Skip to content
Post Views: 3,672
விஜி இருட்டிடுச்சு நீ வீட்டுக்கு கிளம்புடா. நான் காலையில் டிஸ்சார்ஜ் செய்து கூட்டிட்டு வரேன் பரிவுடன் கூறினார் ராகவலு.
இல்லை பெதநயனா நான் இங்கே இருக்கேன். திடமாய் மறுத்தாள்.
அவள் அங்கேயே இருக்கிறேன் என்றது சுப்புவிற்கு பிடிக்கவில்லை.
வயது பெண் இவள் தனி அறை இல்லாத ஜெனரல் வார்டில் இரவு தங்குகிறேன் என்றது அவனுக்கு ஏற்புடையதாக இல்லை.
Advertisement
மாமய்யா அந்த பொண்ணுக்கு இங்கே நைட் ஸ்டே சரிவராது. நான் வீட்டுக்கு கூட்டிட்டு போகிறேன் என்றான் சுப்பு.
சரிங்க பாபு நானும் அதுதான் யோசித்தேன் என்றார் ராகவலு.
விஜிமா பெதம்மா காலையில் வந்துடுவாங்க. இப்போ நீ சுப்பு கூட வீட்டுக்கு போ! அழுத்தமாய் கூறினார்.
Advertisement
நான் பெதம்மாவை பார்த்துட்டு வரேன் என்று உள்ளே சென்றவள் உறங்கி கொண்டிருக்கும் பெதம்மாவை பார்த்து திருப்திபட்டுக் கொண்டே கிளம்பினாள்.
Advertisement
பாபு இவளை சகுந்தலா அவ்வாட்ட விட்டுடுங்க! தனியா தூங்க பயப்படுவா.
ம்ம்ம்ம் என்று ஆமோதித்தவன் தன் பின்னே பயந்து பயந்து நடந்து வருபவளை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டே முன்னே சென்றான்.
சோர்வுடன் தான் இருந்தாள் ஆனால் முகவெட்டு தெய்வ கடாட்சமாய் இருந்தது. இந்த முகத்தை பார்த்து சென்றால் எந்த காரியமும் வெற்றி பெரும் என்று சொல்லுமளவிற்கு அவ்வளவு அமைதியான அழகான சாந்த ஸ்வரூப முகம்.
Advertisement
பின்னிருக்கைக்கு சென்றவளை முன்னே வா என்று சுப்பு அழைக்கவில்லை. அவளை பார்க்கும் வண்ணம் கண்ணாடியை சரிசெய்து வைத்துக்கொண்டு தான் காரை கிளப்பினான்.
அரை தூக்கத்தில் சொக்கிக் கொண்டிருந்த பேரழகு பெண்ணை பார்த்து இதழ் கடையோரம் குறுநகை பூத்தது.
உயர்தர சைவ உணவகத்தின் முன் காரை நிறுத்தியவன் ஆழ்ந்த நித்திரைக்கு சென்ற தேவதை பெண்ணை எப்படி எழுப்புவது என்று யோசித்து பார்க்க… லேசாய் சிரிப்பு வந்தது.
அம்மாயி….. அவள் கேசம் கோதிவிட நீண்ட கரத்தை அரும்பாடுப்பட்டு அடக்கியவன் தாரும்மா… அம்மாயி லேரா…என்றான் அவள் முகத்தருக்கே நெருங்கி.
ம்ச்… என்று தலையை குலுக்கி தூக்கத்தை தொடர்ந்தாள்.
அம்மாயி… தினி படுக்கோரா… உணர்ச்சி நிறைந்த அவன் குரலில் திடுக்கென்று எழுந்தமர்ந்தாள்.
ஹே… ஒன்னுமில்லடாம்மா … வா சாப்பிடலாம்! என்றான் குழந்தையிடம் கொஞ்சுவது போல்.
இல்லை…. வீட்டுல போய் சாப்பிட்டுக்குறேன்… தலையை சொறிந்து கொண்டு கொட்டாவியை புறங்கையால் அடக்கிக் கொண்டாள்.
இப்போவே 7.30 ஆகுது! வீட்டுல போய் எப்போ சாப்பிடுவ…? அவளை உரிமையாய் அதட்டி அழைத்து சென்று அவள் சாப்பிடும் அழகை உள்ளம் குளிர ரசித்து அவள் ஆசையாய் கேட்ட அனைத்தையும் வாங்கி கொடுத்து அழைத்து வந்தான்.
தன்யவாதாலு என்றாள் (நன்றி )
எதுக்கு? புரியாதது போல் கேட்டான். அவள் கூறிய நன்றி அவனுக்கு பிடிக்கவில்லை.
நிறைய சாப்பிட்டேன்… எல்லாமே எனக்கு பிடிச்சதா வாங்கி தந்தீங்க! அவ்வளவு சந்தோஷம் அந்த குமரி வடிவிலான குழந்தை முகத்தில்.
எவ்வளவு பொறுமையாய் நகர்த்தினாலும் பதினைந்து கிலோமீட்டரை எவ்வளவு நேரம் உருட்ட முடியும்? வீடு வந்து சேர்ந்தாகிவிட்டது.
அவன் ராகவலு வீட்டை கடந்து சென்று கொண்டிருக்க….
இங்கே நிறுத்துங்க! சகுந்தலா அவ்வா வீடு இது தான்…. வெளியூர்காரி உள்ளூர்காரன் அவனுக்கு வழி சொல்ல அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
இங்கே வேண்டாம் மன இண்டிக்கு வெல்தாம் (நம்ம வீட்டுக்கு போகலாம் ) என்றான்.
இல்ல… வேணாம்… அவள் தடுமாறினாள்.
அவள் பதில் கூறுமுன் அடுத்த தெருவை அடைந்து தன் வீட்டு கேட்டுக்குள் காரை செலுத்தியிருந்தான் சுப்பு.
சுப்பு….. ராகவலு பாரியாளுக்கு ஒன்னுமில்லையே…? ராமகிருஷ்ணா கலக்கமுடன் ஓடி வந்தார்.
பயப்படும்படி ஒன்னுமில்ல நயனா. நம்ம மாமய்யா ஹாஸ்பிடலில் தான் அட்மிட் ஆகி இருக்காங்க. நாளைக்கு காலையில் டிஸ்சார்ஜ் ஆகிடுவாங்க!
இந்த பொண்ணு ஏன் இங்க…? லீலாவதி புரியாமல் பார்க்க.
அம்மா ராகவலு மாமய்யா இந்த அம்மாயியை சகுந்தலா அவ்வா வீட்டுல விட சொன்னார். அவங்க பேரன் லோகிதாஸ் கொஞ்சம் அப்படி இப்படி கேஸ். இந்த அம்மாயி பாதுகாப்பா இருக்கட்டும்னு இங்கே கூட்டிட்டு வந்துட்டேன் என்ற மகனை மெச்சுதலாய் பார்த்தார் ராமகிருஷ்ணா.
அந்த பெரிய வீட்டை பார்த்து எச்சில் விழுங்கினாள் தாரணி.
சாதாரண ஓட்டு வீட்டில் பிறந்து வளர்ந்தவளுக்கு அரண்மனை போன்ற அந்த வீடு பயத்தை கிளப்பியது என்பதே உண்மை.
நா வறண்டு பயந்து நின்றவளை பார்த்து கண்மூடித் தலையசைத்தான் சுப்பு.
பயப்படாதே நான் இருக்கிறேன் என்பதான பார்வை அது.
சாப்பிட வாம்மா என்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தபடி அவள் அழகு வதனத்தை அளவெடுத்துக் கொண்டிருந்தது லீலாவதியின் விழிகள்.
ராகவலு மாமய்யா சாப்பிட வைத்து தான் என்கூட அனுப்பினார் என்றான்.
அவளுக்கு புரையேவிட்டது.
இவனல்லவா உணவகத்திற்கு அழைத்து சென்றான்…. திரு திருத்து நின்றவளின் கன்னத்தை அழுந்த கிள்ளி செல்ல முத்தம் ஒன்று கொடுக்க ஆசை மேலோங்கியது. நினைத்ததை நினைத்த மாத்திரம் செய்து விட முடிவதற்கு பெயரா வாழ்க்கை?
இந்த ரூமில் படுக்கறியா?இல்லைனா என்னோட வந்து படுக்குறியா என்றார் லீலா.
இல்லம்மா நான் இந்த ரூமில் படுத்துக்கிறேன் என்றாள் அவசர அவசரமாக. உறக்கத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு உருளுவது அவள் பழக்கம் அது ஏன் அடுத்தவருக்கு தெரிய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான் இந்த அவசரத்துக்கு காரணம்.
அந்த அறையில் போர்வை தலையணை இருக்கிறதா? மின்விசிறி சரியாக இயங்குகிறதா என்று உறுதிப்படுத்திக் கொண்டான் சுப்பு.
தனியா தூங்குவதானே…? மீண்டும் மீண்டும் கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டான்.
புது இடம் என்று அச்சம் கொள்வாளே என்ற அக்கறை தான்.
நான் இருப்பேன் என்று ஸ்ப்ரிங் பொம்மை போல் வேகமாய் தலையாட்டினாள்.
ஏதாவது வேணுமா? அப்படி ஒரு ஆழ்ந்த குரல்.
ம்கூம் என்று தலை அசைத்தவள் அறைக்குள் சென்று விட்டாள்.
ஏதாவது வேணும்னா எதிர் அறையில் தான் நானிருப்பேன் கூப்பிடு என்றவன் முகத்தில் நூறு மத்தாப்புகளின் பிரகாசம்.
ம்ம்ம்ம்ம் என்று திரும்பி தலை அசைத்து சென்றாள்.
அவள் சென்று சில நிமிடங்கள் ஆனபின்னும் அந்த அறையின் மூடிய கதவையே பார்த்து நின்றான்.
தன்னறையில் வந்து படுத்தவனுக்கு இந்த நாள் இனியநாள், அவனுக்குள் இனிய பூகம்பம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நாள். ஏனோ மனம் முழுதும் மகிழ்ச்சி பூக்கள் பூத்துக் குலுங்கி ஒரு வித
இன்பமான அமைதியாக இருந்தது.
எப்படி இது? இன்னைக்கு தான் பார்த்தோம் பார்த்த உடனே இந்த பொண்ணு இப்படி மனசுக்குள்ள சட்டமா சம்மணம் போட்டு உட்கார்ந்துடுச்சே…! அவனுக்கு இன்ப அவஸ்தையில் உறக்கமே வரவில்லை.
அய்யோ விடிந்து விடுமே…. விடிந்தால் இந்த பொண்ணு போய் விடுவாளே… அந்த கலக்கத்தில் வேறு அவனுக்கு உறக்கம் வரவில்லை.
வந்து சேர வேண்டிய இடத்திற்கு தான் அவள் வந்திருப்பதாக அவன் ஆழ்மனம் உறுதியாக நம்பியது.
தனக்கான தேவதை தன் வீட்டில் தனக்கு எதிரறையில் பள்ளி கொண்டிருப்பதை எண்ணி எண்ணி அந்த காளையின் மனதில் காதல்ராகம் மீட்டியது அவன் இளமை.
நான் பார்க்காத பெண்ணா? எந்த பெண்ணும் என்னுள் நிகழ்த்தாத ரசவாத வித்தையை பாதகத்தி இவள் நிகழ்த்தி விட்டாளே… உடலின் ஒவ்வொரு செல்தோறும் காதல் நிகழ்த்தும் விந்தைதனை அணு அணுவாய் ரசித்து புரண்டு கொண்டிருந்தான்.
என்ன செய்து கொண்டிருப்பாள்….? நம்மை போல் உறக்கம் வராது கட்டிலில் புரண்டு கொண்டிருப்பாளோ…? இதழோரப் புன்னகையுடன் எழுந்து வெளியே வந்தான்.
நள்ளிரவின் அமைதி…. மெல்ல எட்டுகள் எடுத்து வைத்து எதிர் அறையின் கதவில் கை வைத்தான். பூட்டாதக் கதவு திறந்து கொண்டது.
கட்டில் காலியாக கிடக்க… கீழே குனிந்து பார்த்தான். தரையில் போர்வை விரித்து வலது கையை தலைக்கு அணைவாய் கொடுத்து சுகமாய் உறங்கி கொண்டிருந்தாள்.
கை,கால் முளைத்த ஓவியம் ஒன்று தரையில் உறங்குவது போல் இருந்தது அவனுக்கு.
கட்டில் உறக்கம் பழகாதவள் போலும்…. கனிவுடன் அவள் முகம் பார்த்து வந்தவனுக்கு கொஞ்சம் உதறல் தான்.
பரம்பரை பெருமை பேசும் தன் பெற்றோர் இவளை மருமகளாக ஏற்றுக் கொள்வார்களா என்று? இந்த அச்சமான எண்ணம் இவ்வளவு நேரம் இருந்த காதல் மயக்கத்தை தூர விரட்டியது.
பெற்றோரிடம் பேசுவது இருக்கட்டும்…. இவள் உன் காதலை ஏற்றுக் கொள்வாளா? மனசாட்சி நக்கலாய் சிரித்தது.
சின்ன பிள்ளையா இருக்காளே…. இவளிடம் எப்படி காதல் கல்யாணம் என்று பேசுவது என்ற பயமும் தயக்கமும் வந்து சேர்ந்தது.
நீ மட்டும் என்ன மீசை முறுக்கும் இளைஞனா? மனசாட்சி மீண்டும் வந்து வெறுப்பேற்றியது.
இருபது முடிந்து எட்டு மாதம் தான் ஆகிறது…. அதற்குள் எப்படி கல்யாணம் செய்து வைங்க என்று கேட்க முடியும்? உள்ளுக்குள் வெட்கமாகவும், சிரிப்பாகவும் இருந்தது.
“———————“
இனிய இரவு முடிந்து பொழுது புலர்ந்தது.
காலையிலேயே கிச்சனில் சத்தம்.
என்ன ஏதென்று பார்த்தால் சமைல்காரம்மாவுடன் சேர்ந்து பரபரப்பாக ஏதோ செய்து கொண்டிருந்தார் லீலா.
என்னம்மா இந்நேரத்துல இவ்வளவு பிஸியா இருக்கீங்க என்றான் கோகுல கிருஷ்ணா.
உங்க அத்தை வராங்க! காலை டிபன் இங்கே தான்.
அதுக்கா இவ்வளவு அலப்பறை ? கோகுல் உதடு பிதுக்கினான்.
டேய்… இப்படி உங்க நாயனா முன்னாடி உதடு பிதுக்கிடாதே…. என்கிட்ட தான் எகிருவார்… என்ன பிள்ளை வளர்த்து வச்சிருக்கேன்னு.
சரி… சரி…. அவர் தங்கையை தங்கத் தட்டில் வைத்து தாங்கட்டும் எனக்கென்ன?
எனக்கு காபி கொடுங்க!
கோகுல் உங்க அத்தை பொண்ணு ஷியாமளா வராளாம்.
அந்த ராங்கி வருதா? இன்னும் அவன் முகத்தில் கோணல் கூடியது.
“—————“
சரியாக உறக்கம் இல்லாத கண்கள் எரிந்தது. மெல்ல கண்விழித்து பார்த்தவனுக்குள் புது ரத்தம் பாய்ந்தது.
சற்றே ஓய்ந்திருந்த தேவதை பெண்ணின் நினைவு மீண்டும் குளிர்சாரலாய் இதம் மீட்டியது.
அவசரமாய் முகம் கழுவி பல்துலக்கி எதிர் அறையை நோட்டம் விட்டான் சுப்பு.
என்ன சுப்பு அந்த பொண்ணு இன்னும் எழுந்துக்கல? லீலா வருத்தமுடன் கேட்டார்.
புது இடம் சரியா தூக்கம் வந்திருக்காது. சின்ன பிள்ளை தானே தூங்கி பொறுமையா எழுந்திருக்கட்டும் என்றார் ராமகிருஷ்ணா.
சின்ன பொண்ணா? வயசுக்கு வந்த பொண்ணுக்கு பொறுப்பு இருக்கணும் என்றார் லீலா.
அவ சரியா தூங்கலையா? கும்பக்கர்ணி எவ்வளவு சுகமா தூங்கினா? உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது.
நானா சொல்வது போல சின்ன பிள்ளையா இருக்காளே…. இந்த பெரிய குடும்பத்தில் எப்படி தாக்கு பிடிப்பாளோ….?அதிமுக்கிய வருத்தம் சுப்புவிற்கு.
ஏழு மணிக்கு மேல் எழுந்து மெல்ல கொட்டாவி விட்டபடி நெளிந்தவளுக்கு பிறகே புரிந்தது தான் வேறு ஒருவர் வீட்டில் இருப்பது.
அவசரமாய் முடியை அள்ளி கொண்டையிட்டுக் கொண்டவள் போர்வை உதறி மடித்து வைத்து விட்டு தாவணியை திருத்திக் கொண்டு வெளியில் வந்தாள்.
முகம் கழுவி பல் தேய்ச்சுட்டு வாம்மா காபி சாப்பிடுவ என்றார் லீலா.
இல்ல… இல்லம்மா நான் வீட்டுக்கு போறேன் என்றாள் சங்கோஜமாய்.
அங்கே போய் என்ன பண்ண போற… சற்று சினத்துடன் அவள் காதில் மெல்ல கேட்டான் சுப்பு.
இல்ல… அது… எனக்கு இங்கே ஒரு மாதிரி… அவள் தடுமாறினாள்.
ஒருமாதிரியா…? இங்கே தானே நீ வாழ்ந்தாகணும். உள்ளுக்குள் முணங்கிக் கொண்டான்.
காபி சாப்பிட்டு போம்மா! அழுத்தமாய் கூறினார் ராமகிருஷ்ணா.
சரிங்க என்ற தாரணி பல் தேய்க்க சென்றாள். அவளை கொல்லைபுரம் அழைத்து சென்றார் லீலா.
சுப்பு நம்ம வீட்டுக்கு செங்குரங்கு ஒன்னு வரப்போகுது…. உதடு கடித்து சிரித்தான் வெங்கட கிருஷ்ணா.
யாருடா வெங்கி அது? புரியாமல் கேட்டான் சுப்பு.
ஷியாமளா வரா…. மீண்டும் சிரித்தான்.
Bombay scottish school ல் மேல்நிலை பள்ளி படிப்பு முடித்து வருகிறாள்.
வரட்டுமே அவ மாமய்யாவை பார்க்க வரா… அலட்டிக் கொள்ளாமல் சென்று விட்டான் சுப்பு.
காபி குடித்துவிட்டு எல்லோருக்கும் நன்றி சொல்லி புறப்பட்டு விட்டாள் தாரணி.
யாருடைய கவனத்தையும் கவராமல் நைசாக நழுவி அவளை பின்தொடர்ந்து தெருமுனை வரை வந்த சுப்பு தாரு… ஒருநிமிஷம் என்றான்.
என்ன என்பது போல் திரும்பி பார்த்தாள்.
உனக்கு சமைக்க தெரியுமா என்றான்.
ம்க்கூம் என்று மறுப்பாய் தலையசைத்தாள்.
அப்புறம் எப்படி சாப்பிடுவ? வருத்தமுடன் கேட்டான்.
சகுந்தலா அவ்வாட்ட பார்த்துக்கிறேன் என்றாள்.
நீ குளிச்சிட்டு ரெஸ்ட் எடு! நான் உனக்கு டிபன் கொண்டு வரேன் என்றான்.
வேண்டாம்… வீட்டுல கொய்யாப் பழம் இருக்கு நான் உப்பு மிளகாய் பொடி வச்சு சாப்பிட்டுக்குவேன் அவள் சொல்ல அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
நான் தான் டிபன் கொண்டுவரேன்னு சொல்றேன்னில்ல… அவன் உரக்க பேசவே அவள் அமைதியாக தலை அசைத்து சென்றாள்.
“——————“
திப்பா ரொட்டி, சாகிப்பியம் உப்புமா(ஜவ்வரிசி உப்புமா) கட்டே பொங்கலி(நம்ம ஊரு வெண் பொங்கல் ) பூரி, கோங்குரா பச்சடி, நுவ்வுலா லட்டு (எள்ளுருண்டை )
ஷியாமளாவிற்கு பிடித்த பதார்த்தங்கள் தயார் நிலையில் இருந்தது.
கிச்சனுக்கு சென்று எல்லாவற்றையும் திறந்து பார்த்த சுப்பு தாருவிற்கு கொண்டு செல்ல வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருக்க… கார் சத்தம் கேட்டு குடும்பமே வாயிலுக்கு சென்றது புவனேஸ்வரி குடும்பத்தை வரவேற்க.
மூன்றாண்டுகளுக்கு பிறகு வரும் ஷியாமளாவின் விழிகள் சுப்ப கிருஷ்ணாவை தேடியது.
அவள் வரும்போது சுப்பு இருப்பதில்லை. சுப்புக்கு விடுமுறை கிடைத்து வரும்போது அவளுக்கு விடுமுறை இருப்பதில்லை இப்படியாக ஒருவரை ஒருவர் பார்த்து மூன்றாண்டு முடிந்திருந்தது.
ஷியாமளா கொஞ்சமல்ல அதிகமாகவே பரம்பரை பெருமை பீற்றிக் கொள்ளும் ரகம். சுப்புவிற்கு அது பிடிக்காது.
எப்போதும் அவள் பேச்சில் ஒரு அலட்டலும் கர்வமும் இருக்கும்.
எளிமையாய் இயல்பாய் இருப்பது தான் சுப்புவிற்கு பிடிக்கும்.
கொஞ்ச நாளாகவே சுப்பு புராணம் பாடிக் கொண்டிருக்கிறாள் அவளின் அன்னை புவனேஸ்வரி.
என் அண்ணன் மகன் அவ்வளவு பெரிய அறிவாளி, அவ்வளவு புத்திசாலி.. தொழிலில் புலி என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருப்பார்.
அம்மா பேசும் அளவிற்கு சுப்பு என்ன அவ்வளவு ஒர்த்தா… யோசனை அதிகமாகியது ஷியாமளாவிற்கு.
நேற்று தான் தேர்வு முடிந்து பம்பாயில் இருந்து வந்திருந்தாள் இன்றே மாமய்யாவை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்து கிளம்பி விட்டாள்.
அவளுக்கு மாமனை பார்க்க என்ன வேண்டுதல்? மாமன் மகனை பார்க்கும் ஆர்வம்.
error: Content is protected !!