Skip to content
Post Views: 3,700
ஏங்கி எதிர்பார்த்த அந்த பொன்னாள்… வாழ்வில் மறக்க முடியாத தருணமாக நெஞ்சில் உறையும் நிகழ்வு. ஆனால் மாங்கல்யம் ஏறிய மகிழ்வை அவளால் ரசிக்க முடியவில்லை.
ஹரியின் பேச்சில் அவள் அதிர்ந்துவிட்டாள்.
இதுவரை இருந்ததை விட இப்போது தான் பயப்பந்து வேகமாய் உருண்டது.
மூன்று முடிச்சு இட்டதுடன் நகர்ந்து கொண்டான்.
Advertisement
புரோகிதர் அடுத்த நிகழ்வான தாளம்பரலுக்கு தயார் படுத்தினார்.
மணமக்களை எதிரும் புதிருமாய் அமர்த்தி மஞ்சள் கலந்த அரிசியை மாப்பிள்ளை பெண் தலையில் கொட்டவேண்டும் பெண் மாப்பிள்ளை தலையில் கொட்ட வேண்டும்.
ஹோ என்று இளசுகளின் கலாட்டா காதை பிளந்தது.
Advertisement
புரோகிதர் சொன்னதை செய்தான்….
Advertisement
அவளோ கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டாள்.
அவன் முகத்தில் மகிழ்ச்சி இல்லை அவன் கண்களில் காதல் இல்லை… சடங்கு செய்வதில் கடமை மட்டுமே இருந்தது.
மாப்பிள்ளை சார் ரொமாண்டிக் லுக்கோட தாளம்பரலு பண்ணுங்க… நிவேதாவின் கணவன் உரிமையாய் சீண்டினான்.
Advertisement
ஹரி முறைத்த முறைப்பில் அந்த டாக்டர் மாப்பிள்ளை கப்சிப்.
பிரதானம்….பால் மற்றும் ரோஜா இதழ்கள் நிறைந்த ஒரு பானையில் தங்க மோதிரம் போட்டு மணமக்களில் யார் முதலில் எடுக்கிறார்கள் என்பதைப் பார்ப்பார்கள்.மணமகனும், மணமகளும் தங்கள் கைகளை அதில் வைத்தார்கள். மணமகனும், மணமகளும் மோதிரத்திற்காக சண்டையிடுவதை பார்ப்பதற்கு சுற்றிலும் நட்பும் உறவும் காத்துக் கொண்டிருந்தது.
பெயரளவிற்கு பானைக்குள் கையை விட்டான் அவ்வளவு தான்…
அண்ணையா கமான் … கமான்… ஹரிக்கு சப்போர்ட் செய்து தேவ், நிவி, ராம் எல்லோரும் உற்சாகமாய் கத்தினார்கள்
பவிக்கா விட்டுடாதீங்க… யுவி ஆவலுடன் கைத்தட்டி உற்சாகப் படுத்தினான்.
அக்கா ஜெயிச்சு காட்டணும்… சரண்யா… காயத்ரி இருவரும் துள்ளி குதித்தனர்.
கையை விட்டு அவள் தான் துழாவினாள்…. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் எடு என்பதாய் கண்களால் ஜாடை காட்டினான்.
அவள் தயங்கி கொண்டே மோதிரத்தை வெளியில் எடுத்தாள்.
ஹே… எங்கக்கா தான் வின்னர்… காயத்ரி சிறுபிள்ளையாய் துள்ளினாள்.
தேவ் முறைத்த முறைப்பில் வாய் தானாக பூட்டு போட்டுக் கொண்டது.
அண்ணையா இந்த முறை விட்டுடக் கூடாது தேவ் டென்ஷனாகி விட்டான்.
இம்முறையும் ஹரி எடுக்கவில்லை…
சுற்றிலும் உள்ளவர்கள் சிரிப்புடன் பார்க்க… அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்து வைத்தான்.
அண்ணையா வேணும்னே பண்ணாதீங்க… இந்த முறையாவது எடுத்து நந்தமூரி வம்சத்து பெருமையை காப்பாத்துங்க… தேவ் கெஞ்சினான்.
சௌமி… இந்த முறையும் பவி தான் எடுப்பா… அகிலன் இதழ் மடக்கி சிரித்தான்.
அதுதான் தெரியுமே என்றாள் வெடி சிரிப்புடன்.
அதேதான் மூன்றாவது முறையும் பவித்ரா தான் எடுத்தாள்.
ஹே… எங்க பவிக்கா வேற லெவல் பட்டு பாவாடை தாவணியில் தேவதையாய் ஜொலித்த காயத்ரி ஆர்ப்பரித்து கத்தினாள்.
ஷ்…. எங்க அண்ணையா விட்டு கொடுக்கவே உங்கக்கா ஜெயித்தாங்க… தேவிற்கு கோபம் முட்டிக்கொண்டு வந்தது.
செல்லாது… செல்லாது… எங்கக்காவோட திறமை யுவியும் வம்பிழுத்தான்.
டேய் யுவி என் மச்சி ஹரி மோதிரத்தை தேடவே இல்லைடா… உங்கக்கா முகத்தையே பார்த்துட்டு இருந்தா எப்படி ஜெயிக்க… அகிலன் கொளுத்தி போட்டான்.
சும்மா கலாய்க்காதீங்க…ஹரி எப்போதும் மனைவியை தோற்க விடமாட்டார்… சௌமி வக்காலத்து வாங்க…. லேசாய் உதடு சுழித்து பொருள் பொதிந்த பார்வை ஒன்றை மனைவி மீது பதித்தான் ஹரி.
அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது.
சப்தபதிக்கு தயார் செய்யும் பொருட்டு மணமகன் அங்கவஸ்திரத்தில் மணமகள் முந்தானையை முடிந்து அக்கினியை வலம் வர செய்தனர்.
காதலுடன் தன் சுண்டுவிரல் பற்றுவான் என்று மங்கை அவள் குறுகுறுப்புடன் அந்த ஸ்பரிசத்தை எதிர்பார்த்து நிற்க… இறுக பற்றிக் கொண்டு நடந்தான்.
அக்கினி ஜூவாலை அவன் முகத்திலோ என்ற ஐயப்பாடு அவளுக்கு.
எந்திரம் போல் நடந்தான்… அவளும் ஆட்டுக்குட்டி போல் பின் சென்றாள்.
கடைசியாய் அம்மி மிதித்தவள் கால்விரல் பற்றி மிஞ்சி அணிவித்தான்.
பிறகு அருந்ததி பார்க்கும் சடங்குடன் விவாக சடங்குகள் நிறைவு பெற்றது.
பின் மணமக்கள் மூத்தோர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.
உணவுண்ணும் இடத்தில் சுத்தி நின்று நண்பர்கள் கலாட்டா செய்தனர்..
லட்டு எடுத்து ஊட்டுங்க சிஸ்டர் ஹரியின் நண்பர்கள் அவளை நெளிய வைத்தனர்.
கண்ணிமைக்காது அவளையே பார்த்திருந்தான். அந்த பார்வையில் குறுகுறுப்பிற்கு பதிலாக அவளுக்கு கலவரமே உண்டானது.
ஊட்டு என்பதாய் கண்களால் செய்தி சொல்லி வாயை திறந்தான். ஆசையுடன் அவள் ஊட்ட இயல்பாய் வாங்கிக் கொண்டான்.
மணவறையில் இருந்து மணமக்களை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
நம்ம ஊர் வழக்கம் போலவே பூஜை அறையில் விளக்கேற்றி அரிசி பருப்பு உப்பு எல்லாவற்றிலும் கை வைக்க சொன்னார்கள்.
கூடத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்த்தி பாலும் பழமும் கொடுத்தனர்.
நிவி வதினாவை உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவை என்றார் தாரணி.
ஹரி எதையும் கண்டுகொள்ளாது வெளியேறி விட்டான்.
இவன் எங்கே போறான்? கடுகடுத்தார் சுப்பு.
ஈவினிங் ரிசப்ஷனுக்கு நடக்கிற டெகரேஷனை பார்க்க போறாரு… தேவ் தகவல் சொன்னான்.
ஏன் அதை இவன் போய் தான் பார்க்கணுமா? கடுகடுத்தார்.
நானும் அங்கே தான் கிளம்பிட்டு இருக்கேன்…!
மணகோலத்தில் வீட்டுக்குள்ள நுழைந்த உடனே வெளியே போகணுமா? வெங்கட கிருஷ்ணாவுமே டென்ஷன் ஆகிவிட்டார்.
நாயனா நம்ம பண்ணைக்கு தானே போயிருக்கார்.. இங்கிருந்து ஒரு கிலோ மீட்டரே வராது. நான் போய் அவரை அனுப்பி விடறேன்.. ராம்சரணும் தேவ் சரணும் கிளம்பி விட்டனர்.
புது மருமகள் மனம் வருந்திவிடுவாளோ என்ற கவலை தாரணிக்கு.
தாலிகட்டி அழைத்துவந்து விட்டுவிட்டு உடனே வெளியே செல்லும் மகனை எல்லோர் முன்னும் என்ன சொல்லி திட்டமுடியும் என்ற சங்கடம் சுப்புவிற்கு.
“—————–“
நேபாளத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ப்ளூ அன் வைட் ஆர்கிட் மலர்கள் கொண்டு மேடை அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
முகூர்தத்திற்கு செய்திருந்த மேடை அலங்காரம் பிரிக்கப்பட்டு இப்போது ரிசப்ஷனுக்கான டெகரேஷன் அதே மேடையில் அதிரிபுதிரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பூக்களின் வண்ணத்திற்கு பொருத்தமான காம்பினேஷனில் பலூன்களும் கட்டிக் கொண்டிருந்தனர்.
பூக்களின் நறுமணம் அவ்விடத்தையே ரம்மியமாக்கி கொண்டிருந்தது.
திருமண பந்தி இன்னும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாலாஜி குடும்பத்தார் முன்னின்று விருந்தினர்களுக்கு உணவு உபசரிப்பு மற்றும் தாம்பூலம் கொடுத்து அனுப்பும் பணியை அழகாய் செய்து கொண்டிருந்தனர்.மறுபுறம் மாலைநேரம் நடைபெற இருக்கும் ரிசப்ஷனுக்கு உணவு தயார் செய்யும் ஆயத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அண்ணையா பெதநானா பயங்கர டென்ஷனா இருக்காரு… உடனே வீட்டுக்கு கிளம்புங்க… தேவ் விரட்டினான்.
அவனுக்கும் சோர்வாய் தான் இருந்தது. ஆனாலும் மனதில் தோன்றிய லேசான வலி அவனை வெளியேற வைத்தது.
தோற்று போன உணர்வு அவனை தொய்ந்து போக வைத்தது.
ஏன் வெளியே சென்றான் என்று பவித்ரா மட்டுமே அறிவாள்.
இப்போது வீட்டுக்கு சென்று தான் ஆகவேண்டும்… உடலும் மனதும் களைத்து போயிருந்தது.
“——————-“
கண்ணீரை மறைத்துக் கொண்டு உடைமாற்றினாள் பவித்ரா.
என் மீது அவ்வளவு கோபமா? என்னை தவிர்க்க வெளியே செல்ல வேண்டுமா? உதடு கடித்து வேதனையை விழுங்கிக் கொண்டிருந்தாள்.
பலதையும் யோசித்து வேதனையை ஜீரணித்து சோபாவில் சரிந்து அமர்ந்தவள் கண்ணீர் வெளியேறா வண்ணம் அணைக்கட்டி அப்படியே உறங்கி போனாள்.
கல்யாண வேலை என்றால் சும்மாவா? அனைவருக்கும் அவ்வளவு அசதி. கிடைத்த இடத்தில் முடங்கி கொண்டனர்.
வேகமாய் வீட்டிற்குள் நுழைந்தவன் யாரையும் கண்டுகொள்ளாது மாடியேறிவிட்டான்.
கதவடைத்து கட்டிலில் சரிந்தவன் தன்னை மறந்து உறங்கிபோனான்.
நான்கு மணிக்கு நிவேதா கதவை தட்டவே அலுப்புடன் வெளியில் வந்தான்.
காபியுடன் இரண்டு சப்பாத்தி சென்னா குருமா வெங்காயம் வெள்ளரிக்காய் கலந்த தயிர்பச்சடி சேர்த்து கொண்டு வந்திருந்தாள்.
அண்ணையா தாரும்மா குளிச்சுட்டு கிளம்ப சொன்னாங்க… ஆறு மணிக்கு புறப்படணுமாம் என்றாள்.
ம்ம்ம்ம்… என்று கொட்டாவி விட்டவன் உன் வதின சாப்பிட்டாளா? என்றான்.
சட்டென்று புரியாமல் நின்ற நிவேதாவை பார்த்தவன் உனக்கு பவித்ரா வதின தானே… என் வைப் பவித்ரா உனக்கு வதின முறைதான்னு நினைக்கிறேன்… அம் ஐ ரைட் என்றான் சற்று முறைப்புடன்.
சாரி அண்ணையா…. முகம் வாடி விட்டது அவளுக்கு.
எந்துக்குரா சாரி…? தங்கையின் தோளில் கை போட்டவன்…. அம்மாயி நீ என் செல்ல தங்கை… அதே மாதிரி பவி என்னோட உயிர்,உலகம். அண்ணையா மேல் இருக்கும் அன்பும் அக்கறையும் வதின மேலும் இருக்கணும்… அவள் கன்னம் கிள்ளி முத்தமிட்டான்.
பவி மேல எனக்கு அன்பும் அக்கறையும் இல்லைன்னு சொல்றீங்களா ? கோபம் வந்து விட்டது அவளுக்கு.
நிவிம்மா….பவி உன்னோட ரெண்டு வயசு சின்னவ தான் ஆனாலும் நான் உன்னை விட மூனு வயசு மூத்தவன். அவளை பவின்னு கூப்பிட்டா என்னை ஹரின்னு கூப்பிடு! அது கடுமையா? கண்டிப்பா? கட்டளையா? திணறிவிட்டாள்.
சாரி… நா… நான்… வதினன்னு சொல்லியே கூப்பிடறேன்…. உள்ளே போன குரலுடன் உதடு கடித்தாள்.
ஏய் நிவி… இப்போ எதுக்கு இவ்வளவு வருத்தம் உனக்கு? அண்ணையா உன் மேல எப்போதாவது கோபப்பட்டிருக்கேனா?
இல்லை என்பதாய் தலையாட்டினாள்.
நீ என்னோட தங்கைடா பங்காரம்… உன்னை வேறன்னு நினைச்சு இருக்கேனா….இழுத்து அணைத்துக்கொண்டான்.
அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
என் பாரியாளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கணும்! அவ இந்த கிருஷ்ணா குடும்பத்தோட மூத்த மருமகள். மனைவிக்கு தன்னை கொண்டே இங்கு மரியாதை இருக்கும் என்று தெளிவாக இருந்தான். அதனால் தான் இளக்கமின்றி கடுமையாக பேசிவிட்டான்.
உனக்கு ஷியாமா, தாரும்மா மாதிரி அவளும் அம்மாவா இருப்பா…! நீ இந்த வீட்டின் ஒரே செல்ல இளவரசி… அப்படி கொஞ்சினான் தங்கையை.
சரி நான் போய் வதினக்கு டிபன் கொடுக்கிறேன்… அப்படியே சர்வாக்கும் என்றாள்.
சர்வதனியா? சிரிப்புடன் கேட்டான்.
ஆமா அவங்களும் என்னைவிட சின்னவங்க தான் நம்ம அத்தை பொண்ணு தான் இருந்தாலும் ராம் என்னைவிட ஒரு வயசு சின்னவன் தானே என்றாள் வெடித்து வந்த சிரிப்பை அடக்கியபடி…
பவியை சீக்கிரம் சாப்பிட வை! பியூட்டி பார்லரில் இருந்து வந்திடுவாங்க!
சரிங்க அண்ணையா…!
நிவிம்மா அவ பசி இலைன்னு சொல்வா… அப்படியே விட்டுடாதே…. எதுனா சாப்பிட கொடு! டின்னர் சாப்பிட பத்து மணிக்கு மேல ஆகும்.
சரிங்க அண்ணையா நான் பார்த்துக்கிறேன்.
நிவி கொஞ்சம் அவ கூடவே இருந்து பாரு…!
சரிங்க அண்ணையா…. அவளுக்கு சிரிப்பாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது.
“——————–“
எனக்கு காபி மட்டும் போதும்… சப்பாத்தியை தள்ளி வைத்தாள் பவித்ரா.
ஹலோ வதின நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு தெரிந்து தான் அண்ணையா சாப்பிட வைக்க சொன்னாங்க…! உரிமையாய் அதட்டி சாப்பிட வைத்தாள் நிவேதா.
பரபரப்பாய் அலங்காரம் தொடங்கியது. நியூட் மேக்கப் தான் இப்போதைய ட்ரெண்ட். மேக்கப் போட்டது போலும் இருக்கும் போடாதது போலவும் இருக்கும். அதை தான் செய்ய சொல்லி இருந்தான் ஹரிசரண்.
ஆரி வேலைபாடுகள் கொண்ட லாவண்டர் வண்ண லெஹங்கா… தங்க வண்ணமும் லாவண்டரும் கலந்த நீண்ட ஷால்…அதை இடது புறம் போட்டு தரை தொடும் அளவிற்கு விட்டு மறு முனையை பின்பக்கமாக வளைத்து செருகி பின் பண்ணி இருந்தனர்.
பிரீ ஹேராக விடாமல் ஸ்டைலாக ஜடை பிண்ணி Artificial Flowers – Floral Bridal Brooch வைத்து நடு நடுவே லாவண்டர் வண்ண பூக்கள் வைத்து அலங்காரம் செய்திருந்தனர்.
பொதுவாக சிவப்பு, பிங்க். கோல்டு என்று தான் லெஹங்கா வண்ணத்தை தேர்வு செய்வார்கள் ஹரி முற்றிலும் வித்தியாசமாக லாவண்டர் வண்ணம் தேர்வுசெய்திருந்தான்.
அழகிய மாணிக்க கற்கள்(சிவப்பு வண்ணம்) சுற்றிலும் வெள்ளைநிற வைர கற்கள் பதிக்கப்பட்ட பெரிய நெக்லஸ் கழுத்தை அலங்கரிக்க
அதே காம்பினேஷனில் பெரிய தொங்கட்டான் காதுக்கு. இரு கைகளின் மோதிர விரலுக்கு அதே டிசைனில் மோதிரம்.
மணமகள் தயாராகி கண்ணாடியில் தன்னை பார்த்து ஸ்தம்பித்து விட்டாள்.
வதின….ஐயோ…. என்ன இப்படி ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ராவை ஓரங்கட்டிட்டீங்க…!
செம்ம… செம்ம… அப்சரஸ் மாதிரி இருக்கீங்க வாய் ஓயாது புகழ்ந்து தள்ளிவிட்டாள் நிவேதா.
ஜூஸ் கொண்டு வந்த சர்வதனி அசந்து நின்றுவிட்டாள்.
செம்மல்ல….கண்களால் காட்டி சிரித்தாள் நிவி.
ஹரி பாவா ரசிகன்மா… என்னமா உருகி உருகி ரசித்து செலக்ட் பண்ணியிருக்கார்… சர்வதனி கேலி பேச
பெண்கள் சிரித்து விட்டனர்.
அக்கா… மாமா செம்ம டேஸ்ட் உள்ள மனுஷன்… விழி விரித்தாள் காயத்ரி.
காஸ்டியூம் டிசைனர் லாவண்டர் கலர் எடுப்பாக இருக்காது என்று தான் கூறினார்.
லாவண்டர் கலர் டாமினேட் பண்ணாம ஆரி ஒர்க் சில்க் தரெட் ஒர்க் பண்ணி மேனேஜ் பண்ணுங்க என்றான்.
இந்த உடையை எடுப்பாக காட்டியதே அவள் அணிந்திருக்கும் நகைகள் தான். சூரத்திற்கு சென்று பிரத்யேகமாக ஜூவல் டிசைன் செலக்ட் பண்ணி ஆர்டர் செய்து வடிவமைக்க சொல்லி இருந்தான். அவன் சேமிப்பில் இருந்து நாற்பது லட்சத்தில் நகைகள் வாங்கி இருந்தான். கூட்டு குடும்பத்தில் நாளைக்கு ஒரு பேச்சு வந்துவிடக்கூடாது என்பதில் அத்தனை கவனம் அவனுக்கு.
கற்பனை ஓவியத்திற்கு கை கால் முளைத்தார் போல் வெளியில் வந்தாள் பவித்ரா.
அங்கே சந்தன வண்ண குர்தா அணிந்து இளம் லாவண்டர் வண்ண ஷேட் கொண்ட ஷால் போட்டு… தங்க காப்பை கையில் ஏற்றி விட்டபடி கண்ணாடி முன் நின்று தன்னை சரிபார்த்துக் கொண்டிருந்தான் ஹரிசரண்.
அண்ணையாவை ரசித்தபடியே Creed Aventus Eau De Parfum பாட்டிலை கையில் எடுத்து ஒரு குலுக்கு குலுக்கி ஹரியின் குர்தாவில் அடித்து விட்டான் தேவ்சரண்.
டேய்…. சிணுங்கினான் ஹரி.
அண்ணையா உங்களை பார்த்தால் வயசான மாதிரியே தெரியல… கிளுக்கி சிரித்தான்.
கேதே… ஜஸ்ட் தர்ட்டி ஒன் தாண்டா… கோபம் வந்து விட்டது ஹரிக்கு.
டிவெண்டி பைவ் ஆகுற நான் இவ்வளவு ஹான்சமா இல்லையே… உதடு கடித்து சிரித்தான்.
அது கல்யாண கலைடா தேவ்.. நீயும் மாப்பிள்ளை ஆகும் போது இப்படி தான் அழகா இருப்ப…அகிலன் கண்ணடித்து சிரித்தான்.
அப்போ சீக்கிரம் கல்யாணம் பண்ணிட வேண்டியது தான்… தேவ் சொல்ல… பீறிட்ட சிரிப்பை அடக்கிக் கொண்டு ட்ரசிங் டேபிள் மீதிருந்த சீப்பை தூக்கி அவன் மீது வீசினான் ஹரி.
ரெடியா….? பரபரப்புடன் தோரணையாய் வந்து நின்றான் ராம்சரண்.
டேய்… டேய்… போதும்டா உங்க பரபரப்பு…. இவனுங்க கல்யாண வீட்டுகாரங்களாம் இவனுங்க பண்ற அலப்பறை தாங்கலைடா சாமி அகிலன் கேலியாய் சிரித்தான்.
இல்லையா பின்ன… தேவ் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
அப்புறம் கிண்டல் பேசலாம்…. இப்போ டைம் ஆச்சு… சாமிகும்பிட்டு கிளம்பணும்…! பெரிய மனுஷன் போல் மீசையை நீவிக் கொண்டு முன்னாள் சென்றான் ராம்.
பெரியண்ணா சொல்லிட்டார் அப்புறம் என்ன… கிளம்புங்க!அகிலன் விரட்டினான்.
அவன் அப்படிதான் கொஞ்சம் சீரியஸான ஆளு… ஹரி சிரித்து விட்டான்.
பூஜை அறையில் தீப தூபம் காட்டி மகனுக்கும் மருமகளுக்கும் கற்பூர ஆரத்திகாட்டினார் தாரணி.
பவியின் கண்கள் அவனையே வட்டமடித்தது. உன்னை ஏறெடுத்து பார்ப்பேனா பார் என்பது போல் கடுகடுத்து நின்றான்.
சற்றுமுன் தான் ரதியாய் ஜொலிப்பதாய் நினைத்து பேரானந்தம் கொண்டிருந்தவள் சட்டென்று வாடிவிட்டாள்.
அலங்கரிக்கப்பட்ட காரில் மணமக்கள் புறப்பட பின்னால் குடும்பத்தார் கிளம்பி சென்றனர்.
அருகில் உரசியும் உரசாமலும் அமர்ந்திருந்த புத்தம்புது காதல் மனையாளின் ஸ்பரிசம் அவனுக்குள் எதுவும் ரசாயண மாற்றத்தை நிகழ்த்தவில்லை போலும்.
முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரியின் அம்மாயி.
“—————-“
மெல்லிசை அரங்கை நிறைத்திருக்க…கார் விழா நிகழ்விடத்தில் வந்து நிற்க மனைவியின் கரம் பற்ற தன் கரம் நீட்டினான்.
அவனை ஏறிட்டு பார்க்க துணிவின்றி நடுங்கும் கரத்தை அவனுக்கு கொடுத்தாள்.
அழுந்த அவள் கரம்பற்றி ராஜகம்பீரமாய் அவன் நடக்க அவளால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவள் பாவாவின் ஆண்மை கம்பீரத்தை.
அழகாய் அலங்கரிக்கப்பட்ட மேடையில் மிடுக்குடன் தன் குலாபியின் கரம்பற்றி ஏறி நின்றான்.ஷியாமளா கொண்டு வந்து மாலை கொடுக்க ஹரி மனையாளுக்கு சூட்டினான். பவி ஹரிக்கு மாலை அணிவிக்க காமிராக்கள் ஒளி உமிழ்ந்து உள்வாங்கத் தொடங்கியது.
எவ்வளவு பொருத்தமான ஜோடி என்று காண்போர் கண்ணிமைக்காது பார்த்து ரசித்தனர்.
விருந்தினர்கள் வருகை புரியத் தொடங்க…. கிருஷ்ணா குடும்பம் ஓடி ஓடி வரவேற்க தொடங்கியது.
பிரபல சினிமா ஸ்டார்கள் தொடங்கி அரசியல் பெரும்புள்ளிகள் தொழிலதிபர்கள் என்று வருகைபுரிய… மாயவரம் க்ரூப் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தது.
ஹை காயு…. என்னோட பேவரிட் தெலுங்கு சூப்பர் ஹீரோ…. ஐயோ என்னால நம்பவே முடியல… அவரோட ஒரு செல்பி எடுத்துக்கலாமா….? சரண்யா உருகிவிட்டாள்.
அசிங்கமா பண்ணாதே சரண்யா… அதட்டினாள் காயத்ரி.
வாழ்த்த வந்த விருந்தினர்களை மனையாளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். மலர் கொத்து வாங்கியும் பரிசு பொருட்கள் வாங்கியும்….கை கூப்பி கூப்பியும் அவளுக்கு தோள்பட்டை வலிக்க தொடங்கி விட்டது.
சற்று நேரம் அவளை அமரவைத்து பிரஷ் ஜூஸ் குடிக்க வைத்தான்.
தேர் திருவிழா போல் கூட்டம் அலைமோதியது…. இப்படியான பிரம்மாண்டத்தை இதுவரை கண்டிராத பெண் வீட்டார் அதிசயித்து போயினர்.
பபே முறையில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிருஷ்ணா குடும்பத்து மனிதர்களோடுஅகிலனும் ஓடியாடி வேலை செய்துக் கொண்டிருந்தான்.
அகிலனின் பெற்றோரும் திருமணத்திற்கு வந்திருந்தனர்.சௌமி குழந்தைகளை சரண்யாவும் காயத்ரியும் வைத்துக்கொண்டு விளையாட சௌமி பவித்ராவிற்கு துணையாக நின்று கொண்டாள்.
எப்போதடா உங்க கூட்டம் குறையும்? முகம் சுழித்து உதடு கடித்து வலியை பொறுத்துக் கொண்டாள் பவித்ரா.
பத்தரை மணி போல் ஆகிவிட்டது விழா முடிய… விட்டால் போதும் என்று துவண்டுவிழும் நிலையில் இருந்தாள் பவித்ரா.
மணமக்களை உணவுண்ண அழைக்க… எதுவும் வேண்டாம் என்று மறுத்து விட்டாள். வாந்தி வருவது போலவும் தலை சுற்றுவது போலவும் இருந்தது.
வெஜிடபிள் சூப் கொண்டு வந்து கொடுக்க கூறினான் ஹரி.
சூப் குடித்தவள் சரிந்து நாற்காலியில் அமர… கிளம்பலாம் என்றான் ஹரி.
நீங்க சாப்பிட்டு வாங்க என்றாள்.
கிளம்பு என்றான் அழுத்தமாய்…!
வீட்டினரிடம் கூறிக்கொண்டு கிளம்பியவன் கூடவே சௌமியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டான்.
வீட்டில் அவர்களைவிட்டவன் மீண்டும் விழா நிகழ்விடம் சென்று விட்டான்.
இரவு அவன் வீட்டிற்கு வரும்போது பனிரண்டரை ஆகிவிட்டது.
எந்த அறையில் உறங்குகிறாள் என்று கூட கண்டு கொள்ள அவன் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. கடுமையான உடல்வலியும் அசதியும் அவனை படுக்கையில் வீழ்த்தியது.
“————————“
காலை உணவை முடித்துக் கொண்டு பவித்ராவின் உறவினர்கள் கிளம்பிக் கொண்டிருந்தனர். மணவாளன் குடும்பம் மட்டும் அங்கு தங்கி மணமக்களை அழைத்து வரட்டும் என்று முடிவு செய்து கொண்டனர்.
நீங்க பொண்ணு கூட ரெண்டு நாள் தங்கிட்டு கையோட கூட்டிட்டு போகலாமே என்றார் தாரணி.
இல்ல… போட்டது போட்டபடி கிளம்பி வந்துட்டோம். வந்து நாலு நாள் ஆகுது அண்ணன் இருந்து கூட்டிட்டு வருவார் என்றார் தமயந்தி.
தாய் கிளம்புகிறேன் என்றதுமே பவித்ராவிற்கு தொண்டை அடைத்தது. என்னோட ரெண்டு நாள் இருங்க என்று அவரிடம் நேரடியாக பேச அவளுக்கு வார்த்தை வரவில்லை.
பாட்டி நீங்க சொல்லுங்க உங்க மருமகளுக்கு என்றாள் சுசிலாவிடம்.
இல்லடா செல்லம்… பொண்ணு கொடுத்த இடத்தில் இப்படி தங்கி உறவு கொண்டாடுறதை உங்கம்மா விரும்ப மாட்டா…
இன்னும் ரெண்டு நாளில் நீ நம்ம வீட்டுக்கு வரப்போற… கண்கலங்காம எங்களை அனுப்பிவை ராசாத்தி என்றார்.
பார்த்துக்கோங்க…. உங்க குடும்ப பழக்க வழக்கத்தை எல்லாம் கத்துக்க அவளுக்கு கொஞ்சநாள் பிடிக்கும்.
சுடுசொல் தாங்க மாட்டா… வைராக்கியம் அதிகம் அவளுக்கு. பொறுமையா சொன்னா கேட்டுக்குவா… இனிமேஅவ உங்க பொண்ணு தாரணி ஷியாமளாவிடம் கூறிய தமயந்திக்கு எவ்வளவு கட்டுபடுத்தியும் கண்ணீர் நிற்கவில்லை.
இவ்வளவு தானா எங்க மேல உங்களுக்கு நம்பிக்கை? பவித்ரா எங்க வீட்டு மகாராணி என்றார் தாரணி.
தாரணியின் வார்த்தை ரொம்பவே திடப்படுத்தியது தமயந்தியை.
ஹரிசரண் குளித்து உடைமாற்றி கீழே வர பவித்ராவின் குடும்பம் விடைபெற்றது.
மாமா… அக்காவை பார்த்துக்கோங்கன்னு உங்கட்ட சொல்லக் கூடாது… இருந்தாலும் சொல்றேன்… என் பவி அக்காவை நல்லா பார்த்துக்கோங்க… ஹரியின் கரம் பற்றிய யுவிக்கு கண்ணீர் உடைப்பெடுத்தது.
யுவி….. என்று செல்லமாய் அதட்டி மைத்துனன் தலை கோதினான் ஹரி.
அக்காவை அணைத்துக்கொண்ட காயத்ரி உதடு கடித்து அழுகையை கட்டுபடுத்தி நின்றாள்.
நெருக்கமான பிணைப்புடன் அவர்கள் இருந்ததில்லை தான் ஆயினும் இனி அக்கா தங்கள் வீட்டு பெண்ணல்ல… நம் வீட்டிற்கு வந்து செல்லும் விருந்தாளி என்ற எண்ணம் அவள் மனதை அழுத்தியது.
காயத்ரியின் அழுகை பொறுக்காது அழாதே என்பது போல் தலையாட்டி ஜாடை காட்டினான் தேவ்சரண்.
தன் உறவுகளை வாயில்வரை வந்து வழி அனுப்பி வைத்த பவித்ரா பேருந்து கிளம்பியவுடனே கண்ணீர் திரை காட்சியை மறைக்க அந்த திக்கையே வெறித்து பார்த்து நின்றாள்.
நிவிக்கு கண் காட்டி அழைத்து வரக்கூறியவன் உணவு மேசைக்கு சென்றான்.
தாரணி மகன் மருமகளுக்கு பரிமாற கூடவே மணவாளன் குடும்பம் இணைந்து கொண்டது.
சரண்யாவும் சந்தோஷும் ஏதேதோ பேசி பவித்ராவை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தனர்.
மாலை வேளை புதுமண தம்பதிகளுடன் குடும்பமாக குலதெய்வம் கோயிலுக்கு சென்று வந்தனர்.
இரவு சடங்கிற்கு மணவாளன் மனைவியும் நிவேதாவும் கூடவே சௌமியும் சேர்ந்து தயார் படுத்திக் கொண்டிருந்தனர்.
எளிய அலங்காரத்துடன் மணக்கும் மல்லிகை சரம்சூட்டி தயார்படுத்தினர்.
இதுவரை இயல்பாக இருந்தவள் இப்போது பயத்தில் கை கால் நடுங்க அமர்ந்திருந்தாள்.
பால் சொம்பை அவள் கையில் கொடுத்து சௌமியும் நிவேதாவும் அழைத்து வந்து அறை வாயிலில் விட்டனர்.
அக்கா… பயத்தில் சௌமியின் கரம் பற்றினாள்.
ஏய் இது போங்கு…. உனக்கு ஹரியை பார்த்து பயமா…? கிசுகிசுப்பாய் கேட்டு சிரித்தாள் சௌமி.
அவர்கள் சென்றவுடன் திறந்திருந்த அரைக்கதைவை பயத்துடன் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.
வியர்க்க தொடங்கி விட்டது. கையில் இருந்த பால் சொம்பை இறுக்கி பிடிக்க முயன்றவளுக்கு கரங்கள் நடுங்கியது.
மொபைல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவன் தலை தூக்கி பார்த்துவிட்டு மீண்டும் மொபைல் பார்க்க தொடங்கினான்.
நின்று நின்று பார்த்தவள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது இன்னும் பயத்தில் நடுங்கினாள்.
பத்து நிமிடம் போல் கண்டுகொள்ளாது இருந்தவன் அவனே எழுந்துபோய் கதவை தாழிட்டு வந்து அமர்ந்து கொண்டான்.
பா…. பால்…. உதடு டைப் அடித்தது.
எனக்கு வேண்டாம்… நீ வேணா குடிச்சுட்டு படு என்றான்.
அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
என்னென்னவோ பேச வேண்டும் என்று ஆசையாய் இருந்தவளுக்கு அழுகையே வந்தது.
மொபைலை கையில் எடுத்துக் கொண்டு பால்கனி கதவை திறந்து வெளியேறிவிட்டான்.
பொத்தென்று கட்டிலில் அமர்ந்தவள் வாயை மூடிக் கொண்டு சத்தமின்றி அழுது கரைந்தாள்.
error: Content is protected !!