Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️53

நீ இவ்வளவு திடமா இருக்க…பவி என்ன பண்றாளோ…? பவிக்காக உருகியது சௌமிக்கு.

என் அம்மாயி திடமானவ  அவ சோர்ந்து போயிட மாட்டா….

நான் பேசட்டுமா? அவ்வளவு ஆர்வம் சௌமிக்கு.

அவகிட்ட போன் இல்லை! தோளை குலுக்கினான்.



Advertisement

என்னடா சொல்ற?

அவளோட போன் அவங்க அம்மாட்ட இருக்கு.

பிடுங்கி வச்சிக்கிட்டாங்களா? அவ ஹவுஸ் அரெஸ்ட்டா….? படபடத்து கேட்டாள் சௌமி.

Advertisement

இல்ல பவி வேலைக்கு போறா? கும்பகோணம் மலர் ஹாஸ்பிடலில் ஜாயின் பண்ணியிருக்கா!

Advertisement

உனக்கு எப்படித் தெரியும்? உதட்டின் ஓரம் புன்னகை நெளிய கேலியாய் பார்த்தான் அகிலன்.

யுவி சொன்னான்!

ஓ… மச்சானோட கனெக்ட் ஆகிட்டியா…? கண்சிமிட்டி சிரித்தான்.

Advertisement

ம்ம்ம்ம்… பவிக்கு கால் பண்ணி பேச மனசுல தைரியம் இல்லை. அவ உடைஞ்சு போயிட்டா நான் தாங்க மாட்டேன்.அது தான் யுவிக்கு பேசினேன்.

வேலைக்கு அனுப்ப மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டாங்களாம்.

ம்ம்ம்ம்ம்…. என்று படு ஆர்வமாய் கதை கேட்டுக் கொண்டிருந்தனர் அகிலனும்,சௌமியும்.

பாட்டி, கும்பகோணம் மலர் ஹாஸ்பிட்டலுக்கு நர்ஸ் தேவைன்னு விளம்பரம் வந்திருக்கு…. நான் போகலாம்னு இருக்கேன்.

நீ…வேலைக்கு போக வேண்டாம் . உன்னை வைத்து கஞ்சி ஊத்துற அளவிற்கு வசதி இருக்கு. திட்டவட்டமாய் மறுத்தார் தமயந்தி.

ஓடி போயிட மாட்டேன்…!

செருப்பால அடிப்பேன்…. கை ஓங்கி விட்டார் தமயந்தி.

தமயந்தி…. என்ன பழக்கம் இது பொசுக்குன்னு கை ஓங்குற…கோபமாய் அதட்டினார் சுசிலா.

அவ பேசுறது மட்டும் நியாயமா? என்னை கொஞ்சம் கொஞ்சமா கொல்றா…ஒடுங்கி போனது அவர் மனது.

நீ எதை மனசுல நினைத்து பயப்படறியோ அவ அதுக்கு தான் பதில் சொல்றா… இதிலென்ன தப்பு?

என்னை யாரும் புரிஞ்சிக்க மாட்டிங்களா? வெடித்து விட்டது அவர் குரல்.

நீ உலகத்தை புரிஞ்சுக்கோ! அவ வீட்டுல உட்கார்ந்து மொட்டு மொட்டுன்னு மோட்டு வலையை பார்த்துட்டு இருப்பாளா?

நம்மை மீறி போறவளா இருந்தா ஏன் இப்படி அழுது வடிஞ்சு அரை உடம்பா தேஞ்சு போய் கிடக்குறா… பேத்திக்கு வக்காலத்து வாங்கிய எழுபது கடந்த சுசிலா அதிசயமே…

பாட்டி நான் சங்கர நாராயணன் பொண்ணு… வாக்கு மீற மாட்டேன். இப்போவும் சொல்றேன் எந்த காலத்திலும் ஹரியை தான் கட்டிக்குவேன்னு உங்கட்ட வந்து கெஞ்சி நிற்க மாட்டேன்.

நான் ஹரியை ஆழமா விரும்பிட்டேன். இனி அந்த இடத்துல யாரையும் கொண்டு வந்து பொருத்தி பார்க்க சத்தியமா என்னால முடியாது.

தற்கொலை செய்துக்கலாமா? இதோட என் வாழ்க்கை முடிஞ்சுடுச்சுன்னு எல்லாம் உடைந்து உட்கார்ந்துட மாட்டேன். எல்லா காதலும் கல்யாணத்தில் முடியணும்னு கட்டாயம் இல்லை. என்னை விட்டுடுங்க!

நான் விரும்பின ஹரியை உங்களால் ஏத்துக்க முடியாது அதே மாதிரி நீங்க கை காட்டுற மாப்பிள்ளையை என்னால ஏத்துக்க முடியாது.

நான் செத்து போயிருவேன், சாப்பிடாம உண்ணாவிரதம் இருப்பேன்னு மிரட்ட போறதில்லை.

உங்களை நோகடிக்க நான் விரும்பல…. சுயநலமா என் வாழ்க்கையை தேடிக்க எனக்கு உடன்பாடில்லை.

எனக்கு வேலைக்கு போகணும்… நான் நிம்மதியா இருக்கணும்! வழிந்த விழி நீரை உள்ளிழுக்க முயன்றவள் இனி இது பற்றி பேச வேண்டாம் இதுவே கடைசியா இருக்கட்டும் என்றாள் தீர்மானமாக.

அவளும் எவ்வளவு தான் தாங்குவாள்? வலித்து வலித்து வலி பிடித்து விட்டதோ?

பாட்டி இந்தாங்க என்னோட ஃபோன். நான் ஹரியோட பேசிட்டு இருப்பேன்னு நீங்களா கற்பனை பண்ணிக்க வேண்டாம்.

நான் அவரோட போனில் பேசணும்னு இல்லை. நான் எப்போ என்ன நினைப்பேன், என்ன பேசுவேன்னு அவருக்கு ரொம்ப துல்லியமா தெரியும்.

போன் நீங்களே வச்சுக்கோங்க! என்னை தேடி அவங்க யாரும் வரமாட்டாங்க. நானும் அவங்களை தேடி ஓடிப் போயிட மாட்டேன்.

என்கிட்ட ஏன் தங்கம் கொடுக்குற? உன் மனசு புரியாதவளா நானு? பேத்தியின் பேச்சுக் கேட்டு அழுதே விட்டார் சுசிலா.

சோ… எர்ரபள்ளி மகாராணி பவித்ரா ஹரிசரண் வேலைக்கு போறாங்க! அகிலன் கேலியாய் சிரித்தான்.

ம்ம்ம்ம்… பனிரெண்டாயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு போறா…

இந்த விஷயம் உங்க வீட்டுக்கு தெரியுமா?

அய்யோ வேற வினையே வேண்டாம்… என் மருமகளுக்காக மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலே கட்டுவேன்னு என் நயனா கிளம்பி நிற்பாரு.

செம்ம த்ரிலிங்கா இருக்குடா மச்சி…. வாய்விட்டு சிரித்து விட்டான் அகிலன்.

அட தடிமாடு என் லைஃப் உனக்கு த்ரில்லிங்கா இருக்கா? முதுகில் பொத்தென்று வைத்தான்.

குழந்தை இனியன் உவ்வ்வ் ஊ ஊ என்று சப்தமிட தொடங்க…. உங்கப்பனை அடித்தா நீ அழுவியா…. குழந்தையை செல்லமாய் கன்னம் கிள்ளி கொஞ்சினான்.

சௌமி இன்னைக்கு ஹரிக்கு பிடிச்ச ஐட்டமா சமைச்சிடு… குழந்தையை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான் அகிலன்.

அதெல்லாம் வேண்டாம் சௌமி சிம்பிளா சமைத்தா போதும்.

டேய் என் பிரண்ட் நீ வீட்டுல கோவிச்சுக்கிட்டு என்னை தேடி அடைக்கலமா வந்திருக்க…. உனக்கு அறுசுவை விருந்தளித்து நட்பின் இலக்கணம் பாராட்ட வேண்டாமா? புருவம் உயர்த்தி தோளை குலுக்கி ஜம்பமாய் கள்ள சிரிப்புடன் அகிலன் டயலாக் பேச…

கேத… உனக்கு வாயிக்கு ருசியா வேணும்னா உன் பொண்டாட்டியை செய்ய சொல்லி கொட்டிக்கோ… என்னை ஏன்டா கோத்து விடற…? பாவம் ரெண்டு குழந்தைகளை வச்சிக்கிட்டு சௌமி என்ன செய்ய முடியும்? நீ கூடவே இருந்து ஹெல்ப் பண்ணு.

நான் என்னோட அப்பார்ட்மென்ட் போய் பார்த்துட்டு வரேன் ஹரி சென்றுவிட்டான்.

கொஞ்சம் வலி, கொஞ்சம் நிம்மதி என கலவையான மனநிலை அவனுக்கு. மூச்சு முட்டும் வீட்டு சூழலில் இருந்து தற்காலிக விடுதலை.

பவித்ராவை பார்த்து, பேசி ஒரு மாதம் கடந்து விட்டது. அவள் நினைவு இதயத்தின் ஒரு மூலையில் சிறு வலியாக ஊசி முனையால் நிரண்டுவது போல் நிரந்தரமாக அழுத்திக் கொண்டிருக்கிறது.

அந்த வலியை மூளை ரசிக்க தொடங்கியது தான் ஆச்சரியம்! காதலின் பல்வேறு பரிமாணங்களில் இதுவும் ஒன்றாக இருக்க கூடுமோ….?!

தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற வல்லமை இருந்தும் அமைதியாய் கைகட்டி நிற்பது கடினம்.

அவன் நிலை இப்போதைக்கு அது தான்.

ஒரு வார்த்தை உன்னோடு வருகிறேன் என்று பவித்ரா சொல்லி இருந்தால் அள்ளி வந்திருப்பான்.

அவள் விருப்பத்தில் அவன் கருத்தை முன்வைக்க விரும்பவில்லை. உன் முடிவு எதுவோ அது தான் என் முடிவு என்பதில் உறுதியாக இருந்ததினால் தான் இவ்வளவையும் சமாளிக்கிறான்.

பெருமூச்சுடன் கதவை திறந்து பால்கனிக்கு வந்தான்… சுவரில் சாய்ந்து கீழே இருக்கும் ரோஜா செடியை பார்த்தான்.

இங்கு நின்று தான் தினமும் பவித்ராவை பார்த்து ரசிப்பான்.

இந்நேரம் என் அம்மாயி என்ன செய்வா? கண்டிப்பா இளைத்து களைத்து போயிருப்பா….

நெஞ்சம் விம்மி கண்கள் பொங்கியது.

தவிக்கிறோம் தவிக்க வைத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதெல்லாம் அவளுக்கு புரியவில்லையா என்ன?

பவி…. நா பங்காரம்.. சீக்கிரம் வந்துருடா… பாவாக்கு மூச்சுமுட்டுது! என் உடம்பே  எனக்கு சுமையா தெரியுது! கண்ணோரம் அன்பின் ஏக்கத்தில் உவர் நீர் சுரந்து ஒழுகியது.

அகிலன் வீட்டு பால்கனியில் அவள் வளர்த்த ரோஜாச் செடி அவனை பார்த்து ஆறுதலாய் அசைவதாய் தோன்றியது.

சரியாய் தண்ணீர் ஊற்றி பராமரிக்காமல் கொஞ்சம் காய்ந்து கிடந்தது அந்த மஞ்சள் ரோஜாச் செடி.

ஓ… என்னை போல் தான் நீயும் அவளின்றி வாடி வதங்கி விட்டாயா? வாடிய செடியிடம் வாய் விட்டு புலம்பினான்.

“——————-“

ஆறு மாதம் கடந்து விட்டது…. அவ்வளவு வைராக்கியத்துடன் இருந்தாள் பவித்ரா.

பாட்டி , யுவராஜ் இருவரிடமும் பேசுவாள். காயத்ரியுடன் ஓரிரு வார்த்தை… தாயிடம் எதுவும் பேசுவதில்லை.

ஜெயலட்சுமி அக்கம் பக்கத்தில் அள்ளி விட்டிருப்பார் போலும்… அடிக்கடி பவித்ரா திருமணம் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டனர் அண்டை வீட்டு மனிதர்கள்.

அவள் வேலைக்கு செல்லும்போதும் வரும்போதும் அவள் முதுகை துளைத்தது அவர்களின் பார்வை.

ஏனோ தானோ என்று உண்டு, உறங்கி வேலைக்குள் தன்னை திணித்துக் கொண்டாள் பவித்ரா.

பவித்ராவின் இறுக்கம் எல்லாரையும் பயமுறுத்தியது.

அவள் உலகில் அவள் மட்டுமே… நாள் கிழமை,நல்லது கெட்டது எதிலும் கலந்து கொள்வதில்லை. பகல் முழுதும் விரைப்பாய் திரிந்தாலும் இரவில் தலையணை கண்ணீரில் நனையும்.

பாவா…. அவள் மனம் ஸ்ரீராஜெயம் போல் உருபோட்டுக் கொண்டிருக்கும். தலையணைக்கு அடியில் இருக்கும் அவனது டிஷர்ட்டை இறுக்கி கண்ணீர் சிந்துவாள்.

தங்கை உறங்கிய பின்னே இவள் அழுது கரைந்தாலும் பலநாள் காயத்ரி அதை கண்டிருக்கிறாள்.

ச்ச அக்கா பாவம்… இப்போதெல்லாம் அக்காவிற்காக வருந்தினாள்.

காயத்ரியின் மனநிலை ஓரளவு மாறியிருந்தது.

சுசிலா தினமும் புலம்பி தீர்த்தார்.

வயசு புள்ள மாதிரியா இந்த பவித்ரா பொண்ணு இருக்கு… எடுத்துட்டு போற சாப்பாடு அப்படியே திரும்பி வருது… ரெண்டு இட்டலி ஒரு தோசைன்னு சாப்பிட்டு எப்படி தான் ஓடி ஆடுதோ… அது தலை எழுத்து இப்படியா இருக்கணும்…?

மணவாளன் தங்கையிடம் அதிகம் பேசுவதில்லை.  அவரும் எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்துவிட்டார்.

தமையா அவங்க ரொம்ப நல்ல மனுஷங்க… பெரிய கோடீஸ்வர குடும்பம்… அருமையான பையன் எங்கே தேடினாலும் இப்படி ஒரு வரன் அமையாது… நமக்கு இதை விட வேறென்ன வேணும்?

தமயந்தி வாயை திறக்கவே இல்லை…

அக்கம் பக்கத்துல பவியை பார்த்து கிசுகிசுன்னு

பேசிக்கிறாங்க… நாலு பேரு நாலு பேருன்னு சொல்வாளே உன் தங்கச்சி.. அந்த நாலு பேரு இப்போ நாலு விதம் பேசத் தொடங்கிட்டாங்க.

என்னை மூலவீட்டு தலையாரி பொண்டாட்டி கேட்குறா… என்னத்த உன் பேத்திக்கு கல்யாண யோகம் இன்னுமா வரலன்னு… அவ பேச்சுல அம்புட்டு நையாண்டி.

இந்த சின்ன கிராமத்துக்குள்ள எவ்வளவு நாள் மறைச்சு வைக்க முடியும்..?

இப்படியே பிடிவாதமா இருந்து பொண்ணை பெத்து அடைக்காத்து ஊறுகா போட சொல்லு உன் தங்கச்சிய… இயலாமையில் பொறுமி விட்டு போனார் சுசிலா. பேத்தியின் வேதனை அவரை வெகுவாய் தாக்கியது.

அங்கே எர்ரபள்ளி குடும்பத்திலும் ஹரிசரணை தினமும் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தனர்.

ஆசைபட்ட அம்மாயியை கட்டிக்கவும் இவனுக்கு துணிச்சல் இல்லை… நல்ல நல்ல வரன் வருது அதையாவது பார்க்கலாம்னு முடிவு எடுக்க தைரியம் இல்லை.. அதுவும் இல்லாம இதுவும் இல்லாம இழுபறியா இருக்கு இவன் நிலைமை.

இவன் கோழை மாதிரி அமெரிக்காவில் போய் உட்கார்ந்திருக்கான்… குடும்பமே அவனை தாளித்தது.

ராம்சரண் மனைவி சர்வதனிக்கு பெண் குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆகிவிட்டது.

தம்பி குழந்தையை அவ்வப்போது வீடியோ காலில் பார்த்துக் கொண்டிருக்கும் ஹரிக்கு நேரில் பார்க்க வேண்டும் என்று பேராவல். ஆனாலும் போய் நின்றால் விளைவுகள் விபரீதமாக அல்லவா இருக்கும்.

“——————-“

பவித்ரா சிஸ்டர் உங்களை பார்க்க ஒருத்தர் வந்திருக்கார் ரிசப்ஷனில் வெயிட் பண்றார்…. இன்னொரு நர்ஸ் வந்து தகவல் சொன்னார்.

பக்கென்று இருந்தது அவளுக்கு…. ஹரி அமெரிக்கா சென்றுவிட்டதாக யுவி சொன்னானே…?

பெயர் சொன்னாங்களா சிஸ்டர்…? படபடப்புடன் கேட்டாள்.

இல்லையே…!

சரி நான் பார்க்கிறேன் என்று வேக நடையுடன் வந்து சேர்ந்தாள்.

அங்கு மின்விசிறிக்கு அடியில் அமர்ந்து கசகசத்த கழுத்து பகுதியில் வியர்வையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தார் மணவாளன்.

மாமா… சற்று ஆசுவாசத்துடன் அருகில் சென்றாள்.

என்ன மாமா என்னை பார்க்க ஹாஸ்பிடல் வந்திருக்கீங்க?

சும்மா தான் பவிம்மா… வீட்டுல ஃப்ரியா பேச முடியல அதுதான் உன்னை பார்க்க இங்கே வந்துட்டேன்.

விஷயம் பெருசுன்னு புரியுது மாமா…. சோர்வுடன் அவர் முகம் பார்த்தாள்.

அவள் திருமணம் தவிர வேறென்ன விஷயமாக இருந்துவிட முடியும்?

பவிம்மா தில்லையாடியில் இருந்து ஒரு வரன் வந்திருக்கு. மாப்பிள்ளை ஹெல்த் இன்ஸ்பெக்டர். ஒரே பிள்ளை சொத்து பத்துக்கும் குறையில்லை.

மாமா ப்ளீஸ்…. உள்ளம் நைந்து போனாள்.

ஒரு வகையில் எம்பொண்டாட்டிக்கு சொந்தம்.

மாமா… திகைத்து நின்றாள்.

பவிம்மா  அவங்க ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறாங்க.

மாமா என் நிலைமை உங்க தங்கச்சிக்கு தான் புரியலன்னா உங்களுக்குமா புரியல…?

ஏற்கனவே மனதிலும் உடலிலும் வலுக்குன்றி திராணியின்றி இருப்பவளுக்கு மீண்டும் நெருக்கடி என்றால்?

நம்ம காயத்ரிக்கு பார்க்கலாமா? சங்கடமாய் கேட்டார்.

மாமா அவ இப்போ தான் படிப்பை முடித்திருக்கா…

அதுக்கென்னம்மா பண்ண முடியும்.இருபத்திரண்டு வயசு ஆகிடுச்சுல்ல….

அருமையான மாப்பிள்ளை. நல்ல குடும்பம். விரும்பி கேட்கறாங்க… எப்படி தட்டி கழிக்க…?

அம்மா என்ன சொல்வாங்களோ?  தயங்கினாள்.

ஆமா பவி உனக்கு கல்யாணம் முடிக்காம அவளுக்கு எப்படின்னு வீட்டுல பூகம்பம் வருமே… அவ்வளவு கவலை அந்த மனிதருக்கு.

நான் வேணா ஹாஸ்டலில் தங்கிக்கிறேன் மாமா…

பவி…. அதட்டினார்.

இல்லை மாமா… நான் அவங்களுக்கு தொல்லையா நந்தி மாதிரி நிற்கிறேன்.

நான் ஹரிக்கு பேசவா?

அய்யோ வேண்டாம் மாமா…. அவர் நிம்மதியா இருக்கட்டும்.

இப்படியே இழுத்துக்கிட்டே போனா இதுக்கு என்னம்மா முடிவு?

என் முடிவு உங்க எல்லாருக்கும் தெரியும். இந்த ஜென்மத்துல கல்யாணம் என்றால் ஹரி கூட தான் உங்க பரிபூரண சம்மதத்தோட… அவ்வளவு அழுத்தம் திருத்தமாக கூறினாள்.

“———————“

அம்மா எங்கே காயத்ரி?

அம்மா குளிக்கிறாங்க மாமா…தண்ணி குடிங்க…

தலையை துவட்டிக் கொண்டு வந்த தமயந்தி… காயத்ரி மாமாக்கு டீ போடு என்றார்.

தமையா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்… ஒரு நல்ல வரன் வந்திருக்கு என்றார்.

அண்ணே மாப்பிள்ளையை வர சொல்லுங்க நம்ம பவித்ராக்கு…

தமயந்தி….திகைத்து நின்றார் மணவாளன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!