Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடி வருவேன் ♥️59

பந்தியில் உணவு நாவிற்கு விருந்தாக மணமக்களின் ஜோடிப் பொருத்தமோ சபையோர் கண்களுக்கு விருந்தானது.

இந்த பையனுக்கு இந்த பொண்ணு அளவெடுத்து செய்த மாதிரி இருக்கு….!

மாப்பிள்ளை நல்ல கலரு… பொண்ணுக்கு நல்ல திருத்தமான முகம்…. பொண்ணு சிரிச்சா அவ்வளவு அழகா இருக்கு… அங்கே பேசு பொருளாகினர் விழாவின் நாயக நாயகியர்.

விஜயதாரணிக்கு  விருந்துண்ணாமலே வயிறு நிறைந்தது. என் மகன் ஆசைப்பட்ட வாழ்வு இதுவல்லவோ? தாயாய் அவர் பூரித்து போனார்.



Advertisement

வெங்கி நம்ம ஹரி இந்த சிரிப்பை இவ்வளவு நாள் எங்கே வச்சிருந்தான்…சுப்ப கிருஷ்ணா தம்பியிடம் கேட்டார்.

அண்ணனும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

ஒட்டு மொத்த கிருஷ்ணா குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.

Advertisement

ஆரம்பத்தில் அடமாய் மறுத்த  தமயந்தியுமே திருப்தியாய் நடமாடினார்.

Advertisement

என்னடா மேரேஜ் டேட் எப்போ பிக்ஸ் பண்ணியிருக்காங்க? தம்பி தேவிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.

அண்ணையா வருத்தமான செய்தி தான் இருந்தாலும் சொல்றேன்.

மூனு மாசம் நீங்க வெயிட் பண்ணனும்! கண்சிமிட்டி சிரித்தான்.

Advertisement

என்னடா சொல்ற? குரல் உள்ளே போய்விட்டது.

நிஜமா தான்…. தாரும்மா ஜனவரியில் வைக்கலாம்னு சொன்னாங்க!

பெதநானா தான் மார்ச்சில் வைக்க சொல்லிட்டார்.

ஏன்டா?

கிராண்டா பண்ணனுமாம்! பயங்கர பிளான் வச்சிருக்காங்க போல.

ஓ… என்றவன் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல் இருந்தது.

பொண்ணு,மாப்பிள்ளை வாங்க போட்டோ கிராபர் ஆர்வமுடன் அழைத்தார்.

நெருக்கமான போட்டோ ஷூட்டை பவித்ரா பிடிவாதமாய் மறுக்க ஹரியும் வேண்டாம் என்று கூறிவிட்டான்.

இளசுகளுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப வருத்தம். நைன்டிஸ் கிட்ஸ் இப்படி தான் என்று கேலி செய்தான் தேவ்.

போடா டேய்…. தம்பியை விரட்டிய ஹரி உளமகிழ்ந்து சிரித்தான்.

பெண் மாப்பிள்ளை உணவருந்தி பற்பல கலாட்டாக்களுடன் போட்டோ எடுத்து முடித்தனர்.

விழா முடிந்து உறவினர்கள் கிளம்பிட வீட்டு மனிதர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

ரொம்ப சிறப்பா நடத்திட்டீங்க…. மனதார பாராட்டினார் சுப்பு.

மகிழ்வுடன் நின்றிருந்தார் தமயந்தி.

விவாகத்திற்கு தேதி நாங்க குறிச்சுட்டு சொல்றோம் என்றார் சுப்பு.

சரிங்க என்று ஆமோதிப்பாய் ஏற்றுக் கொண்டனர் பெண் வீட்டினர்.

அண்ணையா வதின தங்கைக்கு நான் என்ன முறை? பட்டு பாவாடை தாவணியில் அழகாய் நடமாடிய காயத்ரியை பார்த்துக் கொண்டே கிசு கிசுப்பாய் கேட்டான் தேவ்.

ம்ம்ம்ம்… நீ அண்ணன் முறை என்றான் ஹரி.

ஹைய்ய ….. இவரு பாவா இவர் தம்பி நான் மட்டும் அண்ணனாம்…. முறைப்பாய் சிரித்தான்.

தம்பி அண்ணன் வாழ்க்கைப்பட்டு போற வீடு அது… நீ கொஞ்சம் அடக்கியே வாசி.

அட இது செம்மையா இருக்கே…. உதடு குவித்து ஸ்டைலாய் ஊதினான் தேவ் சரண் .

ஷியாம்மா… தேவ் ஏதோ சந்தேகம் கேட்கிறான் என்னன்னு கேளுங்க!

அய்யோ அம்மா…. பந்தியில் வைத்த அல்வா நல்லா இருக்கே பார்சல் தருவாங்களான்னு கேட்டேன்… ஓடியே விட்டான் தேவ்.

“————–“

தோழியர் சிலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பவியை சுற்றியே அவன் பார்வை வட்டமடித்துக் கொண்டிருந்தது.

பிரம்மிப்பாய் இருந்தது. எப்படி இது நடந்தது? என் பவி எனக்கு உரிமை ஆகிவிட்டாளே…!

எவ்வளவு இனிமையான நாள் இன்று…!

காதல் முழுமை பெறுவது கல்யாணத்தில் தான் என்றாலும் அது இருதரப்பு பெற்றோரின் ஆசியுடன் நடைபெறும்போது அது  உளபூர்வமான ஆசீர்வாதம்.

அவள் கண்கள் விரிப்பதும் கண்கள் சுருக்கி சிரிப்பதும். கை வளையள்கள் குலுங்க கையாட்டி பேசுவதும் ஜிமிக்கி கூடவே ஆடுவதும் தோழிகளிடம் முறைப்பதும் உதடு லேசாய் சுழித்து சிரிப்பதும்…. ஒவ்வொரு அசைவிலும் அவனை கரைத்துக் கொண்டிருந்தாள் பெண்.

அண்ணையா மூனு மணிக்கு மண்டபத்தை காலி பண்ணனும்…. உதடுகடித்து சிரித்தான் தேவ்.

டேய்…. கடு கடுத்தான் ஹரி.

நிஜமா தான்… அங்கே பாருங்க நம்ம வீட்டுல கிளம்பிட்டாங்க.

பரமசிவம் ஜெயலட்சுமி தம்பதிகள் தாம்பூலம் கொடுக்க சுப்ப கிருஷ்ணா விஜயதாரணி தம்பதிகள் பெற்றுக் கொண்டனர்.

கிளம்பலாம் தேவ் என்றார் ஷியாமளா.

ம்ம்ம்ம்ம்…. என்று ஹரியை பார்த்து உதடு மடித்து சிரித்தான்.

இப்போ கிளம்பணுமா…? அவனுக்குள் இருந்த கலாரசிகன் கண்ணீர் உகுக்க தொடங்கி விட்டான்.

பவித்ரா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்புறாங்க பாரு…! மணவாளனின் மனைவி வந்து கூறினார்.

இதுவரை அவளுக்குள் இருந்த இதம் சட்டென ஒரு வினாடியில் வடிந்து போனது.

பாவா… அவள் மனம் பிதற்றியது.

இருவரின் கண்களும் ஏக்கம் சுமந்து வலியை பிரதிபலித்தது.

தாரணி மருமகள் கன்னம் வருடி முத்தமிட்டவர். நாங்க கிளம்புறோம்ரா அம்மாயி என்றார்.

ம்ம்ம்ம்ம் என்றவளுக்கு கண்களின் ஓரம் கசியத் தொடங்கியது.

சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்துடுவ… அத்தம்மா உன்னை பூ போல பார்த்துக்குவேன்! நல்லா சாப்பிட்டு உடம்பை  தேற்று!

தாரணி மருமகள் ஏன் இவ்வளவு ஒல்லியா இருக்கான்னு எல்லாரும் பேசிக்கிறாங்கரா அம்மாயி !  விவாகதுக்குள்ள நல்லா சாப்பிட்டு புஸ்டியா இருக்கணும் சரியா…?

ம்ம்ம்ம்ம் என்றாள் சற்று மலர்ந்த சிரிப்புடன்.

ஷியாமளா, நிவேதா, சர்வதனி என்று அவளிடம் வந்து விடைபெற்று சென்றனர்.

தேவ், ராம் இருவரும் வந்து பை வதினா டேக் கேர் என்று சொல்லிவிட்டு சென்றனர்.

அவள் படபடப்போடு எதிர்பார்க்க…. ஹரி தொலைவில் நின்றே தலை அசைத்து விடைபெற்றான்.

பலம் இன்றி தொய்ந்தது அவளது உள்ளம்.

ம்ம்ம்ம்ம் என்று தலையாட்டி விடை கொடுத்து குனிந்து கொண்டாள். வழிந்த கண்ணீர் யாருக்கும் தெரியாவண்ணம் தான் நிலம் நோக்கி நின்றாள்.

அவன் கால்கள் நடை மறந்து தட்டுத்தடுமாறியது…

பெரியவர்கள் சர்வதனி நிவேதா அவள் கணவன் குழந்தைகள் என்று பிளைட்டில் கிளம்ப… உறவினர்கள் சொகுசு பேருந்தில் கிளம்ப…ஹரி, ராம்,தேவ் மூவரும் காரில் கிளம்புவதாய் ஏற்பாடு.

இதயம் கணக்க…. தன் குலாபியை திரும்பி ஒரு பார்வை பார்த்தான், அவள் நிமிர்ந்தாளில்லை.

பெண் வீட்டார் வாயில் வரை வந்து வழி அனுப்பினர்.

மணமகள் அறைக்கு வந்து கட்டிலில் பொத்தென்று விழுந்தாள் பவித்ரா. உடை நகைகள் என்று அலங்காரம் களையவில்லை. மனதில் வெறுமை சூழ்ந்து கொண்டது.

கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் வெள்ளம் காட்டாறாய் கரை புரண்டது.

ஏன் இப்படி? அவளுக்கு புரியவில்லை. மூச்சு முட்டி இருள் சூழ்ந்த உலகில் தான் மட்டும் தனித்து நிற்பது போன்ற உணர்வு.

“—————-“

தேங்க்யு சின்னயனா மணவாளன் கரம் பற்றி நெஞ்சார்ந்து நன்றி கூறினான் ஹரி.

எல்லா நேரத்திலும் புரிதலுடன் அவனுக்கு துணை நின்றாரே….

தகப்பன் இல்லாத பெண்ணுக்கு தாய் மாமனாய் பொறுப்பெடுத்து அனைத்தும் செய்தார் என்றபோதும் சபையில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் பெண்ணின் பெரியப்பாவான பரமசிவத்தை முன்னிறுத்தினார். சம்பிரதாயப்படி இப்போது பெண் வழி அப்பா அவர் தானே…?

ஹரியின் சின்னயனா என்ற விளிப்பில் நெகிழ்ந்து போனார். அவனை தோளணைத்து பெருமை கொண்டார்.

பார்த்துக்கோங்க சின்னயனா…. அவரிடம் உரிமையாய் பேசி விடைபெற்றான்.

யுவி உங்க அக்கா ரொம்ப டல்லா இருக்கா பார்த்துக்கோ…! மைத்துனன் கரம் பற்றினான்.

சரிங்க மாமா…. மிஸ் யூ… அழகாய் சிரித்தான் யுவி.

டேய்….. பட் பட்டென்று அவன் முதுகில் தட்டினான்.

மாமா நான் மட்டுமில்ல…. அக்காவும் மிஸ் யூ…. முதுகை தேய்த்துக் கொண்டு நெளிந்தான்.

வெட்க சிரிப்புடனே விடைபெற்று காரில் ஏறிக் கொண்டான் ஹரி.

“——————-“

அண்ணையா நான் எதிர்பார்த்ததை விட அழகா ஆர்கனைஸ் பண்ணி இருந்தாங்க…. ஸ்டேஜ் டெகரேஷன் எலிகண்ட். வைட் அன் பிங்க் காம்பினேஷன் சூப்பர்ப்.

நாம கூட தீம் வெட்டிங் மாதிரி பிளான் பண்ணலாமா? தேவ் பேசிக் கொண்டிருக்க மறுபுறம் பதிலே இல்லை.

பதில் சொல்ல அவன் சிந்தை ஓரிடத்தில் இல்லை.

வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்பவர்கள் இந்த மகிழ்வை எல்லாம் அனுபவித்து இருக்க முடியாதல்லவா? கடவுள் கிருபையில் நமக்கு ஆசைபட்ட வாழ்க்கை தகைந்து விட்டது.

ஊரும் உறவும் ஒன்று கூடி மகிழ்ந்து ஆசீர்வதித்து சடங்கு சம்பிரதாயத்துடன் நடைபெறும் திருமணம் எவ்வளவு கொடுப்பினை!

சற்றுமுன் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்வுகள் அவனுக்குள் தித்தித்தது.

அதே சமயம் அவள் கரம்பற்றிய வெம்மை இன்னும் அவனுக்குள் வெது வெதுப்பாய்  இருந்தது.

குலாபி…. அவன் உதடுகள் முணு முணுத்தது.

ம்ம்ம்ம் அண்ணையா உலகத்தில் இப்போ நாம இல்லை…. மனுஷன் எந்த கண்ட்ரில டூயட் பாடுராரோ? தேவ் சிரித்துக்கொண்டான்.

டேய் போதும் ரொம்ப கிண்டல் பண்ற …. அவனை சிரித்து கொண்டே அதட்டினான் ராம்.

உலகை மறந்து எங்கோ சென்றிருந்த அவன் சிந்தையை நிகழ்விற்கு மீட்டு வந்திருந்தது மொபைல் கொடுத்த டொக் டொக் சவுண்டு.

சிரிப்புடன் தலை கோதிக் கொண்டே மொபைல் பார்த்தான். தேவ் தான் சற்றுமுன் அவன் எடுத்த புகைப்படங்களை அனுப்பி இருந்தான்.

மாறாத புன்னகையுடன் தம்பியை பார்த்து தேங்க்ஸ் என்றான்.

ம்ம்ம்ம்ம் என்ஜாய் என்று அவன் கட்டை விரல் உயர்த்திக்காட்டி சிரித்துக்கொண்டான்.

என் அம்மாயி எவ்வளவு அழகு!அவன் கண்கள் ரசனையுடன் மூடி திறந்தது. மோதிரம் போடும்போது அவள் வெட்கி சிவந்து நளினமாய் நின்ற காட்சி அவனை என்னவோ செய்தது. உடல் வெப்பம் உடனே கூடியது.

உணவு உண்ணும் போது உணவோடு சேர்த்து அவளையும் உண்ணும் தன் பார்வையில் அவனுக்கு ஜிவ்வென்று பறப்பதாய் இருந்தது. உதடு கடித்து சிலிர்த்துக் கொண்டான்.

ஓர விழியில் அவள் பார்ப்பதும், நிறைவாய் அவள் இதழ்கள் உறைந்த புன்னகையுடன் விரிந்தே இருப்பதும்…. ஒவ்வொரு புகைப்படத்தையும் ஆறேழு முறை பார்த்து ரசித்தான்.

அவள் விரல் பற்றி மோதிரம் போடும் அழகிய புகைப்படத்தை வாட்சப் DP யாக செட் பண்ணினான்.

வாழ்க்கை இப்படி திடீரென்று அழகிய வர்ணம் பூசிக் கொள்கிறதே வியந்து போனான்….!

அவனுக்கு மெசேஜ் வந்து விழுந்தது.

Plz change your DP pic.

ஓ…. பங்காரம் பார்த்துட்டா போல…. நகைத்துக் கொண்டவன் No chance என்று பதில் அனுப்பினான்.

ஆயிரம் கதைகள் பேசும் அழகிய புகைப்படங்களை அவளுக்கு அனுப்பி வைத்தான்.

தலையில் அடித்துக் கொள்ளும் எமோஜியை 🤦‍♀️

அனுப்பி வைத்தாள்.

சிரித்துக் கொண்டவன் 💋💞 குவிந்த இதழையும் இதயத்தையும் அனுப்பி வைத்தான்.

பார்த்த நொடியே அவள் படபடப்புடன் ஆஃப் லைனுக்கு சென்றுவிட அவனுக்கு அவ்வளவு சிரிப்பு பொங்கி பீறிட்டது.

கார் லேசாய் குலுங்கி நிற்கவே திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

காபி சாப்பிடுவோம் என்றான் தேவ். அவர்கள் வந்து நின்றது விருத்தாசலம்.  பேருந்து நிலையத்தில் உள்ள அர்ச்சனா ரெஸ்டாரெண்ட்.

ஆர்டர் பண்ணுங்க ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் என்றவன் துள்ளளுடன் அவன் அம்மாயிக்கு அழைப்பு விடுத்தான்.

அழைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் அழைத்தான் மீண்டும் துண்டிக்கப்பட்டது.

என்னாச்சு…. புருவம் நெறித்தவன் யுவிக்கு அழைத்துவிட்டான்.

சொல்லுங்க மாமா…!

வீட்டுக்கு போயிட்டீங்களா?

ம்ம்ம்ம்ம் நாங்க வந்து ஒரு மணி நேரம் ஆகுது மாமா.

நீங்க எங்கே இருக்கீங்க?

விருத்தாசலம்!

எதுக்கு இவ்வளவு தூரம் கார் டிராவல்? நீங்களும் பிள்ளைட்டில் போயிருக்கலாம் இல்ல…?

நாங்க பிரதர்ஸ் மூனு பேரும் லாங் டிராவல் போய் பல வருஷமாச்சு. இன்னைக்கு பேசி சிரித்து டைம் பாஸ் பண்ணுவோம்.

சென்னை வழியா போறீங்க?

இல்ல… திருவண்ணாமலை வேலூர் வழி. நைட் திருவண்ணாமலையில் ஸ்டே பண்ணிட்டு காலையில் கிளம்புவோம்.

மாமா திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு போய் தரிசனம் பார்த்துட்டு போங்க சூப்பரா இருக்கும்.

நான் ஏற்கனவே போயிருக்கேன் யுவி ரொம்ப பெரிய கோயில், அருமையான கட்டிடக்கலை.

வேறென்ன மாமா?

பவிக்கு தலைவலியா?

தெரியல மாமா…

தூங்கிட்டாளா?

இல்லையே இப்போ தானே பாட்டி காபி கொடுத்துட்டு வந்தாங்க.

போன் கொடுக்கவா?

வேண்டாம்…சும்மா தான் கேட்டேன்.

மைத்துனனுக்கு பை சொன்னவன் மீண்டும் அழைப்பு விடுத்தான் அவள் ஏற்கவில்லை.

கூல் காபி உங்களுக்கு பிடிக்குமா? கிண்டலுடன் கேட்டான் தேவ்.

புரியாமல் அவன் பார்க்க… காபி ஆர்டர் பண்ணி அஞ்சு நிமிஷம் ஆச்சு ஆறி போயிருக்கும்.

ஓ என்று அசடு வழிந்தவன் கொஞ்சம் ஆறி இருந்த காபியை ஒரே வாயில் ஊற்றிக் கொண்டான்.

மீண்டும் பயணம் தொடங்க காரில் மெல்லிய பாடல் ஒலித்தது.

என்னாச்சு என் குலாபிக்கு? மெசேஜ் தட்டிவிட்டான்.

யாரும் என்கூட பேச வேண்டாம். சூடாய் பதில் வந்தது.

என்ன கோபம் என் அம்மாயிக்கு?

விட்டுட்டு போன யாரும் அக்கறை காட்ட வேண்டாம்.

அவனுக்கு சிரிப்பு வந்த வேளை கண்ணின் ஓரமும் லேசாய் கசிந்தது.

வந்து தூக்கிட்டு போகவா…?

அவளிடமிருந்து பதில் இல்லை.

ஒரு வார்த்தை சொல்லு யூ டர்ன் அடித்து இப்போவே வரேன். தூக்கிடவா…?

பார்த்து விட்டாள்,பதில் தான் இல்லை.

அழுகிறாள் போலும்… அவன் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.

ஏதோ ஒருவலி  மூச்சைடைக்க வைத்தது ஆனால் அது இன்பத்தை கொடுத்தது… மெல்ல இதயத்தை நீவிக் கொண்டான்.

கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுரா செல்லம் நைட் கால் பண்றேன்! மெசேஜ் அனுப்பிவிட்டு சரிந்து கண்மூடினான்.

ஆறு மாதம் பேசாமல் ஒருவர் முகம் ஒருவர் பார்க்காமல் இருக்க முடிந்த அவர்களால் இப்போது முடியவில்லையே…. அதீத காதல் கொடுக்கும் அவஸ்தை இருவரையும் பறக்க வைத்தது மிதக்க வைத்தது கூடவே தவிக்கவும் வைத்தது. இனி ஒரு சிறு பிரிவும் தங்களை சிதைத்து விடுமோ என்று அஞ்ச வைத்தது.

திருவண்ணாமலை… ஸ்ரீராம் நகர், போளுர் சாலையில் அமைந்துள்ள ஸ்பர்ஸா ரிசார்ட்டிற்கு வந்து சேர்ந்தனர்.இரவு மணி எட்டு ஆகி இருந்தது.

ஏற்கனவே புக் செய்த அறை தான். குளித்து உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.

மிகுந்த களைப்பில் படுக்கையில் சரிந்த அடுத்த நிமிஷம் தன்னை அறியாமல் இமை மூடிக் கொண்டது தேவ்சரணுக்கு. நிச்சயதார்த்த விழாவில் ஓடி ஆடி தங்கள் தரப்பு உறவுகளை சீராட்டி பாராட்டியதும், 220 கிமீ கார் ஓட்டி வந்த அசதியும் ராம் சரணை அடித்து வீழ்த்தி படுக்க வைத்தது.

உறக்கம் வராமல் உருண்டு புரண்டு கொண்டிருந்த ஹரி மொபைல் எடுத்துக் கொண்டு பால்கனிக்கு வந்து கதவடைத்துவிட்டு அங்கிருந்த பீன்பேக்கில் அமர்ந்து கொண்டான்.

இந்நேரம் உறங்கி இருப்பாளா? இருக்காது அம்மாயி கோபமா இருப்பா சிரிப்பு வந்து விட்டது.

அழைத்து பார்க்கலாமா… யோசனையுடன் தான் அழைப்பு விடுத்தான். ஒரே ரிங்கில் எடுத்து விட்டாள்.

ஹலோ என்றான்… மறுமுனையில் அமைதி. ஹலோ என்றான் ஆழ்ந்த குரலில்.

குட் நைட் என்றான் நமட்டு சிரிப்புடன்.

ஹலோ என்றாள் தவிப்புடன்.

என்னரா…. என்ன பண்ற? ஈவினிங் தூங்கினியா என்றான்.

ம்ம்ம்ம் என்றாள்.

பேச மாட்டேன்னு நினைச்சேன்.

ஆமா பேச மாட்டேன்!

ஏனாம்?

காரணம் சொல்ல முடியாது.

ஏன் என் குலாபி இப்படி சிலுத்துக்குறா? பாவாவை அவ்வளவு மிஸ் பண்றாளா?

ஆமான்னு சொன்னா இப்போவே வந்துடுவிங்களா?

வரமாட்டேனா என்ன?

வந்துட்டாலும்… நொடித்துக் கொண்டாள்.

ஏன் வராம? ஜன்னலை திறந்து பாரு!

பாய்ந்து ஓடி பேராவலுடன் ஜன்னலை திறந்து பார்த்தாள்.

எங்க இருக்கீங்க? ஆர்வம், அவசரம் அவளுக்கு.

உன் நெஞ்சில் இடது பக்கமா கை வைத்து பாரு அங்கே குட்டியா லப் டப்புன்னு ஒரு ஹார்ட் தவிச்சுக்கிட்டு இருக்கும் அதுக்குள்ள பாவா பத்திரமா இருக்கேன்…!

யூ….. அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு.

ஸாரிடா அம்மாயி….!  வருந்தினான்.

ஏன் என் பீலிங்ஸோட விளையாடறீங்க?  அவ்வளவு கோபம் ஆத்திரம் அவளுக்கு.

நான் தான் வரேன்னு சொன்னேன். நீ தானே வேண்டாம்னு சொன்ன?

அவள்புறம் இருந்து பதிலே இல்லை… ஹலோ ஹலோ ஹலோ என்றான். மொபைல் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

சாப்பிட்டாளா இல்லையான்னு கூட கேட்கலையே… தலையில் அடித்துக் கொண்டான்.

உடனே யுவிக்கு அழைத்து பேசிவிட்டான். அவள் இரண்டு தோசை சாப்பிட்டாள் என்று அறிந்த பின்னே தான் உறங்க சென்றான்.

படுக்கையில் விழுந்து இரவு விளக்கின் ஒளியில் மொபைலில் இருக்கும் புகைப்படம் பார்த்து சிரித்துக்கொண்டான். அம்மாயிக்கு எதுக்கெடுத்தாலும் கோபம், பிடிவாதம் …. அவளை பார்த்து செல்லமாய் அலுத்துக் கொண்டான்.

“——————-“

என்ன தான் புகைப்படத்தில் பார்த்தாலும்  ரசித்தாலும் அவனை நேரில் பார்க்க வேண்டும் போல் ஒரு அவா, ஏக்கம், தவிப்பு. உறக்கமே தழுவவில்லை அவளுக்கு.

நான் ஒருத்தி இப்படி தவிச்சுக்கிட்டு இருக்கேன்… இவர் என்னை கலாய்ச்சுக்கிட்டு  இருக்கார்.

நமக்கு இருக்கும் ஏக்கமும் தவிப்பும் ஏன் அவருக்கு இல்லை? ஆண்கள் அப்படிதானோ?

கண்கள் சோர்ந்து உறக்கம் தழுவ விடியற்காலை நான்கு மணி ஆகிவிட்டது. எவ்வளவு தாமதமாய் உறங்கினாலும் ஆறுமணிக்கு எழுந்து விடுபவள் இன்று ஏழு மணிக்கு தான் எழுந்தாள்.

மொபைல் எடுத்து ஆன் பண்ணினாள்.  மெசேஜ், தவறிய அழைப்பு என எதுவும் இல்லை.

இன்னும் கோபம் கூடியது அவளுக்கு. இந்தாளுக்கு லவ்வு ஒரு கேடு… கல்யாணம் வேற…. சிடுசிடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.

குளித்து வெளியில் வந்தவளுக்கு யுவி கொண்டு வந்து காபி கொடுத்தான்.

வாங்க மாமா காபி சாப்பிடுங்க… தன் கையில் இருக்கும் காபி டம்ளரை மணவாளன் கையில் கொடுத்தாள்.

நீ சாப்பிடும்மா…! நான் இப்போ தான் டீ குடிச்சுட்டு வந்தேன்.

பவி உன் அத்தையோட தம்பி பொண்ணு பெரிய மனுஷியாகிட்டா…. நாம அத்தை முறை சீர் செய்யணும்!

பட்டுப் பாவாடை, தங்க சங்கிலி எல்லாம் வாங்கணுமாம். நீ நல்லா செலக்ட் பண்ணுவன்னு உன்னை கையோட கூட்டிகிட்டு வர சொன்னா உங்க அத்தை.

இப்போவேவா? இன்னும் காலை உணவு கூட உண்ணவில்லையே?

காலையிலே துணி வாங்கினா தான் தைக்க கொடுத்து இன்னைக்கு சாயந்திரமே வாங்கணும்! நாளைக்கு காலையில்  நாங்க ஆண்டிமடம் போகணும்.

இட்லி வேகுதுண்ணே…. சாம்பார் கூட தாளிச்சுட்டேன் என்றார் தமயந்தி.

இருக்கட்டும்மா உங்கண்ணி இடியாப்பாம் வெள்ளை குருமா தான் செய்து வைத்திருக்கா  பவித்ராக்கு தான் இடியாப்பம் பிடிக்குமே…

நானே கொண்டு வந்து விட்டுடறேன்… தம்பி பொண்ணுக்கு சடங்கு செய்ய உன்னையும் அழைக்க சொல்லி இருக்கா உங்கண்ணி. வேன் ஏற்பாடு  பண்ணியிருக்கேன் காலையிலே கிளம்பி நீ, அத்தை எல்லாம் வந்திடுங்க என்றவர் வண்டியில் பவியை ஏற்றிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

நல்லதுகுடியில் இருந்து மாயவரம் நான்கு கிலோ மீட்டர் தான். பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விட்டனர்.

பவிக்கா என்று துள்ளி  ஓடிவந்து கட்டிக் கொண்டாள் சரண்யா.

அம்மாச்சி எங்க மாமா?

அந்த ரூமில் படுத்து இருக்காங்க பாரு!

என்னாச்சு மாமா ?

மூட்டுவலின்னு தைலம் தேய்ச்சுட்டு படுத்திருக்காங்க!

நான் பார்த்துட்டு வரேன்…. உள்ளே சென்றவள் சிலை என நின்றாள்.

———- தொடரும் ———-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!