எவனுக்கும் கொடுக்கமாட்டேன், எம்மா உன் பேரனோட நிம்மதியா இரு உங்க தொல்லையெல்லாம் இல்லாம நானும் நிம்மதியா இருப்பேன்”.
“இனிமே ஒழுங்கா வேலைக்குப் போவேன் சம்பாரிப்பேன் தனியா வீடு பாத்து இன்னைக்கே பால் காச்சிடுவேன் ஆச்சி உனக்காக எல்லாமே வாங்கி வைக்கிறேன் நீ வந்தா போதும்” என்றவன் துள்ளிக்கொண்டு சென்றான்.
மாசிலாமணியின் முகம் யோசனைக்குச் சென்றது அவர் அமைதியாக ஒரு பக்கம் அமர்ந்துவிட்டார், இரண்டே நாட்களில் சிங்கிள் பெட் ரூம் அப்பார்ட்மெண்ட் ஒன்றை நண்பனின் உதவியோடு பிடித்துக்கொண்டவன் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
அன்றிலிருந்து மருதவேலுக்கு அவள் நினைவே ‘என்ன செய்றா தெரியலையே வீட்டுக்குப் போய்ப் பாக்க முடியாது காலேஜுக்கு போய்ப் பாக்கலாமா’ என்று சிந்தனையில் இருந்தவன் தொடர்ந்து மூன்று நாட்கள் அவள் காலேஜ் வாயிலில் மாலை நேரம் நிற்கவும் செய்தான் அவளைக் காணவில்லை.
பத்து நாட்கள் கடந்திருந்தது அன்று காலைத் தந்தைக்கு உடல் நலமில்லை என்று இவன் ஷேர் ஆட்டோ எடுத்திருந்தான் மாலையும் இவனே சென்றிருக்க செங்கல்பட்டுவரை சவாரி சென்றவன் ரோடின் ஒரு பக்கம் வண்டியை நிறுத்திவிட்டு அலைபேசியை எடுப்பதும் தயங்குவதுமாக நிற்பவளை பார்த்து அவள் அருகில் சென்று நிறுத்தினான்.
ஒரு நொடி பதறி விலகியவள் இவனைக் கண்டு விழிகள் விரித்தாள் ‘ பாக்காதடி அப்படி பாக்காத’ என்று மனதில் உறுபோட்டவன் இங்க என்ன பண்ற என்றதும்.
“டயர் பஞ்சர்… அதான் அப்பாக்கு கூப்பிடலாம்னு” என்றாள் தயங்கி.
“உனக்குக் காலேஜ் தாம்பரம் தானே இந்தப்பக்கம் என்ன பண்ற” என்றவன் இறங்கி வண்டியை ஆராய்ந்தான் டயர் மாற்ற வேண்டும், யாருக்கோ அழைப்பு விடுத்தான் ஐந்து நிமிடத்தில் ஒருவன் வர “என்னன்னு நல்லா பாத்துட்டு நாளைக்கு காலைல இதே இடத்துக்குக் கொண்டுவந்திடு” என்றான்.
“இல்ல இப்போவே பாருங்க வீட்டுக்குப் போகணும்” என்றாள் அவசரமாக.
“அதுல கொஞ்சம் வேலையிருக்கு இப்போ பாக்கலைனா அடிக்கடி இப்படித்தான் நிக்கும்” என்று மெக்கானிக்கின் மகளையே ஏமாற்றினான்.
“இங்கேயிருந்து எந்தப் பஸ் போகும்” என்றாள் தயக்கமாக.
“நான் அங்கதான் போறேன் வா “என்றான் அவன்.
“உங்க வீடு மானாம்பதிலயா இருக்கு” என்றாள் ஆச்சர்யமாக.
நின்று அவளைக் கூர்ந்து பார்த்தவன் “மானாம்பதியா? நீங்கப் பேராமனுர் இல்ல” என்றான்.
“ஆமா… ஆனா இப்போ நான் பாட்டி வீட்ல இருக்கேன் காலேஜ் கூட மாத்திட்டேன்” என்றாள் குரல் இறங்கி அவளையே பார்த்திருந்தவன் ஆழ மூச்செடுத்து “சரி வா அங்கேயே விடுறேன்” என்க.
“இல்ல வேண்டாம் நானே போய்ப்பேன்” என்க.
“நம்பி வரலாம் பத்திரமா வீட்ல விட்டிருவேன்” என்றவன் வண்டியில் அமர “தெரியும்” என்றாள் அவனைப் பார்த்துக்கொண்டே .
“என்ன தெரியும்” என்க.
“நீங்க நல்லவர்ன்னு” என்றாள்.
“பார்றா!! எப்படி” என்றான் சிரிப்போடு.
“அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல நீங்கதானே பேசினீங்க இஸ்பெக்டர்கிட்ட” என்றவளை அதிர்வோடு பார்த்தவன் “யார் சொன்னா உனக்கு நீ பாத்தியா” என்றான்.
“இல்ல அப்பா அம்மாகிட்ட சொன்னார் நான் கேட்டேன், அங்க நிக்கவே ரொம்ப அசிங்கமா இருந்துச்சு அவங்க என்னைத் தப்பா பாத்து கேள்வி கேட்டப்போ அப்படியே செத்து போய்டலாம் போல…” என்றவள் முடிக்கும்முன்.
“ஏய்” என்ற அதட்டலோடு வண்டியிலிருந்து இறங்கியவன் “என்ன பேச்சு இது” என்றான் மிரட்டலாக, அவள் பயந்து விழித்தாள் தன்னை கட்டுப்படுத்தியவன் “மொதல்ல வண்டியில ஏறு” என்றான்.
அவள் தயங்கி நிற்க முன்னில் கதவைத் திறந்துவிட்டவன் “ஏறு” என்றான், அவள் அமர்ந்ததும் கதைவடைத்துவிட்டு வந்து வண்டியை எடுத்தான்.
“என்னால உங்களுக்குச் சிரமம் நீங்க அந்தப் பக்கம்தான போகணும்” என்றாள் “என் வண்டி எல்லா பக்கமும் போகும்” என்றான் உல்லாசமான குரலில்.
“எந்தக் காலேஜ்” என்று கேட்டுத் தெரிந்துகொண்டான், அதிகம் எதுவும் அவளிடம் பேசவில்லை அவளின் தயக்கத்தை புரிந்துகொண்டு அமைதியாகவே வந்தான் ஊரின் தொடக்கத்திலே இறங்கிக்கொண்டாள்.
“பக்கத்து தெருதான் நானே போய்டுவேன்” என்றவள் அவனிற்கு பணம் கொடுக்கவேண்டி கையில் நூறு ரூபாயை வைத்துக்கொண்டு தயங்கி நின்றாள்.
“எவ்ளோன்னு எனக்குத் தெரியல” என்றவளிடம் “குடு” என்று வாங்கிக்கொண்டான், அவள் தலையசைத்து “ தேங்க்ஸ்” என்றாள் ஆழ்ந்த குரலில் அது இன்றைக்கானது அல்ல என்று அவனுக்குப் புரிந்தது, அவள் வீடு நோக்கி நடக்க அந்த நூறு ரூபாயை பர்சில் பத்திரப்படுத்திக்கொண்டான் என்னவோ மனம் பருவ பையனாய் படபடத்தது.
error: Content is protected !!