Skip to content
Post Views: 780
சுயம்பு 1
சில நாட்களாக பெய்த தொடர் மழை விட்டு..அதிகாலையில் இருந்தே அடித்த சில்லென்ற காற்றால்,
கருமேகங்கள் விலகி வானம் சற்று வெளிச்சமாக தெரிய…அந்த காற்றில் இருந்து தப்பித்த கருமேகங்கள்..
Advertisement
மெல்லிய பூந்தூறலாக தூறல் தூர…அதில் ஆனந்தமாக நனைந்தபடி வாக்கிங் போய் கொண்டு இருந்த உத்ராவை பார்த்தவர்கள் காலை வணக்கம் சொல்லி வணங்க பதிலுக்கு அவளும் புன்முறுவலோடு அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு தன் நடையை தொடர்ந்தாள்.
அருகில் இருந்த பார்க்குக்குள் நுழைந்தவள் அரைமணி நேரம் வேகமாக தன் நடை பயிற்சியை முடித்து விட்டு, பார்க்கின் சின்ன அரங்கில் நுழைந்தாள்.
அங்கிருந்தவர்கள் அவளை பார்த்ததும் உற்சாகமாக ஒரே குரலில் “குட்மார்னிங் டாக்டர்” என்க..அவளும் சிரித்தபடி பதிலுக்கு “குட்மார்னிங் ஆல்.. ரெடியா.. எக்ஸர்சைஸ் ஸ்டார்ட் பண்ணலாமா என கேட்டு அங்கிருந்தவர்களுக்கு எளிய உடற்பயிற்சிகள் சொல்லி தந்து, தவறாக செய்தவர்களை திருத்தமாக செய்ய வைத்து முடிந்ததும் அங்கிருந்து கிளம்பினாள்.
Advertisement
உத்ரா எம்.பி.பி.எஸ், ஆர்த்தோ சர்ஜன், கோல்ட் மெடலிஸ்ட்..
Advertisement
படித்தது கோயமுத்தூரில்..
தற்போது இருப்பது
மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில்..
Advertisement
மூன்று வருடங்களுக்கு முன்பு ஷில்லாங்க் கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் ஆர்த்தோ சர்ஜனுக்கு ஒரு வேகன்சி இருக்கிறது, நீ போக முடியுமா என அவளுடைய சீனியர் ஒருவர் தயக்கமாக கேட்க, உடனே அப்ளை செய்து வேலை கிடைத்தும் இங்கு வந்து விட்டாள்.
அவளுக்கு தங்குவதற்கு ஒரு அழகான வீடு, சமையல், வீட்டை சுத்தம் செய்யும் வேலைக்கு ஒருவரையும் அவளுடைய சீனியரே தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக ஏற்பாடு செய்து விடவே அவளுக்கு அங்கு வந்து தங்க எந்த பிரச்சினையும் இல்லாமல் எளிதாகி விட்டது.
தினமும் காலையில் நடைபயிற்சி, பார்க்குக்கு வரும் தெரிந்த சிலருக்கு எளிய எக்ஸர்சைஸ் என அவளுடைய காலை வேளைகள் இதமாகவே போகும்.
வீட்டுக்கு வந்ததும் முதலில் டிவியை ஓட விட்டு பேப்பர் படிப்பது, அதன் பின் நிதானமான ஒரு குளியல்.
அவள் வீட்டில் வேலை செய்யும் சோனுவின் முக்கியமான வேலையே விதமான பிரேக்பாஸ்ட் செய்வது, அதுவும் அளவில்லாமல் செய்து உத்ராவின் வயிற்றை நிறைந்து ஹாஸ்பிடல்க்கு அனுப்புவது…
மதியம் எதுவும் சாப்பிடாமல் நேரிடையாக இரவு உணவை நாலு மணிக்கே முடித்து கொள்ளும் உத்ராவை சோனு திட்டி, கெஞ்சி தொடர் அன்புத்தொல்லை செய்து ஹாஸ்பிடல் போகும் முன்பு அவள் கைகளில் எளிமையாய் எதாவது ஒரு சாதம் குடுத்து அனுப்பி விடுவார்.
அவள் மதியம் சரியான நேரத்துக்கு சாப்பிட்டாளா என உத்ராவை நம்பாமல் அங்கிருக்கும் தன் உறவினர் பெண்ணிடம் விசாரித்து தெரிந்து கொள்வார்.
மாலை 4 மணிக்கு வீடு திரும்பியதும் டீ, ஆறில் இருந்து ஏழு மணிக்குள் இரவு உணவு என அவளுடைய வார நாட்கள் சக்கரம் சுழல்வது போல வேகமாக நகரும்..
சோனு கூடவே இருப்பதால் உத்ராவின் மகன் ஹர்ஷாவை பார்த்து கொள்வதில் சிரமம் இல்லாமல் இருக்கிறது. அவனுக்கும் சோனு தான் எல்லாமே.
அடிக்கடி வரும் சோனுவின் உறவினர்களுக்கும் ஹர்ஷா தான் செல்ல பிள்ளை. யார் வந்தாலும் அவனுக்காக ஏதாவது சாப்பிட செய்து எடுத்து வருவார்கள். அவனுக்கு ஊட்டும் பொறுப்பையும் அவர்கள் சந்தோஷமாக ஏற்று கொள்வார்கள்.
வார இறுதிகளில் அவளுடன் வேலை செய்யும் ஒரு டாக்டர், இரண்டு நர்ஸ்களோடு சேர்ந்து பக்கத்தில் இருக்கும் சில மலை கிராமங்களுக்கு போவாள். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி செய்வது என தன்னை எல்லா நாட்களும் பிசியாக வைத்து கொள்வாள்.
வீட்டுக்குள் நுழைந்ததுமே அவளுடைய வீட்டில் வேலை செய்யும் சோனு அவளிடம் ஏதோ சொல்ல வந்தார்.
அதை புரியாமல் பார்த்தவளுக்கு மறுபடியும் செய்கைகளால் புரிய வைக்க முயல…அதுவும் புரியாமல் போன உத்ராவுக்கு சிரிப்பாக வந்தது.
“சோனு மா…உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது..எனக்கு நீங்க பேசறது.. பண்ற சைகைகள் எதுவும் புரியல..எதுவா இருந்தாலும் பேசுங்க” என ஹிந்தியில் அலுத்து கொண்டாள்.
அவர் உடனே தன் தலையை தட்டி கொண்டவர் “உங்களுக்கு விஷயம் தெரியுமா…மேம் சாப்…நாலு நாளா விடாம மழை பெய்யுதுல…”
“அதால..மா–சின்–ராம் ஹைவே பக்கத்து பெரிய நிலச்சரிவாம்..பத்து பேரு மேல செத்து போயிட்டாங்களாம்…நிறைய பேருக்கு காயமாம்…”
“அங்க இருக்கிற ஹாஸ்பிடல்ல பேஷண்ட்க்கு எடமே இல்லையாம்..பூரா ரொம்பி வழியுதாம்” என சொன்னதை கேட்ட உத்ரா அதிர்ந்து போனாள்.
உடனே டிவியை வேகமாக ரிமோட்டை வைத்து ஆன் செய்தாள். அதில் அவர் சொன்னதே தொடர்ந்து ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.
அதை பார்த்தபடி சில நிமிடங்கள் பேச்சற்று இருந்தவள் ஏதோ நினைத்து கொண்டதை போல வேகமாக எழுந்து “சோனு மா..சீக்கிரமே ஏதாவது சாப்பிட ரெடி பண்ணுங்க..நான் போய் குளிச்சுட்டு வந்துடறேன்..”
“உடனே ஹாஸ்பிடல் போக வேண்டி இருக்கும்..நான் குளிக்கற நேரத்துல ஏதாவது போன் வந்தா..யாருனு கேட்டு வழக்கம் போல அந்த டைரில எழுதி வெச்சிடுங்க” என அவருக்கு உத்தரவிட்டு வேகமாக உள்ளே போனவள், பத்தே நிமிடங்களில் குளித்து அழகான இள மஞ்சள் சல்வாரில் வந்தவளை பார்த்த சோனு வேகமாக அவளுக்கு சாப்பிட தட்டு வைத்து சூடாக ஆலு பராட்டாவை பரிமாற…உட்கார்ந்து துரிதமாக சாப்பிட்டு முடித்தவளின் போன் அடித்தது.
எடுத்து பார்த்ததுமே தன்னுடன் வேலை செய்யும் மனீஷ் என தெரிய..போனை ஆன் செய்ய.. “உத்ரா தேர் இஸ் அன் எமர்ஜென்சி..நியூஸ் பாத்தியா..நேத்து மேஜரா மட் ஸ்லைட் நடந்திருக்கு..நிறைய பேருக்கு அடிபட்டிருக்கு. எல்லா ஹாஸ்பிடலும் பூரா பேஷண்ட்ஸ்..”
“இங்கயும் பேஷண்ட்ஸ் அதிகமா இருக்காங்க..இங்க இருக்கற டாக்டர்ஸும் கம்மியா இருக்கறதால எங்களால மேனேஜ் பண்ண முடியல..கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா” என பதறிபடி கேட்டான்.
“ஓஓஓ…டோண்ட் ஓரி.. வில் பீ தேர் இன் பைவ் மினிட்ஸ் மனீஷ்…” என அவனுக்கு பதில் சொல்லி போனை அணைத்து..சோனுவை பார்த்து “எமர்ஜென்சினு போன் வந்திருக்கு சோனு மா…நைட் வர எவ்ளோ நேரமாகும்னு தெரியல..சாப்பிட எதுவும் வைக்க வேணாம்..நீங்க சாப்பிட்டு படுங்க” என அவரிடம் சொல்லி விட்டு வேகமாக வீட்டில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
ஹாஸ்பிடல் உள்ளே போனதும் அங்கிருந்த நிலையை பார்த்ததும், நிலைமையின் தீவிரம் புரிந்து வேகமாக தன்னறைக்குள் போய் தன் ஸ்டெதஸ்கோப்பை எடுத்து கொண்டு ஜெனரல் வார்ட்டுக்குள் நுழைந்தாள்.
ஒவ்வொருவரையாக பார்த்து அவர்களின் கட்டிலில் இருந்த பேடில் அவர்களின் குறிப்புகளை எழுதி, நலன் விசாரித்து, கூட வந்த நர்ஸை எல்லாவற்றையும் குறித்து கொள்ள சொல்லி என பம்பரமாக சுழன்று எல்லாம் முடித்து விட்டு வர அவளுக்கு மூன்று மணி நேரமானது.
சோர்ந்து போய் தன்னறைக்கு போய் கை கால் முகம் அலம்பியதும் புத்துணர்ச்சி கிடைக்க தன் சீட்டில் போய் உட்கார்ந்தும் அங்கு அவளுக்கான இஞ்சி ஏலக்காய் மணக்கும் டீ ப்ளாஸ்க்கில் காத்திருக்க சிரித்தபடி டீ குடித்து தன்னை தெம்பாக்கி கொண்டு அவளுக்காக காத்திருந்த ஓபி பேஷண்ட்களை பார்க்க ஆரம்பித்தாள்.
ரூம் கதவை திறந்து தளிர் நடையில் வந்த குழந்தையின் அழகில் சொக்கி போய் தன் சீட்டில் இருந்து எழுந்து போய் அந்த குழந்தையை தூக்கி கொண்டு…அந்த குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தாள்.
கூட வந்த அந்த குழந்தையின் அம்மாவிடம் என்ன பிரச்சினை என கேட்க..”நீத்து ரெண்டு நாளா வலது கை விரல்ல வலினு அழறா டாக்டர்… களிப்பு தடவினேன்… எண்ணெய் தடவி தேய்ச்சு விட்டேன்..எதுக்கும் சரியாகல..” என அழுது கொண்டே சொல்ல ஆரம்பித்தாள்.
அவளை அமைதிபடுத்திவிட்டு.. குழந்தையின் வலது கை விரல்களை மெல்ல தடவி பார்க்க..அதில் இன்னும் அழுத குழந்தையை சமாதானம் செய்தாள்.
“குழந்தை விஷயத்துல இது மாறி எதுவும் கை வைத்தியம் பண்ணாதீங்க..உடனே ஹாஸ்பிடல் வாங்கனு நான் தான் சொல்லி இருக்கேனே..ஏன் இப்படி பண்ணீங்க..”
“இல்லை..என் மாமியார் தான் எதுவும் இருக்காது..இதுக்காக நீ ஏன் குழந்தையை அவ்ளோ தூரம் கூப்பிட்டு போறேனு சொன்னாங்க..”
“அவங்க பெரியவங்க..அவங்க அனுபவத்தை சொல்வாங்க..அதுக்காக குழந்தையை ரெண்டு நாள் அழ விடறதா..” என கடிந்து கொண்டாள்.
தனக்கு வந்த சந்தேகத்தை உறுதி செய்ய..உடனே எக்ஸ்ரே எடுத்து கொண்டு வருமாறு அவளிடம் சொல்லி அனுப்பினாள்.
எக்ஸ்ரே டிபார்மெண்ட்க்கும் போன் செய்தவள் “பையா..நீத்துனு ஒரு குழந்தை வருவா.. அவளுக்கு உடனே எக்ஸ்ரே எடுத்து ரிப்போர்ட் குடுத்துங்க..குழந்தை ரொம்ப அழறா” என சொல்லி போனை வைத்தாள்.
கதவு தட்டும் சப்தம் கேட்டு எஸ் என அவள் சொல்வதற்குள் உள்ளே வந்த நர்ஸ் “நேத்து நடந்த மட்ஸ்லைட்ல மாட்டிக்கிட்டவர் போல இருக்கு டாக்டர்….இப்ப தான் ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு வந்திருக்காங்க..மல்டிபிள் ப்ராக்சர்னு டவுட்டா இருக்கு மேம்..சீப் உங்களை உடனே ஐசியுக்கு வர சொன்னார்..” என சொல்லவும் தன்னறையில் இருந்து ஐசியுக்கு வேகமாக போனாள்.
அங்கிருந்த சீப் டாக்டர் மல்ஹோத்ராவுக்கு வாயசைவில் காலை வணக்கம் சொல்ல.. அவருக்கு தலையசைத்து ஏற்றுக்கொண்டு..அங்கு கட்டிலில் இருந்தவரை காட்டி “செக் ஹிம் தரோலி அண்ட் லெட் மீ நோ ஹிஸ் ஸ்டேட்டஸ் ஆஸ் சூன் ஆஸ் பாசிபிள்” என சொல்லி விட்டு நகர..அவருக்கு சரி என தலையாட்டி விட்டு திரும்பி கட்டிலில் குப்புற படுத்து இருந்தவரை திருப்பியதைபார்த்து உயர்நிலை மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ந்து போனாள்.
அவளையும் அறியாமல் மனு என உதடுகள் முணுமுணுத்தது. (தொடரும்)
error: Content is protected !!